கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 19,149 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டாக்சி வாடகைக்கு வருமா? ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த சந்திரன், அருகில் ஒலித்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான்.

அவனது பதட்டத்தைப் பார்த்தோ – அல்லது மனத்தில் தோன்றிய ஏதேனும் ஒரு எண்ணத்தினாலோ – முகத்தில் சிரிப்பின் ரேகை நெளிய அவனையே கவனித்தபடி நின்ற இளம் பெண்ணை அவன் ஒரு தடவைதான் நோக்கினான். “ஊம்” என்று சொல்லிக் கதவைத் திறந்து விட்டு, மீட்டரை இயங்கும் படிச் செய்த பிறகு, தனது இடத்தில் அமர்ந்து, தயாரானான்.

அதற்குள் அவளும் காரில் ஏறி அமர்ந்தாள், கதவைச் சாத்தினாள். “கொஞ்சம் பலமாக அடித்துச் சாத்தணும்” என்று டிரைவர் கூறியதைக் கேட்டு, அவ்வாறே செய்தாள்; போக வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னாள். அதன் பிறகு அவள் பேசவில்லை.

அவனும் பேசவில்லை. ஆனால் அவன் மனம் அவளைப் பற்றி எண்ணத்தான் செய்தது. தனக்க முன்னால் உள்ள சிறு கண்ணாடியில் அவள் உருவம் படிவதை அவன் கண்கள் கவனித்துக் கொண்டு தானிருந்தன. அவளிடம் தனியான ஒரு தன்மை இருப்பதாக அவன் உள்ளம் உணர்ந்தது.

அவளுக்கு இருபதுக்கு மேல் முப்பதுக்குள் எந்த வயசும் இருக்கலாம். ஒல்லியாகத்தான் தோன்றினாள். கன்னம் ஒட்டி, தோள் எலும்புகள் துருத்திக் கொண்டு…..

”நாகரிக யுகத்திலே பெரும் பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். உருளைக் கிழங்கு போண்டா மாதிரியும், ஆப்பிள் பழம் போலவும், பருமனாய் சதைப் பிடிப்பும் மினுமினுப்புமாகச் சில பேர்தான் காணப்படுகிறார்கள். பாஷனும் பகட்டான டிரஸ்”oம், ஸ்டைலான சிங்காரிப்பும்தான் அநேக பெண்களுக்கு வனப்பும் வசீகரமும் தருகின்றன. இப்படி அவன் மனம் எண்ண அலை நெளிய விட்டது. இயந்திரத்தை இயக்கும் ஒரு கருவிபோல் இருந்தாலும் சந்திரன் உணர்வற்ற மிஷின் அல்ல.

அவள் கண்களை உறுத்தும்படியாக மேக்கப் செய்து கொண்டிருக்கவில்லை. பளிச்சென வர்ண ஒளிகளை வீசும் ஆடைகளைத் தேர்ந்து அணிந்திருக்கவுமில்லை. இருந்தாலும், அவளிடம் என்னவோ ஒரு கவர்ச்சி இருந்தது. அவளை ஒரு மலர் என்று சொல்லலாமென்றால், “நெஞ்சில் கனல் எழுப்பும் மலர்” என்று உவமிக்க முடியாது. இனிமையும் குளுமையும் அமைதியும் புகட்டுகிற பூக்களோடும் அவளை ஒப்பிட இயலாது. இனம் புரிந்து கொள்ள முடியாத வருத்தத்தை – சோகத்தை – உள்ளத்தில் அரும்பச் செய்கிற தனிரக மலர் மாதிரத் தான் அந்தப் பெண்ணும் இருந்தாள்.

சந்திரன் கார் ஒட்டும் தொழிலை மேற்கொண்டிருந்தாலும், கவிதைகளை ரசிக்கக் கற்றவன். அவன் உள்ளம் வரண்டது அல்ல.

அந்தப் பெண்ணின் கண்கள் அப்படியும் இப்படியும் பரண்டு கொண்டுதான் இருந்தன. குறுகுறுப்பும் இளமைத் துடிப்பும் இயல்பாகவே குடிகொண்டிருந்த அகன்ற கரிய விழிகளில் ஆழம்காண முடியாத நீர்நிலையின் அமைதியும், காரணம் தெரிந்து கொள்ள முடியாத வேதனையும் கலந்து கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது.

சந்திரன் நேர்மையானவன். கடமையில் கருத்து உடைய வன். ஒழுங்கு தவறாதவன். தான் உண்டு. தன் தொழில் உண்டு என வாழ்கிறவன். தொழில் சம்பந்தமாக அவன் தினந்தோறும் எத்தனையோ ரக மனிதர்களோடு பழகவேண்டியிருந்தது. காரினுள் அவன் முதுக்குப் பின்னே, ரகசியம் என்ற நினைப்பில் நிகழும் எத்தனை எத்தனையோ உணர்ச்சி நாடகங்களுக்கெல் லாம் அவன் சிலை போன்ற சாட்சியாக இருந்து வருகிறான். அவன் பின்புறத்தில் பேசப்படும் பலவிதமான பேச்சுக்களும் அவன் காதுகளில் விழாமல் இருக்குமா என்ன? உலக வாழ்க்கையில் ஈடு பட்டிருப்பினும் அதனுடன் ஒட்டியும் ஒட்டாமலும் தாமரை இலைத் தண்ணிர் போல் காலம் கழிக்க வேண்டும் என்கிற லட்சியத்தின் உயிர் உருவமாக விளங்கியவன் அவன்.

ஆயினும், அந்தப் பெண்ணைக் கண்டதிலிருந்து அவன் மனம் அமைதியை இழந்து விட்டது. அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு சஞ்சலம்.

“டிரைவர்”

அழைத்தாள்.

“என்ன?” என்று கேட்டு அவன் தலையைத் திருப்பினான்.

“கொஞ்சம் நிறுத்துங்க. இந்த இடத்திலேயே இறங்கிக் கொள்கிறேன்” என்று அவள் அறிவித்தாள்.

அவள் இஷ்டம்! அவள் முச்சாந்தியில் இறங்கினால் என்ன? ரஸ்தாவின் ஒரத்தில் நிற்க ஆசைப்பட்டால் அவனுக்கு என்ன?

கார் நின்றதும், மீட்டரைப் பார்த்துப் பணத்தைக் கொடுத்து விட்டு, அவள் கீழே இறங்கினாள்.

அவளை ஒருதரம் நன்றாகப் பார்த்து விட்டு, கதவைச் சாத்திக் கொண்டு, வண்டியைச் செலுத்தினான் சந்திரன்.

அவள் கண்களும் அவனை அளந்தன. இயல்பாக நோக்கும் சாதாரணப் பார்வைதான் அது.

நாள்தோறும் யார் யாரையோ எங்கெங்கோ இட்டுச் சென்று இறக்கி விட்டு விட்டு, வேகமாக நகரைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு டாக்சியை ஒட்டுகிற டிரைவர் என்றோ ஒருநாள் சிறிது நேரம் பிரயாணம் செய்த எவளோ ஒருத்தியை நினைவில் நிறுத்தி வைத்திருக்க இயலாதுதான்.

ஆனாலும், விதிவிலக்கு நிகழ்ச்சிகளும் இருக்க முடியும் தானே?

அந்தவித அசாதாரண நிலையை அடைந்திருந்தாள் அந்த யுவதி. சந்திரன் உள்ளத்தில் அவள் நிலையான இடம் பெற்று, நினைவில் அடிக்கடி அலைகள் எழுப்பி வந்தாள். அவளைத் தேடிக்கொண்டே இருந்தன அவன் கண்கள்.

சினிமா தியேட்டர்கள் முன்னாலும், பெரிய ரஸ்தாக்களின் கூடல்களிலும், நாகரிக ஒட்டல்களின் அருகிலும், அவளைப் போல் எவளாவது தென்படுவாள். “அவள் தானோ?” என்று அவன் ஆவலோடு பார்வை எறிந்தால், கிட்டுவது ஏமாற்றம் தான்.

அவள் அவன் பார்வையில் படவேயில்லை. மறுபடி அவன் காரை நாடி அவள் வரவுமில்லை. ஊரில் எத்தனையோ டாக்சி கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை எத்தனையோ அலுவல்கள்!

விபத்து மாதிரி தற்செயலாக ஏற்பட்டாலன்றி – அல்லது திட்டமிட்டு, குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடம் ஒன்றில் சந்தித்தாலன்றி – ஒருவரை ஒருவர் எங்கே அடிக்கடி காண முடிகிறது?

எனினும், அபூர்வமாக எதிர்பாராவிதத்தில் சில சந்திப்புகள் நிகழ்வதற்குச் சந்தர்ப்பம் துணை புரியத்தானே செய்கிறது?

ஒருநாள் பகல் ஒரு மணிக்கு, சந்திரன் காரை ஒரு ஒட்டல் முன் நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான்.

“சாப்பாட்டு நேரமோ?” என்ற கேள்வி பின்னாலிருந்து வந்தது. இனிய மென்குரல்.

அவன் திரும்பிப் பார்க்கவும், அவள் நின்றாள், ஒளியில் குளிக்கும் வண்ண மலராக. அவளினும் பகட்டான ஆடைகள் அணிந்திருந்த இன்னொரு பெண்ணும் உடன் நின்றாள்.

“ஆமா. என்ன வேணும்?” என்று அவன், அவள் வனப்பை ரசிக்கும் பார்வையோடு, பேசினான்.

தன்னை அவன் மறக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டதனால் எழுந்த மகிழ்ச்சி முகத்திலே மலர்ச்சி சேர்க்க, “டாக்சி வேணும். வருமா என்று கேட்க நினைத்தோம்” என்றாள்.

“டி.பன் பண்ணலாம்னு இறங்கினேன்” என்று அவன் பேச்சை இழுக்கவும்,

“பரவால்லே. அவசரம் ஒண்ணுமில்லே. காத்து நிற் கிறோம். நீங்கள் சாப்பிட்டு விட்டு வாருங்கள்” என்று அவள் கூறினாள்.

“இதோ அஞ்சு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன். காருக்குள் இருங்கள்” என்று சொல்லி விட்டு அவன் ஒட்டலுக்குள் போனான்.

சந்திரன் அவசரப்பட்டாலும், ஒரு வடையும் காப்பியும் என்று “ஸ்லிம்ப்ளா டிபனை முடித்துக் கொண்டாலும், நாகரிகப் பெரும் ஒட்டலில் ஏற்படக்கூடிய காலதாமதமும் காலநஷ்டமும் அவனுக்கும் ஏற்படத்தான் செய்தன. “அஞ்சு நிமிஷத்தில்” வருவதாகச் சொன்னவன் தனது காரை அடைவதற்குக் கால்மணி நேரம் தேவைப்பட்டது.

அதுவரை அவளும் அவளது தோழியும் வெளியேதான் காத்து நின்றார்கள். ரஸ்தாவைப் பார்த்தபடி, போகிறவர் வருகிறவர்களைப் பார்த்தபடி, வழியோடு போவோருக்கு விழிவிருந்து ஆகும்படி!

“அடாடா, வெளியேதான் நின்றீர்களா? வண்டிக்குள் உட்கார்ந்திருக்கக்கூடாது?” என்று அவன் பரிவுடன் பேசினான்.

“அதனாலென்ன” என்றாள் அவள்.

“எங்கே போகணும்?” என்று கேட்ட சந்திரன், தனது இடத்தில் அமர்ந்தபடி, பின் ஸிட்டில் வசதியாக உட்கார்ந்து கொண்ட பெண்களைப் பார்த்தான்.

அவள்தான் பதில் சொன்னாள். “படம் பார்க்கப் போகலா மின்னு கிளம்பினோம்” என்று. ஒரு தியேட்டர் பெயரையும் சொன்னாள்.

சந்திரன் தனது தொழிலே கவனமாக இருந்தபோதிலும், இரண்டு பெண்களின் பேச்சையும் கிரகிக்கத் தவறவில்லை. அவர்கள் சினிமா பற்றி, சில நட்சத்திரங்களைப்-பற்றி, ஏதேதோ நாடகங்கள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் உள்ளத்தில் நினைவாய் நீந்திக்கொண்டிருந்த பெண்ணின் பெயர் இந்திரா என்றும், அவள் தோழி ராதா என்றும் பரஸ்பரம் குறிப் பிட்டுப் பேசிக் கொண்டதிலிருந்து அவனுக்குத் தெளிவாயிற்று.

இவ்வளவு அறிமுகத்தோடு இரண்டாவது சந்திப்பு முடிந்தது. அவர்கள் குறிப்பிட்ட தியேட்டர் முன்பு இருவரையும் இறக்கி விட்ட பிறகு, சந்திரன் டாக்சி வேறு சவாரியைத் தேடி ஓடியது.

பளிச்சென ஒளிவீசி மறையும் திடீர் வெளிச்சம்போல் ஒரு சமயம் அவள் அவன் பார்வையில் பட நேரிட்டது.

கடைவீதி ஒன்றின் வழியே அவனுடைய டாக்சி ஓடிக்கொண்டிருந்தது, யாரையோ ஏற்றியபடிதான்.

இரவு பரப்பிய இருட்டு வலையைக் குத்திக் கிழிக்கும் ஒளிக்கற்றைகளை வாரி வீசும் விளக்குகள் எங்கெங்கும் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

கடைகளின் நடுவே ஒரு சிறு “டீ ஷாப்” குறுகிய இடத்தை யும், அங்கு இருந்தவர்களையும் பளிரென எடுத்துக் காட்டும் படி பேரொளி சிந்தியவாறு தொங்கியது மிகவும் பிரகாசமான ஒற்றை விளக்கு. அதன் கீழே ஒளி வெள்ளத்தில் உவகை காணும் மோகினி போல ஒரு பெண். நீலப் பாவாடையும் தீ நிறத் தாவணியும், கூந்தலில் வெண்பூக்களுமாய் நின்றாள். ஒரு கையில் டீ கிளாஸ்.

சந்திரன் பார்வை அவள் மீது படிந்தது. புரண்டது. மறுபடியும் அச் சிங்காரச் சிலைமீது ஒடி நிலைத்தது.

அவளேதான்…. இந்திரா.

கடை முகப்பில், பேரொளியின் கீழ், தெருவைப் பார்த்தபடி நின்ற பகட்டுக்காரியின் கண்களும் அவனைக் கவனித்தன. மோகனமான முறுவல் பூத்தது அவள் ஒளி முகத்தில்.

அந்தச் சூழ்நிலையில், அங்கு பரவிய ஒளிப் பிரவாகத்தில், அவள் மிகவும் எடுப்பாக விளங்கினாலும், அந்த இடத்தில் காணப்படவேண்டிய எழில் உருவம் அல்ல அது – இனிய பெண் ஒருத்திக்கு ஏற்ற இடமில்லை அது – என்றே சந்திரன் கருதினான்.

ஒடும் காரில் இருந்து ஒரே பார்வையில அவளைப் படம் பிடித்து மகிழ வாய்ப்பு கிட்டிய போதிலும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி நிறையவில்லை. சஞ்சலம்தான் குடி புகுந்தது.

– இவள் யாரோ? இவள் ஏன் இவ்விதம் கடைத் தெருவில், சாதாரண டீக்கடையில், மத்தியில் நின்றபடி டீ குடிக்க வேண்டும்? தனது கவர்ச்சித் தன்மையில் தானே பெருமைப் பட்டவளாய், தனது அழகை விளம்பரம் செய்வதுபோல. ஜவுளிக் கடை பொம்மை மாதிரி.

– முதல் தடவைதான் அவள் சோகமயமான மலர்போல் தோற்றம் காட்டினாள். மறுமுறை அப்படி இல்லை. பகட்டான ஆடை அணிந்திருந்தாலும் பண்பு நிறைந்தவள் போல் தான் தோன்றினாள். ஆனால், இப்பொழுதோ?. பாவாடை தாவணி அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. வயசைக் குறைவாகவும் காட்டுகிறது. இன்று டீக்கடையில் அவளோடு வேறு பெண் எவளும் வந்திருக்கதாகத் தெரியவில்லை….

யார் எனத் தெரியாத ஒரு பெண்ணைப்பற்றிச் சந்திரன் அதிகம் அதிகமாக சிந்தித்துக் கொண்டு தான் இருந்தான்.

அவளைப் பற்றிய அவனது எண்ணமே வலிமை மிக்க மந்திரமாகி அவளை அவன் முன்னால் இழுத்து வரும் சக்தி பெற்று விட்டதோ என்னவோ!

இந்திரா அவன் பார்வையில் அடிக்கடி தென்படலானாள். எங்கெங்கோ. அவன் எதிர்பாராத இடங்களில் எல்லாம். தனியாகவோ, வயது அதிகமான ஒரு அம்மாளோடு அல்லது இரண்டு மூன்று பெண்களுடனோ, பஸ் நிற்குமிடத்தில், பார்க்கில், ஒட்டலில், சினிமாத் தியேட்டரில். முன்பு அவளை எங்கெங்கு காண முடியும் என்று அவன் எண்ணினானோ, எங்கெங்கு எல்லாம் அவளைத் தேடினானோ. அங்கெல்லாம் இப்போது அவள் தென்படுவது சகஜமாயிற்று. ஆனால் “வேளை கெட்ட வேளைகளில் அவள் காட்சி தந்தாள்.

ஒர் இரவில், “மனசு சரியாக இல்லை” என்ற காரணத்துக்காக – எல்லோரும் ரொம்ப அருமையான படம் என்று பாராட்டிப் பேசி, அவன் அவசியம் பார்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்ததனாலும் – சந்திரன் ஒரு படத்துக்குப் போயிருந்தான், ஒன்பதரை மணிக் காட்சிக்கு. அப்போதுதான் அவனுக்கு நேரம் கிடைத்தது.

அந்தப் படத்தைப் பார்க்க, அதே காட்சிக்கு, ஜோடிகள் பலர் வந்தார்கள். தனித்தனியாகவும், இரண்டு மூன்று பேராகவும், பெண்கள் அதிகமாகவே வந்தார்கள்.

பெண்கள் மாட்டினி அல்லது மாலைக் காட்சிக்கு வந்து போனால் என்ன? இரவுக் காட்சிக்கு வருவானேன்? படம் முடிந்து, இரவு ஒரு மணி ஒன்றரை மணிக்கு வீட்டுக்கு நடந்து போவது அசெளகரியமாகவும் பயமாகவும் இருக்குமே!” என்று சந்திரன் எண்ணினான்.

அதே வேளையில், அவனுக்கு முன்னே, அவன் பார்வையை உறுத்தும் விதத்தில், ரயில் வண்டித் தொடர் மாதிரி ஒருவர் பின் ஒருவராய் ஐந்து பெண்கள் வந்தார்கள். கண்ணுக்கு விருந்தாகும் வண்ண வண்ண ஆடைகளுடன், பகட்டும் பளபளப்புமாக, ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு ரகம், கதம்பத்தின் தனித்தனி மலர் வகை மாதிரி. அவ்வரிசையில் கடைசியாக அவள் வந்தாள். இந்திராதான் வந்தாள்.

”அட, இவள்கூட இந்தக் காட்சிக்குத்தானா வருகிறாள்?” என்று அதிசயித்தவாறு அவளை நோக்கிய சந்திரனின் கண்களை அவளுடைய மை பூசிய கருவிழிகள் தொட்டன. அவள் சிரித்தாள். அவனோடு பேச விரும்புகிறவள்போல – பேசி விடுவாள் போல – பார்த்தபடியே நடந்தாள். “கூட வருகிற பெண்கள் இல்லாவிட்டால் அவள் நின்று பேசுவாள்” என்றே அவனுக்குப் பட்டது.

இன்னொரு நாள், நகரின் ஒரு ஒதுக்குப் புறத்தில், ஜன நெருக்கம் மிகுந்த ஒட்டல் ஒன்றில் காப்பி சாப்பிட்டு விட்டு சந்திரன் வெளியே வந்துகொண்டிருந்த போது, அவள் எதிரே வந்தாள். வயதும் கனமும் அதிகமான அம்மாள் ஒருத்தியுடன். இப்போது இந்திரா, கவர்ச்சி மிகுந்த நைலான் ஸாரி கட்டியிருந் தாள. அவனைக் கண்டதும் இயல்பாகவே அவள் முகம் மலர்ச்சி காட்டியது. உதடுகள் முறுவலில் நெளிந்தன. கண்களில் ஒளி சுடரிட்டது.

அவளோடு பேச வேண்டும் என்ற நினைப்பு அவனுள் ஆசையாய் கனல, அவன் “என்ன, செளக்கியமா?” என்று கேட்டு வைத்தான்.

அவள் “ஊம்” என இழைய விட்ட குரலில் தேன் சொட்டியது.

அதற்கு மேல் பேச முடியவில்லை. அவள் பின்னால் வந்த பெரிய அம்மாள் அவளை முன்னே தள்ள, அவளைச் சுற்றிலும் மற்றவர் நெருக்க, நின்று பேசுவதற்கு, பெரிய ஒட்டலின் சிறிய வாசல் சரியான இடம் ஆகுமா என்ன?

அன்று முதல் அவளது இழையும் குரலும் சுடரொளிப் பார்வையும் அவன் உள்ளத்தில் நீங்காத நினைவுகள் ஆகிவிட்டன. இந்திரா யார்? அவள் வீடு எங்கே? அவளைப் பார்த்தால் உல்லாசமாக வாழ்கிறவள் மாதிரியும் தெரிகிறது. தவிர்க்க முடியாத ஏதோ கவலையால் – வேதனையால் – வாடுகிறவள் போலவும் தோன்றுகிறது. இந்தவிதமாக வீண் எண்ணங்களை அவன் மனம் வளர்த்து வந்தது.

இந்திரா என்கிற பெண்ணின் மீது – அவனுக்குச் சிறிதே அறிமுகம் ஆகியிருந்த, நன்கு பழக்கம் ஆகியிராத எவளோ ஒருத்தி மீது – சந்திரனுக்குக் கோபமும் கசப்பும் உண்டாவதற்கு ஒரு சந்தர்ப்பம் உதவியது.

அப்பொழுது சாயங்காலம் நாலரை மணி இருக்கலாம். சந்திரன் சிலரை ஒரு இடத்தில் கொண்டு சேர்த்து விட்டு, வெறும் வண்டியை ஒட்டிச் சென்றான். ஒரு வீட்டிலிருந்து சிலர் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும். அவர்கள் கலகலவெனச் சிரித்துப் பேசியவாறு தெருவில் இறங்கும்போதுதான் அவன் பார்வை அவர்களைக் கவ்வியது. அவர்களில் ஒருத்தி இந்திரா. அவளது சிரிப்பும் முகமலர்ச்சியும்!

சந்திரன் இதயத்தில் ஏதோ சுருக்கெனத் தைத்தது. ஆழமாகச் சதைக்குள் கூரிய முள் ஏறிவிட்டது போல. “இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியாது. நாகரிகத்தின் பேரால் என்னென் னவோ நடக்குது. பெரிய ஸிட்டியில் கேட்கவே வேண்டிய தில்லை” என்று அவன் மனம் பேசியது. இவளும் இப்படிப் பட்டவள்தானா? சாதுக் குழந்தை மாதிரி தோன்றினாளே!…. அவன் மனம் ஏசுவதில் இன்பம் கண்டது. வேதனை குடைந்து கொண்டே இருந்தது. வெகு நேரம் வரை. இரவில்கூட. தூக்கம் வரவே மறுத்தது.

அவள் நல்லவளாக இருப்பாள் என்று நான் நினைத்தேன். ஏமாற்றுக்காரி. அவள் அப்படி நினைக்க வேண்டும் என்று நடந்து கொண்டாளா? நடித்தாளா? இல்லையே. பின்னே, அவள் ஏமாற்றினாள் என்று எப்படிச் சொல்லலாம்?. யாரோடு அவள் எப்படிப் பழகினால் எனக்கு என்ன? ஏன் இந்த மனக் கஷ்டம்?

குழம்பி அலைமோதிய அவன் உள்ளத்திலே இந்த எண்ணம் எழவும், அவனுக்கு உண்மை உறுத்தியது. இந்திரா மீது அவனுக்கு விசேஷமான ஆசை. காதல்? ஆமாம். அதேதான். அதனால்தான் அவளைப் பற்றியே அவன் அதிகம் எண்ணி வந்தான். அந்நினைவுகள் அவனுக்கு இனிமையாயின.

அதனாலேயே அவன் அவளை அடிக்கடி காணவேண்டும் எனத் தவித்தான். காண நேர்ந்தபோது மகிழ்ச்சியும், காண முடியாதிருந்த காலங்களில் ஏக்கமும் வருத்தமும் அனுபவித் தான். அவளோடுபேசிப் பழகி, இன்பமாகப் பொழுது போக்க வேண்டும் என்றும், அவளை மணந்து கொண்டு எதிர் காலத்தை ஆனந்த மயமானதாக மாற்ற வேண்டும் என்றும் ஆசை வளர்ந்து, கனவுகள் கண்டு, கோட்டை கட்டுகிற அளவுக்க அவனுடைய காதல் முற்றிவிட வில்லை என்பது உண்மைதான். இப்பொழுதுதான் துளிர் விட்டுச் சிறு கொடி வீசி ஆடிக் கொண்டிருந்தது. நன்கு பற்றிப் படர்ந்து பசுமையாய்த் தழைத்து, அற்புதமான மலர்கள் பூத்துக் குலுங்கி, பலன் தருவதற்குக் காலம் துணை புரிய வேண்டும். அதற்குள் சந்தேகப் பூச்சி குருத்தை அரிக்கத் தொடங்கி விட்டது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த அருமையான சந்திப்பு நிகழ்ந்தது.

டாக்சி ஸ்டாண்டில் வண்டி காத்து நிற்கையில் அவள் வந்து சேர்ந்தாள். அவன் வண்டி மட்டுமே நின்றது. மணி என்ன, பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரை இருக்கலாம். நல்ல வெயில். வழக்கம்போல், “டாக்சி, வாடகைக்கு வருமா?” என்று கேட்டபடிதான் அவள் வந்தாள். வாடிவதங்கிய புஷ்பம்போல. அலைந்த களைப்பும் இயல்பான சோர்வும் முகத்தில் குடியிருக்க, அவளே சோகசித்திரமாகத்தான் காட்சி தந்தாள் இப்போது. அவளைக் கண்டதும், “ஓ, நீங்கள்தானா?” என்று கேட்டு, புன்னகை புரிந்தாள்.

”என்ன செளக்கியமெல்லாம் எப்படி?” என்று அவன் கேட்டான்.

அவள் காரில் ஏறி உட்கார்ந்தாள். “செளக்கியத்துக்கு என்ன?” என்று இழுத்தாள்.

”இந்த வெயிலில் இப்படீ எங்கே?” என்றான் அவன்.

கார் கிளம்பியது.

“நாங்கள் ஒரு நாடகம் போடப் போறோம். நானும் இன்னும் சில பேரும். அதுக்கு டிக்கட் விற்றுவிட்டு வரலாம்னு புறப் பட்டேன். அவள் நாடகம் பற்றியும், ஒத்திகைகள் பற்றியும் பேசினாள். “அன்றைக்கு – முந்தா நாளோ – நீங்கள் காரில் போய்க்கொண்டிருந்தபோது கவனித்திருப்பீர்களே? ஒரு வீட்டு முன்னே நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்தோமே. அங்கே தான் தினம் நாடக ஒத்திகை நடக்கிறது….

“ஒகோ” என்றது அவன் மனம். மேக மறைப்பு விலகி மீண்டும் ஒளி பிரகாசிப்பது போலிருந்தது. சந்தேகம் மறைந்து ஓடியது.

ஒட்டல் ஒன்று நெருங்குவது பார்வையில் பட்டது.

அவன் தயங்கி, சிந்தித்து, துணிச்சல் பெற்று, “இந்திரா!” என்று அழைத்தான்.

“ஒ!” என்றவள், “என் பேர் கூடத் தெரிந்து விட்டதா உங்களுக்கு?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“நீயும் உன் சிநேகிதியும் சினிமாவுக்கு இந்த வண்டியில் போனிர்களே, அன்று பேச்சோடு பேச்சாக…

” சரிதான்!” என்று சொன்னாள் அவள்.

“இந்திரா, காபி சாப்பிடலாமே?” என்று அவன் கூறவும், அவள் தலையை ஆட்டிக்கொண்டே இப்ப எதுக்குக் காப்பி? என மறுத்தாள்.

“காபி வேண்டாமென்றால், கூல் ட்ரிங் ஏதாவது சாப்பிடு. நீ மிகவும் அலுத்துப் போயிருக்கிறாய்.”

அவள் பிகு செய்யவில்லை. அவன் அதிகம் வற்புறுத்தி உபசரிக்க வேண்டும் என்று ஆசைப்படவுமில்லை. அவளுக்கும் ஏதேனும் பருக வேண்டியது அவசியம் என்றே பட்டது.

இருவரும் ஒட்டலுக்குள் போய் காப்பி சாப்பிட்டு விட்டு வந்து காரில் ஏறிக்கொண்டதும், தங்களுக்குள் நட்பு நெருங்கி வந்துள்ளது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவள் முகத்திலும் ஒரு தெளிவு பிறந்திருந்தது.

அவரவர் நினைவாகவே இருந்தவர்களின் மெளனத்தை அவள் பேச்சுதான் கலைத்தது. நீங்கள் ஒரு டிக்கட் வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று இந்திரா கேட்டாள்.

“ஊம்ம்” என்றான் அவன்.

“ஐந்து ரூபாய் டிக்கட் தரட்டுமா? அவள் அவசரம் அவ னுக்கு சிரிப்பு தந்தது. “ஊம் என்றால், உடனேதானா? இன்னும் இரண்டு நாள் போகட்டும், பார்க்கலாம்” என்றான்.

“உங்களை எங்கே பார்ப்பது? இப்படி ரோடில் பார்த்தால் தானே உண்டு?”

அவன் உறுதியாக அறிவித்தான்: “”இப்போ என்னிடம் பணம் இல்லை. இன்று என்ன கிழமை? செவ்வாயா? சரி. வெள்ளிக்கிழமை நிச்சயமாக வாங்கிக் கொள்கிறேன். இன்று பார்த்த டாக்சி ஸ்டாண்டில், இதே நேரத்துக்கே, என்னைப் பார்க்கலாம். அல்லது, சாயங்காலம் வேண்டுமானாலும் வரலாம்.”

அவளும் சரி என இசைந்தாள்.

ஒரு இடம் வந்ததும், “நான் இங்கேயே இறங்கி விடுகிறேன். கொஞ்சம் நிறுத்துங்கள்” என்று சொல்லி, நிறுத்தி, இறங்கிக் கொண்டாள்.

“வீடு வரை வேண்டாமா?” என்று விசாரித்தான் சந்திரன். அவள் வீட்டைத் தெரிந்து கொள்ளலாமே என்ற ஆசை யுடன்தான்.

இங்கே ஒரு ஃபிரண்டைச் சந்திக்கணும்” என்று கூறிய இந்திரா, “வெள்ளிக்கிழமை ஞாபகம் இருக்கட்டும். அவசியம் டிக்கட் வாங்கிக் கொள்ளணும்” என்றாள்.

அவள் தலையை ஆட்டி ஆட்டிப் பேசியது மிகவும் வசீகரமாக இருந்தது. அவளது கரிய விழிகளின் சுழற்சி – செவ்விய இதழ்களின் சுழிப்பு – ஆஹ், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாமே!

ஆனால், கடமையும் கால உணர்வும் இருவரையும் பிரித்தன.

அதுமுதல் “வெள்ளிக்கிழமை சந்திரன் நினைவில் சிவப்பு எழுத்து நாளாய்ப் பளிச்சிடலாயிற்று. அன்று இந்திராவைச் சந்திக்கலாம். அவளை ஓட்டலுக்கு அழைத்துப் போக வேண்டும். முடிந்தால் சினிமாவுக்கும் போகலாம்!

அவன் மனம் ஆசைச் சிறகு விரித்து, கற்பனை வெளியிலே சுகமாக மிதந்தது. இந்திராவோடு எப்படி எப்படிப் பேச வேண்டும், எவ்வாறெல்லாம் பழகலாம் என்று எண்ணுவதி லேயே பொழுது இனிமையாக ஓடியது.

இன்று இன்ன கிழமை, வெள்ளிக்கிழமைக்கு இன்னும் இத்தனை நாள் – ஒவ்வொரு நாளும் இப்படி அநேக தடவைகள் அவன் கணக்கிட்டு வந்தான்.

வியாழனும் பிறந்தது. வளர்ந்து ஒடிக்கொண்டிருந்தது.

வியாழக்கிழமை மாலை ஆறுமணி.

இரண்டு பேர் சந்திரனின் டாக்சியில் ஏறினார்கள். உல்லாச புருஷர்கள். அவர்களது உடையும், நடையும், வாசனையும், பேச்சும் இதை விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தன.

“நேற்று அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போயிருந்தேன். உங்களைப் பற்றி விசாரிச்சுது. எங்கே அவரு வரவே காணோமின்னு கேட்டுது” என்று ஒருவன் – ஒல்லியான ஆசாமி – சொன்னான்.

பருமனும் பணமெருகும் படாடோபமும் மிகுதியாகப் பெற்றிருந்தவன், மகிழ்ச்சி பல்லில் படர, அப்படியா? இந்து இப்போ எப்படியிருக்குது?” என்றான்.

அதுக்கு என்ன? லட்டு இல்லே!”

“ஊங் ஊம்ங்” என்று கனைத்தான் தடியன்.

“அது நாடகங்களிலே எல்லாம் நடிக்குது. இந்த மாதக் கடைசியில் கூட ஏதோ டிராமா இருக்குதாம். நீங்க அவசியம் பார்க்கணும்னு ஆசைப்படுது.”

நல்ல புள்ளெதான்!” என்று தடித்த உதடுகளை நாக்கினால் தடவிக் கொண்டான் பெரியவன்.

ஒல்லி நபர் “இப்படி இப்படிப் போ” என்று வழி கூறிக் கொண்டும், சுவையாகப் பேசியும் பசையுள்ள நண்பனை உற்சாகப்படுத்தி வந்தான்.

ஒரு இடத்தைக் கடந்தபோது, “இந்திரா இரண்டு தடவை களும் இங்கேதான் இறங்கிக் கொண்டாள்” என்று நினைவு படுத்தியது சந்திரன் மனம்.

அருகே உள்ள சிறு தெருவில் சென்று, பக்கத்துச் சந்தில் புகுந்தது டாக்சி.

“நிறுத்து, நிறுத்து! இந்த வீடு தான்.”

“சடக்கென வண்டியை நிறுத்தினான் சந்திரன்.

இரண்டு பேரும் கீழே இறங்கினார்கள். ஒல்லி நபர் மீட்ட ரைப் பார்த்து, பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பினான்.

“வாங்க, வாங்க!”

உற்சாகம் குமிழியிட மென்குரல் அழைப்பு சந்திரனைச் சுண்டி இழுத்தது. அவள்! இந்திரா!

அவளும் அவனைக் கவனித்து விட்டாள். ஆயினும் அவனைப் பாராதவள்போல், தன்னை நெருங்கிக் கொண்டிருந்த பணக்கார உல்லாசியை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதில் ஆர்வம் காட்டினாள்.

அந்தத் தடி ஆசாமி அவள் இடுப்பில் கை சேர்த்து இழுத்தவாறு “இந்து, செளக்கியமா இருக்கியா?” என்று பல்லெல்லாம் தெரிய விசாரித்தான்.

இந்திரா வந்தவனின் முகத்தையே பார்த்தபடி, மோகன முறுவல் பூத்தாள். “ஊம்” என்று குரலை இழைய விட்டாள்.

இழையும் குரல் சந்திரனின் உள்ளத்தில் இடர் செய்தது.

தடாரென அடித்துக் கொண்டது டாக்சியின் கதவு. கோபமாக உறுமி, ஆங்காரமாய்க் கனைத்தவாறு, வேகமாய்க் சிளம்பி ஒடியது வண்டி.

சந்திரன் மூஞ்சியில், இதயத்தில், ஆசையில், கனவுகளில், யாரோ பேயறை அறைந்து விட்டது போல – எதுவோ இடிந்து அவன் மீது விழுவதுபோல் – அவன் நின்ற இடம் சரிந்து அவனோடு அதல பாதாளம் நோக்கி இறங்குவதுபோல. எப்படி எப்படியோ வந்தது அவனுக்கு. அவனது இனிய நினைவுகள், காதல் கனவுகள், ஆசைக் கோட்டைகள், ஒளி நிறைந்த எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் எல்லாம் நிலை குலைந்து தள்ளாடி விழுந்து, அவனுடைய டாக்சிக் சக்கரங்களில் அடியிலே சிக்கிச் சிதைந்து கொண்டிருந்தன.

– சுதேசமித்திரன் 1965

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *