அனுஷாவும் நவீனும் இளம் காதலர்கள்.
அனுஷா நவீனிற்கு தினமும் மார்னிங் மெஸேஜ் அனுப்புவாள். அவள் அனுப்பும் மெஸேஜிற்கு அவன் ரிப்ளை பண்ணினதில்லை.
அவனிடமிருந்து ஒரு மெஸேஜாவது வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.
சரி அவன் குரலையாவது கேட்கலாமென்று அவனுக்கு போன் பண்ணினாள். தி சப்ஸ்க்ரைபர் யூ ஆர் காலிங் இஸ் பிஸி ஆன் அனதர் கால் என்று வந்தது.
மீண்டும் அவன் நம்பரை ட்ரை பண்ணினாள். இப்போ ரிங் அடித்தது. நவீன் அவள் கால்லை அட்டெண்ட் பண்ணவில்லை.
போனை எடுடா. என்கிட்ட பேசுடா அனுஷாவின் தாங்காத ஏக்கம் அழுகையாக வெடித்தது.
ஏண்டா இப்படி அலைய விடுறீங்க. ஒரு சின்ன ஆசையை கூட நிறைவேற்ற மாட்டியா… அழ வெச்சு பார்க்கிறதுல அப்படி என்னடா ஒரு சந்தோஷம்.
திருந்தமாட்டீங்களாடா நினைத்த வேளையில் செல் அதிர்ந்தது. எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து தான்.
நீ எந்த நேரமும் என்னைபற்றி நினைச்சு கிட்டிருக்கணும்ங்கிறதால் தானே இது மாதிரி நடந்து கொள்கிறேன். என் மேல் காதல் இருப்பதால் தானே சீண்டி பார்த்து விளையாடுகிறேன். என் மனதில் நீ மட்டும் தானே இருக்கிறாய். போதுமா இது உனக்கு.
ஏங்கிய அவள் நெஞ்சம் இப்போது சந்தோஷத்தில் சிறகடித்து பறந்தது.
அது ஒரு பார்வர்டு மெசேஜ் என்பது தெரியாமல்.
– அனிதா குமார் (திசெம்பர் 2013)