உனக்கு மட்டும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 17, 2022
பார்வையிட்டோர்: 25,322 
 
 

பழனிமலையில் கோவிலுக்கு வெளியே தென்புறத்துப் பிராகாரத்தில் உட்கார்ந்து யோசனையில் மூழ்கியிருந்தேன். பின்புறம் கொடைக்கானல் மலைத்தொடர் நீலக் காரிருளின் நடுவே பனியிலும் மேகத்திலும் நெய்த வெண்பட்டுப் போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. கீழே ஊர் விளக்குகள் மினிக்கிக் கொண்டிருந்தன. ஊரின் ஓசைகளும் சந்தடிகளும் எட்டாத உயரத்தில் உட்கார்ந்திருந்தேன்.

பார்வதி! கதையை மேலே எழுதுவதற்கு முன்னால் உனக்கு ஒரு வார்த்தை. உன்னைப் பற்றித்தான் எழுதப் போகிறேன் என்பதை இதற்குள் நீ புரிந்து கொண்டிருப்பாய். ஆனால் யாருக்காகவோ எதற்காகவோ, எதையோ, எழுதுகிறேன் என்று நினைத்து நீ படிக்காமல் இருந்து விடக்கூடாது அல்லவா? உன்னையே நினைத்து, உன் பொருட்டு, உனக்கு மட்டுமே இதை எழுதுகிறேன். ஏக்கத்தை உண்டாக்கியவள் நீ. அன்பை அளித்து மறைந்தவள் நீ. உனக்குத்தானே சொல்ல வேண்டும். நீ எங்காவது இருக்கத்தான் இருப்பாய்! ஆளைக் கொள்ளை கொள்ளும் அந்த அழகும் உன்னோடு இருக்கத்தான் இருக்கும். இதை நீ படிக்காமலிருக்க மாட்டாய்! இவ்வாறெல்லாம் எனக்கு நானாகவே நம்பிக்கொண்டுதான் சிதறிப் போன ஆசையின் பின்னங்களை இப்படி எழுத்தில் வாரி இறைத்திருக்கிறேன்.

ஊர் சந்தடி நிறைந்திருந்தால் என்ன? மயான பூமி போல் அமைதியாக இருந்தாலென்ன? விளக்குகள் மினுமினுத்தால் என்ன? தனி இடத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக உட்கார்ந்து கொண்டிருப்பவனுக்கு இதனாலெல்லாம் ஆக வேண்டியதென்ன? ஆகப்போவதுதான் என்ன?

மூன்று தடவைகள் பரீட்சையில் தவறிவிட்டு, மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கூடக் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த சமயம் அது. அன்றாடங்காய்ச்சியான ஒரு ஏழைக் குடும்பத்து வாலிபனுக்கு இந்த வறண்ட நிலையை எவ்வளவு காலம் சகித்துக்கொண்டிருக்க முடியும்? வீட்டுக்கும் பாரமாக தனக்கும் பாரமாக வாழ்வதைவிடச் சாவது எவ்வளவோ மேல்.

அப்போது எனக்கு இருந்த மனநிலையில் அவநம்பிக்கையும், வறட்சியும் தற்கொலை நினைவுகளும், இடைவிடாமல் குமுறிக் கொண்டிருந்தன. எங்கும் புறக்கணிப்பு, எதிலும் தடை, வாழத்துடிக்கும் வயசில் வசதியற்ற நிலை, இப்படி இருந்தால் எந்த இளைஞனுக்குத்தான் தற்கொலை நினைவு தோன்றாது?

நான் பள்ளிக்கூடத்தில் படித்த புத்தகங்களையும், பேப்பர்களையும் பழைய சாமான்களையும் விலைக்குப் போட்டுச் சேர்த்து வைத்திருந்த பத்து ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டேன். உடுத்திய அரை வேஷ்டியோடும் போட்டுக் கொண்டிருந்த மேல் சட்டையோடும் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். வீட்டிலிருந்து கிளம்பும்போது இரவு ஏழேகால் மணி. கால் போன போக்கில் எங்கெல்லாமோ நடந்து, பேச்சியம்மன் படித்துறை வழியே வைகையைக் கடந்து செல்லூர் ரஸ்தாவை அடைந்தேன். மேற்குப்புறம் திரும்பித் தத்தனேரி ரோட்டில் மதுரைப் பாலத்தை நோக்கிச் சென்றபோது பாதை வழியே பஸ் வந்தது. கையை நீட்டி நிறுத்தி அதில் ஏறிக் கொண்டேன். அது எந்த ஊருக்குப் போகிற பஸ்?’ என்றுகூடப் பார்க்கவில்லை. ஏறி உட்கார்ந்துகொண்ட பின் பஸ் கண்டக்டர் டிக்கெட்டுக்குப் பணம் கேட்டபோதுதான் அது பழனிக்குப் போகிறது என்று தெரிந்தது.

கண் காணாத இடத்தில் தெரிந்தவர்களுடைய முகத்தில் விழிக்காமல் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும். அந்த இடம் பழனியாகத்தான் இருக்கட்டுமே!’ என்று எண்ணிக் கொண்டேன். சாதாரண நாளாக இருந்தால் மாலை நாலரை மணிக்குமேல் மதுரையிலிருந்து பழனிக்குப் போவதற்கு பஸ் கிடையாது; தைப் பூசத்துக்காக ஸ்பெஷல் பஸ் விட்டிருந்ததனால் நான் அந்த நேரத்திலும் அன்று பழனிக்குப் போவதற்கு முடிந்தது.

முன்பின் போய்ப் பழக்கமில்லாதவன் புது ஊருக்கு நள்ளிரவில் போய் எங்கே இறங்குவது? எப்படித் தங்குவது? இதைப் பற்றி எல்லாம் யோசிக்கவே தோன்றவில்லை. கலங்கிப் போன மனத்துக்கு, வேதனையால் தளர்ந்திருக்கும் சந்தர்ப்பத்தில் முன்யோசனை குறைவு. நடக்கப் போவதை எண்ணி, வருவனவற்றை அனுமானித்து, எச்சரிக்கையாக இருக்கும் இயல்பு, வெறுப்பும் வேதனையும் நிறைந்த உலகத்துக்குக் கிடையாது.

பஸ் பழனியை அடையும் போது ஏறக்குறைய பன்னிரண்டு மணி. வழியில் ஒட்டன்சத்திரத்தில் பஸ் நிற்குமிடத்தில் நாலைந்து மலைப்பழங்களை வாங்கிச் சாப்பிட்டதுதான். இரவுப் பாட்டுக்கு அது போதும்.

சட்டைப்பையில் ஏழு ரூபாய் பதினைந்தணா மீதப் பணத்தோடும் மனத்தில் இவ்வளவென்று தொகை வகுத்துச் சொல்ல முடியாத கவலைகளோடும், பஸ்ஸிலிருந்து இறங்கினேன். புதிய இடம், புதிய ஆள், புதிய பார்வை, விழிகள் மிரண்டு மிரண்டு சுழன்றன. யார் யாரிடமோ வழி விசாரித்துக்கொண்டு மலை அடிவாரத்திலிருந்த ஒரு சத்திரத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். ஆறணா வாடகையில் ஒரு அறை பிடித்துத் தங்கினேன்.

உள்ளத்தில் ஒரே குழப்பம். உடலில் அலுப்பு. சாவுக்கு ஆசைப்பட்டுப் புது இடத்தைத் தேடி வந்தால் மட்டும் போதுமா? மனம் திடீரென்று துணிய மறுக்கிறதே! அறையை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு வெகு நேரம் யோசித்தேன்.

உயிரை எந்தெந்த விதங்களில் போக்கிக் கொள்ளலாம்? தினப் பத்திரிகைகளிலும் கதைகளிலும் தற்கொலைகளைப் பற்றி எவ்வளவோ நாட்கள், எத்தனையோ பல சம்பவங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் சொந்த அனுபவத்துக்கென்று பயன்படுத்தத் தேடும் போது அவையெல்லாம் அசாத்தியமானவையாகத் தோன்றுகின்றன. பயங்கரமாகவும், குரூரமாகவும் படுகின்றன.

சிந்தித்தபடியே வெறுந்தரையில் படுத்து உறங்கிவிட்டேன். அன்று இரவு அப்படியே கழிந்துவிட்டது. மறுநாள் காலையில் குளித்துவிட்டு முருகனைத் தரிசித்துவிட்டு மலைப்பிரகாரத்தில் சுற்றிவரும் போது, ‘தற்கொலை செய்து கொள்வதற்கு இதைவிட வசதியான இடம் வேறில்லை’ என்று தீர்மானித்தேன்.

மலையின் தென்புறச் சரிவில் ஒரு பெரிய பூவரசு மரம் கைக்கு எட்டுகிறாற் போல ஒரு கிளை தென்புறத்தில் பள்ளத்தை நோக்கி இறங்கியிருந்தது. சாவதற்குக்கூட முன்கூட்டியே திட்டம் போட வேண்டியிருக்கிறதே?

அந்த மரக்கிளையில் ஒருபாக நீளமுள்ள கயிற்றைக் கட்டிக் கழுத்தில் சுருக்கிக் கொண்டு தொங்கிவிட்டால் காரியம் முடிந்துவிடும். திருவிழாக் காலம். ஆகையினால் மலைமேல் ஜனசந்தடி ஓய்ந்து தனிமை பெறுவதற்கு இரவு பதினோரு மணிக்கு மேலும் ஆகலாம். ஆனால் பரவாயில்லை. அதுவரை காத்திருந்தாவது எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியதுதான்.

பகற்பொழுதை எப்படியோ கழித்துவிட்டேன். அவ்வளவு பெரிய ஊரில் திருவிழாக் கோலாகலத்திலும் கூட்டத்திலும் பொழுதைக் கழிப்பதா பெரிய காரியம்?

இரவு எட்டரை மணி. சாப்பாட்டை முடித்துக் கொண்டேன். ஜன்மத்திலேயே கடைசிச் சாப்பாடு அது! சாத்திரத்து அறையில் எனக்குச் சொந்தமென்று சொல்லிக் கொள்ள எந்த மூட்டை முடிச்சுமில்லை. எல்லாச் செலவும் போக எஞ்சியிருந்த ஆறரை ரூபாய்ப் பணமும் சட்டைப் பையிலேயே இருந்தது. ஆனாலும் அறையை இழுத்துப் பூட்டிச் சாவியையும் பைக்குள்ளேயே போட்டுக்கொண்டேன். அது இனிமேல் என்னிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. மரணப் பூட்டையே திறக்கத் துணிந்தவனுக்கு அறையின் பூட்டைத் திறக்கும் சாவி தேவையில்லைதான். ஆனாலும் எனக்கென்னவோ அது என்னிடம் இருக்கவேண்டுமென்று தோன்றியது.

மனம் பதற , உடல் நடுங்க, ஏதோ செய்யத்தகாத காரியத்தைச் செய்யத் துணிந்தவன் போல் படிகளில் ஏறி மலையுச்சியை அடைந்தேன். கடைசித் தடவையாக முருகனை கண்குளிரத் தரிசித்துக் கொண்டபின், காலையில் பார்த்து வைத்திருந்த மரத்தடியை அடைந்தேன்.

கோவிலுக்கு வெளியே மலைப் பிராகாரத்திலிருந்த விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டார்கள். மணியும் பதினொன்றுக்குக் குறையாமல் ஆகியிருந்தது. சுற்றிலும் இருள் கவிந்துவிட்டது. மேல் துண்டை இரண்டாகக் கிழித்து கயிறு போல முறுக்கினேன். சுருக்குப் போட்டேன். இறுதியாக ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தேன். பார்த்தவன் அப்படியே அரண்டு போய் நின்றேன். இருளில் நிழல் வடிவமாகத் தெரிந்த அந்தக் காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. பத்துப் பன்னிரண்டடிக்கு அப்பால் இருந்த மற்றோர் மரத்தில் என்னைப் போலவே வேறொரு மனித உருவமும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். சில விநாடிகள் என் கண்களையே என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

தான் விரும்பி செய்து கொள்ளுகிற ஓர் தவறான காரியத்தை, மற்றவர் செய்து கொள்ளக் கண்டால் மனித மனம் திடுக்கிடுகிறது. அது தழும்பேறிய இயற்கை.

குபீரென்று என் கையிலிருந்த சுருக்குக் கயிற்றைத் தூர எறிந்துவிட்டு, அந்த மரத்தை நோக்கி வேகமாக ஓடினேன்.

“யாரது? நில்லுங்கள்… நில்லுங்கள்… வேண்டாம்” என்று இரைந்து கத்திக் கொண்டே ஓடினேன்.

அந்த உருவத்தினிடமிருந்து பதில் வரவில்லை.

‘பேயா? பிசாசா? அல்லது நம் கண்களை ஏமாற்றும் வெறும் பிரமையா?’

“யாரது? பதில் சொல்லுங்கள்!” என் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு கத்தினேன்.

“நான்தான்….” மிரண்டு குழறுகிற தொனியில் ஓர் இனிய பெண் குரல் என் காதுகளில் ஒலித்தபோது, எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“நான்தான் என்றால் … யார்?… இந்த மாதிரி அசட்டுத்தனம் செய்யலாமா? எல்லோரையுங் காத்து அருள் புரியும் முருகன் சன்னிதிக்குப் பின்புறமே இந்த அக்கிரமத்தைச் செய்யத் துணியலாமா?” என் குரலில் அதட்டும் தன்மை ஒலித்ததைக் கண்டு நானே வியந்து கொண்டேன். அந்தப் பெண்ணை அதட்டும் போது சற்றுமுன் அதே அக்கிரமத்தை அதே இடத்தில் நானும் செய்து கொள்ள இருந்தேனென்பதை மறந்துவிட்டேன்… அப்படி மறந்துவிடுவதுதானே மனித சுபாவம்!

“அதையேதான் நானும் திருப்பிக் கேட்கிறேன்! நீங்கள் யார்? ஏதோ என் வேதனை எனக்கு!” – குரல் இளங்குரலாகத்தான் ஒலித்தது.

“வேதனைகள் எல்லோருக்கும் எப்போதும் உண்டு அம்மா. உங்கள் குரல் இளங்குரலாகத் தென்படுகிறது. இந்த வயதில் இவ்வளவு விரக்தி கூடாது. உயிரைக் கொடுத்தவனுக்கு எப்போது அதைத் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். அவனை முந்திக் கொண்டு நாமாகவே அதை அவனிடம் ஒப்படைக்க முயல்வது சிருஷ்டியோடு எதிர் நீச்சுப் போடுவதாகும்…”

“ஐயா! நீங்கள் யாராயிருந்தாலும் சரி, உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். பேசாமல் போய்ச் சேருங்கள். எனக்கு வேண்டாம். இந்த வறட்டு வேதாந்தமெல்லாம்…”

“அப்படிச் சொல்லாதீர்கள். வாருங்கள், கீழே போகலாம்.”

அந்தப் பெண் கீழே வரமுடியாதென்று சண்டித்தனம் செய்தாள். நயத்திலும் பயத்திலுமாக அவளை மிரட்டி அங்கிருந்து அவளைக் கீழே அழைத்துக் கொண்டு போனேன்.

என் இதயத்தில் அப்போது என்ன என்ன எண்ணங்கள் தோன்றின, தெரியுமா?

‘முருகா! நீ கண் கண்ட தெய்வம்! உயிர்களின் ரட்சகன். தற்கொலைக்காக உன் கோவிலை நாடி வந்தேன். நீ என்னைக் கொண்டு என்னையே காப்பாற்றி விட்டாய்! என்னை மட்டுமா, இன்னொரு பெண்ணையும் காப்பாற்றச் செய்துவிட்டாய்? பிழைப்பது, பிழைக்கச் செய்வது, வாழ்வது, வாழ்விப்பது! இதுதான் உன் அருள் போலும்.’

இருளில் படிகளின் பாதையாக இறங்குவது சாத்தியமில்லை. இருவரும் சிறுரோடு போலிருந்த யானைப் பாதை வழியே மலையிலிருந்து கீழே இறங்கினோம். அவள் முகத்தையோ, உருவத்தையோ, இருளில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அடிவாரத்துக்கு வந்து சேர்ந்ததும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக் கொண்டோம். நான் எதிர்பார்த்ததைவிட அதிகம் சிறுவயது அவளுக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கும் பருவத்தின் அழகை எடுத்துக்காட்டும் வளர்ச்சி, வளர்ச்சியோடு இயைந்த வாளிப்பு. வஞ்சிக்கொடி துவண்டு நிற்பது போல் அந்த ஒற்றை நாடியான சௌந்தரிய சரீரம் எனக்கு முன் தெரு விளக்கின் மங்கிய ஒளியில் துவண்டு நின்றது.

“உனக்கு எந்த ஊர்?”

சிறிது நேரம் அவள் பதிலே பேசவில்லை. கால் பெருவிரலால் தரையைக் கீறிக் கொண்டு நின்றாள்.

“உன்னைத்தான் கேட்கிறேன்! பேசமாட்டாயா? உனக்கு எந்த ஊர்?”

“எனக்குத் தாராபுரம்.” இரண்டு நீளமான ரோஜாமொட்டுக்களைப் பூட்டி வைத்திருந்தாற் போன்ற அந்த அழகிய உதடுகள் மெல்லத் திறந்தன.

“உன் பெயர் என்னவோ ?”

இப்படிக் கேட்டவுடன் தலைநிமிர்ந்து தீர்க்கமாக என்னை ஒரு பார்வை பார்த்தாள் அவள் பின்பு மெல்லிய குரலில் பதில் கூறினாள், “என் பெயர் பார்வதி”

“தனியாகத்தான் பழனிக்குப் புறப்பட்டு வந்தாயா?”

“தற்கொலை செய்து கொள்ள வருகிறவர்கள் தனியாக வராமல் நாலைந்து பேரைத் துணைக்குக் கூட்டிக் கொண்டா வருவார்கள்?” வறண்ட – உணர்வற்ற சிரிப்பு ஒன்று அவளிடமிருந்து கிளம்பிற்று.

“அதற்குக் கேட்கவில்லை! இந்த வயதில் இப்படிப்பட்ட துணிச்சல் ஒரு பெண்ணுக்கு இருக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அதனால் தான் கேட்டேன்!”

“அதே கேள்வியை நான் உங்களைத் திருப்பிக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்களோ? இந்த வயதில் இப்படித் துணிச்சல் ஒரு ஆணுக்கு”

எனக்குப் பகீரென்றது. “என்ன? நீ எதைச் சொல்லுகிறாய்?”

“எதையா? நீங்கள் அந்தப் பூவரச மரத்தடியில் என்ன செய்து கொண்டீர்கள் என்பது எனக்கும் தெரியும்!” குறும்புத்தனம் இழையோடும் அவள் வாயிதழ்களில் சிரிப்பொலி எழுந்தது.

முதல் தடவையாக அந்தப் பெண்ணுக்கு முன்னால் நான் தலைகுனிந்தேன். என் துணிவு அடிப்பட்டுச் செத்த பாம்பு மாதிரி சுருண்டு விழுந்துவிட்டது.

“சரி! இனிமேலும் இந்த நள்ளிரவில் இப்படி மலையடிவாரத்தில் தனி வழியில் நீயும் நானும் நின்று கொண்டிருப்பது பொருத்தமில்லை. ஜனங்களோ, ரோந்து போலீஸ்காரர்களோ இந்த நிலையில் உன்னையும் என்னையும் பார்த்தால் தப்புக் கணக்குப் போட்டு விடுவார்கள்! வா… போகலாம்…”

“எங்கே போவது?”

“நீ எங்கேயாவது தங்கியிருக்கிறாயா?”

“தங்கவாவது ஒன்றாவது? தாராபுரத்திலிருந்து இரவு எட்டரை மணிக்கு மேல்தானே வந்தேன்? பாழும் உயிர் இதற்குள் போயிருக்க வேண்டியது! நீங்கள் போட்டித் தற்கொலைக்கு வந்து எல்லாம் குட்டிச் சுவராய் அடித்து விட்டீர்கள்!”

“உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய். அப்படித்தானே?”

அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள். மனத்தைக் கவரும் அந்தக் கன்னிச் சிரிப்பில் என் உணர்வுகள் கிறங்கின.

“நான் ஒரு சத்திரத்தில் அறை எடுத்திருந்தேன். இன்னும் சாவி என்னிடம்தான் இருக்கிறது. நீ கதவை உட்புறம் தாழிட்டு அறைக்குள் படுத்துக்கொள். நான் சத்திரத்து வெளி வராந்தாவில் படுத்துக் கொள்கிறேன்.”

“நாளை பொழுது விடிந்தால் உங்களையும் என்னையும் சேர்த்துப் பார்க்கிற உலகம் என்ன எண்ணும்?”

“உலகம் ஆயிரம் எண்ணும். உனக்கு உன் மேலும் என் மேலும் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? உன்னால் முடியுமானால் வரலாம். முடியாவிட்டால் அப்புறம் நான் வற்புறுத்தத் தயாராயில்லை.”

“உங்களை நான் எப்படி நம்புவது? என்னை உள்ளே படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் திரும்பவும் ஓசைப்படாமல் மலைக்குப் போய் அந்தப் பூவரசமரத்தில் தொங்கிவிட்டால்?” அவள் என்னை மறுபடியும் கேலி செய்தாள்.

“உன்னை மட்டும் நான் எப்படி நம்புவது? வெளிவராந்தாவில் நான் தூங்கிய பிறகு ஓசைப்படாமல் கதவைத் திறந்து கொண்டுபோய் உயிரை மாய்த்துக் கொண்டால்….?”

இந்தப் பரஸ்பர விவாதத்தால் இருவருமே சிரித்துவிட்டோம்.

“சரி, நான் வருகிறேன். வாருங்கள். உங்கள் சத்திரத்துக்குப் போகலாம்.” கடைசியாக அவள் என்னோடு வர இணங்கினாள்.

இருவரும் மலையடிவாரத்திலிருந்து சத்திரத்துக்குப் போகிற பாதையில் நடந்தோம்.

நல்லவேளையாக சத்திரத்து வாசற்கதவு திறந்தே இருந்தது. சத்திரத்து வேலைக்காரன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நிலையில் அந்தப் பெண்ணோடு என்னை யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று உள்ளூற பயமாக இருந்தது.

பூட்டைத் திறக்கும் ஓசைகூடக் கேட்காமல் மெல்லக் கதவைத் திறந்தேன்.

“பார்வதி! உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுப் படுத்துக் கொள்.”

அந்த அழகிய யுவதி அறைக்குள் போனாள்.

“இந்தா! இந்தச் சட்டையை உள்ளே மாட்டி வை. பணம் இருக்கிறது!” நான் சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுத்தேன். அவள் புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டாள்

கதாசிரியர்கள் எந்த எந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாமோ காதல் பிறப்பதாக அளக்கிறார்களே! இங்கே எனக்கும் பார்வதிக்கும் இடையே பிறந்த காதல் சாவின் முளையிலே தோன்றியது. வாழ்க்கை முட்களில் விழுந்து வேதனையடைந்த இரண்டு இளம் உயிர்கள் தற்கொலை என்னும் இலட்சியத்தை எட்டியபோது அகஸ்மாத்தாகப் பிணைந்த இணைப்பு!

‘பயம்’, பறிபோய்விடுமோ’ என்ற அவநம்பிக்கை – இதெல்லாம் ஏழைக்குத்தான் அதிகமாக இருக்கின்றன. பையிலிருந்த ஆறரை ரூபாய் காசுகளை எவனாவது தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடுவானோ என்று பயந்து உள்ளே பார்வதியிடம் கொடுத்து வைத்திருக்கிறேன் நான். இந்தப் பாலக்காட்டுப் பேர்வழியோ ஆயிரக்கணக்கில் பெறுமானமுள்ள நகைகளுடன் திறந்த கதவை மூடாமல் தம் அறையில் நிம்மதியாக உறங்குகிறார் ! விசித்திரமாகத்தான் இருக்கிறது.

அறைக்குள்ளே வளையல்கள் குலுங்கும் ஒலி இனிமையாகக் கேட்டது. சில மணி நேரப் பழக்கத்துக்கு எவ்வளவு சக்தி? அவளையே எண்ணி ஏங்க வைத்துவிட்டாளே!

மூன்று மணி வாக்கில் நானும் உறங்கிவிட்டேன், சர்க்கரைப் பாகுப் போல இனிய எண்ணங்களுடன் கண்களை உறக்கம் தழுவிவிட்டது. என்னை மறந்து தூங்கிவிட்டேன்.

எவ்வளவு நேரம் அப்படித் தூங்கினேனோ, எனக்கே தெரியாது.

விலாவில் ஏதோ ஒரு தடிக் கம்பால் ஓங்கிக் குத்தினமாதிரி இருந்தது. அலறி உளறிக் கொண்டே வாரிச் சுருட்டி எழுந்திருந்தேன். பொழுது விடிந்தது. ஏழெட்டு போலீஸ்காரர்கள் சத்திரத்துவராந்தாவில் என் அறை வாசலில் என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் கையிலிருந்த லத்திக் கம்பினால் என்னை விலாவில் குத்தி எழுப்பியிருந்தான்.

என் எதிரே அடுத்த அறையில் இருந்த பாலக்காட்டு வியாபாரி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆத்திரத்தோடு நின்றுகொண்டிருந்தார். அவர் கைவிரல்களில் மோதிரம் ஒன்றுகூட இல்லை. என்னுடைய அறையைப் பார்த்தேன். கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே ஒரு ‘ஸுட்கேஸ்’ திறந்து அதிலிருந்த பொருள்களெல்லாம் அலங்கோலமாகச் சிதறப்பட்டிருந்தன. உள்ளே பார்வதியைக் காணவில்லை. பாலக்காட்டுக்காரரின் சூட்கேஸ் என் அறையில் கிடப்பதற்குக் காரணம் எனக்குப் புரியவில்லை.

“எந்தாயா மனுஷ்யன்? அயோக்கியத்தனமா பண்ணறே?” என்று மலையாளத்தில் இறைந்து கத்தினார் பாலக்காட்டு வியாபாரி. நான் உள்ளே போய்ப் பார்த்தேன். சுவரில் மாட்டியிருந்த என் சட்டைப்பை காலியாயிருந்தது. அதிலிருந்த ஆறு ரூபாய் எட்டணாவைக் காணவில்லை.

பார்வதி மோசம் செய்துவிட்டாள். நான் ஏமாந்துவிட்டேன். பழிகாரி! என்ன நடிப்பு நடித்தாள்? சிரித்துச் சிரித்துக் கடைசியில் கழுத்தை அல்லவா அறுத்துவிட்டாள்?

பாலக்காட்டுக்காரருக்குப் பத்தாயிரம் ரூபாய் திருட்டுப் போய்விட்டது. மோதிரங்கள். பணம், கைக்கடிக்காரம் எல்லாம் சேர்த்துதான் ! நான் நடந்தை நடந்தபடியே அவரிடம் சொல்லிக் கதறினேன்.

அவர் அதை நம்பவில்லை. யார்தான் நம்புவார்கள்? கான்ஸ்டேபிள் ஒருவன் என் கைகளில் விலங்கு மாட்டினான். நான் கத்தின கதறலையும் அழுத அழுகையையும் எவரும் லட்சியம் செய்யவில்லை.

போலீஸ் ஸ்டேஷனில் அடி, உதை, நகக்கண்களில் ஊசி ஏற்றுதல் எல்லா மரியாதைகளும் நடந்தன. நான் சொன்னதையே விடாப்பிடியாகத் திருப்பித் திருப்பிச் சொன்னேன். நம்பவில்லை. பாலக்காட்டுக்காரனிடம் வழக்கைப் பதிவு செய்து கொண்டு என்னைச் சிறையில் அடைத்தார்கள். சில நாட்களில் விசாரணை நடந்தது. எனக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. ஒரு பெண்ணின் சிரிப்பையும் பேச்சையும் வெள்ளை உள்ளத்தோடு நம்பிய எனது நம்பிக்கைக்குக் கிடைத்த தண்டனை அது!

பார்வதி! முடிந்துவிட்டது. உனக்கு நான் எழுதிய கதை முடிந்துவிட்டது. நீ பெண் இல்லை. பெண் உருவில் உலாவும் வஞ்சகி. ஆனாலும் உன்னை, உன் சாமர்த்தியத்தை அந்தச் சாமர்த்தியத்திற்குப் பொருத்தமான அழகை எண்ணி இந்த ஐந்தரை வருஷங்களுக்கு அப்பாலும் நான் ஏங்குகிறேன். வெறுப்புக்குப் பதிலாக இந்த ஏக்கம் ஏன் உண்டாகின்றதென்று என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.

நன்னடத்தைக்காக ஆறு மாதங்களுக்கு முன் என்னை விடுதலை செய்துவிட்டார்கள். வேலூர் சப்-ஜெயிலிலிருந்து நேரே பழனிக்குத்தான் திரும்பி வந்திருக்கிறேன். இதோ இப்போது நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடமும் அதே பழைய பூவரச மரத்தடியில் தான். அன்று மாதிரி இப்போதும் இருள்தான் என்னைச் சூழ்ந்திருக்கிறது.

என்னிடமிருந்து நீ திருடியது கொஞ்சம்தான். ஆறரை மணி நேரத்தையும், ஆறரை ரூபாயையும்தான் உன்னால் திருட முடிந்தது! பாலக்காட்டுக்காரர்தான் நிறையப் பறிகொடுத்தவர். அது அவர் தலையெழுத்து. பணத்தையும், நேரத்தையும் தவிர ‘இன்னம் வேறு ஏதாவது’ நீ என்னிடமிருந்து திருடிக் கொண்டு போயிருந்தால் உடனே திருப்பி அனுப்பிவிடு. உனக்கு மட்டும் காதோடு இதைச் சொல்கிறேன்; “கட்டாயம் அதைத் திருப்பி அனுப்பிவிடு.”

(கல்கி, 24.3.1957)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *