எல்லா நாட்களையும் போல் அழகாக தொடங்கியது அந்த நாள். காலை குழந்தைகளைக் கிளப்பி விட்டு, நானும் அலுவலகத்திற்கு அவசரமாக் கிளம்பி கொண்டு இருந்தேன். சாப்பிட்டு கொண்டு இருக்கையில் என் கைப்பேசியில் ஒரு அறிவிப்பு ஓசை எழும்பியது, நேரமின்றி அதை ஒதுக்கி விட்டு அவசரமாக அலுவலகம் செல்வதற்கு வண்டியிடம் சென்று ஏறி முறுக்கினேன்..
மக்கள் வாகனம் ஓட்டும் போது தான் நினைவில் தஞ்சம் புகுவார்கள். அதுபோல நானும் வேலை, சிறார்களை எண்ணி கொண்டுச் சென்றேன். திடீரென்று காலையில் ஒதுக்கிய அழைப்பு நினைவிற்கு வந்தது. விளம்பரம் மின்னஞ்சலாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் சாதரணமாக விளம்பர மின்னஞ்சல்களுக்கு அழைப்பு வராது, அதிலும் அதில் அரைகுறையாக வந்து தெரிந்த பெயர் நினைவிற்கு வந்தது. ஒரு நிமிடம் பதறியது. வாகனத்தை ஓரம் கட்டி மீண்டும் கைப்பேசியைப் பார்த்தேன். ஆமாம் அவள் தான, அவளிடம் இருந்து தான் வந்திருக்கிறது. அதை படிக்க என் மனம் தயாராக இல்லை. ஆகையால் அலுவலகம் சென்று பொறுமையாக படிக்கலாம் என்று நினைத்துக கொண்டு மீண்டும் வண்டியில் ஏறினேன்.
இம்முறை என் மனதில் அலுவலகம் இல்லை, கடமைகள் இல்லை, எதுவும் இல்லை அவள் மட்டும் தான் இருந்தாள். அந்த அழகிய ஆறு வருடமும் கொடிய ஒரு வருடமும் தான் அலை அடித்துக் கொண்டு இருந்தது. அமைதியில் போர் போல் பரிதவித்து கொண்டு இருந்தது என் மனம். அவள் தான் என் முன்னால் காதலி, அந்த மின்னஞ்சல் அவளிடம் இருந்து தான் வந்தது. வாழ்ந்து பிரிந்த அந்த வருடங்களுக்கு சக்தி மிக அதிகம் அதனால் தான் நினைவில் இன்றும் உள்ளது. என் யோசனைகளோ அந்த மின்னஞ்சலுக்கு கற்பனையிலே பல வடிவங்களும் வார்த்தைகளும் வகுக்க ஆரம்பித்தது கொண்டு இருந்தது.
அதற்குள் அலுவலகம் வந்துச் சேர்ந்தேன். வண்டியின் கண்ணாடி சிவந்த என் கண்களை காட்டியது, வழக்கம் போல் முடியை ஒதுக்கிவிட்டு அலுவலகம் உள்ளே சென்றேன்.கணினியை என் இடத்தில் வைத்து விட்டு, தனியறையில் சென்று மின்னஞ்சலைத் திறந்தேன்.
“நல்லா இருக்கியா டா?? உன் photo லாம் பார்த்தேன FB la.. உனக்குன்னு ஒரு குடும்பம், சந்தோசமா இருக்கு. நான் Super a இருக்கேன்.. எப்பையா என்ன மன்னுச்சிடு.. நெறைய சொல்லனும் ஆனா முடியாது. PLS DONT REPLY. SRY”
மின்னஞ்சல்லை நீக்கி விட்டு என் வேலையை தொடங்கினேன்.