என் பெயர் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 17,601 
 
 

அம்மா பெயர் மங்களம். அதை முதன்முதலில் தெரிந்துகொண்டபோது, “எப்படிம்மா இந்தப் பேரு வெச்சாங்க?” என்று கேட்டேன்.

“என் பாட்டி பேரு,” என்றாள்.

“என் பேருமட்டும் ஏன் பிரேமா?” பாட்டியின் பெயர் பிரேமா இல்லை.

“ஒன் கேள்விக்கெல்லாம் யாரால பதில் சொல்ல முடியும்?” என்று அம்மா அலுத்துக்கொண்டாள். இருந்தாலும் சொன்னாள், “இந்தப் பேரு அழகா, நாகரீகமா இருக்குன்னு அப்பாதான் வெச்சார்!”

பெயர்களும் பொருளுள்ள வார்த்தைகள்தாம் என்று பிறகு தெரிந்தது. பத்து வயதில் நான் அகராதி பார்க்கக் கற்றுக்கொண்டதும் தேடிய முதல் வார்த்தையின் பொருள் — காதல். ஆம், என் பெயரின் அர்த்தம்தான். நேரே அம்மாவிடம் போய், “காதல்னா என்னம்மா?” என்று கேட்டேன்.

அவள் முகம் போன போக்கைப் பார்த்து, கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. “என்னமாதிரி புஸ்தகம் எல்லாம் படிக்கிறே நீ?” என்று இரைந்தாள்.

அன்றையிலிருந்து இன்றுவரை — அதாவது, எனக்குத் திருமணம் ஆகும்வரை — என் பெயரின் பொருளைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

“ஏண்டி பிரேமா! ஒன்னைப் பாத்தா ஒரு கல்யாணப்பொண்ணுமாதிரியா இருக்கு? ஒரு சிரிப்பு, ஒரு வெக்கம், அலங்காரம் ஒண்ணையும் காணோமே!” என்று அரற்றிய அம்மா, நான் வழக்கம்போல் காதில் வாங்காமல் இருந்ததைப் பார்த்து, “ஏ பிரேமா! ஒன்னைத்தான்!” என்று உரக்கக் கத்தினாள்.

நான் புத்தகத்திலிருந்து கண்ணைச் சிரமப்பட்டு விலக்கி, எதிரே நின்றிருந்த அம்மாவிடம் பதித்தேன். பெயருக்கு ஏற்ப, மங்களகரமாக — நெற்றி நிறைய குங்குமமும், காதோரம் இழைத்த மஞ்சள் பூச்சுமாய் நின்றிருந்தாள்.

“என்ன புதுசாப் பாக்கறே?” அம்மாவின் குரலில் எரிச்சலுடன் சிறிது பெருமையும்கூட.

அது என்னவோ, நான் சும்மா பார்த்தால்கூட உற்றுப் பார்ப்பதுபோல்தான் எல்லாருக்கும் தோன்றுகிறது. இப்படிப் பார்க்கிறேனே தவிர, ஒருவருடைய முகத்தையும், என்னுள் பதித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை. அத்தை மூக்குத்தி போட்டிருக்கிறாளா, இல்லையா, சித்தப்பா கண்ணாடி அணிவாரா — இந்தமாதிரி கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆனால், பிறருடைய வெளிப்புறத்தையும் மீறி, அந்தரங்கத்தில் உள்ள எதிலேயோ என் மனம் பதிந்துவிடும், என்னையும் அறியாமல்.

இன்னது பற்றித்தான் சிந்திக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குக் கிடையாது. செடியிலிருந்து ரோஜாப்பூவைப் பறிக்கப்போய், ‘உன்னைக் கிள்ளினால் உனக்கு வலிக்காதா?’ என்று அந்த சிவந்த மலர் என்னைக் கெஞ்சி அழுவதுபோல் தோன்ற, அதன் பயத்தில், துக்கத்தில், நானும் பங்கு கொண்டவளாய், கண்ணீர் சிந்தியிருக்கிறேன் பலமுறை.

தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவரின் உதடு எப்படி ஊதா நிறமாகத் தெரிகிறது என்ற யோசனை வரும். அவர் ஓயாமல் புகைபிடிப்பவராக இருக்க வேண்டும், கறுத்த உதடுகள் அதிப்பிரகாசமான மின்வெளிச்சத்தில் நிறம் மாறித் தெரிகின்றன என்று கண்டுபிடிப்பேன்.

“பிரேமா!” அம்மாவின் குரல் கெஞ்சலாக ஒலிப்பது வெகுதூரத்திலிருந்து வருவதுபோல் ஒலித்தது. “இப்படி எங்கேயோ போயிடாதே. இத்தனை வருஷமும் பரவாயில்ல. இப்ப புருஷன் வீட்டுக்குப் போகப்போற பொண்ணு நீ! அங்கேயாவது ஒன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு கவனமா இருடி. இப்படி இருந்தியானா, ‘சித்தப்பிரமை’ன்னு நெனைச்சுப்பாங்க!”

அம்மாவின் அறியாமையைக் கண்டு எனக்குப் பாவமாக இருந்தது.

‘எல்லாரையும்போல இருடி!’ எனக்கு ஓயாமல் வழங்கப்பட்ட அறிவுரை.

நானும் முயன்றுதான் பார்த்தேன். ஆனால், மற்ற பெண்கள் விரும்பிப் பேசும் எதிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எவள் எந்தப் புடவை கட்டினால் என்ன, வீட்டு வேலைகளை அவரவர் செய்யும் நேர்த்தியைப்பற்றி அப்படி ஓயாமல் பேசாவிட்டால்தான் என்ன! அவர்களுடைய அறிவும், ஆர்வமும் ஏதோ வேண்டாத இலக்கை நோக்கிப் பாய்வதுபோல் இருந்தது எனக்கு.

முதலில் என்னையும் தங்களைப்போல் மாற்ற முயன்று, அடுத்து நான் இப்படி ஒருவருடனும் ஒட்டாமலிருப்பதன் காரணகாரியங்களை — சிறிது வம்பையும் கூடவே கலந்து — ஆராய்ந்து, இறுதியில் என்னால் அவர்களுக்கு ஒரு தொல்லையும் வராது என்று புரிந்தவுடன், என்னை என் வழிக்கே விட்டுவிட்டார்கள் என்னுடன் பழக நேரிட்டவர்கள். நானும் சௌகரியமாக என் எண்ணங்களிலேயே மூழ்கிப்போனேன்.

இப்போது விஞ்ஞானம் படித்து, அதில் பட்டமும் வாங்கியதும்தான் தெரிகிறது நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று. மனித மூளையில் இரு பகுதிகள், வலம், இடம் என்று. என்னைப் போன்றவர்களுக்கு வலப்புறத்தின் ஆதிக்கம் அதிகம். ஓயாத எண்ணங்களும், கற்பனையும் இதன் வேலை. அம்மாமட்டும் அவ்வப்போது என்னை உசுப்பி இருக்காவிட்டால், யோசித்து, யோசித்தே ஞானியாக ஆகியிருப்பேனோ, என்னவோ!

சாதாரணமாக, சிறு குழந்தைகள் மட்டும்தான் இப்படி இருப்பார்கள். உலகத்தை ஒட்டி அவர்களை வாழவைக்கும் முயற்சியில் பெரியவர்கள்தாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் அந்த இன்பத்தை அபகரித்து விடுகிறார்கள்.

என் போக்கைப் பார்த்துப் பயந்துகொண்டிருந்த அம்மா என் திருமணப்பேச்சை எடுக்கத்தான் எவ்வளவு பயந்தாள்!

“ஒரு பொண்ணு கொடிமாதிரி. அதைப் படரவிடுகிற கொழுகொம்புதான் புருஷன்,” என்று ஏதேதோ அளந்தாள்.

அம்மா இவ்வளவு சிரமப்பட்டிருக்கவே வேண்டாம். ‘காதல்’ என்ற வார்த்தை அகராதியிலும், கதைப்புத்தகங்களிலும்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருகிற அளவுக்கு எனக்குள் ஆயாசம் பிறந்திருந்தது. இல்லாத ஒன்றைத் தேடுவதைவிட, எல்லாரும் காட்டும் வழியில் போய்த்தான் பார்ப்போமே என்ற விரக்தியுடன், எதிர்ப்பே தெரிவிக்காது இருந்துவிட்டேன்.

அம்மாவுக்குக் கொள்ளை சந்தோஷம். “இவ்வளவு படிச்ச பொண்ணு! மத்த அறைகுறைங்களைப்போல காதல், கீதல்னு கண்டவனை இழுத்துக்கிட்டு ஓடாம, எவ்வளவு அமரிக்கையா பெரியவங்க பேச்சைக் கேக்குது!” என்று அத்தையிடம் பீற்றிக்கொண்டாள்.

முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் ஒரேநாள் மணவிழாவால் இணைக்கப்பட்டு, ஆயுள்பூராவும் இணைந்திருக்கவேண்டிய நிலை என்னைப் பொறுத்தவரை கஷ்டமாக இல்லை.

நல்லவேளை, என் கணவரும் பெரிதாக எதிர்பார்ப்புகளை ஏந்தி, பின் என்னால் ஏமாந்து போகவில்லை. அவசியம் வந்தால் கொஞ்சம் பேசினோம். நான் எப்போதும்போலவே புத்தகங்களில் ஆழ்ந்துவிடுகையில், நிம்மதி அடைந்தவராக, அவர் வெளியே சென்று, நண்பர்களுடன் பொழுதைக் கழித்தார். அம்மா சொன்னதுபோல், அவரைக் கொழுகொம்பாகப் பாவித்து நான் அவர்மேல் கொடியாகப் படரவெல்லாம் இல்லை. எப்போதும்போல்தான் இருந்தேன். எங்களிருவரின் உடல்களும் அருகருகே இருந்தபோதும், அவர் கரம் — சமூக அங்கீகாரத்துடன் தான் பெற்ற உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுபோல் — என்மீது படர்ந்தபோதும்கூட என் மனம் எங்கோ தொலைதூரத்தில்தான் இருந்தது.

வாயில் சர்க்கரையைப் போட்டால் இனிப்பதைப்போல ஒரு ஆணும், பெண்ணும் அந்தரங்கமான உறவு கொள்ளும்போது சிலிர்த்துப்போவது உடற்கூற்றினால்தான் என்று அறிவுபூர்வமாக என் மனம் விவாதித்தது. உடலுக்குள் எத்தனை எத்தனை சுரப்பிகள் இருக்கின்றன என்பது நான் அறியாததா, என்ன! இதில் காதல் எங்கிருந்து வந்தது? என்னமோ எல்லாரும் சேர்ந்து என்னை வஞ்சித்துவிட்டமாதிரி இருந்தது. எனக்கு வேறு ஏதாவது பெயர் வைத்திருக்கலாம்.

பிறந்தகத்தை விட்டுப்போன சீக்கிரத்திலேயே நான் திரும்ப வந்துவிட்டேன், நிரந்தரமாக. இப்போதெல்லாம் அம்மா என்னிடம் ஆத்திரப்படுவதில்லை. தான் மங்களகரமாக பூவும், பொட்டுமாக இருக்கையில், மகள் அந்த உரிமையை இழந்துவிட்டாளே என்ற குற்ற உணர்வோ?

நான் எப்போதும்போல்தான் இருந்தேன். ஆனால், கொழுகொம்பை இழந்ததில் ரொம்பத் துக்கப்பட்டுவிட்டேன் என்று எல்லாரும் எனக்காகப் பரிதாபப்பட்டார்கள். இப்படியே இருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடுமாம்! இந்தச் சாக்கில்தான் ஆசிரியர் பயிற்சி பெற என்னை அனுப்பினார்கள். காலமெல்லாம் என்னை நானே காப்பாற்றிக்கொள்ள ஏதாவது வழி வேண்டாமா? ஆனால், இதை யாரும் வாய்திறந்து சொல்லவில்லை.

ஓயாமல் படித்ததற்காகத் திட்டுவாங்கியே பழக்கப்பட்டிருந்த எனக்கு, ‘படித்துத்தான் ஆகவேண்டும்’ என்ற நிர்ப்பந்தம் வரவேற்கக்கூடியதாகத்தான் இருந்தது. நான் உண்டு, கல்லூரி வாசகசாலை உண்டு என்று அமைதியாக காலத்தைத் தள்ளிக்கொண்டிருந்தேன்.

அங்கேதான் அவரைப் பார்த்தேன்.

டாக்டர் கோசல்ராம் என்ன இனத்தவர் என்றே கண்டுகொள்ள முடியாதபடி உருவத்தில் தனித்திருந்தார். ஒட்டுச்செடியைப்போல, பற்பல இனக்கலவைகள் சேர்ந்து, வித்தியாசமாக இருந்தார். நாடி பிடித்து, காய்ச்சலுக்கு மருந்து அளிக்கும் டாக்டர் அல்ல அவர். மனத்தின் வக்கிரங்கள் அவரது சிறப்புப்பாடம்.

மனோதத்துவத்தின் ஒரு பிரிவான ‘கவுன்செலிங்’பற்றிப் பாடம் நடத்தியபோது, ஒவ்வொரு வரியிலுமே நகைச்சுவை இழையோட, தன் வேலையைப் பெரிதும் நேசித்து, ரசித்து, அவர் சிரித்தபோது, வகுப்பு முழுவதுமே குலுங்கிச் சிரித்தது.

‘அடேயப்பா! இந்த இளம் வயதிலேயே இந்த மனிதருக்குத்தான் என்ன மூளை!’ சம்பந்தமில்லாது எனக்குப் பெருமிதம் தோன்றியது.

‘இவருக்கு என்ன, முப்பத்தி ஐந்து, நாற்பது வயது இருக்குமா?’ என்று எண்ணமிட்டுவிட்டு, என்னையே கடிந்துகொண்டேன். அந்நிய ஆணைப்பற்றி இது என்ன வேண்டாத யோசனை! அவர் உருவத்தைவிட்டு, அவர் போதித்ததில் கவனம் செலுத்த முயன்றேன்.

‘கவுன்செலிங்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் ‘ஆலோசனை கூறுதல்’ என்கிறது அகராதி. உண்மையில், அதைமட்டும் ஒரு கவுன்சிலர் — நம் கவலையை நாம் விவரிக்கும்போது அதைப் பொறுமையாகக் கேட்பவர் — செய்துவிடக்கூடாது என்றார் டாக்டர் கோசல்ராம். ‘சாதாரணமாக, ஒருவர் நம்மிடம் வந்து தன் பிரச்னைகளைக் கூறிக்கொள்ளும்போது, ‘நான் அவரைவிட உயர்ந்தவன்’ என்ற கர்வம் அடைவது மனித இயல்பு. ஆனாலும், உண்மையான ஆலோசகர்களோ, ‘நானும், நீயும் சமம்தான், நமக்குள் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும்!’ என்ற நம்பிக்கையை அளிப்பவர்கள். இந்தப் பக்குவம் அடைய, பிறர் நம்மிடம் வந்து என்ன பேசினாலும், பேசுபவரின் மனநிலையோடு தானும் ஒன்றிவிடும் திறனை முதலில் வளர்த்துக்கொள்ளவேண்டும்’.

அவர் பேசப்பேச, என்னுள் ஏதோ அசைந்தது. வாய்வார்த்தையாக இல்லாமல், எப்படி மனப்பூர்வமாக, அனுபவித்துப் பேசுகிறார்! எனக்குமட்டும் ஏன் இவ்வளவு கலகலப்பாக இருக்க முடிவதில்லை?

வாசகசாலையிலிருந்த அலமாரியின் அருகே சென்று, ஒவ்வொரு புத்தகமாகத் தள்ளித் தள்ளி, எனக்கு வேண்டியதை நான் தேடுகையில், அடுத்த அலமாரியின் அருகே நின்றிருந்த நெடிய உருவம் கண்ணில் பட்டது. அவர் பக்கத்தில் போய் வணக்கம் தெரிவித்துவிட்டு, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

பதில் வணக்கம் தெரிவித்தபோது, அவர் விறைப்பாக இருந்ததுபோல் தோன்றியது. அவரைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டிருந்தார். என் மனக்கண்ணுக்கு அந்த வட்டம் புலப்பட்டது.

“டாக்டர் கோசல்ராம்! உங்களிடம் பாடத்தில் ஒரு சந்தேகம் கேட்கலாமா?”

ஒப்புதலுக்கு அடையாளமாக அவர் தலையசைத்தார்.

வகுப்பில் வாய் ஓயாமல் பேசவேண்டியிருந்தாலும், பொதுவாக அவர் அதிகம் பேசுவதில்லை, விதவிதமான தலையசைவுதான் அவருடைய மொழி என்று போகப்போகத் தெரிந்துகொண்டேன்.

“ஒரு ஆலோசகர் தன்னிடம் மனக்கவலையை சொல்லிக்கொள்ள வருபவரின் மனநிலையில் தன்னைப் பொருத்திக்கொள்ளவேண்டும், இதுதான் பாதிக்கப்பட்டவரைப் புரிந்துகொள்ளும் வழி என்றீர்களே, வகுப்பில்?”

இன்னமும் கேட்க ஊக்கம் அளிக்கும் வகையில், மேலும், கீழுமான தலையசைப்பு.

“இவர்கள் ஆணும், பெண்ணுமாக இருந்தால்? இருவரது உள்ளங்களும் நெருங்கி விடும் அபாயம் இருக்கிறதே?”

தலையைச் சாய்த்து, யோசிக்கும் பாவனையில் சிறிது நேரம் இருந்துவிட்டு, பின் நிதானமாகப் பேசினார் அவர். ‘வார்த்தைகள் என்றால் இவருக்கு அப்படி ஒர் நேசமோ!’ என்று பிரமிக்கத் தூண்டும் வகையில், ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்து, தனித்தனியே, தெளிவாக உச்சரித்தார்: “பேசி முடிந்தபிறகு, அவர்களுக்குள் நடந்த உரையாடலை எழுத்தில் வடித்து, தேதியும் குறித்துக்கொள்ளவேண்டும் ஆலோசகர். இப்படிச் செய்தால், அவர் நினைவிலிருந்து மற்றவரை விலக்க முடியும்”.

இது நடக்கிற காரியமா!

என் அவநம்பிக்கையைப் புரிந்துகொண்டதன் அடையாளமாக அவர் கண்ணில் ஒரு மென்மை. “இதையும் மீறி அவர்களுக்கிடையே கவர்ச்சி தோன்றும் பட்சத்தில், அந்தத் தொடர்பை முறித்துக்கொண்டு, வேறு ஆலோசகரிடம் அவரை அனுப்பிவிடவேண்டும்”.

“நான் கேட்கவந்தது இதுதான்!” என் வாக்கியம் முடிவதற்குள் அவர் அப்பால் நகர்ந்தார்.

அடேயப்பா! என்ன உயரம்! ஆறடி இருப்பாரா?

அவர் நடந்துபோவதைப் பார்த்தேன். மென்மையான, ஆனால் கம்பீரமான நடை — குரலைப்போலவே. பூமிக்கு வலிக்குமோ என்று அஞ்சுவதுபோல்.

அவருக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிட்டது காலங்கடந்து நினைவுக்கு வர, “தாங்க்ஸ், டாக்டர் ராம்!” என்று கத்தினேன். வாசகசாலையின் நிசப்தமான சூழ்நிலையில் அது நாராசமாக ஒலித்தது.

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு வகுப்பறையிலிருந்து இன்னொன்றுக்குப் போகையில், அவரைப் பார்த்தேன். இல்லை, அவரே என்னை முதலில் பார்த்துவிட்டு, “குட் மார்னிங், மிஸ் பிரேமா! எப்படி இருக்கிறீர்கள்?” என்று விசாரித்தார்.

எனக்குப் பெருமையாக இருந்தது. என்னை நினைவு வைத்துக்கொண்டிருக்கிறாரே! நான் சட்டென்று நின்றேன். அவரும் நின்றார். மரியாதையைக் கருதி, நாலு வார்த்தை பேசிப் பிரிந்தோம்.

அதன்பின், அவரை வாரத்தில் ஓரிரு முறை சந்திப்பேன் — வகுப்புக்குப் போகும் வழியில், வகுப்புக்கு வெளியே, இப்படி. வணக்கம் தெரிவித்துக்கொண்டபிறகு, உடனே எந்த விஷயத்தைப்பற்றியாவது மும்முரமாகப் பேச ஆரம்பித்துவிடுவோம்.

யோசித்துப் பார்த்ததில், நான் பேசியதுதான் அதிகம் என்று தோன்றுகிறது. நான் கூறியது எனக்கே தெளிவாக இல்லாதபோது, அதையே அடுத்த கேள்வியாகக் கேட்டு, மேலும் அதைப்பற்றிப் பேச மறைமுகமாகத் தூண்டுவார். ‘இவருக்கு எப்படி நான் எதைப்பற்றிப் பேசத் துடிக்கிறேன் என்று தெரிகிறது!’ என்று நான் வியந்ததுண்டு.

ஏதாவது ஒரு வார்த்தையை உச்சரிக்கும்போது, அதனால் எனக்குள் உண்டான ஆழ்ந்த பாதிப்பை என் முகபாவத்திலிருந்து இனம் கண்டுகொண்டிருப்பாரோ? என்னையும் அறியாது, நான் உடலை வளைத்தோ, அல்லது விறைத்தோ நின்று, அதீதமான கையசைவுகளுடன் பேசியதை அவர் மிகமிக உன்னிப்பாகக் கவனித்ததை அறிவேன். அந்த ஒருமுனையான கவனம்தானே என்னை அப்படிப் பேசத் தூண்டியது!

‘என்னை இதுவரை யாருமே புரிந்துகொள்ளவில்லையே!’ என்ற ஏக்கம் எனக்கே தெரியாமல் என்னுள் இருந்திருக்கவேண்டும். என்னையே மறந்து, இன்னதுதான் பேசுகிறோம், இதைத்தான் பேசலாம் என்ற வரம்பு இல்லாமல், தோன்றியதை எல்லாம் அவருடன் பேசினேன். (‘ஏன் மனிதர்கள் இப்படிச் சுயநலமிகளாக, பொறாமைக்காரர்களாக இருக்கிறார்கள்?’

‘அன்பு எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அது ஏன் பெரும்பாலோர் அதிகாரத்திலும், ஆத்திரத்திலும் திளைத்து, அதிலேயே சுகம் காணுகிறார்கள்?’)

இப்படி என் எண்ணங்கள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் அவருடன் பகிர்ந்துகொண்டேன். அத்தருணங்களில், எங்களைச் சுற்றி ஒரு உலகம் இருந்ததை மறந்தேவிட்டோம். கருத்துப் பரிமாறலே முக்கியமாகப்பட்ட நிலையில், எங்கள் குரல் ஒருவருக்கொருவர் கேட்கும் தொலைவில், (நான்கிலிருந்து பத்தடிவரை) நின்றபடி உரையாடினோம். உடல் நெருக்கம் முக்கியமாகப் படவில்லை.

விடுமுறைக்கு வீடு திரும்பியபோது உற்சாகமாக இருந்தேன். அம்மாவிடம் டாக்டர் கோசல்ராமைப்பற்றிக் கதைகதையாகச் சொன்னேன். அம்மா கவனித்தாளா, இல்லையா என்றெல்லாம் பார்க்கவில்லை.

“என்ன வயசிருக்கும் அந்த ஆளுக்கு?” என்னைச் சந்தேகமாகப் பார்த்தாள். “பார்க்க அழகா இருப்பானோ?”

நான் யோசித்தேன். அவர் மீசை வைத்திருந்தாரோ? எவ்வளவு முயன்றும் என் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. தலைமுடி — சுருட்டையா, அடர்த்தியா, இல்லை, வழுக்கையா? அதுவும் தெரியவில்லை.

எனக்கே என்னைப் பார்த்து வேடிக்கையாக இருந்தது. இவ்வளவுதூரம் பேசி இருக்கிறேனே, பின் என்னதான் என் மனதில் பதிந்தது?

இரு தீர்க்கமான கண்கள் தோன்றி மறைந்தன.

என் பயிற்சிக்காலம் முடிவடையும் தறுவாயிலிருந்தது. விடுமுறை கழிந்து, மீண்டும் கல்லூரிக்குப் போனேன்.

அவரைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. சிரித்தபடி அருகில் ஓடி, “டாக்டர் ராம்! நான் வந்துவிட்டேன்!” என்றேன்.

அவர் தலையசைத்தார் ஒரு முறை. மெல்ல. மேலும் கீழுமாக. “இன்னும் இரண்டே வாரங்கள்!” அவர் குரலில் புதிதாக ஏதோ கேட்டது. எனக்குப் புரியவில்லை.

வழக்கம்போல், முதல் வாரம் நான் நிறையப் பேசினேன்.அதன்பிறகுதான் எங்கள் நிலை மாறிப்போயிற்று.

ஒரு நாள், எனக்குப் பேசவே இடைவெளி கொடுக்காது, அரைமணி நேரத்துக்குக் குறையாது, அவரே பேசினார். எப்போதும்போல் தாழ்ந்த குரலில்.

ஆனால் ஒரு மாற்றம்.

என் பிரச்னைகளைநான் எந்தவிதமாகத் தவிர்க்கலாம் என்று நயமாக எடுத்துக் கூறும்போது, அவரே நானாகி, அதாவது கோசல்ராம் பிரேமாவாகி, துயரப்படுவதுபோல் பட்டது.

ஒருவரின் குரல் தென்றலைப்போல் இதமாக மேனியை வருடுவது நடக்கிற காரியமா என்ற பிரமிப்பு தோன்றியது எனக்குள்.

ஏனோ அம்முறை என்னால் அவருடைய கண்களை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அடிக்கடி என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். சில சமயம் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டேன். எல்லையில்லா கருணையில் தோய்ந்த அவரது வார்த்தைகளை ஏற்பது அவ்வளவு கடினமாக இருந்தது.

ஏனென்று தெரியவில்லை, அதன்பின் என்னைச் சந்திப்பதையே அவர் தவிர்ப்பதுபோல் பட்டது.

ஏதேதோ எண்ணினேன். நான் அவருடைய மணவாழ்க்கையில் குறுக்கிடுவேன் என்று பயந்திருப்பாரோ? நினைக்கவே கூசியது.

அவருடன் உரக்கப் பேசுவது நான் எனக்குள்ளேயே பேசிக்கொள்வதைப்போல தங்குதடையின்றி இருந்ததே! எந்தப் பெண்ணும் சாதாரணமாகச் சொல்லத் தயங்குவதைக்கூட ஏதோ ஒரு உரிமையில் அவருடன் பகிர்ந்துகொண்டேனே! எப்போதுமே உணர்ச்சிகளைக் காட்டாத அவரது முகம் அப்போதும் நிச்சலனமாக இருந்தாலும், அந்தக் கண்கள் சிரிக்கவில்லை?

யோசித்துப் பார்த்தேன். நான் என்றுமே அவரிடம் வலியப்போய் பேசியதில்லை. யதேச்சையாக நாங்கள் சந்தித்துக்கொள்ள நேரிட்டபோது, நான் முதலில் வணக்கம் தெரிவிப்பேன். அவரும் தன் கேள்விக்கணைகளை ஆரம்பிப்பார், விட்ட இடத்திலிருந்து.

இப்போதோ என் வணக்கத்துக்குப் பதிலாக ஒரு லேசான தலையசைப்பைமட்டும் தந்துவிட்டு, நகர்ந்துவிடுபவரிடம் எப்படிப்போய் பேசுவது என்று புரியவில்லை.

குழம்பிய நிலையில் அவ்வாரத்தை ஓட்டினேன்.

மறுநாள்தான் கடைசி.

சூரியன் அஸ்தமனமாகும் வேளையில், தோட்டத்தில் எனக்குப் பரிச்சயமான ஒவ்வொரு மரம், செடி, பூவிடமும் விடைபெற்றுக்கொள்வதுபோல், ஆழ்ந்த கவனத்துடன், நிதானமாக நடந்துகொண்டிருந்தேன்.

“குட் ஈவினிங், மிஸ் பிரேமா!” பழக்கமான குரல். அந்த நெடிய உருவத்தின் ஆழத்திலிருந்து வந்ததுபோலிருந்தது.

அதிர்வுடன் திரும்பினேன்.

அவர்தான்!

என் கண்கள் அவருடைய கண்களுடன் கலக்க, ஏக்கமோ, வேறு எதுவோ அந்த இரு ஜோடி கண்களிலிருந்தும் வெளியானதை உணர்ந்தேன்.

எங்கள் நிலை மறந்து, அப்படியே — கண்களின் சங்கமத்தைக் கலைக்க விரும்பாது — நின்றிருந்தோம். இமைக்கவும் துணியவில்லை. நீண்ட நேரம் என்றுதான் தோன்றுகிறது.

மீண்டும், என் முகத்தை மிகமிக மெதுவாக நான் திருப்பிக் கொள்கையில், என் ரத்த நாளங்களுக்குள் வெம்மையாக ஏதோ ஓடிற்று. மூச்சு வேகமாக வந்து வியர்த்தது. முதன்முறையாக என் வாய் அடைத்துப் போயிற்று.

அதுதான் எங்கள் கடைசி சந்திப்பு. நான் அப்போது பேசவே இல்லை. ஆனால், அவரைச் சுற்றி இருந்த வட்டம் பெரிதாகி, அதில் நாங்களிருவரும் இருந்தோம்.

இப்போதெல்லாம் என் பெயருக்கு என்ன அர்த்தம் என்று நான் குழம்புவதில்லை.

‘காதல்’ என்பது இனம், வயது, மொழி போன்ற எல்லாவிதமான பாகுபாட்டையும் கடந்து, அடிப்படை எண்ண ஒற்றுமையால் பிறப்பது என்று புரிந்தது. எங்கோ வாயு மண்டலத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒலியலையானது இணைக்கும் கம்பிகூட இல்லாது, வீட்டுக்குள் இருக்கும் வானொலிப்பெட்டிவழி கேட்பதில்லையா? அதுபோலத்தான். ஒருவரது மனத்தினடியிலிருந்து எழும் எண்ணங்கள் உடனுக்குடனே அதே அலைவரிசையில் இயங்கும் இன்னொருவரைப் போய்ச் சேர்ந்துவிடமுடியும்.

ஆனால், அவ்வுணர்வு எங்கோ அபூர்வமாகத்தான் பிறக்கும் என்பது புரிந்துபோயிற்று. அகாலமாகவும்தான்.

இதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவே வேண்டாமோ! இப்போது கொஞ்சநஞ்சமிருந்த அமைதியும் போய்விட்டது. என் பெயர் எனக்கு விளங்கக் காரணமாக இருந்தவரைச் சந்திக்க வேண்டும் என்று துடித்த மனத்தை அடக்க வழி தெரியவில்லை எனக்கு. நிம்மதி பெற வேறு மார்க்கம் புலப்படாது, கடவுள் படத்தின்முன் அமர்ந்துகொண்டு, கண்ணீர் பெருக்கி விம்முவேன். கோசல்ராம் இருக்குமிடம் தெரிந்தாலும்கூட, அவரை நானாகப் போய் பார்ப்பது சரிதானா?

‘இந்த ஆண்பிள்ளையை எனக்குப் பிடிக்காது!’ என்று பெண்ணொருத்தி சொல்லலாம். அதை உலகம் ஏற்கும். அதுவே, ‘இவரைப் பிடித்திருக்கிறது!’ என்று சொன்னால்மட்டும் அதில் என்ன கேவலம்? எனக்குப் புரியத்தான் இல்லை.

ஓயாது எழும் கேள்விகளுக்கு இடையிடையே நாங்கள் சந்தித்துப் பேசிய ஒவ்வொரு வினாடியும் மனத்தடியிலிருந்து எழுந்து, மேலே வந்து, போயிற்று. திரும்பத் திரும்ப.

வேடிக்கைதான். அவை நிகழ்ந்தபோது, ‘எவ்வளவு இன்பகரமான உணர்வுகள்!’ என்று ஏன் நான் உணரவில்லை?

சட்டென ஏதோ தட்டுப்பட்டது.

தன் உள்ளுணர்வை அவர் எனக்கு முன்பே அறிந்திருக்கவேண்டும். அதுதான் விலகிப் போனாரோ?

இந்த மனம்தான் எப்படி எல்லாம் ஓடுகிறது! அவர் என்னை நினைவில் வைத்திருப்பார் என்பதே என்ன நிச்சயம்?

அந்த எண்ணமே அதிர்ச்சி தந்தது. ‘மறந்திருக்கக் கூடாதே!’ என்ற பதைப்பு உண்டாகியது. நான்மட்டும் இப்படிப் பைத்தியக்காரியாக உருகுகிறேன், அவர் எப்படி என்னை மறந்திருக்க முடியும் என்று அடித்துக் கேட்டது எதுவோ. அவரும் என்னை நினைத்து நினைத்து ஏங்குவதைக் கற்பனை பண்ணிப் பார்ப்பேன்.

என் சுயநலத்தை எண்ணுகையில், ஓர் சிறு கோபம் தோன்றும். சே, பாவம்! சுறுசுறுப்பாக, பிறர் அமைதிக்காக தன் நேரத்தைச் செலவழிக்கத் தயாராக இருந்த உத்தமர்! அவராவது நிம்மதியோடு, எப்போதும்போலத் தம் வேலையில் ஒன்றி, தாமும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கட்டும்.

எண்ண ஓட்டத்தில் ஒரு திடீர் தேக்கம். அந்தப் ‘பிறரில்’ என்னைப்போன்ற இளம்பெண் இருந்து, அவளும் அவரது கம்பீரத்திலும், மனிதாபிமானத்திலும் மனதைப் பறிகொடுத்து…

என்னையும் அறியாது நான் சிரித்தேன். அன்பு வந்தாலே ஆதிக்கமும் எப்படி வந்துவிடுகிறது! அவர் எந்தப் பெண்ணுடன் எப்படிப் பேசிப் பழகினால் எனக்கென்ன? அவரைக் கட்டுப்படுத்த நான் யார்?

‘ஒவ்வொருவருடைய எண்ணங்களுக்கும், செய்கைகளுக்கும் பிரத்தியேகமான காரணங்கள் இருக்கலாம். பிறரை எடைபோடவோ, குறை சொல்லவோ, கட்டுப்படுத்தவோ நாம் யார்?’ என்று ஒரு முறை அவர் என்னுடன் விவாதித்தது ஞாபகம் வந்தது.

அவருடைய முகம் நினைவில் பதியவில்லையே தவிர, குணங்கள் எனக்கு அத்துப்படியாகி இருந்தன.

எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் என்னை உள்ளாக்காது, ‘நீ இதைத்தான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்யவேண்டும்’ என்றெல்லாம் கட்டாயப்படுத்தாது, எனக்கும் தனியானதொரு மனம் இருக்கிறது என்பதை மதித்து நடத்தி, என்னையே நான் விரும்பும்படி செய்த முதல் நபர். ஆனால், எனக்கு என்னைவிட அவரைப் பிடிக்கும்.

‘இத்தகைய மனிதருடன் பழகவாவது கொடுத்து வைத்ததே!’ என்ற புல்லரிப்பு உண்டாகியது.

இன்னும் சில நாட்கள் இந்த நிறைவு நிலைத்திருக்கும். மனப் பாதாளத்திலிருந்து நினைவுகள் மீண்டும் மேலெழுந்து என்னை உலுக்கும்வரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *