காட்சிப் பிழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 15,505 
 
 

ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தரி மறுபடியும் கண்ணாடியை எடுத்து தன்னைப் பார்த்துக் கொண்டாள்!

“கண்ணாடியே ! கண்ணாடியே ! உலகத்திலேயே யார் மிகவும் அழகு ?? “என்ற ராணியின் கேள்விக்கு

‘ஸ்னோ ஒயிட் ‘என்ற பதிலைத் தான் அது சொல்லுமாம்!!

புகழ் பெற்ற ,சிறுவர்களுக்கான மாயாஜால கதை…

சுந்தரிக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவளும் கண்ணாடியைப் பார்த்து இதே கேள்வியை எத்தனை முறை கேட்டிருப்பாள்? எப்போதும் அது சொல்லும் பதில்..

“சுந்தரி ! சுந்தரி !”

ஆனால் நடுவில் அந்தக் கண்ணாடி பதிலே சொல்லவில்லை ! சுந்தரியும் கேட்பதை நிறுத்தி விட்டாள்!

கண்ணாடியின் இந்த மௌனத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

இதோ இரண்டு வருஷத்துக்கப்புறம் இந்த கேள்வியை மறுபடியும் கேட்கிறாள்!..

சுந்தரி இன்றைக்கு ரொம்பவே சந்தோஷமாயிருக்கிறாள்! ‌

அதற்கு ஒரு காரணம்இருக்கிறது !பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு குழந்தைகள் தின கொண்டாட்டம்…

குழந்தைகளெல்லாம் அவள் கையைப் பிடித்துக் கொண்டு

“சுந்தரி மிஸ் ! நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க ! “என்று சொன்னதும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டாள் !

“எதனால் இப்படி சொல்றீங்க??”

“ஆமா ! நீங்க ரொம்ப அழகு! உங்க குரல் அழகு! இதோ உங்கள் விரலெல்லாம் நீளமாய் எத்தனை அழகு! நீளப்பின்னல்! சுந்தரி மிஸ்! உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு !!!”

அவளின் மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது!!!…..

கண்ணாடியும் ‘சுந்தரி நீதான் அழகு ‘என்று திட்டவட்டமாக கூறிவிட்டது ! சுந்தரிக்கும் அது பொய் சொல்வதாய் தோன்றவில்லை!

பின் நடுவில் இரண்டு வருஷங்கள் என்ன ஆச்சு? அதன் மௌனத்தால் அவள் மனம் சுக்கல் சுக்கலாய் நொறுங்கி போனது அதற்கு புரியாதா??

காரணம் தெரிந்து கொள்ள இருபது வருஷங்கள் பின்னால் போகத் தயாரா??

சந்திரனும் சுசீலாவும் பதினைந்து வருஷம் தவமாய் தவமிருந்து பிறந்த தங்கச்சிலைதான் சுந்தரி!

பிறந்ததுமே எல்லோரும் ஒட்டுமொத்தமாக அவளைப் பார்த்து சொன்ன வார்த்தை

“குழந்தைக்கு திருஷ்டி சுற்றிப் போடு!!!!!”

சுந்தரி என்ற பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் பொருத்தமாய் தோன்றவில்லை!

அழகுடன் புத்திக்கூர்மையும் சேர்ந்துவிட்டதால் சுந்தரிக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது!

பள்ளியில் சுந்தரி ஆசிரியர்களின் செல்ல மாணவி…வாங்கிய கோப்பைகள் அதற்கு சாட்சியாக பள்ளியிலும் வீட்டிலும்!!

அவள் சும்மாயிருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் விடமாட்டார்களே! தான் மற்றவர்களைவிட வித்தியாசமாய் உணர ஆரம்பித்தாள்!

சந்திரனும் சுசீலாவும் பள்ளி ஆசிரியர்கள்! சுந்தரி மனதில் அநாவசிய கற்பனைகளை வளர விடாமல் நல்ல பழக்க வழக்கத்துடன்தான் வளர்த்தார்கள்!

சுந்தரியை யாருக்கும் பிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை!

அதென்னவோ சுந்தரிக்கு ஒரு பழக்கம்! வீட்டில் யார் இல்லாத போது முகம் பார்க்கும் கண்ணாடிதான் அவளுக்கு உற்ற தோழி !

அதனுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருப்பாள்! சுந்தரியை கண்ணாடிக்கும் ரொம்பவே பிடித்துப் போனது! இரண்டு பேருக்கும் உள்ள ரகசிய நட்பு!!

பள்ளியில் முதல் மாணவியாக தேறி தனக்குப் பிடித்த கலைக் கல்லூரியில் நுண்கலைப் பிரிவில் சேர்ந்து விட்டாள்!

சீக்கிரமே‌ கல்லூரியின் கலை நிகழ்ச்சியின் செக்ரட்டரியாக தேர்ந்தெடுக்கப்பட்டாள்!

ஒரு முறை அனைத்து கல்லூரிகளுக்கிடையேயான போட்டியின் போதுதான் பார்த்திபன் அறிமுகமானான்!

அவனுடைய கல்லூரியைப் பொறுத்தவரை அவன் ஒரு சூப்பர் ஸ்டார்… ஆள் பார்ப்பதற்கு கட்டை குட்டையாக , கறுத்த நிறம்….

அவனைப்போல பாடவும் , கிடார் வாசிக்கவும் இனிமேல் ஒருத்தன் பிறந்துதான் வரவேண்டும்!

அவனுடைய கல்லூரி பங்கேற்றால் கோப்பையெல்லாம் அவர்களுக்குத்தான் நிச்சயம்!

முதலில் அவனை அவ்வளவாக சுந்தரி பொருட்படுத்தவில்லை!

அந்த வருஷம் கோப்பையை அவர்கள் கல்லூரி தட்டிச் சென்றதும் தான் நினைத்தது போல அவன் ஒன்றும் சாதாரணமானவன் இல்லை என்று புரிந்தது!

அவளைவிட அவள் கூட இருந்தவர்களுக்குத்தான் ரோஷம் அதிகமாக வந்தது!

“என்னடி சுந்தரி! இப்படி விட்டுக் கொடுத்து விட்டியே? ”

“இதுவே முதலும் கடைசியுமாய் இருக்கட்டும்…! அடுத்த போட்டில நாம ஜெயிச்சாகணும்!! “

சுந்தரியும் பார்த்திபனும் இயல்பாகவே எடுத்துக் கொண்டார்கள்!

“கங்ராஜூலேஷன்ஸ்…!!

வெல் டன்…… பார்த்திபன்!!’

“தாங்யூ சுந்தரி …. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் !!!!!! ”

இப்படி சொல்லிக் கொண்டு தான் பிரிந்தார்கள்!!

எல்லா கல்லூரிகளும் பங்கேற்கும் fundraising progmme கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது!

இந்தமுறை போட்டியென்று இல்லாததால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க முடிந்தது!

பார்த்திபனின் ஒரு அருமையான கலை நிகழ்ச்சி…

எல்லொருடைய கரகோஷத்தையும் பெற்றது!

சுந்தரியின் மேலை நாட்டு நடனம் . முதல் தரம் !!!!!

நிகழ்ச்சி முடிந்ததும் பார்த்திபன் சுந்தரியிடம் வந்தான்!

“இது மாதிரி ஒரு நடனத்தை நான் பார்த்ததேயில்லை!

Fantastic ! “என்று சொன்னவன் சற்று நிறுத்தி,

“நீங்க இன்னைக்கு மிகவும் அழகாகத் தெரியுறீங்க…..!!!என்று அவள் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே கூறினான்!

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சுந்தரிக்கு வெட்கத்தால் முகம் சிவந்து விட்டது!

அவள் ஏதோ சொல்ல வரும் முன்னால் , கூட இருந்த லதா ,

“இதெல்லாம் சுந்தரிகிட்ட வேலைக்கு ஆகாது!

ரொம்பத்தான் கனவு காணாதீங்க…..!!!!!”

என்று முகத்தில் அறைந்த மாதிரி சொல்லி விட்டு அவளை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்! பார்த்திபன் முகம் சிறுத்து விட்டது!

“என்ன லதா ! இப்படி ஏன் சொன்ன? “

“பின்ன என்னடி ! பெரிய மன்மதன் மாதிரி லைன் போடறானா? “

இவங்களுக்கெல்லாம் உடனே பதிலடி குடுக்கலைனா அடுத்து

“ஐ லவ் யூ …”ன்னு ஆரம்பிப்பாங்க! இவனுக்கு என்ன தகுதி இருக்குன்னு யோசிக்க மாட்டானா ? “

படபடவென அவள் பேசியதை பின்னாலிருந்த அவன் நண்பர்கள் கேட்டு விட்டார்கள் !

“ஏய் ! யாரைப்பாத்து இந்த வார்த்தை பேசற ? பார்த்திபனின் ஒரு கால் தூசிக்குக் கூட உங்க தோழி சமமாக மாட்டாங்க! அவன்கிட்ட மன்னிப்பு கேளு!”

“விக்கி..ப்ளீஸ் நிறுத்து.. போதும்…”

என்று பார்த்திபன் அவனைத் தடுத்ததால் அங்கு ஒரு பெரிய சண்டை வராமல் போனது!

அன்றைக்கு பார்த்திபனும் நண்பர்களும் தூங்கவேயில்லை!

ஏண்டா பார்த்தி! நீ இவ்வளவு கோழையா? எப்படி உன்னால் வாய மூடிட்டு இருக்க முடிஞ்சது?”

“விக்கி! சுந்தரி மேல் என்னடா தப்பு?”

“என்ன தப்பா?? எல்லாத்தையும் வாய் மூடிட்டு கேட்டுகிட்டுத்தானே இருந்தா? அவளும் திமிர் பிடிச்சவதான் !!”

சுந்தரிக்கு இருக்கிற சப்போர்ட் மாதிரி பார்த்திபனுக்காக உயிரையும் விட தயாராய் இருக்கும் நண்பர்களால் இந்த சம்பவத்தை மறக்கவே முடியவில்லை!

அடுத்த கலை விழா….!!!

அநேகமாய் இதுவே கடைசி ! இந்த முறை சூழ்நிலையே வித்தியாசமாய் இருந்தது!

எல்லோருடைய முகத்திலும் ஏதோ ஒரு சோகம் ! வெறுப்பு!

சுந்தரி மேடையில் ஏறும்போதெல்லாம் பார்த்திபனின் நண்பர்கள் ஏகமாய் ரகளை செய்தார்கள்! விசில் சத்தமும் கூட சேர்ந்தது !

பார்த்திபன் எவ்வளவோ முயன்றும் அவர்கள் நிறுத்துவதாய் இல்லை ! பார்த்திபனால் சரியாக வாசிக்க முடியவில்லை! மிகுந்த ஏமாற்றம்….!!!

கடைசியில் கோப்பை இன்னொரு கல்லூரிக்கு ! ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம் !!

நிகழ்ச்சி முடிந்ததும் சுந்தரி நேராய் பார்த்திபனிடம் வந்தாள் !

“நீ இவ்வளவு சீப் என்று நான் நினைக்கவேயில்லை!”

ஒரு நிமிஷம் நிற்காமல் போய் விட்டாள்!!

“விக்கி ! நீ பண்ணினது கொஞ்சம் ஓவர்…! சுந்தரிக்கு நீங்க குடுத்த தண்டனை நியாயமான்னு யோசிச்சு பாருங்க! ”

“சாரிடா….. ‌உன்னைமாதிரி பெருந்தன்மையெல்லாம் எங்களுக்கில்லை! இன்னும் எனக்கு ஆத்திரம் அடங்கலடா!

உன்னப்பாத்து ‘சீப் ‘ன்னு வேற சொல்லிட்டுப் போறா! அழகின்னு அகம்பாவம்! நான் அவளுக்கு ஒரு பாடம் கற்பிக்கத்தான் போறேன்….!

விக்கியின் சபதத்தை அன்றைக்கு விளையாட்டாய் விட்டுவிட்டதின் விளைவு சுந்தரியின் வாழ்க்கையையே புரட்டிப்போடுமென்று யார்தான் நினைத்தார்கள்!

அடுத்த ஒரு வாரத்தில் நினைக்க முடியாததெல்லாம் நடந்து முடிந்து விட்டது!

Third degree burns ….சுந்தரி தீவிர சிகிச்சை பிரிவில் ! Acid attack!

ஒரு பக்கம் முழுதும் வெந்து குதறியிருந்து! வலி கூட ‌ தெரியாதபடி நரம்புகளெல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில் தன் நினைவிழந்து படுத்திருந்தாள்!

சந்திரனும் சுசீலாவும் செய்த பாக்கியமோ என்னவோ , சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டதால் கண்கள் தப்பின!

கன்னத்திலிருந்து இடுப்பு வரை அமிலம் தீயாய் பற்றி எரிந்தது!

ஆள் யாரென்று ஊகித்திருப்பீர்களே! ஆள் ! விக்கியேதான்! உடனே பிடிபட்டு விட்டான்!

கிட்டாரை மீட்டிய விரல்கள் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றன!

கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!

முகம் என்பதால் ரொம்பவும் நுணுக்கமான சிகிச்சை தேவைப்பட்டது!

நினைவு தெரிந்தபின் சுந்தரி யாரையும் பார்க்கப்பிரியப் படவில்லை! அம்மா, அப்பா , நர்ஸ் ஜாஸ்மின் தவிர கிட்டத்தில் யாரையும் விட மறுத்து விட்டாள்!

பாதி நாள் ராத்திரி பயங்கர கனவு கண்டு அலறினாள்! தனக்கு என்ன நேர்ந்தது என்று ஒருவாறு புரிந்ததும் கொஞ்ச நாள் பேசவேயில்லை ! டாக்டர் லஷ்மி அவளுடன் நிறைய பேசினாள்!

ஒரு நாள் பிடிவாதமாய் கண்ணாடி கொண்டுவரச் சொன்னாள் !

பார்த்துவிட்டு அப்படியே மயக்கமானாள்! அப்புறம் பேச்சேயில்லை !

சுந்தரி வீட்டுக்கு வந்துவிட்டாள்! நேராக தன் அறைக்குள் நுழைந்து தன் கண்ணாடியைப் தேடினாள்!

சுசீலா மறைத்து வைத்தது தெரிந்ததும் ஆத்திரம் வந்து கத்தினாள்.

“அம்மா ! என் கண்ணாடி எங்க! தயவுசெய்து கொண்டு வா ! அது நிச்சயம் பொய் சொல்லாது! “

கண்ணாடி பாவம்! என்ன சொல்லும்? தூக்கி வீசி எறிந்தாள்! சுக்கு நூறாய் நொறுங்கியது , அவள் இதயத்தைப்போல!!!

சுந்தரி அறையை விட்டு வெளியே வரவேயில்லை! ஒருத்தரையும் பார்க்க தைரியமில்லை !

இதற்கிடையில் ஒரு தற்கொலை முயற்சி!

உமாவை வரச்சொல்லி சுசீலா தான் போன் செய்தாள்!

உமா எதையுமே உணர்வுபூர்வமாய் அணுகும் திறமைசாலி! சுந்தரியின் நெருங்கிய தோழி!

பொறுமையுடன் சுந்தரியின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தாள்!

அவளின் கோபம் , ஆத்திரம் , இயலாமை, கழிவிரக்கம் , தாழ்வுணர்ச்சி, மன அழுத்தம் எல்லாவற்றிற்கும் ஒரு வடிகாலானாள்!

சுந்தரி மாறி விட்டாள்! எல்லா விதத்திலும்! அன்று திங்கட்கிழமை! தன்னுடன் கூப்பிடும் இடத்திற்கு வரவேண்டும் என்று உமா ஏற்கனவே சொல்லியிருந்தாள்!

இரண்டு வருஷம் கழித்து முதல் முறையாக வெளியே காலடி எடுத்து வைக்கப் போகிறாள்!

முகமெல்லாம் வேர்த்துக் கொட்டியது! கால்கள் தரையில் நிற்க முடியாமல் நடுங்கியது!

“ப்ளீஸ் உமா! என்னை விட்டுடு !”

ஆயிரம் பேருக்கு முன்னால் நடனமாடிய கால்கள் ஒரு அடி எடுத்து வைக்க முடியாமல் தவித்தது! “

“இல்லை…உன்னால் முடியும்….!!!நம்பு…!!!!

உமா அவளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்!

“கமான்…!!!நாம் போக வேண்டிய இடம் வந்தாச்சு!”

“ஜோதி வனம் “என்ற பெரிய பலகையைத் தாங்கி நின்றது அந்த கட்டடம்! உள்ளே நுழையும் போதே மலர்களின் மணம் மூக்கைத் துளைத்தது!

நேராக ஆஃபீஸ் ரூமில் நுழைந்தனர்!

“ஹலோ. உமா… குட் மார்னிங்…!!!

அங்கிருந்த கன்னிகா ஸ்தீரி அவளை இரண்டு கைகளையும் நீட்டி வரவேற்றார்!

“சிஸ்டர்…!!!இவள்தான் சுந்தரி! இங்கு தன்னார்வத் தொண்டரா சேர விரும்புகிறாள்!”

சுந்தரி பதில் பேசுவதற்குள் சிஸ்டர் சுந்தரியை அப்படியே அணைத்துக் கொண்டாள்!

“So kind of you dear! குழந்தைகளுக்கு நல்ல நடன ஆசிரியரைத் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தோம்!

பார்வையற்ற குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பதற்கு தனித் திறமையும் பொறுமையும் அவசியம்! அவர்கள் உண்மையிலேயே பாக்கியவான்கள்……!!!!

God bless you my child!”

சுந்தரிக்கு இப்போதுதான் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது!

“வாருங்கள்… குழந்தைகளைப் பார்க்கலாமா?”

மூன்று வயது முதல் பதினைந்து வயதிலான வண்ணப் பூக்கள்! ஒரே குரலில்

“குட் மார்னிங் சிஸ்டர்…..!!!!!!

வணக்கம் மிஸ்..!!!!! “என்று வரவேற்ற போது புல்லரித்தது!

“Good morning my children!

இவங்க மிஸ். சுந்தரி! உங்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்கப் போறாங்க! “

சுந்தரி ஜோதி வனத்தில் சேர்ந்து இன்றைக்கு மூன்று மாசமாகிவிட்டது !

மனம் அமைதியாகி தெளிந்த நீரோடை யாய் மாறிவிட்டதை உணர்ந்துதான் இருக்கிறாள்! வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் கிடைத்தது போல் ஒரு தோணல்!

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி ! அழைப்பு மணி ஒலித்தது….!!!!

சந்திரனும் சுசீலாவும் நங்கநல்லூர் அனுமான் கோவிலுக்கு போயிருந்தார்கள்!

கதவைத் திறந்தாள் சுந்தரி!

பார்த்திபனை சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை!

சுந்தரியைப் பார்த்த அந்த வினாடியில் அவன் அடிவயிற்றில் தீ மூண்டது!

ஒரு கணம் தான்! இருவரும் தத்தம் நிலைக்கு திரும்பினார்கள்!

எந்த ஒரு உபசார வார்த்தையும் அவளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும் என்று பார்த்திபனுக்கு நன்றாகவே தெரியுமென்பதால்

“ஹலோ சுந்தரி….உன்னை தொந்தரவு செய்து விட்டேனா??”

என்று தயங்கி நின்றான்!

“Not at all ! “Please come inside! “

ஒரிரு நிமிடங்கள் மௌனம் தான் பேசியது!

“உன்னைப் பார்க்க இரண்டு முறை ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தேன்!

நீ யாரையும் பார்க்கும் மனநிலையில் இல்லை என்று புரிந்தபின் காத்திருக்க முடிவு செய்தேன்! “

இருவரும் பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தனர்! பார்த்திபன் இப்போது பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுகலை பட்டப்படிப்பு மாணவன்! சொந்தமாய் ஒரு சங்கீத ட்ரூப் வைத்திருக்கிறான் !

இருவருமே மிக இயல்பாக பேசிக்கொண்டிருக்க முடிந்தது!

இப்போதும் அவள் மேலிருந்து அன்பு செத்து விடவில்லை என்பதை அவன் கண்கள் காட்டியது!

“சுந்தரி ! நீ என்னைத் தவறாக நினைக்க மாட்டாயென்றால் ஒன்று கேட்கலாமா?”

“ம்”

“உன்னிடம் எப்போதோ கேட்டிருக்க வேண்டிய கேள்வி! நடுவில் நடந்த சம்பவங்களால் நான் கேட்க இருந்த கேள்வி மாறிவிடவில்லை!

உன்னை நான் மனதார விரும்புகிறேன்! என் காதலை ஏற்றுக் கொள்வாயா?”

சுந்தரி இந்தக் கேள்வியை எதிர்பார்த்தவள் தான் ! ஆனால் இப்போதல்ல! இரண்டு வருஷம் முன்னால்!

கண்களில் நீர் திரையிட்டது!
பார்த்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்!

“பார்த்தி ! இந்தக் கேள்வியை கேட்பதற்கு இவ்வளவு தயங்கியிருக்கத் தேவையில்லை!

பரிதாப அடிப்படையில் இதை கேட்கவில்லை என்றும் எனக்கு நல்லாவே தெரியும்!

நானும் இதைப்பற்றி நிறையவே யோசித்ததுண்டு! நானும் உன்னை மறக்க முடியாத நிலையில் தான் இருக்கிறேன்!

நாம் வாழ்க்கையில் ஒன்று சேர்வதைப்போல மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?

ஆனால் பார்த்தி ! இரண்டாவது முறையாக மீண்டும் நாம் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?

“நீ சொல்ல வருவது ……”

“ஆமாம் பார்த்தி! நாம் இரண்டு பேருமே செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

நம்மைச் சுற்றி உள்ளவர்கள் அளித்த தண்டனை! நீயும் நானும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தால் யோசித்துப் பார்! “

“நீ ஏதோ பெரிய தியாகம் செய்து விட்டது போல உன்னைச் சுற்றி இருப்பவர்கள் பேசுவார்கள்!

‘பார்த்திபனுக்கு எவ்வளவு பெரிய மனசு ! இப்படியொரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேறு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்!!!!’

‘சுந்தரி! உன் தகுதி தெரியாமல் பார்த்திபன் ஆசைப்பட்டு விட்டான்! இப்போ இது அவனுக்கு ஒரு பிராயச்சித்தம் !

என்னமோ உனக்குப் புதிய தகுதி வந்து விட்டது மாதிரி என்னைச் சூழ்ந்தவர்களும் பேசி நம் காதலை கொச்சைப்படுத்தக்கூடும்!

மீண்டும் தவறு செய்யாமலே தண்டனை அனுபவிக்க வேண்டுமா? நாம் இப்படியே நல்ல நண்பர்களாயிருக்கலாமே!

“நான் பேசினது உன் மனதைப் புண்படுத்தி விட்டதா?”

“No ! Never! நீ சொன்னது அத்தனையும் உண்மை! உண்மை சில சமயம் கசக்கத்தானே செய்யும்!

“பார்த்தி! என்னுடன் ஒரு இடத்துக்குக் கூப்பிட்டால் வருவாயா?”

அன்று குழந்தைகள் தினம் ! பார்த்திபனும் சுந்தரியும் குழந்தைகளாய் மாறிப் போனார்கள்!

ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தரி மறுபடியும் கண்ணாடியை எடுத்து தன்னைப் பார்த்துக் கொண்டாள்! இது வேறு கண்ணாடி! பார்வையற்ற குழந்தைகளைப் போல , பார்த்திபனைப்போல உள்ளத்தைப் பார்க்கும் கண்ணாடி!!!!!?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *