(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவனருகிலிருந்த அவளை. அவன் வலு குறுகுறுப்பாகப் பார்த்தான். அவளின் அண்மை அவனை என்னவோ செய்தது. அவளிலிருந்து வீசிய ‘சென்றி’ன் நறுமணத்தை அவன் நுகர்ந்தான். அவளின் சேலைத் தலைப்பின் தழுவலில் அவன் சுகமனுபவித்தான்.
அவளை எங்கோ கண்டதுபோல அவனுக்கு ஞாப கம் வந்தது. அவளை உற்றுப் பார்த்துக்கொண்டே அவளை எங்கே கண்டிருப்பேனென யோசித்தான். அவளின் மெல்லிய நீலநிறச் சேலையை யும், கருநிறப் பாம்பாக நீண்ட ஒற்றைப் பின்னலையும், அதன் தொடக்கத்தில் சிரிக்கும் வெள்ளை முல்லை மலர்களையும், அவன் பார்த்தான். மெல்லியதாக சிவத்த சாயம் பூசப்பட்ட அவள் அதரங்களையும் பார்த்தான்; நிகுநிகுத்துப் பளபளக்கும் நீண்ட கழுத்தில் , மெல்லிய மஞ்சள் கோடாக மினுங்கும் தங்கச் சங்கிலியையும் பார்த்தான். பக்கப்பார்வையில் ஒரு பக்கம் தெரிந்த அவள் முகத்தில் நீண்ட மூக்கினையும், காதளவோடிய புருவத்தினையும் பளபளத்துருண்ட ஒருபக்கச் சொக்கினையும் பார்த்தான்.
திடீரென அவளை ஒரு பரீட்சை மண்டபத்தில் சந்தித்திருப்பதாக அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்றைய பரீட்சையின் இறுதிக் கட்டத்தில், இலக்கிய சம்பந்தமான ஒரு வினாவின் விடையை எப்படி அழகாக வார்த்தைகளில் அடக்கலாமென அவன் அண்ணாந்து யோசித்தபோது – அந்த முகத்தையும் அதில் குறுகுறுத்துச்சுழன்ற கருவண்டுக்கண்களையும். அவன் கண்ட ஞாபகம் வந்தது. அப்போது அவனொரு மோகனமான புன்னகை பூத்தான். அவளும் பதிலுக்குச் சிரித்துத் தலை கவிழ்த்துக் கொண்டாள். அந்த அழகான கவிதை போன்ற அனுபவத்தில், திழைத்த விறுவிறுப்பில் அந்த வினாவுக்கான விடையை அழகாக எழுதியதும் அவனுக்கு ஞாபகம் வந்தது.
பரீட்சை முடிந்ததும் அவளை சந்திக்க முனைந்ததும் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவளைப் பின்பு காணாமல் ஏங்கியதையும், அவன் நினைத்தான். காற்றில் மிதக்கும் சுகமாக அவளின் புன்னகை நிறைந்த அந்த முகம், இரண்டு மூன்று நாட்களாக மனத்தில் மிதந்து, ஒருவித துன்பங்கலந்த இன்பத்தை அளித்ததையும் அவன் நினைந்தான். பின்பு அவளை மறந்து, நாளாந்த வாழ்க்கை இயக்கத்தில் எத்தனையோ விதமான கவர்ச்சிகளைக்கண்டு, இரசித்து, அதில் இலயித்த, இந்த வாழ்க்கையின் மோகனமான அந்தப் பொழுதுகளையும் அவன் நினைத்துப் பார்த்தான்.
அவன் பெருமூச்சு விட்டான். இடக்காலைத் தூக்கி வலக்காலின் மேல் போட்டுக் கொண்டான். வேண்டுமென்றே அவளின் உடலில் படத்தக்கதாக தனது கையைத் தூக்கிவிட்டு, அதற்கு வருந்துபவன் போல, “சொறி” என்று சொன்னான். அவளைத் தன்பக்கம் திருப்புவதற்காக அவன் எவ்வளவோ பிரயத்தனங்கள் செய்தான். அவள் அசைந்து கொடுக்கவில்லை. நிகழ்ச்சிகளில் தன்னை மறந்து ஒன்றித்திருப்பவள் போல, அவள் மேடையையே ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் சலிப்புற்றான். சாவகாசமாக மண்டபத்து அலங்காரங்களை மேலோட்டமாக நோட்டம் விட்டான். மாலையும் இரவும் சந்திக்கும் அந்த அந்தி நேரத்தில், மண்டபத்து மின்விளக்குகள் மஞ்சள் முலாம் பூசியது போன்ற ஒளியைச் சிந்திக் கொண்டிருந்தன. மண்டபம் தலைகளால் நிறைந்திருந்தது. மேடையில் சலங்கைச் சத்தம் கேட்டது. முன்னாலிருந்த நடுத்தர வயது மனிதர் வெகு இலாவகமாக சிகரெட் புகையை ஊதிக்கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த அழகான பட்டுச் சேலையணிந்திருந்த பெண் – அவர் மனைவியாக இருக்கவேண்டும். அப்புகையினால் அருவருப்படைந்தவள் மாதிரி முகத்தை மற்றப்பக்கம் திருப்பிக்கொண்டாள். அவள் அவரிலும் பார்க்க வயது குறைந்தவளாக இளம் பெண்ணாகக் காட்சி தந்தாள். ஒற்றைப் பின்னல் பின்னி அதன் நுனியில் பூக்குஞ்சம் கட்டி, சிவப்பு, வெள்ளை மணிகள் போன்ற சிறிய வட்டக்குண்டுகளால் அதை அலங்கரித்து இருந்தாள் பாவை போன்ற அழகான பத்து வயதுக் குழந்தையொன்று. ஓடிவந்து அவளை மாமியென்று கட்டிக்கொண்டு சிரித்தது.
அவன் பக்கத்திலிருந்த அவள் “அருமை. அருமை” என்று தன்னை மறந்து கைகொட்டினாள்.
அவன் மேடையைப் பார்த்தான். அலங்கார பூஜிதையான இளம்பெண் ஒருத்தி, ஒற்றைப் பாதத்தைத் தூக்கி மேடையில் குத்திக்குத்தி கைகளை வளைத்து வளைத்து ஏதோ அபிநய முத்திரை காட்டினாள். பாதச்சலங்கையொலி கலிங்கலிங்கென காதில் இனித்தது. பாடல் பாடிய பெண் இனிய குரலில் இழைந்தாள்.
“அழகென்னும் சொல்லுக்கு பொருள் கண்டேனடி; ஆனந்தம் கொண்டேனடி …….. தோழி!”
ஆடிய பெண் கால்களை விரித்து இருந்து கைகளினால் ஏதோ கோலங்கள் காட்டிக்கொண்டே எழுந்தாள். உண்மையிலேயே அது அற்புதமாகத்தான் இருந்தது. அந்த மோகனத்தில் அவனும் மயங்கித் திளைத்தான.
அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்: “அருமையாக ஆடுகிறாளே யாரிந்தப்பெண்?”
அவள் முழுதாகத்திரும்பி அவனைப் பார்த்தாள். ஒரு கணம் துணுக்குற்றாள். அறிமுகமான புன்னகையுடனே “யாரோ தெரியவில்லை?” என்றாள்.
அவனும் மெதுவாகச் சிரித்துக் கொண்டான். “அழகாகவும் இருக்கிறாள்” என்று சொன்னான்.
அவன் சொன்னதைப் பிடிக்காதவள் போல அவள் திரும்பிப் பார்த்தாள். “இந்த மண்டபமும் அழகாகத்தானே அலங்கரிக்கப்பட்டிருக்கிறது” என்றாள் வெடுக்கென!
அப்போதுதான் அந்த மண்டபத்தை முழுதாகப் பார்ப்பதுபோல அவன் பார்த்தான் தென்னை. மாவிலைத்தோரணங்கள் காற்றில் அசைந்தன. வண்ணக் கடதாசிகள் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்து மினுங்கின. கலைத்தெய்வமென்று கற்பிக்கப்பட்டகலைமகளின் படம் வண்ணமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேடையின் ஒரு பக்கத்தில் இருந்தது.
அவன் சொன்னான். “நீர் சொல்வது சரிதான்; இப்படிப் பார்க்கப்போனால் உலகம் எல்லாமே அழகுதானே. ஆடிய பெண்ணின் அழகு உயிர்த்துவமான ஒரு ரகம்; மண்டபத்தின் அழகு செயற்கையான வேறோர் ரகம்.”
அவளுக்கு விளங்காத விடயத்தை அதிகப்பிரசங்கித்தனமாக சொல்லிவிட்டது போல அவன் தவித்தான்.
அவள் திரும்பி அவனை நேருக்கு நேர் பார்த்துச் சொன்னாள். “அழகு என்பது மனம் பற்றிய ஒரு கோட்பாடு.”
அவன் உஷாரானான். தான் அவளைத் தவறாக எடை போட்டு விட்டதை அவன் உணர்ந்தான். இந்த நுணுக்கமான விடயங்களைப்பற்றி, அவளும் அதிகம் அறிந்திருக்கிறா ளென்பதையும் அவன் அறிந்து கொண்டான். முன்பு ஒரு பக்கம் மட்டும் பார்த்த அவளின் முகத்தை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு – அவள் நெற்றியில் ஆச்சரியக்குறியாக விளங்கிய சிவத்தச் சாந்துப் பொட்டைப் பார்த்துக்கொண்டு – மெல்லியதாக மைதீட்டப்பட்ட புருவங்களைப் பார்த்துக்கொண்டு – காதில் அசைந்தாடிய வட்டக் காதணிகளைப் பார்த்துக்கொண்டு – அவள் தலையின் நேர்வகிட்டின் நேர்த்தியைப் பார்த்துக்கொண்டு அவன் சொன்னான்.
“அழகு என்பது மனம் பற்றிய ஒரு கோட்பாடுதான். எனக்கு அழகாகத்தெரிவது உமக்கு அருவருப்பாகவும், உமக்கு அருவருப்பானது எனக்கு அழகாகவுந் தெரியலாந்தான். நீர் அழகென்று சொல்லி வாதிடாததை நான் அழகென்று சொல்லி வாதிடலாந்தான் ; என்றாலுங்கூட இந்த உலகில் நித்தியமான, உயிர்த்துவமான, மோகனமான. எல்லாராலும் அழகென்று ஏற்றுக் கொள்ளக்கூடிய பவித்திரமான அழகுகளும் இருக்கின்றன தானே;”
அவள் அவன் சொன்னதை அங்கீகரிப்பவள்போல மௌனமாகத் தலைகுனிந்திருந்தாள். அவன் தான் பலத்துப் பேசிவிட்டது போல, யாராகிலும் தங்களை அவதானிக்கிறார்களோவெனச் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே ஏதேதோ குசுகுசுத்துக்கொண்டிருந்தனர். மேடையைப் பார்த்தான். காற்சட்டை போட்ட, கண்ணாடி அணிந்த முதியவரொருவர், நவராத்திரி பூசையின் தத்துவம் பற்றி, கேட்டுக்கேட்டு புளித்துப்போன விடயங்களைத் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தார்.
“தமிழன் பெண்ணுக்கு முதன்மையிடம் அளித்திருந்தான்: பெண்மையை மதித்தான். அதனாலே தான பெண் சக்திக்கு கோயில் கட்டி வணங்கினான். மனித வாழ்வுக்கு இன்றியமையாத கல்வி, செல்வம், வீரம் என்பனவற்றுக்கும் முறையே கலைமகள், அலைமகள், மலைமகள் எனப் பெண் தெய்வங்களைப் படைத்தான். மனித வாழ்க்கையோட்டத்தில் பெண்களின் பெரும்பங்கை அறிந்திருந்தான்.
அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். ‘ஐயோ தாழ்ந்த தமிழகமே…’ என்று யாரோவொரு கவிஞன், மனங்கொதித்துச் சொன்ன அந்த உணர்ச்சிகரமான வாக்கியங்களை நினைத்துக் கொண்டான். இப்படியே பேசிப். பேசிப், பேசி……
அவன் அவளைப் பார்த்தான். அவள் மௌனமாகவே குனிந்திருந்தாள்.
“என்னுடன் கோபமா…” என்று அவன் மெதுவாகக் கேட்டான்.
“இல்லையே…” என்றவள் புன்னகை பூத்தாள்.
“நீ மிக அழகாக இருக்கிறாய்” என்றான் அவன் தொடர்ந்து;
‘நீங்களுந்தான்…’ என்றவள் வெட்கித் தலைகுனிந்தாள்.
அவள் கன்னஞ் சிவந்தது. அவன் மகிழ்ச்சி என்னுங் கடலில் மிதந்தான். இந்த உலக வாழ்வின் சாசுவதமான – நித்தியத்துவத்தை உணர்ந்துவிட்டவன் போல அவன் குதூகலித்தான். ஒரு அழகான, மனத்திற்கு இதமான பெண்ணின் வாயால் கேட்ட, ‘நீயும் அழகானவன்’ என்ற வார்த்தைகளில் ஓர் அற்புதமான கவிதையின் சாரம் இருப்பதுபோல அவனுக்குப்பட்டது. ஓர் அழகான ஓவியத்தைப் பார்த்த – ஓர் அமரத்துவமான இசையைக் கேட்ட – ஒரு சாகாவரம் பெற்ற கதையைப் படித்த உணர்ச்சி மேலிட்டது அவனுக்கு. தன் வாழ்க்கையின் சாரமே அந்தக் கணத்தில் அடங்கியிருப்பதாக அவன் எண்ணினான்.
அவன் மலர்போன்ற அவள் கரத்தைப்பற்றினான். அவள் அதற்கு விருப்பமில்லாதவள் போல நெளிந்தாள். இடது கால் பெருவிரலால் நிலத்தை உராஞ்சினாள். இடது கையின் சுட்டுவிரல் நகத்தை வாயில் வைத்துக் கடித்தாள். ஓசை எழாமல் சிணுங்கினாள்.
மேடையில் யாரோ ஒரு சங்கீத வித்துவான். பரபரவெனப் பூச்சொரிவது போல, ஏதோவெரு இராகத்தை ஆலாபரணம் செய்து கொண்டிருந்தார்.
அவன் அவளின் மென்மையான கரத்தை வருடியவாறே யோசித்தான். இந்த விடயத்திலாதல் தானொரு பாக்கியசாலியென அவன் நம்பினான். அழகான அவளை, தனது அறிவுக்கு சமனான அறிவுடையவளான அவளை ஒரு ‘இன்ர லெக்சுவல் கொம்பானியனாக’ அடைவதில் தான் அதிர்ஷ்ட சாலியென அவன் பெருமிதமுற்றான். சிந்தனைப் போக்கில் சில விடயங்களில் அவளும் தானும் முரண்பட்டால் கூட, அந்த முரண்பாடுகளும் ஒருவிதமான இன்பந்தானென அவன் எண்ணினான்.
மண்டபம் கலகலக்க சங்கீத வித்துவான் தன் கச்சேரியை முடித்துக்கொண்டார் . “போங்களேன்” என்று சொல்லி அவன் பிடியிலிருந்து அவள் தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள். விடுவித்த கரத்தை அவள் தன் மற்றக் கரத்தால் தடவியுங் கொண்டாள்.
அவனுக்கு அன்றொருநாள் கடற்கரைக் ஹோட்டலின், கருங்கற் பாறைகளில் கண்ட காட்சி ஞாபகம் வந்தது. எவ்வளவு ஸ்படிகமாக அந்த வெள்ளைக்காரன் அவளை – அவன் மனைவியாக இருக்கலாம் – முத்தமிட்டான். சிவப்புக் கோளமாக சூரியன் அஸ்தமிக்கும் அந்த நீலக்கடலின் பின்னணியில், எத்தனை பேர் அந்தக் காட்சியைக் கண்டிருப்பார்கள். அவன் கூட அதைக்கண்டு நாணியிருந்தான். இந்த நாட்டின் இளைய சந்ததியினரும் இதைக்கண்டு மாறிவிடுவார்களேயென்று வருந்தியுமிருந்தான்.
“போங்களேன்” என்று சொல்லி தன்கரத்தை விடுவித்த அவளின் நாணங் கலந்த பெண்மையுடன் – எவ்வளவோ பேருக்கு முன் ஒரு ஆடவனை முத்தமிட்ட அந்த வெள்ளைக்காரியின் பெண்மையை ஒப்பிட்டுப்பார்த்தான். இடம், காலம், சூழல், தொடர்ந்த வரலாற்றுப் போக்கு என்பன வற்றுக்கமைய பண்பாட்டுக் கோலங்கள் எப்படி எப்படி அமைந்திருக்கின்றன என்று எண்ணி அவன் வியந்தான்.
“என்ன யோசனை” என்ற குரல் அவன் காதில் இனித்தது.
அவன் விழித்துப் பார்த்தான்.
நிகழ்ச்சிகள் முடிந்து கூட்டம் குலையத் தொடங்கி இருந்தது. அவனுக்காகவும் அவள் தான் பெற்றிருந்த பிரசாத உறையை அவனிடம் நீட்டினாள். “நான் வரப்போறேன்” என்று திரும்பினாள். அவளுக்காக அவளைப்போல நாலைந்து பெண்கள் காத்து நின்றார்கள்.
“ஒரு நிமிஷம்” என்றவன், “உங்கள் பெயர் ஒன்றையுமே சொல்லவில்லையே” என்று தயங்கினாள்.
“அவை தேவையில்லையென்று நினைக்கிறேன். எங்களிருவருக்கும் இந்தப் பொழுதுகள் இன்பமானவை, இனிமேலும் நாம் ஒருவர் வாழ்வில் ஒருவர் குறுக்கிட வேண்டும்தானா” என்றவள், திரும்பி தன் தோழிகளை நோக்கி நடந்தாள்.
அவன் இடிவிழுந்தது போல விக்கித்து நின்றான். தனது மன உணர்ச்சிகள் மாறி மரப்பதை அவன் உணர்ந்தான். மனித மனப்போக்குகளின் உணர்ச்சிகளின் விசித்திரங்களை அவன் எண்ணிப்பார்த்துக் கொண்டே, அவர்களைப் பின் தொடர்ந்து நடந்தான்.
அவர்களின் கவகலவென்ற சிரிப்பொலி அவன் காதில் விழுந்தது. அவர்கள் எதுவித சஞ்சலமுமில்லாமல் சந்தோஷமாக, குதூகலமாக சிரித்துக் கதைத்தவாறு கிழக்கே திரும்பினர்.
அவன் தன்னைப்பற்றி யோசித்தவாறே மேற்கே திரும்பி நடந்தான். தன் மனத்தில் மகிழ்ச்சியோ, துக்கமோ என்று சொல்ல முடியாத ஓர் உணர்ச்சி தேங்கி நிற்பதாக உணர்ந்தான்.
அவளுடன் பழகிய அந்தக் கணங்களின் நினைவு மகிழ்ச்சியைத் தந்தது.
அவள் பிரிந்து செல்கின்றாள் என்ற உணர்வு துக்கத்தைத் தந்தது.
வாழ்க்கை என்பதே உணர்ச்சிகளின் கோலந்தானே என மனத்தைத் தேற்றினான்.
வீதி விளக்குகளின் ஒளியில், ஆடி அசைந்த மர இலைகள் நிழற்கோலம் போட்டன.
– 1970 – கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976
– சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.