அவள் என்னவானாள்?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 3,878 
 
 

ஏனோ தெரியவில்லை; கடந்த மூன்று மாத காலமாகக் கணத்துக்குக் கணம், “அவள் என்னவானாள், அவள் என்ன வானாள்?” என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுந்த வண்ணம் இருக்கிறது.

என்ன காரணத்தினாலோ அவளிடம் என் உள்ளத்தைப் பறி கொடுத்து விட்ட நான், உண்ணாமல் உண்ணும் போதும், உறங்காமல் உறங்கும் போதும், தொழில் செய்யாமல் செய்யும் போதும் கூட அந்தக் கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் – பதில் தான் இல்லை .

இத்தனைக்கும் அவள் தன் கடைசிக் கடிதத்தில் – வெறும் கடிதத்தில் அல்ல; காதல் கடிதத்தில் தான் – அழுத்தந் திருத்தமாக எழுதியிருந்தாள் :

“…. நான் கடிதம் எழுதக்கூடிய ஒரு நிலையிலிருந்து, மனமு மிருந்து, சந்தர்ப்பமும் வாய்த்தால் எழுதுவேன். அதுவரை என்னையோ. என் கடிதத்தையோ எதிர்பார்த்து நீங்கள் ஏமாற்ற மடைய வேண்டாம். நானும் தங்கள் கடிதத்தை எதிர்பார்க்க வில்லை …!”

ஆம், மலரையொத்த மனம் படைத்த ஒரு மாத ராசி, தன் மலர்க் கரத்தால், காதல் நிறைந்த உள்ளத்தில் கருணை சுரக்க அடியேனுக்கு எழுதிய வரிகள் தான் அவை அத்துடன் அவள் நிற்கவில்லை; போனாற் போகிற தென்று பின் வருமாறும் எழுதியிருந்தாள்.

“நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்; தினசரி வேலை களில் உற்சாகத்துடன் ஈடுபட வேண்டும்!”

எப்படியிருக்கிறது. கதை? முதல் வரியைப் படித்ததுமே நான் இறக்காமல் இறந்து விட்டேன். அதற்குப் பிறகு தான் அந்தக் காதலி தன் காதலனுக்குச் சொல்லுகிறாள்: அவன் தைரியமாக இருக்க வேண்டுமாம்; உற்சாகத்துடன் தன்னுடைய வேலைகளில் ஈடுபட வேண்டுமாம்!

அட , ஈஸ்வரா!

***

“பாலைவனம் போன்ற என் வாழ்க்கையில் தங்கள் கடிதங்கள் பசும் புற்றரைகளாகக் காட்சியளிக்கின்றன!” என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினாள்?

“தங்கள் கடிதத்தைக் கொண்டு வரும் தபாற்காரன் ஒரு நாளாவது என்னைத் தேடி வருவதில்லை; நானே தான் அவனைத் தேடிக் கொண்டு போகிறேன்” என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினாள்?

“எதையும் காலத்தோடு செய்வதுதான் நல்லது; காலங் கடந்து செய்வது நல்லதல்ல. முடிந்தால் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்; இல்லையேல் நாம் இருவரும் எங்கேயாவது ஓடிப் போவோம்!” என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினால்?

“உணர்விழந்தேன்; உற்சாகமிழந்தேன்; உங்கள் நினைவால் உணவு செல்லாமலும் உறக்கம் கொள்ளாமலும் தவியாய்த் தவிக்கிறேன்!” என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினள்?

அவள் என்னவானாள்?

“ஒன்று, நீங்கள் வேண்டும்; நீங்கள் தான் வேண்டும். இல்லை, காலன் வேண்டும்; காலன்தான் வேண்டும்!” என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினாள்?

என்னால் நம்பவே முடியவில்லையே!

***

“நான் கடிதம் எழுதக் கூடிய ஒரு நிலையிலிருந்து, மனமுமிருந்து, சந்தர்ப்பமும் வாய்த்தால் எழுதுவேன் ……….” என்றால் என்ன அர்த்தம்?

“இல்லையென்றால் எழுதமாட்டேன்!” என்று தானே அர்த்தம்?

“நான் கடிதம் எழுதக்கூடிய ஒரு நிலையிலிருந்து …….”

இதென்ன வார்த்தை? கடிதம் எழுதக் கூடிய நிலையில் இல்லாமல் வேறு எந்த நிலையில் அவள் இருக்கிறாளாம்?

ஒரு வேளை வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறாளோ?

அப்படி நினைப்பதற்கும் அவள் இடம் கொடுத்திருக்க வில்லையே!

ஒரு சமயம் அவள் ஒருவார காலமோ இரண்டு வார காலமோ , ஏதோ ஓர் ஊருக்குப் போய்த் தங்கியிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது. அப்போது எனக்கு அவள் என்ன எழுதியிருந்தாள், தெரியுமா? உங்களை விட்டுவிட்டு வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டுவிட ஓடுகிறேனோ என்று நீங்கள் தயவு செய்து நினைத்துவிட வேண்டாம். அம்மாதிரி ஒருநாளும் நடக்கவே நடக்காது! என்றல்லவா எழுதியிருந்தாள்?

அதுதான் போகட்டும்; அவள் மனத்துக்கு என்ன வந்தது? அந்தப் பாழும் மனம் எப்பொழுதும் என்னிடமே இருக்கிறதென்று அவளே எழுதியிருந்தாளே – ஒரு வேளை அதனாலேயே தன் மனம் இன்னும் தன்னை வந்து அடைய வில்லை என்று அவள் அவ்வாறு எழுதியிருப்பாளோ?

கடைசியில், சந்தர்ப்பம் வாய்க்க வேண்டுமாம் சந்தர்ப்பம்! – எந்தக் காதலர்களாவது எந்தச் சந்தர்ப் பத்தையாவது எதிர்பார்த்துக் கொண்டு எங்கேயாவது காத்திருப்பதுண்டோ? – அழகுதான்!

***

முதலிலேயே நான் அவள் மீது சந்தேகம் கொண்ட துண்டு. ஏன் தெரியுமா? அவளை நான் காதலிப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. முக்கியமாக, அவள் பெரும்பாலான பெண்களைப் போல என் உடலை மட்டும் வளர்க்கக் கூடியவளாயில்லை; உணர்ச்சியையும் வளர்க்கக் கூடியவளாயிருந்தாள்.

ஆனால் என்னை அவள் காதலிப்பதற்கு எந்த விதமான காரணமும் இருக்கவில்லை.

என்னிடம் அழகும் இல்லை; ஐசுவரியமும் இல்லை; பேரும் இல்லை; புகழும் இலலை.

“இவையெல்லாம் இல்லாத காதல் என்ன காதல்?” என்று ஒருநாள் அவளைக் கேட்டேன.

அவள் சொன்னால், “அதுதான் நிஜக் காதல்!” என்று.

எனக்கு ஆச்சரியமாயிருந்தது. “இது நிஜமா?” என்று கேட்டேன்.

“நிஜம் தான்!” என்றாள்.

பின் அந்த நிஜக் காதலுக்கு இன்று ஏன் இந்த கதி?

இந்த விஷயத்தில் அவள் உலக வழக்கத்தை யொட்டித் தன் பெற்றோரின் மீது பழியைச் சுமத்தி விட்டுத் தப்பித்துக் கொள்ளவும் முடியாது. ஏனெனில், அவளே தன் வீட்டுக்குச் சர்வாதிகாரி!

***

அடடா! கடந்த காலத்தைப் பற்றி இப்பொழுது கொஞ்சம் எண்ணிப் பார்த்தால் எல்லாம் ஒரே வேடிக்கையாயிருக்கிறது. ஏன், விநோதமாய்க் கூட இருக்கிறது!

இதெல்லாம் வெளியே சொல்லக் கூடாதவை, பரம ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டியவை யென்றாலும் இங்கே சொல்லத்தான வேண்டியிருக்கிறது. ‘மனைவி கிழித்த கோட்டைத் தாண்டாமலிருப்பது கணவனின் கடமை’ என்பது இப்போதெல்லாம் எங்கும் வழக்கமா யிருந்து வருகிறதல்லவா? அந்த வழக்கம் எல்லோருடைய விஷயத்திலும் கல்யாணமான பிறகுதான் ஏற்படுகிறது. நான் என்னடாவென்றால் கல்யாணமாகு முன்பே அவள் கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை!

இதைப் பார்க்கும் போது, ‘காதல், பெண்களைப் பல சாலிகளாக்கி விடுகிறது; ஆண்களைப் பலவீனர்களாக்கி விடுகிறது!” என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லி யிருக்கிறானே, அது எவ்வளவு தூரம் உண்மையாயிருக்கிறது!

ஆனாலும் அவன் சொன்னதை உலகம் கேட்டதா? இல்லை; முக்கியமாக, ஆணுலகம் அதை லட்சியம் செய்யவே யில்லை. அது தன் பாட்டுக்குக் காதல் நாடகத்தில் ஈடுபட்டுத் தன்னை எவ்வளவுக் கெவ்வளவு பலவீனப் படுத்திக் கொள்ள முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு பலவீனப்படுத்திக் கொண்டு பாழாய்ப் போகிறது!

அதற்கேற்றாற் போல் தான் இந்தக் கவிஞர்கள், காவிய கர்த்தாக்கள், கதாசிரியர்கள் அத்தனை பேரும் இருக்கிறார் கள். அவர்கள் ஆண்களால் காதலிக்கப்பட்டுக் கைவிடப் பட்ட பெண்களுக்காகத்தான் கண்ணீர் வடிக்கிறார்களே தவிர, பெண்களால் காதலிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட ஆண்களுக்காகக் கண்ணீர் வடிப்பதேயில்லை!

ஏன் இந்தப் பாரபட்சமோ?

***

இப்பொழுது நான் என்ன புலம்பி என்ன பயன்? அவளோ என்னை அறவே மறந்து விட்டாள். நான்தான் அவளை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என்னை ஆதரித்து எழுத இந்தப் பரந்த உலகில் ஒரு கவிஞன் இல்லை; காவியகர்த்தா இல்லை; கதாசிரியனும் இல்லவேயில்லை!

இதோ, கதிரவனும் அவளைப்போல் மேல் வானத்தில் மறைந்து விட்டான். நான் கடற்கரையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய கண்கள் வழக்கம்போல் பார்க்குமிடமெல்லாம் அவளைத் தேடிக் கொண்டிருக்கின்றன. மனமும், “அவள் என்னவானாள், அவள் என்னவானாள்?” என்று நிமிஷத்துக்கு நிமிஷம் எண்ணமிட்டுக் கொண்டேயிருக்கிறது.

வான முகட்டை எட்டிப் பிடிக்கக் கடல் அலைகள் ஓயாமல் ஒழியாமல் முயன்று கொண்டிருக்கின்றன வல்லவா? அவற்றைப் போல் நானும் அவளைத் தேடிப் பிடிக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

பாவம், அந்த அலைகளுக்கு என்றும் வெற்றி கிட்டப் போவதில்லை என்பது நிச்சயம். என்னுடைய முயற்சியும் அப்படித்தான் முடியுமோ?

பின் ஏன் இந்த விபரீத சந்தேகம் என்றுமில்லாதபடி என் உள்ளத்தில் எழுகிறது?

“ஒரு வேளை அவள் செத்துத்தான் போயிருப்பாளோ?”

இப்படி எண்ணியது தான் தாமதம்; “இல்லை; அவள் சாகவில்லை ………” என்கிறது எங்கிருந்தோ வரும் ஒரு குரல்.

திரும்பிப் பார்க்கிறேன்; என்ன விந்தை இது! மூன்று மாதங்களுக்குப் பிறகு – இல்லை, மூன்று வருடங்களுக்குப் பிறகு – இல்லையில்லை. மூன்று யுகங்களுக்குப் பிறகு – அதோ, என் கண்ணில் படுகிறாளே, அவள் யார்?

அவள் அவளேதானா? – ஆம், சந்தேகமேயில்லை; அவள் அவளேதான்!

அவளுடன் செல்பவன் – அவள் சகோதரனாயிருப்பானோ? – இருக்கவேயிருக்காது! – அவ்வளவு லாவகமாக இடையில் கை கொடுத்து அவளை அணைத்துக் கொண்டு செல்லும் அவன், அவள் கணவனைத் தவிர வேறு யாரா யிருக்க முடியும்?

அவ்வளவுதான்; என் தலை சுழல்கிறது ; கலகல வென்ற சிரிப்பொலி காற்றில் மிதந்து வந்து என் காதில் விழுகிறது; நான் வெறித்துப் பார்க்கிறேன் – அவர்கள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் செல்கிறார்கள்!

“சரி, இனி நம்மைப் பொறுத்தவரையில் அவள் செத்தவளாகத்தான் ஆகிவிட்டாள்” என்று ஏங்குகிறது என் அப்பாவி மனம்.

மீண்டும் அதே குரல்; “இல்லை; அவள் சாகவேயில்லை!” என்று சாதிக்கிறது.

எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வருகிறது. “பின் யார் செத்தது? நானா செத்து விட்டேன்?” என்று கத்துகிறேன்.

“நீயும் சாகவில்லை” என்று அந்தக் குரல் முன்னைவிட உரத்த குரலில் கத்துகிறது.

நான் மிரண்டு போய், “பின் யார்தான் செத்தது?” என்று கேட்கிறேன்.

“காதல் செத்தது!”

“அதற்குச் சாவேயில்லை என்கிறார்களே!”

“உண்மை ; கவிதையிலே. காவியத்திலே, கதையிலே அதற்குச் சாவேயில்லைதான்! ஆனால், வாழ்க்கையில் எதற்கும் பிறப்பும் இறப்பும் உள்ளது போல அதற்கும் உண்டு!” என்கிறது அந்தக் குரல்!

நீங்கள் அதை மறுக்கிறீர்களா?

– ஒரே உரிமை, 1950, வெளியீடு எண்:6 – அக்டோபர் 1985, புத்தகப் பூங்கா, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *