(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம்-5
மோகனசுந்தரத்தின் பேச்சு புரியாமல், சாருமதி திகைத்தது ஓரிரு கணங்களே.
உடனே பொருள் புரிந்துவிட, காதில் விழுந்த வார்ததைகளை நம்ப மாட்டாமல், அவன் முகத்தை வெறித்துப் பார்த்தாள் சாருமதி!
என்ன மாதிரி நிலையில் வைத்து, என்ன கேள்வி கேட்கிறான்? கிடுக்குப்பிடி போட, இதுவா நேரம்?
அல்லது, இவனுக்கெல்லாம். இதுதான் நேரமோ?
இவன் என்ன, மனிதனா, ராட்சசனா?
ஆனால், சிவபாலன் பெற்ற மகளைப் பற்றி, இவன் சற்றும் அறிந்து கொள்ளவில்லை. அவர் வளர்த்த விதம் பற்றியும்!
மிஞ்சி மிஞ்சி, இவனால், பாலாவைச் சிறைக்கு அனுப்ப முடியும். அவ்வளவுதானே! செய்யட்டும்!
இந்த மாதிரிப் பேச்சுக்குபதில் சொல்வதே கேவலம் என்று சொல்லாமல் சொல்கிறவளாய், சாருமதி எழுந்து வெளியே செல்லத் திரும்பினாள்.
“ஒரு நிமிஷம் சாருமதி!” என்று அவளை நிறுத்தினான் மோகனசுந்தரம், “எனக்குப் பதில் சொல்லாமல் போகிறாயே! சந்தர்ப்பம் வந்துவிட்டது தானே?” என்றான், அவளைக் கூர்மைமாகப் பார்த்து கேள்வியுமாக.
வெட்கமே இல்லாமல் மறுபடியும் கேட்கிறானே! திமிர்! முதலாளி என்கிற அகந்தை! இப்போது இவளால் மறுக்க முடியாது என்கிற திண்ணக்கம்!
சாவுக்குத் துணிந்துவிட்டால் சமுத்திரமும் முழங்கால் மட்டம்தான் என்று அறியாததால் வந்த கொழுப்பு!
மீண்டும் திரும்பி, அவனை நோக்கி நின்றாள் சாருமதி.
“நாங்கள் மத்திய தரத்துக் குடும்பம்தான் சார். என் தந்தை, பணம் காசு என்று ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை. ஆனால் தன்மானம், கௌரவம் எல்லாம் பெரிய சொத்து என்று, கற்றுக் கொடுத்திருக்கிறார்” என்றாள் அவள் நிதானமாக.
“நல்ல விவரம், கேட்க சந்தோஷமாயிருக்கிறது. சற்று எதிர்ப்பார்த்ததும் கூட..” என்றான் மோகனசுந்தரம். “ஆனால் என் கேள்விக்கு பதில் சொல்லவில்லையே?”
என்ன இவன்?
இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த கட்டுப்பாடு மறைய, “அதைத்தான் சார், நான் இப்போது சொன்னதே எந்த விதமான இக்கட்டு நேர்ந்தாலும் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் இழந்து வாழக் கூடாது என்று, அப்பா எனக்கு கற்றுத் தந்திருக்கிறார். சாருபாலா சிறைக்கே சென்றாலும் என் மானத்தைப் பலிகொடுத்து அவளைக் காப்பாற்ற, நான் உடன்பட மாட்டேன். இப்போதேனும் என் பதில் புரிகிறதா?” என்றாள் சீற்றத்துடன்.
புருவம் சுருக்கி, “மானத்தைப் பலி கொடுத்து…” என்று யோசித்தவன். ஏதோ விஷயம் புரிந்தவன் போல “ஊகூம்!” என்று தலையசைத்தான்.
“சாருமதி நீதான் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. யோசி, நீ நினைத்தது போல நான் நடந்தால், என்ன ஆகும் என்று எண்ணிப்பார்! நிறுவனத்தைப் பாதிக்கும் விதமாக என்ன தப்பு வேண்டுமானாலும் பண்ணலாம், அப்புறம் இப்படித் தப்பி விடலாம் என்று, எல்லோரும்…. எல்லாப் பெண்களும் எண்ண மாட்டார்களா…?”
“அதெப்படி நினைப்பார்கள்?” என்று ஆத்திரத்துடன் குறுக்கிட்டுக் கேட்டாள் சாருமதி பெண்களை மிகவும் மட்டமாகப் பேசுகிறான் என்பதோடு, இவன், காதில் ஏதோ பூச்சுற்றவும் முயற்சிக்கிறான்!.
“நன்றாக நினைப்பார்கள், பெண்ணே! நன்றாகவே நினைப்பார்கள். எல்லோருமே உன்னைப் போல ஒழுக்கம் பேணுகிறவர்கள் என்று எண்ணவேண்டாம். சில, பல வசதிகளுக்காகத் தானாகவே வந்து விழுகிற பிறவிகள், எதற்கும் துணிவார்கள். ஆனால், அதற்கு இடமளிக்க, எனக்கு அணுவளவும் விருப்பம் இல்லை.. ” என்று நிறுத்திவிட்டு, அவளைப் பார்த்தான் மோகனசுந்தரம்.
இவன் என்ன சொல்ல வருகிறான்? என்னவோ ஊடுருவுகிற மாதிரிப்பார்வை வேறு!
நெஞ்சு படபடக்க “பி… பின்னே?” என்று வினவினாள் அவள்.
பார்வை மாறாமல் “நான், திருமணம் செய்து கொள்ளக் கேட்டேன் ” என்றான் அவன் தெளிவாக.
“வாட்?”
திகைப்பும் அதிர்ச்சியுமாகக் கால்கள் தடுமாற, சற்று முன் காலி செய்த இருக்கையில், சட்டென அமர்ந்தாள் அவள்.
மேஜை மீது மூடி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தம்ளரை எடுத்து அவளிடம் நீட்டினான் அவன்.
அதிர்ச்சிக்கு எப்போதும், இவனது வைத்தியம்போலும் எண்ணி எண்ணியபோதும், மறுக்காமல் வாங்கிக் குடித்தாள் அவள்.
அவள் இரண்டு மிடறு குடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, “என்ன அவ்வளவு அதிர்ச்சி?” என்று கேட்டான்.
இதற்கு என்னவென்று பதில் சொல்வது?
அவளது பதிலை அவனே சொல்பவனாகி “என்னைப் பொல்லாத வில்லனாக எண்ணினாய் போல!” என்றான் தொடர்ந்து.
அப்படித்தானா என்று அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்ட விதம் சீண்ட, சாருமதி மௌனம் கலைத்தாள்.
“நினைத்தது தப்பு என்கிறீர்களா?” என்றாள், அவளும் நேராகப் பார்த்து.
அவனும் மறந்திருக்க வாய்ப்பில்லையே, மறந்திருந்தால் ‘சந்தர்ப்பம்’ என்கிற அதே வார்த்தையை எப்படிப் பயன்படுத்துவான்? மறந்துவிடவில்லை என்று, அவனது பதில் தெரிவித்தது.
“எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. என் நிலையில் இருந்து யோசித்துப் பார். முதல் முறையாக உன்னைப் பார்த்தபோது, மனதில் ஒரு விருப்பம் தோன்றியது. வெளிப்படையாகக் கேட்டேன். முதலில் மறுத்தாலும், சில பல வசதிகளுக்காக, என்றோ ஒருநாள், நீயாக வருவாய் என்று நினைத்தேன். ஆனால், இந்த ஆறு மாதங்களாக, உன்னை எந்த விதத்திலும் நான் வற்புறுத்தினேனா? துரத்தி.. விரட்டி..சும்மாச் சும்மா உன்னிடம் வந்து பேசி, உன்னை என் இடத்துக்கு வரவழைத்து… இந்த அளவு தொல்லை கூட, நான் தந்தது இல்லையே! ஒரு கனவானாக, உண்மையான பெரிய மனிதனாகத்தானே, நடந்து கொண்டிருக்கிறேன்?”
கனவான் என்கிற வார்த்தைக்கு, இவனது அர்த்தமே, வேறு விதமாக இருக்கிறது என்று எண்ணினாள் சாருமதி. அவனது முதல் கேள்வியிலேயே, பெரிய மனிதத்தனம் கடைசி மூச்சை விட்டுவிட்டது என்றல்லவோ, அவள் கருதினாள்!
இந்த இரண்டும் எப்படி, ஒன்றாக வாழ முடியும் என்று மூளை கேட்டது.
ஒரு மனமாக வாழ்ந்த பெற்றோரின் நினைவில் மனம் கனத்தது. கலங்கியது.
இந்தக் கேள்வி, தங்கைக்குப் பாதகமாக முடியலாம். ஆனால், அவளது வாழ்க்கை பிரச்சினை என்பதால், கேளாமலும் தீராது,
மெல்ல நிமிர்ந்து “என் ஒழுக்கம் பற்றிச் சொன்னீர்கள். உங்கள்… உங்களைப் பற்றியும் தெரியும் இ…இதையே, தொடர்வீர்களா?” என்று கேட்டாள்.
ஒரு வினாடி யோசித்துவிட்டு “குடும்பம் என்பது உன்னதமானது என்பதில், எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதில் தவறு நேர விடுவேன் என்றும், இப்போதைக்கு எனக்குத் தோன்றவில்லை. ஆனால். நான் பொய் சொல்ல மாட்டேன். இதுதான் நிரந்தரம் என்று என்னால் அடித்துச்சொல்ல முடியாது. எனவே, ஓர் உறுதி தருகிறேன். என்றேனும் ஒருநாள், நம் இருவருக்குமே பொறுக்க முடியாத நிலை வந்தால், ஒன்று மட்டும் நிச்சயம். நீ பொருளாதார ரீதியாகக் கஷ்டப்பட நேராது” என்றான் அவன்.
“ஆனால், வாழ்க்கை?”
தயக்கமே இல்லாமல் “ஒரு திருமணத்தில், வாழ்க்கையின் எல்லாமே முடிந்து விடுகிற நிலை, இன்றைக்கு இல்லை, சாருமதி, விவாகரத்து. மறுமணம் எல்லாமே இயல்பாகிவிட்ட சூழல், இது. ‘இம்’மெனுமுன் ஒன்றை உதறி, இன்னொன்றினுள் நுழைகிற அசட்டுத்தனம், நம் இருவருக்குமே கிடையாது என்பது, என் கருத்து, அதனால், நம் திருமணம் ஒரு பெரிய வெற்றியாகவே அமையவும் கூடும். அமையும் என்று நம்புவோமே? என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான் மோகனசுந்தரம்.
சொல்ல என்ன இருக்கிறது? மறுத்துப் பேசி, ஓடிவிடவா முடியும்?
திருமணம் என்கிற ஒரு கெளரவமான போர்வையில் பாலாவைக் காப்பாற்ற முடியும் எனும்போது, அவளுக்கு வேறு எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை.
திருமணத்தின் வெற்றி, தோல்வி பற்றி இவன் என்ன சொன்னாலும், அவளைப் பொறுத்தவரை, மண வாழ்வு ஒன்றே ஒன்றுதான். ரத்து, மறுமணம் எதையும் அவள் மனதார ஒப்புவதற்கில்லை. எனவே, இவன் சொல்வது போல, நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.
எப்படியோ, அவன் சொல்லும்போது, நம்பவும் தோன்றியது. மனம் லேசாவதை உணர்ந்தபடி, சாருமதி சம்மதமாகத் தலையாட்டினாள்.
முக்கியமாக, சகோதரிகள் இருவருமே கேவலப்படாமல், சாருபாலா நல்லபடியாகத் தப்ப, இதுதான் வழி என்று எண்ணும்போதே. பாலாவை எப்படிக் காப்பாற்றப் போகிறான் என்று யோசனை வந்தது.
கல்லாவில் பணம் குறைந்தது, திடீர் சோதனை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டிருக்கும். என்னதான் மோகனசுந்தரம் முதலாளி என்றாலும், அதை, இல்லை என்று மாற்ற முடியாது. அதிரடியாக, முதலாளி விருப்பம்போலக் கணக்கு வழக்குகளை மாற்றுகிற பழக்கமும் அங்கே கிடையாது.
“சார், பா… சாருபாலா அவளை எப்படிக் காப்பாற்றுவது? பாலாவின் பிழை அலுவலகக் குறிப்புகளில் பதிவாகி இருக்கும். ஒன்றரை லட்சம் இழப்பு! அதை மாற்ற முடியாதே? அவள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்காமல் விடுவது என்றால், நான் கேட்டபடி, மாதாமாதம் பணம் கட்ட அனுமதிக்கப் போகிறீர்களா?”
கண்ணில் சிறு வியப்பும், குறுஞ் சிரிப்புமாக அவன் தலையசைப்பதைக் கண் இமைக்காமல் பார்த்தாள் சாருமதி. இவன் அழகன்தான் என்று, மனம் வேறு புறம் பாய்ந்தது.
“மாதா மாதம் கட்டுவது பற்றித்தான், முன்னரே சொன்னேனேம்மா?” என்று அவன் கேட்கவும், சிந்தனை மறுபடியும். நடப்புக்கு வந்தது.
“பின்னே?”
புன்னகை மாறாமலே அவன் சொன்னான் “கணக்கில் குறைந்த ஒன்றரை லட்சத்தையும் நிறுவனத்துக்குக் கட்டிவிட்டால், அப்புறம் அவளை எந்தக் குற்றத்தில் பிடிக்க முடியும்?”
விரிந்த விழிகளில் விவரம் புரிவது தெரிந்தது “ஓ! பணத்தை நீங்கள் க..கட்டி வி..விடு…வதா…கச் சொல்லுகிறீர்களா? ரொ.. ரொம்ப நன்றி. சார்!” என்றாள் கண்கள் கசிய.
“என்ன செய்வது? அக்காவின் கல்யாணக் கோலத்தைக் காண, தங்கை கைவிலங்கோடு வந்தால், நன்றாயிராதே!”
அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தாலும், தங்கை கைவிலங்கோடு நிற்பது போன்ற கற்பனை தோற்றத்தில், சாருமதியின் நெஞ்சு நடுங்கியது. எப்படியோ, அது நேராமல் காப்பாற்ற முடிந்ததே!
ஆறுதலாக மூச்சு விட்டு “முதலில் அவளிடம் சொல்லிவிடுகிறேன்” என்று ஆவலாக எழுந்தாள்.
“இல்லை, உட்கார்” என்றவனின் முகத்தில் திரை விழுந்திருந்தது.
“சா…ர்” என்று தயங்கியவளிடம் “சாருபாலா பற்றி, நான் உன்னிடம் சிலது சொல்ல வேண்டியிருக்கிறது. அதைக் கேட்டுவிட்டு, அப்புறமாக உன் தங்கையிடம் எல்லா நல்ல சேதிகளையும் சேர்த்துத் தெரிவிக்கலாம்” என்று சற்று அழுத்தமான குரலில் அவன் கூறவும், உள்ளூரக் கலக்கத்துடன் அவன் சொல்லுக்குப் பணிந்தாள் அவள்.
இருக்கையில் சாருமதி அரைகுறையாக, ஒட்டில் அமர்வதைக் கவனியாதவன் போல, மோகனசுந்தரம் பேசத் தொடங்கினாள்.
“கவனி, சாருமதி. நாம் இருவரும் மணந்துகொள்ளப்போகிறோம். மைத்துனி என்கிற முறையில், அவளுக்காக ஒன்றரை லட்சம் ரூபாயை நிறுவனத்தில் கட்டி, அவளால் நேர்ந்த இழப்பை நான் ஈடுகட்டப் போகிறேன்”
“ஆனால், இது இத்தோடு நிற்க வேண்டும். இதற்கு மேல், அவளால் எனக்கு இழப்பு நேரக்கூடாது”
“இனிமேல், வேலை நேரத்தில் பண விஷயத்தில் பாலா கவனமாக இருப்பாள் சார்!” என்றாள் சாருமதி அவசரமாக
“அதற்குத் தேவையிராது” என்றான் அவன் சற்றே வறண்ட குரலில், “சாருபாலா செய்திருப்பது, நிறுவன விதிகளின்படி, மிகப் பெரிய குற்றம். எனவே, இனியும் அவளைப் பணப் பொறுப்பில் வைக்க முடியாது. விற்பனை பிரிவில் வேலை செய்யட்டும். சில மாதங்களில், அவள் எப்படி உருவாகிறாள் என்பதைக் கவனித்து, வேலை உயர்வு கொடுப்பது பற்றி, நிர்வாகம் முடிவு செய்யும்…”
அதாவது, தளத்து நிர்வாகிகளோடு கலந்து, எம்டியாக, இவன் முடிவு செய்வான். அதுவரை, ஒரு பதவி இறக்கத்தை பாலா ஏற்றுத்தான் ஆக வேண்டும், என்கிறான்.
நிர்வாகம் பயின்றிருந்ததோடு, உள்ளார்ந்த நேர்மையும் சேர, சாருமதிக்கு இதை மறுக்கவும் தோன்றவில்லை.
இத்தோடு பாலா தப்புவதே பெரிய போனஸ் மாதிரிதானே?
சாருமதி பேசாமல் அமர்ந்திருக்க மோகணகந்தரம் தொடர்ந்தான்.
“சாருபாலா விஷயமாக இன்னும் சிலது இருக்கிறது. அவளுக்கு பணம் ஏதும், உன் கையிலிருந்து கொடுக்கக் கூடாது. ஒரு பத்து ரூபாய் கொடுத்தால்கூட, அதைப் பன் மடங்காக்கிப் பெறும் எண்ணம், அவளுக்கு வந்துவிடும். அக்கா பணக்காரி ஆகிவிட்டாள், இனி நானும் அப்படிதான் என்று, அவள் தன்னையும் பணக்காரியாக எண்ணி, ஊதாரித்தனமாக வாழத் தொடங்கிவிடுவாள். இப்போதே, உன் ஊதியத்தில் கணிசமான ஒரு பகுதி அவளுக்குத்தான் போகிறது, என் ஊகம். இல்லையென்றால், உன் வாழ்ககை முறைக்கு, நீ இன்னமும் சேமித்திருப்பாய், ஆனால் இந்த ஓட்டுண்ணித்தனம், இனித தொடரக் கூடாது. எந்த அதிகப்படிச் செலவையும் தாங்க, அக்கா வருவாள் என்கிற எண்ணம் வரக்கூடாது! இந்த நிபந்தனை எதற்காகச் சொல்கிறேன் என்று புரிகிறதா?”
“தன் காலில் நிற்பதற்கு, பாலா பழக வேண்டும், என்பதற்காக” என்றாள் சாருமதி மெதுவாக, ஆனால், இது பாலாவுக்கு புரிய வேண்டுமே! அந்த அளவு, அவள் யோசிப்பாளா?
அவளது மனதைப் படித்தவன் போல “நீ கண்டிப்புடன் இருந்தால், இதை உன் தங்கையும் வெகு விரைவிலேயே புரிந்து கொள்வாள்” என்று மோகனசுந்தரம் கூறவும், அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கூடவே, சற்று இதமாகவும்.
அப்படியே பல விஷயங்களில் ஒத்த மனம் இருந்தால், வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கக்கூடும் அல்லவா?
“கடைசியாக ஒன்று. நம் வீடு அடையாறில் இருக்கிறது. தனி வீடு. தாத்தா பாட்டி காலத்திலிருந்து, மூன்று தலைமுறைகளாக, நம் சொத்து, சாருமதி. இப்போது நான் சொல்லப் போவது உனக்கு வருத்தத்தை. அளிக்கக்கூடும். ஆனால் இதில் மாற்றம் ஏற்பட நான் அனுமதிக்க மாட்டேன். அந்த வீட்டுக்குள் சாருபாலா ஒரு போதும் வரக்கூடாது!” என்றான அவன், திடுமென அழுத்தம் பெற்ற குரலில்.
பல்வேறு கலக்கங்கள், குழப்பங்கள், தீர்வுகள், நம்பிக்கைகள் என்று, இந்த அறைக்கு வந்ததில் இருந்து அவளை ஆட்டிப் படைத்தவை. எத்தனையோ! ஆனால் எதன் பிரதிபலிப்பையும் முகத்தில் காட்டி விடக்கூடாது என்று, சாருமதி முடிந்தவரை கவனமாகவே இருந்தாள்.
ஆனால், இப்போது அது முடியவில்லை.
பத்து ரூபாய்க் கூடக் கொடுக்கக்கூடாது என்று, மோகனசுந்தரம் கூறியபோதே, அவன் பணச் செலவை மட்டுமாகக் கூறவில்லை என்று, யோசித்திருக்க வேண்டும் என்று, அவளுக்கு இப்போது தோன்றியது. தமக்கையோடு சேர்ந்து வசிப்பது என்றால், பாலாவின் சம்பளம் முழுவதுமே, அவளது கைச்செலவுக்கானது தானே அதிக்கப்படியாகப் பத்து ரூபாய்ப் பணம் தேவையே படாதே!
ஆனால் என் விட்டுக்கு நீ வரக்கூடாது என்று முகத்தில் அடித்த மாதிரி, பாலாவிடம் எப்படிச் சொல்வது? அத்தோடு அவள் தனியாக எங்கே, எப்படி இருப்பாள்?
திகைப்பும் அதிர்ச்சியுமாக, “சார், அவள் என் தங்கை, சார்! அவளை வீட்டுக்கு வரக்கூடாது என்று எப்படிச் சொல்வது?” என்று தவிப்புடன் வினவினாள்
“சொல்லித்தான் ஆக வேண்டும், சாருமதி. நம் வீட்டுக்கு அவள் வரத் தொடங்கினால், அத்தோடு அது நில்லாது. அவள் உன்னை சார்ந்திருப்பதோ, நீ அவளுக்குக் குடை பிடிப்பதோ, இனி நடக்கக்கூடாது. இதற்கெல்லாம் நீ ஒப்புவது என்றால், ஒப்பினால் மட்டுமே சாருபாலாவின் மேல் சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று, அவளிடம் போய்ச் சொல்லு” என்று முடித்தான் அவன்.
அதாவது, அவனது நிபந்தனைகளில் எதை மறுத்தாலும், மணம் உட்பட எதுவும் நடக்காது என்கிறானா?
திக்கென்றது, அவளுக்கு அதெப்படி முடியும்? ஊகூம்!
ஆனால் கூடவே, காலையிலும், மாலையிலும் தங்கைக்காகச் செய்யும் வேலைகளும், சாருமதிக்கு நினைவு வந்தன. எல்லா வேலைகளையும், எப்படிச் செய்து முடித்து, அவள் சரியான நேரத்துக்கு அலுவலுக்குச் செல்லப் போகிறாள்? அவளால் சமாளிக்க முடியுமா?
பாலா வீட்டுக்குச் செல்லப் பெண். அவள் பிறக்கும்போது மஞ்சுளா கிட்டத்தட்ட மரணத்தை எட்டிப் பார்த்துவிட்டு வந்தாள், பிறகும், முழு ஆரோக்கியம் வரவே இல்லை.
பாலா எப்போதும், அம்மாச் செல்லம். எந்த நேரம், குழந்தை தாயை இழந்து தவிக்கப் போகிறதே என்று தொடங்கியது. பதினெட்டு வயதிலும் அவள் அப்படித்தான்.
அதைப்பயன்படுத்திக் கொண்டு தந்தை, தமங்கையிடமும் காரியம் சாதிப்பாள். கடைக்குட்டி என்பதால், அவர்களும் பெருமளவு. விட்டுக்கொடுத்து, அதுவே குடும்பத்தில் பழகிவிட்டது.
இப்போதும் பாலா தனியாக எப்படி இருப்பாள் என்று, அதுதான் சாருமதிக்கு யோசனையாக இருந்தது. இவனிடம் பேசிப் பார்க்கலமோ?
அவள் சின்னப் பெண் என்று சொல்ல வாயெடுத்துவிட்டு, அடக்கிக் கொண்டாள். சாருமதி, ஓட்டுப்போடும் வயது தாண்டி… வசனம், ஏற்கனவே கேட்டாயிற்று.
வேறுவிதமாக “ஆனால் சார், பாலாவுக்குத் தனியாக இருந்து பழக்கமில்லை… ” என்று அவள் தொடங்கும்போதே “ஏன், கையைப் பிடித்துக்கூட்டிப்போக நீ அருகிருக்க வேண்டுமோ?” என்று ஏளனமாகக் கேட்டான் அவன்.
சாருமதி உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியானாள்.
குரல்மாற “தனியாக என்ன, சாருமதி? உன்னை விட்டுத் தனியாகச் சுற்றவில்லையா? அத்தோடு, விடுதியில் எத்தனையோ பெண்கள் இருக்கும்போது இவள் மட்டும் ‘தனி’ என்ன? இவ்வளவு காலமும் போல அதே விடுதியிலேயே தொடர்ந்து தங்கட்டும். வாடகையைப் பகிர்ந்து கொள்கிற மாதிரி, ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டால், நீ சொல்கிற தனிமையும் இல்லாமல், அவளுக்குப் பணமும் மிச்சமாகும்” என்று எளிதாக, அதே சமயம் கண்டிப்புடனும் தீர்வு சொல்லிவிட்டான் மோகனசுந்தரம்.
அலுவலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வது போல!
அப்போதும், சாருபாலா என்ன சொல்வாளோ என்று மூத்தவளுக்கு உதைப்பாகவே இருந்தது.
ஆனால், மோகனசுந்தாம் சற்று ஏளனமாகச் சிரித்தான் “அவள் உன்னை விட உலகம் தெரிந்தவள், சாருமதி. சட்ட நடவடிக்கையில் இருந்து, அவள் சம்பந்தப்பட்ட முழு விவரத்தையும் சொல்லிப்பார். கல்யாணம் என்றைக்கு என்று அவளே கேட்பாள்”
மோகனசுந்தரம் பாலாவை மட்டமாக நினைப்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால், ஒன்றரை லட்ச ரூபாய் இழப்பை ஏற்படுத்தி வைத்திருப்பவளை, உயாவாக நினைக்க வேண்டும் என்று எப்படிக் கேட்க முடியும் ?
திருடினால்தான் தப்பு என்று இல்லை, அவரவர் பதவியின் பொறுப்பு மறந்து, கவனக் குறைவாக இருப்பதும் மிகப் பெரிய குற்றமே. அத்தோடு, தங்கையின் தவறு, கவனக் குறைவு மட்டுமே என்றுதான், மோகனசுந்தரத்துக்கு என்ன நிச்சயம்?
அந்த நிச்சயம் இருந்ததால்தான், வீட்டுக்குள் வரக்கூடாது என்கிறான்.
அவமானமாக உணர்ந்தபோதும், அதில் அவள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று புரிய, “நான் போய், பாலாவிடம் சொல்கிறேன். சார்” என்று மறுபடியும் சாருமதி எழுந்தாள்.
கூடவே எழுந்து “செய், திருமணம் பற்றிய மற்ற ஏற்பாடுகளை நான் கவனிப்பதாகத் தெரிவித்து, அவளை, அவளது தளத்துக்குப் போகச் சொல்லிவிடு, அதற்குள், அங்கே அவள் செய்ய வேண்டிய பணி பற்றி, தளத்து நிர்வாகியிடம், நான் கூறி விடுவேன். வேலை நேரத்திற்கு அதிகத் தாமதம் ஆகாமல் பார்த்துக் கொள். ஆனால், அதற்கு முன்…” என்றவாறு அவள் அருகில் வந்தான் அவன்.
அதற்கு முன்?
விரிந்த கண்களால் அவள் பார்க்க “இன்று நம் திருமணத்தை உறுதி செய்திருக்கிறோம், சாருமதி, அதற்கு அடையாளமாக… ” என்று அவளது விரல்களைப் பற்றி, லேசாக முத்தமிட்டான் மோகனசுந்தரம்.
அவனது உதடுகள் பட்ட இடத்தில் தோன்றிய குறுகுறுப்பு, உடல் முழுவதும் பரவுவதை உணர்ந்து சாருமதி திகைத்தாள்.
அத்தியாயம்-6
மோகனசுந்தரம் திருமணத்துக்குக் கேட்டான் என்று அறிந்ததும், அவனை நேரில் வாழ்த்தப் போவதாக கூறி கிளம்பிய சாருபாலாவைத் தடுத்து நிறுத்துமுன், சாருமதி பெரிதும் சிரமப்பட்டுப் போனாள்.
“அடடே! இங்கே சேர்ந்த புதிதிலேயே ஒருநாள், முடிந்தவரை முதலாளி கண்ணில் படாமல் ஒதுங்கச் சொல்லி எச்சரித்தாய் அல்லவா? எதற்கு என்று, இப்போது தெரிகிறது. அப்போதே. அவரைக் கணக்குப் பண்ணத் தொடங்கிவிட்டாய் போல? என்னக்கா நீ? உனக்குப் போட்டியாக, நான் என்றேனும் வருவேனா? உண்மையைச் சொல்லியிருந்தால், என் நண்பர்களிடம் கேட்டு, நானும் ஏதாவது உதவி செய்திருப்பேன்., வேலையும் என்றோ முடிந்திருக்கும், வசதியோடு வாழவும் தொடங்கியிருப்போம்!” என்று பேசிக்கொண்டே போனாள்.
பொறுக்க மாட்டாமல், அவளது பேச்சை நிறுத்தி, இது காதல் கல்யாணம் அல்ல, இந்த இக்கட்டான நிலையை சமாளிப்பதற்கான என்று சொல்லி, ஏற்க வைக்குமுன், சாருமதி படாத பாடு பட்டுப் போனாள்.
அப்போதும், மற்றவள் அதை முழுதாக நம்பியதாக, மூத்தவளுக்குத் தோன்றவில்லை.
அடுத்து, சின்னவளது புதிய பணி பற்றிச் சொல்லி, அவளை வேலைக்கு அனுப்புமுன், சாருமதி இன்னொரு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
“என்னக்காக உளறுகிறாய்? நிறுவனத்து முதலாளியுடைய மைத்துனி, அதே நிறுவனத்தில் சாதாரண விற்பனைப் பெண்ணாக வேலை செய்வதா? முடியவே முடியாது! நான் மாட்டேன்” என்று ஒரேடியாகக் குதித்தாள்.
“நாம் இருக்கும் நிலையில்….” என்று மூத்தவள் சொல்லத் தொடங்கியதை, சின்னவள் காதிலேயே வாங்குவதாக இல்லை.
‘தன்’னிலேயே கவனமாக, படபடவென்று அவள் பேசிக்கொண்டே போனாள். “அதிலும் எனக்கு இது பணி இறக்கம் வேறு! கல்லாவில் ஸ்டைலாக உட்கார்ந்து பணம் வாங்கிப் போடுவதை விட்டுவிட்டு, வாடிக்கையாளர் பின்னாலே ஓடிச் சாமான்களை எடுத்துக் கொடுப்பதா? சும்மாவே, இந்த மாதிரி கேவலப்பட என்னால் முடியாது. அதிலும், முதலாளியுடைய மைத்துனியாக இருந்துகொண்டு.. சேச்சே. எவ்வளவு அசிங்கம்! மாட்டவே மாட்டேன்! நிர்வாகி, அல்லது உதவி நிர்வாகியாக குறைந்த பட்சமாக, நிர்வாகிக்குச் செயலாளராக உன் அளவிலாவது ஏதாவது செய்கிறேன். அடே! அதுதான் சரி. நீ பார்க்கும் வேலை காலியாகும் அல்லவா? அதை எனக்குத் தரும்படி மோகனிடம் சொல்லிவிடலாம் வாக்கா, இப்போதே போய்ச் சொல்லிவிட்டால், உன் இடத்துக்கு வேறு ஆள் பார்க்கிற வேலை, மோகனுக்கு மிச்சம்!” என்று சாருபாலா மடமடவென்று திட்டம் தீட்டிய விதத்தில் சாருமதி அயர்ந்தே போனாள்.
கோகனாமே!
மணந்து கொள்ளக் கேட்டிருக்கிறான்! அவளே இன்னமும் ‘சார்’ என்கிறாள்.
தங்கையின் பேச்சு, ரொம்பவும் அதிகபடியாகத் தோன்ற, “யாருக்கு மிச்சம்?” என்று உள்ளடக்கிய கோபத்துடன் வினவினாள்.
“மோகனசந்தரத்துக்கு!” என்றாள் தங்கை. மிகவும் இலகுவாக, “குடும்பத்தில் ஒருவராகப் போகிறார். அவரைப் போய் இன்னமும் சார், பாதாம்கீர் என்றா, கூறுவது? பெயர் சொல்லி, அதிலும் இப்படிச் சுருக்கப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டால்தான், முதலாளிக்கு நெருக்கமானவர்கள் என்று, நம்மோடு கூட வேலை செய்கிறவர்களுக்கு நம்மிடம் பயம் இருக்கும்!” என்று தமக்கை விளக்கம் வேறு கொடுத்தாள்.
தங்கை, அவளை விட விவரம் அறிந்தவள் என்று, எம்டி சொன்னது சரிதான் என்று, சாருமதிக்கு இப்போது தோன்றியது.
“எழுந்திருக்கா, சீக்கிரமாகப் போய் மோகனிடம் சொல்லிவிடலாம்” என்று தமக்கையின் கையைப் பத்தி எழுப்பிவிடவும் சாருபாலா முனைத்தாள்.
கால்களை அழுத்தமாக ஊன்றி அசையாமல் இருந்துகொண்டு “பொறு” என்று பற்றிய தங்கையின் கையையே பலமாக இழுத்து மறுபடியும் உட்கார வைத்தாள், சாருமதி. “முதலில் நாம் சில விஷயங்கள் பேச வேண்டும்” என்றாள் குரலிலும் அழுத்தத்துடன்.
இழுத்த இழுப்புக்கு வரும் தமக்கையின் போக்கு திகைப்பைத் தர, பேச்சிழந்து, மூத்தவள் முகத்தைப் பார்த்தாள் பாலா.
“கவனி பாலா, இந்தத் திருமணம் நடப்பதற்கும், அதைத் தொடர்ந்து, ஒன்றரை லட்சம் ரூபாயைக் கட்டி நம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் சா.. வந்து, அவர் சில நிபந்தனைகளைக் கூறியிருக்கிறார். அவைகளை அப்படியே நிறைவேற்றினால் தவிர, அவர் நமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டாராம்” என்று தொடங்கி, மோகனசுந்தரம் கூறியவற்றைத் தங்கைக்குத் தெரிவித்தான், சாருமதி.
சற்று நேரம் திகைத்தப் போய்ச் சிலையாக அமர்ந்திருந்த சாருபாலா திடுமென நகைத்தாள், “எல்லாம் டூப் அக்கா, சும்மா பொய்யான மிரட்டல். எதிர்காலத்தையே உன்னிடம் ஒப்படைக்கும் அளவு, அவருக்கு உன்னிடம் ஆசை இருக்கிறது என்பது நிச்சயம், அதில்லாமல் மனக்கக் கேட்க மாட்டார். அதனால் அவரது ஒன்றிரண்டு நிபந்தனைகளை மறுத்தாலும், அப்படி ஒன்றும் திருமணத்தை நிறுத்துவிட மாட்…”
தங்கையின் பேச்சில் குறுக்கிட்டு “முட்டாள்தனமாக உளறாதே!” என்று அதட்டினாள் சாருமதி. “எம்டி கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார். இதில் எந்த ஒரு சிறு மாற்றத்துக்கும் இடம் கிடையாது. அவர் சொன்னதை முழுதாக அப்படியே ஏற்காவிட்டால், இதையும் முழுதாக மறந்துவிட்டுச் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கப் போவதாக கூறிவிட்டார். அதனால், ஒன்று அவரது திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொள், அல்லது நடப்பது நடக்கட்டும். இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. அத்தோடு இன்னும் ஒன்றையும் தெரிந்து கொள், வாழ்க்கை முழுவதுக்கும் ஒரே திருமணம் என்பதில சாருக்கு நம்பிக்கை கிடையாது. பின்னாளில் எனக்குப் பிடிக்காமல் போனால், பிரிய வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்” என்றாள்.
சற்றுநேரம், ஒரு சில கணங்களாகவே இருக்கக்கூடும் அமைதியில் கழிந்தது.
நெற்றியைப் பிடித்துக்கொண்டு யோசித்தவளைப் பார்க்க பெரியவளுக்குப் பரிதாபமாகக் கூட இருந்தது.
ஆனால், திடுமென நிமிர்ந்து “இந்தக் கல்யாணம் என்றைக்கு நடப்பதாக இருக்கிறது?” என்று சின்னவள் கேட்கவும், சாருமதிக்கு தூக்கி வாரிப் போட்டது
மோகனசுந்தரம் கணித்தது போல, அப்படியே சொல்கிறாளே!
“அ…அப்படியானால், உனக்குச் சம்மதம் என்று அவரிடம் சொல்லிவிடவா?”
“வேறே வழி?” என்று எரிச்சலுடன் கேட்டாள் தங்கை “இல்லையென்றால், ஜெயில் களி தின்ன வைத்துவிடுவான் போல அல்லவா, இருக்கிறது! இப்போது சரிசரி என்று சமாளித்துவிட்டுப்பிறகு பார்த்துக் கொள்ளலாம், என்பதற்கும் இல்லாமல், அவனுக்கு, ஒரே திருமணத்தில் நம்பிக்கையும் இல்லை! கொஞ்சம் அனுசரித்து, அவனை நல்ல மனநிலையிலேயே வைத்துக்கொள், அக்கா! குறைந்த பட்சமாக, அன்றைக்கு பணம் எடுத்த திருடி, தான் திருடியதை ஒத்துக் கொள்கிற வரையாவது, எச்சரிக்கையோடு இரு”
திருடியாமே! கண்ணால் பார்த்த மாதிரி, அதிலேயே நிற்கிறாளே! இவள் மாறமாட்டாள்.
“சரி பாலா. நீ, உன் தளத்துக்குப் போ. தாமதம் பண்ண வேண்டாம் என்று குறிப்பிட்டுச் சொன்னார்” என்றாள் தமக்கை.
“அந்த ஆள் சொல்வதற்கென்ன? அவருக்கா, அவமானம் பிடுங்கித் தின்னப் போகிறது?” என்று எரிச்சல் பட்டபோதும், அதற்குமேல், நேரத்தை வீணாக்கத் தைரியம் இல்லாமல், சாருபாலா கிளம்பிச் சென்றுவிட்டாள்.
இவளுக்கு என்ன இலகுவாக “மோகன் ‘அந்த ஆள்’ ஆகிவிட்டார். ஒருவேளை இவளைப் போல, அந்தந்த நிமிஷத்துக்குத்தான் வாழ வேண்டுமோ? இப்படி உளப்பிக்கொண்டே இருக்க நேராதே!
மதிய உணவு இடைவேளையின்போது, வருங்கால மனைவியைத் தன் அறைக்கு வரவழைத்து, நடந்தது பற்றி, மோகனசுந்தரம் விசாரித்தான்.
சாருமதி உள்ளே சென்றதும், இருவருக்குமாகக் கொண்டு வந்திருந்த உணவை, உரியவாறு எடுத்து வைத்துவிட்டுச் சென்ற கான்டீன் பணியாளின் பார்வையில், அவளது முகம் கன்றியது.
“உன் முகத்தில் இந்தச் சிவப்பு பரவுவதைப் பார்க்க, அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் சாருமதி, மற்றவர்கள் கருத்துக்கு இந்த அளவு மதிப்புக் கொடுத்தால், அப்புறம், உனக்காக உன்னால் வாழவே முடியாமல் போய்விடும். ஏனென்றால், எல்லோருக்கும் நல்லவராக வாழ யாராலும் முடியாது! மானம் மரியாதை பற்றிக் கற்றுக் கொடுத்த என் மாமனார், இந்த பாடமும் எடுத்திருப்பார் என்பது, என் நிச்சயமான நம்பிக்கை!”
பார்க்க அழகாக இருக்கிறது என்கிறானே என்று மனம் குளிர்கையில், அவன் குறைப்பட்டது, அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. அதிலும், மாமனாரை இழுத்து வைத்துப் பேசிய விதத்தில் சிரிப்புதான் வந்தது எனலாம்.
புன்னகையை அடக்கியபடியே “சொன்னால், நானே வாங்கி வந்திருப்பேனே, அனாவசியமாக, அவன் வாய்க்கு அவல் கொடுத்திருக்க வேண்டாமே என்று நினைத்தேன்” என்றாள் அவள்.
“ஏனோ? நமக்குத் திருமணம் என்று தெரியும்போது ‘நான் அப்போதே நினைத்தேன்’ என்று எல்லோரிடமும் சொல்லி, சந்தோஷப்பட்டுக் கொள்வான், பைசா செல்வில்லாத மகிழ்ச்சி! அதைக் கெடுப்பானேன்?”
மனத்திரையில் மலர்ந்த அந்தக் காட்சியில் அவளது புன்னகை மேலும் விரிந்தது.
இருவரும் உரையாடியவாறே உணவருந்தினர்.
பாலா கூறியதைக் கேட்டதும், அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“பாதாம் கீரா?” என்று மீண்டும் நகைத்தான், “ஆனால், அவள் சொன்னதிலும் ஓர் உண்மை இருக்கிறது” என்றான், “நீ இன்னமும் என்னை, யாரோ போல, சார் என்று அழைப்பது சரியில்லைதானே? என் தாத்தா பெயரை எனக்கு வைத்தார்களாம். ஆனால், ஒரே குடும்பமாக இருந்ததால், அந்தப் பெயர் சொல்லிக் கூப்பிட முடியாமல், அவரவருக்குப் பிடித்தமான செல்லப் பெயர் வைத்து, அழைப்பார்கள், அம்மாவுக்குக் கண்ணன், தம்பி, அப்பாவுக்கு ராஜு, தாத்தா பாட்டி.. சொன்னால் சிரிக்கக் கூடாது என்னை அப்புக்குட்டி என்பார்கள்! மம்.. சிரிக்கக்கூடாது என்று சொன்னேனில்லையா?” என்று தானும் சிரித்து வீட்டு “நண்பர்கள் என்னை மோகன் என்பார்கள், இப்போது சொல்லு, நீ எப்படி என்னை அழைக்கப்போகிறாய்?” என்று கேட்டான்.
பாலாவின் ‘மோகன்’ சாருமதியின் மனதில் ஒரு கைப்புச் சுவையை உண்டு பண்ணியிருந்தது. ‘நெருக்கமானவ’னாகக் காட்டிக் கொள்வதிலும்.
பதிலைத் தள்ளிப்போட எண்ணி “அப்பு என்று செல்லமாக அழைத்துக் கேட்டிருக்கிறேன்! குட்டி குட்டிம்மா எனறு கொஞ்சுவதையும், அப்புக்குட்டி என்றால் பயங்கரச் செல்லம் போல!”
“படு பயங்கரச் செல்லம்! ஒரு பொருளை ஆசையாகப் பார்த்தாலே, நாலு பெரியவர்களில் ஒருவர் வாங்கி வந்து கொடுத்து விடுவார்கள்… ஓஹோஹோ.! விளையாட்டுப் பொருளில் தொடங்கி, உயிருள்ள பெண்கள் வரை வந்துவிட்டது என்று எண்ணுகிறாய் அல்லவா?” என்று மோகனசுந்தரம் கேட்கவும், சாருமதி திடுக்கிட்டுப் போனாள்.
அவள் அப்படி எண்ணமிட்டது மெய்யே!
தன் பேச்சைத் தொடர்ந்து, இப்படி நினைக்கக் கூடும் என்று ஊகித்துச் சொன்னானா ? அல்லது ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல…’ என்று வள்ளுவர் சொன்னாரே, அதுபோல, மனம் எண்ணியதை, முகம் அப்படியே காட்டிவிட்டதா?
எதற்கும் முக பாவனையில் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது என்று, தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டவள், வேகமாக யோசித்து “சேச்சே, அப்படியெல்லாம் நான் நினைக்க மாட்டேன், சார், நீங்கள் எப்படி இருந்தாலும், அவர்கள் பெற்று வளர்த்த பெரியவர்கள், அவர்களிடம் எனக்கு மரியாதை இருக்கிறது. சார்!” அவனுக்கு ஒரு பதிலும் சொன்னாள்!
“நான் எப்படி இருந்தாலுமா? பரவாயில்லை. குட்டு வைக்கவும், மாமனார் கற்றுக் கொடுத்துதான் வைத்திருக்கிறார். ஒரேடியாகப் பிள்ளைப் பூச்சியாக இருக்க மாட்டாய். நினைவில் வைத்துக் கொள்கிறேன். ஆனால் நாம் பேசிக் கொண்டிருந்த விஷயம் வேறு, சொல்லு. என்னை எப்படி அழைக்கப் போகிறாய்?” என்று மறுபடியும். கேட்டான் அவன்.
தள்ளிப் போடாமல், சீக்கிரமாக முடிவெடுக்கச் சொல்லுகிறான் ‘முந்தினவன் கை மந்திரவாள்’ என்று தொழில் விவகாரங்களில் செய்வது போல.
ஆனால், தொழில் செய்ய மனம் தேவையில்லை. மூளை போதும். வாழ்க்கை பெரும்பாலும் மனதிலேயே நடப்பதாயிற்றே!
மூளையைக் கசக்கி யோசித்தும் எந்தத் தெளிவும் தோன்றாமல், “முதலில் நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் மட்டும் என்னைச் சாருமதி என்று அரை மீட்டர் நீளத்திலா கூப்பிடப் போகிறீர்கள்? இல்லைதானே? என்னவென்று, நீங்கள் முதலில் சொல்லுங்கள்!” என்று அவனைக் கேட்டாள்.
லேசாக முறுவலித்தான் அவன் “சாரு என்றால் எழில். அழகு சுண்டி இழுக்கும்போது, சாரு என்றால் பொருத்தமாக இருக்கும்! மதி என்றால், புத்தி. என்ன பதில் சொல்வது என்று தெரியாதபோதும், அதைக் காட்டிக் கொள்ளாமல், பதில் கேள்வி கேட்டு சமாளிக்கும்போது, மதி என்று கூப்பிடப் போகிறேன். இன்னும், டார்லிங், டியர்.. சமயத்துக்கு ஏற்றபடி என்னென்னமோ இருக்கிறது. இப்போது சொல்லு மதி, என்னை எப்படிக் கூப்பிடப் போகிறாய்?” என்று கண் சிமிட்டிக் கேட்டான்.
அவளைக் கண்டுகொண்டான்!
கன்னம் சிவப்பது, முகச் சூட்டில் தெரிந்தாலும், அதையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், இப்போதும் அவன் சொன்ன எதையும், சாருமதியின் மனம் ஒப்பவில்லை.
முக்கியமாக அந்த ‘மோகனை!’ டியர், டார்லிங் என்பனவும் அப்படித்தான், அன்னியமாகத் தோன்றின.
ஆனால், அவனுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அதுவும் ஒப்பும் விதமாக!
சொல்வது அறியாமல் திகைப்புடன் பார்த்தால், குறுஞ் சிரிப்புடன் அவன் முகம், அழியாத சித்திரமாய் மனதில் படிய “சுந்தர்!” என்றாள் தன்னையறியாமல்.
அவன் புருவம் உயர்த்தவும். தாத்தா காலத்துப் பெயராகக் கருதுகிறானோ என்று தோன்ற “உ..உங்கள் பெயரின் பின் பாதி!” என்றாள் மெதுவாக.
“உண்மையாகவே இப்போது ‘மதி’தான்!” என்றான் அவன் புன்னகை விரிய, “ஆனால், சுந்தர் என்று கூப்பிடுவேன் என்று அழுத்தமாகக் கூறவில்லையே!” என்றான் குறையாக.
“உங்களுக்குப் பிடிக்குமோ இல்லையோ என்று தெரியாமல்… உங்கள் அனுமதி இல்லாமல் எப்படி, அழுத்தம் வரும்?”
“அழைக்கப் போவது நீ. மணக்கக் கேட்டபோதே, அந்த அனுமதி உனக்குக் கிடைத்தாயிற்றே. உன் விருப்பம் போல எப்படி வேண்டுமானாலும்…” என்றவன். அவளது கண்கள் பளிச்சிடவும் “ஊகூம்! அதற்காக கழுதை, நாய் என்றெல்லாம் எனக்கு பெயர் சூட்டிவிட முடியாதும்மா!” என்று நகைத்தவாறே கூறினான் மோகனசுந்தரம்.
“ஊகூம்… அது போலக் கிடையாதே!” என்று அவசரமாக மறுத்தபோதும், அவளது கண்களில் ரகசியச் சிரிப்பு மறையாதது கண்டு, “ஓஹோ, முன் கதையா? அப்போது ரொம்பப் பயந்திருந்தாயா? வில்லன். அரக்கன்… இது போலப் பெயர் அர்ச்சனைகள், நிறைய நடந்திருக்கும் போல?” என்று மென்குரலில் வினவினான்.
நினைப்பதை சட்டென்று ஊகித்து விடுகிறானே என்றிருந்தது. சாருமதிக்கு. உடனே, கேள்வி வேறு!
இதற்கு. ஆமாம் என்று உண்மையான பதிலை அவளால் சொல்ல முடியுமா?
என்ன சொல்லிச் சமாளிப்பது என்று, சாருமதி யோசிக்கையில், எழுந்து அவள் அருகே வந்தான் அவன்.
அவள் அவசரமாகப் பின்னடையவும் நின்று நோக்கி “ஏன்? அப்போது வெறுப்பாக இருந்ததா?” என்று யோசனையோடு விசாரித்தான்.
“இல்லையில்லை” என்று உடனே மறுத்தாள் சாருமதி.
“பின்னே?”
பார்வை தாழ “வந்து… ரொம்ப நேரம், வேலையில் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை” என்று அவள் சின்னக் குரலில் கூற, அவன் முகம் சட்டென மலர்ந்தது.
ஆயினும் அந்தப் பேச்சைத் தொடராமல் “அதை,அப்புறம் பார்ப்போம். நான், உன்னை வரச் சொன்னதற்கு, உன் தங்கை தவிர, இன்னொரு காரணமும் இருக்கிறது, சாருமதி. உன்னைப் பற்றி, என் பெற்றோருக்கு ஈமெயில் அனுப்பினேன். பதில் வந்திருக்கிறது பார்” என்று அவளை அருகே அழைக்கவும், ஒரு கணம் இவளுக்கு இதயம் நின்று பின் வேகமாகள் முடித்தது
அவளைப் பற்றி அவனுடைய பெற்றோருக்குத் ஒன்றும் தெரியாதே! மகனது குணம் தெரிந்தவர்கள் என்றால், அவளை நிச்சயமாக மறுப்பார்கள். மறுத்திருப்பார்கள்.
அதை மீறி இந்தத் திருமணம் எப்படி நடக்கும்?
ஆனால் இவ்வளவு நேரம் அவன் பேசிய விதம் நினைவு வர, திகைத்துக் கலங்கிய அவளது மனம், சற்று அமைதி பெற்றது.
பெற்றோர் மறுத்திருந்தால், அவனால் இவ்வளவு சாதாரணமாக பேசிச் சிரிக்க முடியுமா?
பெற்றோருக்கு, அவன் முதலில் அனுப்பியிருந்த குறிப்புகள், அவளுக்கு வியப்பைத் தந்தன.
அவளே கூடச் சிலவற்றை மறந்திருந்தாள் “இதெல்லாம்… ” என்று அவள் வியப்புடன் கேட்க, அலுவலக ஃபையிலில் இருந்தது போக, மற்ற விவரங்களைத் தந்தவர், முத்துக்கிருஷ்ணன் சார்! மேலே படி” என்று உந்தினான் மோகனசுந்தரம்,
அவனோடு ஒட்டினாற்போல, அருகில் நின்று பார்ப்பது. சாருமதியின் உடலில் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தள்ளி நின்று பார்க்கும் தைரியமும் இல்லாததால், உள்ளூரத் திணறியவாறு, அவனோடு சேர்ந்து ஈமெயிலைப் பார்த்தாள் அவள்.
பார்த்த அளவில் பிரமித்தும் போனாள்,
அவன் அனுப்பிய அத்தனைக்கும் பதிலாகப் பெற்றவர்கள் மகனுக்கு அனுப்பியிருந்த சுருக்கமான பதில், அவளை மருமகளாக ஏற்கும் விருப்பத்தைக் குறிப்பாகத் தெரிவித்திருந்தது!
வெறும் சம்மதம் அல்ல… விருப்பம்! ஆவல்!
அதாவது, திருமணப் பொறுப்புகளை ஏற்று நடத்த மனைவியோடு உடனே கிளம்பி வருவதாக, மோனசுந்தரத்துடைய தந்தை எழுதியிருந்தார்!
அதெப்படி?
மகன், யாரோ ஒரு மேனா மினுக்கியின் வலையில் விழுந்து அவளை வீட்டுக்குள் கொண்டு வந்து, பீடத்தில் ஏற்றப் போகிறானோ என்று, அவர்கள் ஏன் அஞ்சவில்லை?
‘நாங்கள் வந்து பார்த்து, முடிவு செய்யலாம்’ என்றுகூடச் சொல்லவில்லையே!
“மகனிடம் அவ்வளவு நம்பிக்கை” என்றான் மோகனசுந்தரம், தோளை நிமிர்த்தி, “நான் எதையும் சரியாகச் செய்வேன் என்ற நிச்சயம். கிராமத்து வாழ்வுதான் மனதுக்குப் பிடித்திருக்கிறது என்று, தொழிலை முழுதாகக் கையில் கொடுத்துவிட்டுப் போகவில்லையா? முன்னேறிக் காட்டியிருக்கிறேனே, அதுபோலச் செய்வேன் என்கிற உறுதி!” என்று பெருமையோடு கூறினான்.
சரியாகச் செய்வாறா?. அப்படியானால் ஆறு மாதங்களுக்கு முன் அவளிடம் கேட்டதை, இந்த ‘தப்பு’ ‘சரி’யில் எதனோடு சேர்ப்பது?
ஆனால், இனி அதை அடியோடு மறப்பது அவளது மன அமைதிக்கு நல்லது!
தாயார் கனகலட்சுமி கனிவாகப் பேசினாள், கல்யாண சுந்தரத்தின் நடவடிக்கை, கொஞ்சம் அவருடைய தந்தையை நினைவூட்டுகிற மாதிரி இருக்கவே, சாருமதிக்கு மிகவும் நிம்மதியாக… மகிழ்ச்சியாகக் கூட இருந்தது.
கிராம வாழ்வு பிடித்தம் என்று ஊர்ப்பக்கம் ஒதுங்கிவிட்டாலும், தொழிலை அவர்கள் அடியோடு விட்டுவிடவில்லை. சூப்பர் மார்க்கெட்டுக்குத் தேவையான அரிசி, பல்வகை தானியங்கள், பயறுகள், காய்கள் என்று பலவும், அவர்களது சொந்த வயல்கள், தோப்புகள், நிலங்களிலேயே விளைவித்து அனுப்பினார்கள்.
ஓரளவு நல்ல லாபம் வைத்து விற்றாலும், தரமான பொருட்களை மற்ற விற்பனையாளர்களைக் காட்டிலும் குறைந்த விலைக்கே ‘உங்களுக்காக ‘வில் கொடுக்க முடிந்தது. இப்படித்தான்!
நல்ல ஐடியா என்று சாருமதிக்குத் தோன்றியது. நிர்வாகத்தில் தலையிடுவதாகத் தோன்றாதபோதும், விளை பொருட்கள் தேவைப்படும் அளவு, அவைகளுக்கான பணத்தை வாங்குவது போன்ற தொடர்புகளின் மூலம், மகன் தொழிலில் என்ன செய்கிறான் என்று, தந்தை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்!
ஆனால், மகனின் சொந்த வாழ்வில், இந்த கண்காணிப்பை ஏன் விட்டுவிட்டார்? தலையிட்டுப் பயனில்லை என்று ஆகிவிட்டதா? அதனால்தான், திருமணம் பற்றியும், உடனே ஒத்துக் கொண்டு விட்டார்களா?
இதற்கான பதில், ஒரு சாதாரண உரையாடலின்போது, மாமியார் கனகலட்சுமியின் மூலம், சாருமதிக்குக் கிடைத்தது.
ஆனால், கிடைத்தது, வெறும் பதில்தானே தவிர, நிம்மதி அல்ல.
– தொடரும்…
– கண்டு கொண்டேன் காதலை (நாவல்), முதற் பதிப்பு: 2011, அழகிய மங்கையர் நாவல்.