கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 10, 2012
பார்வையிட்டோர்: 17,060 
 
 

அந்தக் காலகட்டத்தில் என் கல்லூரி நண்பர்கள் அனைவருமே காதலில்தான் இருந்தோம். உங்களின் சந்தேகம் எனக்குப் புரிகிறது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெண்களைக் காதலித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் எல்லாம் அவர்களைக் காதலித்தார்களா என்று எனக்குச் சரியாகத் தெரிய வில்லை. அது தெரிந்து இப்போது எனக்கு என்ன ஆகப் போகிறது?

ஏன் கோபப்படுகிறேன் என்பது உங்களுக்குப் போகப் போகத் தெரியும்.

எல்லோரையும் போல நான் என் காதலை அமுதாவிடம் உடனே சொல்லவில்லை. சொல்லி அவள் மறுத்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, சொல்லாமலேயே அவளைக் காதலித்துக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் நிறைய. நான் இப்படி அமுதாவைப் பற்றியும், நான் அவள் மேல் கொண்ட காதலைப் பற்றியும் நிறைய பில்ட்-அப் கொடுத்து எழுதுவதால், என்னை நீங்கள் ஹீரோ அளவுக்கு உயர்த்திப் பார்க்க வேண்டாம். நான் மிகச் சாதாரணமானவன். பிரம்மன் படைக்கும்போது மிச்சம் மீதி இருந்த களி மண்ணில், ‘போனால் போகுது போ’ என்று என்னைப் படைத்து பூமிக்கு அனுப்பிவிட்டான். அந்த அளவுக்கு என்னைச் சுமாராகப் படைத்துவிட்டான். நான் நல்ல கறுப்பு. நிறம்தான் கறுப்பு, ஆளாவது பார்க்க லட்சணமாய் இருக்கக்கூடாதா? என்றால், பார்க்க மிகச் சுமாராய் இருப்பேன். ஆனால், மனத்தளவில் நான்தான் மிக அழகு என்று நினைப்பேன். எல்லா விதத்திலும் தன்னம்பிக்கை அதிகம் உள்ளவன்.

மனத்தளவில் அமுதாவை உருகி உருகிக் காதலித்தேன். தினமும் அவள் செல்லும் பஸ்ஸில் சென்றேன். அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்றேன். அவள் கோயிலுக்குச் சென்றால் நானும் செல்வேன். இப்படி அவளைப் பின்தொடர, ஒருநாள் அவள் தோழி மூலம் என்னைக் கூப்பிட்டு அனுப்பினாள். அன்று மாலையில் கோயிலில் சந்திப்பதாக ஏற்பாடு. மனம் முழுவதும் கனவுடன், என்னிடம் இருந்த உடைகளிலேயே கொஞ்சம் சுமாரான உடையை அணிந்து கொண்டு அவளைப் பார்க்க, கோயிலுக்குச் சென்றேன். உள் பிராகாரத்தில் காத்து இருந்தேன். ஒவ்வொரு நொடியும் எனக்கு அவஸ்தையாகக் கழிந்தது. வயிற்றை வேறு என்னவோ செய்தது. அவள் ஒப்புக்கொண்டால் மொட்டையடித்துக் கொள்வதாக, கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். ஒரு பதினைந்து நிமிடம் கழித்து, தேர்போல அசைந்து வந்தாள். எனக்குப் பிடித்த பாவாடை, சட்டையில் இருந்தாள். என் அருகில் அவள் வர வர நான் பறக்க ஆரம்பித்தேன்.

அவள்தான் முதலில் பேச ஆரம்பித்தாள், “என்ன நீங்க என்னையே தினமும் ஃபாலோ செய்யறீங்க?” சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். நான் அவள் பேசும் அழகையும் அந்த அழகிய உதடுகளின் அசைவையுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ஹலோ, உங்களைத்தான்? கேட்கறேன்ல.”

“என்ன?”

“ஏன் என்னையே சுத்தறீங்க?”

“உன்னை மனப்பூர்வமா விரும்புறேன் அமுதா?”

“என்னது?”

“ஆமாம் அமுதா. உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்.”

“சாரிங்க. எனக்கு உங்க மேல காதல் வரலை.”

பூமி சுக்கு நூறாக உடைந்து கொண்டிருந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி, நான் கீழே கீழே போய்க் கொண்டிருந்தேன். சுதாரித்து மீண்டும் மேலே வந்து, “என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“உங்களுக்கும் எனக்கும் ஒத்துவராது.”

“ஏன்? நாம ஒரே ஜாதி மதம்தானே?”

“மனசுக்குப் பிடிக்க வேண்டாமா?”

“ஏன் நான் அசிங்கமா இருக்கேனா?”

“அது ஒரு காரணம் இல்லை.”

“வேற என்ன காரணம்?”

“அழகு எனக்கு முக்கியம் இல்லை. ஆனா உங்க கலர். நான் எவ்வளவு சிகப்பா இருக்கேன். உங்களை கல்யாணம் பண்ணிட்டா நல்லாவா இருக்கும். அதுவும் இல்லாம, புள்ளைங்க எல்லாம் உங்களை மாதிரி பொறந்தா… அதனால எனக்கு உங்களைப் பிடிக்கலை.”

அதன் பிறகு நான் அங்கே நிற்கவில்லை. கதைகளில், சினிமாவில் வருவதுபோல, வாழ்வதற்கு நிறமா முக்கியம் என்றெல்லாம் நான் வாதிடவில்லை. விறுவிறுவென்று அவள் முகத்தைக்கூட, திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன். ஒரு மூன்று மாதம் பைத்தியம் பிடித்ததுபோல அலைந்தேன். பின் நன்கு தெளிந்தவுடன் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நன்றாக மார்க் வாங்கி பாஸ் செய்தேன். கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தது. இரண்டு வருட டிரெயினிங். பிறகு என்னை ஜப்பானுக்கு அனுப்பினார்கள். கை நிறைய சம்பளம். நடுவில் ஒருமுறை இந்தியா வரும்போது, அமுதாவுக்குக் கல்யாணம் நடந்து விட்டதென்றும், அவள் வீட்டை எதிர்த்துக்கொண்டு, வீட்டை விட்டு ஓடி ஒரு முஸ்லிமைக் காதலித்து, கல்யாணம் செய்து கொண்டாள் என்றும் நண்பர்கள் கூறினார்கள்.

அதன்பிறகு நான் ஜப்பான் வந்துவிட்டேன். அடுத்த இரண்டு வருடத்தில் எனக்குத் திருமணம் நடந்தது. மிக அழகான மனைவியை எனக்குக் கொடுத்து, பிரம்மன், தான் செய்த தவறைத் திருத்திக்கொண்டான். மூன்று அழகான (அம்மா சாயலில்) பிள்ளைகள். சந்தோஷமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. எனக்கு ஒரு குறையும் இல்லை. அமுதாவை நான் கல்யாணம் செய்து கொண்டிருந்தால், இப்படி சந்தோஷத்துடன் வாழ்வேனா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
சென்ற மாதம் ஒரு பிராப்பர்ட்டி வாங்குவது தொடர்பாக நான் மட்டும் இந்தியா சென்றிருந்தேன். ஒருநாள் பேங்க் செல்ல வேண்டியிருந்தது. அப்போது பேங்க் மேனேஜர் அறையில் பேசிக் கொண்டிருந்தபோது, மேனேஜர் என்னைப் பார்த்து, “சார் யார் அது? உங்களையே ரொம்ப நேரமாகப் பார்த்துக் கொண்டிருப்பது?” என்றார். நான் கண்ணாடிக் கதவின் மூலம் பார்த்து அதிர்ந்தேன். காரணம், என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது அமுதா. என்னால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் குண்டு. பார்க்க அயற்சியாய்… ஆனால், முகம் மட்டும் அதே பொலிவு.

“யார் சார், உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?”

“ஆமாம் சார், என்னோட பால்ய காலத் தோழி. என்ன விஷயமா இங்க வந்திருக்காங்க?”

“ஏதோ லோன் வேணுமாம்.”

“சார், எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”

‘என்ன?’ என்பதுபோல் என்னைப் பார்த்த மேனேஜரிடம், “சார், அவங்க என்ன லோன் கேட்கறாங்களோ, அதைக் கொடுங்க, நான் கியாரண்டி,” என்றேன்.

“சார், நீங்க சொல்லி நான் மறுக்க முடியுமா? இன்னைக்கே கொடுத்துடறேன்.”

ஒரு பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன். நான் நேருக்கு நேராகப் பார்க்கவும், அவளால் எதுவும் சொல்ல முடியாமல் என்னையே பார்த்தாள். கண்கள் கலங்குவது போல் இருந்தது. அங்கே இருக்க பிடிக்காமல் வீட்டுக்கு வந்துவிட்டேன். ஒரு தேவதைபோல் வாழ வேண்டியவள், ஒரு இருபத்தைந்தாயிரம் ரூபாய் லோனுக்கு அலைவதை நினைக்கையில் பாவமாக இருந்தது. அன்று முழுவதும் மனமே சரியில்லை.

அடுத்த நாளும் பேங்க் செல்ல வேண்டி இருந்தது. வேலை முடிந்து வெளியே வருகையில், அமுதா எனக்காகக் காத்திருப்பது போல் இருந்தது. என்னைப் பார்த்ததும், “ரொம்ப நன்றி,” என்றாள்.

“மேனேஜர் சொன்னார். உங்களால்தான் எனக்கு லோன் கிடைத்தது. ஒரே ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்து போக முடியுமா?” என்றாள். தயக்கத்துடன் மாலை வருவதாக ஒப்புக் கொண்டேன்.

மாலை ஒரு ஆறு மணிக்கு அமுதா வீட்டுக்குச் சென்றேன். அது வீடு அல்ல. ஒரு ஹால் அவ்வளவுதான். அதிலே தடுத்து எல்லாம் இருந்தது. உடனே ஓடிப்போய் காஃபி வாங்கி வந்தாள். அவளின் நிலைமை முழுதும் எனக்குப் புரிந்தது. அவளின் சிவப்பான கணவன் ஒரு குடிகாரன் என்றும் தெரிந்தது. கிளம்புகையில், ஐயாயிரம் ரூபாய் கொடுத்து, “செலவுக்கு வைத்துக்கொள்” என்றேன். “வேண்டாம்” என கடைசி வரை மறுத்துவிட்டாள். திடீரென விசும்ப ஆரம்பித்தவள், “நான் அன்று அப்படி உங்களை…” அதற்கு மேல் எனக்கு அங்கே இருக்க பிடிக்காமல், “சரி நான் வருகிறேன்” என்று கிளம்ப ஆரம்பித்தபோது, “ அம்மா ” என்று ஒரு 15 வயது பெண் வீட்டுக்குள்ளே ஓடி வந்தாள். ஒரு கணம் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவள் என்னைப்போல் கருப்பாக இருந்தாள்!

– 20/11/2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *