கரிசல் காட்டு காதல் கதைகள்! – 7

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 26,918 
 

வில்லாயிரத்துக்கு அப்படி ஒரு தங்க குணம். யார் மனசும் நோகடிக்கப் பேச மாட்டாரு.

அவருக்கு ஒரே மகன், தருமராசு. அவனும் அவங்கய்யா மாதிரியே அம்புட்டுக்கு நல்லவன். அவுகளுக்கு சொத்து, பத்துனு ஊரைச் சுத்தி நாலு திக்கமும் நஞ்சயும், பிஞ்ச யும் அப்படி கெடக்கு. அது போதாதுனு தருமராசு படிச்சி சர்க்காரு வேலை வேற பாக்கான். ஆளும் அழகான ஆளு. அந்த ஊருல இருக்கற கொமரி பொண்ணுகள்லாம் அவனுக்கு வாக்குப்படணுமின்னு கோயில், கோயிலா படி ஏறி கும்புட்டு வராக.

விடிஞ்சிட்டாப் போதும்… வில்லா யிரத்த தேடி, ‘நானு பொண்ணு தாரேன்; நீ பொண்ணு தாரேன்’னு ஆளுக வந்துக்கிட்டே இருக்காக. ‘காடு தாரேன்; கரயத் தாரேன்; கை நிறைய பணமும் தாரேன்’னு அப்படி வந்து கெஞ்சுதாக. கெதறுதாக. வில்லாயிரத்துக்கு என்ன செய்யனு தெரியல. யார் மனசையும் நோகடிக்காம நம்ம மவனுக்கு பொண்ணு பார்க்கணுமின்னு நினைக்காரு.

அப்ப அதே ஊர்ல ரஞ்சிதம்னு ஒரு எளிய வீட்டுப் பொண்ணு, ஆத்தங்கரை ஓரத்துல குடிசை போட்டுக்கிட்டு, தன் ஆத்தா கூட வேல, வெட்டிக்குப் போயிக்கிட்டு இருந்தா. பூ எடுத்து முகமெழுதி, பொன்னெடுத்து நெறம் எழுதுன மாதிரி அம்புட்டு அழகா இருப்பா. ஆனா, தாயும், மவளும் ஒரு நாளைக்காச்சினாலும் உக்காராம வேலைக்குப் போனாத்தேன் வவுத்துக்கு சாப்பிட முடியும். இல்லாட்டி வெறும் வவுத்தோட படுக்க வேண்டிதேன். அவளுக்கும் தருமராசு மேல ஆசை. அவன் தனக்கு கிடைக்கமாட்டான்னு தெரிஞ்சும், அவனையே தன்னோட புருசனா ஏத்துக்கிட்டு மனசளவில அவனுக்கு பொண்டாட்டியா வாழ்ந்துக்கிட்டு இருந்தா.

தினமும் விடியமின்ன தருமராசு அவ இருக்கற ஆத்துப் பக்கம் குளிக்க வருவான். இவ மறவா நின்னுக்கிட்டு அவனையே பார்த்துக்கிட்டு இருப்பா. பெறவு அவன் குளிச்சிட்டுப் போனதும் ஆத்துக்குள்ள பதிஞ்சு கெடக்கற அவன் தடத்திலயே இவளும் நடந்து போவா. அப்போ அவளுக்கு சந்தோசம் பொறுக்காது. கடைசியா தெரியிற அவன் தடத்தில ஒரு கொத்து ஆவாரம்பூவை புடுங்கி வச்சி, சாமியை கும்புட்டு தன் கொண்டையில வச்சிக்கிடுவா.

இப்படியே இவ யாருக்கும் தெரியாம செஞ்சிக்கிட்டு இருக்கையில, ஒரு நாள் இவ சேத்திக்காரி பூவரசி பாத்துட்டா. அப்பவே ரஞ்சிதம்கிட்ட போயி, ‘‘என்னத்தா இது? மண்ணுல கிடக்கற தூசி, மானத்தில இருக்கற நிலாவைப் போயி தொடணும்னு ஆசைப்பட்ட கதையா நீ தருமராசு தடத்துல தடம் பதிச்சி வாரயே. அவன் உனக்குக் கெடைப்பானா?’’னு கேட்க, ரஞ்சிதத் துக்கு முகமெல்லாம் தக்காளியா கனிஞ்சிருச்சி.

‘‘நானும் ‘ஒருத்தருக்கும் தெரியாது நம்ம ஆசை. நம்ம மனசோடவே போவட்டும்’னு நெனச்சிருந்தேன். நீ எப்படியோ பார்த்துட்டே. போயிட்டுப் போவுது. நீ என் உசுருக்குசுரான சேத்திக்காரிதேன். எம் நெஞ்சுக்குள்ள பொங்கிக்கிட்டு இருக்கற அருச்சவத்த உங்கிட்ட சொன்னா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும். நானு என்னிக்கு தருமராசுவை பார்த்தனோ, அன்னிக்கே எம் மனசுல நெலாப்பிற (காதல்) கண்டுருச்சி. இனி நானு காலம் பூராவும் அவரு நெனப்புலயே வாழ்ந்துட்டு செத்துப் போவேன். நானு சாவற வரைக்கும் அவரு காலு தடத்தில மிதிக்கிற பாக்கியம் கெடைச்சா, அது போதும்’’னு ரஞ்சிதம் சொன்னதைக் கேட்டு, பூவரசி திகைச்சிப் போயிட்டா.

இது இப்படி இருக்கும்போது, வில்லாயிரம் மகனுக்கு கல்யாணம் முடிக்கணுமின்னு நினைக்கிறாரு. எந்தப் பொண்ணை தன் வீட்டுக்கு மருமகளா கொண்டாறதுனு தெரியலை. மகனை கூப்புட்டு கேட்டாரு. அவன், ‘‘எய்யா, உமக்கு எந்தப் பொண்ணு பிடிக்குதோ, அந்தப் பொண்ணு கழுத்துல நானு தாலி கட்டுதேன். ஏன்னா நம்ம ஊருல இருக்க எல்லாப் பொண்ணுகளும் எனக்கு வாக்குப்பட விரும்புறாகனு காத்து வாக்குல கேள்விப் பட்டேன்’’னு சொல்ல… வில்லாயிரமும், ‘‘அதேன்ப்பா பாதரவா இருக்கு. நம்ம பாட்டுக்கு ஒரு பொண்ண கேக்கப் போயி… மத்த பொண்ணுகள்லாம் ‘நம்ம எதுல கொறச்சலா இருக்கோமின்னு நம்மளை கேக்காம விட்டுட்டாக’னு நெஞ்சு புழுங்கி பெருமூச்சி விட்டுச்சிகன்னா, அது நம்ம குடும்பத்துக்கு நல்லது இல்ல’’னு விசாரத்தோட சொன்னாரு.

‘‘அப்ப நானு என்ன செய்ய? வேணும்னா கல்யாணமே முடிக்காம இருந்துக்கிடட்டுமா?’’னு கேக்க, வில்லாயிரம் பதறிப் போனாரு. ‘‘வேண்டாய்யா. அப்படியெல்லாம் சொல்லாத. நம்ம வீட்டுக்கு நீ ஒரே வாரிசு. கண்டிப்பா கல்யாணம் முடிச்சாவணும். எனக்கு ஒரு ரோசனை தோணுது. அதன்படி செய்வோம்’’னு சொல்ல, ‘‘உங்க பிரியப்படி செய்யும்’’னு தருமராசும் சொல்லிட்டான்.

வில்லாயிரம் நாட்டாமைகிட்டயும் இன்னும் இருக்கற பெரிய ஆளுககிட்டவும் ‘‘எங்க வீட்டுல எல்லா செல்வாக்கும் இருக்கு. அதனால எங்க வீட்டுல இல்லாத செல்வாக்கை எந்தப் பொண்ணு கொண்டு வாராளோ, அவளை என் மருமவளா ஆக்கிடுதேன். ஆனா, ஒருத்தர் கொண்டாரது மத்தவகளுக்கு தெரியக் கூடாது. அதனால, ஒரு கலயத்தில கொண்டாந்து மந்தையில வச்சிரட்டும். நாலு பேரு எதை செல்வாக்குனு சொல்லுதாகளோ, அதைக் கொண்டாந்தவளை மருமகளா ஏத்துக்கிடுதேன்’’னு சொன்னாரு. இதுக்கு எல்லாரும் சம்மதிச்சாக.

அம்புட்டுத்தேன். கலயமா மந்தையில வந்து நிறைஞ்சிருச்சி. இவுக ஒவ்வொரு கலயமா தொறந்து பாத்துக்கிட்டே வந்தாக. அம்புட்டு கலயத்திலயும் நகயும், நட்டும், பட்டும், பனியலுமா இருந்துச்சி. ஒரு கலயத்தில மட்டும் கிளிஞ்சட்டி(அகல்விளக்கு)யில தீபம் எரிய, எல்லாரும் அதைத் தொட்டு கும்புட்டு கிளிஞ்சட்டிய எடுத்து கீழ வச்சிட்டு, கலயத்துக்குள்ள பாத்தாக. உள்ளே மஞ்சக் கிழங்கு; மல்லிகைப் பூவு; வெத்தலைப் பாக்கு; குங்குமம்… இம்புட்டும் இருந்துச்சி. அந்த நிமிஷமே வில்லாயிரம், ‘‘எம்மவன் பொறந்ததுமே எம்பொண்டாட்டி செத்துப் போனா. அவ போனதுல இருந்து நானும், எம்மவனும் இந்த மாதிரி ‘ஐசுவரியத்த’ப் பார்த்ததில்ல. எங்க வீட்டுல இல்லாததும் இதுதேன்!’’னு சொல்ல, ஊர்க்காரகளும் அவரு சொன்னதுதேன் சரின்னாக. அந்தக் கலயத்தை கொண்டாந்து வச்ச பொண்ணு யாருன்னு பாக்க… அது ரஞ்சிதந்தேன். பெறவு என்ன? ரஞ்சிதம் கழுத்தில தருமராசு தாலி கட்ட, அவ அவன் பொண்டாட்டியாயிட்டா.

ஒரு நாளு தருமராசு, ‘‘உனக்கு எப்படி இந்த மாதிரி ஒரு ரோசனை தோணுச்சி?’’னு கேக்க, அவளும் ‘‘எங்க வீட்டுல அதுதேன் இருந்துச்சி’’னு சொல்லிட்டு தலையை குனிய, அவனும் அவளை அணைச்சிக்கிட்டான்!

– ஏப்ரல் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *