காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 10,697 
 
 

அணன்யா மனம் விரும்புதே உன்னை…. என்ற பாடலை முனுமுனுத்தப்படியே மும்மரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் அவளுக்கும்,இனியனுக்கும் திருமணம் ஆகி ஒரு வாரமே ஆகிறது
நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி குடியேறிய புது வீட்டில் இன்று சமையலையும் தொடங்கி விட்டாள் அவள்,என்னதான் வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து சமைத்து பழகியிருந்தாலும்,தனியாக சமைக்கும் போது கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது அவளுக்கு,முதல்முதலாக இன்று தான் அவள் சமையலை இனியன் சாப்பிடப்போகிறான்,அதுவே அவளுக்கு பரபரப்பாக இருந்தது

இனியன் எழுந்து குளித்து சமையலறை பக்கம் வந்தான்.என்ன சமைக்கிற?வீடே ஒரே மணமாக இருக்கு என்று அவள் இடுப்பை கிள்ளினான்,அணன்யாவின் முகம் சிவந்து போனது,என்னங்க காலை நேரத்தில் என்று சினுங்கினாள்,இதற்கெல்லாம் காலை,மாலை நேரம் கிடையாது என்று அவள் இடுப்பை கட்டிபிடித்தான்,அவள் வெட்கத்துடன் விடுங்கள்,அடுப்பில் குழம்பு என்று ஒதுங்கி கொண்டாள்,அவன் அருகில் கிடந்த நாட்காளியில் உட்கார்ந்தான்

இருவருக்கும் காப்பி போட்டுக் கொண்டே கேட்டாள்,உங்களுக்கு என்ன சமையல் பிடிக்கும்?என்று,நீ எது செய்து போட்டாலும் நான் சாப்பிடுவேன்.பாதி நாட்கள் நானும் அப்பாவும் வெளியில் சாப்பிடுவோம்,மிகுதி நாட்கள் மாறி மாறி சமைத்து கொள்வோம் என்றான் அவன்,அம்மா இருக்கும் போது பார்த்து பார்த்து பன்னி தருவார்கள் அவர்கள் மறைவுக்குப் பிறகு என்று பெருமூச்சி விட்டான் இனியன்,இப்ப தான் நான் இருக்கேன் பிறகு ஏன் கவலை படுறீங்கள் என்று அவனின் தலையை தடவினாள் அணன்யா

திருமணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இனியனின் அக்கா,போகும் போது அப்பாவையும் அழைத்துக்கொண்டு போய்விட்டாள்.இனியன் தடுத்துப் பார்த்தான்,அப்பா என்னோடு இருக்கட்டும் என்று,அவள் அதை கேட்க்கவில்லை சின்னசிறுசுகள் சந்தோஷமாக இருப்பதற்கு நான் தடையாக இருக்க கூடாது என்பது அப்பாவின் மனநிலை,அதை புரிந்துகொண்டு மகளும் தன்னோடு அழைப்பதை அவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார்

இனியன் இரண்டு வாரம் ஆப்பிஸ் லீவு போட்டிருந்தான், அணன்யாவிற்கு அது வசதியாகவே இருந்தது,வீட்டை கொஞ்சம் மாற்றி அமைத்தாள்,தேவையான பொருட்களை இருவரும் சேர்ந்து போய் வாங்கி வந்தார்கள்,அவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டாள்,இருவரின் வாழ்க்கையும் சந்தோஷமாக ஆரம்பித்தது கோயில் போனார்கள்.பாக்,பீஷ்,படம் என்று சுற்றி திரிந்தார்கள்,ஆறு மாதம் சென்றே அவள் தாய்மை அடைந்தாள்

அடுத்த பத்து மாதத்தில் அவள் கையில் ஒரு அழகான பெண்குழந்தை லாவண்யா,பார்க்க இனியன் மாதிரியே இருந்தாள் குழந்தையை பார்த்துப் பூரித்துப் போவார்கள் இருவரும்,இனியன் ஆபிஸ் முடிந்த கையுடன் அவசரமாக வீட்டுக்கு வருவான்,லாவண்யாவை தூக்கி கொஞ்சியப் பிறகே,மற்ற வேலைகளை கவனிக்கப் போவான்,அப்படியிருந்த இனியன் தற்போது எல்லாம் தாமதமாக வீட்டுக்கு வர ஆரம்பித்தான்,அணன்யா கேட்க்கும் போது எல்லாம் ஆபிஸில் சரியான வேலை என்றான்

ஒரு நாள் அணன்யா லாவண்யாவை,தூக்கி கொண்டு கோயில் போய் வரும் வழியில்,இனியனின் நண்பன் பாஸ்கரனை கண்டாள்,அவன் என்ன சிஸ்டர் வீட்டில் இனியனுக்கு நிறைய வேலை வைக்கிற மாதிரி தெரியுது,ஆபிஸ் முடியும் முன்பே ஓடி வந்து விடுகிறான் என்றதும்,அவளுக்கு முகம் சிவந்துப் போனது,அவள் இல்லை மகள் லாவண்யாவுடன் விளையாடுவதற்காக என்று கூறி சமாளித்து விட்டு,வேகமாக ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் அணன்யா.மகளை கட்டிலில் படுக்கவைத்து விட்டு பிரிஜை திறந்து குளிர்ந்த தண்ணியை எடுத்து மடமடவென்று குடித்தாள்,அவளுக்கு அப்போதும் வேர்த்தது

ஏன் இனியன் பொய் சொன்னான் வேலையென்று,அதே நினைவாக இருந்தது அவளுக்கு,சரி வரட்டும் கேட்டுவிடலாம் என்று நினைத்துக் கொண்டாள் அணன்யா,இனியன் அன்றும் தாமதமாகவே வந்தான்,கதவை திறந்த அணன்யா ஏன் இவ்வளவு லேட் என்று கேட்டதிற்கு வேலை என்று சொன்னான்,ஏதோ கேட்க்க அணன்யா வாயை திறந்தாள் லாவண்னியாவின் அழும் குரல் கேட்டதும் உடனே அவள் அறைக்குச் சென்று லாவண்னியாவை மறுப்படியும் தூங்க வைப்பதில் நேரம் சென்றுவிட்டது

காலையில் இனியன் வேலைக்கு போகும் போது கேட்ப்போம் என்று நினைத்தாள்,அவன் வேலைக்கு போகும் அவசரத்தில் இருந்ததால் எதுவும் கேட்க்காமல் அமைதியாக இருந்துவிட்டாள்,அவன் சென்றப் பிறகு மகளை தரையில் விளையாட விட்டுவிட்டு பூ செடிகளுக்குச் தண்ணி ஊற்றிக் கொண்டிருந்தாள் அணன்யா,அப்போது பக்கத்து வீட்டு பரமசிவம் வந்தார்,வாங்க அங்கிள் என்று அழைத்தாள் அவள்,வந்தவர் நலம் விசாரித்து விட்டு,ஏதோ சொல்வதற்கு தயங்குவதுப் போல் தெரிந்தது அணன்யாவிற்கு,என்ன அங்கிள் ஒரு மாதிரி இருக்கீங்கள் என்றாள் அவள்,ஒன்னும் இல்லையம்மா உன்னிடம் ஒன்று சொல்லனும் அது தான் வந்தேன் என்று இழுத்தார் அவர்,எதுவென்றாலும் தயங்காமல் சொல்லுங்கள் அங்கிள் என்றாள்,அது வந்து இனியனோடு இன்னொரு பெண்ணை இரண்டு தடவைகள் கண்டேன் கொஞ்சம் நெருக்கமாக என்றார் அவர்,அவளுக்கு சுருக்கென்றது அதை மறைத்து என்னிடம் சொன்னார் அங்கிள் ஏதோ ஆப்பிஸ் வேலையாக அவருடன் வேலை செய்யும் பெண்ணுடன் வெளியில் போனதாக என்று சமாளித்தாள்,பார்த்துக்கோ அம்மா காலம் கெட்டு கிடக்குது,நீ என் மகள் மாதிரி என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்

அதிலிருந்து அவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை ஏதோ மனம் படபடப்பாக இருந்தது,இனியனுக்கு போன் பன்னினாள்,அவன் அவசரமாக பேசியதிலிருந்து வேலை அதிகம் என்று புரிந்துக் கொண்டாள்,எப்போதும் வேலை அதிகமான நேரத்தில் போன் பன்னினால் இனியனுக்கு அது அவ்வளவாகப் பிடிக்காது,அவள் கேட்க்க வந்த விடயத்தை எல்லாம் கேட்ப்பதற்கு இது நேரம் இல்லை என்பது புரிந்தது,சட்டென்று வேறு எதையோ கேட்டு விட்டு போனை வைத்து விட்டாள் அவள்,அவன் வீட்டுக்கு எப்போது வருவான் என்று கடிகாரத்தை பார்த்து பார்த்து கொண்டிருந்தாள் அன்று அவளுக்கு நேரமே போகவில்லை போலிருந்தது

மாலையில் வாசல் கதவருகே உட்கார்ந்து லாவண்னியாவை மடியில் போட்டு தூங்க வைத்தாள்,லாவண்யா தூங்கியதும் அறைக்கு மெதுவாக தூக்கி சென்று கட்டிலில் போட்டு விட்டு மறுப்படியும் கதவருகே வந்து உட்கார்ந்துக் கொண்டாள்,இனியன் வருவதை கண்டதும் அழுகையும் ஆத்திரமாக வந்தது,எவளோடு போய் அழைந்து விட்டு வாறீங்கள் இனியன் என்று பொறுமை இழந்து கத்தி விட்டாள் அணன்யா,இதை சற்றும் எதிர்பார்க்காத அவன் தடுமாறி போனான்,உடனே சுதாகரித்துக் கொண்டு,முதலில் உள்ளே வா என்றான்,அதற்கு மேல் அவளுக்கு கத்த பயமாக இருந்தது,மகள் எழுந்து விடுவாள் என்ற பயம் குடும்ப விவகாரத்தை வாசலில் வைத்து கதைக்கும் அளவிற்கு மனமும் இடம் கொடுக்கவில்லை,அவள் அமைதியாக உள்ளே வந்து சோபாவில் தொப்பென்று சாய்ந்தாள்,அவன் அவளுக்கு தண்ணி கொண்டு வந்து கொடுத்தான்,மடமடவென்று வாங்கி குடித்த அவளுக்கு படபடப்பு குறையவில்லை

இனியன்,அவளின் கையை பிடித்தான்,உதற நினைத்த அவள் அந்த ஆறுதல் அப்போது தேவைப்பட்டது.என்னை மன்னித்து விடு உன்னிடம் எனது கடந்த கால வாழ்க்கையை
மறைத்ததிற்கு என்றான் இனியன்,என்னங்க சொல்லுறீங்கள் என்றாள் அணன்யா,நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள் என்றான் இனியன்,அவளும் அமைதியாக இருந்தாள் நான் முன்பு ஒரு பெண்ணை விரும்பினேன் என்றதும் அணன்யாவிற்கு தூக்கிவாரிப் போட்டது,ஏன் இதை என்னிடம் முன்பே சொல்லவில்லை என்றாள் அணன்யா கோபமாக,அதை சொன்னால் நீ எப்படி எடுத்துக்குவ என்ற பயத்தில் மறைத்து விட்டேன் என்றான் இனியன்

பிறகு ஏன் என்னை ஏமாத்தி கட்டுனீங்கள் என்றாள்,உன்னை நான் ஏமாற்ற வில்லை என்றான் அவன்,சொல்லாமல் மறைப்பது ஏமாற்று வேலை தான் வேறு எப்படி சொல்வது என்றாள் ஆத்திரமாக,அவன் மௌனமாக இருந்தான்,தற்போது யார் பின்னாடி சுத்துறீங்கள் என்றாள் கோபமாக,நீ நினைக்கும் அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை,நான் நடந்ததை கூறிவிடுகிறேன் என்று இனியன் ஆரம்பித்தான்,ஒரு நாள் நான் காலேஜ் போவதற்கு பஸ்ஸில் ஏறினேன்,அப்போது தான் முதல் முதல் அவளை கண்டேன்,கண்டதும் காதல் பாடசாலை சீருடையில் இரட்டை பின்னலில் கையில் புத்தகப் பையுடன் நின்ற அவள் என்னை ஏதோ செய்தாள்

இருவரும் ஒரே இடத்தில் இறங்கினோம்,எனது காலேஜும்,அவளின் உயர்தர பள்ளியும் ஒரே தெருவில் இருந்தது அவளின் சீருடை உயர்தரம் படிக்கின்றாள் என்பதை புரிந்துக் கொண்டேன்,நான் காலேஜில் முதலாம் ஆண்டு படிக்க ஆரம்பித்து இருந்தேன்,அடுத்த நாளும் அதே நேரத்திற்கு அதே பஸ்ஸில் இருவரும்,அமைதியாக நிற்கும் அவளை பார்க்கும் போது மெய் மறந்து நிற்பேன் என்றவனை முறைத்தாள் அணன்யா,சரி சரி முறைக்காதே அது ஒரு காலம் என்று தொடர்ந்தான் அவன் அவளிடம் என் காதலை சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை ஒவ்வொரு நாளும் அவளை பின் தொடர ஆரம்பித்தேன்,அவள் வரும் பஸ்ஸில் இடையில் தான் நான் ஏறுவேன் எப்படியும் அந்த பஸ்ஸில் அவள் இருப்பாள்

என்னுடன் வரும் மற்றைய நண்பர்களுக்கு இது தெரிய வந்துவிட்டது,எத்தனை நாட்கள் இப்படியே தூரத்தில் இருந்து சைட் அடிப்ப போய் முதலில் உன் காதலை அவளிடம் கூறு என்றார்கள்,எனக்கு தயக்கமாக இருந்தது,இதை நன்கு அறிந்த என் நண்பர்கள் எனக்கு தெரியாமல் அவளிடம் போய் உங்களை இனியன் காதலிக்கிறான்,நீங்கள் வரும் பஸ்ஸில் தான் அவனும் வருவான்,உங்களிடம் கூறுவதற்கு தயக்கம்,அதனால் தான் நாங்கள் வந்து கேட்க்கின்றோம் என்று கூறியதும்,அதற்கு அவள் கொஞ்சம் தடுமாறி விட்டு,யார் என்றே எனக்கு தெரியாது உங்கள் நண்பனை,காதலை கூறவே பயந்து கொண்டு நண்பர்களிடம் தூது அனுப்பும் உங்கள் நண்பரிடம் கூறிவிடுங்கள்,ஏற்கெனவே ஒருத்தரை நான் காதலிக்கிறேன் என்று கூறிவிட்டு அவள் சென்று விட்டாள்

அவள் கூறியதை என் நண்பர்கள் என்னிடம் வந்து கூறும் போது எனக்கு உலகமே இருண்டு போனது போல் இருந்தது,அவள் காதலை கூறுவதற்கு தைரியம் இல்லை என்று சொன்னதை என் நண்பர்கள் என்னிடம் மறைத்து விட்டார்கள்,அவர்களுக்கு பயம் நான் திட்டுவேன் என்று,அன்று அவள் அப்படி கூறியது எனக்கு தெரிய வந்து இருந்தால் சில நேரம் அவளை வெறுத்து இருப்பேன் அப்போதே,அவள் பொய் சொல்லுவதாக நினைத்தேன்,என் நண்பன் பரத்திடம் அவளை காட்டி தேடிப் பார்க்கச் சொன்னேன்,அவனும் இரண்டு நாட்களில் வந்த சொன்ன விடயங்கள்,நானும் உன் ஆளும் ஒரே ஊரில் தான் இருக்கோம் இது நாள் மட்டும் என் கண்ணுக்கு அவள் படவில்லை,நான் காலேஜிக்கு வண்டியில் வந்து விடுவதால் எனக்கு தெரியவில்லை,அவள் தம்பி அருண் எங்களுடன் வந்து கிரிக்கட் விளையாடுவான்,நீ தேடி பார்க்க சொன்னப் பிறகு தான்,நான் அவள் ஏறி போகும் பஸ்ஸை என் வண்டியில் பின் தொடர்ந்து போனேன் அவள் நான் இருக்கும் ஊரில் இறங்கியதும் எனக்கு ஆச்சிரியமாக இருந்தது என்றான்,அதை கேட்டப் பிறகு எனக்கு நிம்மதியாக இருந்தது,அவள் பெயர் லேக்கா என்றான் அப்போது தான் அவள் பெயரே எனக்கு தெரியும்

அவளின் பெற்றோர்கள் விவசாயம் செய்வதாகவும்,அக்கா ஹாஸ்டலில் இருந்து படிப்பதாக சொன்னான்,பரத் மேலும் சொன்னது அவள் கைலேஷ் என்பவனை காதலிக்கின்றாள்,அவள் காதலிக்கும் கைலேஷ் அவ்வளவு நல்லவன் இல்லை,நிறைய பெண்களை ஏமாற்றி இருக்கான் எப்படி போய் அவனிடம் மாட்டுப் பட்டாளோ தெரியவில்லை,நீ கவலைப் படாதே,எப்படியும் கைலேஷ் லேக்காவை கட்ட மாட்டான்,அவள் உனக்கு கிடைப்பாள் நம்பிக்கையுடன் இரு என்றான்,அப்போது தான் நம்பினேன் அவள் உண்மையாகவே வேறொருவனை காதலிக்கின்றாள் என்பதை,அது தெரிந்தப் பின்பும் அவள் எனக்கு கிடைப்பாள் என்று முழுமையாக நம்பினேன் பரத் சொன்ன மற்ற விடயங்களை வைத்து

பரத் சொன்னான் நீ என் வீட்டுக்கு வந்தால் நாங்கள் விளையாடும் போது லேக்காவின் தம்பியை உனக்கு அறிமுகம் படுத்தி வைக்கிறேன்,அதன் பிறகு உன் பாடு,என்னை ஏதும் மாட்டி விட்டு விடாதே,உன் காதலுக்கு நான் உதவப் போய் என்னை ஊரில் இருக்க விடாமல் பன்னிவிடாதே என்றான் அவன்,அதன் பிறகு பரத் வீட்டுக்குப் நான் போக ஆரம்பித்தேன்,எனக்கு லேக்காவின் தம்பி அருணை அறிமுகம் படுத்தி வைத்தான் பரத்,அனைவரும் கிரிக்கட் விளையாடுவோம்,நான் அருணுடன் ஒட்டிக் கொண்டேன் அவனுக்கும் என்னை பிடித்திருந்தது,என்னை அவன் வீட்டுக்கு அழைத்தான்,நானும் அதற்காக தான் காத்திருந்தேன்,அவர்கள் வீட்டுக்கு போக ஆரம்பித்தேன்

எனக்கு லேக்காவை பார்த்தால் போதும்,என்னை காணும் போது ஒரு புன்னகையுடன் உள்ளே சென்று விடுவாள் லேக்கா,அந்த புன்னகையும் அருணின் நண்பன் என்பதால்,அவளுக்கு தெரியாது நான் தான் இனியன் என்றதும் உடனே அணன்யா அப்படி என்றால் அவளையும் ஏமாத்தி இருக்கீங்கள் என்றாள் கடுப்பாக,இல்லை என்றான் இனியன்,அவளின் அம்மா கனகா என்னிடம் நன்றாக பழக ஆரம்பித்தார்கள்,அதற்கு காரணம் லேக்காவின் அப்பா பரமேஷ்வரன் காலையில் விவசாயத்தை கவணிக்கப் போனால் தாமதமாக தான் வீட்டுக்கு வருவார்,மூத்த மகள் லதாவும் வீட்டில் இல்லை,அருண் படிப்பு விளையாட்டு என்று போய்விடுவான்,லேக்கா அவளின் காதலை பெற்றோர்கள் வெறுப்பதால் குடும்பத்துடன் ஒட்டுதல் இல்லை,அதனால் கனகா ஆண்டி என்னை எதிர்பார்ப்பார்கள்,நானும் அவர்களிடம் ஆண்டி என்று உரிமையுடன் பழக ஆரம்பித்தேன் என்றான் இனியன்,ஆமா வருங்கால மாமியார் என்ற உரிமையில் பழகியிருப்பீங்கள்,நீங்கள் லேக்காவிற்காக தான் வீட்டுக்கு வருவது தெரிந்திருந்தால் அப்போதே உங்களை துரத்தி விட்டு இருப்பார்கள் உங்கள் அருமை ஆண்டி என்றாள் அணன்யா

கனகா ஆண்டி என்னை எப்போதும் எதிர்பார்ப்பார்கள் எனக்கு காலேஜ் முடிந்ததும் அவர்கள் வீட்டுக்குப் போய் சிறிது நேரம் இருந்து விட்டு தான் வருவேன்,கிரிக்கட் விளையாட அருண் போகும் போது என்னையும் கூப்பிடுவான்,ஆண்டி என்னை விட மாட்டார்கள்,அம்மாவுக்கும் உனக்கும் தான் சரிபடும் என்று அருண் கூறிவிட்டு போய்விடுவான்,பரத் காணும் போது கிண்டல் பன்னுவான் எங்களை எல்லாம் மறந்து விட்டீயா என்று,லேக்கா வீட்டில் இருந்தால் எனக்கு எங்கும் போக தோன்றாது இத்தனைக்கும் அவள் எனக்கு காப்பி கொண்டு வந்து தருவதோடு சரி இரண்டு வார்த்தைகள் கதைப்பாள் அதற்காகவே அவர்கள் வீட்டில் உட்கார்ந்து இருப்பேன்

ஆண்டி குடும்ப விடயங்கள் எதையும் என்னிடம் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்வார்கள்,அப்படி தான் லேக்காவின் காதலையும் சொன்னார்கள்,அவள் விரும்பும் பையனை எங்களுக்கு விருப்பம் இல்லை,இவள் அவனையே கட்டுவேன் என்று பிடிவாதமாக இருக்கின்றாள் என்று கவலைப் படுவார்கள்,சரி ஆண்டி விடுங்கள் அதற்கு இன்னும் வயது இருக்கு தானே அப்போது எதுவும் மாறலாம் என்று ஆறுதல் கூறுவேன் என்றான் இனியன்,அந்த ஆண்டி பாவம் உங்கள் கள்ளத்தனம் தெரியாமல் உங்களை நம்பினார்களே என்றாள் அணன்யா

ஒரு நாள் லேகாவிடம் தனியாக கதைப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது,அப்போது தான் நான் இனியன் என்றும் என் நண்பர்கள் உங்களிடம் வந்து கேட்டது எனக்காக தான் என்றதும் அவள் ஆச்சிரியப்பட்டுப் போனாள்,பிறகு எப்படி நீங்கள் நம் வீட்டில் என்றாள் லேக்கா,உங்கள் தம்பியின் நண்பன் என்பதோடு முடித்துக்கொண்டேன்,பிறகு அவள் என்னை காணும் போதும் கதைப்பதை குறைத்துக் கொண்டாள்,எனக்கு அது கவலையாக இருந்தாலும்,அவளை பார்க்க கிடைப்பதுவே போதும் என்று நினைத்துக் கொள்வேன்

நான் காலேஜ் இறுதி ஆண்டில் படித்தேன்,லேக்காவும் காலேஜ் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது,வேகமாக ஓடியது நாட்கள்,ஏதோ காரணத்தால் லேகாவின் காதல் கைலேஷுடன் தொடரவில்லை அதுவும் கனகா ஆண்டி தான் என்னிடம் சொன்னார்கள்,எனக்கு மனதிற்குள் சந்தோஷமாக இருந்தது,எப்படியும் இனி அவள் எனக்கு தான் என்று நினைத்தேன்,கனகா ஆண்டியிடம் என் காதலை கூறிவிடனும் இனியும் மறைக்க கூடாது என்று முடிவெடுத்து அவர்களிடம் சொல்வதற்கு நான் நினைத்தப் போது அவர்கள் முந்திக் கொண்டார்கள்

லேக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து முடிவாகிவிட்டது,மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்கிறார்,விரைவில் திருமணம் நடக்கும் கட்டாயம் குடும்பத்தோடு வந்து விடனும் என்றார்கள்,அதை கேட்டதும் நான் தலை சுற்றி கீழே விழாத குறைதான்,சரி ஆண்டி என்று கூறிவிட்டு எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டேன் அன்று,லேக்காவின் காதலை வெறுத்தவர்கள்,இது தான் சந்தர்ப்பம் என்று அவசரமாக மாப்பிள்ளையை பார்த்து முடிவு பன்னிவிட்டார்கள்,இதை அறிந்த பரத் என்னை தான் திட்டி தீர்த்தான்,அவ்வளவு நாட்கள் அவர்கள் வீட்டுக்குப் போனவன் ஆண்டியிடம் சரி உன் காதலை கூறி சம்மதிக்க வைத்திருக்கலாம் நீ ஒரு முட்டாள் இப்போது கவலை பட்டு அழுவதில் அர்த்தம் இல்லை என்றான்,நான் போய் கதைப்பதாக சொன்னான் நான் வேண்டாம் என்று தடுத்து விட்டேன்,இது லேக்காவின் சம்மதத்தோடு நடக்கும் திருமணம் அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்றதும் பரத் அமைதியாகி விட்டான்,எனக்கு லேக்காவின் திருமணத்திற்கு அருண் அழைப்பிதல் கொடுத்தான் நான் போகவில்லை,என் மனதில் ஏற்பட்ட காதல் எனக்குள் புதைந்துப் போனது,அதனால் தான் உன்னிடம் எதையும் நான் கூறவில்லை என்றான் இனியன் அணன்யாவிடம்

அதே லேக்கா தற்போது,தன் கணவனை வெளிநாட்டில் பறி கொடுத்து விட்டு தனி மரமாக நம் கம்பனியில் புதிதாக வேலைக்கு வந்து சேர்ந்திருக்காள்,என்றதும் என்னங்க என்று அணன்யா பதறி போய்விட்டாள்,நீயே பதறி போகும்போது என்னை கொஞ்சம் சோசித்துப் பார் என்றான் இனியன்,அவளுக்கு கவலையாக தான் இருந்தது,அவளை கண்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது,அவள் என்னிடம் வந்து சகஜமாக பேசினாள்,நலம் விசாரித்தாள்,தற்போது ஹாஸ்டலில் தங்கி இருப்பதாகவும்,வாடகைக்கு தனி அறை பார்ப்பதாகவும் சொன்னாள்,அவளுக்கு இந்த ஊரில் வேறு யாரையும் தெரியாது என்னை தவிர,அதனால் அவளுக்கு வாடகைக்கு அறை தேடி கொடுப்பதற்காக அவளுடன் இரண்டு மூன்று தடவைகள் வெளியில் சென்றேன் அதைப் பார்த்து விட்டு யார் சரி உன்னிடம் தப்பாக சொன்னார்களா என்றான் இனியன்,ஆமாம் பக்கத்து வீட்டு பரமசிவம் அங்கிள் சொன்னார் என்றாள் அணன்யா,லேக்காவின் மீது இன்னும் காதலா என்றாள் அணன்யா,இது என்ன கேள்வி அவள் என்னை அப்போது காதலிக்கவே இல்லை,தற்போது நான் உன் கணவன்,லாவண்யாவுக்கு அப்பா,அவளுக்கு உதவி செய்தேன் அவ்வளவு தான் என்றான் இனியன்,அவளுக்கு முழு நம்பிக்கை இல்லை என்றாலும் நிம்மதி பெருமூச்சி விட்டாள் அணன்யா

அன்று இரவு அவளுக்கு தூக்கம் வர மருத்தது,பல குழப்பம் மனதில் இனியன் மறுப்படியும் அவளை காதலித்து விடுவானோ,அல்லது தனி மரமாக நிற்கும் லேக்கா இவனை காதல் என்ற பெயரில் என்னிடமிருந்து பிரித்து விடுவாளோ,ஏன் இங்கு வந்து சேர்ந்தாள் இவன் வேலை செய்யும் கம்பனியில்,முன்பே இவர்களுக்கு தொடர்ப்பு இருந்திருக்குமோ,இவன் வர சொன்னானோ இப்படி பல சந்தேகங்கள் அவள் மனதில் தோன்ற ஆரம்பித்தது கண்ணீரும் எட்டிப் பார்த்தது.

இனியன் காலையில் வேலைக்கு போக தயாரானான்,அவனில் எந்த மாற்றமும் இல்லை,எந்த பதட்டமும் இல்லை,அணன்யா மனம் தான் படபடத்துக் கொண்டே இருந்தது,ஏதோ அவள் தப்பு செய்த மாதிரி,இனியன் வேலைக்கு போகும் போது லாவண்னியாவிடம் கொஞ்சி விட்டு,நீ ஒன்றும் கவலைப் படாதே என் அருமை மனைவியே என்று கிண்டல் செய்து விட்டு சென்று விட்டான்,அது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது மனதிற்கு,இவன் நம்மை விட்டு போகமாட்டான் என்று அந்த நம்பிக்கையில் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் அணன்யா

இனியனிடம் லேக்கா சொன்ன சிலவற்றை அணன்யாவிடம் மறைத்து விட்டான்.நான் உங்களை மறுப்படியும் காதலிக்க நினைத்து என் அம்மாவிடம் உங்களை பிடித்திருப்பதாக சொன்னப் போது அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை,மறுப் படியும் காதல் என்று தொடங்கி விடாதே,நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக்க என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் மறுப்படியும் காதலுக்காக அம்மாவிடம் போராட எனக்கு தைரியம் இல்லை.முழுமையாக நம்பி கைலேஷை காதலித்து அவன் என்னை ஏமாற்றிவிட்டு போய்விட்டான் என்றாள் லேக்கா

எனக்கு முன்பே தெரியும்,அவன் உன்னை ஏமாற்றி விடுவான் என்றான் இனியன்,லேக்கா அவனை பார்த்தாள் உங்களுக்கு எப்படி தெரியும்,ஏன் என்னிடம் முன்பே கூறவில்லை என்றாள் அவள்,அப்போது நான் அதை உன்னிடம் கூறியிருந்தால்,நீ நம்பியிருக்க மாட்ட,நான் உன்னை காதலிப்பதுக்காக பொய் கூறுவதாக நினைத்து இருப்ப,அதனால் தான் நான் உன்னை தொடர்ந்தேன்,என்றாவது ஒரு நாள் நீ எனக்கு கிடைப்ப என்ற நம்பிக்கையில் பெருமூச்சி விட்டான் இனியன்,இருவரிடமும் சிறு அமைதி நிலவியது,இது என் தலையெழுத்து வாழ்க்கையே மாறிபோய்விட்டது,நான் காதலித்தவனும் ஏமாத்தி,நீங்களும் கிடைக்காமல்,கட்டியவனும் போய் சேர்ந்து விட்டான்,என்று கூறும் போது லேக்காவின் கண்கள் குழமாகி விட்டது

இனியனுக்கு லேக்காவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூற வேண்டும் போல் இருந்தது,கட்டுப் படுத்திக் கொண்டான்,கவலை படாதே என்று சொன்னவனுக்கு,அவனால் கவலைபடாமல் இருக்க முடியவில்லை,முதல் காதலை யாராலும் மறக்கவே முடியாது உண்மையான காதல் ஒரு போதும் மாறாது,இதையெல்லாம் அணன்யாவிடம் கூறமுடியாது,லேக்காவை ஒரேயடியாக ஒதுக்கவும் முடியாது,தற்போது இனியனுக்கு லேக்காவின் மீது காதலை விட அனுதாபங்களே நிறைந்திருந்தது,அதுவே மறுப்படியும் காதலாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் இனியன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *