காதலற்றவனும் காதலுற்றவளும் !

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,015 
 
 

கலையரசன்… ஒரு காதல் காமன்மேன். என்னை மாதிரி எவனாவது சிக்கினால் ஆவேச அறிவுரைகள் வழங்கித் தாளிப்பான். பன்னெடுங்காலமாய் இந்தப் பன்னாடை வழங்கி வரும் காதல் உபதேசம் தற்சமயம் பட்டு நூல்காரத் தெருவின் அறையைத் தாண்டி, தஞ்சாவூரின் வீதிகளில் வழிந்துகொண்டு இருக்கிறது.

“மச்சான், அது எப்படி ஒரு மனுஷனுக்குக் காதல் வராம இருக்கும்? மண்வாசனை இல்ல, மண்வாசனை… அது இந்தப் பூமிலதான்டா இருக்குது. ஆனா, அதை வெளிய கொண்டுவர வானத்துலேர்ந்து மழை வர வேண்டியிருக்கு. அந்த மாதிரிதான் மச்சான் லவ்வும். நல்லா யோசிச்சுப்பாரு. ஒண்ணு, நீ யாரையோ லவ் பண்ணியிருக்கணும். இல்லேன்னா, உன்னை யாராச்சும் லவ் பண்ணியிருக்கணும். இந்த லவ்வை கிராஸ் பண் ணாம எவனும் வர முடியாது மச்சான்..!” – ஓசியில் அரை பாக்கெட் கிங்ஸ் கிடைத்துவிட்ட இறுமாப்பில் பேசிக்கொண்டு இருந்தான் அவன்.

இவ்விதமாக அவன் உசுப்பேற்றுவது இது முதல் முறையல்ல. ‘நீ ஏன்டா இப்படி மண்ணு கணக்காவே இருக்க?’ என்றுதான் தொடங்குவான். அன்றைய இரவில் அது அரசு மதுபானக் கடையில் மசமசப்பாய் முடியும். காதல் என்ற கருமம் எனக்கு வரவே இல்லை என்று சொன்னால், நம்பித் தொலைப்பதில் அவனுக்கு என்ன சிரமம் என்று தெரியவில்லை. ‘நல்லா யோசிச்சுப்பாரு’ என்று இவனைப்போல நாலு பேர் சொல்லும்போதுதான் எரிச்சலாகவும், கலக்கமாகவும் இருக்கிறது.

‘அவளா இருப்பாளோ, இவளா இருப்பாளோ?’ என்று கடந்துபோன பெண்களை எல்லாம் சந்தேகித்து, இறுதியில் எவளையாவது ஒருத்தியைக் கற்பனையில் காதலியாக நியமிக்க வேண்டிய மனநோய் வந்துவிடுமோ என்று அச்சமாகவும் இருக்கிறது. இந்த உசுப்பேற்றல் உச்சத்துக்குப் போன ஒரு திங்கள்கிழமையின் கதை உங்களுக்குத் தெரியாது இல்லையா?

திங்கள்கிழமையின் கதை:

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிக முன்பாக டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஷிஃப்ட் ஆகியிருந்த சமயம். கடந்த 10 வருடங்களில் இவர் எத்தனையாவது தடவையாகக் கூட்டணி மாறுகிறார் என்பதை மனக் கணக்குப் போட்டபடி நடந்துகொண்டு இருந்தேன். அப்போதுதான் ஜூபிடர் தியேட்டர் பக்கமாகத் தோளில் ராஜஸ்தான் பெயின்ட்டிங் பேக்குடன் அவள் கடந்து போனாள். சுடிதார் அணிந்திருந்தாள். அவளை எனக்கு அறிமுகம் இல்லை. ஒரு நாய்க்குட்டி இன்னொரு நாய்க்குட்டியுடன் சினேகம்வைத்துக்கொள்ள முன் அறிமுகத்தை எதிர்பார்க்காதபோது, நான் மட்டும் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?

“உங்களை எனக்கு முன்ன பின்னத் தெரியாது. ஆனா, இப்ப தெரிஞ்சுக்க பிரியப்படுறேன்.”

“நீங்க ஏன் என்னைத் தெரிஞ்சுக்கணும்?”

நாய்க்குட்டி உதாரணம் இவளுக்குப் பிடிக்குமோ என்னவோ?

“இல்லீங்க. நான் இப்போ மேன்ஷன்ல தங்கியிருக்கேன். சீக்கிரமா கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.”

அவள் என்னைப் பார்த்த பார்வையின் அர்த்தம் தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. நான் ஓர் அரை லூஸ§ அல்லது குறைந்தபட்சம் கால் லூஸாகவாவது இருக்க வேண்டும் என அவள் நம்பினாள்.

“நீங்க யாருங்க? இதை எல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”

பெப்பர் சிக்கனும், வான்கோழி பிரியாணியும் கேட் டால் வாங்கித்தரவா போகி றாள்?

“கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நான் கல்யாணம் பண்ணிக்கப்போறதா சொன்னேன்ல, அது வந்து லவ் மேரேஜாத்தான் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, யாரும் என்னை லவ் பண்ண மாட்டேங்கிறாங்க. அதாங்க, வெட்கத்தை விட்டு ஒவ் வொரு பொண்ணாக் கேட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதையும்கூட இன்னிக்குத்தான் முடிவு செஞ்சேன். முதல் போணி நீங்கதான்!”

‘முதல் போணி’ என்ற வார்த்தை யைக் கேட்டதும் சட்டென முகம் சுளித்தாள். அப்போது அவள் மொபைல், ‘ஜூன் போனால் ஜூலைக் காற்று’ என்று அரிய பொது அறிவுத் தகவல் ஒன்றைச் சொல்லியது. புதிய நோக்கியா மொபைல். வாய் பேசுவது மூக்குக்கே கேட்காதவாறு முணுமுணுத் தாள்.

“நானும்கூட நோக்கியாதாங்க வெச்சிருக்கேன். பட், சோனில சவுண்ட்ஸ் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க…” என்று சொல்லியபோது, அவள் நின்றுவிட்டாள். அது ஆத்துப்பாலம் பஸ் ஸ்டாப்.

“ஹலோ, நீங்க என்ன மென்டலா?”

“நீ இல்லடா, அவதான் மென்டல். ஜூபிடர் தியேட்டர் பக்கத்திலேயே கேட்டிருக்க வேண்டிய கேள்வியை அரை கிலோ மீட்டர் தள்ளி வந்து கேட் டிருக்காளே… அப்ப அவதானே மென்டல்?” – மேன்ஷன் அறையில் அது நகைச்சுவைத் திங்களானது. பாடுபொருள் நானானேன். இதோ இந்த மழை நேரத்து மாலை கலையரசனின் உபயத்தால் காவிய புதனாகிக்கொண்டு இருக்கிறது. பலியாடு நானா னேன்.

“லவ்வுன்னா கறுப்பா, செவப்பான்னு கேட்டவன்லாம் வீட்டைவிட்டு ஓடிப் போயிருக்கான் தெரியும்ல? அவ்வளவு ஏன்டா, நம்ம பிரேமா… அவ ஒரு மெக்கானிக்கூட எஸ்கேப். குழந்தை, குட்டியோடு மேலவீதிலதான் குடியிருக்கா, தெரியுமா?”

“என்ன மச்சான் சொல்ற, ரவுடி பிரேமாவா, அவளா? நீ பாத்தியா?”

“நான் எங்கடா பாத்தேன். நம்ம நியாஸ§ சொன்னான் அன்னிக்கு. அவனுக்கு வீடு தெரியும்னு நினைக்கிறேன்.”

உங்களுக்கு ரவுடி பிரேமாவின் கதை தெரியாது இல்லையா?

ரவுடி பிரேமாவின் கதை:

தூங்குமூஞ்சி மரங்கள் அடர்ந்த சரபோஜிக் கல்லூரியைச் சில வருடங்களுக்கு முன்பிருந்துதான் கோ-எட் ஆக்கி இருந்தார்கள். ஆனாலும், பிள்ளைகளைப் பெற்ற வர்களுக்குப் பயம் விலகவில்லை. விளைவு, இதர கல்லூரிகளால் கைவிடப்பட்டவர்கள் மட்டுமே சரபோஜியில் சரணடைந்தார்கள். அதிலும் பிரேமா இருப்பதிலேயே மொக்கை ஃபிகர். ஆனாலும், அவளைச் சுற்றி எப்போதும் கடலை வறுவல்கள் ஜோராக நடக்கும்.

“உன்னைவிட எத்தனை பொண்ணுங்க லட்சணமா இருக்கு? அதை எல்லாம் விட்டுட்டு உன்கிட்ட என்ன இருக்குன்னு இந்தப் பசங்கள்லாம் வந்து பேசுறானுங்க?” என்று ஒரு பெண்ணிடம் கேட்டுவிட்டு, உங்களால் சேதாரமில்லாமல் திரும்ப முடியுமா? பிரேமாவிடம் கேட்டேன். கோபம், டென்ஷன்… ம்ஹ¨ம்.

“அது என்னன்னா மகேஷ், இவளுகளுக்கு எல்லாம் கொஞ்சம் மூக்கும் முழியுமா இருக்கோம்னு திமிரு ஜாஸ்தி. கொஞ்சம் ஸ்மார்ட்டா இல்லேன்னா, கண்டுக்க மாட்டாளுக. ஆனா, எல்லாப் பசங்களும் ஸ்மார்ட்டா இருக்கிறது இல்லையே? முக்காவாசிப் பேரு உன்னை மாதிரி தார் டின்னுக்குக் கால் முளைச்ச மாதிரி பப்பரப்பன்னுதானே இருக்கானுங்க. அவங்களுக்கு எல்லாம் என்னை மாதிரி பொண்ணுங்கதான் வாய்ப்புக் கொடுத்து காப்பாத்திவிடணும்” என்று அவள் பேசியது யதார்த்தவாதமா, தத்துவார்த்தமா என்ன எழவு என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை.

பிரேமாவுக்கு எப்போதும் பையன்களுடன்தான் பழக்கம். சைக்கிள் ஸ்டாண்ட், ஆடிட்டோரியம், சிமென்ட் பெஞ்ச் என நாங்கள் கூடும் இடம் எல்லாம் அவளும் இருந்தாள். புதிய ஜூனியர் பெண்களில் கொஞ்சம் அழகோடு யாரும் இருந்தால், நாங்கள் பிரேமாவிடம் சரணாகதி அடைவோம்.

மரத்தடியில் எங்களோடு அமர்ந்துகொண்டு கடந்து செல்லும் ஜூனியர் மாணவிகளை, ‘ஏய், இங்கே வா’ என்பாள் தோரணையாக. ‘உன் பேரு என்ன, எந்த ஊரு, பிறந்த நாள் எது, இதுவரைக்கும் எவனாச்சும் பிரப்போஸ் பண்ணியிருக்கானா?’ என எங்களின் மனச்சாட்சியாகவே மாறி பிரேமா கேள்விகளை வீசுவாள். அனைவருக்குமான காதல் தூதரும் அவளே!

தஞ்சாவூரின் அழகிய பெண்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் தாவணி போட்டுச் சங்கமிப்பார்கள் பெரிய கோயிலில். நகரின் ஆண்கள் கல்லூரிகள் அத்தனைக்கும் அன்று மதியத்துக்குப் பிறகு அறிவிக்கப்படாத விடுமுறை. நாங்களே மறந்துபோனாலும் மதியம் சாப்பிட்டு டிபன் பாக்ஸ் கழுவும் பைப் கட்டையில் ‘இன்று பிரதோஷம்’ என்று எழுதிப்போட்டு, மொத்த மாணவர்களின் பேரன்பையும் சம்பாதிப்பாள் பிரேமா.

கல்லூரிக்குள் அவளது செல்வாக்கைக் காட்டவும் ஒரு நேரம் வந்தது. கல்லூரி தேர்தலில் போட்டியிட்ட பையன்கள் மொத்தமாக பிரேமாவிடம் சரண்டர். “நீ சொன்னா பிசிக்ஸ் டிபார்ட்மென்ட் ஓட்டுமொத்தமும் விழும். ஃபர்ஸ்ட் இயரை நான் பார்த்துக்குறேன். செகண்ட் இயர், தேர்டு இயர் பசங்களை நம்ம பக்கம் கொண்டுவந்துடேன்” என்றெல்லாம் அவளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். இறுதியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் படித்த அருள்ராஜ், அப்போது ரிலீஸ் ஆகியிருந்த ரஜினி படத்துக்கு மொத்தமாக 55 டிக்கெட் டுகள் ரிசர்வ் பண்ணிக்கொடுத்து பிரேமாவின் ஆதரவைப் பெற்றான்.

கல்லூரிப் பருவம் முடிவுக்கு வரும் இறுதி நாட்களில் ஆளாளுக்கு ‘மணமேடை ஏறும் முன் மணவோலை இட மறவாதே’, ‘சேலையைத் தொடும் முன் ஓலையை அனுப்பு’ என்றெல்லாம் ஆட்டோகிராஃப் எழுதிக்கொண்டு இருக்க, “எதுக்குடா எல்லாரும் இப்படி ஃபீல் பண்றீங்க?” என அதையும் எளிதாகக் கடந்துபோனாள்.

இறுதி செமஸ்டர் தொடங்குவதற்கு முந்தைய வாரம் வகுப்பில் இருந்த எல்லோரையும் தன் வீட்டுக்கு மதிய உணவருந்த அழைத்தாள். புறநகர் பகுதியில் அமைந்திருந்த அவள் வீட்டுக்கு நாங்கள் அனைவரும் சைக்கிள்களில் சென்றோம். பிரேமா, அவளது அம்மா, அப்பா, அவள் தங்கை என அன்பின் குடும்பம் அது. சாப்பிட்டு, பேசி, மகிழ்ந்து… நாங்கள் திரும்பி வரும்போது மொத்த வகுப்பில் பிரேமா மட்டுமே அழகானவளாகத் தெரிந்தாள்.

கல்லூரி முடிந்து யாவரும் திசைக்கொருவராய் பிரிந்தோம். அனைவரும் மாதம் ஒருமுறை கடிதம் எழுத வேண்டும் என்பது ஒப் பந்தம். நாட்டில் ஒப்பந்தங்கள் எப்போதுதான் மதிக்கப்பட்டு இருக்கின்றன? நான் மாங்குமாங்கென எழுதிய கடிதங்களுக்கு எவனிடம் இருந்தும் பதில் இல்லை – பிரேமாவைத் தவிர. ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும் ‘இப்படிக்கு, ரவுடி பிரேமா’ என்று எழுதிக் கையெழுத் திடுவாள்.

வேலைக்காக வெளியூருக்கு வந்துவிட்ட பின்பு ஊருக்குப் போகையில், பிரேமாவின் வீட்டுக்கும் போவது வழக்கமானது. அதே ரவுடி பிரேமாதான். அவளது அப்பாவும் அம்மாவும் நான் போகும்போதெல்லாம் அன்பின் நிறைவோடு பேசிய சொற்களை எவ்விதம் மறக்க இயலும்?

திடீரென்று பிரேமாவிடமிருந்து கடிதம் வருவது நின்றுபோனது. இடையில் ஒருமுறை ஊருக்குப் போனபோது பிரேமாவின் வீட்டுக்குப் போனேன். அப்பா மட்டும் இருந்தார். “வாங்க தம்பி” என்றவர் வீட்டுக்குள் போய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். லோட்டாவைக் கையில் வாங்கிக்கொண்டு, “பிரேமா எங்க?” என்றேன். “அவ அத்தை வீட்டுக்குப் போயிருக்கா” என்றவர், அதன் பிறகு ஒரு வார்த்தையும் பேசவில்லை. இத்தகைய அவரது மௌனம் புதிது. அதைவிட இவ்வளவு நேரம் அவர் என்னை நிற்கவைத்தே பேசுவது எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. கிளம்பி வந்துவிட்டேன்.

மறுபடியும் வேலை தஞ்சாவூருக்கு மாற்றலாகி வந்தபோது, பிரேமாவின் வீட்டுக்குப் போனேன். இம்முறை என்னைப் பார்த்ததுமே, “ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருக்கா தம்பி. எப்ப வருவான்னு தெரியாது” என்று மெல்லிய குரலில் பதில் சொன்னார் பிரேமாவின் அம்மா. அதோடு சரி, பிரேமாவின் தொடர்புகள் அறுந்துபோயின.

‘பிரேமாவை ஒருவன் காதலிப்பான் அல்லது பிரேமா ஒருவனைக் காதலிப்பாள்’ என்பதை இந்த நிமிடம் வரைக்கும் நம்ப முடியாதவனாகவே இருந்தேன். ஆனால், ஒரு மாய மிருகமென காதல் யாவரையும் தீண்டிச் செல்லும் என நிறுவும் முயற்சிகளில் கலையரசன் தீவிரமாக இருந்தான்.

“என்ன மச்சான் சொல்ற, பிரேமா ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாளா? இது தெரியாம நான்பாட்டுக்கு ரெண்டு மூணு தடவை அவ வீட்டுக்குப் போய் ‘எங்கே பிரேமா?’ன்னு கேட்டுட்டன்டா! பாவம், அவளோட அப்பாவும், அம்மாவும். எவ்வளவு சங்கடப்பட்டு இருப்பாங்க. ஒரு பொண்ணு ஓடிப் போனப்புறமும் இன்னொரு பொண்ணு வீட்டுல இருக்குற நிலைமையில நான் வேற லெட்டர் போட்டு, நேர்ல போயி… வேற குடும்பமா இருந்தா அடிச்சுத் துவைச்சிருப்பானுங்க.”

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பிரேமாவைத் தேடிக் கிளம்பினேன். அரண்மனைக்கும் மேலவீதிக்கும் இடைப்பட்ட கிளைச் சந்து ஒன்றில் வீடு. கைக் குழந்தையுடன் கிரைண்டரில் மாவாட்டிக்கொண்டு இருந்தாள். கணவன் வீட்டில் இல்லை.

“மகேஷு… எப்டிடா இருக்கே? பெரிய மனுஷன்போல மாறிட்ட. தொந்தி, சொட்டைன்னு இவன் ஏன்டா இப்படி இருக்கான்?” – என்னையும், கலையரசனையும் அவள் எதிர்கொண்ட விதத்தில் ரவுடி தெரிந்தாள். “அந்த சேரை எடுத்துப் போட்டு உக்காரு” என்றவள், உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்தாள். அந்த லோட்டா பிரேமாவின் அம்மா, அப்பா முகங்களை நினைவில் எழச் செய்தது. பிரேமா மகிழ்ச்சிப் பெருக்கில் இருந்ததை அவள் பேச்சிலும், வார்த்தையிலும் உணர முடிந்தது.

“ஏன்டா, இன்னும் கல்யாணம் பண்ணிக்காம திரியுறீங்க? என் மூஞ்சிக்கே என்னை ஒருத்தன் லவ் பண்ணான். உங்களுக்கு எவளும் சிக்கலையா?”

“எங்க உன் ஹஸ்பண்ட்?”

“அவர் கடைக்குப் போயிருக்காரு. அது ஒரு பேக்கு. வீட்டு நிர்வாகம் முழுக்க நான்தான்.”

நீண்ட, நெடிய தயக்கத்துக்குப் பிறகு “ஏன் உன் கல்யாணத்துக்கு ஒரு வார்த்தைகூடச் சொல்லலை?” என்றேன்.

“பரிசம் போட்டு பந்தக்கால் நட்டா என் கல்யாணம் நடந்துச்சு. சாதிப் பிரச்னை. ரெண்டு வீட்டுலயும் சம்மதிக்கலை. அதான் ஓடி வந்துட்டோம். இதுல ஊருக்கெல்லாம் வெத்தலை பாக்கு வைக்கவா முடியும்?”

“இல்ல பிரேமா, எதுக்குக் கேக்குறேன்னா, நீ வந்தது தெரியாம நான் உங்க வீட்டுக்கு லெட்டர் போட்டு, நேர்ல போயின்னு உங்க அப்பா, அம்மாவுக்குப் பெரிய சங்கடத் தைத் தந்துட்டேன்.”

ஒரு நிமிடம் அவள் முகம் அதிர்ந்து இருண்டது. “இல்லடா, திடீர்னு வீட்டைவிட்டு வர வேண்டியதாயிடுச்சு. ஆட்டோகிராஃப் நோட்டைக்கூட எடுக்க முடியலை. அதுலதான் எல்லாரோட அட்ரஸ§ம் இருந்துச்சு. அதனாலதான்…” என்றவளின் குரல் லேசாக இறங்கியிருந்தது. பேச்சின்போக்கில் நான் மறுபடியும் ஒருமுறை, “உங்க அம்மா, அப்பாவுக்குத்தான் பெரிய சங்கடம்” என்றேன். சடாரெனக் கோபமுற்றாள்.

“இப்ப என்னாங்குறே? ‘ஒடிப்போறேன், ஓடிப்போறேன்’னு ஊரெல்லாம் லெட்டர் எழுதிட்டுத்தான் வந்திருக்கணும்கிறியா? நீ லெட்டர் போட்டதுனாலயும், வீட்டுக்குப் போனதுனாலயும் என் அப்பாவும் அம்மாவும் செத்தா போயிட்டாங்க? நல்லாத்தானே இருக்காங்க, அப்புறமென்ன?” – கோப மாகச் சொல்லிவிட்டு வீட்டைப் பெருக்க ஆரம்பித்தாள்.

தரையில் விரவிக்கிடந்த தூசி காற்றில் பறக்கத் தொடங்கி இருந்தது!

Print Friendly, PDF & Email

1 thought on “காதலற்றவனும் காதலுற்றவளும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *