காதலர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,408 
 
 

இந்தக் கதையை துண்டு துண்டாகத்தான் சொல்ல முடியும். நீள் கோட்டில் சொல்வது சாத்தியமில்லை. ஒரு வேளை லாஜிக் இடிக்கலாம். என்ன செய்வது? எனக்குச் சாத்தியம் இல்லை. நானே உடைந்து துண்டுகளாக இருக்கும்போது, எத்தனையைத்தான் ஒட்ட வைப்பது?

நான் முதலில் பார்த்தது அவளை இல்லை. அவளின் கால் ஒன்றை. வெள்ளையான கால். கொலுசு ஒன்று தழுவிக்கொண்டிருந்தது.

நான் அந்த ரைஸ் மில்லில் தங்கிக் கொண்டு படித்து வந்தேன். காலையில் 10 அல்லது 11 வரை அரவை இருக்கும். அப்புறம் மாலையில்தான். நான் கல்லூரி செல்லும்போது விஸ்வம் வந்துவிடுவார். மற்ற நேரமெல்லாம் ரைஸ் மில் மாமரத்தடியில், கிணற்றடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருப்பேன். அல்லது கீரை பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பேன். அல்லது ஆடாது அசையாது மாமரக்கிளையில் படுத்து தூங்கிவிடுவேன்.

அதற்கு அந்தப்பக்கம் ஒரு பொட்டல் காடு. கொஞ்சநாளில் அங்கு ஒரு வீடு வந்தது. யாரோ பெங்களூரில் இருந்து வருகிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். சுவற்றை எழுப்பிவிட்டு, என்ன ஆனதோ, கீற்றுக்கூரை போட்டுவிட்டார்கள். அப்புறம் ஒரு குடும்பம் குடிவந்தது. அவர்கள் கிருத்துவர்கள். அதிலும் கிருத்துவ உடையார் சாதி.

அந்த வீட்டின் பெண்தான் அன்று வாசல் வரண்டாவில் படுத்திருந்திருக்கிறாள். சற்று நீண்டிருந்த அவள் கால்தான் என் கவனத்தை இழுத்தது. யார் இந்த காலின் சொந்தக்காரி என்று காத்திருந்து பார்த்தேன். முட்டை வடிவ நீள முகம். ஆண்கள் போல இடதுபக்கம் வாகெடுத்து சீவியிருந்தாள். நீள முடி. அவள் எழுந்தபோது தெரிந்த முகம் இப்போதும் என் மனதில் இருக்கிறது. சோம்பல் முறித்த அழகு என் கண்ணில் இருக்கிறது. அவள் என்னைக் கவனிக்கவில்லை. அதற்கப்புறம் அவளைக் கவனிப்பதைத் தவிர எனக்கு வேறு வேலை இல்லை என்றானது.

அப்புறம் ஓர் நாள் அவளது அப்பா என்னை அழைத்தார். ஏதோ ஓர் உதவி கேட்டார். உதவி என்ன என்பது இப்போது முக்கியமில்லை. கதவிடுக்கில் தெரிந்த அவள் கண்தான் முக்கியம். 2 இஞ்சுக்குக் கதவு திறந்திருக்க அவளின் ஒற்றைக் கண் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது, என்னோடு பேசிக்கொண்டிருந்த அப்பாவுக்கு அது தெரியவில்லை. அவர் கேட்ட உதவியை செய்வதாக ஒப்புக்கொண்டேன். இன்னொரு முறை அவளின் வீட்டில் அமர்ந்து அந்தக் கண்ணைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமல்லவா?

இப்படியாக எத்தனை நாள் ஓடியது என்று எனக்குத் தெரியாது. சில மாதங்கள்? வருடங்கள்? ஆனால், நாங்கள் சைகையில் பேசிக்கொண்டது நினைவிருக்கிறது. பாடப்புத்தகத்தைப் படிப்பதாக அவள் நடித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது மனதில் தைத்த கண் நினைவில் இருக்கிறது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவள் கல்லூரிக்கு வந்துவிட்டாள் என்பது நினைவில் இருக்கிறது.

அவளும் நானும் ஏறக்குறைய ஒரே நேரம்தான் கல்லூரிக்குப் புறப்பட வேண்டும். அவள் பெண்கள் கல்லூரி. என்னுடையதோ ஆண்-பெண் கல்லூரி. அவள் சைக்கிள் பின்தான் நான் செல்வேன். அவள் பெடலை மிதிக்க மிதிக்க இடுப்பின் கீழே சற்று இறங்கிய அவளின் ஒற்றைச் சடை அசைந்தாடுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

ஆனால், அவள் இந்த இரகசியத்தை எப்படிக் கண்டுபிடித்தாள் என்று தெரியவில்லை. ஒரு நாள் சட்டென்று திரும்பியவள் என்னைப் பார்த்துவிட்டு சடையை எடுத்து முன்பக்கம் போட்டுக்கொண்டாள். நான் அதற்கென்று ஓர் கவிதை எழுதினேன் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

மறுநாளிலிருந்து இரட்டை சடைதான். அதனையும் மடித்து தூக்கிக் கட்டிக்கொண்டிருந்தாள். நான் அவள் கண்ணைப் பார்த்தபோது ஒரு நக்கல் சிரிப்பிருந்தது. யார் சொன்னார்கள், ஒரு மனதைப் புரிந்துகொள்ள வார்த்தைகள் வேண்டுமென்று?

இப்படி எத்தனை நாள் போனதென்று தெரியாது. ஏன் தெரியவேண்டும்? வாழ்வதுதான், மகிழ்ந்து வாழ்வதுதான் முக்கியமில்லையா?

அப்புறம் ஒரு நாள் அதிர்ச்சி. என் நண்பி வழியாக வந்தது. நித்யா கேட்டாள், ‘ஒனக்கு மரியா மீது லவ்வா? அவ ஒத்துகிட்டாளா?’

நான் பதில்சொல்லவில்லை. இவளுக்கு எப்படித் தெரியும்?

‘தெரியும்’ என்றாள் நித்தியா. ‘நான் வேணும்னா கேட்டு சொல்லட்டுமா’ என்றாள் பரிவோடு.

‘கேள்.. ஆனா… சொல்ல வேணாம். எனக்குத் தெரியும்’ என்றேன்.

நித்யா நக்கலாகவும் மகிழ்வாகவும் சிரித்தாள். நித்யாவும் மரியாவும் ஒரே கல்லூரியில் படிப்பவர்கள். . நித்யா எம்ஏ. அவள் பிஏ.

இரண்டு நாள் எனக்குத் தூக்கம் வரவில்லை. பதில் தெரியும்தான். ஆனால், ஒரு வேளை வேறு மாதிரியாக இருந்தால்?

ஒரு வழியாக அந்த ஞாயிறு வந்து சேர்ந்தது. நித்யா வீட்டுக்குச் சென்று அவளைப் பார்த்தேன். அவள் எனக்குப் பிடித்த இட்லியுடன் கார சட்டினி கொடுத்தாள். அவள் அம்மா வாங்கிக் கொடுத்த புடவையைக் காட்டினாள். பொருளாதாரப் பாடம் ஒன்றில் சந்தேகம் கேட்டாள்.

நான் வெறுப்பில் கொதித்துப்போன சமயத்தில் சொன்னாள், ‘நான் மரியாவிடம் கேட்டேன். அவள் பதிலே சொல்லவில்லை. ரொம்ப நேரம்’

‘கண்டேன் சீதையை’ என்பது பற்றி தமிழாசிரியர் கொடுத்த விரிவுரை நினைவுக்கு வந்தது. நித்யா விடுவதாக இல்லை. ‘அவள் உன்னைக் காதலிக்க.. ஊகும் அப்படி சொல்லக்கூடாது… நீ இல்லையென்றால் அவள் செத்துப்போவாளாம்’

நான் எப்படி உணர்ந்தேன் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நித்யா முகம் தெரியவில்லை. அவள் பேசியது கேட்கவில்லை. நான் எப்படி திரும்பினேன் என்பது நினைவில் இல்லை.

அப்புறம் அடுத்த முறை நித்யாவைப் பார்த்தபோது அவள் கேட்டாள், ‘நான் ஏன் மரியாவிடம் கேட்கிறேன் என்று சொன்னேன் தெரியுமா?’

நான் அவள் முகத்தையை பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் என்ன நினைத்தாள் என்று எனக்கு எப்படித் தெரியும்?

அவள் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள். அப்புறம் வெடுக்கென்று சொன்னாள், ‘அவர் நினைப்பது போல நான் அவரைக் காதலிக்கவில்லை என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தேன்.’

நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

நித்யா தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு விலகினாள் என்பது எனக்குத் தெரிந்தது.

அப்புறம் பலமுறை எனக்கும் மரியாவிற்கும் இடையில் தூது சென்றிருக்கிறாள்… நானும் மரியாவும் கடற்கரையில் சந்தித்தபோது குடும்பம் போல காட்சியளிப்பதற்காக எங்களுடன் வந்திருக்கிறாள். நானும் மரியாவும் பிரிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அவள் தூது சென்றிருக்கிறாள்.

நானும் மரியாவும் பிரிந்தது எங்களின் பிரச்சனையால் இல்லை. அவர்கள் கிருத்துவர்கள். அதுவும் ராயல் பேமிலி… ராயல் பேமிலி என்பது மரியாவின் அப்பாவுடைய வார்த்தைகள். நான் ராயல் பேமிலி இல்லை. சரியாகச் சொன்னால்… இல்லை… என் அம்மாவின் வார்த்தையில் சொன்னால்… கம்னாட்டி வளர்த்த கழிசடை..

ஒருநாள் நித்யாவைக் கேட்டேன். ‘உனக்கு இது… இப்படி தூது போவது கஷ்டமாக இல்லியா?’

‘கஷ்டம்தான், ஆனால் உன்னோட சந்தோஷம்தான் எனக்கு வேணும்’

இதனை என்னவென்று சொல்வது? இளவயதின் முட்டாள்த்தனமா?

எனக்கு நித்யாவைப் பிடிக்கும். பள்ளியில் எட்டாவது படிக்கும்போதுதான் நான் அவளை முதலில் பார்த்தேன். அப்போதுதான் எங்கள் பள்ளியில் சேர்ந்திருந்தாள்.

ஆனால், அவள் எனக்கு ஒரு வகையில் மாமா மகள். எனது அப்பாவிற்கும் அவள் அப்பாவிற்கும் சண்டை வந்து ஒருவருக்கொருவர் பல வருடங்களாகப் பேசிக்கொள்வதில்லை என்பதால் நான் அவளை இதற்கு முன்பு பார்த்ததில்லை.

எங்கள் பள்ளியின் சிங்கமான அறிவியல் ஆசிரியர் துரைசாமி சேரில் ஆடிக்கொண்டிருந்து விழுந்தபோது கேட்ட ஒற்றை சிரிப்பு அவளுடையதுதான். யாருக்கும் பயப்படமாட்டாள்.

பள்ளி காலை 7 மணிக்குத் துவங்கும் என்ற அறிவிப்பு வந்தபோது என்னோடு சேர்ந்துகொண்டு ஸ்டிரைக்கை அமைப்பாக்கியது அவள்தான். நானும் அவளும் 5 நிமிட நடையில் பள்ளிக்கு வந்துவிடுவோம். ஆனால், 8 கி.மீட்டருக்கு ஒரே உயர்நிலைப்பள்ளி, அந்தக் காலத்தில்.. கடைகோடி மீனவ கிராமத்தில் வாழும் சந்திரனும் வழியானும் எப்படி பள்ளிக்கு வருவார்கள்?..

நாங்கள் பூம்புகாருக்கு கல்விச் சுற்றுலா சென்றபோது எனக்குப் பிடித்த இட்லியும் மிளகாய் பொடியும் கொண்டுவந்தது அவள்தான். அந்த மிளகாய்ப் பொடி சுவையை நான் இதுநாள் வரை மீண்டும் சுவைக்கவில்லை. சுவைத்தது மிளகாய்ப் பொடியா? நித்யாவின் அன்பா? தெரியவில்லை.

ஆனால், என்னால், நித்யாவை நாங்கள் கல்லூரி சென்ற காலத்திலும் காதலிக்க முடியவில்லை. அருகே இருக்கும் பொருள் கண்ணுக்குத் தெரியாது என்பதாலா? அல்லது மரியாவின் மீது கொண்ட காதலாலா? அல்லது அதற்கு அப்பால் ஏதும் இரகசியம் இருக்கிறதா?

கல்லூரி முடிந்து, நான் மரியாவைப் பிரிந்து… இல்லை சரியாகச் சொல்லப்போனால், மரியாவை அவள் அப்பா பாண்டிச்சேரிக்குக் கடத்திக்கொண்டு சென்ற பின்னர் நான் ஊரைவிட்டு வெளியேறிவிட்டேன்.

அந்தக் கடத்தலைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். அவர்கள் பாண்டிக்குக் குடிபெயர்கிறார்கள் என்று தெரிய வந்தது. காரணம் நான்தான் என்றும் தெரிய வந்தது.

அவருக்கு விஸ்வம் வழியாக செய்தி அனுப்பினேன். நான் மரியாவோடு பேச வேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா சென்றாலும் தப்பிக்க முடியாது.

அவர் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்தார். சென்றேன். வராண்டாவில் அமர்ந்தேன். நான் அவள் காலைக் கண்ட அதே வராண்டா..

அவளை அவள் அம்மா தள்ளிக்கொண்டு வந்தார். அவள் குனிந்தபடியிருந்தாள்…

‘சொல்லுடி’ என்றார் அம்மா.

அவள் நிமிந்து என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை.. அதே பார்வை. ‘நலமா?’ என்று கேட்கும் பார்வை. நெடுநாள் பார்க்காத என்னைப் பார்க்கும் பார்வை.

‘எனக்கு… ஒங்கள கல்யாணம் செஞ்சிக்க முடியாது’ என்றாள். திரும்பி நடந்தாள்.

நான் எழுந்து நடந்தேன். என் கால்களின் கீழே உலகம் இல்லை. முதன் முதலாக பாரதி வீதி சென்று பீர் குடித்தேன். பீரில் போதையில்லை. தூக்கம் வரவில்லை. வாழ்க்கையில் பொருள் இல்லை. வேலை வெட்டியற்ற நான் அவளைக் கடத்துவதிலும் பொருள் இல்லை.

மரியாவும் அவள் குடும்பத்தினரும் பாண்டிக்குச் சென்ற அன்று காலை 5.30 மணிக்கு ரைஸ் மில் வாசலில் நின்றிருந்தேன். லட்சுமி பஸ் ஜன்னலில் இருந்து நீண்ட அவள் கை என்னை நோக்கி அசைந்தது…

அப்புறம் நான் ஊரை விட்டு வெளியேறிவிட்டேன்.

அந்த மாமரம், மாதாகோவில், நான் அவளின் பின் பயணித்த பாரதி வீதி எதுவும் வேண்டாம் என்று வெளியேறிவிட்டேன்.

ஒரு நாள் நான் ஊரிலிருந்து சென்னை திரும்பியபோது அப்போதைய திருவள்ளுவர் பேருந்தில் மரியா அமர்ந்திருந்தாள். பக்கத்தில் ஒரு குழந்தை. அது மூளை வளர்ச்சிக் குறைவான குழந்தை என்பது தெரிந்தது. நான் ஓரக்கண்ணில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவளும்தான்..

அப்போதெல்லாம் பேருந்தில் புகைக்கத் தடையில்லை. நான் நிறைய புகைத்தேன். என் மரியாவுக்கு நிகழ்ந்தது எண்ணி புகைத்தேன்…. என் காதலை எண்ணி புகைத்தேன்.. எங்கள் ஊரில் எப்போதும் மதுவிலக்கில்லை. பாரதி வீதி பாரில் உட்கார்ந்து நான் குடித்த மதுவின் மணம் மறைக்க வேண்டும் என்றும் புகைத்தேன்.

பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது என் அருகில் வந்தாள். அவள், பழைய நாட்களில் செய்தது போல, என் முகத்தை கையால் பிடித்து நிமிர்த்தினாள்.

‘இவ்வளவு சிகெரெட் ஆகாது.. எதுக்கு சிகெரெட் பிடிக்கிறிங்க..?’

நான் உறைந்திருந்தேன்.

‘நா ஒங்களுக்கு செஞ்ச பாவம்தான் இந்த குழந்தை’

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

‘அப்புடி யோசிக்கக் கூடாது, மரியா… உன் மகனுக்கு என்ன பிரச்சனைன்னு பார்க்கனும். உன் வீட்டுகாரர் எங்கே?’

அவள் ஏளனமாகச் சிரித்தாள். அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாதோ?

சட்டென்று, ‘போறேன்’ என்றவள் இறங்கிவிட்டாள்.

அப்புறம் நித்யாவைத் தூது அனுப்பியபோதுதான் தெரிந்தது, அவள் கணவன் மரியாவின்… இல்லை.. எங்கள் காதல் தெரிந்து விலக்கிவைத்துவிட்டானாம். ராயல் அப்பா செத்துப்போனாராம்.. மகனோடு அவள் வாழ்க்கை நரகத்தில். ஆனால், மரியா தெளிவாக சொல்லியிருக்கிறாள்.. ‘எம்புள்ளைக்காகத்தான் வாழ்க்கையே..’ அதுமட்டுமல்லாமல், எந்த காலத்திலும் முறிந்த காதல் துளிர்க்காது. ஆனால், அப்படியே இருக்கும் என்றும் சொன்னாளாம்.

அது எப்படி அப்படியே இருக்கும்?

வெகுநாள் கழித்து, நான் திருச்சியில் நித்யாவைச் சந்தித்தேன். அவள் கணவன் தனியார் கம்பெனி அதிகாரி. திருச்சிக்கு மாற்றலாகி வந்திருந்தனர். என் அக்காவைப் பிடித்து என் முகவரி வாங்கியிருந்தாள். என்ன ஆச்சரியேமோ அவள் என் வீட்டுக்கு வருவதற்கு முன்பு மத்திய பேருந்து நிலைய நகரப்பேருந்து நிறுத்தத்தில் அவளைச் சந்தித்தேன். என் வீட்டுக்கு வரச்சொன்னேன். வந்தாள். என் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தேன், என்னுடைய பெஸ்ட் பிரெண்ட் என்று.

என் அக்கா பின்னர் ஒரு நாள் சொன்னார்.. ‘ஒனக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னவுடனே அவ மொகம் கருத்துடிச்சி’

ஒரு நாள் என் வீட்டுக்கு காலை 11 மணிக்கு நித்யா வந்தாள். என் மனைவி வேலைக்குப் போயிருப்பாள் என்று தெரிந்துதான் வந்திருக்க வேண்டும். நான் அந்த நாட்களில் வேலையிழந்து வீட்டில் அடைகாத்துக்கொண்டிருந்தேன்.

நித்யா பட்டுப் புடவையில் இருந்தாள். ‘ஒன்னோட கல்யாணப்புடவையா?’ என்று கேட்டேன்.

சிரித்தபடி ‘இல்லை.. ஆனால்.. ஆமாம்’ என்றாள்.

பெண்கள் குழப்புகிறார்கள் என்று சொன்னால் பிரச்சனையாகும். நான் குழம்பினேன் என்று சொல்வதுதான் பாதுகாப்பு.

அந்த கணத்தில் நான் விழித்த பேய் முழியைக் கண்ட நித்யா, ‘எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் நடந்த கல்யாணத்தின்போது எடுத்ததில்லை. ஆனா, உன்ன இன்னிக்குப் பார்க்க வந்ததுக்காக எடுத்தது’ என்றாள்.

‘என்ன பார்க்க வர்ரதுக்கு எதுக்கு பட்டுப் புடவை?’

‘இன்னிக்கு என் மனசுக்குப் பிடிச்சமாதிரி கல்யாணம்.. ஒனக்கும் எனக்கும். ஆனா, எல்லாம எங்கன்டிஷன்படிதான்’ என்றாள்.

என்னை நெருங்கி வந்தாள். நான் பின்வாங்கி சுவற்றில் சாய என் மார்பில் சாய்ந்தாள். அழுதாள்.

அதற்கு மேல் பொறுக்க முடியாத நான் அவளை அணைத்துக்கொண்டேன். குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டேன். பசித்துக்கிடந்தவள் போல என்னைச் சுவைத்தாள். மயங்கி அவள் மார்பில் சரிந்தேன்.

ஆனால், என்னால் முடியவில்லை. அவளின் ஏக்கம் புரிந்தது. அன்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? கொஞ்சம்தான். ஆனால், என்ன விதியோ வாழ்க்கை எங்கெங்கோ தறிகெட்டு ஓடிவிட்டது…

அவளை விலக்கினேன்.

சதையில் இரத்தம் வடிய தோலைப் பிரிப்பது போல அவளை விலக்கிப் பிரித்தேன். அவள் பார்வையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

திரும்பிக்கொண்டேன். ‘என்னை நேசிக்கும் உன்னை நானும் நேசிக்கிறேன்.. அது எனக்குப் புரியமலேயே போய்விட்டது.. ஆனா, அன்னிக்கு மரியா குறுக்கே இருந்தாள்… இன்னிக்கு ரெண்டு பேர்.. உன் வீட்டுக்காரனும்.. என் வீட்டுக்காரியும்’

நித்யாவிடமிருந்து சப்தம் இல்லை.

‘குற்ற உணர்ச்சியோடு வாழ்க்கையைத் தொடர முடியுமா நித்யா?’ என்றவாறு திரும்பினேன்.

அவள் விலகி நடந்தாள்.

வாசலில் நின்றாள். 12 மணி வெய்யிலின் பின்புலத்தில், அவள் கருத்த முகம் மேலும் கருப்பாகி அவளின் முக பாவம் தெரியவில்லை.

‘போறேன், இனி இப்படி வரமாட்டேன்’ என்றாள்.

‘நித்யா’ எனது குரலின் உணர்வு எனக்குப் புரியவில்லை. வெட்டுப்பட்ட புழுவின் குரல் என்று சொல்லலாம்

‘மனசாட்சிப்படி வாழ முடியாதுன்னா, பிரிஞ்சே போகனும். செத்தே போயிட்டேம்னு பிரிஞ்சே போயிடனும். பார்க்க கூடாது. கஷ்டம்தான், ஆனால் உன்னோட சந்தோஷம்தான் எனக்கு வேணும்’

என் பதிலை எதிர்பார்க்காமல் அவள் கேட் கதவைத் திறந்துகொண்டு விலகி நடந்தாள்.

அப்புறம் நான் அவளைப் பார்க்கவில்லை.

சில ஆண்டுகள் கழித்து, அக்காவைப் பார்க்க ஊருக்கு சென்ற போது அக்கா சொன்னார், ‘ஒனக்குத் தெரியுமா.. நித்யா செத்துட்டா?’

இந்த வயதிலா? கல் போல நான் சுற்றித் திரிய அந்த… இல்லை… என்… ம். இல்லை.. நித்யா ஏன் செத்துப்போனாள்?

உள்ளுக்குள் இடி விழுந்தைதைக் காட்டாமல், ‘ஏன்?’ என்றேன். என்னால் என் அறிவார்ந்த ஆண் என்ற திமிறை விட்டுக்கொடுக்க முடியவில்லை.

‘தெரியில. செத்துட்டா’ என்று அக்கா என் முகத்தைப் பார்த்தார். ‘நீ அவ வீட்டுக்குப் போனா தெரிஞ்சிடும்’

நான் அவள் வீட்டுக்குப் போகவில்லை. எப்படி போவேன்? அவள் கைரேகையை நான் பார்த்த வீட்டுக்கு? மரியாவின் காதலை அவள் உறுதி செய்த வீட்டுக்கு? ‘ஏன் கேட்கிறேன்னு சொன்னேன் தெரியுமா?’ என்று அவள் கேட்ட வீட்டுக்கு..?

‘சரி.. நந்தா என்ன ஆனான்?’ என்று பேச்சை மாற்றினேன். என் முகத்தை மறைத்துக்கொண்டேன். அக்காவுக்கு நான் தப்பிக்கிறேன் என்று தெரிந்ததால் விட்டுவிட்டார். அக்கா… என்னை.. எங்களை அறிந்த அக்கா…

நான் எங்கள் ஊரைவிட்டு விலகி நடந்தேன். உண்மையிலேதான். பேருந்து பயணமில்லை, நடந்தே நண்டலாற்றைக் கடந்து பொரையாற்றில் பஸ் பிடித்தேன். நடையாக நடத்து யோசித்தேன். அசைபோட்டேன்.. யோசித்தேன்.

என்ன யோசித்தேன் என்று உங்களுக்கு சொல்வது சாத்தியமில்லை. எனக்குத் தெளிவிருந்தால்தானே உங்களிடம் சொல்ல முடியும்?

ஆனால், எனக்கு ஒன்று புரிந்தது. ஆணும் பெண்ணும்… ஆணும் பெண்ணுமாக உறவு கொள்வது சாத்தியமில்லை.

அதற்குக் காரணம் என்னவென்று இன்று வரை எனக்குப் புரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *