அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு.
“ஸ்டார்வேஷன் டெத். நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி மயக்கத்தில் கிறங்கி, நடு ரோட்டில் மயங்கி விழுந்துட்டான்.”
ஏட்டிடம், “இவன் பாக்கெட்டை சோதனை போடு.” என்றார் இன்ஸ்பெக்டர்.
சர்ட் பாக்கெட்டில் ரொனால்ட்ஸ் பேனா. பல்லவன் பஸ் டிக்கட். கசங்கிப் போன ஓர் இன்லேண்ட் லெட்டர். அழகான நெளிவுகளோடு நீல இங்க் எழுத்துக்கள்.
“லெட்டரைப் படி.”
“அன்புள்ள விஸ்வத்துக்கு… “
“இவன் பேரு விஸ்வமா ? லெட்டரை யாரு எழுதிருக்கா?”
“உங்கள் உயிரின் உயிரான ஆனந்தி எழுதிக் கொண்டது. உங்களைப் பிரிந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. லாட்ஜ் விலாசம் எழுதியிருந்தீர்கள். வசதிக் குறைச்சல் என்றும் எழுதியிருந்தீர்கள். ஆனால் வேலை பற்றி ஒன்றுமே எழுதவில்லை. இந்நேரம் நிச்சயம் வேலை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். மறுபடி எப்போது சந்திப்போம் என்று ஆசையோடு காத்திருக்கிறேன். உங்கள் அன்புக் காதலி ஆனந்தி. “
“ச்.. ச்… காதலா ? பான்ட் பாக்கெட்டையும் பார்த்துடு ஏட்டு.”
“இடது பக்க ஜோபியில் அந்தப் பொண்ணுக்கு பதில் எழுதி வெச்சிருக்கான். படிக்கிறேன் கேளுங்க. ‘ என் பிரியமான ஆனந்தி… நான் இங்கே மிகவும் மனம் நொந்த நிலையில் இருக்கிறேன். கொண்டு வந்த பணமெல்லாம் ஒரு பொட்டு மிச்சமில்லாமல் கரைந்து விட்டது. லாட்ஜ் வாடகை எப்படி அடைப்பேனோ தெரியவில்லை. நேற்று பூராவும் சிங்கிள் டீ குடிக்க வழியில்லாமல் கொலைப் பட்டினி. கையெழுத்து எப்படி நடுங்கியிருக்கிறது பார். ஒரு நேரம் வயிறார சாப்பிட ஒரு பத்து ரூபாய் சம்பாதிக்கக் கையாலாகாதவனாய் இருக்கிறேன். ஏதோ ஒரு வேகத்தில் மன ஆறுதலுக்காக எல்லாவற்றையும் கடிதத்தில் எழுதி விட்டேன். இதை போஸ்ட் பண்ணி உன்னையும் அழ வைக்க வேண்டுமா என்று யோசிக்கிறேன்….” படிப்பதை நிறுத்தின கான்ஸ்டபிள், “லெட்டர் பாதியோட நிக்குது ஸார். ” என்றார்.
“படிச்சவன். கை நீட்டி யாசிக்கவும் கூசியிருப்பான். பாவம். “
இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவனின் வலது பக்க ஜோபியில் கையை நுழைத்த ஏட்டு திகைத்தார். அந்த பாக்கெட்டிலிருந்து ஓர் ஐம்பது ரூபாய்த் தாள் வெளியே வந்தது.
“அம்பது ரூபாயைக் கையிலே வெச்சிக்கிட்டே பட்டினில செத்துப் போயிருக்கான்… “
இன்ஸ்பெக்டர் அந்த ரூபாய்த் தாளை வாங்கிப் புரட்டினார். ரூபாய் நோட்டின் வெள்ளைப் பகுதியில் எழுத்துக்கள்.
“‘வேலை கிடைக்க வாழ்த்துக்கள் விஸ்வம்.’ – காதலுடன் ஆனந்தி.”
– நவம்பர் 08, 2007