ஒரு மான் + ஒரு வலை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 6,388 
 
 

இந்த முறை எப்படியும் அந்த அழகிய பறவை தன் வலையில் வந்து விழுந்து விடும் என்றே அவன் உறுதியாக நம்பினான். இதற்கு முன்பு எப்போதும் அவனுடைய எந்த ஒரு கடிதத்துக்கும் அவளிடமிருந்து இப்படி ஒரு பதில் கிடைத்ததே இல்லை; அதாவது ஆதரவான பதிலும் கிடைத்ததில்லை. ஆட்சேபணையான பதிலும் கிடைத்ததில்லை. இப்போதுதான் முதன் முறையாக அந்தப் பூஞ்சிட்டு தன் பொன்னிறக் கரத்தினால் அவனுக்கு மறுமொழி எழுதியிருக்கிறது.

ஒரே ஒரு வரியில்தான் அந்தப் பதில் அமைந்திருந்தது. அதை ஒரு முழு வாக்கியம் என்று கூடச் சொல்லி விட முடியாது. ‘உங்கள் விருப்பப்படியே – சாயங்காலம் ஆறு மணிக்கு ஆறுமுகம் பூங்காவில், மேற்குக் கோடியிலுள்ள புல்வெளியில் சந்திக்கலாம்’ என்று தான் அதில் எழுதப்பட்டிருந்தது. ஒரு வாக்கியமானால் என்ன? முக்கால் வாக்கியமானால் என்ன? பதில் ஒன்று வந்திருக்கிறது என்பதே பெரிய காரியம்தான். பதிலே ஒரு நல்ல சூசகம். அந்தச் சிங்கார நளினக் குறுநகைச் செல்வியை எப்படியும் வசப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கை இப்போது அவனுக்கு இருந்தது. தேர்ந்த வேட்டுவனின் சாமர்த்தியத்துடனே இலக்குத் தப்பாமல் இடம் தப்பாமல் இந்த முறை வலையை வீசியிருந்தான் அவன். வீசுவதற்கென்ற தனி வலைகள் அவனுக்குத் தேவையில்லை. அவனே ஒரு பெரிய வலைதான். தன்னைப் பற்றிச் சக மாணவர்களும், கல்லூரியின் விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் மறைவில் ஒரு தினுசாகப் பேசிச் சிரிப்பதும், தனக்குக் ‘கோயில் காளை’ என்று பட்டப் பெயர் சூட்டியிருப்பதும் அவனுக்குத் தெரியாத விஷயங்களல்ல; எந்த விஷயமானாலும் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்பதில் அவனுக்கு அயராத நம்பிக்கை. ஹாஸ்டல் செலவுகளுக்கும், பாக்கெட் மணிக்கும் மாதா மாதம் பிறந்தால் ஆயிரம் ரூபாய்க்குச் செக் அனுப்பி வைக்கிற பணக்காரத் தகப்பனுக்கு ஒற்றைக்கொரு மகனாயிருக்கிறவன் கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்தால்தான் என்ன குடி முழுகிப் போகிறதாம்?

பல வேளைகளில் அவன் தன்னைப் பற்றித் தனக்குத் தானே பின்வருமாறு நினைப்பதுண்டு. – ‘நான் வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மருத்துவக் கல்லூரியின் அதிகாரிகளும், நிர்வாகிகளும் பெண்கள் ஹாஸ்டலுக்கும், ஆண்கள் ஹாஸ்டலுக்கும் நடுவில் இவ்வளவு பெரிய சுவரை எழுப்பி விட்டதற்காகப் பெருமையும் திருப்தியும் பட்டுக் கொள்ளலாம். ஆனால் இந்தச் சிமெண்ட் சுவரையும் கடந்து போய் ஆர்.எஸ். ராஜாவின் காரியங்களும்,செல்வாக்கும், காதல் கடிதங்களும் பரவ முடியும் என்பதை யாருமே மறுக்க முடியாது.”

அந்த மெடிகல் காலேஜ் எல்லைக்குள் அவன்தான் ராஜா. குறிப்பிட்ட ஏதாவதொரு கோணத்திலிருந்து பார்த்தால் மட்டும் ராஜாவானால் போனால் போகிறதென்று விட்டுவிடலாம். அவனோ எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் எப்படிப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் ராஜாதான். தோற்றம், சக மாணவர்களுக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பது, அழகும் தளுக்கும், மினுக்குமுள்ள பகட்டு நிறைந்த மாணவிகளை ‘மாட்னி ஷோ’வுக்கு அழைத்துப் போவது, வருட ஆரம்பத்தில் புதிய மாணவ மாணவிகளை அளவுக்கதிகமாகவே ‘ராகிங்’ வம்புகளுக்கு ஆளாக்கி மகிழ்வது போன்ற பல காரியங்களில் ஏகசக்ராதிபதி அவன். ‘ஒரு கொழுப்பு நிறைந்த கோயில் காளையின் திமிரும், மாதம் ஆயிரம் ரூபாய் செலவழிக்க முடிந்த ஒரு தத்தாரியின் அல்லது ஊதாரியின் சுகானுபவங்களும் உள்ளவன் எங்காவது ஒரு நல்ல மாணவனாக இருக்கமுடியுமா?’ என்று நீங்கள் கேட்க விரும்பலாம். நல்லவனாயிருப்பது வேறு; வல்லவனாக இருப்பது வேறு; இந்த இருபதாவது நூற்றாண்டில் பல விதத்திலும் நல்லவனாக இருப்பதைக் காட்டிலும் வல்லவனாக இருப்பதுதான் புத்திசாலித்தனமான காரியம். எனவே நமது திரு.ஆர்.எஸ். ராஜா நல்லவனாக இல்லாவிடினும் பல விஷயங்களில் வல்லவனாக இருந்தான்.சீனியர் மாணவன் என்ற முறையில் மற்றவர்களையும் கட்சி சேர்த்துக் கொண்டு அந்த ஆண்டுக் கல்லூரித் தொடக்கத்தில் புதிதாக வந்த மாணவ மாணவிகளை ஆர்.எஸ். ராஜா படுத்திய ‘ராகிங்’ கொடுமைகளை மாதிரிக்குக் கொஞ்சம் பார்க்கலாம்.

சில மாணவிகளின் இரட்டைப் பின்னல்களில் ஊசிப் பட்டாஸ்கள் சரம் சரமாகக் கட்டி வெடிக்கப்பட்டன. மாணவர்களைப் பனியனோடு நிறுத்தி முதுகு வழியாகப் பனியனுக்குள் ஐஸ் கட்டிப் போடப்பட்டது. டான்ஸ் தெரிந்த தோஷத்திற்காக ஒரு புதிய மாணவி ‘குறத்தி’ டான்ஸுக்குரிய குறவஞ்சி வேஷம் போட்டுக் கொண்டு வரச்சொல்லி வற்புறுத்தப்பட்டாள். வேறு வழியின்றி அவளும் அப்படியே செய்ய வேண்டியதாயிற்று. இந்த மாதிரி ‘ராகிங்’ ஆர்.எஸ்.ராஜாவின் ஒவ்வொரு நாள் வாழ்விலும்கூட உண்டுதான். ஒரு பெரிய பணக்கார வியாபாரியின் ஏகபுத்திரனாகிய திரு. ஆர். எஸ். ராஜாவின் மருத்துவக்கல்லூரி வாழ்க்கையில் விசேஷ அம்சங்கள் இரண்டு. ஒன்று ஹாஸ்டல் முதலிய செலவுகளுக்காகவும் மாதா மாதம் ஆகிற ஆயிர ரூபாய்ச் செலவு.இரண்டு நாளொரு மாணவியும் பொழுதொரு கேர்ள் பிரெண்டுமாக அவன் சினிமா தியேட்டர்களையும் நவநாகரிக ஸில்க் புடவைக் கடைகளையும் சுற்றிக்கொண்டிருப்பது. இதைத் தவிர கிரிக்கெட் மேட்ச், ஸ்விம்மிங்பூல், பிக்னிக், கல்லூரியின் சக மாணவர்களோடு அரட்டை எல்லாம் வகைக்குக் கொஞ்சமாக அவனிடம் உண்டு; மாணவிகளை – அதுவும் கொஞ்சம் அழகாக நிறமாக இருக்கிற மாணவிகளைக் கண்டால் ஆர்.எஸ்.ராஜா வலுவில் போய் எதிர்கொண்டு சிரித்துச் சிரித்துப் பேசுவான். அவ்வளவு சொல்லுவானேன்? அவன் மற்றவர்களுக்கு விரிக்கிற வலை என்று தனியாக ஏதுமில்லை; அவனே ஒரு பெரிய வலைதான்!

“மிஸ் நளினி! யூ ஆர் லுக்கிங் ஸோ நைஸ் வித் திஸ் புளு ஸாரி..” என்று திடீரென்று அந்த நளினியே வெட்கப்படுமாறு அந்த உடையின் வண்ண வனப்பை அவளிடமே வியப்பான் திரு ஆர்.எஸ்.ராஜா. வாயரட்டையிலும் தங்கள் அழகோடு சார்த்தப்பட்டு வெளிவரும் புகழிலும் மயங்காத பெண் பிள்ளைகளும் இந்த நவநாகரிக உலகில் உண்டா? எனவே திருஆர்.எஸ்.ராஜாவின் புகழ் வலையில் விழுகிற மாணவி. பலவீனமான மனமுள்ளவளாயிருந்தால் அடுத்த சில நாட்களில் அவனோடு ஏதாவது ஒரு சினிமாத் தியேட்டரில் ஒரு மாடினிஷோவில் அவளையும் சேர்த்துப் பார்க்கலாம்.

திரு. ஆர்.எஸ்.ராஜாவுக்கு மெடிகல் காலேஜில் பிராக்டிகல், தியரி என்று மாற்றி மாற்றி உயிரை எடுக்கும் வைத்திய சாஸ்திர வகுப்புகளிலே சொல்லிக் கொடுக்கப்படுகிற கனமான விஷயங்களைத் தவிர வெளி உலகிலுள்ள மற்ற எல்லா விஷயங்களும்தான் நன்றாகப் பிடிப்பட்டன. பெர்ரிமாஸான், குவாலிடி ஐஸ்கிரீம், புதுப்புதுத் திரைப்படங்கள், அவ்வப்போது அருகில் வந்து நெருங்கிப் பழகியதும் சலித்துப்போகிற ‘கேர்ள் ஃபிரண்டுகள்’, நல்ல கோல்ட் பிளேக் சிகரெட், பாய் மீட்ஸ் கேர்ள் கதைகள் இவற்றில் எல்லாம் சுவை இருந்த மாதிரி மெடிகல் காலேஜின் படிப்பில் அவனுக்குச் சுவை தெரியவில்லை. காரணம் ஒழுக்கமும், உழைப்பின் சிரமமும் தெரியாத ஒரு பணக்கார அப்பாவின் ஒரே ஒரு பிள்ளையாகப் பிறந்துவிட்ட அவனை மூப்புப் பிணி சாக்காடு அறியாதபடி ‘புத்தரை’ வளர்த்ததுபோல் படிப்பு, ஒழுக்கம், உழைப்பின் மகிமை அறியாத கோயில் காளையாக அவன் பெற்றோர் வளர்த்துவிட்டதுதான். புத்தி ஒன்றாவது ஏழையின் சொத்தாக இருப்பதற்குப் பணக்காரர்கள் மீதம் விட்டிருக்கிறார்களே என்பதுதான் திரு ஆர்.எஸ்.ராஜாவைப் பார்த்து மற்ற ஏழை மாணவர்கள் பெருமைப்படுவதற்கு மீதமிருந்த ஒரே ஒரு விஷயம்.

பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அவனைக் கடிந்து கொண்டு ஒன்றும் சொல்வதில்லை. சொல்லவும் முடியாது. லைப்ரரி புத்தகத்தில் அல்லது நாவல் புத்தகத்தில் காதல் கடிதம் எழுதி வைத்து மாணவிகளிடம் கொடுப்பது, அதே போல் மடிப்புக் காகிதம் சொருகி வைத்து மாணவிகளைச் சினிமாவுக்கு அழைப்பது போன்ற காரியங்கள் அவனுடைய அன்றாடக் கல்லூரி வாழ்நாளில் சர்வ சகஜமாக நிகழ்பவை. அவர் தன்னைக் கவர்கிற கல்லூரி மான்களுக்கு விரிக்கிற முதல் வலை நேரிடையாகப் புகழ்வது, அல்லது புத்தகங்களில் கடிதம் வைத்துக் கொடுப்பதுதான். பெரும்பாலும் இந்த வலைகளில் மான்கள் விழுவதுண்டு. அபூர்வமாக விழாமல் போவதும் உண்டு. காலம் பொறுத்துத் தயங்கித் தயங்கி விலகிப்போய்ப் பின்னால் நிதானமாக வந்து விழுகிற மான்களும் உண்டு. வலையை அறுக்கிற அளவு வன்மையான முரட்டு மான்கள் அவனிடம் இதுவரை எதிர்ப்பட்டதே இல்லை.

அந்த வருடம் முதலாண்டு எம்.பி.பி.எஸ்ஸில் சேர்ந்திருக்கிற புள்ளிமான் ஒன்றிற்குக் குறிவைத்து ஆர்.எஸ்.ராஜா வீசிய வலைகள் எல்லாம் கடந்த ஆறு மாத காலமாகத் தப்பிக் கொண்டேயிருந்தன. அந்தப்புள்ளிமானின் பெயர் மனோரஞ்சிதம் வயது – அதைப் பதினேழு என்றோ பதினெட்டு என்றோ நம்பரில் சொல்வதைவிட ‘இளமை மெருகேறி நகை புரியும் இன்ப வாலிபம்’ என்று இப்படிப் பாஷையால் சொல்வதுதான் சாலப் பொருத்தம்.

மனோரஞ்சிதத்தின் நடை, உடை, புன்னகை, பேச்சு, குரல், சரீர வாளிப்பு எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து நமது கதாநாயகனான திருஆர்.எஸ்.ராஜா நாளுக்கு நாள் உருகிக் கொண்டிருந்தான். கடைசியில் அந்த உருக்கத்துக்கும் தவிப்புக்கும் இப்போது வழி பிறந்துவிட்டது.

அவன் புத்தகங்களில் சொருகிச் சொருகி அனுப்பிய காதல் கடிதங்களுக்கும், நேரில் குழைந்து குழைந்து பேச முயன்ற காதல் மொழிகளுக்கும் செவி சாய்க்காமல் மில்லியன் டாலர் பெறுகிற ஒரு மயக்குப் புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு அலட்சியமாகப் போய்க் கொண்டிருந்த மனோரஞ்சிதப் புள்ளிமான் கடைசியில் அவனைச் சந்திப்பதற்கு ஆறுமுகம் பூங்காவைத் தேடி வருவதாக இப்போது இப்படி ஒப்புக் கொண்டுவிட்டது. அவன் இந்த மனோரஞ்சித மானுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் அவள் புகைப்படம் ஒன்றைக் கேட்டு வைத்திருந்தான்; ஒருவேளை அவள் புகைப்படத்தோடு வந்தாலும் வரலாம் என்ற எண்ணம் ஞாபகம் வரவே அவளிடம் கொடுப்பதற்குத் தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் உடனே தயார் செய்து ஞாபகமாக எடுத்து வைத்துக்கொண்டான் திருஆர்.எஸ்.ராஜா. அன்று அவனுடைய நினைவில் ஆறுமுகம் பூங்காவையும் சாயங்காலம் ஆறுமணியையும் அங்கு தன்னைச் சந்திக்க வரப்போகும் மனோரஞ்சித மானைப் பற்றியுமே எண்ணங்கள் மோதிச் சுழன்று கொண்டிருந்தன.

‘ஏ. ஆர்.எஸ்.ராஜா! உனக்கு மற்றவர்களை வளைக்க வேறு வலை எதற்கடா? நீயே மற்றவர்களை வீசிப் பிடிக்கும் ஒரு பெரிய வசீகர வலையாயிற்றே?’

இது நிற்க. ஆறுமுகம் பூங்காவைப் பற்றி இங்கு சில வார்த்கைள் அவசியம் சொல்லியாக வேண்டும். அந்த மெடிகல் காலேஜ் கட்டிடங்களின் வலது பக்கத்தில் பெண்கள் ஹாஸ்டலுக்கும் மாணவர்கள் ஹாஸ்டலுக்கும் பின்புறமாக உள்ள சந்து வழியைக் கடந்து பத்தடி நடந்தால் எதிரே தென்படும் இந்தப் பெரிய பூங்காவின் முக்கியத்துவம் அந்தக் கல்லூரியின் ஒவ்வொரு மாணவனுக்கும் தெரியும். அந்தக் காலேஜின் ‘லவ் மியூஸியம்’ அல்லது ‘லவ்வர்ஸ் வாக்’ இதுதான். அந்த நகரில் எந்தக் காலத்திலோ முனிசிபல் சேர்மனாக இருந்து மறைந்துவிட்ட யாரோ ஒர் ஆறுமுகத்தின் பெயரையே இந்தப் பூங்காவுக்கு வைத்திருந்தார்கள். வகுப்புகளுக்கு மட்டம் போடுகிற மாணவர்கள் போய் உட்கார்ந்து மற்ற மாணவ மாணவிகளிடம் அரட்டை அடிக்கிற இடமும் இந்த ஆறுமுகம் பூங்காதான். சில நாட்களில் வகுப்புகளிலே அட்டெண்டன்ஸ் நிறையும்படி பிரஸ்ண்ட் போட வேண்டுமானால் ரிஜிஸ்தரை இந்தப் பூங்காவுக்கே எடுத்துவந்துவிட வேண்டும் போல நிலைமை அவ்வளவு மோசமாகிவிடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆறுமுகம் பூங்கா அந்த மெடிகல் காலேஜின் பிருந்தாவனமாக இருந்தது.மாணவர்களாகிய கோபாலர்கள் கோபிகைகளை நாடும் கலியுக பிருந்தாவனமாக ஆறுமுகம் பூங்கா விளங்கிவந்தது என்று வேண்டுமானால் இன்னும் தெளிவாக வைத்துக் கொள்ளுங்களேன்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. மேற்படி சுபயோக சுபதினத்தில் சரியாகச் சாயங்காலம் ஆறு மணிக்குப் படிய வாரிவிட்ட தலையும் நன்றாக டிரஸ்செய்து கொண்டிருந்த தோற்றமுமாக ஒரு காதல் கதாநாயகனுக்குரிய சகல லட்சணங்களுடன் ஆறுமுகம் பூங்காவின் தென் திசைக்கோடியில் – யமன் திசையில் பிரவேசித்தான் நமது கதாநாயகனாகிய திரு. ஆர். எஸ். ராஜா. மிஸ் மனோரஞ்சிதம் அங்கே அவனை எதிர்பார்த்துத் தயாராகக் காத்திருந்தாள். மஞ்சள் வாயில் புடவையும் நீலப்பட்டு ரவிக்கையும் ரோஸ் தாவணியுமாக மனோரஞ்சிதம் அன்று பிரமாதமாக டிரஸ் செய்து கொண்டு வந்திருந்தாள். அவளுடைய ‘மில்லியன் டலார் ஸ்மை’லாகிய அந்தக் கவர்ச்சிக் குறுகை அவனை வரவேற்றது. அவளருகே ஒட்டினாற்போல் அமர்ந்துகொண்டு,

“ஓ! யூ ஆர் லுக்கிங் வெரி நைஸ் டுடே ஸோ ப்யூட்டி புல்” என்று வழக்கம் போலவே கம்பீரமாக ஆரம்பித்தான் திரு. ஆர்.எஸ்.ராஜா. அவள் அதை அவ்வளவு சுவாரஸ்யமாகவோ இலட்சியம்செய்தோ கேட்காவிட்டாலும் போலியாக நாணுவதுபோல நடித்தாள். கையில் கொண்டு வந்திருந்த சிறிய காகித உறையைப் பிரித்துத் தன்னுடைய புகைப்படத்தை அவள் புல் தரையில் மெளனமாகச் சிரித்துக்கொண்டு எதிரே எடுத்து வைத்தவுடன் – தனக்காகத்தான் அவள் அதை கொடுக்கிறாள் என்று எண்ணிக் கொண்ட அசட்டு ஆர்.எஸ்.ராஜா உடனே தன்னுடைய சட்டைப் பையிலிருந்து தனது புகைப்படத்தை எடுத்து அவள் படத்துக்குப் பதிலாக மாற்றிக் கொள்வதுபோல் புல் தரையில் எதிரே வைத்தான். அவன் தன் படத்தை எடுத்து எதிரே வைத்ததைப் பார்த்ததும் அவள் பொறுக்க முடியாமல் கொல்லென்று சிரித்துவிட்டாள்.

ஆ! அது ஒரு ஐம்பது மில்லியன் டாலர் பெறுகிற சிரிப்பாக இருந்தது.

“என்ன மிஸ்டர் ராஜா விளையாடுகிறீர்களா நீங்கள்? வருகிற மாதம் நம் மாணவர் யூனியனிலிருந்து ஷயரோக நிவாரண நிதிக்காக வெளியிடப் போகிற சிறப்பு மலருக்குக் கட்டுரை கொடுப்பவர்களும், புகைப்படம் கொடுப்பவர்களும் உங்களிடமே தரவேண்டுமென்று முந்தாநாள் சர்க்குலர் வந்ததே? நீங்களே அதை மறந்து விட்டீர்களா? நாங்களெல்லாருமே உங்களிடம் படத்தைக் கொடுக்க வேண்டியிருக்க நீங்கள் உங்களது படத்தை என்னிடம் கொடுத்து என்ன ஆகப்போகிறது? இரண்டு படமும் உங்களிடமே இருக்கட்டும்” .

இதைக் கேட்டதும் ஆர்.எஸ்.ராஜாவின் முகத்தில் நிச்சயமாக அசடு வழிந்தது. அவன் தன்னுடைய நூற்றுக்கு நூறு சதவிகித ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

“மலரில் வெளியிட ‘பிளாக்’ எடுத்ததும் உங்களது இந்தப் படத்தை நானே வைத்துக் கொள்ளப் போகிறேன் மிஸ் மனோரஞ்சிதம்!” என்றான் திரு ஆர்.எஸ்.ராஜா,

“ஓ! பேஷாக வைத்துக்கொள்ளுங்கள் மிஸ்டர் ராஜா! இதோ இப்பொழுதே படத்தின் பின்புறம் உங்களுக்கென்று எழுதிக் கையெழுத்துக்கூடப் போட்டுத் தந்துவிடுகிறேன்” என்று கூறியபடியே அந்தப்படத்தை எடுத்து, “அருமைச் சகோதரர் மாணவ நண்பர், திருஆர்.எஸ்.ராஜா அவர்களுக்கு என் நினைவாக” என்று எழுதிச் சிரித்துக் கொண்டே அவள் கையெழுத்திட்டபோது ஆர்.எஸ்.ராஜாவின் முகத்தில் அசடு வழிவது மாறித் தீர்மானமாக அரை லிட்டர் ஆயிலே வழிந்தது.

“பரவாயில்லை மனோரஞ்சிதம், உங்களது படத்தை நான் உங்கள் ஞாபகமாக வைத்துக் கொள்வதுபோல் என் ஞாபகமாக நீங்கள் எனது இந்தப் படத்தையாவது வைத்துக் கொள்ளலாம்” என்று அவன் தன் படத்தை எடுத்து அவளிடம் நீட்டியபோது,

“நோ நோ! வெறும் படத்தைச் சும்மா கொடுத்தால் எப்படியாம்? ஏதாவது எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால்தான் நல்லது; இதோ நானே உங்கள் படத்தின் பின்புறம் எழுதுகிறேன்; நீங்கள் கையெழுத்து மட்டுமாவது போட்டுக் கொடுங்கள்” என்று சொல்லி மூன்றாவது முறையாகவும் ஒரு மில்லியன் டாலர் ‘ஸ்மைலை’ உதிர்த்துவிட்டு ‘என் உடன்பிறவாச் சகோதரி அருமைத் தங்கை மனோரஞ்சிதத்துக்கு என் பாசத்தின் நினைவாக’ என்று எழுதி-அப்படி எழுதியதைக் கையால் மறைத்துக்கொண்டு, “ப்ளீஸ்! இங்கே கீழே ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க” என்றதும் ஆர்.எஸ்.ராஜா, அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் உடனே கையெழுத்துப் போட்டுவிட்டான். தேதியும் போடச் சொல்லிவிட்டு மற்றொரு மில்லியன் டாலர் ஸ்மைலை அவள் உதிர்த்தாள். ஆர்.எஸ்.ராஜா தேதியும் போட்டுக் கொடுத்தபிறகு தான் அவள் மேலே மறைத்திருந்த தன் கையை எடுத்தாள். ‘உடன் பிறவாச் சகோதரி மனோரஞ்சிதத்துக்கு’ என்பது போல அங்கு எழுதியிருந்ததைப் பார்த்தவுடனே ஆர்.எஸ்.ராஜாவின் முகத்தில் இன்னும் அரை லிட்டர் ஆயில் அதிகமாக வழிந்தது. ஆர்.எஸ்.ராஜா முயற்சி திருவினை ஆக்குவதில் இப்போது இறுதியாக நம்பிக்கை இழந்தான். அந்தகோ! அவனுக்கு உங்கள் அனுதாபங்கள் தேவை!

இப்போது அவள் தொடங்கினாள். “பை தி பை மிஸ்டர் ஆர்.எஸ்.ராஜா! நான் இன்னிக்கு உங்களை இங்கே சந்திக்க வந்ததே ஒரு முக்கியமான காரியமாகத்தான். அதை மறந்தே போயிட்டேனே… பேரண்ட்ஸ்கிட்ட இருந்து மணியார்டர் இன்னும் வரல்லே, ஹாஸ்டல் பீஸ் கட்டணும். ஷாப்பிங் வேறே இருக்கு ஒரு நூறு ரூபாய் பணம் அவசரமா வேணுமே… உங்களுக்கு ரொம்ப இளகின மனசுன்னு எல்லாருமே சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.நீங்க அவசியம் இப்பவே தந்துதான் ஆகணும். ஒன் வீக்கிலே இதை நான் திரும்பத் தந்துடுவேன்.”

உடனே ஆர்.எஸ்.ராஜா தன் சட்டைப் பையிலிருந்து நல்ல சலவை நோட்டுக்களாகப் பத்துப் பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து எண்ணி அவனிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கிக் கொண்டு ஒரு மில்லியன் டாலர் ஸ்மைலை ஐந்தாவது தடவையாக உதிர்த்துவிட்டு, ‘அகோ! சுந்தரகேசரிப் பதுமையே கேளும்’ என்கிற விக்கிரமாதித்தன் கதைப்பாணியில் அவனைக் கோபத்தோடு விளித்துப் புகல்வாள்.

“மிஸ்டர் ராஜா!. நன்றாகக் கேட்டுக் கொள்ளும்! இனிமேல் நீர் யாரிடமாவது என்னைக் காதலிப்பதாகப் பேசிக் கொண்டு திரிந்தாலோ, எனக்கே புத்தகத்தில் கடிதம் வைத்துக் கொடுத்தாலோ, இந்தப் போட்டோவில் ‘உடன் பிறவாச் சகோதரிக்கு’ என்று நீரே எழுதிக் கையெழுத்திட்டிருப்பதைக் காண்பித்து உம்முடைய மானத்தை வாங்கிவிடுவேன். அப்புறம் மரியாதை தவறிவிடும். என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர் நீர்? கண்ட கண்ட இடத்தில் எதிரே வந்து நின்று பல்லை இளிப்பதும், குழைவதும் கொஞ்சம்கூட நன்றாயில்லை. நாங்களெல்லாம் படிப்பதற்காக ஆயிரம் சிபாரிசு பிடித்து அலைந்து மெடிகல் காலேஜ் அட்மிஷனுக்கு வழி செய்து கொண்டு மிக மிகச் சிரமப்பட்டு இங்கே வந்திருக்கிறோம். உம்மைப் போன்ற சோம்பேறிகளைக் காதலிப்பதைவிட எத்தனையோ முக்கியமான காரியங்களெல்லாம் எங்களுக்கு இருக்கின்றன.”

திரு ஆர்.எஸ்.ராஜாவுக்கு ஒரே அதிர்ச்சி. அவன் வழக்கம்போல் மானுக்கு வலை விரித்தான். வழக்கமில்லாத அபூர்வமாக அதில் ஒரு புலிக்குட்டி வந்து விழுவதுபோல் விழுந்து அவனையும் அவன் வலையையும் சேர்த்தே கடித்துக் குதறி எறிந்துவிட்டது.

“ரெண்டு மூணு தமிழ் சினிமாப் படத்திலே வர்ர காதல் சீனைப் பார்த்துவிட்டு அஞ்சாறு தமிழ்ப் பத்திரிகையிலே வர்ர ‘பாய் மீட்ஸ் கேர்ள்’ கதைகளைப் படிச்சிப்பிட்டு இனிமேலாவது இப்படி அசடாகத் திரியாதீர் மிஸ்டர் ஆர்.எஸ்.ரா!” என்று கடைசியாக அவள் இரைந்து சாடி விட்டுப் புலியாக எழுந்து விரைந்தபோது நமது கதாநாயகனான ஆர்.எஸ்.ராஜா ஆறுமுகம் பூங்காவின் புல் தரையில் நிராதரவாகக் கிடந்தான்.

‘அவன் விரிப்பதற்குத் தனி வலை தேவையில்லை. அவனே ஒரு பெரிய வலை’ என்ற அவனது ஆதிகாலத்து ஒரிஜினல் புகழ் அன்றுடன் காலாவதி ஆனதுபோல் பாவித்துக்கொண்டு காதல் போர்க்களத்தில் தோற்ற தோல்வியைக் கொண்டாடு முகத்தான் அன்றிரவே ஒரு முழுப் பெர்ரி மாஸானையும் – இருபது ‘பாய் மீட்ஸ் கேர்ள்’ கதைகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டு அப்புறம் நம் திரு. ஆர். எஸ்.ராஜா தூங்க முயன்ற சமயத்தில் இநத் உலகத்தில் பொழுது விடிந்திருந்தது! பாவம்! அதனால் என்ன? விடிந்தால் தூங்கக்கூடாதென்று யார் சொன்னது? இரவில் தூங்காமல் இருப்பதற்கு நம் ஆர்.எஸ்.ராஜாவுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவுக்குப் பகலில் தூங்குவதற்கும் உரிமை உண்டு. “காலேஜ் என்ன ஆகிறது? படிப்பு என்ன ஆகிறது?” என்று நீங்கள் கேட்கிறீர்களா? அதற்காகவா நம் ராஜா இங்கு வந்திருக்கிறான்? பெர்ரி மாஸன், குவாலிடி ஐஸ்கிரீம், கோல்ட்பிளேக் சிகரெட், ‘பாய் மீட்ஸ் கேர்ள்’ கதைப் புத்தகங்கள், கேர்ள் ஃப்ரண்ட்ஸ், மாட்னி ஷோ – இப்படி எவ்வளவோ இருக்கும்போது படிப்பு ஒன்றை மட்டும் கட்டிக் கொண்டு அழ யாரால் முடியும்? யாரால் முடிந்தாலும் நம் ஆர்.எஸ்.ராஜாவுக்கு அந்தத் தாகமெல்லாம் வருவதற்குக் குறைந்த பட்சம் அவன் சோற்றுக்கு லாட்டரி அடிக்கிற ஏதாவதொரு ஏழைக் குடும்பத்திலாவது பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டுமோ என்னவோ?

– கல்கி, 15.11.1964, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *