காதல் களவெறி…..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 14, 2019
பார்வையிட்டோர்: 13,438 
 
 

ஒரு வாட்ஸ்அப் செய்தி…தங்கள் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு…ஐந்தாறு வருடங்களில் உயர்த்தி உச்சாணிக் கொம்பில் வைக்குமென்று வித்யா மட்டுமில்லை. கணவன் மகேசுகூட எதிர்பார்க்காதது.

அந்த செய்தி கைக்குக் கிடைத்ததும் புத்தி வேலை செய்து உழைப்பும் இல்லை என்றால்…. இத்தனைக் குறுகிய காலத்தில்…திருச்சியை ஒட்டி…கார், சொந்த வீடு, ஐம்பது ஆண் பெண் உழைப்பாளிகள் வேலை செய்யும் சின்ன கம்பெனி….. என்று இந்த அளவிற்கு வளர்ந்து நிற்க வாய்ப்புமில்லை. கண்டிப்பாய்….பிள்ளை ஒன்றைப் பெற்றுக் கொண்டு…பத்தாயிரம் மாத வருமானத்தில் கணவனும் மனைவியும் ஒண்டு குடித்தனத்தில் இருக்கிறார்களோ.. இல்லை ஓட்டாண்டியாக தெருவில் சுற்றுவார்களோத் தெரியாது.

நடப்பு அப்படி ! அந்த அளவிற்கு நிலைமை மோசம்.

வீட்டில் தனியே அமர்ந்திருந்த 25 வயது வித்யா….ஐந்து வருடங்களுக்குப் பின் சென்று அதன் பக்கங்களைப் புரட்டினாள்.

இருபது வயதில் காதல். இப்போது நினைத்துப் பார்த்தால் அது கண்டிப்பாகக் காதலே இல்லை. பருவக் கோளாறின் பாதிப்பு, பக்க விளைவுகள்.!

ஆண் பெண், எந்த உயிரினமாய் இருந்தாலும் பருவ காலக்கட்டத்தைத் தாண்டுவது என்பது தவிர்க்க முடியாதது. உயிரினத்தில் அது ஒரு சிக்கல், இக்கட்டான காலக்கட்டம். தொட்டாலே பற்றிக் கொள்ளும் ஆண் பெண் ஈர்ப்பு, அழகு, கனவெல்லாம் கலந்த கலவை உலகம் அது. ஆண் பெண்கள் அந்த வயதில்… நிறம் கருப்பு, சிகப்பு…..முகம் களை, களை அற்றது என்கிற பேதமின்றி.. அத்தனை பேர்களுமே ஒருத்தருக்கொருத்தர் அழகாய் இருப்பார்கள்.

குழந்தைப் பருவமும், பருவ வயதுப் பருவமும்…அழகியலின் அற்புதமானக் காலம்.

குழந்தை யாரைப் பார்த்தாலும் சிரிக்கும். எவர் கை நீட்டினாலும் தாவும். அந்தப் பருவத்தில் அதற்கு….தாய் தந்தை, நல்லவர்கள் கெட்டவர்கள், அழகு அழகில்லாமல் இருப்பவர்கள் கூன் குருடு, நொண்டி முடம், செவிடு ஊமை என்கின்ற பேதமெல்லாம் தெரியாது.

இந்த பருவத்திற்கும் அதுதான் விதி. எல்லாரையும் அழகாக்கும். ஒருத்தரை ஒருத்தர் பார்க்க வைக்கும். பேசத் தூண்டும், துடிக்கும். பார்க்கப் பார்க்கப் பிடிக்கும். பேசப்பேச இனிக்கும். இந்த பேச்சும் இனிப்பும்… அடிக்கடி நிகழும் போது….காதல் பூக்கும். காதலாகத் தோன்றும். இதைத் தாண்டினால்தான் தன் நிலமை, வீட்டின் விலாசம், வாழ்க்கையின் இருட்டு வெளிச்சம் எல்லாமேத் தெரிந்து…தொட்டது, கடந்தது காதல் இல்லை என்கிற உண்மைப் புரியும்.

பெரும்பாலானவர்கள் கடந்து விடுவார்கள். சிலர்தான் இந்தக் காதலில்லாக் காதலில் விழுந்து கசங்கிப் போவார்கள்.

அந்தக் காதலில்லாக் காதலில் இடறியவள்தான் இவள்.

வித்யா…. பள்ளிப் படிப்பு முடிந்து பட்டப்படிப்புத் தொடங்கும் போது……..எதிர் வீட்டில் ஒரு நடுத்தர குடும்பம் குடி வந்தது. அந்தக் குடும்பத்தில் அப்பா சாதாரண அரசாங்க உத்தியோகக்காரர். மகன் மகேசு….பட்டம் முடித்த கையோடு வேலை இளைஞன். எதிர் எதிர் வீடென்பதால் பார்க்கப் பார்க்கப் பரவசமாகி விட்டார்கள். பேசப் பேச விரைவில் காதலர்களாகி விட்டார்கள்.

சாதாரணப் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் இவன் பெங்களூருவில் ஒரு வேலையில் ஒட்டிக்கொள்ளும் போது…இவர்கள் கைபேசிகள்…யார் கண்ணிலும் படாமல் காதலை வளர்த்தது. விதி வேலையைக் காட்டி அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

ஒரு நாள் அத்தை இவளுடைய அப்பாவின் அக்காள். கூடப் பிறந்த சகோதரி….தம்பி வீட்டிற்குச் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வந்தாள்.
” கணேசு! என் பையனுக்கு வயசு இருபத்தி எட்டாச்சு. உன் பொண்ணுக்கும் வயசு இருபதை நெருங்கிடுச்சு. பையன் சென்னையில் வேலையில் இருந்து சோத்துத் தண்ணிக்குக் கஷ்டப்படுறான். சீக்கிரம் கலியாணம் முடிக்கனும் என்ன சொல்றே ? ” – கேட்டாள்.

தம்பி தாராளப் பிரபு.! ஒரு பெண்டாட்டிக்கு இரு பெண்டாட்டி. ஒருத்தி முறையாய் வந்தவள். இன்னொருத்தி முறை மாறி கொண்டு வரப்பட்டவள். இருவருக்கும்….முறையாய் இரு ஆண் பெண் குழந்தைகள்.

வித்யா.. முறையாய் வந்த மூத்தவளுக்குப் பிறந்தவள்.

ஒற்றை வருமானத்தில் இரண்டு குடும்பங்களை வைத்துக் கொண்டு கஷ்டப்படும் நடுத்தரவாதியான கணேசுக்கு வலிய வரும் சீதேவி ! கசக்கவா செய்யும் ?

” ஆகட்டும் அக்கா! ” – சொன்னான்.

கையோடு சுவரில் மாட்டி இருந்த காலண்டர் எடுத்து நாள் நட்சத்திரம் பார்த்து…

” அடுத்த மாசம் அஞ்சாம் தேதி கலியாணம். ரெட்டைக் குடும்பம் உன் நிலைமைத் தெரியும். காது,கழுத்து, மூக்குக்கு இருக்கிறது போதும். இல்லேன்னாலும் பரவாயில்லே. எனக்குச் சம்மதம். என்ன சொல்றே ? ” – கேட்டாள்.

” உன் விருப்பப்படியே வைச்சுக்கலாம்க்கா ! ” – இவனும் சம்மதம் சொல்லி…வித்யா அடி வயிற்றில் நெருப்பைப் பற்ற வைத்தான்.

காதல் சும்மா இருக்குமா ? அத்தைப் போனபிறகு….

” அ…..அப்பா ! ” பயத்துடன் அழைத்தாள்.

” என்ன ? ” கணேசன் திரும்பினான்.

” நா….நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன்ப்பா…! ” தயங்கி தயங்கி சொன்னாள்.

” அடி செருப்பால. .அது யாரு ? ” எடுத்த எடுப்பிலேயே அக்னி குழம்பு முகம்.

ஆக்ரோசமான வார்த்தைகள் வெளி வந்தது.

” எ….எதிர்த்த வீட்டு மகேசுப்பா…”

” துத்தேரி! அவன் சாதி குலம் தெரியுமா உனக்கு. சாக்கடை! ”

” ப….பரவாயில்லேப்பா…”

” உனக்குப் பரவாயில்லே. எனக்கு நாத்தம். ஊர் காறித் துப்பும். நான் பொறந்த ஊரு. தலை நிமிர்ந்து நடக்க முடியாது. ஏற்கனவே நான் வேத்து சாதிக்காரியைக் கொண்டு வந்து குடும்பம் நடத்துறேன்னு கெட்ட பேரு. சாதி சனம் பிரிஞ்சி கெடக்கு. இப்போ நீயும் இப்படி மாறிப் போயிட்டீன்னா…..நான் தூக்கு மாட்டித் தொங்கனும்.”

இப்போதென்றால்….’ தொங்குங்கப்பா ! ‘ – சொல்லி இருப்பாள்.

அப்போது பயம். சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை.

” இந்த காதல் கத்திரிக்காயெல்லாம் என்கிட்ட வேகாது. உனக்கு அத்தைப் பையன்தான் மாப்பி;ள்ளை. அடுத்த மாசம் 7ந்தேதி கலியாணம். தேதியும் குறிச்சாச்சு. ஒழுங்கு மரியாதையாய் உள்ளே போய் படி. மீறினால் கொன்னு குழி தோண்டி புதைச்சுடுவேன். எனக்கு மானம்தான் பெரிசு !” கணேசன் கடுமையாக எச்சரித்துச் சென்றான்.

இவன் வேற்று சாதிக்காரியை மணந்து…. கட்டையைக் காறி துப்பும் போதெல்லாம் மானம் கப்பலேறவில்லை. மகள் மணக்கும்போதுதான் கப்பலேறப் போகிறதாக்கும் ! –
இவளுக்குள்ளும் கொதித்தது. என்ன செய்ய ?

அப்பன் நகர்ந்த பிறகு….வேடிக்கைப் பார்த்தத் தாயை, ” அம்மா..! ” கெஞ்சலாகப் பார்த்தாள்.

” எனக்கொன்னும் தெரியாது தாயி. நான், அவர் அடுத்துவளைக் கொண்டு வரும்போதே தடுக்க முடியாத கையாலாகாதவளாய் இருக்கேன். அந்த ஆள் முரட்டுக் குணம் அப்படி. நான் என்ன செய்ய ? ” பின் வாங்கினாள்.

பெற்றத்தாயும் கை விரித்து விட்டாள். இதற்கு மேல் எதுவும் வேலைக்காகாது.!

வித்யாவிற்கு நிலைமைத் தௌ;ளத் தெளிவாகப் புரிந்தது.

வீட்டின் ஒரு மூளையில் ஒடுங்கி…..கைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டு நிலைமையைச் சொல்லி…..” மகேஷ்! நீ இல்லேன்னா நான் செத்துடுவேன். சீக்கிரம் நீ வந்து என்னை உடனே அழைச்சுப் போடா. நாளைக்கு நாம தாலி கட்டிக்கனும்.! இது மட்டும் இப்போ நடக்கலேன்னா…..பிடிக்காதவனுக்குக் கழுத்தை நீட்டி சாகனும். ” சொன்னாள், அழுதாள்.

பதறிப் போன மகேஷ் மாலை உடனே புறப்பட்டு காலை வந்தான்.

இவள் வழக்கம் போல் கல்லூரிக்குப் புறப்பட்டு சென்றாள். அங்கு காத்திருந்த மகேசுடன் சேர்ந்தாள்.

இருவரும் அடுத்த அரை மணி நேரத்தில் மாலையும் கழுத்துமாக ஒரு அர்ச்சனைத் தட்டில் மஞ்சள் கிழங்கு முடிச்சுப் போட்ட மஞ்சள் கயிற்றுடன் அருகிலுள்ள ஒரு கோயிலுக்குள் நுழைந்து அர்ச்சகர் முன் நின்றார்கள்.

” தாலிக்கட்டிக்கனும் சாமி…! ” அர்ச்சனைத் தட்டை நீட்டினார்கள்.

” இப்படியா…ஆ…” பார்த்த அவர் அரண்டார்.

” ஆமாம் சாமி ! ”

” மனுசாள் ஏத்துக்குவாளா ? ”

” தெரியாது சாமி. ஆனால் சாமி ஏத்துக்கும். ஏத்துக்கனும் ! ” மகேஷ் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

” எனக்குப் பாதுகாப்பு..? ” அவர் கண்ணில் மிரட்சி தெரிந்தது.
” நாங்க தாலி கட்டி முடிஞ்சதும்…எங்க பாதுகாப்புக்கு பக்கத்துல உள்ள எங்க ஊரு போலீஸ் ஸ்டேசனுக்குப் போறோம் சாமி. உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா நீங்களும் எங்களோடு வரலாம் ! ”

” ஈஸ்வரா…!! ” – அர்ச்சகருக்கு என்ன செய்ய, சொல்வதென்று தெரியவில்லை.

அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்.

வழக்கமாய்த் தேங்காய் உடைத்து, தீபாரதணைக் காட்டி அர்ச்சனைத் தட்டுடன் திரும்பி வந்து நீட்டினார்.

அதிலுள்ள தாலியை எடுத்து அவர் முன்பாகவும் சாமி சாட்சியாகவும் மகேஷ் வித்யா கழுத்தில் தாலி கட்டினான்.

அர்ச்சகர்…அர்ச்சனைத் தட்டிலிருந்த பூக்களை எடுத்து தன் முன் தாலிக்கட்டிக் கொண்டு இருவர்கள் தலைகளிலும் தூவி…….” .தீர்க்காயுசா இருக்கனும்.! ” வாழ்த்தி விடை கொடுத்தார்.
அதே அர்ச்சனைத் தட்டு மாலையும் கழுத்து, தாலியுமாக ஆட்டோவில் ஏறி…காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்கள்.

அவர்கள் அப்படி நுழைந்ததுமே இது திருட்டுத் தாலி. பாதுகாப்பிற்காக வந்த ஜோடி என்பது அங்குள்ளவர்களுக்குத் தெரிந்தது.

இவரும் இன்னார் மகன், மகள். தாலிக் கட்டிக் கொண்ட சேதியைச் சொன்னார்கள்.

அடுத்த நொடி….ஸ்டேசனே பெற்றவர்களுக்குச் சேதி சொன்னது.

அரை மணி நேரத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு அலறி வந்த இரண்டு பெற்றவர்களும் அப்படியே அரண்டு போனார்கள்.

கணேசனுக்கு தன்னையும் மீறி மானம் கப்பலேறி விட்டதில் கடுங்கோபம். ! முகம் இரத்தச் சிவப்பு.

” இன்னைய தேதியிலிருந்து இவள் எனக்குப் பொண்ணே இல்லே. விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்து அவள் கட்டிய உள்ளாடையிலிருந்து அனைத்தும் எனக்குச் சொந்தம். தரனும். ! ” தனக்கு வேண்டுமென்று அடம் பிடித்தான். ஒற்றைக் காலில் நின்றான்.

போலீஸ் என்ன சமாதானம் சொல்லியும் ஏற்றகவில்லை. எந்த சமரசத்திற்கும் கணேசன் ஒத்து வரவில்லை.

முடிவில் அவன் பிடிவாதப் படியே…..அனைத்தும் நடந்தது.

உடனே மகேசால் புதுத்துணிகள் வாங்கி வரப்பெற்று….அங்கேயே மாற்றி….அனுப்பித்தார்கள்.

கணேசனின் கோபம் ஆவேசம் அப்படியும் அடங்க வில்லை.

வீட்டிற்குப் போனவன்….அவள் சம்பந்தப்பட்ட மிச்ச மீதி துணிகள், நோட்டு புத்தகங்கள், சான்றிதழ்கள் அனைத்தையும் வீட்டுக்கு வெளியே எடுத்துப் போட்டு தீ வைத்துக் கொளுத்தி வெறியாட்டம் போட்டான்.

உடனே….அடுத்த வீட்டுக்காரியால் சேதி கேள்விப்பட்ட வித்யா துடித்துப் போனாள். தன்னை அம்மணமாக விட்டதுமில்லாமல் அப்பன் பிழைக்கவும் வழி இல்லாமல் செய்து விட்டானே…! என்ன கோபம், கொடுமை, ஆக்ரோசம் ! – கொதித்தது. எடுத்து எடுப்பிலேயே எதிர்காலம் அடர் இருட்டுக் காலமாக மிரட்டியது.

ஆனாலும் என்ன செய்ய முடியும். விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கை.!

எந்த பக்கமும் எந்தவித பிடிப்புமில்லாமல்….கணவன் மனைவி பெங்களூருவிற்குப் பயணமானார்கள்.

வித்யா… கல்லூரிப் படிப்பு காலாவதியாக….மகேசின் பத்தாயிரம் ரூபாய் ஒற்றை மாத வருமானத்தில் ஒண்டு குடித்தனம். உயிரைக் காக்கும் அளவிற்குச் சோறு தண்ணி. இந்தக் கூத்தில் சமய சந்தர்ப்பம் தெரியாமல்…. கரு. விட்டால் கிடைக்காதே என்கிற நிலையில்….

அதையும் சுமப்பு. எப்படியோ கஷ்டத்தோடு கஷ்டமாய்ப் பிள்ளையைப் பெற்று காலம் தள்ளும்போதுதான்…அந்த வாட்ஸ்அப் செய்தி !

‘ சுத்திகரிக்கப்பட்டு பாட்டில்களிலும், கேன்களிலும் அடைத்து விற்கப்படும் தண்ணீரில் மனிதனுக்குத் தேவையான சத்துமில்லை சரக்குமில்லை. சக்கை ! இயற்கையாய்க் கிடைக்கும் நிலத்தடி நீரே குடிநீருக்கும், உபயோகத்திற்கும் உகந்தது. ‘ – என்று வீடியோ.

ஆதாரப் பூர்வமான அறிவிப்பு. மக்களே! அதைத் தவிர்த்திடுங்கள் என்று வேண்டுகோள். வாழ்க்கையின் நடுகடலில் துரும்பாய்த் தத்தளித்துக் கொண்டிருந்த இவர்களுக்கு இந்த ஒற்றைச் செய்திதான் தெப்பம், தோணி அனைத்தும்.

மகேஷ் வேலை செய்யும் கம்பெனியில் ஒரு சொற்பத் தொகை கடன் வாங்கி…பாட்டில் வாங்கி…பக்கத்துக் கிராமத்து போர்செட்டில் நிலத்திற்கு ஓடிய நிலத்தடி நீரை அடைத்து…மக்கள் கூடும் பேருந்து நிலைங்களிலும், ரயில் நிலையங்களிலும் கூடைகளில் வைத்து கணவனும் மனைவியும் கூவி விற்றார்கள்.

கைபேசித் துணையால் ஜல்லிக்கட்டிற்கு மெரினாவில் எப்படி கூட்டம் திரண்டு உலகையேத் திரும்பிப் பார்க்க வைத்ததோ…அதே கைபேசி….மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி… அந்த வாட்ஸ்அப் செய்தியைப் பார்த்தவர்களெல்லாம்…..இவர்கள் விற்ற நிலத்தடி நீரை வாங்கினார்கள்.

ஆறு மாதத்தில் சூடு பிடித்த வியாபாரம்…. ஐந்து வருடத்தில்….ஓகோ.

இதோ…திருச்சி அருகில்…….சொந்த வீடு, கார், நிலத்தடி நீர் அலுவலகம். கையில் பணம், வாழ்க்கை!

வித்யா நினைவுகளை முடித்து ஏடுகளை மூடினாள்.

வெளியே சென்றிருந்த மகேஷ் வாசலில் காரை நிறுத்தி விட்டு உள்ளே வந்தான்.

”என்ன தனியே உட்கார்ந்திருக்கே ? குட்டி எங்கே ? ” மகளை விசாரித்தான்.

” அடுத்த வீட்டுக்கு அவள் தோழியோட விளையாடப் போயிருக்காள் !”

வாசலில் அழைப்பு மணி அடித்தது.

மனைவி அருகில் உட்காரப் போன மகேஷ் வாசலுக்குச் சென்று வெறுமனே வந்தான்.

முகம் வாடி இருந்தது.

” என்ன …. ? ”

” ஒ..ன்னுமில்லே.” தடுமாறினான்.

” வாசல்ல யார் ? ”

” ரெ…..ரெண்டு வயசானவங்க.”

” பிச்சைக்காரங்களா ? ”

” இல்லே….”

” அப்புறம் ? ”

” தெரிஞ்சவங்க…”

” தெரிஞ்சவங்கன்னா…? ”

” உனக்குச்சொந்தக்காரங்க.”

” எனக்குச் சொந்தக்காரங்களா ? ” …

” அ….ஆமாம். உன் அம்மா அப்பா! ” மெல்ல சொன்னான்.

எதிர்பாராதது !

அடுத்த விநாடி… வித்யா உடல் மேல் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை ஆயிரம் நெருப்புக் கூடைகளை அடுக்கடுக்கடுக்காய் கவிழ்த்த உணர்வு.

சற்று நேரத்தில் நிதானத்திற்கு வந்தாள்.

” நிசமாவா ?!! ”

” ஆமாம் வித்யா.”

” எப்படி எங்கிருந்து வந்தாங்க….? ”

” தெரியலை! ”

” தானா வந்தாங்களா நீங்களா அழைச்சு வந்தீங்களா ? ”

” நான் அழைச்சு வரலை. ”

” உங்களை அடையாளம் கண்டு பிடிச்சாங்களா பிடிக்கலையா ? ”

” நம்மைத் தேடித்தான் வந்திருக்காங்க வித்யா. நாம நம்ம புகைப்படங்களோடு அடிக்கடி தினசரிகளில் கொடுக்கும் தண்ணீர் விளம்பரங்களைப் பார்த்து வந்திருக்கனும்.”

” ஓஓ……! நிக்கிறாங்களா போயிட்டாங்களா ? ”

” தெரியலை. ”

” போய்ப் பாருங்க.”

மகேஷ் திரும்பிச் சென்றான். திரும்ப வந்தான்.

” இருக்காங்களா போய்ட்டாங்களா ? ”

” இருக்காங்க. ”

”வாங்க. ” அவனை அழைத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

வாசல் வரண்டாவில்….நாறுந்தோலுமா அம்மா அப்பா ! உடல், உடைகளில் அவர்களின் மொத்த ஏழ்மை வறுமைகள் தெரிந்தது.

‘ அப்பா!! எப்படி இருந்தவர்கள் ! ‘ – வித்யாவிற்குப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

” யார் நீங்க ? ” வாசலைத் தாண்டாமல் நிலைப்படியில் நின்று கேட்டாள்.

மகேஷ் இதை எதிர்பார்க்கவில்லை.

கணேசனுக்கோ வலி தாளவில்லை.

” மகளே…! ” தழுதழுத்தான்.

அருகில் நின்ற பெற்றவள் கலங்கினாள். கண்ணீர் வழிந்தது. முந்தாணையால் துடைக்கும் போதே கைகள் நடுங்கியது.

” நான் உங்க மகள் இல்லே. வீடு மாறி வந்திருக்கீங்க. வேறு வீடு பாருங்க. ”

கறாராய்ச் சொன்னாள்.

” அம்மா வித்யா…!!! ” கணேசன் கதறினான்.

வித்யா படி இறங்கினாள்.

” நான் காதலிச்சது குத்தமா ? ” அவர்களை நிற்க வைத்தே கணேசனைப் பார்த்து நேருக்கு நேராகக் கேட்டாள்.

எதிராளியிடமிருந்து பதில் இல்லை.

” அது குத்தமாவே இருந்தாலும்….எனக்கு ஏன் அவ்வளவு பெரிய தண்டனை? உள்ளாடைகளைக் கூட விடாமல் மொத்தமா உருவி வாங்கிக்கிட்டீங்க. நான் போலீஸ் ஸ்டேசன் உள்ளே… அத்தனை பேர்களுக்கும் நடுவில் மொத்த உடைகளும் உருவப் பெற்ற நிர்வண திரௌபதியாய்…..கூனிக்குறுகி கூசி நின்னேன். ஒரு பொறந்த குழந்தைபோல அம்மணமாய் இருந்த என்னை இதோ இவர்தான் கண்ண பரமாத்வாய் ஆடைகள் கொடுத்து அழைச்சி வந்தார். அது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம். பெண்ணுக்கு எத்தனை பெரிய மானக்கேடு.
நினைச்சுப் பார்த்தால் இன்னைக்கும் மனசு கூசும். உடமம்பெல்லாம் கம்பளி பூச்சு ஊறும். சரி அது போகட்டும்….நான் தான் பெத்தவங்க மனசுக்கு மாறாய் குத்தம் செய்தேன். என் சான்றிதழ்கள் என்ன பாவம் பண்ணினது. அதுங்க மேல் ஏன் அவ்வளவு கொலை வெறி தீவைப்பு ? சாதி மாறி காதல் செய்த குத்தத்துக்காக…இவள் எந்த வழியிலும் பொழைக்கவேக் கூடாது, செத்துத் தொலையனும், சாகட்டும்ன்னுதானே…..அந்த ஏற்பாடு ?! என்னை ஒரு மகளாய்ப் பார்க்காமல் மனுசியாய்ப் பார்த்து அந்த காரியத்தைச் செய்யாமல் விட்டிலிருந்தாலாவது…உங்களை ஒரு மனுசனாய் மதிச்சி, மன்னிச்சு இன்னைக்குப் பெத்தவனாய் ஏற்றுக் கொண்டிருப்பேன். அது இல்லாமல் எழுத்துப் பூர்வமாய்த் தொப்புள் கொடி
உறவைக் கூட அறுத்து என்னை மொத்தமா அழிக்க துடிச்ச உங்களை நான் எப்படி மறக்க முடியும் மன்னிக்க முடியும் ?

ஒன்னு தெரியுமா…? என்னை அழிக்க துடிச்ச உங்களை நான் அழிக்க நெனைச்சேன். சோத்துக்கு, துணிக்கு, தண்ணிக்குன்னு…நான் கஷ்டப்படும் ஒவ்வொரு நொடியும்…நீங்க சரிஞ்சு போகனும் சாகனும், சாம்பலாகனும்ன்னு சபிச்சேன். கணேசன் ! பெத்த வயிறு எரிந்தல் மட்டும் பிள்ளைகள் விளங்கமாட்டாங்கன்னு நினைக்காதீங்க. பிள்ளைகள்…வயிற்றெரிச்சல், சாபங்களும் பெற்றவர்களைத் தாக்கும். தெரிஞ்சுகோங்க.

என்னைக் குத்தம் சொன்ன நீங்க உங்க முதுகைப் பார்க்கலையே. அதுதான் வேடிக்கை. நானாவது வயசுப் பொண்ணு காதல் கண்றாவின்னு தவர்றது சகஜம். தப்பில்லே. ஆனா…ஒரு கலியாணம் பண்ணி, ரெண்டு பிள்ளைப் பெத்தபிறகும்….நீங்களும் போய் ஒரு சாக்கடையில விழுந்தீங்களே எந்த விதத்தில் நியாயம் ?

நான் அழிஞ்சிருந்தா உங்களுக்குச் சந்தோசமா இருந்திருக்குமா ? என்னை அந்த அளவுக்கு ஆக்ரோசமா வெறுத்தீங்க…. துரத்தினீங்களே….அதனால உங்கள் மானம் கப்பலேறாமல்
கரையில் நின்னுதா ? உடைஞ்சு போகாமல் நிமிர்ந்து நின்னுதா ?

மனைவி, மக்கள், பிள்ளைகள்… செய்வது பிடிக்கலைன்னா ஒதுங்கிடுங்க, ஒதுக்கி வைங்க, ஒட்டாதீங்க, மறந்துடுங்க. அதுதான் நல்லது. அது இல்லாம ஆணவக் கொலை செய்வது, இப்படி அநாகரீகமா நடந்துக்கிறதெல்லாம் சுத்த முட்டாள்தனம்.

அந்த ஆணவக் கொலை உங்களைச் சிறையிலடைக்கும். இப்படி அநாகரீகமா நடந்துகிறது…உங்களைத் தெருவில் நிறுத்தும். இதெல்லாம் தெரியாமல் ஏன் இப்படி குதிக்கறீங்க
?, யாரும் சிலை வைக்காமலேயே ஏன் சிலை வைக்கப் போறதாய் நினைச்சிக்கிறீங்க ? இன்னைக்கு உங்க நிலைமையில நான் இருந்தேன்னா நான் உங்களைத் தேடி வந்திருப்பேனா, வந்திருக்க முடியுமா ?

கணேசன் ! இந்த காதல் களவெறியில் பெத்தவங்க, பிள்ளைங்க யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம், தோற்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் லாப நஷ்டம், கஷ்டம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தானே ஒழிய மத்தவங்களுக்கு இல்லே. புரிஞ்சுக்கோங்க.

நான் ஒன்னும் முட்டாள்தனமாய் எங்க ரெண்டு பேர் புகைப்படத்தையும் பாட்டில், கேன்களில் அச்சடிச்சு குடிநீர் வியாபாரம் செய்யலை. உங்க நினைப்புக்கு மாறாய்… நான் நிலையாய் நிலைச்சு நிற்பதைக் காட்டத்தான் அந்த ஏற்பாடு. இது என் புருசனுக்குக் கூட தெரியாது. அதைப் பார்த்து, அதில் உள்ள விலாசத்தைப் பார்த்து…இப்போ வாசலுக்கு வந்து நிக்கிறீங்க.

அம்மா ! கட்டினவனுக்கு அடங்கி நடப்பவள் தாயாய் இருக்க தகுதி இல்லாதவள். கோழி எத்தனைக் குஞ்சு பொரிச்சாலும்… தன் ஒரு குஞ்சை தூக்கிப் போகும் பருந்தைத் தாக்க பறக்கும் பார்த்தியா….அதுதான் தாய். உன்னை மாதிரி இருப்பவள் அம்மா இல்லே… சும்மா.! நீயும் அந்த தப்பிதத்துக்குத் தண்டனை அனுபவிச்சு தீரனும் அதுதான் சரி.

உங்களை மனுசர்களா மதிச்சு பேசுனதே பெரிசு நன்றி. போய்ட்டு வாங்க. ” – சொல்லி…. கையெடுத்துக் கும்பிட்டு திரும்பி விடுவிடுவென்று வீட்டிற்குள் நடந்தாள் வித்யா.

அவளின் மொத்த வார்த்தைகளையும் முழுதாய்க் கேட்ட மற்ற மூவரும் அப்படியே சிலையாய் நின்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *