குட்டிக் காதலின் வரலாறு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 15,911 
 
 

‘பிரிய மகேசுவரி,

பார்த்தும் பாராததுபோல உதறி நடக்கும் உன்னைப்போய் என் இதயத்தில் நட்டுவைத்தேன் பார், நன்றாக அனுபவிக்கிறேன் கிளை படர்ந்து. என் மனம் எங்கெங்கோ தவித்து அலைந்த தருணத்தில், நீ ஒரு திசைகாட்டியாகத்தானே வந்தாய்.

திசையைக் காட்டிவிட்டு நீ ஏன் திரும்பிச் சென்றாய்? நாவுகள் நிஜம் பேசும் என்பது நம்பத் தகுந்தது அல்ல என்பதை நல்லவேளை நீயும் நினைவுபடுத்திவிட்டாய்.

நீ கண்ணீருக்கும் கவிதைக்கும் அடித்தளம் போட்டுவிட்டு, ஒரு கேள்விக்குறியையும் விதைத்துவிட்டுப் போய்விட்டாய்.

வாழ்க்கை நோக்கிப் பயணித்த பாதங்களில் நெருஞ்சி முட்கள் கூட்டம் கூட்டமாக.

நிலவு வானில் கைகோத்து நடை பழக்கிவிட்டு, ஒரு நட்சத்திர வெடிப்பில் கையுருவிப் போனாய். அன்பை விதைத்துவிட்டு அறுவடைக்கு நில்லாமல் போய்விட்டாய்.

Kuttikadal1

என்னிடம் இருந்து நீ பிரிந்து போனாலும் இதயம் இல்லாதவள் என்று நான் சபிக்காது இருக்கிறேனே… அது உன்னுடைய பிரியத்தின் வெற்றியாகவோ அல்லது உன் அன்புக்கு நான் தரும் கௌரவமாகவோ இருக்கலாம். இருந்தும் இப்படியாக ஒரு பிரிய சகி என் வாழ்வில் கொலுசு ஒலிக்க நடந்து சென்ற நாட்களை நான் மறக்கவே முயற்சிக்கிறேன் முடியாதெனத் தெரிந்தும்.

தூங்குகிற மணியக்காரரை எழுப்பிவிட்டால், எழுந்தவுடன் முகத்தைத் துடைத்தபடி பழைய கந்தாயப் பணத்தைக் கேட்பாராம் என்பதுபோல, 15 வருடங்களுக்குப் பிறகு என்னுடைய பழைய டிரங்குப் பெட்டியின் குப்பைகளைக் கிளறிக்கொண்டு இருந்ததில் மகேசுவரிக்காக நான் காகிதத்தில் வடித்த கண்ணீரும் காணக் கிடைத்துவிட்டது. பாருங்கள் 15 வருடங்களுக்குப் பிறகும் அதோ அந்தத் திரைச்சீலைக்கு அந்தப்புறமாக ஒளிந்துகொண்டு மோடி வித்தை காட்டுகிறாள் பயபிள்ளை!

பாருங்கள்… நாம் முன்பு ஒருகாலத்தில் பிரியசகி ஒருத்தியால் காதலிக்கப்பட்டு இருக்கிறோம் என்ற நினைப்பே உள்ளுக்குள் எவ்வளவு சுகந்தமாக இருக்கிறது, வருடங்கள் பல போன பின்பும். பல வருடங்கள் முன்பு நீங்கள் காதலித்த அதே ஒல்லிப்பிச்சான் தேவதை, வயதே கூடாமல்… உடம்பும் ஏறாமல் உங்களைப் பார்த்து உதட்டைத் தெற்கு வடக்காகச் சுழித்துக் காண்பிக்கிறாளா? கண்டிப்பாகக் காண்பிப்பாள். ஆனால் இதே சமயத்தில், ‘நீங்க சுத்த மோசம்’ என்று சொன்ன உங்கள் காதலியின் குரலும் ஞாபகத்தில் வர வேண்டும்.

மகேசுவரியை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லைதான். இது முன் எப்போதோ முடிந்துபோன கதை என்பதால், அவளுடைய அழகை 15 வருடங்கள் கழித்து வர்ணித்தால் அவ்வளவு சுத்தப்படாதுதான்.

காலை 8 மணி ஷிப்ட்டுக்கு ஜி.கே.ஸ்டீல் கம்பெனிக்குச் செல்லும் கணவருக்கு டிபன் பாக்ஸில் சாம்பார், ரசம் ஊற்றிவிட்டு, ‘ஏனுங்க ஊறுகாய் வைக்கவா?’ என்றுகூடக் கேட்டுக்கொண்டு இருப்பாள். தன்னுடைய 12 வயது மகனின் படுக்கை அறைக்குள் தலைநீட்டி, ‘இன்னும் என்னடா தூக்கம் படவா? எழுந்து போய் பிரஷ் பண்ணிட்டு வா, காபி ஆறிட்டு இருக்கு’ என்றுகூடச் சொல்லிக்கொண்டு இருக்கலாம்.

காபிக்காகக் கண் பீழையைக்கூடத் துடைக்காமல் விரல் சூப்பிக்கொண்டே தன் கால்களுக்கு இடையே சுற்றும் ஐந்து வயது மகளிடம், ‘இருடி பறப்பெடுத்தவளே, இவ ஒருத்தி ஏழு மணிக்கே தூங்கீட்டு காத்தால நேரத்துல எழுந்திருச்சு காலுக்குள்ளயே சுத்தீட்டு…’ என்றுகூடச் சொல்லிக் கொண்டு இருக்கலாம்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரிகால் கம்பெனிக்கு 9 மணி ஷிப்ட்டுக்குச் செல்ல வேண்டிய மகேசுவரி, மகளைத் தன் மாமனாரிடம் பொறுப்பாக ஒப்படைத்து விட்டுச் செல்லும்போது, கம்பெனியில் தோழி ஒருத்தி இந்தக் கதையைப் படித்து, இவளிடம் புத்தகத்தை நீட்டி படித்துப் பார்க்கச் சொன்ன சமயம்… மகேசுவரியும் படித்தாள் என்றால், மீண்டும் காதல் மாதிரி ஒன்று கிளம்பிக் கொந்தளித்தாள் என்றால், என்னுடைய குட்டிக் குடும்பத்தினுள் சரவெடிகள் வெடிக்கவும் சங்குச் சக்கரங்கள் சுழலவும் வாய்ப்பு அதிகம்.

மகேசுவரி, எனக்குக் கண்கள் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது என்பதற்காக, புத்தக வாசிப்புச் சமயத்தில் கண்ணாடி போட்டுக்கொள்கிறேன். நீ எப்படி? கண்களுக்கு உள்ளேயே லென்ஸ் பொருத்திவிட்டாயா? காது ஓரத்திலும் பொடனியிலும் வெள்ளை முடிகள் வந்துவிட்டனவே என்று வருத்தப்பட்டு கோத்ரெஜ் டை பயன்படுத்துகிறேன். நீ எப்படி வாஸ்மோலா?’

கோவையில் சாய்பாபா காலனிக்கு அருகே டி.சி.எம். டொயோட்டோ கம்பெனி ஒன்றில் ஒரு வருட காலமாக ஆயில் மாற்றிக்கொண்டும், டயர் கழற்றி மாட்டிக்கொண்டும் இருந்த நான், துடியலூர் அருகே நோகாமல் நோம்பு கும்பிடலாம் என்று லேத் வேலைக்குச் சென்றுவிட்டேன். அங்கும் ஆறு மாதமே என்னால் தாக்குப்பிடிக்க முடிந்தது. பின்னே விடிய விடிய லேத்தின் முன் நின்றுவிட்டு காலையில் இரண்டு புட்டுமா, இரண்டு தோசை என்று விழுங்கிவிட்டு என் அறையில்கிடந்தால், மாலையில் 6 மணியைப் போல எழுந்து குளித்துவிட்டு, கடையில் ரெண்டு புரோட்டாவை வயிற்றில் தள்ளிவிட்டு, மறுபடியும் லேத் மெஷின் முன்பு நின்றுகிடந்தால் உடம்பு என்னவாகும்?

உள்ளூர் தலைவர் ஒருவரின் உதவியால் பிரிகால் கம்பெனிக்குள் கால்வைத்த பிறகு தான் ஒரு வெளிச்சம் தோன்றியதாக உணர்ந்தேன். அந்த வெளிச்சத்தில் பிரகாசமாகத் தெரிந்தவள்தான் மகேசுவரி. எனக்கும் ஒரு வருடம் முன்பாகவே கம்பெனி யில் சேர்ந்துவிட்டவளாம். நரசிம்மநாயக்கன் பாளையத்தில்தான் நான் வரும் பேருந்தில் ஏறி வருகிறாள். பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் என்பார்களே… அது நிஜம்தான்.

கம்பெனிக்குள் என் பிரிவில் மகேசுவரி வேலை செய்யவில்லை. கம்பெனி கேட்டினுள் நுழைந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக அவள் அவளுடைய பிரிவுக்குச் சென்றுவிடுவாள். டாண் என்று 5.30 மணி ஆனதும் மகேசுவரி கிளம்பிவிடுவாள். ஆனால், நான் அப்படி டாண் என்று கிளம்ப முடியாது. நான் எல்லோரிடம் இருந்தும் விடைபெற 7 மணி ஆகிவிடும்.

மகேசுவரி ஒருநாள் காலையில் நான் வரும் பேருந்தில் வரவில்லை. என்னாச்சு கண்மணிக்கு? என்று இந்த இதயம் வேறு, வழக்கத்தைவிட அதிகமாகத் துடித்தது. கம்பெனி வாயிலில் வெகு நேரம் நின்று பார்த்து சோர்ந்துபோய், என் பிரிவுக்குள் நுழைந்தேன். மனம் ஏனோ வேலை யில் ஒட்டவே இல்லைதான். இருந்தும் கூலிக்காக மாரடிக்கும் நோக்கில் ஐ’ யம் பிஸி என்பதாக மற்றவர்கள் முன்பு நடித்துக்கொண்டு இருந் தேன்.

காலையில் இருந்தே வைரஸ் காய்ச்சலால் அவதியுற்றவன்போல் இருந்தவன், மதிய நேரத்தில் சோகமே உருவாக கேன்டீனில் சிகரெட் பிடித்தபடி அமர்ந்து இருந்தேன். என்னுடைய பக்கத்து மேஜை நண்பன் பழனிவேல், கேன்டீனுக்கு வந்தவன் ஒரு டீயைச் சொல்லிவிட்டு என் அருகே வந்து அமர்ந்தான். ”என்ன உம்முனு இருக்கே? உன் ஆள் இன்னிக்கு உன்னை ஒரு தினுசா பார்க்காமப் போயிட்டாளா?” என்று கேட்டதோடு விட்டுவிட்டு, சிகரெட் பிடித்தான்.

Kuttikadal2

”நீங்க சிகரெட் பிடிப்பீங்களா கர்ணன்?”- இனிமையான குரலில் இளம் பச்சை நிற சேலையில் என் அருகில் இருந்த காலி சேரில் மகேசுவரிதான் வந்து அமர்ந்தாள். பழனிவேல் என்னை முறைத்துவிட்டு, ”டீ எங்கப்பா? சொல்லி அரை மணி நேரமாச்சு” என்று குரல்கொடுத்துச் சென்றான்.

” ‘அது ஒரு நிலாக் காலம்’ புத்தகம் உங்களுதாமே… ஷாலினி வெச்சிருந்தா. நான் வாங்கிப் படிச்சிட்டு இருக்கேன். ஆமாம், ஷாலினிக்குத்தான் கொடுப்பீங்களா? எனக்குத் தராமல் எப்படி நீங்க அவளுக்குக் கொடுக்கலாம்?” என்று சரளமாகப் பேசியவளிடம் மறுபேச்சு பேசாமல் அமர்ந்து இருந்தேன்.

”புத்தகத்தின் முன் பக்கத்தில், ‘வந்து பார்க்க ஆசைதான் என்றாலும், காத்து இருந்து பார்க்க நீ வேண்டுமே’னு எழுதி இருக்கீங்க… ஷாலினிக்காகவா?” என்று கேட்டவளுக்கு, ”இல்லை” என்று வேகமாகத் தலையை அசைத்தேன். ”காலையில் லேட்டா வந்தியா மகேசுவரி?” என்று நிதானமாகக் கேட்டேன். ”இல்லையே உங்களுக்கு முன்னாடியே வந்துட்டேன்… நீங்க என்ன பண்றீங்கனு நான் மறைஞ்சு நின்னு பார்த்துட்டு இருந்தேன். ஒரு பஸ்ஸையும் விடலை. எல்லாத்தையும் பார்த் துட்டு சோகமாப் போனீங்களே!” என்றாள் புன்னகையுடன்.

”சேலையில் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கே மகேசுவரி” என்றேன்.

”அம்மாவோடது… ரொம்ப அடம்பிடிச்சு வாங்கிக் கட்டிட்டு வந்தேன். சும்மா தாவணியிலயே பஸ்ஸில் என்னைத் தின்னுடற மாதிரி பார்ப்பீங்க. சேலையில் சொல்லவே வேண்டாம் சாமினுதான் முன்னாடியே வந்துட்டேன்” என்றாள்.

”பின்ன ஏன் மகேசுவரி அன்னிக்கு நான் கொடுத்த லெட்டரை வாங்கின உடனே நாலா மூணா கிழிச்சு வீசினே? வீசிட்டு ஒண்ணுமே சொல்லாமப் போயிட்டே?” என்றேன் அப்பாவியாக. ”எப்படி உருகி எழுதியிருந்தேன் தெரியுமா?” என்று வேறு முனகினேன்.

”எனக்குப் பிடிக்கலைங்க கர்ணன். ஒருத்தர் என்ன பார்வை பார்க்கிறார்னு நாங்க ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சிடுவோம். பிடிச்சிருக்கு அப்படினு நேரில் தைரியமாச் சொல்றவங்களைத்தான் எங்களுக்குப் பிடிக்கும். இப்போ சொல்லுங்களேன்” என்றவளிடம், ”வாய் குழறுது” என்றேன்.

”அப்படியே இருக்கட்டும்” என்று சொல்லி எழுந்து சென்றாள்.

”கர்ணா இவளை நீ விட மாட்டியா? இவ குடும்பம் நரசிம்மநாயக்கன்பாளையத்துக்குள்ள சண்டைக்காரக் குடும்பம்ப்பா. சொன்னா உனக்குத் தலையில ஏறாது. பட்டாத்தான் புத்திவரும்” என்றபடி, பழனிவேல் மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.

”இப்படி மொட்டக் கட்டையா சொன்னா எப்படி?” என்றேன்.

”கர்ணா, அவங்க சொந்த பந்தத்தில் எங்கயும் போக்குவரத்து இல்லை. அவ அம்மாவுக்கு முதல்லயே பேர் கொஞ்சம் ரிப்பேர். அப்பா, நாலு நாளைக்கு வேலைக் குப் போவாப்ல… சீட்டாட்டம், தண்ணி. தம்பி ஒருத்தன் இருக்கான். அவன் ஊர் சுத்தி. ஏண்டானு கேட்டா, ‘நானா சுத்தறேன்? உலகம் சுத்துது, அதனால நான் சுத்துறாப்ல தெரியுதுனு’ எகத்தாளம் பேசிட்டு இருப்பான். அதனாலதான் சொல்றேன்… யோசன பண்ணிப் பழகு” என்றான்.

”மகேசுவரி நல்ல பொண்ணுடா. அவதான் எனக்கு வேணும். வீட்டாரைப் பற்றி என்ன?” என்றேன் பழனிவேலிடம். ”காமாலைக்காரனுக்குப் பார்த்ததெல்லாம் யெல்லோ கலர்லதான் தெரியுமாம். சரி உன் பாடு; நீயாச்சு உன் மகேசுவரி ஆச்சு, கிளம்புவோம்” என்று எழுந்தவன் பின் நானும் நகர்ந்தேன்.

ஒரு சினிமா என்றோ, ஒரு பூங்கா என்றோ, ஒரு தனிமையான இடம் என்றோ எதுவும் இல்லாமல், பேருந்திலும் கம்பெனி கேன்டீனுக்குள்ளும் மட்டுமே எங்கள் சந்திப்பு இருந்தது. மற்றபடி மகேசுவரியின் மடியில் படுத்தபடி நிலா பார்ப்பதும், இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுப் பதும் என் கனவுகளில் கறுப்பு – வெள்ளை வண்ணத்தில் ஓடிக்கொண்டுதான் இருந் தது. இதில், கோவையில் பீச் என்ற சமாசாரமே இல்லை. ஆனால், சுண்டல் கொறித்துக்கொண்டு மகேசுவரியும் நானும் துடியலூர் கடற்கரையில் அமர்ந்தபடி அலைகளை ரசித்த கனவுதான் கேவலமாக இருந்தது.

மகேசுவரிக்கு நான் சிகரெட் பிடிப்பது பிடிக்கவில்லை என்பதால், ”ஒரு நாளில் 10 சிகரெட் பிடிப்பீர்களா?” என்று வேறு ஒரு சமயம் கேட்டாள். இதே விஷ யத்தை பழனிவேலிடமும் மகேசு வரி பேசி இருக்கிறாள். சிகரெட் ஞாபகம் வந்தால் உடனே எடுத்துக் கையில் வைத்துக்கொள்வது மாதிரி அவளிடம், ‘ஹேர்பின், கம்மல்னு ஏதாவது வாங்கிவெச்சுக்கோ’ என்று சொல்லி இருந்தான். மகேசுவரியே தன் கர்ச்சீப்பை என்னிடம் கொடுத்தாள்.

”போன பிறவியில் நான் வள்ளி மச்சான்டார் பீடி கட்டுக்கட்டா வெச்சுக் குடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ, ‘நீ பீடி குடிக்கக் கூடாது அத்தான்’ என்று சொல்லி, உன் மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாய்… ஞாபகம் இருக்கா?” என்றேன்.

”ரீல் ஓட்டறது சரிதான்… ஆனா, இது ரொம்ப ஓவர்” என்றாள். ”ஏதாவது சின்னதா நீ கோபிச்சுக்கிட்டுப் பேசாமல் இருந்தீன்னா… என்னோட ஐந்து விரல்லயும் சிகரெட் புகையும் பார்த்துக்க” என்று வேறு சொல்லிவைத்தேன்.

”அப்படி உங்க விரல்ல புகைஞ்சா, நானும் புகைவேன்” என்றாள்.

மிரண்டவன் கண்களுக்குப் புளிரசம்கூட விஷம் மாதிரியே தெரியுமாம். மூன்று மாதம்போல ஸ்மூத்தாகப் போய்க்கொண்டு இருந்த எங்களின் இந்தக் காதல் நாடகத்தில், மகேசுவரியே புதியதாக இடைஞ்சலைக் கொண்டுவந்தாள். பார்க்கும்போது புன்னகை இல்லை. ஒரு குட்மார்னிங் இல்லை. கேன்டீன் பக்கம் தலைவைத்துக்கூடப் படுப்பது இல்லை. ஒரு காரணமும் தெரியாமல் தவித்தேன்.

”புண்பட்ட மனதைப் புகைவிட்டுத்தான் ஆத்தோணும்” என்றான் பழனிவேல். கேன்டீனில் எதிரே அமர்ந்து வளையம் வளையமாகப் புகைவிட்டான்.

”என்ன சுகம் தெரியுமா?” என்றான்.

”மகேசுவரியிடம் எப்படியாவது சேர்ப் பித்து விடு” என்று கடிதம் ஒன்று எழுதிக் கொடுத்தேன் பழனிவேலிடம். அதில் ஞாயிறு அன்று கோவை அர்ச்சனா திரையரங்கு வாசலில் காலைக் காட்சிக்கு நான் காத்திருப்பதாகவும், எதையும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் எனவும் எழுதி இருந்தேன். ஞாயிறு அன்று அர்ச்சனா திரையரங்கு வாசலில் யார் வீட்டு நாயோ எதற்கோ காத்திருந்ததுபோல, காலைக் காட்சி முடியும் வரை நின்று பார்த்துவிட்டுத் திரும்பினேன்.

அடுத்த நாள் கேன்டீனில் சிகரெட் பிடித்தபடி அமர்ந்து இருந்த என்னிடம் பழனிவேல், ”என்னப்பா… போல்டா? கேட்ச் அவுட்டா?” என்று சந்தோஷமாகக் கேட்டான். என் கோப முகம் பார்த்து, வேறு டேபிள் சென்றான். அந்தச் சுகத்தை இவளுக்காக இரண்டு மாதம்போல விட்டு இருந்தேனே. புகையை ரசித்து இழுத்து ஊதினேன். மகேசுவரி அன்று கேன்டீனுக்கு வந்தாள்.

”என் கண் முன்னால சிகரெட் குடிக்கிறீங்க… எனக்குச் சங்கடமா இருக்கு. அழுகை வருது… என் வீட்டுல நம்ம விஷயம் தெரிஞ்சுபோச்சு கர்ணன். தம்பி பார்த்து இருப்பான்போல. ஞாயிற்றுக்கிழமை இடிகரையில இருந்து என்னைப் பொண்ணு பார்க்க வந்தாங்க. ஆனா, மாப்பிள்ளைப் பையனை எனக்குப் பிடிக்கலைனுட்டேன். நாம கொஞ்ச நாள் எங்கேயும் பேசிக்க வேண்டாம்” என்றாள்.

”எப்பவுமே பேசிக்கக் கூடாதா? இந்த மாதிரி கேன்டீன்லகூடவா? நிஜமாத்தான் சொல்றியா?” என்ற என் மூன்று கேள்விகளுக்கும் மகேசுவரி ”ம்” என்ற ஒரே பதிலைச் சொன்னாள்.

”என்ன செய்யுறதுன்னே தெரியலை கர்ணன். எனக்கு நாம பழகுறது தப்புனு மட்டும் தெரியுது. வீட்டுல திட்டுறாங்க. அதுவும் அம்மா சொல்றதைப் பார்த்தா ரொம்பப் பயமா இருக்கு” என்றவளைப் பார்த்து, இரு கையையும் உயர்த்திக் கும்பிட்டேன்.

மூன்று மாதங்கள் சென்றிருக்கும். பழனிவேல் தன் ஊரில் மாகாளியம்மன் திருவிழா, ‘வீட்டில் மட்டன்’ என்று தொப்பம் பட்டி அழைத்து இருந்தான். நானும் சென்றிருந்தேன். அதே விசேஷத்துக்குப் பயல் மகேசுவரியையும் அழைத்து இருக்கிறான். அவளோ அந்த வீட்டுப் பெண் போலவே ஓடி ஓடி சாப்பாடு போடுவதும் என்னைப் பார்த்து அதே பழைய புன்னகையை வீசுவதுமாக இருக்க… பழனிவேலிடம், ”என்னால முடியாது பழனி… இவளையும் நீ கூப்பிட்டு இருக்கிறதாச் சொல்லி இருந்தா, நான் வந்தே இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

விட்டேனா பார் என்று அடுத்த நாள் கேன்டீனில் என்னை வந்து பிடித்துக்கொண்டாள் மகேசுவரி. ”சௌக்கியமா?” என்றவளிடம் ”டபுள் சௌக்கியம்” என்றேன்.

”பழனி வீட்டுல பார்த்தேன். ஏன் உர்ர்ருன்னே இருந்தீங்க?

ஒரு பேச்சுப் பேசுறதுக்கு என்ன வந்துச்சு உங்களுக்கு? அப்படிக் கோபமா? திடீர்னு பார்த்தா ஆளைக் காணோம். சாப்பிடக்கூட வரலை? நான்தான் பந்தியில் பரிமாறிட்டு இருந்தேன். உங்களுக்கு இலையில சாப்பாடு போடணும்னு ஆசையா இருந்தேன்” என்றாள். இதென்ன இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட அழைக்கிறாளா?

”ஒழுங்கா சாப்பிடறது இல்லையா? இளைச்சுட்டியே?” என்றதும் ”எல்லாம் உங்ககூட இவ்ளோ நாள் பேசாமல் இருந்ததாலதான்” என்றவளைப் பார்த்தேன். மறுபடியும் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டேன். ஒரு மாதம் கழிந்திருக்கும்.

பழனிவேலோடு மகேசுவரியைக் கவுண்டம்பாளையம் கல்பனா திரைஅரங்கின் வாசலில் பார்த்தேன். இருவருமே என்னையும் பார்த்தார்கள். படம் பார்க்கும் ஆசையை விட்டொழித்துவிட்டு அறைக்குத் திரும்பியவன், அன்று டைரியில் எழுதிய கவிதை போன்ற வரிகள்தான் இந்தக் கதையின் தொடக்கத்தில் நீங்கள் படித்தது!

இந்தக் குட்டிக் காதலின் தோல்வி வரலாறு பிரிய மகேசுவரி என்று ஆரம்பிக்கிறது. மகேசுவரிக்குப் பதிலாக, பிரிய சாந்தாமணி என்று போட்டுக்கொண்டால் அதுவும் எனக்கு இன்னொரு தோல்வி வரலாறே!

– ஜனவரி 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *