காதல் குருவிகளின் பார்வையிலே…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 3,439 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோடைக் காலம் கொடுத்துவிட்டுப் போன கொடைக் காலமான வசந்த காலம். சென்ற கோடையின் கதகதப்பையும், வரப் போகிற குளிர் காலத்தின் குளிர்மையையும் உள்ளடக்கிய பருவ காலம், நிலத்திற்கு நரைமுடியாய்ப் பட்டுக்கிடந்த புற்கள், பகமை தட்டித் தழைத்த நேரம். இலையுதிர்ந்த மரங்களில் இலை தழைகள் துளிர் விட்ட சமயம்.

கிளைகளே கரங்களாய், முட்களே நகங்களாய்க் கொண்ட இடைமேட்டின் உடைமரங்களில் உட்கார்ந்திருந்த துரக்கணாங் குருவிகள் ஆணும் பெண்ணுமாய் அமர்ந்திருந்தன. தொலைவில் உள்ள காடுகளில் கோடைக்குப் பதுங்கிவிட்டு நேற்றுதான் அவை வந்திருக்க வேண்டும். சுற்றுப்புறத்தை ஆராய்வதுபோல் அலகுகளை நிமிர்த்தின. பறவைகளில் ‘கேடியான வெள்ளைப் பிடறிக் காகங்கள் அருகே கூடு கட்டுவதால் சற்றே கலக்கமடைந்ததுபோல் தோன்றின. அதேசமயம், எந்தப் பறவையினத்திற்கும் தீங்கு விளைவிக்காத பறவையின ரவுடிகளான அண்டங்காக்காக்கள் இருப்பதில் ஆறுதல் கொண்டன. ஆண் குருவிகளின் தலையில் சின்னச் சின்ன கொண்டைகள். மேனி முழுவதும் வண்ணக் கலவைகள். ஆண் குருவிகளின் மார்பு வெளிர் மஞ்சள் நிறத்திலிருந்து, இப்போது மஞ்சள் பழுப்பு நிறத்திற்கு வந்துவிட்டது. அதாவது காதல் வந்துடுச்சுன்னு அர்த்தம் காரணமான காதலுக்கு, காரியமான கூட்டைப் பின்ன வேண்டும்.

மொத்தம் இருபது பறவைகள். ஆண் குருவிகள் பெண் குருவிகளை இடித்துக் கொண்டன. இவற்றின் இடிபாடு பிடிக்காததுபோல், பெண் குருவிகள் பறந்து எதிர்த் திசையில் அமர்ந்துகொண்டு அவற்றை முறைத்தன. சிறிது நேரத்தில், அப்படியே அமர்ந்திருந்த அந்த ஆண் குருவிகளும் பெண் குருவிகளும், மரங்களை விட்டுத் தாவி ஆகாயத்தில் சஞ்சரித்தன. மேலும் கீழுமாகப் பறந்தன.

இவற்றைச் சட்டை செய்யாதது போல், சட்டையில்லாமல் பிரிண்ட் போட்ட பனியனோடும் சுருட்டை முடியோடும் அழகுத் தோற்றத்தோடும் அங்கே வந்து நின்ற அந்த வாலி பன், சற்றுத் தொலைவில் வந்தவளைத் திரும்பிப் பார்த்தான். அவளோ தயங்கித் தயங்கி நடந்து வந்தாள். திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் அங்கேயே நின்றாள். இங்கே நின்ற அவன், அவளை ‘வா வா என்று கைகளை வளைத்து வளைத்துக் காட்டினான். அவள் வேண்டா வெறுப்பாக வருகிறவள் போல் வந்து, அவனுக்கு எட்டடி தொலைவில் நின்றாள். காக்கா நிறக் கண்கள்: பூஞ்சிட்டுக் குருவி நிறம், மைனா போன்ற பேதமைச் சாயல். அவனுக்குக் காதளவு உயரம். வோட்டுப்போடும் வயதிற்கு வந்திருக்கமாட்டாள். அவளையே ரசித்துக் கொண்டிருந்த வாலிபன் திடீரென்று ஒடிப்போய் அவளை அனைத்துக் கொண்டான். அவள் பயத்தால் கைகளை உதறினாள். அவன் தைரியப்படுத்துபவன் போல் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

இந்த மனித ஜோடியை ஆகாயத்தில் வட்டமடித்தபடியே பார்த்த துரக்கணாங் குருவிகள், மெல்ல மெல்லக் கீழே இறங்கி உடைமரத்தில் அமரந்து கொண்டன. காதலர் இருவரும் தங்களுக்குள்ளேயே மூழ்கியிருப்பதைப் பார்த்த தைரியத்தாலோ அல்லது கவாரஸ்யத்தாலோ, அவை சற்றே நெருங்கி ஒரு திட்டில் ஒட்டுமொத்தமாக அமர்ந்தன. மனிதக் காதலால் பாதிப்பு ஏற்பட்டதுபோல், சில சின்னஞ் சிறிசுகள் இறக்கைகளை ஆட்டிக் கொண்டன. அலகுகளால் இடித்துக் கொண்டன.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவனும் அவளும் புறப்பட்டார்கள்.

மானுடக் காதல் வியாதி துரக்கணாங் குருவிகளில் ஆண்களைத் தொத்திக் கொண்டது, அப்பட்டமாகத் தெரிந்தது. பெண் குருவிகளிடம் வாலாட்டின. இதில் இரண்டு, மூன்று ஆண்கள் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. சண்டை ஒய்ந்ததும் எல்லா ஆண் குருவிகளும், தலைக்கு ஒன்றாகப் பெண் குருவிகளை இடித்தன. ஆனால் பெண்களோ, கால்களால் தத்தித் தத்தித் தாவி விலகிப் போயின.

ஒரு கூடு கட்டத் துப்பில்ல. காதல் வாழுதாக்கும். மொதல்ல கூடு கட்டு, அப்புறம் வாரேன்.

ஆண் குருவிகள் புரிந்து கொண்டன. எல்லாப் பெண் குருவிகளும் தன்னை மட்டுமே நம்பி இருப்பதாக ஒவ்வோர் ஆண் குருவியும் நினைத்துக் கொண்டு பிறகு ச்சூ ச்சூ ச்சோச்’ என்று போர்க் கீதம் இசைத்தபடியே நான்கு திசைகளிலும் சிதறிப் பறந்தன.

சிறிது நேரத்தில் ஆண் குருவிகள் கால்களில் தேங்காய் நார், பனை நார், இலை நரம்புகள் முதலியவற்றைப் பற்றியபடி, அலகுகளில் ஈச்சம் இலை, கவ்வியபடி வந்தன. அனைத்தும் ஆவேசமாக இயங்கின. காதல் ஆவேசம். இப்போது கூடு கட்டத் துவங்கினால்தான் இன்னும் பத்துப் பதினைந்து நாட்களிலாவது கூட்டை கட்டி முடிக்கலாம். கூடு இல்லாமல் கூடுவதற்கு பெண் குருவிகள் வராது என்பது இவற்றுக்குத் தெரியும்.

ஈச்சம் இலையின் முதுகுத் தண்டு போன்ற ஈர்க்குகளையும், கரும்புத் தோகை நாரையும் அலகுகளை வளைத்து நெளித்துக் கிழித்தன. கிழித்தெடுத்த நார்களை அலகு மூலம் கிளைகளில் இரண்டு பக்கமும் தொங்கும்படி சமமாகப் போட்டன. இப்படிப் பத்துப் பதினைந்து நார்களைக் குறுக்கும் நெடுக்குமாகத் தொங்கப் போட்டபின், தொங்கிய நார்களை அலகால் கவ்வி, முன்னாலும் பின்னாலும் பக்கவாட்டிலுமாகச் சுழற்றின. பம்பரம் கற்றுவதுபோல் உடம்பை வளைத்தும் நெரித்தும் சுழித்தும் சர்க்கஸ்காரன் போலச் சுழன்று நார்களைச் சுழல வைத்தன. அப்பாடா முடிச்சுகள் பதிந்து விட்டன. பிறகு, களைத்துப் போனவைபோல் கிளைகளில் அமர்ந்து, கொண்டைகளை நிமிர்த்தி லேசாக விசிலடித்தன. அப்பாடா..!

கூடு கட்டப்படும் உடைமரத்திற்கு எதிரே உள்ள திட்டில் ஆண் குருவிகள் இயங்குவதை வேடிக்கை பார்த்தபடி பெண் குருவிகள் ஜம்மென்று இருந்தன.

பத்து ஆண் குருவிகளில், எடுத்த உடனே அடையாளம் காணக்கடிய ஒரு குருவியும் இருந்தது. மற்ற குருவிகள் தலை பழுப்பு நிற மஞ்சள் நிறத்தில் தோன்றும்போது, இதன் தலை மட்டும் பிரகாசமான மஞ்சளில் தோற்றம் காட்டியது. மார்பில் மற்றவற்றிற்கு வெளுப்பு மஞ்சள் என்றால், இதற்கு பழுப்பு மஞ்சள்.

இந்த மஞ்சள் பிரகாசிக்கு ஒர் ஆசை. எல்லா ஆசைகளுக்கும் இருப்பது போல், அந்த ஆசைக்கும் ஒரு பிரச்னை, எதிர்த்திட்டில் உட்கார்ந்திருக்கும் பெண் குருவிகளில் வடக்கிலிருந்து நான்காவதாக உள்ள குருவியாள் மீதுதான் அதற்குக் காதல். அங்கிருந்த குருவியாளும் ஒய்யாரமாகவே தோன்றியது. இந்தக் குருவியை ஆத்திரமாகவும் பார்த்துக் கொண்டது. இன்னுமா கூடு கட்டத் துவங்கலே. உம் சீக்கிரம். நம்மளாலே காத்திருக்க முடியாது. இப்படி இருந்தியானால். அப்புறம் காத்திருந்தவன் காதலியை நேத்து வந்தவன் கொண்டுபோன மனிதக் கதையாய் முடிஞ்சுடும். சிக்கிரம் மச்சான். சிக்கிரம்!.

மஞ்சள் பிரகாசி நகரவில்லை. எல்லாக் குருவிகளையும்போல் ஈர்க்குகளைத் தயாரித்துவிட்டது. ஆனால் முடிச்சுப் போடவில்லை. வாழ்ந்தால் அந்தக் குருவியாளுடன் வாழ வேண்டும் என்ற ஆசை. அவள் தன் கூட்டைப் பார்த்து நிராகரித்துவிட்டு வேறொரு வில்லன் கூட்டிற்குள் போய் விடக் கூடாதே என்ற அச்சம். அதே சமயம் அழகாகக் கூடு கட்டி, அதில் மயங்கி, வேறு எந்த மொக்கு மூதேவிப் பெண் குருவியாவது, ‘நான்தான் ஒன்னோட இருப்பேன்னு அடம் பிடிக்கக் கூடாதேன்னு ஆதங்கம். இந்த அச்சத்தாலும், சந்தேகத்தாலும் அதற்கு அலகும் ஒடவில்லை. கால்களும் ஒடவில்லை. இதன் காதல் பைத்தியத்தை அசல் பைத்தியமாக நினைத்தபடி சில ஆண் குருவிகள் அதனருகே வந்து அனுதாபமாகப் பார்த்தன.

பத்து நாட்கள் பறந்திருக்கும்.

மஞ்சள் பிரகாசி கூடு கட்டும் பணியில் இறங்கி விட்டது. நார்களில் சிக்கலை ஏற்படுத்தி ‘பக்கங்களை உருவாக்கி விட்டது. குருவிக் காதலியாள் அடிக்கடி வந்து தட்டிக் கொடுத்தாள். இதர ஆண் குருவிகளுக்குப் பின்தங்கிய மஞ்சள் பிரகாசி, இப்போது முன் தங்க நினைத்து வேக வேகமாகச் கழன்றது. சுற்றியது. பறந்தது பற்றியது.

எல்லாக் கூடுகளும் கிட்டத்தட்ட முழுமை பெற்றன. ஆகாய கரைக்காய்கள் அற்புதமாய்த் தொங்கின. கம்ப்யூட்டர் கால மனிதனின் வேகத்தையும் விறுவிறுப்பையும் மிஞ்சும் அற்புதத்தின் அதிசயமாய் அவை மின்னின.

இன்னோர் அதிசயம்.

கூடு கட்டிய ஆண் குருவிகள் தத்தம் கூடுகளில் முன் வாசலில் கால்களைப் பற்றிக் கொண்டு தலைகீழாகத் தொங்கின. பிறகு அப்படியே அந்தர் அடித்துக் கூட்டுக்குள் போயின. பிறகு, வெளிப்பட்டு தலைகீழாகத் தொங்கி, பக்கவாட்டில் நிமிர்ந்து, எதிர் திசையில் உட்கார்ந்திருந்த பெண் குருவிகளைப் பார்த்து விசிலடித்தின. பெண்கள் பேசாது இருந்தபோது, ஆண்கள் முன்னிலும் அதிகமாகச் சுழன்றன. விசில் சத்தம் வலுத்தது. மஞ்சள் பிரகாசிதான் எல்லா ஆண் குருவிகளையும்விட அதிகமாகக் கர்ணம் போட்டது. வேகமாக விசிலடித்தது.

மஞ்சள் பிரகாசி கண் வைத்த குருவியாள் தத்தித் தத்தி நடந்து, பிறகு மேலே பறந்து, அங்குமிங்குமாக வட்டமடித்து, ஒப்புக்கு ஒரு சில கிளைகளில் உட்கார்ந்துவிட்டு, பிறகு மஞ்சள் பிரகாசியின் கூட்டருகே வந்து உள்ளே எட்டிப் பார்த்தது. உடனே கர்ணம் போட்டுக் கொண்டிருந்த எல்லாக் குருவிகளும் அங்கே கூடி விட்டன. குருவியாளைச் சுற்றி மொய்த்துக் கொண்டு என் கூடு இதைவிட நல்ல கூடு என்பது போல் இறக்கைகளை அகலமாய் விரித்தபடி, ச்சூ ச்சூ சி என்று குரலெழுப்பிக் காதல் கீதம் இசைத்தன. சில கூடுகளைக் கடைக்கண் விரித்துப் பார்த்த குருவியாள் சிறிது பிகு செய்துவிட்டு மஞ்சள் பிரகாசியின் கூட்டுக்குள் சென்றது. எல்லா ஆண் குருவிகளும் சோக கீதம் இசைக்க, மஞ்சள் பிரகாசியும் வெற்றி வாசலுக்குள் நுழைவதுபோல், தன் கூட்டுக்குள் நுழைந்தது.

இந்தச் சமயத்தில் வழக்கம்போல் அந்த இளஞ்ஜோடி வந்தது. ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுச் சிரித்தபடி சிணுங்கியபடி, அவனும் அவளுமாய் வந்தார்கள். அன்று குருவிகளும் பார்க்க, கேட்க, நுழைய முடியாத ஒரு தொலைதுாரத்துப் புதர் பகுதிக்குள் இருவரும் சென்றார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து அந்த மனிதக் குட்டிகள் திரும்பி வந்தன. மரக் கிளையில் சோர்வாக உட்கார்ந்திருந்த மஞ்சள் பிரகாசி அவர்களையே பார்த்தது. அவள் தலைமுடி வழக்கத்திற்கு மாறாகக் கலைந்திருந்தது. புடவை முழுக்க புழுதிக் கோலம். அடிக்கடி முகம் முழுவதையும் துடைத்துக் கொண்டாள். காலிலும் கையிலும் விழுந்த கீறல்களுக்கு மணலைச் சலித்துப் போட்டுக் கொண்டாள். அவனோ நிறைவோடு நிற்பவன் போல், காலில் சிக்கிய ஒரு உருளைக் கல்லை உருட்டியபடியே, சிறு தேர் ஒட்டினான். திடீரென்று அந்தப் பெண் அழுதாள். கைகளை உதறினாள். பிறகு முகத்தில் படரவிட்டுக் கொண்டு விம்மினாள்.

அவன், அவள் தோளைத் தட்டிக் கொடுத்தான். அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடியே அவள் காதோரம் ஏதோ கிசுகிசுத்தான். அதில் என்ன மந்திரம் இருந்ததோ. அவள் விம்முவதை நிறுத்திவிட்டாள். அவனை நாணத்தோடு பார்த்தாள். பிறகு அழுகையைப் பழி வாங்குவதுபோல் சிரிக்கப் போனாள். பின்னர், என்ன நினைத்தாளோ, அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள். அவன் ஏதோ சொல்ல, அவள் சிரித்தே விட்டாள். கால் மணி நேரத்திற்கப் பிறகு அவன் தயங்கித் தயங்கி எதையோ சொன்னான். அவள் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் மூக்குத்தியைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள். அவனோடு இணைந்து, பிணைந்து நடந்தாள்.

வெளிறிப் போயிருந்த மஞ்சள் பிரகாசி, எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த குருவியாளையும், போகிற மானிடப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தது. நடந்ததை அதனால் நம்ப முடியவில்லை. கூட்டுக்கு வந்த குருவியாள் எல்லாவற்றையும் பார்த்தாள். கீழே தளம் போட்டதுபோல் இருந்த களிமண்ணைப் பார்த்தது. வெளிச்சத்திற்காக ஒட்டி வைக்கப்பட்டிருந்த மின்மினிப் பூச்சிகளையும் பார்த்தது. பக்கவாட்டில் திரைச்சிலை போல் வைக்கப்பட்டிருந்த பசும்புல் தழைகளையும், மஞ்சள் பிரகாசியே கூட்டுக்குள் உருண்டு ஏற்படுத்திய படுக்கை அறையையும் பார்த்தது. எதற்காகவோ குருவியாள் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு மஞ்சள் பிரகாசியை அலட்சியமாக இடித்தபடி கூட்டுக்கு வெளியே வந்து, மீண்டும் பழைய இடத்தில் உட்கார்ந்தது.

மஞ்சள் பிரகாசி காதல் தோல்வியால் கூட்டுக்குள்ளேயே கூனிக் குறுகிக் கிடந்தது. பிறகு அதுவும் கூட்டுக்கு வெளியே வந்தது. இன்னொரு கூட்டில் ஆண் குருவியுடன் லாலி பாட நுழையப்போன வேறொரு பெண் குருவி, மஞ்சள் பிரகாசியின் கூட்டருகே வந்து, ‘வா போகலாம் என்பது போல் அதைப்பார்த்தது. நீ. ஒரு சின்ன வீடு தந்தால்கடப் போதும் என்பதுபோல் அதனை நோக்கியது. ஆனால் மஞ்சள் பிரகாசிக்கு அதன் போக்கும் நோக்கும் பிடிக்கவில்லை. ‘சி போ’ என்பதுபோல முறைத்துவிட்டு, பிறகு குருவி நாகரிகத்தைக் கருதி, அதுவே வேறொரு கிளையில் போய் உட்கார்ந்து கொண்டது.

அந்தப் பெண் குருவி போனதும், மஞ்சள் பிரகாசி மீண்டும் கூட்டருகே வந்தது. இன்னும் எந்தக் கூட்டுக்குள்ளும் போகாமல் இருக்கும் குருவியாளையே பரிதாபமாகப் பார்த்தது. அதுவோ, அலட்சியத்தில் மஞ்சள் பிரகாசியைப் பார்த்தது. மஞ்சள் பிரகாசிக்குப் புரிந்து விட்டது. அம்மாவுக்குக் கூடு பிடிக்கவில்லை. வேறொரு கூடு கட்டினால்தான் வரும், இன்னும் பத்து நாளைக்கு எப்படிக் கஷ்டப்பட முடியும் கஷ்டத்தைத் தாக்குப் பிடிக்கலாம். ஆனால் காதலை.?

மஞ்சள் பிரகாசி சோகத்தால் விழுங்கப்படாமல் சோகத்தை விழுங்கிக் கொண்டது. புதிய கூடு கட்டுவதற்காகப் புதிய இடங்களுக்குப் பறந்து புத்தம் புதுப் பொருட்களைக் கொண்டு வந்தது. நான்கு நாட்கள் போனதே தெரியவில்லை. அந்த இளம் பெண், தனியாகத் தினமும் வருவதைப் பார்த்தது. அதே சமயம் கூடு கட்டும் வேலை மும்முரத்தில் அந்தக் குருவிக்கு அதன் தாத்பரியம் புரியவில்லை.

அன்று மஞ்சள் குருவி, சிறிது கிறங்கிப் போயிருந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு புதரில் கிடந்த பாம்புச் சட்டையைப் பற்றியபோது எங்கிருந்தோ குதித்த காட்டுப் பூனை, இதைத் துரத்தியது. பூனையின் கால்களுக்குள் பாம்புச் சட்டை மாட்டிக் கொண்டது. மஞ்சள் பிரகாசிக்கோ அதை நறுக்கி, கூட்டுக்குள் வைத்து, அதைக் குருவியாள் ரசிப்பதைக் கண் குளிரப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையே ஒரு உந்து சக்தியாக, உயிரையும் பொருட்படுத்தாது, காட்டுப் பூனைக்கு நெளிந்தும் வளைந்தும் போக்குக் காட்டியது. எப்படியோ பாம்புச் சட்டையோடு மீண்டது. இந்தத் தியாகத்தைப் புரிந்துகொண்டதுபோல், குருவியாள் சிறிது நேரம் இதனருகே வந்து செல்லமாகக் குழைந்து விட்டுப் போய்விட்டது – பழைய இடத்திற்கு.

குருவியாள் காட்டிய சிறியதோர் காதல் வெளிப்பாட்டால் காதலின் வாய்ப்பாட்டையே அறிந்தது போல் லோசாக விசிலடித்த மஞ்சள் பிரகாசி, அப்போதுதான் அந்த மானுடப் பெண்ணைப் பார்த்தது. ஒரு மரத்தில் சாய்ந்தபடி, ஆகாயத்தையே வெறித்துப் பார்த்த அந்தப் பெண் தன் தலையில் அடித்துக் கொண்டாள். பொங்கிய கண்ணிரை முழங்கைகளில் தேய்த்தாள். பிறகு திடீரென்று எழுந்து ஊரை நோக்கிப் பார்ப்பதும் கீழே அமர்வதுமாக இருந்தாள்.

மஞ்சள் பிரகாசியால் அவளின் சோகத்தைச் கமக்க முடியவில்லை. மெல்லப் பறந்து அவள் காலருகே பறந்து வந்தது. மூக்குத்தி ஜொலிக்கக் காட்சியளித்தவள், இப்போது அந்த மூக்குத்தியையும், வேறு எதையோ ஒன்றையும் பறிகொடுத்த சோகத்தோடு இருப்பதை அந்தத் துரக்கணாங்குருவி புரிந்து கொண்டிருக்கலாம்.

மஞ்சள் பிரகாசி அவள் காலைச் சுற்றியே வலம் வந்தது. ஒப்பாரி வைப்பதுபோல், இறக்கைகளை அடித்துக் கொண்டே அவல ஒலியை எழுப்பியது. பின்னர், இறக்கைகளை அடக்கி, குரலை அமுக்கி அவள் காலைச் சுற்றிச் சுற்றியே வந்தது. ஏதோ சொல்லப் போவதுபோல் அதன் அலகுகள் துடித்தன. ஒருவேளை இப்படிச் சொல்ல முயற்சி செய்திருக்குமோ?

‘ஒங்க இனத்தால் அற்ப இனம்னு ஒதுக்கப்படுகிற எங்க குருவி இனத்துல ஒரு பெண் குருவி, பாதுகாப்புக்காகத் தன்னோட நிஜமான காதலையும் உதறித் தள்ளுது.ஆனால் நீயோ, போலித் தனமான காதலுக்காக ஒன்கிட்ட இருந்த பாதுகாப்பயும் உதறித் தள்ளிட்டியே ஒனக்காக இப்போ என் இறக்கைகள் படபடக்கே… நாடி நரம்பெல்லாம் துடிக்குதே. ஏன்னு கேக்கறியா. நான் அற்ப ஜாதி. ஒருவரை அற்பத்தனமாய்ப் பயன்படுத்திக்காத குருவி ஜாதி.

– ஆனந்த விகடன் 1981

– ஈச்சம்பாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1998, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *