பட்டணத்தில் பெரிய படிப்பு படித்துக் கொண்டிருந்த ரங்கநாதனின் ஒரே செல்ல மகன் பாண்டியனுக்கு, சொந்த ஊருக்கு வரவே மனசில்ல. ஆனா, காலேசு படிப்பு முடிஞ்சி போச்சு. அவன் அய்யா வேற கடுதாசிக்கு மேல கடுதாசியா போட்டு அவனை வரச் சொல்லிக்கிட்டிருக்காரு.
ஊருன்னு சொன்னாலே பாண்டி மூக்கால அழுவுறதப் பாத்த அவன் சேத்திக்காரகள்லாம், ‘‘ஏண்டா, உங்க ஊரே உனக்குப் பிடிக்கலயா?’’னு கேட்டாங்க. அதுக்கு அவனும், ‘‘ஊருல போயி என்னடா செய்றது? வெங்கம் பறந்த ஊரு. வெறிச்சிட்டுக் கிடக்க மூஞ்சிக. இதுகளப் பாத்துக்கிட்டு நானு அங்க என்னடா செய்றது?’’னு சொன்னாலும், எல்லாரும் சேந்து வம்படியா அவனை ஊருக்கு அனுப்பி வச்சாக.
பாண்டியன் வந்து வாசல்ல நிக்கமின்னமே அவன் அய்யா, ‘‘ஏ… கிளி! ஆரத்திய கரச்சிக் கொண்டா’’னு சொல்ல, மறுநிமிஷமே ஆரத்தி தட்டோட வந்து நின்னா, கிளி. இவன், ‘இதாரு, அய்யா புதுசா கிளின்னு கூப்புடுதாரே’னு நிமிந்துப் பாத்தவன், பாத்தமானைக்கே இருக்கான். கிளி அப்படி அழகா இருக்கா! கறந்த பால் நிறத்தில உருவிவிட்ட மாதிரி தேகம். கண்ணு, மூக்கு, உதடெல்லாம் அச்சில ஊத்தின மாதிரி அப்படி அம்சமா இருக்கு. வயசு பதினெட்டை தாண்டியிருக்காது.
இவனோட ஆத்தா செம்புத்தாயிகிட்ட ஆரத்தி தட்ட கொடுத்துட்டு, கிளி வீட்டுக்குள்ள போக… இவனும் அவ பின்னாலயே மந்திரம் போட்டவன் கணக்கா போறான். பெறவு அவன் ஆத்தாதேன், மகனை புடிச்சி நிப்பாட்டி, ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வச்சா.
உள்ளே போனதும், மகனுக்கு துண்ணூரு பூசி தன் கழுத்தில கிடந்த முத்துமாலய கழட்டி அவன் கழுத்தில போட்டாரு ரங்கசாமி. போட்டுட்டு, ‘‘ஏலேய் பாண்டி! இது நம்ம பரம்பர சொத்து. இதை கழுத்தில போட்டுக்கிட்டா மனுசனுக்குண்டான எல்லா செல்வாக்கும் தன்னப்போல உன்னைத் தேடி வரும்!’’னு சொல்ல, அவன், ‘இப்பவே தேடி வந்துருச்சி!’னு மெல்ல முனங்கினான்.
‘‘என்னடா சொல்றே?’’னு அவன் அய்யா கேக்க, இவன் ‘‘இப்ப உள்ள போன பொண்ணு யாருய்யா? புதுசா இருக்கு?’’னு திருப்பிக் கேட்டான். அவன் அய்யாவும், ‘‘நம்ம தோட்டத்து வேலைக்காரன் காளிமுத்தோட மகதாண்டா இவ. இம்புட்டு நாளும் அவ பாட்டிகிட்ட வளந்திருக்கா. இப்ப காளி கூட்டிட்டு வந்துட்டான். பாவம், தாயில்லாப் பொண்ணு. பேரு கிளி!’’னு சொல்ல, ‘‘ரொம்ப பொருத்தமான பேராத்தான் வச்சிருக்காக!’னு சொல்லிக்கிட்டான் பாண்டியன்.
கிளி, பகல் முழுக்க பாண்டியன் வீட்டுல வேல செஞ்சிட்டு, ராத்திரியில தன்னோட குடிசைக்குப் போயிருவா. தோட்டத்திலதேன் ரங்கசாமி அவுகளுக்கு குடிசை போட்டு கொடுத்துருந்தாரு. இருட்டவும் காளிமுத்து தோட்டக் காவலுக்கு போயிருவான். கிளி தான் வளக்கிற ஆடு, கோழிகனு அவுக துணையோட இருப்பா.
கிளி இரவுல தனியாதான் இருக்காங்கிற விஷயம் பாண்டியனுக்கு தெரிந்ததுமே, அவன் அவ குடிசைக்கு போக ஆரம்பிச்சுட்டான். வந்து, கருப்பட்டிக்கூட தோத்து போகும். அப்படி இனிக்க, இனிக்க பேசுதான். ‘‘கட்டுனா உன்னத்தேன் கட்டுவேன். இல்லேன்னா மருந்து, மாயத்த குடிச்சி செத்துப்போவேன்!’’ அப்படின்னு என்ன, என்னமோ பேசுதான். இவளும், ‘‘நீங்க எல்லாம் பெரிய பணக்காரக. உங்கள கணக்கா பணக்கார பொண்ணத்தேன் கட்டுவீக; என்ன கட்டமாட்டீக. அப்படியே கட்டணுமின்னு நீங்க சொன்னாலும் உங்கய்யா விட மாட்டாரு’’னு சொல்லுதா. அப்பவும் அவன் கேக்கல. அவன் ஆகாயம் மேலேயும், பூமி மேலேயும் சத்தியம் செய்ததோடு, தன் தலையிலயும் அடிச்சி சத்தியம் செஞ்சான். கிளியும் குமரிப்புள்ளயாங்காட்டி இவன் பேச்சிலயும், சத்தியத்திலயும் மயங்கி, அவன்கூட ‘பேசி பழகி’ இருக்க ஆரம்பிச்சிட்டா.
அப்படி இருக்கும்போது, அவன் கழுத்தில போட்டு இருந்த முத்து மாலய அத்து விட்டுட்டா. முத்துகள் மொத்தம் தரையில சிதறிப்போக, ‘‘அய்யய்யோ, என் மால அந்து போச்சே. அய்யா கேட்டா நானு என்ன சொல்லுவேன்?’’னு பதறிட்டான் பாண்டியன்.
‘‘நீங்க பதறாம வீட்டுக்குப் போங்க. உங்க நினைப்புல எனக்கு ராத்திரிக்கு உறக்கம் வராது. நானு இந்த முத்தையெல்லாம் பெறக்கி மாலயா கோத்து, உங்க வீட்டுக்கு விடியங்காட்டி வேலைக்கு வரும்போது யாருக்கும் தெரியாம உங்ககிட்ட கொடுத்திருதேன்’’னு இவ சொன்னப்பெறவுதேன் அவன் வீட்டுக்குப் போனான். இவளும் சொன்னமாதிரியே மாலய கோர்த்து அவன் கிட்ட கொடுத்தா. அப்படி கோர்த்தபோது ஒரு முத்த மட்டும் எடுத்து வச்சிக்கிட்டா. இப்படியே பத்து, இருவது நாளைக்கு மேல ஆயிருச்சி. தினமும் முத்து மாலையை அத்துவுடறதும் அதை கோர்த்துவிடறப்ப ஒரு முத்த மட்டும் எடுத்து வச்சிக்கிடறதும் இவளுக்கு வாடிக்கையா போச்சு.
மகன் தினமும் இருட்டியப்பெறவு கிளியத் தேடிப் போறான்ங்கிற விஷயம் ரங்கசாமிக்கு எப்படியோ காத்து வாக்குல தெரிஞ்சி போச்சி. உடனே, அவரு பணக்கார வீட்டுல மகனுக்குப் பொண்ணு பாத்ததுமில்லாம, கல்யாணத்துக்கு நாளும் குறிச்சிட்டு வந்துட்டாரு. கல்யாண வேலைங்க வேற மும்முரமா நடக்கு. இந்த விஷயம் கிளிக்கு தெரிஞ்ச உடனே, அவ பதறிப் போனா. ‘நடக்கறதெல்லாம் பாண்டியனுக்கு தெரியுமோ, தெரியாதோ! நம்மளாவது அவன்கிட்ட சொல்லுவோமே’னு அவனைத் தேடு, தேடுன்னு தேடுனா. ஆனா, பாண்டியன் கல்யாணம் பேசுன நாளையில இருந்து இவ குடிசைப் பக்கமே வரல.
இனி அவன்கிட்ட இருந்து தனக்கு நியாயம் கிடைக்காதுன்னு தெரிஞ்சதும், கிளி தன்னோட அய்யாவையும் கூட்டிக்கிட்டு ஊரு நாட்டாமையைத் தேடி ஒடுனா. ‘பாண்டியன் கிட்ட பழகுனது, அதுக்கு அடையாளமா அவன் கழுத்துல இருந்த முத்து மாலையிலிருந்து ஒவ்வொரு முத்தா எடுத்து வச்சது..’னு அத்தனையும் அவர்கிட்ட சொல்லி, பாண்டியனோட தன்னை சேத்து வைக்கச் சொல்லி கையெடுத்து கும்பிட்டா.
நாட்டாமையும் ஊரச்சாட்டி கூட்டம் போட்டு, அந்தக் கூட்டத்துக்கு ரங்கநாதனையும், பாண்டியனையும் வரவழைச்சாரு. அவுக வந்ததும் பாண்டியன் கிட்ட ‘‘கிளியைத் தெரியுமா?’’னு கேட்டாரு. அவன், ‘‘கிளியை தெரியவே தெரியாது’’னு சொன்னதோட, ‘‘இதுக்கு முன்னால இவளை நான் பாக்கவே இல்ல’’னு சத்தியமும் பண்ணிட்டான்.
அப்புறம், ரங்கசாமிய கூப்புட்ட நாட்டாமை, ‘‘சரி, உன் மகன் கழுத்தில கிடக்கிற முத்துமாலையிலருந்து இருபது முத்து எப்படி கிளி கைக்குப் போவுச்சின்னு உன் மகன் கிட்ட கேளு’’னு சொன்னாரு. ரங்கசாமியும் மகன் கிட்ட முத்தப் பத்தி கேக்கும்போது அவனால பதில் சொல்ல முடியல. திருதிருனு முழிச்சான்.
நாட்டாமையும் கிளிகூட பாண்டியன் பழகுன விவரத்த எடுத்துச் சொல்ல, ரங்கசாமி அப்படியே ஒரு நிமிஷம் குன்னிப்போனாரு. ஒரு நிமிஷம்தான். பிறகு தலைநிமிர்ந்து கூட்டத்தப் பாத்துட்டு சொன்னாரு…
‘‘இப்படி ஒரு புத்திசாலியான பொண்ணு எனக்கு மருமகளா வர நானு கொடுத்து வச்சிருக்கணும். கிளியையே நானு என் மகனுக்கு கட்டிக்கிடுதேன்’’னு சொன்னதும், எல்லோரும் சந்தோசப்பட்டாக. கிளியும் சந்தோசப்பட்டதோட, கொஞ்சம் கோபமா பாண்டியனைப் பாத்து சிரிச்சா.
– பெப்ரவரி 2006