கற்றது காதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 13,989 
 
 

”ஹலாவ் ரூம்மேட்… குட்மார்னிங்! மார்கழிப் பஜனைக்குப் போறேன். பூணூல் போட்டுக்கணுமா… மூணு விபூதிக் கோடு மட்டும் போதுமா? பக்கா கெட்டப்ல என்னைப் பார்த்ததும் ‘இவன் நம்ம ஆளு’ன்னு அவா எல்லாம் ஈஷிக்கணும். ‘இது நம்ம ஆளு’ பாக்யராஜ் மாதிரி டீல் பண்ணிரக் கூடாது. உங்களுக்குத் தெரியலைன்னா, யார்கிட்டயாவது கேட்டுச் சொல்றீங்களா?”

‘யார்கிட்டயாவது’ திலக் கேட்டுச் சொல்லச் சொன்னது அக்குளுக்கு உள்ளும் குளிரும் அதி காலை மூன்றரை மணிக்கு!

பளீர் வெள்ளை வேட்டியில் அத்தனை அதிகாலைக்கு அதி உற்சாகமாக இருந்தான்.

”இல்லை திலக். நான் மூணு மாசம் முழுகாம இருக்கேன். ஒரே தலை சுத்தல், வாந்தி. இந்தச் சமயத்துல காலைல மூன்றரை மணிக்கு யாருக்கும் கால் போடாதீங்க, யார் மேலயும் கால் போடாதீங்கன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!” – என் பதில் எந்தவிதத்திலும் அவனைச் சலனப்படுத்தவில்லை. ”உடம்பைப் பாத்துக்கங்க ரூம்மேட். கொஞ்ச நாளைக்கு டாஸ்மாக்ல சரக்கு அடிக்காதீங்க. மை பார் மட்டும் போங்க. புள்ளதாச்சிப் பையன் பாத்துப் பயம் பத்திரமா நடந்துக்கணும்!”- அலட்டிக்கொள்ளாமல் அட்வைஸ்களைத் தூவிவிட்டு, லைட்டைக்கூட ஆஃப் செய்யாமல் வெளியேறினான். எழுந்திருக்க சோம்பல்பட்டு போர்வையை முகம் மறைக்க இழுத்துப் போர்த்திக்கொண்டேன். கமாவுக்குப் பிறகு தூக்கம் தொடரத் தயங்கியது. திலக் என் வாழ்க்கை எனும் ஓடத்தில் ஏறிய நாள், போர்வையை ஊடுருவிய வெளிச்சம் தாண்டி நிழலாடியது.

சற்றேறக் குறைய ஒரு வருடத்துக்கு முன் ஒரு சோம்பலான சனிக் கிழமை நான் வீடு திரும்பியபோது, கதவு திறந்திருந்தது. சென்னையின் திருவல்லிக்கேணி மேன்ஷன்களிடையே அநாதை அந்நியனாகத் தனித்து நிற்கும் அபார்ட்மென்ட்டின் ஒரு தீப்பெட்டியில் ஒரே குச்சியாக நான் இருந்தேன். அந்த அபார்ட்மென்ட்டின் ஓனருடைய ஃபிளாட் அது. பத்து வருடங்களுக்கு முன் ஓட்டகம் கழுவிச் சேர்த்த காசில் இங்கு அடுக்கு மாடிகள் கட்டிவிட்டு, மீண்டும் அள்ளிப்போட, லூஃப்தன்ஸாவில் பறந்துவிட்டார். 743 கிலோ மீட்டருக்குக் குறையாத தூரத்துச் சொந்தங்களின் சிபாரிசு காரணமாக ஏகப்பட்ட கண்டிஷன்களுடன் அங்கு என் ஆயுளைத் தேய்க்க அனுமதிக்கப்பட்டேன். இப்போது என் அனுமதி இல்லாமல் என் சமஸ்தானத்தினுள் ஒரு சாமான்யன்!

”வாங்க நண்பா… வழக்கமாக நீங்க எட்டு மணிக்கெல்லாம் வந்துருவீங்கன்னு வாட்ச்மேன் சொன்னார். ஆனா, அதுவரை எனக்குப் பொறுமை இல்லை. (அப்போது மணி ஏழுதான்!) அதான் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் சீனு மாமாகிட்ட சாவி வாங்கித் தொறந்துட்டேன். இந்த ஹவுஸ் ஓனர் உங்க மேல நம்பிக்கை இல்லாம அப்பப்ப ரூமை செக் செய்ய சீனு மாமாகிட்ட இன்னொரு சாவி கொடுத்து வெச்சிருக்கார். நீங்க ஊருக்குப் போனா வேற பூட்டு போட்டுட்டுப் போங்க. சீனு மாமா கண்ணு அத்தனை நல்லது சொல்ல மாட்டேங்குது. பை தி பை, பையைக் கீழே வெச்சுட்டு உக்காருங்க. நான் திலக். இனிமே என்கூடத்தான் நீங்க தங்கப்போறீங்க. வெல்கம் தோழர். இனி, நாமதான் இந்த சென்னையை ஆளப் போறோம்!”- படபடவெனப் பேசிக்கொண்டே போனான்.

அனுமதியில்லாத அத்துமீறல், சீனுவிடம் டூப்ளிகேட் சாவி, சீனு நல்லவன் இல்லை. சென்னையை ஆளும் பொறுப்பு(!) என்று நாலு அதிர்ச்சிகள் எனக்குப் புதுசு. 5’7 அடி உயரத்துக்கு நல்ல சிவப்பு, சின்னதாகச் சிரித்துக்கொண்டே இருக்கும் கண்கள், நீளமான காது, நிகோடின் பார்க்காத ரோஸ் உதடுகள், நின்றால் கால் முட்டியைத் தொட்டுவிடும் நீளத்தில் கைகள்.இத்தனையையும் தாண்டி சொல்ல முடியாத ஏதோ ஒரு விசேஷம் அவனிடம் ஒளிந்துகொண்டு இருந்தது. அவனிடம் எப்படி ரியாக்ட் செய்வது என்று நான் யோசிக்கும் முன், ”பனங்கல்கண்டுப் பால்சாப் பிடலாம் வர்றீங்களா?” என்று கேட்டான். நான் தயங்க, ”சரி, நான் பால் குடிச்சுட்டுஉங்களுக்கு கற்பூர வாழை வாங்கிட்டு வரேன் ரூம்மேட்!” என்றபடி படி இறங்கிப் போனான். கதவைத் தட்டி அவன் இரண்டு கற்பூர வாழைகளை நீட்டியபோது மணி நள்ளிரவு பன்னிரண்டு!

மதுரை அருகே ஏதோ ஒரு இனிஷியல் கொண்ட கோவில்பட்டிக்காரன் திலக். (வீட்டில் வைத்த பெயர் தீனதயாளன்!) பி.ஏ இங்கிலீஷ் மதுரையில் முடித்துவிட்டு, லோக்கல் கேபிள் சேனலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவன், இங்கு உப்புமா சேட்டிலைட் சேனல் ஒன்றில் வேலை கிடைத்து, வந்து சேர்ந்திருக்கிறான். அவனைப்பற்றியே பக்கம் பக்கமாகப் பேசலாம் என்றாலும், அவன் காதல்கள் பற்றி மட்டுமே இங்கு…

‘கற்றோருக்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு!’ என்பது போல, திலக் செல்லும் இடமெல்லாம் காதல் விதைத்து வருவான். ‘பிக்கப், டிராப், எஸ்கேப்’ வகையறா இல்லாமல், உண்மையிலேயே உணர்வுபூர்வமான காதல்.

அறைக்கு வந்த நாலாவது நாளே, கிரவுண்ட் ஃப்ளோர் கல்யாண சுந்தரத்தின் கல்லூரி செல்லும் மகள் புவனா புராணம் படித்தான். ”புவனா ப்ரில்லியன்ட். கால்குலேட்டர் ஸ்க்ரீன்ல ஒண்ணுக்கும் ஏழுக் கும் வித்தியாசம் தெரியாத கல்யாணசுந்தரத்துக்கு இத்தனை இன்டெலிஜென்ட்டா ஒரு பொண்ணு. மூர்க்கமானபொண்ணு, தீர்க்கமான கண்ணு. ஆவணி அவிட்டம், கேட்டை நட்சத் திரமாம். சஷ்டிக்கு வடபழனி கூட்டிட்டுப் போய் அர்ச்சனை பண்ணலாம்னு சொல்லி இருக்கேன்” என்று அவன் சிலாகித் துக்கொண்டு இருந்தபோதே கொரியர் பையன் வந்தான்.

”இங்கே ஆனந்த் யாரு. கொரியர் வந்திருக்கு!”

”ஆனந்த்னுலாம் யாரும் இங்கே கிடையாது. திலக்னு வந்தா மட்டும் கொடு” என்றான். நான் அந்தக் கொரியருக்காகத்தான் காலையிலிருந்து காத்திருந்தேன். உடல், பொருள், ஆவி அலறப் பதறித் துடித்துக் கொரியர் பையனைத் தடுத்து என் கொரியரைக் கொய்தேன்.

”ஃப்ரெண்ட் உங்க பேர் ஆனந்தா? சொல்லவே இல்ல!”

சும்மா கணக்குக்கு 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் டப்பா சேனலில் வேலை என்பதால், அலுத்துச் சலித்துக் கொள்ளும் அளவுக்கு வேலைப் பளு கிடையாது திலக்குக்கு. நியூஸ் பைட்டுகளின் எடிட்டிங், மிக்ஸிங் வகையறா வேலைகளுக்குத்தான் அவன் சென்னைக்கு வந்தது. ஆனால், கூச்சம் பார்க்காத அவன் கலகலப்பு காரணமாக, இரண்டே மாதங்களில் நியூஸ் ரிப்போர்ட்டருடன் கேமராவோடு அவனை அனுப்ப ஆரம்பித்தார்கள். பின்னாட்களில் ரிப்போர்ட்டிங்கும் செய்யத் துவங்கிவிட்டான். பல இடங்கள், பல சந்தர்ப்பங்கள், பல சந்திப்புகள் என ‘ஸ்பீட் பெட்ரோல்’ நிரப்பியது கணக்காக அவனுடைய காதல் ஸ்பீடாமீட்டரும் தறிகெட்டுத் துடிக்கத் தொடங்கியது.

ஏதோ ஒரு கல்லூரி கல்ச்சுரலுக்குச் சென்று வந்தவன் எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் மொபைலைப் பார்த்தபடியே இருந்தான். மிகச் சரியாக எட்டு மணிக்கு ‘மாமா, மெசேஜ் வந்திருக்கு பாரு’ என்று கூவியது அவன் மொபைல். ”ஹுர்ரேய்!” என்றபடி கோல் அடித்த ஃபுட்பால் பிளேயர் கணக்காக டி- ஷர்ட் கழற்றிச் சுழற்றினான். ஆனால், மீண்டும் மொபைலைச் சீண்டவில்லை. நல்ல தூக்கத்தில் இடிச் சிரிப்பு கேட்கவும் முழிப்பு வந்தது எனக்கு. இரவு இரண்டு மணிக்கு மொபைலில் பேசிக்கொண்டு இருந்தான் திலக். ”ஸாரி காயத்ரி. ஆபீஸூக்கு பைட்ஸ் கொடுக்கணும்னு வேகமா வந்துட்டேன். போறபோக்குல எட்டு மணிக்கு மெசேஜ் அனுப்புன்னு சொன்னது சுத்தமா மறந்தேபோச்சு. ஜஸ்ட் நௌ உன் மெசேஜ் பார்த்தேன். வெரி ஸாரி குட்டி. வீடு எங்கே இருக்குன்னு சொன்ன காயூ..?”

மறு நாள் என் அலுவலகம் வந்து நின்றவன், கெஞ்சிக் கூத்தாடி என் பைக்கைக் கவர்ந்து சென்றான். ‘வருவான் வருவான்’ எனக் காத்திருந்து கடுப்பாகி, ஷேர் ஆட்டோ ஏறி வந்தேன். காலையில் எழுந்தபோது பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான். ”காயத்ரி திடீர்னு மாயாஜால் போகணும்னு சொல்லிட்டா. அவ மாயாஜால் பார்த்ததே இல்லையாம். ஒவ்வொண்ணையும் குழந்தை கணக்கா ரசிச்சுச் சிரிச்சுப் பாக்குறா தோஸ்த். அதுக்காகவே சொத்தை எழுதி வைக்கலாம். இந்தக் குட்டி பொம்மை வாங்கிக் கொடுத்தா தோஸ்த். பி.இ., தேர்ட் இயர். ப்ச்ச்… கிளம்புறப்போ, ‘கிளம்புறியா?’ங்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தா தோஸ்த். ‘இதயத்தில் ஈட்டியைச் சொருகியது போல இருந்தது’ன்னு சொல்வாங்களே… அது உண்மைதான் தோஸ்த்!” – அப்போதுதான் கவனித்தேன். நான் ஆசைப்பட்டு வாங்கி அணியத் தயங்கி மடித்து வைத்திருந்த 900 ரூபாய் சிக்ஸ் பேக் கார்கோஸ் பேன்ட் கசங்கிச் சுருங்கி ஹேங்கரில் தொங்கிக்கொண்டு இருந்தது. ஒரு ஸாரி, ஒரு தேங்க்ஸ்… ம்ஹும் எதுவும் இல்லை!

ஒரு வாரம் மிக மிகத் தீவிரமாக காயத்ரி ஜெபம் படித்தான். எங்கே உருகிக் கரைந்து, வழிந்து காணாமல் போய்விடுவானோ என்று தோன்றியது. அஷ்டலட்சுமி கோயில், மெரினா பீச், சரவணபவன், ரங்கநாதன் தெரு, 23 சி, எலெக்ட்ரிக் டிரெயின், ஆர்குட், ஆல்பட் தியேட்டர் கதைகள் கதைத்தான். இந்த இடைவெளியில் அடித்துப் பிடித்து ஒரு செகண்ட் ஹாண்ட் யமஹா வாங்கியிருந்தான். (சைலன்சர் ஆல்டர் செய்து எக்ஸ்ட்ரா பீட் உறுமல்!) ஒரு மாதத்தில் காயத்ரி ஃபீவர் குறைந்தது.

அன்று அதிசயமாக என் மொபைலில் அழைத்து அவசரகதியில் பேசினான்… ”தலைவா தாஸ்தாவேஜ், யான் போத்தீஸ்லாம் எங்கே கிடைக்கும் தலைவா?”

”தஸ்தாவேஜ்னா ஃபைல்தானே… அதுக்கு எதுக்கு போத்தீஸ் போகணும்?”

”உங்களுக்கும் தெரியாதா? ஓ.கே. பை!” பதிலுக்குக் காத்திராமல் கட் செய்துவிட்டான். ஒரு நிமிடம் குழம்பிப் பிறகு மறந்துவிட்டேன்.

வீடு திரும்பினால் புதிதாக ஒரு ஜோடி கட் ஷூ இருந்தது. மெல்லிய சிகரெட் நெடி. நிச்சயமாக திலக் குக்கு சிகரெட் பழக்கமில்லை. புதுப் புத்தக பண்டல் அருகில் சாதுப் பசுவாக அமர்ந்திருந்தான் திலக். பாத்ரூமில் தண்ணீர் சத்தம். ”கெஸ்ட் வந்துருக்காங்க தோழர். என் இருப்பிடச் சூழலை அவதானிக்கணும்னு சொன்னாங்க. அதான் கூட்டிட்டு வந்தேன்.” பாத்ரூம் கதவு திறந்து வந்தவன் ஜீன்ஸ், குர்தா அணிந்திருந்தான். மாநிறத்தில் ஒல்லியாக, கழுத்தில் மெல்லிய செயின் அணிந்து, வெயிட் வெயிட்… அவன் அல்ல… அவள்!

பாய்கட், வெடவெட தேகம், அழுத்தப்பட்ட மார்பு. ”இவங்கதான் சத்யா. பரந்து விரிந்த எண்ணங்கள் பறைசாற்றும் குறும்படங்கள் பண்ணுவாங்க. கலை விழாவுல அறிமுகம். சிற்றிலக்கிய வட்டாரத்துல கனல் சத்யான்னா பளிச்சுனு தெரியும். இவங்களுக்காகத்தான் உங்ககிட்ட தாஸ்தாயெவ்ஸ்கி, ழான் போத்ரியா நூல் கள் பத்திக் கேட்டேன் தோழர். (‘அடங் கொய்யால!’) பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட பெண்மணி!” செயற்கை அலட்டலையும் மீறி, சத்யாவின் முகத்தில் சின்ன வெட்கத்தைக் கவனித்தேன்.

”அதுல பாருங்க தோழர் (இந்தத் தோழர் ‘அனல்’ சத்யாவுக்கு!) ‘ஆதிசமூகம் உற்பத்தி முறையில் மதிப்பின் அமைப்பு விதிகள் சமூக அமைப்பின் கூறுகளைத் தாக்கும்போது, விதிமுறைகளே தீர்மானகரமான பங்கைச் செலுத்துகின்றன’ன்னு ழான் எழுதினதுக்கு இந்தியாவுல ஒரு பய பக்கத்துல வர முடியாது!” என்று படீர் ஆவேசம் காட்டினான். தொடர்ந்து தோழர்கள் தமிழில்தான் பேசிக்கொண்டார் கள். ஆனாலும், எனக்குத்தான் எதுவும் புரியவில்லை. பெரியார் திடல், பிரிட்டிஷ் கவுன்சில், தியேட்டர் நாடகங்கள், வலைப்பதிவர் சந்திப்புகள், உலக சினிமாக்கள், வீதி நாடகங்கள் (இவனுக்கு நாற்காலி கேரக்டராம்!) என்று பரபரப்பானான். ”தோழர் சத்யா என்கூட இத்தனை ஈஸியா பழகுறது மற்ற தோழர்கள் காதுல புகை!”

ஒரு நாள் சத்யாவிடமிருந்து போன் வந்த பிறகு பெருஞ்சோகத்துடன் என்னிடம் 500 ரூபாய் கேட்டான். பர்ஸிலிருந்து எடுத்துக்கொண்டே ‘எதற்கு?’ என்று கேட்டேன். ”ழான் போத்ரியா இறந்துட்டாராம்! தோழர் சத்யா உடைஞ்சுட்டாங்க. துக்கம் அனுஷ்டிக்கணும். அஞ்சலிக் கூட்டத்துக்கு நிதி திரட்டுறோம்!” நான் எடுத்த ஐந்நூறை உள்ளே வைத்துவிட்டேன். அவன் அடம்பிடித்து அழுதபோதும் கொடுக்கவே இல்லை.

சத்யாவுடன் இலக்கில்லாமல் இலக்கியம் பேசித் திரிந்தாலும், காயத்ரியைக் கழட்டி விட்டுவிடவில்லை திலக். அவளிடமும் சின்சியராகக் காதல் வளர்த்து வந்தான். இதோ இப்போதுகூட காயத்ரி வரச் சொன்னாள் என்றுதான் மார்கழிப் பஜனைக்கு பயபக்தியாகச் செல்கிறான். இருவரில் யாருக்குத் துரோகம் செய்கிறான் என்று என்னால் கணிக்க முடியாமல் தூங்கிப்போனேன்.

அன்று திடீரென புது செல்போன், புது சிம்முடன் வந்தான். ”சி.எம் ஃபங்ஷனுக்குப் போயிருந்தப்போ லில்லினு ரேடியோ ஜாக்கி ஒருத்தி பழக்கமானா. எப்பப் பார்த்தாலும் சலசலன்னு பேசிட்டே இருக்கா… அவளுக் காகவே இந்த புது நம்பர். பூஸ்டர் பேக். அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ் ஃப்ரீ!” – விடிய விடிய, எஸ்.எம்.எஸ் அனுப் பிக்கொண்டே இருந்தான். எந்நேரமும் நிமிடத்துக்கு நாலு ‘எஸ்.எம்.எஸ்’ என்று மொபைல் அலறிக்கொண்டே இருந்தது. எதிர்வீட்டு ரேவதி ஆன்ட்டி, ‘தூக்கம் கெடுகிறது’ என்று சொல்ல வும்தான் எஸ்.எம்.எஸ். டோனுக்குச் சின்ன பீப் ஒலி வைத்தான்.

இடையில், ‘நீ முன்ன மாதிரி இல்லே!’ என்றகாயத்ரி யின் கண்ணீர் காரணமாக அவள் செல் நம்பருக்கு ‘ஆட் ஆன்’ செய்து, புது சிம் மட்டும் வாங்கினான். அதற்குப் பிறகு இரவுகளில் அவன் தூங்கி நான் பார்க்கவில்லை. சத்யாவுக்கும் லில்லிக்கும் மெசேஜ்கள், காயத்ரிக்கு மிட்நைட் காலிங். சமயங்களில் என் செல்போனும் இரவுகளில் தற்காலிகத் தாயாக அவன் சிம் சுமந்தது. ஒரு நாள் விடிந்து எழுந்தால் சுற்றிலும் செல்போன்கள் பரவிக்கிடக்க அசந்து தூங்கிக்கொண்டு இருந்தான். லில்லிக்கான செல்போன் எடுத்துப் பார்த் தேன். ’18 மெசேஜ் ரிசீவ்ட்’ என்றது திரை. முதல் மெசேஜ் மட்டும் பார்த்தேன். ‘ஸ்ஸ்ஸ்ஸ்… நோ… அங்கெல்லாம் கூடாது. எனக்குக் கூச்சமா இருக்கும்!’ என்று ஒரு பொம்மை வெட்கப்பட்டது. எனக்குக் குப்பென வியர்த்துவிட்டது.

காபி ஷாப்கள், சத்யம், ஐநாக்ஸ், பீட்ஸா ஹட், சிட்டி சென்டர், பறக்கும் ரயில், ஈ.சி.ஆர். பைக் ரைட், ஃபேஸ்புக் என்று லில்லியுடன் கில்லியாகத் துள்ளி விளையாடினான். அவளுடன் டிஸ்கொதே போவதற்காகவே நாலாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்கினான். இடையில் இங்கிலீஷ் புலமை, நண்பர்கள் பழக்கம் காரணமாகத் தமிழின் முன்னணி செய்தி சேனலில் வேலை கிடைத்தது. ஆங்கிலச் செய்தி சேனலுக்கு அப்ளிகேஷன் அனுப்பியிருப்பதாகவும், நல்ல செய்தி வரும் என்றும் சொன்னான். திலக் சென்னை வந்த ஒரு வருடத்துக்குள் அபார வளர்ச்சி.

பிப்ரவரி 14 அன்று நான் அலுவலகம் கிளம்பும் வரை அவன் எழுந்துகொள்ளவில்லை. ஆச்சர்யமாக சாயங்காலமும் வீட்டில்தான் அமைதியாக டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தான். சுற்றிலும் மொபைல்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுக் கிடந்தன. ஒரு கணம் தாமதித்து எனக்குக் கோபம் வெடித்துவிட்டது. ”ஏன் திலக் இப்படி எல்லாரையும் ஏமாத்துற?” என்று கேட்டேவிட்டேன்.

சலனமில்லாமல் என்னைப் பார்த்தான். ”நான் யாரையும் ஏமாத்தலை பாஸ். நீங்க நினைக்குற மாதிரி ஜாலிக்காக நான் இவங்களைக் காதலிக்கலை. அவங்கதான் என்னை இயக்குறாங்க. அவங்கதான் எனக்கு புதுப்புது உலகத்தை அறிமுகப்படுத்துறாங்க. என்னை உயிர்ப்போடு வெச்சிருக்காங்க. வெவ்வேறு தளங்களில் என்னைச் செயல்பட வைக்குறாங்க.

‘இவங்க எல்லாரையும் காதலிக்கிறியா’ன்னு கேட்டா, மனசார ‘ஆமாம்’னு சொல்வேன். ஆனா, யாரைக் கல்யாணம் பண்ணிக்குவேன்னு எனக்கே தெரியாது. அதுதான் உண்மை. அதுதான் நிதர்சனம். ‘தாஸ்தாயெவ்ஸ்கி புத்தகம் படி’, ‘மார்கழிப் பனியில் மூணு மணிக்கு எந்திரி’, ‘இன்டர்நெட் கத்துக்கோ’, ‘டிஸ்கோ போ’, ‘அமெரிக்கன் இங்கிலீஷ் பேசு’, ‘பீட்ஸா பழகிக்கோ’னு போறபோக்குல சொன்னா கண்டிப்பா என்னால செய்ய முடியாது. டைம்டேபிள் போட்டுக் கத்துக்கவும் முடியாது. ஆனா, பெண்களுடன் பழகும்போது தன்னால அவங்களுக்கு ஈடுகொடுக்க என்னை நானே தகுதிப்படுத்திக்கிறேன். தேடி ஓடுறேன். தாகத்தோட தவிக்கிறேன். அதுதான்… அந்த வேகம், வெறி, வேட்கை எல்லாத்தையும் ‘ஜஸ்ட் லைக் தட்’சாத்தியப்படுத்துறாங்க. எனக்கு இது பிடிச்சிருக்கு. அவங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. நான் எந்தவிதத்திலும் அவங்களை மாசு படுத்தலை. என்கிட்ட அவங்க இன்னும் சேஃபா இருப்பாங்க பாஸ்!”- கண்களில் மட்டும் சிரிப்பு தேக்கி என்னைப்பார்த்தான்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை!

”அப்ப யாரைக் கல்யாணம் பண்ணிக்குவ?” என்று மட்டும் கேட்டேன்.

”முடிஞ்சா எல்லாரையும்!” என்று முகம் முழுக்கச் சிரித்தான்.

– 18-02-09

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *