“கூர்மையான நாசி,மை பூசி விட்ட கண்ணு ,நல்லா பெரிசா,சன்னமான புருவத்துக்கு கீழ.சாயம் படாத உதடு.தங்கம் இழச்சு பூசுன மாத்ரி கன்னம்.பறக்க விட்ட நீளமான முடி,காத அழகா ஒளிச்சு வெச்சு கொஞ்சமா காட்டிகிட்டு.எப்பவுமே சின்னதா போட்டு ஒன்னு வெச்சிருப்பா, நான் கலர் கவனிகரதில்லை .நல்ல நீளமான விரல் ,கைய பிடுச்சுக்கிட்டு நின்னுருக்கேன்.குண்டுனும் சொல்ல முடியாது ஒல்லினும் சொல்ல முடியாது.எட்ட நின்னு பாத்தாலே தெரியும் ஆம்பள பாப்பாத்தின்னு “,நிதானமாக, கண்மூடி,அனுபவித்து, வருடிபார்தார்போல சத்யா வர்ணித்து கூறுவது ப்ரவீனுக்கு ஆச்சர்யமாகத்தான் பட்டது.
இவன் தான் சத்யா என்று அவனை எழுத்தில் வரைவது சிரமம்,உருண்டையான அமுல் பேபி முகத்தில் எப்போதும் சிரிப்பை காணலாம்,குழந்தையா,பைத்தியமா ,நடிக்கிறானா என்று சொல்வது சற்று கடினம்,எப்போதும் மனதில் கதம்பமான எண்ணங்களை கொண்ட ஒரு சாது பிள்ளை வேடத்திற்கு பொருத்தமாக இருப்பான்.இன்னொரு பக்கம் சான்றோர் சூழ்ந்த நல்அரங்கில் ஒரு ஈரான் பெண் தன் அழுவாச்சி காவியத்தை படைத்து கொண்டிருக்கும் போது ” ஐயையே இந்த பொண்ண போட்டுடிருகானுங்க மச்சி ” என்று அதிர்ச்சி கொடுப்பான்.
ஆனால் இது சத்தியமாக அந்த சத்யா அல்ல,இது வேறு யாரோ, அந்த சத்யாவின் 2 % கூட இவனிடம் இல்லை .’என்னடா இது க்ளோன் பண்ணி புது மாடல் விட்டாங்களோ!’
கடல் அளவு ஆர்வத்தை அடக்கி கொண்டு ,சம்ப்ரதாயமாக பிரவீன் “யாருடா” என்று கேட்டது கேள்வி போல் தொனிக்கவில்லை ஏதோ சலிப்பில் “அய்யய்யோ” என்பதுபோல தான் ஒலித்தது.
இந்த சம்பாஷனை அவர்களுக்கு புதிதல்ல.சத்யா விவரித்த பெண்களை கொண்டு ரெண்டு டைரெக்டரியே போடலாம்.அவ்ளோ.ஆனால் அவன் இப்போது வர்ணித்த விதமும், அவனுடைய இயற்கைக்கு ஒவ்வாத குணமும் ‘இது வேற என்னமோ ‘ என்று அடிக்கோடிட்டது.
மிக மௌனமாக தரையை பார்த்து கொண்டு உட்கார்ந்து இருந்தவனிடம் இருந்து கண்களை பிடுங்கி இணையத்தில் ஒட்டவைக்க முயன்று கொண்டிருந்தான் பிரவீன்.
பழக்கமில்லாத கடினமான அமைதிக்கு பின் “தெரியாது டா” என்ற பதிலை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
“குழப்பாத, அவ கைய புடிச்சிக்கிட்டு நின்னேன் ,கடலை வாங்கி துன்னேன்னு சொல்ற,பேர் தெரியாதா?” சற்றே கடினமாக கேட்டான் .
மறுபடியும் அந்த பழக்கமில்லாத மௌனம் இருவரையும் சூழ்ந்து கொண்டது,இருக்கையில் சற்றே பின் சாய்ந்து,கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு,ரயில் பிளாட்பாரம் வர காத்திருப்பவன் போல,அவன் பதில் எதிர்பார்த்து காத்திருந்தான்.அறையில் மௌனத்தின் நிழல் முழுதாக படராமல் கடிகாரத்தின் ‘டிக் டாக்’ மட்டுமே காத்துவந்தது.இரையை கண்ட சந்தோஷத்தில் குயிலின் “கூக்கூ”வும்,யாரையோ விலக சொல்லி அடிக்க பட்ட சைக்கிள் மணியின் ஓசையும்,ஒரு சேர ஒலித்தன. மீண்டும் ‘டிக் டாக்’.
எவ்வித சலனமும் இல்லாமல்,மோவாயில் கைவைத்து,தரைப்பார்த்து ஏதோ யோசிப்பவன் போல அமர்ந்திருந்தான்,இல்லை, இது யோசனை இல்லை,குழப்பமா? அதுவும் இல்லை,வெறுமை,ஆம் வெறும் வெறுமை,வாய்ட்(void).
சத்யாவின் வெறுமை பிரவீனை ஏதோ செய்தது,உள்ளூர பதற வைத்தது,கோவமும் பயமும் ஒரு சேர அவனை துளைத்தது,அந்த ‘டிக் டாக்’ அவனை இன்னதென்று சொல்ல முடியாமல் உறுத்த தொடங்கியது.தன் மேல் பிடிவாதமாக போர்த்தப்பட்ட நிசப்தத்தை கிழித்தெறிய வேண்டி வாய் திறந்தான்.சத்யா முந்தினான்.
“ஒன்னுமே புரியலடா,நிறைய பேசுவோம்,போன்ல பேசுவோம் ,ஒரு மணி,ரெண்டு மணி,சில தடவை நாள் முழுக்க,ஆனா அவ பேர் மட்டும் என் காதுல விழவே மாட்டேங்குது,படிச்சாலும் அடுத்த செகண்ட் மறந்துடுது”,என்றான்.
ஒன்றும் புரியாதவனாக பிரவீன் “அப்ப,நீ அவள என்னனு கூப்புடுவ?”என்று நிதானமாக கேட்டான்.
“பேரச் சொல்லிதான்”.
“அப்ப,அவ பேர் என்ன?”
“தெரியாது டா”.உணர்ச்சி எதுவுமற்ற சொற்கள் பிரவீனை சுருக்கென்று குத்தியது.
சத்யாவுடன் அந்த அறையில் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் அவனுள் குழப்பம் அதிகரித்துகொண்டே போனது,அது தன்னை மூழ்கடித்துவிடுமோ, என்று பயந்தான்,திணறினான்.
“உன் போன் கொடு,அதுல பேர் இருக்கில்ல,நான் பாத்துக்கறேன்”.
“இல்ல, அதுல அவ பேர் இல்ல”.
“நம்பர் இருக்கில்ல போன் பண்ணி கேட்டா போச்சு”.
“நம்பரும் இல்ல”.
“என்னடா உழப்பற” என்று கூறியவாறே பிரவீன் தன் ஐ-போனைத் தேடினான்.
“ஞாமகம் இல்லடா”.
சற்றும் எதிர்பாராமல் பளார் என கன்னத்தில் அடிவாங்கியதுபோல் சத்யாவை பார்த்தான்.
“அப்பறம்,எப்படித்தான் பேசுவ”.
“கனவுல”.
பதில் அவன் காது வழியாக சென்று மூளையில் பதிவாகி அர்த்தம் துலங்குவதற்கு ஆன சில மணிதுளிகள்,யுகம் போல கழிந்தது.கடந்த 54 செகண்டில் அவர்களுக்குள் நடந்த உரையாடலை மறுபடியும் தனக்குள்ளே ஓட விட்டு பார்த்தான் .2 ,3 ,4 தடவை ,ஊஹும்.அம்மாவாசை இருட்டில் ஊசி பொறுக்க முற்படுவது அபத்தம்,அவன் torch கேட்கவில்லை,விட்டில் பூச்சி கிடைக்காதா என்று பரிதவித்தான் .
தரையை விட்டு தலையை திருப்பாமல்,உதட்டு தோலை ரத்தம் வருவது கூட பொருட்படுத்தாமல் தனது வலகரத்தால் பிய்த்து கொண்டிருப்பவனை பார்க்கும் போது,இன்னதென்று சொல்ல முடியாத கலக்கம் பிரவீன் வயிற்றை கவ்வியது.
“அப்ப நீ அவள பாத்ததே இல்லியா?” வினவினான்.
“பாத்திருக்கேன்,எப்போவோ,எங்கேயோ,அன்னிக்கு காலைல காலேஜ் வரும் போது,பஸ் ஸ்டாப்ல,கைல ஒரு வைட் கோட் வெச்சுகிட்டு,கருப்பு bag மாட்டிக்கிட்டு,பஸ் அவள கிராஸ் பன்ற அந்த 3 செகண்ட்,மெடிகல்னு நெனைக்கிறேன் “.
“அந்த 3 செகண்ட் காரி உன் கனவுல வரா? உன் கூட பேசறா,பழகறா,ஐஸ் கிரீம் சாப்புடரா?நிஜமாத்தான் சொல்றியா?”
“ஆமா”.
“எவ்ளோ நாளா?”.
“ஒரு 13 நாளா”.
“so she does exist ,13 நாளா நீ எப்போவோ 3 செகண்ட் பார்த்த பொண்ணு உன் கனவுல வரா? அவ உன்ன லவ் பண்றா ,உன் கூட ஊர் சுத்துறா,etc ,etc ?”
“yes ,ராத்திரி தூங்க ஆரம்பிச்ச உடனயே அந்த கனவும் ஆரம்பமாயிடுது,நான் எழுந்துக்குற வரைக்கும் ரெண்டு பேறும் ஒன்னா தான் இருக்கோம்,அங்க நாங்க ரெண்டு பேர் மட்டும் தான்,காலைல கனவு களஞ்சிடுது,ஆனா அது கனவு மாதரியே தெரியல.ரொம்ப ரியல்.எனக்கு என்னமோ அதுதான் நிஜம்னு தோன்றது இப்ப நான் கனவுல இருக்கற மாத்ரி தோன்றது”.
“ridiculous ,absurd ,இதோ பார் அந்த பொண்ணு கனவு,நான் நிஜம் ,wait இதுக்கு எதாவது மெடிக்கல் டெர்ம் இருக்கானு பாக்கலாம்,எப்படி இத search பன்றது” என்று உரக்க சிந்தித்து கொண்டே கூகுளை இயக்கினான்.திடீரென ஒரு தீர்வு கண்டவனாக “கனவு தான டா,why do you worry,அது எந்த விதத்திலயும் யாரையும் படுத்தற மாத்ரி இல்லியே?” என்றான்.
சத்யா நிமிர்ந்தான்,நின்றான்,பார்த்தான்,ஒரு அடிப்பட்ட பார்வை,விழுந்து புரண்டு அழவேண்டும் போல் இருந்தான்,கண்கள் கலங்கி உதடு துடித்து கொண்டிருந்தது,மார்பு ஒரு அகதியின் நூற்றாண்டு அழுகையை உள்ளுக்குள் தேக்கி வைத்திருப்பதாக பட்டது,கன்னம் உதறிக்கொண்டிருந்தது,குரல் உடைய “அவள காணும் டா” என்றான்.
“புரியல”.
“அவள காணும் டா,எல்லா எடத்துலயும் தேடிப்பாத்துடேன்,3 நாளா,என்ன ஆச்சுனே தெரியல டா,எனக்கு ரொம்ப பயமா இருக்கு”.
“நிதானமா,புரியற மாத்ரி சொல்லு”.
“அவ மூணு நாளா என் கனவுல இல்லடா,அவள காணும் டா,யாரோ அவள கொண்டுப்பொயிட்டாங்கடா,…..”.என்று அடுக்கி கொண்டேப் போனவனை பிரவீன் கலவரத்தோடு பார்க்கலானான்.
“டேய் u need help ,நம்ம முதல ஒரு டாக்டர் கிட்ட போ….”,’வோம் ‘என்று முடிப்பதற்குள்,”மது” என்று சத்யா உமிழ்ந்தான்.நொடிப்பொழுதில் அப்பெயர் பிரவீனை கலக்கமுறச் செய்தது.அடிவயிற்றில் கால்வைத்ததுப் போல்,உள்நாக்கு கீழ்நோக்கிச் சென்று உணவுக்குழாழை அடைத்ததுப் போல்,நடுஇரவில் இடையிராமல் ஒலிக்கும் தொலைபேசிக் கொண்டுசேர்க்கும் செய்தியை உத்தேசித்து எழும் பதைபதைப்பைப் போல் ஒரு கலந்து கட்டிய உணர்வு அவன் உள்ளத்தைத் துருவியது.
அப்பெயர் ஏற்படுத்திய உணர்வல்ல அது.மது,பெயரை கேட்ட மாத்திரம் காதைச் செல்லமாக திருகி உயரே தூக்கிச்செல்லும்.மது,வஸ்து ஏற்படுத்தாத போதை அவள் பெயரில் உண்டு.மது,சொல்லச்சொல்ல ஆளை இன்ப மயக்கத்தில் கிடத்தும் ஒரு வித வசீகரம் அவள் பெயர்க்குமட்டுமன்று அவளுக்கும் உண்டு.மது,மற்றோருக்கு எப்படியோ,ப்ரவீனுக்கு உயிரானவள்,அவனின் ஒவ்வொரு அணுவிலும் சரிப்பாதி அவள்.
மறுபடியும்,அப்பெயர் ஏற்படுத்திய உணர்வல்ல அது,அப்பெயரை சத்யா உச்சரித்த விதம் கொடுத்த ஒரு அச்ச உணர்வு.மெதுவாக சத்யாவிடமிருந்து தன் கண்களைப் பிடுங்கி அவன் வெறித்த திசை நோக்கி தன் கண்களை கொண்டு சென்றான்,அங்கே அவனும் அவளும் கணினி திரையில் சிரிக்க கண்டான்,பிரவீனும் மதுவும் ,ஊனும் உயிரும்.மீண்டும் சத்யாவை நோக்கி பார்வையைத் திருப்பினான்.
இதுவரை சத்யாவிடம் சொன்னதில்லை,தெரியும் என்று எண்ணியிருந்தான்.அவன் முகபாவங்கள் கலக்கமுற்றிருந்த மனதை மேலும் கலங்கச் செய்தது.
மனித மூளை மிகவும் விசித்ரமானது,அழகானது,அபூர்வமானது,அபாயகரமானதும் கூட.அதை ஒரு முடிவற்ற சுரங்கமாகக் கொண்டால்,அதன் 2 இன்ச் கூட முழுதாக வெளிச்சம் கண்டிருக்க வாய்ப்பில்லை.அதன் கூறுகளை ஒருவாறு மனிதன் யூகித்தறிந்திருந்தாலும்,அதன் ஆற்றல் அளப்பரியது,அதன் பரிணாமவளர்ச்சி ஆச்சரியங்களின் தாய்.அனைத்திற்கும் மேல் அதன் புதிரை அதுவே விடுவிக்க மேற்கொள்ளும் முயற்சி மனித வாழ்நாளின் முதல் மாபெரும் அதிசயம்.மனிதன் என்பான் அவன் மூளையே.
சத்யாவின் மூளை அவனை வஞ்சிக்கத் துவங்கியது.ஏதோ ஒருநாள் சாலையில் கண்டப் பெண்ணை,அவன் கனவுகளின் ராணி ஆக்கியது.இருவரின் சந்திப்பிர்க்கும் காரணம் ஏற்படுத்தியது.இருவரையும் பேசவைத்தது, பழகவைத்தது.மனதைப் பரிமாறிக்கொள்ளவும் அனுமதித்தது.அவன் மூளை ஏற்படுத்திக் கொடுத்த ஓர் உலகில் அவன் கதாநாயகனாக வாழ்ந்தான் அவள் கதாநாயகியாக.அவன் இளவரசன் அவள் இளவரசி . அவன் காதலன் அவள் காதலி.அந்த இரண்டாம் உலகம் அவனைச் சுற்றியே சுழன்றது.அவன் அதில் அவளைச் சுற்றி.அவன் இரண்டானான்.
திடீரென்று ஒருநாள்,ஒன்றும் இல்லாமல் போனது.அவன் கனவினின்று அவள் தவறிப்போனால்.பொம்மைத் தொலைத்த குழந்தைப் போல் பதறினான்.பிரிவின் துன்பமும் துயரமும் தாளாமல் கதறினான்.அவனை அது நிஜ வாழ்விலும் குதறவே செய்வதறியாது பிதற்றினான்.அவன் இரு உலகங்களும் ஒரு புள்ளியில் இணையத் துவங்கின.நிழலும் நிஜமும் பிணைந்தது.சுருக்கமாக,கனவையும் நிஜத்தையும் இரு தண்டவாளங்களாக கொண்டால்,அவற்றின் மீது பயணம் செய்யும் அவனது மனமாகிய எந்திரம் சீராக சென்றது.வழியில் இருதண்டவாளங் களும் ஒன்றோடு ஒன்று பிணையவே,எந்திரம் தடம்புரண்டது.நிகழ்வுக்கு காரணம் மது.
சாதாரண நிகழ்வுகள் நம் வாழ்வில் மட்டுமல்ல சுற்றோரிடத்தும் அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்த கூடும்.நிகழ்வுகளை அவ்வாறு தரம் பிரிப்பதே அபத்தம்.பலரின் அசாதாரண அனுபவங்கள் சிலர்க்கு சாதரணமாகத் தோன்றும்,சிலரின் சாதாரணம் பலர்க்கு அசாதாரணம்.ஆக அவை வெறும் நிகழ்வுகளே,அவற்றை எவ்வித கேள்விக்கும் உட்படுத்த முடியாது.இயற்பியல் விதிகளும்,கோட்ப்பாடுகளும்,அறிவியல் கொள்கைகளும் எல்லாரிடத்தும்,எல்லாவிடத்தும் செல்லுவதில்லை.நிகழ்வுகள் அல்ல விளைவுகளே உலகம்,உயிர்,வாழ்க்கை.வேடிக்கை பார்க்கலாம்.எல்லா கேள்விகளும் விடை சம்பாதிப்பதில்லை.
ஸ்க்ரீன் சேவரில் மதுவையும் பிரவீனையும் ஒரு சேர கண்டவுடன் அந்த நிகழ்வு முழுமையடைந்தது.அவள் பெயர் நினைவுத்தட்டியதர்க்கு காரணம் அதுவே. எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன்,பிரிமாநிஷன் போன்ற புரிபடா,பெயரில்லா விஷயம் ஏதேனும் இருக்கலாம்.freud இடம் மட்டுமல்ல,எவரிடமும் அதற்கான பதில் இருக்க வாய்ப்பில்லை.
சத்யாவிடம் முதலில் தோன்றிய குழப்பம் ஆச்சர்யமாக மாறியது,அவ்வாச்சர்யம் அதிர்ச்சியாக பரிணமித்தது,அதிர்ச்சி ஆத்திரமாக உருப்பெற்றது.உடல் முழுக்க கொப்பளித்த ஆத்திரம் அவன் யோசனை திறனை பறித்தது.கண்கள் சிவப்பேறின,நரம்புகள் புடைத்தன,உடல் முழுதும் பரபரத்தது.முகம் உதர,குரல் உடைய சத்யா,”எங்கடா அவ,ரெண்டு பேருமா என்னை ஏமாத்துறீங்களா,i will show you”.கொதித்தான்.
அறை முழுதும் பார்வையை அலைய விட்டான்.கணினி மேஜை மேல் கத்தி இருக்க கண்டான்,பாய்ந்து பற்றினான்.தன் ஒவ்வொரு அணுவிலும் தேக்கி வைத்த ஆத்திரத்தை பிரவீன் மீது திருப்பினான்.
பிரவீனின் இதய துடிப்பால் அந்த அறை நிரம்பி வழிவதாக பட்டது,சத்யாவின் ஒவ்வொரு கண்ணசைவிலும் அவன் இதய துடிப்பு கூடிகொண்டே போனது,தன் வாழ்நாளில் அவன் மனம் இவ்வளவு குரூரமான பய உணர்விற்கு ஆட்பட்டதில்லை.அவன் உடல் முழுதையும் பயம் தின்றது.அவன் பார்த்த திசை எல்லாம் சத்யாவின் கண்களை எதிர் கொண்டான்.அறையில் உஷ்ணம் அதிகமாவதாக உணர்ந்தான்,காற்று போதாமல் சிரமப்பட்டான்,அவன் ஆடைகளை கலைத்து போட துடித்தான் ,நான்கு பக்கமும் சுவர்கள் அவனை இறுக்கி,நகரவிடாமல் செய்வதாக உணர்ந்தான்.அவன் கால்கள் பலம் இழக்க தொடங்கின , உடல் அந்திம காலத்தை நெருங்கிய கிழவனை போல நடுங்க தொடங்கியது.வாய் குழறி பிதற்ற தொடங்கினான்.சத்யா கத்தியோடு அவன் மேல் பாய்ந்தான்.
……………………………….
ராகவன் வாரிசுருட்டி கொண்டு எழுந்து உட்கார்ந்தான் ,இது 13 வது கனவு,ஒவ்வொரு கனவும் அவ்வளவு கோரமானது.முடிவில் ரத்தத்தால் அறை நிரம்பும் அளவிற்கு,13 கனவிலும் அவன் எழுந்த பிறகும் நினைவில் ஒட்டி நின்றது,நிற்பது ஒரே உருவம் தான்,மது.அவள் ஆனந்தம்,கோவம்,வருத்தம்,துக்கம்,அணைத்து உணர்வுகளையும் அவனால் கற்பனை செய்யமுடிந்தது,பலயுகங்கள் பழகி பரிச்சையப்பட்டதாக இருந்தது,மது….?
கடிகாரத்தை தேடி மணியை கண்டான் 6.சுப்ரபாதம் எங்கோ கனவில் போல் ஒலித்தது.பக்கத்து அறையில் அம்மா நந்தினியை எழுப்பிக்கொண்டிருந்தாள்.அழைப்பு மணி ஒலித்தது,பால்காரனாக இருக்கும்.மெதுவாக எழுந்து கூடத்தில் வந்து உட்கார்ந்தான்.மீண்டும் மணி ஒலித்தது.அம்மா இன்னும் நந்தினியை எழுப்பி கொண்டிருந்தாள் .ஊஹும்,இன்னும் அரை மணிக்கு எழுந்திர்ருக்க மாட்டாள்,அம்மா முயற்சியை கைவிட்டு சமய கட்டில் நுழையவும் மீண்டும் மணி ஒலித்தது.அம்மா “ஏன்டா யாருன்னு பாத்து ஒழியேன்!”என்று சமய கட்டில்லிருந்து உருட்டவே ராகவன் மெல்ல எழுந்து வாயில் கதவை திறந்தான்.
“ஹாய்!நந்தினி இருக்காளா?நான் அவ friend மது!….”.