கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 21,828 
 
 

சென்னை. இரவு. கிழக்குக் கடற்கரைச் சாலை. அந்தத் திறந்தவெளி பாரின் நடுவே, இளம் வயது ஆண்களும் பெண்களும் கட்டிப்பிடி நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். அதுவும் ரெய்ன் டான்ஸ். ஸ்பீக்கரில் ‘யு ப்ளாங் வித் மி..!’ என்று டெய்லர் ஸ்விஃப்ட் அலறிக்கொண்டு இருந்தாள்.

ஆட்டத்தில் இடுப்புக்கு மேலே ஏறிவிட்ட ஜீன்ஸை, ஒரு பெண் அவசரமாக மீண்டும் இடுப்புக்கு கீழே இறக்கிக்கொண்டாள். பெண்கள் வயதுக்கு வந்தவுடன், ‘மாராப்பை ஒழுங்காப் போடுடி…’ என்று மறைக்கச் சொல்லிக் கற்றுத் தந்த சமூகத்தின் மாபெரும் வீழ்ச்சியை, ஒரு மூலையில் விஸ்கி அருந்தியபடி கவனித்துக்கொண்டு இருந்தேன். நவீன் எங்கே என்று தேடினேன். நேற்றுதான் சாட்டிங்கில் பிக்-அப் செய்த பெண்ணை இடுப்பை அணைத்தாற்போல் அழைத்துக்கொண்டு, காட்டேஜை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தான்.

அந்த இரவும், மெலிதான போதையும், நிலவொளியில் கடல் அலைகளும் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. நவீன், என்னுடன் பணிபுரிபவன். நன்கு பழகுவான். அவனுக்கு வாழ்க்கை என்றால் பெண்கள்தான். உதாரணத்துக்கு, நாமெல்லாம் நேற்று மழை பெய்த விஷயத்தை, ”நேத்து மவுன்ட் ரோடுல வந்துட்டிருந்தப்ப செம மழை…” என்போம். இதையே நவீன், ”த்ரிஷா போஸ்டரைப் பார்த்துட்டே வந்துட்டிருந்தேன். திடீர்னு மழை. பொண்ணுங்க உடம்பெல்லாம் நனைஞ்சு, வேகமா ஓடுதுங்க. நான் லேடீஸ் நிறைய பேரு ஒதுங்கியிருக்கிற இடமாப் பாத்து நின்னுட்டேன்.” என்பான். ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டில், எத்தனை பெண்கள் பாருங்கள்.

ஆள் நன்கு உயரமாக, ஜிம்முக்கெல்லாம் சென்று உடலைக் கட்டுமஸ்தாக வைத்திருப்பான். சிரிக்க, சிரிக்கப் பேசுவான். எனவே, வேலை நேரம் போக, யாரேனும் பெண்களுக்கு வலை வீசியபடியே இருப்பான். யாராவது சிக்கவும் செய்வார்கள்.

பின்னால் காலடிச் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தேன். நவீன்.

”என்ன சரண்… இங்க உக்காந்துட்டிருக்க?”

”எவ்ளோ நேரம்தான் அந்த கண்றாவியப் பாத்துட்டிருக்கிறது.. பொண்ணுங்களா இதெல்லாம்? பொண்ணுங்கன்னா, வெள்ளிக்கிழமை தலை குளிச்சிட்டு, கொலுசு சத்தம் கேட்க, சாந்துப் பொட்டுக்கு கீழ லேசாக் குங்குமம் வெச்சுக்கிட்டு நடந்து வருங்க பாரு… அதுதான் பொண்ணுங்க.” என்றதும் சத்தமாகச் சிரித்தான்.

”டேய்… நீ எந்த காலத்துல இருக்க? அதெல்லாம் நம்ம தமிழ் சினிமா டைரக்டர்ஸ், தங்களோட பழைய காதலிகளை நினைச்சு எடுக்கிறது. ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில டீம் லீடரா இருந்துக்கிட்டு, இப்படிப் பேச உனக்கு வெக்கமா இல்ல?”

”சரி… நீ பொம்பள மேட்டர விடு. நாளைக்கு சியாட்டில்ல இருந்து போன் பண்ணி, கூரியர் சர்வீஸ் புராஜெக்ட் என்னாச்சுன்னு உன் மாமன் கேப்பான். இன்னும் பாதிவொர்க் கூட தாண்டல. போன வாரமே டெட்லைன் முடிஞ்சிடுச்சு.”
”இன்னும் ஒரு வாரம் டைம் வாங்கு. நான் நாளைக்கு லீவு.”

”என்னடா திடீர்னு?”

”ஒரு முக்கியமான வேலை…”

”உனக்கு முக்கியமான வேலைன்னா, லேடீஸ் மேட்டர்தானே?

”ஆமாம்.. ஆளு யாருன்னு தெரிஞ்சா நீ ஆடிடுவே. நம்ம சந்தியா!”

”சந்தியாவா?” என்றேன் அதிர்ச்சியுடன்.

சந்தியா, நவீன் பணிபுரியும் குழுவின் டீம் லீடர். இரண்டு அக்கா, தங்கை, தம்பி… என்று பெரிய குடும்பம். ஒரு மெகா சீரியலுக்குத் தேவையான ஏராளமான கிளைக் கதைகள்கொண்ட குடும்பம். சந்தியாவின் சம்பளத்தில்தான் குடும்பமே நிமிர்ந்தது. இரண்டு அக்காக்களுக்கும் அவள்தான் திருமணம் செய்துவைத்தாள். இப்போது தம்பி பி.இ., படிக்கிறான். அவன் படித்து முடித்த பிறகுதான், தனக்குக் கல்யாணம் என்பாள்.

30 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருப்பதன் இறுக்கம் அவளிடம் தெரியும். பிற அலுவலர்களிடம் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டாள். ஒரு கெட் டுகெதர் பார்ட்டிக்கு குடும்பத்தினரை அழைத்து வந்திருந்தாள். மிகவும் ஆச்சாரமான குடும்பம். பார்ட்டியில் பரிமாறப்பட்ட சரக்கையும், அங்கு நிலவிய சத்தத்தையும் ஜீரணிக்க முடியாமல், அரை மணி நேரத்திலேயே கிளம்பிப் போய்விட்டார்கள். அவள் எப்படி இவனிடம் சிக்கினாள்?

”நிஜமாவாடா சொல்ற? அவ யாருகிட்டயும் பேசக்கூட மாட்டாளேடா?”

”ஆமாம். பேசலன்னா என்ன? முதல்ல எனக்கும் ஐடியா இல்ல. போன வாரம் பேங்களூர் ட்ரெய்னிங் போயிட்டு வந்தோம்ல… ரிட்டர்ன் வர்றப்ப, பஸ்ல என்கூடதான் வந்தா. பக்கத்துலதான் உக்காந்திருந்தா. தூக்கத்துல அப்படி, இப்படிப் பட்டு, ஒரு மாதிரியாயிடுச்சு. என்ன ஒரு மாதிரி, கண்ணுல கிக்கோட பாத்தா. அப்புறம் என்ன? இழுத்துவெச்சு உதட்டுல ஒரு கிஸ் அடிச்சேன் பாரு. ஆளு ஃப்ளாட். நாளைக்கு ஹோட்டல்ல ஃபர்ஸ்ட் டே!”

”ஏய்… ரொம்பப் பாவம்டா. ரொம்ப ஆர்த்தடாக்ஸ் ஃபேமிலி. அவளப் போயி… சந்தியாவைக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா ஏதும் இருக்கா?”

”சேச்சே… அந்த மாதிரி ஐடியாவே கிடையாது. அதப்பத்தி ஒண்ணும் பேசவே இல்ல. எனக்குத் தேவையானது அவகிட்ட இருக்கு. அவளுக்குத் தேவையானது எங்கிட்ட இருக்கு!”

”எனக்கு என்னமோ நீ நடந்துக்கிறதுல்லாம் கொஞ்சம்கூட பிடிக்கல. பாவம்டா!”

”மச்சி.. ஆம்பளன்னா…” என்று ஆரம்பித்த நவீனிடம், ”வேற ஏதாச்சும் பேசலாமே…” என்றேன்.
மறுநாள் காலை 11 மணி. அலுவலகத்தில் பிஸியாக இருந்தேன். மொபைல் போன் அடித்தது. நவீன். ”என்னடா?” என்றேன் அசுவராஸ்யமாக.

”சரண்… ஹோட்டல்ல ஒரு பிரச்னை ஆயிடுச்சுடா…” என்ற நவீன் குரலில் பதற்றம்.

”என்னாச்சுடா? போலீஸ் ரெய்டா?”

”அதைவிடப் பெரிய பிரச்னைடா. ஹோட்டலுக்கு வந்து, ரிசப்ஷன்ல கீ வாங்கிட்டோம். திடீர்னு அவளுக்குக் குற்றஉணர்ச்சி. ‘நான் வரலை. ஆபீஸ் போறேன்’னு வெளிய வந்துட்டா. நான் சமாதானமாப் பேசினேன். ‘எங்க வீட்டுல, நான் ஆபீஸ்ல இருக்கேன்னு நினைச்சுட்டிருப்பாங்க. இங்க வந்திருக்கேன்னு தெரிஞ்சா என்னாவும் தெரியுமா?’ன்னு அழுவுறா. எல்லாரும் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஹோட்டலுக்குள்ளயே ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் நடந்துட்டிருக்கு. எல்லாரும் பாக்குறாங்கன்னு, சந்தியா அந்த பில்டிங்குள்ள போய் அழுதுட்டிருந்தா. நான் வெளிய நின்னு தம் அடிச்சுட்டிருந்தேன். அப்ப திடீர்னு…” என்ற நவீன் பேச்சை நிறுத்தினான்.

”என்னாச்சுடா? சொல்றா!” என்றேன் நான் பதற்றத்துடன்.

”கன்ஸ்ட்ரக்ஷன் நடந்துட்டிருந்த பில்டிங் ரூஃப் இடிஞ்சு விழுந்திடுச்சுடா. சந்தியா தலை மேலதான் விழுந்துச்சு. நான் பயந்து ஓடி வந்துட்டேன்.”

”ஓடி வந்துட்டியா? பிச்சைக்கார நாயே… அவளுக்கு என்னாச்சுடா?”

”தெரியலடா… நாளைக்கு போலீஸ் கேஸ் ஆகி, பேப்பர்ல பேரு வந்துச்சுன்னா எங்க வீட்டுல பிரச்னை ஆயிடும். அதான்டா வந்துட்டேன்.”

”ப்ளடி… இப்ப எங்கே இருக்க?”

”ஹோட்டலுக்கு பக்கத்துத் தெருவுல.”

”இப்ப நீ முதல்ல ஹோட்டலுக்குப் போயி, சந்தியாவுக்கு என்னாச்சுன்னு பாரு…”

”வேண்டாம்டா.. எனக்கு பயமா இருக்கு. ரிசப்ஷனிஸ்ட் எங்க ரெண்டு பேரையும் பார்த்திருக்கா. போலீஸ் வந்துச்சுன்னா, என்னைத்தான் விசாரிப்பாங்க.”
”இப்ப மட்டும், ரூம் யார் புக் பண்ணியிருக்காங்கன்னு விசாரிக்க மாட்டாங்களா?

”அது வேற பேருல பண்ணி இருக்கேன். அட்ரசும் பொய். அதனால என்னைத் தேடி வர முடியாது. அதான் எதா இருந்தாலும், ஹோட்டல்காரங்க பார்த்துப்பாங்கன்னு வந்துட்டேன்.”

”மனுஷனாடா நீ? பரதேசி நாயே.. உன்னை நம்பி வந்தா பாரு. இப்ப நீ ஹோட்டலுக்குப் போறியா… இல்லையா?”

”இல்லடா… எனக்குப் பயமா இருக்கு..!” என்ற நவீன் போனை வைத்துவிட்டான்.

சந்தியாவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. நான் சீக்கிரம் அங்கே சென்றாக வேண்டும். வேகமாக போர்ட்டிகோவுக்கு ஓடினேன். பைக்கை எடுத்துக்கொண்டு, சீறிப் பாய்ந்து பறந்தேன்.

ஹோட்டல் வாசலில் கும்பல். நான் சென்றபோது ஆம்புலன்ஸில் யாரோ இருவரை ஏற்றிக்கொண்டு இருந்தார்கள். ஹோட்டல் மேனேஜர்போல் தெரிந்தவர், யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்தார். ஆம்புலன்ஸ் நகர… நான் மேனேஜரிடம் சென்று, ”என்னாச்சு சார்? அடிபட்டவங்கள்ல யாராச்சும் லேடி இருக்காங்களா?” என்றவுடன், சட்டென்று என் கையைப் பிடித்தார். ”நீதான் அந்தப் பொண்ணு கூட வந்தவனா? உள்ள வா!” என்று இழுத்துக்கொண்டு சென்றார்.

”சார்… நான் இல்ல சார். என் ஃப்ரெண்டு அழைச்சுட்டு வந்தான். அந்தப் பொண்ணுக்கு என்னாச்சு சார்?”

”தெரியல. ஆனா, உயிரு இருக்கு. வலியில கத்திக்கிட்டே இருந்தா. மொத்த கான்கிரீட்டும் அவ மண்டை மேல விழுந்திருக்கு. கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்கர் ஒருத்தன் ஸ்பாட்-அவுட். இவளுக்கு என்னாவும்னு தெரியலை. பார்க்கலாம்.” என்றார் ஹோட்டல் லாபியில் நுழைந்து ரிசப்ஷனிஸ்ட்டிடம், ”இவன்கூடதான் வந்தாளா?” என்றார்.

”இல்ல சார். அவன் நல்ல உயரமா இருந்தான்.”

”போலீசுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டியா?”

”சொல்லிட்டேன் சார். ஏதோ கொலைன்னு எல்லாரும் அங்கே போயிருக்காங்களாம். இன்னும் ஒன் ஹவர்ல வர்றேன்னு சொன்னாங்க.”

”அப்பாடா…” என்று நான் நிம்மதியானேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் ஏதாவது செய்யவேண்டும். இப்போது நான் மருத்துவமனைக்கு சென்று, எதுவும் ஆகப்போவதில்லை. இப்போது எனது வேலை, சந்தியா இங்கு பாய் ஃப்ரெண்டுடன் வந்த விஷயத்தை, வெளி உலகுக்குத் தெரியாமல் மறைப்பதுதான். எப்படியும் பேப்பரில் செய்தி வந்து, பேர் நாறிவிடும். எனவே போலீஸ் வருவதற்குள், சந்தியா வேறு ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஹோட்டலுக்கு வந்ததாக செட் செய்ய வேண்டும்.. என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது.

மேனேஜரிடம் அனைத்து விஷயங்களையும் கூறி முடித்தேன்.

”பொட்டப் பய… இவனுக்கெல்லாம் எதுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்… அவனுக்கு ஃபோன் போடுங்க.”

”ஸ்விட்ச்டு ஆஃப் சார்!” என்றேன்.

”எனக்குத் தெரியாது. நான் போலீஸ் வந்தவுடனே எல்லாத்தையும் சொல்லிடுவேன்.” என்றார் மேனேஜர். எனக்கு பகீரென்றது. கட்டாயம் நாளை பேப்பரில், ‘அழகியுடன் வந்த காதலன் எங்கே? போலீஸ் தேடுகிறது’ என்று கொட்டை எழுத்துக்களில் போடுவார்கள். சந்தியா பிழைத்துக்கொண்டால், அவளுடைய எதிர்காலம் என்ன ஆகும்? வயிற்றைக் கலக்கியது.

”சார் பொண்ணு ரொம்ப ஆர்த்தடாக்ஸ் ஃபேமிலி சார். தெரிஞ்சுதுன்னா மனசுவிட்டுடுவாங்க. போலீஸ்கிட்ட வேற ஏதாச்சும் சொல்லுங்க சார்…” என்றேன்.

”ஐயோ… இந்த ஏ.சி பயங்கர ஸ்ட்ரிக்ட்டுப்பா. வெக்கமில்லாம, பாய் ஃப்ரெண்டோட ஹோட்டலுக்கு வந்திருக்கா. அப்புறம் என்ன மானம் மரியாதைம்பாரு!”

என்ன செய்வது என்று நிதானமாக யோசித்தேன். யாராவது கிளையன்ட்டை மீட் பண்ண இங்கு வந்தாள் என்று சொன்னால் என்ன? ஆனால், எந்த க்ளையன்ட்? யாராவது வெளியூர் க்ளையன்ட் இப்போது சென்னையில் இருக்கிறார்களா என்று யோசித்தேன்.

சட்டென்று மும்பை சஹாரிகா சர்மா ஞாபகத்துக்கு வந்தார். அவர் மும்பையில் ஒரு தனியார் வங்கியின் ஜி.எம் அட்மின். அந்த வங்கியின் அனைத்து சாஃப்ட்வேர் பணிகளையும் நாங்கள்தான் பார்த்து வருகிறோம். புராஜெக்ட் விஷயமாக அடிக்கடி மும்பை சென்று, சஹாரிகா மேடத்திடம் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவர் வேறு ஒரு செமினாருக்காக இன்று சென்னை வருவதாகச் சொல்லி இருந்தார். முடிந்தால் மதியம் அலுவலகத்துக்கு வருவதாகக் கூறியிருந்தார். அவர் இந்த ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும், அவரைப் பார்க்க சந்தியா வந்ததாகவும் கூறினால்.. சட்டென்று சுறுசுறுப்பானேன்.

சஹாரிகா சர்மாவுக்கு போன் செய்தேன். ”மேடம்… குட்மார்னிங். நான் சரண் பேசறேன். நீங்க சென்னை வந்துட்டீங்களா?” என்றேன்.

”வந்துட்டேன். என்ன விஷயம்?”

”மேடம்.. ஒரு அர்ஜென்ட் ஹெல்ப். ஒரு பெண்ணோட லைஃபே இதுல அடங்கி இருக்கு. நீங்க இப்ப உடனே ஒரு ஹோட்டலுக்கு வர முடியுமா?”

”என்ன விஷயம்ப்பா?” என்ற சஹாரிகா சர்மாவிடம் நான் சுருக்கமாக விஷயத்தைக் கூறினேன். அவர் உடனே ஹோட்டலுக்கு வர ஒப்புக்கொண்டார்.

”தேங்க் யூ மேடம்…” என்று போனை வைத்தேன்.

மேனேஜரிடம், ”சார்.. ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க சார். அந்தப் பொண்ணு தன் பாய் ஃப்ரெண்டைப் பார்க்க வந்த மாதிரி இல்லாம, எங்க க்ளையன்ட் ஒருத்தரைப் பார்க்க வந்த மாதிரி போலீஸ்கிட்ட சொல்லலாம் சார்.”

”நோ வே… அந்த ஏ.சி பயங்கர ஸ்ட்ரிக்ட். பின்னாடி விஷயம் தெரிஞ்சதுன்னா, என்னைத் தூக்கி உள்ளே உக்காரவெச்சிடுவான்.”

”சார்… கொஞ்சம் நல்லா யோசிங்க சார். போலீஸ்கிட்ட உண்மையைச் சொல்லி, நாளைக்கு பேப்பர்ல விஷயம் வந்துச்சுன்னா… அந்த பொண்ணோட ஃபேமிலி வெளிய தலைகாட்ட முடியுமா? அப்புறம் அந்தப் பொண்ணோட லைஃப்…”

”அது சரிங்க… இந்த மாதிரி ஆக்சிடென்ட் ஆயிடுச்சே…”

”அது எதையும் நம்ம மறைக்கப் போறதுல்ல. இங்கதான் வந்தா. ஆக்சிடென்ட்ல மாட்டிகிட்டா. ஆனா எதுக்கு வந்தாங்கன்னு சமாளிச்சுடலாம். இங்க வேற ரூம் ஏதாச்சும் வேகன்ட்டா இருக்கா?”

”இருக்கு!”

”அந்த ரூமை சஹாரிகா சர்மாங்கிற பேர்ல புக் பண்ணுங்க. அவங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல, இங்க வந்துடுவாங்க. கம்பெனி வேலையா சந்தியா இங்க வந்ததா நான் போலீஸ்கிட்ட சொல்றேன். சஹாரிகா மேடமும் தன்னைப் பார்க்க வந்ததாச் சொல்வாங்க. ப்ளீஸ் சார்… நம்ம வீட்டுப் பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி ஆச்சுன்னா? விஷயம் தெரிஞ்சா, நாளைக்கு அந்த குடும்பமே தூக்குல தொங்கிடும் சார். உங்க கால்ல வேணும்னாலும் விழறேன்…” என்று நான் கீழே குனிய… ”ஏய்… என்னப்பா.. அந்தப் பொண்ணு உனக்கு ரொம்பப் பழக்கமா?” என்றார் என் தோளைப் பிடித்துத் தூக்கியபடி.

”ஆபீஸ்ல பழக்கம் அவ்வளவுதான். இருந்தாலும் பாவம்… 30 வயசு வரைக்கும் கல்யாணமே பண்ணிக்காம, குடும்பத்துக்காக உழைச்சுட்டிருக்கா. ஏதோ சின்னச் சபலம். வந்துட்டா. அப்புறம் வேணாம்னு திரும்பிப் போயிருக்கா. இருந்தாலும் அந்தச் சபலத்துக்கே, கடவுள் தண்டனை கொடுத்துட்டாரு. இனி ஊரு உலகுக்கெல்லாம் வேற தெரியணுமா?”

”சரி… நான் சேர்மன்ட்ட பேசிட்டுச் சொல்றேன். நீ மத்த ஏற்பாடெல்லாம் பண்ணு.”

”தேங்க் யூ சார்…”

சில நிமிடங்களில் அங்கு வந்து இறங்கிய சஹாரிகா சர்மா, பாப் வெட்டியிருந்தார். காட்டன் சேலையில் இருந்தார். முகத்தில் கேள்விகள். விரிவாக விளக்கினேன்.

”காட் ப்ளஸ் யூ மை சன். போலீஸ் வந்தா என்னைக் கூப்பிடு. என் ரூம் நம்பர் என்ன?”

”305 மேடம்.” என்ற மேனேஜர் அவரை அழைத்துச் சென்றார்.

சிறிது நேரத்தில் ஹோட்டல் வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. விசாரணை செய்த ஏ.சி-யிடம் சஹாரிகா மேடம், ”என்னைப் பாக்கத்தான் வந்தா. புவர் கேர்ள். பேசிட்டு, அவளை செண்ட் ஆஃப் பண்ணலாம்னு போர்ட்டிகோ வரைக்கும் வந்தேன். அப்ப அவ மொபைல் சிக்னல் கிடைக்கலைன்னு அங்கே போனா. பாவம் மாட்டிக்கிட்டா…” என்று தெளிவான ஆங்கிலத்தில் கூற, போலீஸ் மேற்கொண்டு ஒன்றும் கிண்டவில்லை. சந்தியாவின் வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அன்று மதியம். அந்த ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நானும், சந்தியாவின் குடும்பத்தினரும் அமர்ந்திருந்தோம். உள்ளே சந்தியாவுக்கு மைனர் ஆபரேஷன் நடந்துகொண்டு இருந்தது.

அந்த வராண்டாவின் முனையில் நவீன் தயங்கி, தயங்கி நடந்து வருவது தெரிந்தது. சற்று முன்னர்தான் போன் செய்து, நான் எங்கிருக்கிறேன் என்று கேட்டான். நான்தான் இந்த மருத்துவமனைக்கு அவனை வரச் சொல்லியிருந்தேன்.

நான் வேகமாக எழுந்து அவனை நோக்கிச் சென்றேன். என்னைப் பார்த்தவுடன் நவீன் குற்ற உணர்வுடன், ”ரொம்ப தேங்க்ஸ்டா…” என்றான்.

நேற்றிரவு கடற்கரையில் அவன் கூறியது ஞாபகத்துக்கு வந்தது. சட்டென்று அவன் கன்னத்தில் ஓங்கி பளாரென்று அறைந்துவிட்டு சொன்னேன், ”நான் ஆம்பளடா…!”

– மார்ச் 2010

2 thoughts on “ஆண்

  1. கதைகள் மிக அருமை.. ஜி.ஆர். சுரேந்தர்நாத் அவர்கள் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திய குங்குமம் இதழில் எழுதிய, “இது காதல் காலம்” சிறுகதையை வெளியிட வேண்டுகிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *