கரிசல் காட்டு காதல் கதைகள்! – 13

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,338 
 
 

‘‘ஊறுகாயா நான்?’’

கையலக் கண்ணாடியில முகத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த பவானிக்கு, கூடவே தனபாலு முகமும் தெரிய ஒரு வேளை நம்மளத் தேடி அவரு வீட்டுக்கே வந்துட்டாரோனு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தா. அங்க பழைய கூரையும் செல்லரிச்சுப் போன மண் சுவரும்தான் இருந்தது. வாசத் திண்ணையில உக்காந்திருந்த அவளோட ஆத்தா வெள்ளச்சி, ‘‘பாம்புலுக்கும் வெயில்ல கெடந்து வேவுத கழுதைக்கு சொவுடன (அலங்காரம்) என்ன வேண்டிக் கெடக்கு?’‘னு முணுமுணுத்ததைக் கேட்டதும் பவானிக்கு சிரிப்பாணி அள்ளுச்சு.

‘வெய்யில்ல கெடந்து வேவுத கழுதையா?’ அவ தன்னோட அடிவயித்தைத் தொட்டுப் பார்த்துக்கிட்டா. சின்ன மொதலாளியோட வாரிசு அவ வயித்துக்குள்ள வந்து ரெண்டு மாசமாகிடுச்சு. இன்னும் ஒரே மாசத்துக்குள்ள அவளை தன்னோட பொண்டாட்டியாக்கிக்கிறதா சொல்லியிருக்கார். அப்ப இந்த ஆத்தா நெஞ்சடைச்சு செத்தாலும் செத்துப் போவா. அதுக்கு முந்தியே நம்ம மொதலாளிகூட பழகுற விஷயத்தைச் சொல்லிரணும். உதுரத்தோட உதுரமா, நமக்குள்ள அவரு உசுரு வளருதயும் சொல்லிரணும்னு நினைச்சவளுக்கு திடுதிப்புன்னு ஒரு விசாரம் சூழ்ந்துக்கிடுச்சு.

இந்த ஒரு மாசமாவே தனபால் அவளைப் பார்க்கல. என்னதான் வானத்தையும் பூமியையும் சாக்கி வெச்சு ‘நீதேன் என் பொண்டாட்டி’னு அவ தலையில அடிச்சு சத்தியம் செஞ்சிருந்தாலும் அவனோட மாடி வீடும் படிப் பும் அவளை பயமுறுத்திக்கிட்டேதேன் இருந்துச்சு.

வழக்கமா அவங்க சந்திக்கிற ‘ஓடைக்கரை, மாந்தோப்பு, மலையோரத்து சில்லோடை’னு எல்லா இடத்தையும் போய்ப் பார்த்துட்டு வந்தா. அதுலயும் போன வெள்ளிக்கிழமை அவனுக்குப் பிடிச்ச கலர்ல புதுச் சேலையும், லவுக்கையும் போட்டுக்கிட்டு, காடு, கரை மொத்தமும் தேடிட்டு, வெறுத்துப்போய் வியர்வையில நனைஞ்ச சேலையையும் லவுக்கையையும் கழட்டி அடுக்குப் பானைக்குள்ள பொதிய வெச்சா.

இனி அவன் வந்த பெறகுதேன் அதை எடுத்துப் போடணும்கற நினைப்போட வெளிய வந்தவ, ஆத்தா தன்னை குறுகுறுனு பார்க்கவும், மனசு கும்மரிச்சம் போட்டுச்சு. இவகிட்ட இப்பவே விஷயத்தை சொல்லிருவமா..னு யோசிச்சுக்கிட்டு இருக்குறப்பவே வேலாண்டி கெழவன் வேகமா தெக்குப்புறம் திரும்பு றதைப் பார்த்தவளுக்கு சும்மா இருக்க முடியல.

‘‘ஏ.. சீயா (தாத்தா) எந்த கோட்டயப் புடிக்க இப்படி வேகமா போறீரு?’’னு கேக்க.. அவரு திரும்பிப் பார்க்காமலே பதிலைச் சொன்னாரு.

‘‘தாயீ பவானி.. நீ எடக்குப் பண்ணுத. ஆனா நானு நெசமாலுமே கோட்டயப் புடிக்கத்தேன் போறேன்!’’னாரு.

‘‘என்ன சீயான் சொல்லுதீரு?’’

‘‘சின்ன மொதலாளிக்கு கல்யாணம் நடக்கப் போவுதில்ல. ஒரு மாத்தைக்குத் தொடுத்து அங்க வேலைக்கு வரச் சொல்லிட்டாக. வேல மட்டுமில்ல. தாளிப்பு வாசத்தோட நித்த சாப்பாடும் அங்கனதேன்’’னு அவர் சொல்லிட்டுப் போக, இவ மனசுக்குள்ள தேள் கொடுக்கைத் தூக்கிக்கிட்டு நின்னுச்சு.

அப்பவும், ‘ஒருவேளை நம்மளை கல்யாணம் செஞ்சுக்கிறத்தேன் ஏற்பாடு பண்ணுறாராக்கும்’னு நினைச்சவ, சீயானை கூப்புட்டு நிறுத்துனா.

‘‘சீயா.. உம்ம மொதலாளிக்கு வார பொண்டாட்டிக்கு எந்த ஊருனு சொல்லலயே..’’

‘‘இந்தக் கெழவங்கிட்ட அதையெல்லாம் சொல்லுவா களா தாயீ.. ஆனா அவுக பேச்சு, வார்த்தையிலருந்து பொண்ணுக்கு ஊரு மருதையின்னு தெரியுது..’’

இத்தனை நேரமும் அவ மனசுக்குள்ள இருந்த தேள் கொட்டியே கொட்டிடுச்சு. வலியால துடிச்சவளுக்கு கண்ணுக்குள்ள இருட்டு வரவும், அங்க இருந்த படப்பு மறைவுல உக்காந்தா. கொஞ்சம் முன்ன பூசியிருந்த பவுடரும், பொட்டும் வியர்வையில அழிஞ்சு, அவ முகத்தை அசிங்கப்படுத்துச்சு.

மெள்ள எந்திரிச்சா. வீட்டுக்குப் போக மனசில்ல. முதலாளியோட தோப்புக்கு நடந்தா. வெய்யில் காத்தைத் துரத்திவிட, அனலாக் கொளுத்துச்சு. அடிவயித்துல வலி சாட்டையா கொடுக்கவும், அவளால நிக்கக்கூட முடியல. தென்னை மரத்தை அண்டக் கொடுத்து உக்காந்தா.

தூரத்துல கடகடனு சிரிப்புச் சத்தம் கேக்கவும் நிமிர்ந்து உக்காந்தா. இது முதலாளியோட சிரிப்புத்தேன். அவ பக்கத்துல இருக்குறப்ப வெல்லாம் அவரு அப்பிடித்தேன் சிரிப்பாரு. பவானிக்குக் கொஞ்சமா தெம்பு வந்தது. சிரிப்புச் சத்தம் வந்த திக்கைப் பார்த்து ஓடுனா. அவளோட சின்ன முதலாளியேதேன். கூடவே நாலஞ்சு இளவட்டங்க வெள்ளையும் சொள்ளையுமா..

இவளைப் பார்த்ததுமே ‘‘ஏய் பவானி’’னு கையை ஆட்டுனவன் தன் சேக்காளிககிட்ட திரும்பிச் சொன்னான்.. ‘‘நானு சொல்லல.. ஊறுகான்னு! அது இவதேன்..’’

அவங்க இவளைப் பார்த்துக்கிட்டே சொன்னாங்க.. ‘‘உப்பும், ஒரப்புமான ஊறுகாயத்தேன் தொட்டு இருக்கே..’’

அவங்களோட கேலியும், பேச்சும், ஊசி முனையான பார்வையும் கண்டு கூசிப் போனா இவ. அடிவயித்தோட சுமையை நினைக்கவும், வயிறு தாள முடியாம வலிச்சது. வரப்புல வந்துக்கிட்டிருந்த தனபால் முன்னால போய் வழியை மறிச்சுக் கேட்டா.

‘‘மொதலாளிக்குக் கல்யாணமின்னு பேசிக்கிடுதாக..’’

‘‘அட!’’னு ஆச்சரியப்பட்டான் தனபால். ‘‘நானே ஒனக்கு சொல்லணுமின்னு இருந்தேன். நல்லவேளை ஒனக்கே தெரிஞ்சு போச்சு. என் கல்யாணத்துல ஒனக்கும் ஒரு பட்டுச் சீல எடுக்கச் சொல்லியிருக்கேன் பவானி’’னு சொன்னான்.

அவ திகிலடிச்சுப் போய்ட்டா. ‘‘என்னது பட்டுச் சீலயா? அப்போ என்னையே கட்டிக்கிடுதேன்னு எங்கூட ‘பேசி, பழகி’ இருந்ததெல்லாம்..’’

இப்பவும் கடகடனுதேன் சிரிச்சான் தனபால்.

‘‘நானு சொன்னதையெல்லாம் நம்பிட்டயா பவானி. ஒண்ணு தெரிஞ்சுக்கோ பவா.. நானு ஒனக்கு மட்டும் சத்தியம் செஞ்சி கொடுக்கல. ஒங்க ஊரு வெடலப் பொண்ணுக நாலஞ்சு பேருக்கு சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கேன். என்ன.. அந்தக் காலத்துல எங்கப்பா.. அதேன் உங்க பெரிய முதலாளி.. சத்தியம் செய்யாமலே உன்னய மாதிரி வீட்டுப் பொம்பளைகள தொட்டு இருக்காக. இப்ப காலம் மாறிப் போச்சில்ல.. அதேன் நாங்க சத்தியம் செஞ்சிட்டு உங்கள தொட்டோம்..’’னான்.

‘‘அப்ப.. அப்ப..’’ன்ன பவானியால பேச முடியல. மூச்சு இழுத்துச்சு.

‘‘பவானி ரொம்ப மூச்சு அடக்காத. பொட்டுனு போயிரப் போற. நாம சாப்பிடுறப்ப கடைசியா தயிர் சோத்துக்கு ருசிக்காக ஊறுகாயத் தொட்டுக்குவாங்கள்ல.. அப்படித்தேன் நானும் உன்னைத் தொட்டுக்கிட்டேன். அதுக்காக ஊறுகாய வயிறு நிறைய சாப்பிட முடியுமா? நீ ரொம்பத்தேன் உன் மனசுக்குள்ள ஆசைய வளர்த்துட்டே. போ! போயி உன் குடிசைக் காரன் எவனாவது உன்னைக் கட்டிக்க கிடைக்க றானான்னு பாரு’’ன்னதும் புலியா சீறுனா பவித்திரா.

‘‘மொதலாளி.. சத்தியம் நின்னு கொல்லும். ஆனா, சட்டம் இப்பவே உங்கள கேக்கும். நானு போவ வேண்டியது என் குடிசைக்கு இல்ல. உங்களுக்கு எதிரியா ஒரு இன்சுபெக்ட்ரு இருக்கார்னு சொல்லுவீகளே.. அந்த போலீசு டேசனுக்கு’’னு சொன்னவ, சூறாவளிக் காத்தா டவுனைப் பார்த்து ஓடுனா. வெயிலுக்காக அடங்கியிருந்த காத்து, வீசத் தொடங்குச்சு.

– ஜூலை 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *