கரிசல் காட்டு காதல் கதைகள்! -12

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,569 
 
 

பொய்ச்சாமி!

அமாவாசை நெருங்க நெருங்க கோகிலிக்கு மனசு கெடந்து அடிச்சுக்கிட்டது. புருசன் அமுதராசு எல்லாத்துலயும் கெட்டிக் காரனாத்தேன் இருக்கறான்னு நினைச்சப்போ, அவளுக்குப் பெருமையாத்தேன் இருந்துச்சு. கல்யாணமாகி இந்த ஒரு வருசத்துல அவளை வெடுக்குனு ஒரு வார்த்தைகூட சொன்ன தில்லை. ரெண்டு பேரும் கவுறும் தோண்டி யுமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா பொருந்திப் போய்த்தேன் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.

இவளை ஒரு குடம் தண்ணி எடுக்க சம்மதிக்க மாட்டான். அவ குத்தினா இவனுக்கு கை வலிக்கும். ஓடிவந்து உலக்கையை பிடுங்கு வான். இவ வரைக்கும் நல்லவன்தான். ஆனா, சோலைக்கிழவி விஷயத்துலதேன் இவளுக்கு அவனை பிடிக்காம போச்சு.

சோலை பாவம்… ஒரு பொண்ணாத்தான் பெறந்தாளே தவிர, ஒரு பொண்ணுக்குரிய எந்த விஷயமுமே இல்லாம ஒரு வெறுமை யான பொண்ணா வளர்ந்துட்டதால ஊருக்குள்ளருந்து ஒதுக்கப்பட்டுட்டா. அவளைப் போலவே அனாமத்தாக் கெடந்த அமுதராசு மேல கெழவிக்கு எப்பவும் ஒரு இரக்கத்தோட கூடின பிரியமிருந்துச்சு. அவனும் அவளுக்கு ஏண்ட வேல, எடுத்த வேல செஞ்சுக்கிட்டு அவ அணைவிலதேன் வளர்ந்தான்.

கோகிலிக்கும் சொந்தம்னு யாருமில்ல. அரைக்கண் பார்வையோட பெத்த தாய் ஒருத்தி இருந்தா. அவளும் ஒருநாள் அம்மை நோய்ல குளுந்து போகவும், தன்னந்தனியா நின்ன இவளை சோலைப் பாட்டிதான் ஊர்க்காரங்ககிட்ட சொல்லி, அமுதராசுவுக்குக் கட்டி வெச்சா.

இவங்க கல்யாணம் முடிஞ்சு முப்பது நாள்தான் ஆகியிருந்துச்சு. சோலைக்கு நெஞ்சுக் குத்து வந்து, உயிருக்குப் போராடிக் கிட்டு இருந்தா. அவளோட சொந்தங்கள் அவ உயிரைக் காப்பாத்துறதை விடவும் அவ சொத்தை யார், யார் பங்கு போடுறதுனு தான் ஏடாசி போட்டுக்கிட்டு இருந்தாங்க.

சோலையும் சும்மா இருக்கல. அவளுக்குத் தக்கன ஒரு வீடு, அரக்குருக்கம் பிஞ்சை, காதுப் பாம்படம், அஞ்சாயிரம் ரூபாய்னு சேர்த்து வெச்சிருந்தா. அவ பணத்துக்கும், வீட்டுக்கும் ஏடாசி போட்டுக்கிட்டிருந்தவங்களோட வாயை நச்சுனு அடைக்கிற மாதிரி கிழவி ஒரு விஷயத்தைச் சொன்னா.

‘‘என் சொத்த யாருனாச்சிலும் எடுத்துக்கோங்க. ஆனா எனக்கொரு ஆச இருக்கு. அத என் சொத்த எடுத்தவங்க செஞ்சிரணும்’’னு ஒரு முடிச்சைப் போட, எல்லாரும் அவகாச்சியோட, ‘‘அது என்ன ஆச?’’னு கேட்டாங்க. கிழவியும் ரொம்ப சாவகாசமா, ‘‘என்ன பொதச்ச எடத்தில அமாவாசைக்கு அமாவாச ஒரு சூடத்தக் கொண்டு பொருத்திட்டு வரணும்’’னு சொன்னா.

எல்லாரும் திடுக்கிட்டுப் போனாங்க. ‘‘கிழவிக்கு ஆசயப் பாரு.. தண்ணிக்குள்ள கெடக்க தவள தாவி வானத்தத் தொடணுமின்னுச்சாம். அது கெணக்காவில்ல இவ அலயிதா. சூடம் பொருத்த போறவகள இவளே பேயா வந்து அடிச்சாலும் அடிப்பா’’னு சிலர் ஒதுங்கிக்கிட, மத்தவங்க, ‘‘நம்ம விடிஞ்சாக் காடு, பொழுதடஞ்சா வீடுன்னு ஒருவாக் கஞ்சிக்கு பரிதவிச்சிக்கிட்டு அலயிதோம் இதுல அமாவாசயக் கண்டமா? பாட்டுமயக் கண்டமா? இவ சொத்துக்கு ஆசப்பட்டு இன்னைக்கு ஆட்டுமின்னு சொல்லிட்டு நாள, பின்ன பொருத்தாம விட்டுட்டமின்னா, இருசியா சாவுத கிழவி. எதும் வாக்கு விட்டுட்டானா அம்புட்டுத்தேன். நம்ம புள்ள, குட்டி வெளங்காது’’னு சொல்லி, விலகிக்கிட, அமுதராசு மட்டும் நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு கிழவிகிட்ட வந்து, ‘‘நானு உனக்கு அமாவாசைக்கு, அமாவாச சூடத்த பொருத்தி வச்சி, கையெடுத்து கும்புடுதேன்’’னுட் டான்.

புருசன் சொன்னதைக் கேட்டதும் கோகிலி அலமலந்து போனா. புருசனை ஒதுக்கமா கூப்பிட்டு, ‘‘ஏ.. கூறுகெட்ட மனுசா.. என்ன பேச்சு பேசுத.. இதென்னா வெளாட்டுக் காரியமா? இன்னைக்கு செஞ்சிட்டு நாள விட்டுர்றதுக்கு? உம்ம உசுரு உள்ள தண்டியும் பொருத்தி வைக்கணும். பேசாம இரும்’’னு தடுத்தா.

இவ பேச்சை அமுதராசு காதுலயே வாங்கல. ‘‘பேசாம இருத்தா. மாத்தைக்கு ஒருக்கா சுடுகாட்டுக்குப் போயி ஒரு சூடத்த பொருத்தி வைக்கப் போறோம். கிழவி சொத்தக் கொடுக்காட்டாலும், என்ன அணச்சி, பசியில எரிஞ்ச வவுத்த குளுர வச்சவ.. நானு அவளுக்கு செய்யத் தேன் போறேன்’’னவன், பிடிசாதனையா சொன்னதோட, எல்லார் முன்னாலயும் கிழவியோட தலையில அடிச்சு சத்தியமும் செஞ்சுட்டான். கிழவியும் நிம்மதியா சத்தியம் வாங்கின சந்தோசத்துல உயிரை விட்டா.

ஆனா, ஆறு மாசம் வரைக்கும் கிழவி நினைவாவே அக்கறையா, சூடத்தை வாங்கிக்கிட்டு சுடுகாட்டுக்குப் போய், கிழவியை எரிச்ச இடத்துல பொருத்தி வெச்சதோட சரி.. அதுக்குப் பெறகு போகவே இல்ல. அவளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டா. ரெண்டொரு முறை கழுத்துப் பிடியா தள்ளியும் பார்த்துட்டா. ஆனா, அவன் போகவே இல்ல. போகாதது மட்டும் இல்ல.

‘‘போத்தா போ, கிழவி சொன்னானு நீயும் மனுசன படுத்தாத.. அவளுக்கு நம்ம சொத்த எடுத்து இவுக ஆளவானு வவுத்தெரிச்ச.. அதேன் போற போக்குல ஒத்த சொல்ல எடுத்து எறிஞ்சிட்டுப் போயிட்டா. நீ அத முந்தானயில முடிஞ்சிக்கிட்டு அலயிதே, செத்து சாம்பலாப் போன கெழவி நமக்கு வாக்கு விடுதாளாக்கும்.. பேசாம இரு’’னு சொல்லிட்டான்.

ஆனா, கோகிலிக்கு சமாதானமாகல. கிழவிக்கு சத்தியம் செஞ்சி கொடுத்துட்டு, அத செய்யாம அவ சொத்த மட்டும் அனுபவிக்கறது நல்ல பாம்பை மடியில கட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு. இதனாலயே அவளுக்கும், புருசனுக்கும் மாசம் ஒரு தடவை சண்டை வந்தது. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசாம, வெறைச்சுக்கிட்டு அலைவாங்க. பிறகு பேசிக்குவாங்க.

இப்பவெல்லாம், அந்த சண்டை ரெண்டு, மூணு நாள் வரை நீடிக்க, ஆளுக்கு ஒரு மூலையில வெறும் வயித்தோட முடங்கிக் கிடந்தாங்க. ஆசை, ஆசையா காச்சின சோறும், குழம்பும் ஊசின வாடையோட தெரு நாய்க்காகக் காத்திருந்துச்சு.

வர, வர கோகிலிக்கு பயமா இருந்தது. ‘இந்த விஷயமே நம்ம வாழ்க்கையில ஒரு வெட்டுக் கத்தியா ஊடாடி புருசன், பொண்டாட்டியைப் பிரிச்சிடுமோ’னு நினைச்சு நடுங்கினா.

மறு மாசம்.. அமாவாசைக்கு முத நாள். நடுச் சாமம். சுருண்டு படுத்திருந்த கோகிலி திடீர்னு ஒரு அவயம் போட.. அமுதராசு மட்டும் இல்ல. அந்தத் தெருவே முழிச்சுடுச்சு. குபீர்னு எந்திருச்ச அமுதராசு விளக்கை பெரிசா தூண்டி விட்டான். பெரிசா எரிஞ்ச விளக்கோட வெளிச்சத்துல, சத்தம் வந்த திக்கம் பார்த்துத் திரும்பினவன் திகிலடிச்சுப் போனான். கோகிலி, கோகிலியா இல்ல.

சிவந்த விழி பிதுங்கி, உருட்டி முழிக்க, தலைவிரி கோலத்தோட தீக்கோட்டையா நின்னவ, பல்லை நெருநெருனு கடிச்சுக்கிட்டே இவனை பார்த்து சிரிப்பும் சீறலுமா ஓடி வந்தா. அமுதராசுக்கு பயமாயிருந்தது. கதவைத் திறந்துக் கிட்டு வெளிய ஓடினான். கோகிலியும் விடாம துரத்த, ஊர்க்காரங்க அவளைப் பிடிச்சு நிறுத்தினாங்க.

மூர்க்கமா அவங்ககிட்டயிருந்து விடுபட முயற்சிச்ச கோகிலி வெறியாட்டத்தோட கத்தினா.. ‘‘அடேய்.. எனக்கு அமாவாசைக்கு, அமாவாச சூடம் பொருத்தி வைக்கேன்னு சத்தியம் செஞ்சவன் சொன்னபடி செய்யல. ஆனா, என் சொத்த மட்டும் அனுபவிச்சிக்கிட்டு இருக்கே. பாருடா.. இன்னைக்கிலருந்து எண்ணி எட்டு நாளையில உன் பொண்டாட்டிய என்னப் பொதச்ச ரக்குக்கே கொண்டு போவலனா… எம் பேரு சோல இல்லடா’’னு சொல்லிட்டு, மயங்கி விழுந்தா.

இப்பவெல்லாம் அமுதராசு கோகிலியை விட்டுப் பிரியுறதே இல்ல. பிரியத்தை கொட்டோ… கொட்டுனு கொட்டுறான். அமாவாசையை மறக்காம சுடுகாட்டுக்குப் போய் சூடம் பொருத்திட்டு வர்றான்.

புருசனை திருத்துறதுக்காக பொய்ச்சாமி ஆடின கோகிலிக்கு மட்டும் சிரிப்பு, சிரிப்பா வந்தது.

– ஜூன் 2006

அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன்...’ என்று அவர் ஆரம்பித்தால், அவரது சொக்கலிங்கபுரம் கிராமமே (ராஜபாளையம் அருகில் உள்ளது) வந்து கதை கேட்க உட்கார்ந்துவிடும். நாகரிகப் பூச்சு அறியாத வார்த்தைகளும் வர்ணனைகளும் பாரததேவியின் ஸ்பெஷாலிட்டி! களத்துமேடுகளிலும், கண்மாய் கரைகளிலும் சொல்லப்படும் கிராமத்துக் கதைகள் காற்றோடு கரைந்துவிடாமல் சேகரித்து, 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது, ஐந்தாம் வகுப்பு வரைதான்! சிறுவயதில் மாடுமேய்க்கப் போனபோது கதை கேட்டு…மேலும் படிக்க...

1 thought on “கரிசல் காட்டு காதல் கதைகள்! -12

  1. ஹாஹாஹா அருமை ஒரு விஷயம் மட்டும் நல்ல புரியுது கிராமத்து பெண்கள் நினைச்சதை முடியாம விடமாட்டாங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *