அந்த மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 21,700 
 
 

பறவைகள் சிறகை விரித்து கண்ணுக்கு இதமாக பறந்து கொண்டிருந்த வானத்திற்கு கீழ் நான் நின்று கொண்டிருந்தேன்.எனக்கு மேற்கே மனம் மயக்கும் இன்னிசை பரவியிருந்தது மற்றும் எனக்கு கிழக்கே ஒருவன் புகைபிடித்து கொண்டிருந்தான்.தெற்கு நோக்கி நின்று கொண்டே மாடியிலிருந்து மாலை காற்று வாங்கி கொண்டிருந்தேன்.

என் கண்ணுக்கு எதிரில் ஒரு தென்னை மரம் இருந்தது.அது வீசும் காற்றுக்கு ஏற்ப நடனமாடி கொண்டிருந்தது.இந்த நடன கச்சேரியை பார்த்து கொண்டிருந்தேன்.

எனக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது மருத்துவர் சொன்னபடி பார்த்தால் இன்னும் ஒரு நாள், நான் உயிரோடு இருப்பேன்.சாவு கண் எதிரில் கிடக்கிறதே என கொஞ்சம் வருத்தப்பட்டேன்.யார் இதை நினைவுபடுத்தியது எனவும் எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.இப்படி நான் நினைப்பதை அந்த தென்னை மரம் கேட்டுக்கொண்டிருக்கிறதோ என ஒருவித பயம்.அந்த மரத்தை பார்த்தால் இன்னும் பல ஆண்டுகள் நடனமாடிக்கொண்டு வாழும் என தோன்றியது. நம் சோகம் நம்மோடு அந்த மரத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என விடுதியின் மாடியின் படிக்கட்டுக்களை வழியே கீழே இறங்கினேன்.

கொஞ்ச தூரம் நடந்து சென்றேன்.அங்கு தோழர் என்னை நோக்கி வந்தார் கண்களை சீவிக்கொண்டு.

“என்ன தோழரே,காற்று வாங்கியாச்சா”என சிரித்துக்கொண்டே.

“சும்மா,மாடியில சாயங்கால நேரத்துல நிற்கிறதுனா ரொம்ப பிடிக்கும் தோழர்” என பதிலுக்கு நானும் சிரித்து கொண்டே சொன்னேன்.

“உங்க நாவல் வேலையிலாம் எப்படி போகுது”

“ஏதோ,இன்னும் இரண்டு நாள்ல முடிஞ்சிரும்”.

“சரி,வாழ்த்துக்கள்,முதல் பிரதி எனக்குத்தான்”

“ம்”

“சரி,பார்ப்போம் தோழரே” என சொல்லிவிட்டு போய்விட்டார்.

நான் மனதுக்குள் நினைத்து கொண்டேன் இந்த அளவுக்கு வெள்ளந்தியான மனிதரா? என.அவர் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தார்.எவ்வளவோ மக்கள் நல பிரச்சினைகளுக்காக துணிந்து களம் கண்டவர்.அடிக்கடி என்னிடம் இதை சொல்வார் “கட்சியின் தலைமை சரியில்லை எனில் தொண்டர்கள் என்ன செய்வார்கள்” என வருத்தப்படுவார்.என்னை பொறுத்த வரை கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கு நான் அறிந்த ஒரு எடுத்து காட்டு.என் மேல்பாக்கெட்டில் கையைவிட்டு சாவியை எடுத்துக்கொண்டேன்.நடந்து கொண்டே போகையில் என் அறை வந்துவிட்டது. அறை எண் 213.
கதவை திறந்துகொண்டு உள்ளே போனேன்.எனது அலைபேசி கத்திக்கொண்டே இருந்தது.நான் அதை எடுக்க போனேன்.அதில் மாதவி என இருந்தது. இவள் ஏன் இப்போது பேசுகிறாள் என ஒருவித குழப்பமான பதற்றத்துடன் பேசினேன். என்னை அவசரமாக கடற்கரைக்கு வரச்சொன்னாள்.நான் ஏன் என கேட்டுப்பார்த்தேன்.அவள் எதுவும் சொல்லவில்லை.நேரில் சொல்கிறேன் என்றாள்.

எனக்கு ஏதோ முக்கியமான விஷயமாக பட்டது ஏனெனில் அவள் பேசிய விதம் சற்று சோகம் கலந்து கிடந்தது.அதுவும் இப்போது மணி 6 ஆக இருந்தது.
மாலை நேரத்தில் பெண்கள் தனியாக வெளியே போவது சகஜமாக இருந்தது.ஆனால் மாதவி இப்படி செய்வது எனக்கு வியப்பாக இருந்தது.கல்லூரி காலத்திலே அவளை யாரும் மாலையில் ஐந்து மணிக்கு மேல் யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.நான் பெண்கள் ஆடை குறைத்து இரவில் தெருவுலாவதை கண்டிருக்கிறேன் ஆனால் மாதவி இதில் விதிவிலக்கு.

நான் என்னை கண்ணாடியில் அழகு சரிசெய்துவிட்டு எனது புதிய செருப்பை அணிந்துவிட்டு என் அறைக்கதையை பூட்டிவிட்டு வெளியே புறப்பட்டேன்.அங்கு ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது.ஓடிப்போய் அங்கு ஓரு பேருந்தில் ஏறினேன். டிக்கெட் எடுத்துகொண்டேன்.பேருந்தை ஒரு நிமிடம் கவனித்தேன். ஒரு முதியவர் அங்கு ஒரு பெண் ஆடை கலைப்பை பார்த்து கொண்டிருந்தார்.மனதிற்குள் நினைத்துக்கொண்டேன் ஆசை யாரை தான் விட்டது என.இதற்கு மேல் பேருந்திற்குள் பார்த்தால் விபரீதம் என முடிவெடுத்துகொண்டு சன்னலின் வழியே பார்த்தேன்.

அங்கு புத்தக கண்காட்சி நடந்து கொண்டிருந்தது.முதியவர்கள் அனைவரும் புத்தகம் கையுமாக அலைந்து கொண்டிருந்தனர்.சன்னலில் இருந்து பார்க்கும்போது ஓரளவு காட்சி கிடைத்தது.அங்கு அவ்வளவாக என்னைப்போன்ற இளைஞர் கூட்டம் இல்லையென்பது தெரிந்தது.ஒருவேளை என்னைப்போல நாவல் எழுதிகொண்டிருக்கலாம் என சிரித்து கொண்டேன்.அடுத்த நிறுத்தம் கடற்கரை .

சன்னலில் இந்த நகரம் எவ்வளவு வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என பேருந்தின் வேகத்தோடு தெரிந்தது.கடற்கரை கூட்டம் தென்பட்டது.கடற்கரை உப்புக்காற்று வீசியது.பேருந்து நின்றது.நான் பேருந்தில் இருந்து இறங்கினேன்.பின்பு மெல்ல கடலை நோக்கி நடந்தேன்.வானம் இருளை போர்த்தியது.கடலும் அந்த இருளை கொஞ்சம் பிரதிபலித்தது.அலைகளின் நுரைகள் மட்டுமே வெண்மை காட்டின.அருகில் நெருங்க நெருங்க கடல் இருளின் நிழலில் இருந்து தப்பியது போல தெரிந்தது.

நான் என் அலைபேசியை எடுத்து மாதவியின் எண்ணை அழுத்தினேன்.அவள் பேச “ஹலோ” என்றாள்.

“ஹலோ,எங்க இருக்கிறாய்,நான் அங்க வந்துட்டேன்”

“கொஞ்சம் இடது பக்கம் திரும்புங்கள் ”

நான் திரும்பினேன்.மாதவி ரோஸ் வண்ண சேலை அணிந்து மணலில் அமர்ந்திருந்தாள்.அலைபேசியை நிறுத்தி விட்டு அவளை நோக்கி போனேன்.
அவளை நெருங்கி சென்று அமர்வதற்கு முன்னே

“இவ்வளவு நேரமா இங்க வரதுக்கு,நான் எவ்வளவு நேரம் இங்க சும்மா உட்கார்ந்து இருக்குறது” என்றாள் சற்று கோபப்படுவது போல முகத்தை வைத்துக்கொண்டு.எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.நான் சிரித்து கொண்டே சொன்னேன்

“நீ கோபப்பட்டால் ரொம்ப அழகாக தெரிகிறாய்” என்று.

“இதுக்கு ஒன்றும் குறைவில்லை” என்றால் சற்று வெட்கத்துடன்.

“ஏன் இந்த சந்திப்பு மேடம்,அடியேன் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா”

என சற்று நகைச்சுவை உணர்வுடன் கேட்டேன்.அவள் சட்டென அழுதுவிட்டாள்.நான் துளியளவும் இதை எதிர்பார்க்கவில்லை.

“ஏய்,அழுறதை நிறுத்து”

என அவளின் தோளை தொட்டு சொன்னேன்.

அவள் பேச ஆரம்பித்தாள்.

“எனது வயிற்றில் உங்கள் வாரிசு வளர்கிறது,எனக்கு பயமா இருக்கிறது,வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்,என்னை கொன்னுபோட்ருவாங்க,என்னை இப்பவே கல்யாணம் பண்ணிக்கோங்க ,நான் உங்க கூட வந்துறேன் “என்றாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.திடீரென ஒரு மன எழுச்சி, “அவளை அழைத்து செல்” என மனது வற்புறுத்தியது.அது ஏன் என்றும் தெரியவில்லை.ஆனால் அதற்கு முன் இதை சொல்லிவிட வேண்டும் என தோன்றியது.

“மாதவி….”

“ம்ம்..சொல்லுங்க”

“அது வந்து..”

“என்ன வந்து போயி”

“மாதவி நான் நாளைக்கு காலையில் உயிரோடு இருக்க மாட்டேன் ,இது தான் கடைசி நாள்,எனக்கு புற்றுநோய் “என்றேன் அவள் கண்களை பார்த்துக்கொண்டே.

அந்த விநாடியில் உலகின் மொத்த சோகத்தையும் அவளில் கண்டேன்.அந்த சோகம் கண்ணீராக வெளியேறவில்லை அதற்கு பதிலாக அந்த சோகம் காற்றில் கரைந்து பரவி கொண்டிருந்தது.அவள் ஒரு பித்து பிடித்தவள் போல உறைந்து நின்றாள்.அவளை நான் என் அறைக்கு அழைத்து போவதென முடிவு செய்துகொண்டேன்.

அப்போது மணி இரவு 8.40 ஆக இருந்தது.மறுபடியும் அந்த பேருந்து வந்தது.அதில் மாதவியோடு ஏறினேன்.அவள் பொம்மை போல மாறியிருந்தாள்.என்னை எந்த கேள்வியும் கேட்கவில்லை பதிலுக்கு அவ்வப்போது ஒரு பார்வை பார்ப்பாள்.பேருந்து புறப்பட்டது.

நான் அவளிடம் பேச முயன்றேன் ஆனால் அவள் ஒன்றுமே சொல்லவில்லை.பேருந்தை இந்த முறை உற்றுகவனித்தேன்.எனக்கு எல்லாமே சோகம் நிரம்பியதாக பட்டது.எனது விடுதிக்கு அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் வந்தது.அப்போது மணி 9.30 ஆக இருந்தது.

அவளோடு பேருந்தில் இருந்து இறங்கினேன்.அவ்வளவாக அங்கு ஆள் நடமாட்டம் யாரும் இல்லை.அந்த தென்னை மரம் தன் கச்சேரியை நிறுத்தியிருந்தது.எங்கள் இருவரின் நிழலும் அன்று போர்வைக்குள் கலந்ததை போல கலந்து நடந்தது.அந்த நிழலை பார்த்துக்கொண்டே நடந்தேன்.விடுதி வந்திருந்தது. கஷ்டப்பட்டு விடுதியின் மேலாளரிடம் நிலைமையை எடுத்து சொல்லி அவளை என் அறையில் தங்குவதற்கான அனுமதியை வாங்கி அழைத்து சென்றேன்.அதுவரை அவள் எதுவுமே பேசவில்லை.ஏதோ உறைந்து போனவள் போல் காணப்பட்டாள்.நான் அவளை உள்ளே அழைத்து சென்றேன்.
அப்போது மணி 10.00 .ஒவ்வொரு ஆண்களின் கண்களும் சராசரி பெண்களை பார்ப்பது போல,கண்களால் எல்லை மீறுவதையும் உணர முடிந்தது.இது எனக்கு சற்று பய உணர்வை ஏற்படுத்தியது.

நான் மாதவியை அழைத்து கொண்டு என் அறைக்கு சென்று கதவை உள்தாழிட்டு கொண்டேன்.எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.ஏனெனில் ஒன்றரை மணிநேரமாக அவள் எதுவுமே பேசவில்லை மேலும் அவள் எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை.

“மாதவி,ஏதாவது பேசு இப்படி நடந்துக்காதே”

என உணர்ச்சி மிகுதியில் சொன்னேன்.அவள் எதுவுமே சொல்லவில்லை.கட்டிலில் இருந்து எழுந்து சன்னலின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடியை நெருங்கினாள்.அதை மெதுவாக வருடிக்கொடுத்தாள்.முட்கள் கையை குத்தியது போல் தோன்றியது.ஆனாலும் அவளிடம் இருந்து வலியை வெளிக்காட்டும்படி எதுவுமே நடக்கவில்லை.இது எனக்கு மேலும் பயம் தருவதாக இருந்தது.அவள் சன்னல் வழியே அந்த தென்னை மரத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.
எனக்கு அந்த அழகு தேவதையை இப்படி பார்ப்பதற்கு பிடிக்கவில்லை.நான் அவள் அருகில் போனேன்.அவளிடம்

“இதோ என் நாவல்,கடைசி அத்தியாயம் மட்டும் பாக்கி,எழுது,நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துறேன்”

என டையரியை அவளிடம் கொடுத்தேன்.டையரிக்குள் இருந்த பேனா கீழே விழுந்தது.அந்த சத்தம் இடியென கேட்டது எனக்கு அப்போது.

என்னிடம் இருந்து டையரியை வாங்கி கொண்டாள்.

அவள் என்னிடம் என் கண்களை பார்த்துக்கொண்டே சொன்னாள்

” என் உண்மையான காதலின் கடுமையான வசீகரத்தை உணரப்போகிறாய்” என சொன்னாள்.

எனக்கு மெளனியின் அழியாச்சுடர் கதை நினைவுக்கு வந்தது.அவள் ஏன் இப்படி சொன்னாள் என்று தெரியவில்லை.நான் என் அறையை அவளோடு சேர்த்து பூட்டினேன்.எனக்கு அவள் தற்கொலை செய்துகொள்வாள் என மனது உறுத்தியது.சாவியை பூட்டைவிட்டு எடுக்காதே..அவளை விட்டுப்போகாதே.. என யாரோ சொல்வது போல இருந்தது.

அப்போது மணி 11.40 .நான் விடுதியை விட்டு வெளியேற போது ஒரே இருள்,பறவைகள் கத்தியது,நான் சன்னலை பார்த்தேன்.அங்கு அவள் இருந்தாள்.எதையோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.இப்போது எனக்குள் என்னவென்னவோ தோன்றியது.நாளை நான் சாகப்போகிறேன்,சொந்தம்,உறவு,காதல்,சட்டம் என அனைத்தில் இருந்தும் விடுதலை.ஆனால் மாதவியும் அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் என்ற கேள்வி எழுந்தது.

இதனால் எனக்கு ஒரு வித குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.எனக்கு என் மீதே கோபம் வந்தது. என்னை நானே அடித்துக்கொண்டேன்.நன்றாக நினைவிருக்கிறது நான் மாதவியை தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்ற விடுதிக்கு வேகமாக விரைந்து போனேன்.அப்போது மணி 12.20.மறுபடியும் விடுதி என்ற பயணம் என் வாழ்க்கையின் ஒவ்வொரு தோல்வியையும் நினைவுட்டியது.இவ்வளவு தோல்விகளை தாங்கி ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என தோன்றியது.விடுதியை அப்போது எட்டியிருந்தேன்.வேகமாக என் அறையை நோக்கி போனேன்.அப்போது பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்தேன்.ஆனால் எனக்கு அப்போது சாவியை பூட்டில் சொருக தைரியம் இல்லை.

ஒருவேளை மாதவி தற்கொலை செய்துகொண்டிருந்தால் ? என்ற கேள்வி என்னை மிரட்டியது.ஆனாலும் கதவை திறந்தேன் அவள் தற்கொலை செய்துகொண்டிருந்தாள் என்னை நானே அழித்துக்கொள்ள. உள்ளே அவள் கட்டிலில் மேல் தூங்கி கொண்டிருந்தாள் ஆனால் அது நிரந்தர தூக்கம் அல்ல. நானும் அவள் அருகில் சென்று தூங்கினேன்.எனக்கு அன்று ஒருவர் மீது ஒருவர் கிடந்து காமம் பயின்றது நினைவுக்கு வந்தது.அன்று இரவு எனக்கு தூக்கம் ஏதோ மனிதன் என நிருபிக்கும் வகையில் வந்தது.இதில் நான் அவள் அருகில் கிடந்தேன் என்பது மகிழ்ச்சி தந்தது.அப்போது மணி இரவு12.40.
மெதுவாக விழிப்பு வந்தது.சூரிய ஒளி ரோஜா செடியின் மீது பட்டு என்னை தொடுவதாக அமைந்தது.கண்ணை விழித்தேன்.எனதருகில் மாதவி அசைவற்று கிடந்தாள்.திடுக்கிட்டு,பயந்து எழுந்து சன்னலுக்கு போனேன்.அந்த தென்னை மரம் நடனமாடி கொண்டிருந்தது.அதையே பார்த்து கொண்டிருந்தேன்.வானில் பறவைகள், மேகங்களின் நடைபயிற்சி என கண்ணுக்கு பட்டது.அவள் உள்ளே இறந்து கிடந்தாள் என் குழந்தையுடன்.எனக்கு முன்னால் இறந்து போனாயே என அழுகை வந்தது.இன்று அந்த மருத்துவர் கூற்றுப்படி என் கடைசி நாள்.நான் அந்த தென்னை மர நடனத்தை பார்ப்பதை நிறுத்துவதாக இல்லை.அந்த மரம் ஆடிக்கொண்டிருந்தது.

ஆனால் அன்று முழுவதும் என் சாவுக்காக காத்திருந்தேன் ஆனால் நான் சாகவே இல்லை.அந்த மருத்துவர் கூற்று பொய்யாக போனது.ஆனால் என்னால் மாதவியும் என் குழந்தையும் இறந்துபோனார்கள்.அவளை உலுக்கி பார்த்தேன்.சற்றும் அசையவில்லை.அவள் தலையணையின் கீழ் என் நாவல் இருந்தது.அதை கையில் எடுத்து படித்துப்பார்த்தேன்.அவள் நிறைய எழுதியிருந்தாள்.கடைசியாக அவள் “என் உண்மையான காதலின் கடுமையான வசீகரத்தை உணரப்போகிறாய் என்றேன் .அதற்கு அவன்…” என எழுதியிருந்தாள்.நான் இப்போது ஒரு நாவலாசிரியன் .இதை நினைத்துக்கொண்டு இருக்கும் போது கூட நான் சாகவில்லை.உண்மையில் நான் எவ்வளவு மோசமானவன் என்பதை உணர்ந்து கொண்ட நேரம் கண்ணில் கண்ணீர் மட்டுமே.நான் சாகவில்லை.ஏன் நான் சாகவில்லை என்று ஒரு குழப்பமான மனநிலை மட்டுமே இருந்தது.

அந்த மனநிலையோடு மாடிக்கு சென்றேன் அங்கு பறவைகள் வழக்கம் போல பறந்து கொண்டிருந்தன அதில் மாதவியும் இருப்பது போல தோன்றியது.தென்னை மரத்தின் நடனம் அப்போது தான் புரிந்தது அது எதையோ தேடுகிறது என.அது எப்படி புரிந்தது எனவும் தெரியவில்லை ஆனால் புரிந்து கொள்ள முடிந்தது.கீழே எனது அறையில் மாதவியின் உயிரற்ற உடல் கிடந்தது.ஆனால் நான் சாகவில்லை.இது ஏன் என்றும் தெரியவில்லை .
சில நாட்கள் கழித்து என் நாவல் “அந்த மரம்” என்ற தலைப்பில் வெளிவந்தது.சொன்னபடியே என் விடுதியில் வசித்த தோழரே முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.அவர் மறுநாளே என்னை சந்தித்து கேட்டார் “என் உண்மையான காதலின் கடுமையான வசீகரத்தை உணரப்போகிறாய் என்றேன் .அதற்கு அவன்…” இதன் பின்பு அவன் என்ன சொன்னான் அவளிடம் என்றார்.

“அந்த பதிலை தான் தேடிக்கொண்டிருக்கிறேன் நண்பா ” என்றேன் ஒருவித குழப்பத்துடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *