வெற்றிவேலின் முகம் சிவந்திருந்தது. தாமரையின் முன்பும் ஊராரின் முன்பும் தான் இப்படி நிற்க வேண்டியிருக்கும் என அவன் ஒரு நாளும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. யோசனையாகத் தோன்றிய போது எளிதாகத்தெரிந்த விஷயம் இப்போது செயல் படுத்தும்போது மிகவும் கஷ்டமான ஒரு காரியமாக இருந்தது. விஷயம் என்னவோ சின்னது தான். வெற்றிவேல் தன் மாமன் மகள் தாமரையை பெண் கேட்டு ஊர்ப் பெரியவர்களோடு வந்திருக்கிறான். இதுவே மூன்று வருடங்கள் முன்னால் என்றால் நிச்சயமாக இந்த உணர்வு தோன்றியிருக்காது. வெறும் சந்தோஷம் மாத்திரமே இருந்திருக்கும்.இந்த மூன்று வருடங்களில் வாழ்க்கை என்னும் கடல் அலை எத்தனையோ விஷயங்களை புரட்டிப் போட்டு விட்டுப் போய்விட்டது.தமிழ் சினிமா தந்த தாக்கத்தில் இரு குடும்பங்களுக்கும் பகை , ஒருவருக்கொருவர் அரிவாளோடு துரத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். இது வேறு சமாசாரம்.
பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறு கிராமம் தான் தாமரைக்கும் , வெற்றிவேலுக்கும் சொந்த ஊர். உறவினர்கள் என்பதால் ஒன்றாக உண்டு , உறங்கி விளையாடிக் கழித்த நாட்கள் ஏராளம். அவர்களோடு கூட மற்றொரு மாமன் மகனான கதிரவனும் இருந்தான். ஆனால் அவன் மதுரையில் வசித்ததால் பள்ளி விடுமுறைகளில் மாத்திரமே வருவான். அவன் வந்தாலும் கூட தாமரையும் , வெற்றியும் அவனை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்..தாமரை , தன்னோடு மட்டும்தான் விளையாட வேண்டும் என்பது வெற்றியின் நினைப்பு.அவர்கள் வளரத் தொடங்கியதும் , இருவருக்கும் குறுக்கே ஒரு திரை தொங்க விடப் பட்டது. அந்தத் திரை தந்த கவர்ச்சியிலேயே ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கினர். அவர்கள் காதல் பெற்றோர் உட்பட அனைவருக்கும் இலைமறை காயாகத் தெரிந்து தான் இருந்தது. வெற்றிக்கு படிப்பு முடிந்து ஒரு வேலை கிடைக்கட்டும் என்று காத்திருந்தனர்.
அதிகம் படிக்காத அந்தக் குடும்பத்தில் வெற்றி மிக நன்றாகப் படித்தான். பிளஸ் டூ தேர்வில் மாவட்ட அளவில் முதல் மாணவனாக வந்தான்.அவனுடைய அறிவையும் முன்னேறத் துடிக்கும் ஆர்வத்தையும் பார்த்து விட்டு, பள்ளி தலைமை ஆசிரியரின் ஆலோசனைப் படி அவனை சென்னையில் உள்ள ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்த்தார்கள்.தாமரைக்கு பெருமை பிடிபடவில்லை. அவள் தோழிகள் எல்லாரும் வெற்றி சென்னை போனவுடன் உன்னை மறந்து விடுவான் என்று பயமுறுத்தினர்.ஆனால் தாமரைக்கு வெற்றியின் மீது தளராத நம்பிக்கை இருந்தது.
நான்கு ஆண்டுகள் படிப்பு முடியும் வரை அவன் ஹாஸ்டலில் தங்கியிருந்தான். ஒவ்வொரு முறையும் லீவுக்கு வரும் போது தாமரைக்கென்று ஏதாவது வாங்கி வராமல் இருக்க மாட்டான்.தாமரையும் அவன் அன்பில் அகமகிழ்ந்து போவாள். சென்னை சென்றும் எத்தனையோ அழகான பெண்களைப் பார்த்தும் தன்னை தன் அத்தான் மறக்கவில்லையென்பதை நினைத்து அவள் கண்கள் நிறையும்.நான்கு வருடங்கள் நான்கு வாரங்கள் போல ஓடி மறைந்தன. கல்லூரி கேம்பஸ் இண்டெர்வியூவில் ஒரு முன்னணி கணினி நிறுவனத்தில் தேர்வானான் வெற்றி. பெங்களூரில் வேலை. தாமரை அப்போதுதான் கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்ததால் திருமணத்தை ஒரு வருடம் தள்ளிப் போட்டார்கள்.
இதனிடையில் அவன் வேலை பார்க்கும் நிறுவனம் அவனை ஒரு வருட காண்டிராக்டில் இங்கிலாந்து அனுப்பியது. அவன் வெளி நாடு செல்லுமுன் அவனுக்கு கல்யாணம் செய்து விட வேண்டும் என்று வீட்டுப் பெரியவர்கள் முயற்சி செய்தார்கள். திருமணம் முடிந்த பின்னும் தாமரை தொடர்ந்து படிக்கலாம் என்று முடிவானது. ஆனால் வெற்றி சம்மதிக்கவேயில்லை. “கல்யாணம் கட்டிக்கிட்டாலும் தாமரைய என்னால கூட அழச்சுக்கிட்டு போக முடியாது. அவ இங்கேதான் இருக்கணும் அப்புறம் எதுக்கு கல்யாணம்? நான் போயிட்டு ஒரு வருஷத்துல வந்துருவேன் , வந்ததும் மொத முஹூர்த்தத்துல கல்யாணம் வெச்சிக்குங்க” என்று பிடிவாதம் பிடித்தான்.” படிச்சு கை நெறய சம்பாதிக்கிற பையன் கட்டயப் படுத்தவா முடியும்” என்று அவர்களும் விட்டு விட்டார்கள்.
வெற்றியும் இங்கிலாந்து சென்று விட்டான்.ஒரு வருடம் ஆகியும் வெற்றி திரும்பி வரவில்லை. ஃபோனில் பேசும் போதெல்லாம் ஏதாவது சாக்குப் போக்கு சொன்னான். வீசா கிடைக்க வில்லை , சில சட்ட சிக்கல்கள் என்று இவர்களுக்கு புரியாத வார்த்தைகளால் விளக்கினான்.வாரம் ஒரு முறை வந்து கொண்டிருந்த கடிதங்கள் மெல்ல மெல்ல மாதம் ஒன்று , அப்புறம் இரண்டு மாததிற்கு ஒன்று என மாறின. ஒரு நிலையில் உள்ளூரில் கம்பியூட்டர் செண்டர் வைத்திருக்கும் மாணிக்கத்தோடு பேசி அவனுக்கு மின் அஞ்சல் அனுப்பி அவன் வீட்டாருக்கு படித்துக் காட்டச் செய்தான். இதன் நடுவில் தாமரை கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு , மேற்கொண்டு B.Ed படிக்க ஆரம்பித்தாள். அவளுக்கு வெற்றி தன் பெயருக்கு e-mail அனுப்பாதது ஒரு குறையாகவே பட்டது.
வெற்றியோடு வேலை பார்த்த ஒருவன் , மற்றொரு மாமன் மகனான கதிரவனின் நண்பன். அவன் சொல்லித்தான் வெற்றி அந்த நிறுவன வேலையை உதறி விட்டதே அவன் வீட்டாருக்குத் தெரிந்தது. அவர்கள் பதறிப் போனார்கள். “அன்னிய நாட்டுல , வேலையும் இல்லாமே அவன் என்ன கஷ்டப் படறானோ?” என்றும் “ஒரு வேளை ஊருக்குத் திரும்பி வரக் காசில்லாமத் தான் ஏதேதோ சொல்றானோ” என்றும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். எதானாலும் சரி! என்ன செலவானாலும் சரி! வயல்களை விற்றாவது அவனை ஊருக்கு வரவழைத்து விட வேண்டும் என்று உறுதியாய் இருந்தனர்.அது குறித்துப் பேச வேண்டும் என்று கிராமத்தில் இருந்த மாணிக்கத்தின் தொலைத் தொடர்பு நிலையத்துக்குச் சென்று அவன் உதவியோடு வெற்றியுடன் பேசினர்.
அவர்கள் பேசும்போது வெற்றி தூக்கக் கலக்கத்தில் இருந்தான் . இவர்களின் பதைபதைப்பும் , துடிப்பும் அவனுக்குப் புரியவில்லை. அவன் தான் நன்றாக இருப்பதாக எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இவர்கள் கேட்பதாயில்லை. இறுதியில் அவன் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வரவில்லையென்றால் அவன் அம்மாவை உயிரோடு பார்க்க முடியாது என்ற மிரட்டலில் பணிந்தான். ஒரு மாததிற்குள் ஊருக்கு வருவதாக வாக்களித்தான். இவர்களும் வெற்றி வீரர்களைப் போல் மகிழ்ச்சியோடு திரும்பினார்கள்.
அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்த நாளும் வந்தது. அந்த நாளை தாமரையால் இந்த ஜென்மத்தில் மறக்க முடியாது. அவள் கனவுகளும் , ஆசைகளும் மண்ணோடு மண்ணான நாளல்லவா அது? தனியாகப் அயல் நாடு போனவன் ஒரு துணையோடு வந்தான். ஆம்! அவன் தன் மனைவியான மார்கரெட்டோடு வந்திருந்தான். தாமரைக்குத் தலை சுற்றி கண்கள் இருட்டி மயக்கமாக விழுந்து விட்டாள். வெற்றி இவள் இருந்த பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.அவனுடைய திருமணத்திற்கு அவன் கூறிய காரணம் இன்னும் கொடூரமாகப் பட்டது. தாமரையின் உணர்வுகளை அவன் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை. அவன் பாட்டுக்கு தன் பக்க நியாயங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தான்.
வெற்றி இங்கிலாந்து போன புதிதில் அவனும் மற்றவர்களைப் போல ஒரு வருடம் முடிந்து இந்தியா திரும்பி வர எண்ணினான். ஆனால் அங்கேயே தங்கிவிட்ட ஒரு சில நண்பர்கள் வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேடிக்கொண்டால் இங்கிலாந்தில் நிரந்தரமாக தங்கி விடலாம் என்று யோசனை கூறினார்கள். அதன்படியே அவன் இந்தியக் கம்பனி வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வீசா பிரச்சனை ஏற்பட்டு இங்கிலாந்து போலீஸ் அவனை தேடும் நிலை உருவாகி விட்டது. அப்போது வெற்றியின் மூளையில் உதித்த யோசனை என்ன்வென்றால் இங்கிலாந்துப் பெண்ணத் திருமணம் செய்து கொண்டால் இந்த வீசா தொந்தரவு மட்டுமல்ல நிரந்தரக் குடியுரிமையே கிடைத்து விடும். பிறகென்ன? வாழ்க்கையே சொர்க்கத்தில் தான். அந்த சொர்க்க வாழ்க்கையின் திறவு கோலாக வந்தவள் தான் மார்கரெட். இந்திய இளைஞர்களின் அன்பையும் , பாசத்தையும் கேள்விப்பட்டு ஒரு இந்தியனையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றிருந்தவளுக்கு வெற்றி கிடைத்தான். இது தான் அவன் சொன்னதிலிருந்து தாமரை புரிந்து கொண்டது.
தாமரைக்கு விரக்தி சிரிப்பொன்று தோன்றியது. “அப்போ அத்தான் அந்தப் போண்ணு மேல ஆசைப்பட்டு கல்யாணம் கட்டிக்கலே , அவளைக் கட்டிக்கிட்டா நிரந்தரமா அங்கேயே தங்கிடலாம்னு தான் அந்தப் போண்ணைக் கட்டியிருக்காரு. அவரு எனக்கு மட்டும் நம்பிக்கை துரோகம் பண்ணல்லே !பாவம் அந்தப் போண்ணுக்கும் சேர்த்துதான் பண்ணியிருக்காரு” என்று நினைத்துக் கொண்டாள். இந்த உண்மை அவளுக்குத் தெரிய வந்தால் என்ன நடக்கும் என்றும் யோசித்தாள்.இத்தனை வருடப் பழக்கத்தை அத்தானால் எப்படி ஒரு நொடியில் மறக்க முடிந்தது? அழுதழுது கண்கள் ஓய்ந்தன. இவள் ஏதேனும் தவறான முடிவுக்குப் போய்விடுவாளோ என்று அவள் அப்பாவும் அம்மாவும் காவல் காத்தார்கள்.
விஷயம் கேள்விப் பட்டு கதிரவனும் வந்திருந்தான் அவன் தான் தேற்றினான். “நீங்க பழகின பழக்கத்த அவனால் மறக்க முடியும்னா உன்னாலயும் முடியும். உலகத்துல வேற எத்தனையோ விஷயங்கள் இருக்கு. அவன் மட்டுமே உலகம் கெடையாது. நீ நல்லா படிச்சு ஒரு சிறந்த ஆசிரியையா வரலாம். எத்தனையோ ஏழை எளிய மாணவர்களுக்கு வழிகாட்டலாம். இலவசமாக பாடம் சொல்லிக் கொடுக்கலாம். இந்த சந்தோஷங்களுக்கு முன்னாடி நீ இழந்தது என்ன? அப்டீன்னு யோசிச்சுப் பாத்தியானா ஒண்ணுமேயில்லேன்னு ஒனக்கே தோணிரும்” என்று அழகாக எடுத்துச் சொல்லி புரிய வைத்தான். அவளும் கொஞ்சம் தெளிந்து விட்டாள்.
வெற்றி இவளைப் பற்றி விசாரிக்கவே இல்லை. அவன் பாட்டுக்கு அவன் மனைவியோடு தாய் வீட்டு விருந்தை ருசித்து விட்டு , மனைவிக்கு எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டி விட்டு திரும்பவும் இங்கிலாந்து போய்விட்டான்.அவன் போன பிறகு தாமரையைத் தேடி வந்தனர் வெற்றியின் பெற்றோர். “வெளி நாட்டு பணக்கார மருமக வந்ததும் எங்களையெல்லாம் கண்ணு தெரியாமப் போச்சோ?”என்ற அம்மாவின் முணுமுணுப்பை அலட்சியம் செய்து அவர்களை உபசரித்தவள் தாமரைதான். அத்தை தான் ஒரு பாட்டம் அழுதாள்.”தாயீ எம்புள்ள வெளிநாட்டுல தங்கணும்கற ஆசையில இப்புடி பண்ணிப் போட்டான். அவன் எங்களுக்கு ஒரே புள்ள. அவன வேண்டாம்னு சொல்ல முடியுமாம்மா? நீ அவன சபிச்சிராத தாயீ! பெண் பாவம் பொல்லாது. நீ மனசு நொந்து அவன ஏசுனா அது அவன் வாழ்க்கய பாதிக்கும்மா! தயவு செய்து நீ அவன மறந்துட்டு வேற ஒருத்தனக் கட்டிக்க தாயீ! நீ வாழ வேண்டிய பொண்ணு” அப்படியென்று வெற்றியின் தாய் தாமரையைக் கட்டிக் கொண்டு அழுத போது அவளுக்கும் கண்களில் நீர் நிறைந்தது.
தாமரை B.Ed பாஸ் செய்து ஒரு தனியார் பள்ளியில் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். அவள் உலகம் மாணவர்கள் , கட்டுரை நோட்டு திருத்துதல் , விடைத்தாள் திருத்துதல் எனச் சுழன்றது.அவ்வப்போது வெற்றியைப் பற்றிய தகவல்கள் காதில் விழும்.இப்போதெல்லாம் அவற்றை எந்த உணர்வும் இன்றி எதிர் கொள்ள முடிகிறது அவளால்.அதில் அவளுக்கே ஒரு திருப்தி. அலுவலக வாழ்க்கையில் பெற்ற வெற்றியை அவனால் குடும்ப வாழ்க்கையில் பெற முடியவில்லை. அவனுக்கும் அவன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகக் கேள்வி. இங்கிலாந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது தவறு என்று உணர்ந்து விட்டேன் என்று ஒரு முறை அவன் ஃபோனில் அழுதானாம். குழந்தையையும் அவனையும் விட்டு விட்டு அவள் பாட்டுக்கு ஆராய்ச்சி அது இதுவென்று போய் விடுகிறாளாம். கேட்டால் உன் வேலையை நீ பார்க்கிறாய். என் வேலையை நான் பார்க்கிறேன் என்கிறாளாம். குழந்தையைப் பற்றிச் சொன்னால் “பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்களே. பணம் கொடுத்தால் பார்த்துக் கொள்வார்கள். உனக்கு அது பிடிக்க வில்லையென்றால் நீ உன் வேலையை விட்டு விட்டு குழந்தையைப் பார்த்துக் கொள்” என்கிறாளாம். .திடீரென ஒரு நாள் வெற்றியின் மனைவி அவனை விவாகரத்து செய்து விட்டதாகத் தெரிய வந்தது. குழந்தை இவன் பொறுப்பில் தான் இருக்கிறதாம். இவையெல்லாம் ஊரில் மற்றவர்கள் சொல்லித்தான் தாமரைக்குத் தெரியும்.
இந்த நிலையில் இதோ வெற்றி பெண் கேட்டு தாமரையின் வீட்டில் நிற்கிறான். தாமரையின் அம்மாவுக்கு வாயெல்லாம் பல். பின்னே மகள் சீமையில் போயல்லவா வாழப் போகிறாள்? அப்பாவும் “வெற்றிக்குத் தாமரை தான்னு கடவுள் போட்ட முடிச்சு யாரால மாத்த முடியும்? நடுவுல நடந்தது ஏதோ கிரகக் கோளாறு , இப்பத்தான் எல்லாம் சரியாப் போச்சே?”என்று சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார். தாமரைக்கு வெற்றியின் முகத்தைப் பார்க்க சிரிப்புத்தான் வந்தது. அனைவரும் நிச்சயதார்த்தமே நடக்கப்போவது போலப் பேசிக் கொண்டிருந்தனர். யாரும் தாமரையின் சம்மதத்தைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவ்வளவு ஏன்? முதலில் வெட்கப்பட்டு , தலை குனிந்திருந்த வெற்றி கூட இப்போது சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
அதையெல்லாம் பார்க்கப் பார்க்க தாமரைக்குக் கோபம் வந்தது. கூடத்தின் நடுவே வந்து நின்றவள் “எனக்கு அத்தானக் கட்டிக்க இஷ்டமில்லே” என்றாள் உரத்த குரலில். சட்டென்று ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு மௌனம் குடி கொண்டது அந்த இடத்தில்.”என்னம்மா சொல்றே?”என்றார் மாமா. “ஆமாம்! மாமா! எனக்கு அத்தானக் கட்டிக்க இஷ்டமில்லே”என்றாள் மறுபடி.”பின்னே ஏண்டி வந்த நல்ல நல்ல சம்பந்தத்தையெல்லாம் வேண்டாம்னு தூக்கி எறிஞ்சே? அத்தான் மேல ஆசை இல்லாமயா அப்படி செஞ்சே?” என்றாள் அம்மா கோபமாக. “அம்மா நான் ஒண்ணும் அத்தான் மேல உள்ள ஆசையால வேண்டாம்னு சொல்லலே!என் மனசத் தேத்திக்க எனக்கு கொஞ்சம் டயம் தேவப்பட்டது.எனக்கு ஏற்பட்ட பச்ச துரோகத்தோட காயம் ஆற சமயம் வேண்டாமா?”என்றாள் தாமரை.
“தாமரை அன்னிக்கு நான் செஞ்சது தப்புத்தான். அதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன் தாமரை. நாம பழகுன பழக்கத்தை வெச்சு கேக்குறேன் ஏன் என்னை வேண்டாம்னு சொல்றே? ஒரு கொழந்தை இருக்கறதால தானே? வேணும்னா அவனை ஹாஸ்டல் எதுலயாவது சேத்துடலாம் தாமரை” என்றான். தாமரைக்கு அதைக்கேட்டு வெறுப்பில் முகம் சுருங்கியது ” அத்தான் நான் பேசணும்னு ஆரம்பிச்சா எவ்வளவோ பேசலாம். ஆனா அப்படிப் பேச எனக்கு இஷ்டமில்லே.முடிஞ்சது முடிஞ்சு போச்சு.ஆனா நீங்க இவ்வளவு சுயநலக்காரரா இருப்பீங்கன்னு நான் எதிர் பார்க்கலே. உங்க தேவைக்காக யாரை வேணா பணயம் வெச்சுடுவீங்க போலிருக்கே? இந்தக் கொழந்தை கிட்ட கூட நீங்க உண்மையா இல்லையே.இப்படியாப்பட்ட உங்களை நான் எதை நம்பி கல்யாணம் செஞ்சுக்க முடியும்? பெத்த குழந்தையையே சுயநலத்துக்காக பலி கொடுக்கத் துணிஞ்சிட்ட நீங்க நான் காதலிச்ச அத்தான் இல்லே.யோசிச்சுப் பார்த்தா நமக்குள்ளே இருந்தது காதலே இல்லேன்னு தான் தோணுது. அதனால் தான் உங்களாலயும் அதை சுலபமா தூக்கியெறிய முடிஞ்சது”.என்றாள்.
“அப்ப நீ யாரையுமே கல்யாணம் பண்ணிக்காமே தனியா இருக்கப் போறியா?” என்றான் வெற்றி. தாமரை சிரித்து விட்டாள். “ஏன் அத்தான் என்னைக் காதலிச்ச நீங்க ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம் பண்ணிக்கலாம் நான் மட்டும் கல்யாணமே பண்ணிக்காம இருக்கணுமோ? எனக்கும் வாழ்க்கை மேல நம்பிக்கை இருக்கு. வாழணும்கற ஆசையும் இருக்கு. ஆனா அது நிச்சயமா உங்க கூட இல்லே. இத்தனை நாள் எனக்காக என்மேல நம்பிக்கை வெச்சு காத்துக்கிட்டு இருக்காரே கதிரவன் அத்தான் அவர் சம்மதிச்சா அவரத்தான் நான் கட்டிக்கப் போறேன்” என்றாள் தாமரை அழுத்தமாக. முகத்தில் பெரிய புன்முறுவலோடு தன் கையைப் பற்றிய கதிரவனின் கையோடு தன் கையை இணைத்துக் கொண்டாள் தாமரை.
ரொம்ப மொக்கை