வ.ராமசாமி

 

வாழ்க்கை வரலாறு

பிறப்பு

தமிழ் உரைநடை உலகில் தனிச் சிறப்பு உடையவர் வ.ரா. என்று அழைக்கப்படும் வ.ராமசாமி ஐயங்கார் ஆவார். பாரதியாராலே உரைநடைக்கு வ.ரா.’ என்று பாராட்டுப் பெற்றவர் அவர். தஞ்சை மாவட்டத்தில் திருப்பழனத்திற்கு அருகில் திங்களூர் என்னும் சிற்றூரில் 1889 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் பதினேழாம் நாள் அவர் பிறந்தார். அவருடைய தந்தையார் வரதராஜ ஐயங்கார்; தாயார் பொன்னம்மாள். அவரோடு உடன் பிறந்தோர் எழுவர்; வ.ரா. மூத்த பிள்ளை.

கல்வி

தாம் பிறந்த ஊரில் ஒரு புதுக்கிணறு வெட்டுவதற்குக் கூட மக்களிடம் செல்வமும், ஒற்றுமை உணர்வும் கிடையா என்று அவரே நமது தமிழ் நாடு கட்டுரையில் விளக்குகிறார். திங்களூரை அடுத்துள்ள உத்தமதானபுரத்தில் (உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர்) தம்முடைய தொடக்கக் கல்வியைப் பயின்றார். சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் தமிழ் நாடு எப்படி இருந்தது என்பதற்குத் திண்ணைப்பள்ளிக் கூடம் ஒரு சாம்பிள்; பள்ளிக்கூடத்திற்குத் தனிக்கட்டிடம் கிடையாது. அது வாத்தியார் வீட்டுத் திண்ணைதான்” (வ.ரா. வாசகம் ப. 7) என்று அவர் தம் பள்ளி வாழ்க்கையை அதே கட்டுரையில் விளக்குகிறார். திண்ணைப்பள்ளியிலிருந்து எட்டுவயதில் திங்களூரிலுள்ள பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். அங்கே ஆங்கிலமும் பயின்றார். பின்னர் திருவையாற்றிலுள்ள சென்டிரல் உயர்நிலைப் பள்ளியில் மேற்படிப்புப்படித்தார்.1905-ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் தஞ்சாவூர் புனித பீட்டர் கல்லூரியில் சேர்ந்து எப்.ஏ. பயின்றார். எப்.ஏ. தேர்வில் தோல்வியுறவே மனம் கலங்கிய வ.ரா. கல்கத்தாவில் சுரேந்திரநாத் பானர்ஜி நடத்தி வந்த தேசீயக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். கல்கத்தா சென்ற அவர், தக்க பரிந்துரையின்மையால் கல்லூரியில் சேர இயலாது ஊர் திரும்பினார்.

விடுதலைப்போராட்ட ஈடுபாடு

இத்துடன் கல்வியை நிறுத்திக்கொண்ட வ.ரா. விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு, நாட்டிற்காக உழைக்கத் தொடங்கினார். தம்முடைய கல்லூரி ரி நாட்களிலே, வந்தேமாதரம் முழக்கமிட்டதற்காகக் கல்லூரி முதல்வரால் தண்டனை பெற்ற அனுபவம் அவருக்கு உண்டு. அக்காலத்தில் திருவரங்கத்தைச் சார்ந்த கொடியாலம் ரெங்கசுவாமி ஐயங்கார், விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு உழைத்து வந்தார். தேசியவாதிகளுக்கு அவர் பொருளுதவியும் செய்து வந்தார். ஒரு முறை அவ்வாறு புதுச்சேரியில் இருந்த அரவிந்தருக்குப் பொருள் உதவி செய்ய விரும்பி அதற்கு வ.ரா. வைப் பயன்படுத்திக் கொண்டார். நாட்டு விடுதலைப் போராட்ட ஆர்வமும். இளமைத் துடிப்பும் செயற்பாடும் மிக்க வ.ரா. இத்தகைய செயல்களை முழு ஈடுபாட்டுடன் திறம்படச் செய்ய உதவினார்.

பாரதி சந்திப்பு

பாண்டிச்சேரிக்குச் சென்று அரவிந்தரைக் காண வ.ரா. மிகவும் உற்சாகத்துடன் விரும்பியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஏனெனில் பாண்டிச்சேரியில் மகாகவி பாரதியாரைக் காண்பதை வ.ரா. பெரும்பேறாகக் கருதினார். அதற்கு முன்னரே பாரதியின் நண்பரான வி. கிருஷ்ணசாமி ஐயர் அந்நாளில் வெளியிட்டிருந்த பாரதியின் சுதேசகீதங்கள் யாவற்றையும் படித்து அதில் ஈடுபட்டிருந்த வ.ரா.விற்கு இவ்வாறு புதுச்சேரிக்குச் செல்வது மிகவும் ஈடுபாடு மிக்க செயலாக இருந்ததில் வியப்பில்லை. பாரதியாரைச் சந்தித்ததாலே வ.ரா. தாய்மொழியின் சிறப்பு. தேசபக்தி. சமூக விடுதலை, பெண் விடுதலை போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டார். தம் வாழ்நாள் முழுவதும் இவற்றிற்கென உழைத்தார். தம் படைப்புக்கள் அனைத்திலும் தாரக மந்திரங்களாக இவற்றையே தொடர்ந்து எழுதினார். ‘விடுதலை என்ற சொல்லை நாட்டிற்கு உபயோகப்படுத்தி நான் கேட்டது பாரதியாரிடந்தான். தமிழுக்கு உயர்வு உண்டு; தமிழனுக்கும் பெருமை உண்டு என்பது பாரதியாரைப் பார்த்த பின்னர் தான் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்தது. வெறும் வந்தேமாதரக் கூச்சலிட்டு வந்த சிறுபிள்ளையான எனக்கு பாரதியாரைக் கண்டபின்னர் அபரிமிதமான உற்சாகம் வந்தது என்றால், அது கற்பனையே அல்ல’ என்று வ.ரா. மகாகவி பாரதியார் (பக் 8-9) நூலில் பாரதியைத் தாம் சந்தித்த போது முதல் நாள் ஏற்பட்ட அனுபவத்தைக் கூறுவதிலிருந்து இதனை உணரலாம். வராவின் வாழ்க்கைப் போக்கை மாற்றி, அவரைப் பாரதிப் பித்தராக ஆக்கிய இந்த நிகழ்ச்சி 1911-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்தது. வ.ரா.வின் வாழ்கைப் பாதையில் இது மிக முக்கியமான நிகழ்ச்சியாகும் பின்னர் 1914 ஆம் ஆண்டு வரை புதுச்சேரியில் தங்கி பாரதிக்குச் சேவை செய்து அவருடன் உடனிருப்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார், வ.ரா. பின்னர் மகாகவி பாரதியின் இலக்கியத் தரம் குறித்து எழுதவும் மகாகவி பாரதியார் நூலை எழுதவும் அவருக்கு இத்தொடர்பு உதவியது. வ.ரா. வ.ரா.வைப் வைப் பொருத்தவரையில் பாரதிதான் அவருக்கு மாதா, பிதா, குரு, தெய்வம்.

அரசியல் ஈடுபாடு

காங்கிரஸ் இயக்கத்தில் வ.ரா. தீவிரமாக ஈடுபட்டார். தம் வாழ்நாள் முழுவதிலும் அவ்வியக்கத்திலே உழைத்தார்.1910 ஆம் ஆண்டு அலகாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகக் கலந்து கொண்டார் வ.ரா. அது முதல் ஆண்டுதோறும் காங்கிரஸ் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டதுடன் தாம் பணியாற்றிய பத்திரிகைகளில் அதைப்பற்றி விரிவாக எழுதினார். இந்த அனுபவ அறிவே காங்கிரஸ் ஆட்சி, காங்கிரஸ் ஆண்டு நிறைவு ஆகிய நூல்களை எழுத அவருக்கு உதவியது. காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தபோதெல்லாம் வ.ரா. அவருடன் இருந்து பல்வேறு உதவிகளைச் செய்தார். 1930 ஆம் ஆண்டு இந்தியா முழுவதிலும், விடுதலைப் போராட்டத்தின் ஒரு கட்டமாக உப்புசத்தியாக்கிரகம் நடைபெற்றது. தமிழ் நாட்டில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் வ.ரா. பங்கு பெற்றார். இதற்காகச் சிறைத் தண்டனை பெற்று அலிப்பூர் சிறையில் ஆறு மாத காலம் தண்டனையை அனுபவித்தார். சிறையிலிருந்து வெளிவந்த பின் தீவிரவாத அரசியலை விட்டுவிட்டு, மிதவாத அரசியலுக்குத் திரும்பினார். சிறையிலிருக்கும் போதே, அவர் நிறைய எழுதத்தொடங்கினார். அவற்றுள் What is poetry என்ற நீண்ட ஆங்கிலக் கட்டுரையும், (இது அவர் மறைந்து நீண்ட காலத்திற்குப்பின் 1982, ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில், திரு சிட்டியின் முயற்சியால் Indian Review என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது.) வேறு சில கதைகளும், இலக்கியக் கட்டுரைகளும் எழுதி ஜெயில் டைரி என்ற பெயரில் அவர் தொகுத்து வைத்திருந்தார். சிறை செல்வதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரும் அவர் நிறைய எழுதிவந்தார். 1914- இல் அவர் தமது முதல் படைப்பான ஜோடி மோதிரம் என்ற மொழிபெயர்ப்பை வெளியிட்டார். ஞானபானு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதி வந்த வ.ரா. பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியர். உயர் நிலைகளில் பணியாற்றினார். இலங்கை சென்று வீரகேசரி இதழில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.

எழுத்தாளர்களின் வழிகாட்டி

மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கு வ.ரா.தான் முன்னோடி. சிந்தனையை மதிப்பவர்களுக்கெல்லாம். வ.ரா.விடம் மதிப்புண்டு என்று வ.ரா. வாசகம் நூலில் (ப. XIX) மணிக்கொடி சீனிவாசன் கூறுகிறார். வ.ரா.வினுடைய சமூகச் சீர்திருத்த ஈடுபாடு. தமிழ்ப்பற்றுக் காரணமாகப் பகுத்தறிவுவாத அரசியலாளர்களிடமும் நாட்டுப்பற்றுக் காரணமாக காங்கிரஸ் தலைவர்களிடமும் ஒரே சமயத்தில் அவர் பாராட்டுப் பெற்றிருந்தார். ‘இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவது வ.ரா.விற்கு இயற்கையான குணம். புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் கொடுத்து, மேலும் மேலும் தூண்டி விட்டவர் அவர்தான். அவரைச் சுற்றி எப்பொழுதும் எழுத்தாளர் கூட்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அவருடைய ஆதரவான மொழிகளைக் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொருவரும் தாங்கள் பெரிய எழுத்தாளர் என்று நினைக்கும்படி தன்னம்பிக்கை ஏற்படும் என்று டி.எஸ். சொக்கலிங்கம் கூறுவது நினைக்கத்தக்கது. (வ.ரா’. டி.எஸ். சொக்கலிங்கம், குமரிமலர்.ப.19)

மணவாழ்க்கை

வீரகேசரி என்னும் பத்திரிகையில் பணியாற்றுவதற்காக வ.ரா. இலங்கை சென்றார். அங்கிருந்தபோது, தம்முடைய நாற்பதாவது வயதில் புவனேசுவரி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்ட வேற்று இனத்தவரான அந்த அம்மையாரை வ.ரா.

மனம் விரும்பிக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். தம்முடைய இளம் வயதில் தம் ஊரில், தாழ்ந்த இனத்தைச் சார்ந்த இறந்துபோன ஒருவரின் இறுதி ஊர்வலம், அந்தணர்கள் மிகுதியாக வாழ்ந்த தெருக்களின் வழியாக செல்வதைப் பிறர் தடுத்தபோது, வ.ரா. தம் இன மக்கள் செயலை எதிர்த்து அவ்வூர்வலத்துக்கு ஆதரவுக்குரல் கொடுத்தார்; அதன் பயனாகத் தமது சொந்த இனத்து மக்களாலே

துன்புறுத்தப்பட்டார். இளம் வயதில் அவருக்குள் ஏற்பட்ட சமூக அநீதிகளுக்கு எதிரான இந்தக் கனல் அவருடைய இறுதி மூச்சுவரை கனன்று கொண்டே இருந்தது; அவருடைய எழுத்து. சொல், செயல் அனைத்திலுமே வெளிப்பட்டது. மிக இளம் வயதிலே சாதி வேறுபாடுகளுக்கு எதிராகப் போர்க்கொடி பிடித்த அவர், சாதியின் அடையாளமான பூணூலைக் கழற்றி எறிந்தவர். பாரதியார் பாண்டிச்சேரியில் வாழ்ந்தபோது. அவருடன் இருந்த காலத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ‘எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குச் சில மாதங்களுக்கு முன்புதான். என் பூணூலை எடுத்துவிடும்படி பாரதியார் எனக்குச் சொன்னார். அவரோ வெகு காலத்திற்கு முன்னமேயே பூணூலை எடுத்துவிட்டார்” என்று மகாகவி பாரதியார் நூலில் (ப.138) வ.ரா. கூறுகிறார். இவ்வாறு சாதிச்சின்னங்கள், பழைய சம்பிரதாயங்கள் இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்துச் சமூக மாற்றத்திற்காக உழைத்து, சொன்னபடியே தம்முடைய வாழ்க்கையில் சாதி, மொழி வேறுபாடுகள் கடந்த நிலையில் அவர் மணம் புரிந்து கொண்டது. அவருடைய கொள்கைப் பிடிப்பைக் காட்டும்

இந்தத் திருமணத்தை அந்த நாட்களில் அவருடைய நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மனமார ஏற்றுப் பாராட்டினார்கள். ஒரு சிலர் முகஞ்சுளித்திருக்கலாம். இது பற்றிய முழு விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழறிஞரும், தேசபக்தருமான வ.உ.சிதம்பரம் பிள்ளை. வ.ரா.வினுடைய திருமணத்தைக் கேலி செய்வதுபோலப் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதனை மறுத்து, வ.ரா.வினுடைய சீர்திருத்தத் திருமணச் செயலை ஆதரித்து மற்றொரு தழிழறிஞரும், தேசபக்தருமான ராய.சொக்கலிங்கம் தாம் நடத்திய ஊழியன் பத்திரிகையில் (ஊழியன் 15.5.36, ப. 8. காரைக்குடி) செய்தி வெளியிட்டுள்ளார். ‘வரா. தம் நாற்பது வயதில் பஞ்சாபி சிறுமி ஒருத்தியை மணந்து கொண்டார்

என்பதைக் கூறி, அய்யங்காருக்கும் அவருடைய பஞ்சாபி மனைவியாருக்கும் பிறக்கும் ஆண் மக்களை நான் இன்ன அய்யங்கார் என்று கூப்பிடுவதா, அல்லது சுயமரியாதைத் தோழர்களைக் கூப்பிடுவது போல வெறும் பெயர்களை மட்டும் சொல்லிக் கூப்பிடுவதா’ என்று கவலைப்படுகிறார் வ.உ.சி. அவர்கள். கலியாணம் இருவர் தனியுரிமை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் சாதிப்பட்டத்திற்காகக் கவலைப்படுகிறார் வஉசி. சாதிச்சனியனே வேண்டாமென்றுதானே பஞ்சாபிப் பெண்ணை மணந்திருக்கிறார், வ.ரா. திரு சிதம்பரம் பிள்ளை போன்ற பெரிய தேசாபிமானிகள், தலைவர்கள். தியாகிகள் கூடச் சாதியைப் பிடித்துக் கொண்டிருப்பார்களேயானால், தேசத்தின் தலைவிதியையும், சாதிப்பேயின் நற்காலத்தையும் என்னவென்பது?’ என்று ஊழியணில் ‘துண்டுபட்ட நினைவுகள்’ என்னும் தலைப்பில் கமலம் என்ற பெயரில் துணைத் தலையங்கமாக, இது வெளியிடப்பட்டுள்ளது. இப்புனை பெயரில் எழுதியவர் ராய.சொ.வா அல்லது வேறு ஒருவரா என்பது இப்பொழுது தெரியவில்லை. ஆயினும் தம் வாழ்நாள் முழுவதிலும் சொன்ன வண்ணம் வண்ணம் செய்துகாட்டி வாழ்ந்த வராவிற்கு அக்காலத்தில், அறிஞர்கள் மத்தியில் அவருடைய இந்தச் செயலுக்காக ஆதரவும் எதிர்ப்பும் இருந்ததை இந்த வரலாற்றுக் குறிப்பு காட்டும்.

குடும்ப வாழ்க்கையும் மறைவும்

வ.ரா.வின் இல்லற வாழ்க்கை அமைதியாகவும். இனிமையாகவும் கழிந்தது. இரு குழந்தைகள் பிறந்து, முதல் மகன் இரண்டரை வயதிலும், இரண்டாவது மகன் பிறந்த சில நாட்களுக்குள்ளும் இறந்து போயினர். இலங்கையிலிருந்து திரும்பியபின் சென்னையிலே தமது குடியிருப்பை வைத்துக் கொண்டார். அவருடைய மணிவிழாவின் போது தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்பெற்ற பணமுடிப்பைக் கொண்டு, சொந்தமாக வாங்கிய வீட்டில் தம் இறுதிநாட்களைக் கழித்தார். இறுதிக்காலத்தில் ஆஸ்துமாவுடன் போராடிய அவருக்கு சாலை விபத்து ஒன்றினால் இடுப்பெலும்பு முறிந்தது. இந்தத் துன்பங்களைப் பொருட்படுத்தாது உற்சாகமாக அவர் வாழ்ந்தார். வ.ரா.வின் இல்லற வாழ்க்கை மிகவும் மனமொத்த நெருக்கமுடையதாக இருந்தது என்று மணிக்கொடி சீனிவாசன் வ.ரா. வாசகம் நூலில் (ப. XXV) கூறுவார். ஆனால் சிறிது காலத்திற்குப்பிறகு 29.8.1951 அன்று பகல் உணவிற்குப் பிறகு வழக்கம் போலக் கண்ணயர்ந்த வ.ரா. கண்விழிக்கவே இல்லை. பிற்பகல் காபிக்கென்று எழுப்பப்போன மனைவியார் ஆவிபிரிந்த உடலைத்தான் கண்டார். கண்டார். இதனை அந்தக் குடும்பத்தில் சூரியன் அஸ்தமித்து விட்டது. வ.ரா. இருந்த இடத்தில் இரா (இரவு) வந்து கல்விக்கொண்டது. அகால மரணம் என்று வரா. வாசகம் நூலில் (ப. XXVI) ஆசிரியர் உருக்கமாக வருணிக்கிறார். வாழ்நாள் முழுவதும் வறுமையிலும். வியாதியிலும் கழிந்தது. தம் சொந்த இன மக்களால் புறக்கணிப்பும். முன்னால் முகத்துதியும் பின்னால் கேலிப்பேச்சும் என அவர்பட்ட சங்கடங்கள் பல. பல. இவ்வாறு சமூக மாற்றங்களுக்கான போராட்டத்திற்காகவே அவருடைய வாழ்க்கை கழிந்தது. மனிதனுடைய மனச்சாட்சியை உலுக்கி, அறிவுச்சுடரை ஏற்றிச் சிந்தனையை வளர்த்து, போலித் தனமான் சமூக சமய சாதி மொழிக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் புரட்சிக்கு அவர் வித்திட்டார். 20-ஆம் நூற்றாண்டில் பாரதியார் கவிதை மூலமாகச் மூலமாகச் செய்த சமூகப்புரட்சியை அவருடைய சீடரான வரா. உரைநடையின் மூலம் சாதித்துக் காட்டினார்.

வ.ரா. படைத்த நூல்கள்

பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியப் பொறுப்பில் பணியாற்றிய வ.ரா. நிறைய எழுதினார். சுதந்திரன் என்ற இதழிலிருந்து அவர் தம் எழுத்துப் பணியைத் தொடங்கினார். சமூகச் சீர்திருத்தம், நாட்டு விடுதலை, பெண் முன்னேற்றம், தமிழ் மொழி வளர்ச்சி என்ற பலவற்றைத் தம் எழுத்துக்களில் அவர் வெளிப்படுத்தினார். பாரதியிடம் கொண்ட ஈடுபாடு. அவரைச் சிந்தனையிலும், செயலிலும் புரட்சி மிக்கவராக ஆக்கியது. ‘வ.ரா. தமிழ் நாட்டுக்குச் செய்த தொண்டு களிலெல்லாம் சிறந்த தொண்டு பாரதியாரின் பெருமையை உலகறியும்படி செய்ததாகும். பாரதியாரின் பெயர் உள்ள வரையில் வ.ரா.வின் நினைவும் தமிழர் உள்ளத்தைவிட்டு அகலாது” என்று கூறுவார் கல்கி (2.9.1951-கல்கி). தொடக்க காலத்தில் வ.ரா. படைத்தது பங்கிம் சந்திரரின் குறுநாவலை ஜோடி மோதிரம் என்ற பெயரில் மொழி பெயர்த்ததாகும். இது 1914 பிப்ரவரியில் பரலி சு.நெல்லைப்பரால் நூலாக வெளிப் பட்டது. முதலில் ஞானபாநு இதழில் வெளிவந்தது. வரா.வின் இந்த மொழி பெயர்ப்பைக்கண்ணுற்ற பாரதியார் “வசனத்திற்கு வ.ரா. போதும். கவிதைகளை மட்டும் நான் கவனித்துக் போதும்.கவிதைகளை கொள்கிறேன் என்று வ.ரா.விடம் கூறி உற்சாகப் படுத்தியதாகவும், அரவிந்தரிடமும் கூறியதாகவும் மணிக்கொடி ஸ்ரீனிவாசன் வ.ரா.வாசகம் நூலில் (ப.VI) கூறுவார்.

நாவல் – சிறுகதை

வரா. நான்கு நாவல்களையும், பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகள் கற்றது குற்றமா? என்ற பெயரில் தொகுப்பாக (1944) வந்துள்ளது. இன்னும் நூலாகாத சிறுகதைகள் உள்ளன. 1933இல் அவர் எழுதிய கோகிலத்தின் குதர்க்கம் என்ற சிறுகதை 1984இல் சென்னை இலக்கியச் சிந்தனையால் வெளியிடப்பட்டது. வ.ரா. 1913இல் எழுதிய சுந்தரி என்ற நாவல் (அந்தக்கால வழக்கத்தின்படி இந்த நாவலுக்குச் சுந்தரி அல்லது அந்தரப்பிழைப்பு என்ற இரட்டைப் பெயர் வைக்கப்பட்டது. இரண்டாம் பதிப்பு முதல் சுந்தரி என்ற பெயர் மட்டுமே காணப்படுகிறது). 1917-இல் வெளியானது. இந்த நாவல் இளம் விதவையின் வாழ்க்கைச் சிக்கலை முன்வைத்து அவளுக்கு மறுமணம் வேண்டுமென்ற சீர்திருத்தக் கருத்தை எடுத்துரைத்தது. விஜயம் என்ற நாவல் 1944இல் வெளியானது. இந்த நாவலிலும் விதவைச் சிக்கலே கதையின் மையப்பொருள். இதற்குச்சற்று முன்னர் 1942இல் வெளியான சின்னச் சாம்பு நாவலிலும் விதவை மறுமணத்தை வலியுறுத்துகிறார். 1945இல் கோதைத்தீவு என்ற நாவலைப் படைத்தார். உயர் கற்பனை நாவல் (Utopian) என்ற வகையில் இது அமைந்தது. பாரதியாரின் ஞானரதம் இதற்கு முன்னோடி பெண் விடுதலை, பெண் உரிமைச் சிந்தனைகளை மிகுந்த தீவிரத்துடன் வ.ரா. இந்த நாவலில் படைத்துள்ளார்.இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் நிலைத்து நிற்கும் கற்பனையாக இந்த நாவல் அமைந்துள்ளது. தமிழின் பழைய லக்கியங்கள் பெண் முன்னேற்றத்திற்குப் பாதகமாக அமையின், அவை தடை செய்யப்படவேண்டும் என்ற அளவிற்கு அவரின் புரட்சிச் சிந்தனை செல்வதை இந்த நாவல் காட்டும்.

கட்டுரை

பத்திரிகைகளிலும், வானொலி உரையாகவும் வ.ரா. எழுதிய கட்டுரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. மழையும் புயலும், கலையும் கலைவளர்ச்சியும், புண்ணியமும் பலவீனமும். வசந்த காலம், சுவர்க்கத்தில் சம்பாஷணைகள், வரா. வாசகம் என்பன அவை. அவற்றுள் இறுதி மூன்றும் வ.ரா.வின் மறைவிற்குப் பின் வெளிவந்தவை. இவை அனைத்திலும் வ.ராவின் புரட்சிகரமான சமூகச் சீர்திருத்தக் கருத்துகளும், நடையின் வேகமும் சேர்ந்து காணப்படும். இந்நூற்றாண்டு மறுமலர்ச்சி உரைநடை முன்னோடியாக அவரை இவை இனங்காட்டுகின்றன. தினமணி, ஊழியன் போன்ற இதழ்களில் வெளிவந்து, இன்னும் நூலாகாமல் உள்ள கட்டுரைகள் ஏராளம்.

வாழ்க்கை வரலாறு

மகாகவி பாரதியார் என்ற பெயரில் வ.ரா. எழுதிய பாரதியின் வரலாறு, அவர் படைத்த நூல்களிலெல்லாம் தனிச்சிறப்பு வாய்ந்தது. பாரதியாரை மகாகவி என்று நிறுவியதில் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. 1933-34ஆம் ஆண்டுகளில் வ.ரா. மணிக்கொடியில் ஆசிரியராக இருந்த பொழுது. ஆனந்தவிகடன் ஆசிரியர் கல்கியுடன், பாரதியின் இலக்கிய ஸ்தானம் குறித்து, ஏற்பட்ட கருத்து மோதலால் இது உருவானது. தினமணி. சுதேசமித்திரன் இதழ்களின் வாயிலாகவும், பின்னர் காந்தி இதழிலும் வ.ரா. எழுதிய கட்டுரைகள் பின்னர் நூலாக உருப்பெற்றன. வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கு வ.ரா. பயன்படுத்தியுள்ள முறை புதுமையானது. இன்றளவும் பாரதியார் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்களில் வ.ரா.வின் மகாகவி பாரதியார் நூலுக்குத் தனியிடம் உண்டு.

நடைச்சித்திரம்

நடைச்சித்திரம் என்ற பெயரில் புதிய இலக்கிய வகையை வ.ரா. மணிக்கொடி மூலம் டி உருவாக்கினார். பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றிய சித்திரங்கள் அவை. தாம் வாழ்க்கையில் சந்தித்த சாதாரண, பொதுமக்களைப் பற்றி அவர் உருவாக்கிய கோட்டுச் சித்திரங்கள் அவை. உரையாடலும். எடுத்துரைத்தலுமாக, படிப்பவனை முன்னிலைப்படுத்தி அவனிடம் சித்திரங்கள் அறிமுகப்படுத்தும் தொனியில் எழுதப்பட்ட, படைப்பிலக்கியம் அல்லாத இந்தப்புதிய வகை எழுத்திற்குப் பெரும் வரவேற்பு இருந்தது. இன்று வரை வ.ரா.வின் இந்த நடைச்சித்திரத்திற்கு இணையாக மற்றொன்று தோன்றவில்லை. நடைச்சித்திரம், வாழ்க்கை விநோதங்கள் என்பன இவ்வகையின.

இதே வகையில் தம்முடைய உழைப்பால் முன்னேறி, முன்மாதிரிகளாக விளங்கும் சமூகப் பெரியார்களைப் பற்றி, தமிழ்ப் பெரியார்கள் என்ற நூலை அவர் எழுதினார்.

மொழிபெயர்ப்பு

விடுதலைப் போராட்ட காலத்தில் தேசப்பற்று, நாட்டு விடுதலை, சமூக மேம்பாடு என்ற கருத்துக்களை மையமிட்ட, சில நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தார். வ.ரா. பர்டோலிக் கதை. ஜப்பான் வருவானா?, ஜவஹர்லால் வாழ்க்கை வரலாறு, நமது இந்தியா என்பன இவ்வகையின. தமிழ் நாட்டுச் சூழலுக்கும், பண்பாட்டு மரபுகளுக்கும் ஏற்ப தீவிரமான நடையில் இந்த மொழி பெயர்ப்புகளை அவர் செய்தார்.

கொள்கை விளக்க நூல்

அடிமைப்பட்டிருந்த இந்திய நாட்டையும் அதன் பழைய பழக்க வழக்கங்கள். பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றையும் கேலி செய்து, வெளிநாட்டவர் மத்தியில் இந்தியாவைப் பற்றி மிக மோசமான எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் 1928இல் காதரைன் காதரைன் மேயோவால் எழுதப்பட்ட ந்திய மாதா என்ற நூலுக்கு மறுப்புரை போல இந்தியாவைப் பற்றிய சரியான கொள்கை விளக்க நூலாக மாயாமேயோ அல்லது மேயோவுக்குச் சவுக்கடி என்ற பெயரில் 1928இல் வ.ரா. ஒரு நூலை எழுதினார். வ.ரா.வின் நூல்களிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க நூல் இது. பின்னாளில் அவருடைடய நூல்களில் வெளிப்பட்ட சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகள் பலவற்றிற்கும் இந்த நூல் நிலைக்களனாகும். பெண்ணுக்குச் சொத்தில் உரிமையும், சமபங்கும் உண்டு என்று இந்த நூலின் மூலம் வ.ரா. எழுப்பிய புரட்சிகரமான சமூகச்சிந்தனை, பின்னர் தமிழகச் சமூக, அரசியல்வாதிகள் பலராலும் போற்றப்பட்டு வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் ஆட்சி, காங்கிரஸ் ஆண்டு நிறைவு என்ற இரு நூல்களிலும் அன்றைய காங்கிரஸ் கட்சியின் கட்சியின் செயல்களை, கொள்கை விளக்கங்களை வ.ரா. பாராட்டி எழுதியுள்ளார்.

வ.ரா.வின் படைப்புக்கள் பலதரப்பட்டவையாக இவ்வாறு அமைந்துள்ளன. இலக்கிய வகைகள் மாறினாலும், அவர் தேர்ந்தெடுத்த அடிப்படை வெளீயீட்டு வடிவம் உரைநடையாகும். தீவிரமான அவருடைய சிந்தனை வேகத்திற்கு ஈடு கொடுத்தது அவருடைய நடை. தமிழின் நவீனத்துவம், கவிதையில் பாரதியுடனும், உரைநடையில் வ.ரா.வுடனும் தொடங்கியது. தேசப்பற்று, சமூகச் சீர்திருத்தம், பெண்ணுரிமை, தமிழ்ப்பற்று, ஜன சமூக மேம்பாடு என்ற கருத்தாக்கங்கள் அடிப்படை உள்ளீடுகளாக அமைந்து வெவ்வேறு இலக்கிய வகைகளில் வ.ரா.வின் தனித்த உரைநடையில் வெளிப்பட்டன.

வ.ரா.வின் பிற நூல்கள்

சிறுகதை, நாவல், கட்டுரை. வாழ்க்கை வரலாறு, வாழ்க்கைச் சித்திரம் ஆகியவை தவிர அரசியல் நூல்களையும், மொழி-பெயர்ப்பு நூல்களையும் வ.ரா.படைத்துள்ளார். அவ்வகையில் நமது இந்தியா, ‘ஜவஉறர்லால் வாழ்க்கை வரலாறு. பர்டோலிக் கதை, ஜோடி மோதிரம் ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும். ஜப்பான் வருவானா?’ என்ற கொள்கை விளக்க, நூலையும், மாயாமேயோ அல்லது மேயோவுக்குச் சவுக்கடி என்ற மறுப்பு நூலையும், காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் ஆண்டு நிறைவு’ ஆகிய அரசியல் நூல்களையும் அவர் படைத்துள்ளார். இவற்றை இந்த இயலில் காண்போம். இவை தவிர தினமணி, ஊழியன். வீரகேசரி போன்ற வ.ரா.பணியாற்றிய பல்வேறு இதழ்களில் அவர் படைத்த நூற்றுக்கணக்கான கட்டுரைகளும். பிற சிறுகதைகளும், What is poetry என்ற ஆங்கிலக் கட்டுரையும் இன்னும் நூல் வடிவம் பெறாமல் உள்ளன. இவை இலக்கியம். அரசியல், சமூகச் சீர்திருத்தம், தமிழின் பெருமை என்ற பல்வேறு பொருளில் அமைந்தவை. நூலாக வெளிவராமையால் இவற்றைப் பற்றித் தனியாக இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

ஜடீறர்லால் வாழ்க்கை வரலாறு

இலங்கையில் வீரகேசரி இதழுக்கு உதவி ஆசிரியராக 1935-இல் சென்றபோது, நேரு ஆங்கிலத்தில் எழுதிய சுயசரிதையைத் தமிழில் வ.ரா.மொழிபெயர்த்தார். 1935-இல் இரண்டு பாகங்களாக இந்த நூல்

வெளிவந்தது. அடிமைப்பட்டிருந்த இந்தியர்களுக்கு நேருவின் வாழ்க்கை வரலாறும்.அவருடைய பன்பு நலன்களும் வழிகாட்டியாக அமையும் என்ற நோக்கத்தில் வ.ரா. இதைத் தமிழில் தந்தார். மொழி பெயர்ப்பு என்ற எண்ணமே தோன்றாதபடி சுவையாகவும். சரளமாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. இதற்குக் காரணம் வ.ரா.வினுடைய எளிமையும், தெளிவுமிக்க உணர்ச்சிபூர்வமான நடையமாகும்.

பர்டோலிக் கதை

மகாதேவ தேசாய் ஆங்கிலத்தில் எழுதிய பர்போலிப் போாட்டம் பற்றிய நூலை வ.ரா. தமிழில் ‘பர்டோலிக் கதை என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இந்த நூல் 1932-இல் வெளிவந்தது. பர்டோலிப் போராட்டத்தில் விவசாயிகள் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பெற்ற வெற்றியை எடுத்துக் காட்டுகிறது இந்த நூல். ‘வீரர்களும் சூரர்களும் பண்டைக் காலத்துச் சங்கதிகள்; இப்பொழுது நமது நாட்டில் காணக் கூடியதல்ல என்று பெருமூச்சுடன் பேசுபவர்கள் இந்தப் புஸ்தகத்தைப் படிக்கவேண்டும். வீரத்தனமும் சூரத்தனமும், அரசர்களின் உள்ளத்திலும். அரண்மனையிலும், போர்க்களத்திலும் கத்தி முனையிலும், பீரங்கி ஒலியிலும் தான் உண்டு என்று பிடிவாத முட்டாள்தனத்துடன் புலம்புகிறவர்கள். பர்டோலிக் குடியானவர்கள்- வெள்ளைத் தனமுள்ள குடியானவர்கள்-காட்டிய தீரத்தைப் படித்து. கண்விழிப்புக் கொள்ள வேண்டும். இந்தியர்கள் நெல்லிக்காய் மூட்டைகள் என்று சதா ஜபித்துச் சாபம் கொடுத்துக் கொண்டிருக்கும் திண்ணை வம்பர்கள் கூட பர்டோலிக் கதை ‘யைப் படித்தால் பரவசமடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை (பர்டோலிக் கதை முன்னுரை, ப.2) என்ற வரிகளில் ஒத்துழையாமை இயக்கத்தின் வலிமையை எடுத்துக் காட்டுகிறார். காந்தியடிகள் தலைமையிலான அறவழிப் போராட்டத்தை முழுவதுமாக ஆதரித்து அதையே பின்பற்றிய வ.ரா.வுக்குத் தம் கொள்கையை விளக்குவதற்கு இந்த நூல் வாய்ப்பாக அமைந்தது. தேசாயின் மூலநூலில் இல்லாத எதையும் வ.ரா.தமிழில் எழுதிவிடவில்லை. ஆனால் தமிழ் நாட்டு வாசகர்களுக்கான இந்த மொழி பெயர்ப்பு, அந்த நினைவுடன், குஜராத் மாநிலத்திற்கு மட்டும் உரிய தனிப்பட்ட சில புள்ளி விவரங்களை விடுத்து, பொதுவாக எழுதப்பட்டுள்ளது. வ.ரா.வின் நடை காரணமாக இந்த நூலும் இனிமையும் கவர்ச்சியுமிக்க மூலப்படைப்பு போன்றே உள்ளது.

ஜோடி மோதிரம்

வங்க மறுமலர்ச்சிப் படைப்பாளர்களுள் ஒருவரான பங்கிம் சரத்சந்திர சட்டர்ஜியின் `யுகல் ஆங்ருவையா என்ற குறுநாவலை ஜோடி மோதிரம் என்ற பெயரில் வ.ரா.மொழி பெயர்த்தார். புதுவையில், பாரதியார், அரவிந்தர் இவர்களுடன் வ.ரா. வாழ்ந்தபோது தனை மொழி பெயர்த்தார். அந்த நாளில் புதுச்சேரியில் தலைமைறவாக இருந்த தமிழ் தேச பக்தர்கள், வங்க இலக்கியப் படைப்புக்களைப் படித்து, அதில் திளைத்து அவற்றைத் தமிழுக்கு மொழி பெயர்த்தனர். பாரதியும், வ.வே.சு.அய்யரும் தாகூர் கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தனர். வ.ரா. பங்கிம் சந்திரரை மொழி பெயர்த்தார். வரா. மொழி பெயர்த்து வருவதைப் பார்த்த பாரதி, அரவிந்தரிடம் அதைக் காட்டி வ.ரா.வை ஊக்கப்படுத்தினர். வரா.வின் எழுத்தும் நடையும் பாரதியின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டன. உடனே அரவிந்தரைக் கூப்பிட்டார். குற்றவாளி போல் மனம் திக்குத்திக்கென்று அடித்துக் கொண்டிருந்த வ.ரா.வைக்காட்டி பாபுஜி இந்த நோட் புஸ்தகத்தில் என்ன இருக்கிறது தெரியுமா? பங்கிம் பாபுவின் ஜோடி மோதிரங்களின் மொழிபெயர்ப்பு. நம்ம ராமஸ்வாமி அய்யங்கார் எழுதியிருக்கார் அற்புதமான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்று பாராட்டினார். புதுச் சேரியிலிருந்து திரும்பிய பிறகு 1914-இல் இது வெளியானது. பரலி சு. நெல்லையப்பர் (பாரதியின் சீடர்) இதனை வெளியிட்டார். பெண் விடுதலைச் சிந்தனையை மையமாகக் கொண்டது இந்தக்கதை. இதில் வரும் உறிரண்மயி என்ற பெண்மாந்தர் கல்வி கற்று பலராலும் பாராட்டப்படுகிறார். பெண்கல்வியும். பெண் விடுதலையும் வ.ரா. வை ஈர்த்தன. பின்னாளில் வ.ரா. தம் படைப்புக்களில் பெண் விடுதலையை முதன்மைப்படுத்தி எழுதுவதற்குப் பங்கிம் சந்திரரின் இப்படைப்பு தூண்டுதலாயிருந்தது.

மாயாமேயோ அல்லது மேயோவுக்குச் சவுக்கடி

இந்த நூல் 1928 இல் வெளியானது. செல்வி(மிஸ்) காதரைன் மேயோ என்ற வெளிநாட்டுப் பெண்மணி, இந்திய மாதா என்ற பெயரில் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதினார். அடிமைப்பட்டிருந்த இந்தியர்களின் பழக்க வழக்கங்கள். பண்பாட்டு மரபுகள், வாழ்க்கைப் போக்குகள், மத நம்பிக்கைள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து வெளிநாட்டவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதாகக் கூறிக்கொண்டு இந்தியர்களை மிகக் கேவலமான முறையில் இழித்தும், பழித்தும் பேசி இந்த நூலை எழுதினார்.

உலகத்தார்களின்முன். `இந்தியர்கள் சுதந்திரத்திற்கு அருகதை அற்றவர்கள் என்ற எண்ணம் ஏற்படும்படி திட்டமிட்டுத் தவறான செய்திகளைக் குறுகிய கண்ணோட்டத்தில் முன்வைத்துள்ளார். இந்த நூலுக்கு மறுப்புச் சொல்வதாக வ.ரா.1938-இல் மாயாமேயோ அல்லது மேயோவுக்குச் சவுக்கடி என்ற பெயரில் ஒரு நூலை எழுதினார். நாட்டைப்பற்றியும், நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் உண்மை யானதும், நேர்மையானதுமான செய்திகளை எடுத்துக் கூற வேண்டியது தேசபக்தனின் கடமை என்று வெளிப்படுத்தவே வ.ரா.இந்த நூலை எழுதினார்.

சில பழக்கவழக்கங்கள் கால மாறுபாட்டால் மாறியுள்ளன என்பதை எடுத்துக்கூறி ஒவ்வொரு பகுதியிலும் மேயோவின் கருத்தை மறுத்து, தம் கருத்தை வ.ரா. நிறுவுகிறார். 30 இயல்களாக இந்த நூல் அமைந்துள்ளது. இலக்கியப் பாடல் அடிகளையும், பாரதியார் பாடல்களையும் மிகுதியும் வ.ரா. எடுத்துக்காட்டி தம் கருத்தை நிறுவுகிறார். பெண்கள் இந்தியாவில் ஆண்களுக்குப் பணிந்து நடப்பது பல நூற்றாண்டுகளாக” என்று மேயோ கூறுகின்றார். மேயோ கூறுவது இடைக்காலத்தில் தோன்றிய தீமையாகும். ‘பெண் சுதந்திரம் பொய்மை கொண்டகலிக்கும் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள். தன்னிலே பொதுவான வழக்கமாம் என்று பாரதியார் கூறுகின்றார். மாதவப் பெரியோருடன் ஒப்புற்றே வாழ்ந்தனர் பெண்மணிகள் என்று கூறப்படுகின்றது. காலமாறுபாட்டால் வழக்கங்கள் மாறுவது இயல்பு (மாயாமேயோ, பக்.122,123) என்ற பகுதி இதனைக் காட்டும். பெண்ணுக்குக் கல்வி இல்லை; உரிமை இல்லை என்றும் கூறும் மேயோவுக்குப் பதில் சொல்வது போல, குடும்பச் சொத்தில் பெண்ணுக்கும் சம பங்கு வேண்டும்; சொத்து வந்துவிட்டால் பெண்ணை ஆண் தன் அடிமையாக நடத்த மாட்டான் என்று வரா. இந்த நூலில் அந்த நாளில் கூறிய கருத்து, இந்தியச் சமூகச்சீர்திருத்தப் பெரியோர்கள் மத்தியில் முதலாவதாக எழுந்த புரட்சிகரமான பெண்ணுரிமைக் குரலாகும். அதேபோலத் தீண்டாமை என்னும் கொடுமையை அடியோடு களைய வேண்டும் என்றும் குரல் கொடுக்கிறார்.

வரலாற்றுப் பூர்வமாகவும், இலக்கியக் கருத்தாக்கங் களுடனும் வ.ரா.இந்த மறுப்பு நூலைப் படைத்துள்ளார். வ.ரா.வின் நடையிலுள்ள எளிமையும் செறிவும் இந்த நூலின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. தேசபக்தனுக்குரிய கடமை களுள் ஒன்றாகத் தம் நாட்டை, மக்கட் சமுகத்தைப் பற்றி வெளிநாட்டவர் குறை கூறும்போது பதில் சொல்ல வேண்டியது தம்முடைய தார்மீகப் பொறுப்பு என்ற வ.ரா. வின் உள்ளக் கிடக்கை இந்த நூல் முழுவதிலும் புலனாகிறது. தேசபக்தி யின்மை, தீண்டாமை. பெண்ணடிமை போன்ற மெய்யான, நம்முடைய சீர்கேடுகளை ஒளிவுமறைவின்றி வ.ரா. ஒத்துக் கொள்கின்றார்; அவற்றைப் போக்கப்பாடுபடுவது நம் அனைவரின் கடமை எனவும் வலியுறுத்துகிறார். அதில் அவருடைய நேர்மையும், துணிவும் பாராட்டத்தக்கன. அதே நேரத்தில், மேயோவின் பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டுகளை வன்மையாக மறுக்கிறார். ஆனால் மறுக்குமிடங்களில் நாகரிகமாக மறுத்து எதிர்வாதம் செய்யும் வ.ரா.வின் நடைப்பண்பு நயத்தக்க நனி நாகரிகமிக்கது. அந்த நாளில் மேயோவின் நூலுக்கு மறுப்பு நூலுக்கு தமிழில் பலர் எழுதினர் என்ற போதிலும் மேற்கூறிய பண்புகளால் வரா.வின் இந்த நூல் தனிச்சிறப்பு மிக்கதாக விளங்கியது.

காங்கிரஸ் ஆட்சி

இது 1938-இல் வெளிவந்தது. இந்த நூல் 14 பாகங் களைக் கொண்ட சிறிய நூல். 1937-ஆம் ஆண்டு ஜூலை 14இல் ராஜாஜி தலைமையில் தமிழ் நாட்டில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியின் சிறப்பை இந்த நூல் எடுத்துரைக்கிறது. காங்கிரஸ்காராக இருந்த வ.ரா. இந்த அரசாட்சியை வரவேற்று இச்சிறு நூலை எழுதினார். ஒவ்வொரு பகுதியிலும் (பரிகாரம் என்ற ஏழாம் பகுதியில் மட்டும் கம்பனின் பாடல் அடி மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது. ஆனால் அது கம்பரின் பெயரால் வழங்கும் தனிப்பாடல் அடி இந்த ஒன்றைத் தவிர ஏனைய பதின்மூன்று பகுதிகளிலும்) பாரதியார் பாடல் அடி மேற்கோளாக ஆளப்பட்டுள்ளது. ‘மானத்தை இழந்தவர்கள் ஒரு நாளும் சுதந்திரம் பெறமுடியாது. சுதந்தரத்துக்கு ஊன்றுகோல் மானம் என்பதை நாம் இடைவிடாமல் உணர்ந்து கொண்டிருப்போமாக! ஆங்கில சாம்ராஜ்யக்காரர்களோடு சத்தியாக்கிரகப் போராட்டம் செய்ததில், நீல் சிலையை அப்புறப்படுத்தினதுதான் நம்மவர்களுக்கு ஒரு பூரணமான வெற்றி என்பது என் அபிப்பிராயம்” (காங்கிரஸ் ஆட்சி, ப.20) என்ற பகுதியில் அந்த நாளைய அரசியலாளர்களின் செயல்களைப் பாராட்டுவதுடன் தேசப்பற்றிற்கு அடிப்படை யானது மானவுணர்ச்சி என்பதையும் வ.ரா அழுத்தமாக முன் வைக்கின்றார். வ.ரா.வின் இனிய நடை அரசியல் கொள்கை விளக்க நூலைக்கூட. சுவையாகக் கதைபோலக் கூற முடிந்துள்ளது.

ஒருவருஷ காங்கிரஸ் ஆட்சி ஆண்டு நிறைவு

1939-இல் இந்த நூல் வெளிவந்தது. அந்த நாளைய சென்னை, காங்கிரஸ் சட்டசபைக் கட்சியின் வெளியீடாக சென்னை,காங்கிரஸ் வெளிவந்தது. தமிழ்நாட்டில் அமைந்த ராஜாஜி தலைமை யிலான காங்கிரஸ் அரசாட்சியின் ஒரு வருட ஆண்டு நிறைவையொட்டி வ.ரா. இந்த நூலை எழுதினார். அடிமைப்பட்ட நாட்டின் நிலையைக் காங்கிரஸ் கட்சி எவ்வாறு. தொடர்ந்து பாடுபட்டுப் போக்கி விடுதலைக்கு நம் மக்களை ஆயத்தப்படுத்தியது என்பதை இந்த நூலில் விளக்குகிறார். ‘ஒரு நாடு அடிமைப்பட்டு உழல நேர்ந்தால், அந்த நாட்டாரிடம், மனிதர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய பல நல்ல குணங்கள் இல்லை என்று அர்த்தம். நல்ல குணங்களும் அவைகளுக்கு அஸ்திவாரமாயிருக்கும் இயற்கையான உணர்ச்சிகளும் ஒரு நாட்டில் இல்லாமல் போனால், அந்த நாட்டை, கொஞ்சம் நல்ல தன்மைகள் படைத்த எந்த அந்நியர்களும் இலகுவிலே அடக்கியாள முடியும். ஆகவே, அடிமைத் தளையைத் தெறித்து எறிய வேண்டுமானால். நல்ல தன்மைகளையும், நல்ல உணர்ச்சிகளையும் நாட்டாரிடம் பெருக்கி வளர்ப்பதுதான் முதல் வேலையாகும். இந்த உத்தமமான வேலையத்தான். காங்கிரஸ் சென்ற 50 வருஷங்களாக, ஓயாமல் சலிக்காமல் செய்து வந்தது’ (ஆண்டு நிறைவு. ப.2) என்று கூறுவதால் உணரலாம். அடிமைத் தளையினின்று விடுபட்டு வலுவும். வீரமும் முழுமையாக என்று மனிதன் அடைகிறானோ, அந்த நிலை தான் சுதந்திரம் என்றும், கீழ்மையான குணங்களை விட்டொழித்து. மனிதன் மேம்பாடு அடைவதைச் சுயராஜ்யம் என்றும் வ.ரா.இந்த நூலில் விளக்குவது எக்காலத்திற்கும், எந்த நாட்டினருக்கும் பொருந்தக் கூடிய விளக்கமாகும். அரசியல் விடுதலை மட்டுமல்லாமல் சமூகவிடுதலையையும் வலியுறுத்திய வ.ரா.வின் வாழ்க்கைக் கண்ணோட்டம் இச்சிறு நூலில் அழுத்தமாக வெளிப்படுகிறடு. தம்முடைய எழுத்தின் நோக்கத்தைப்பற்றியும் புதிய சிந்தனைகளைத் தமிழுக்குத் தர வேண்டும் என்பதையும் இந்த நூலில் அவர் வெளிப்படுத்து கிறார். ‘நான் ஒரு தமிழ் எழுத்தாளன். எனக்கு இங்கிலீஷும் தெரியும். இங்கிலீஷ் தெரிந்திருப்பதாலே தான், எனக்குத் தமிழில் பற்று பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. இங்கிலீஷில் இருக்கிற அவ்வளவையும் தமிழில் சொல்லிவிட்டு, இங்கிலீஷில் இல்லாத புதிய சங்கதிகளையும் தமிழில் சொல்ல வேண்டும் என்ற ஆவல் என் ரத்தத்தில் துடித்துக் கொண்டேயிருக்கிறது” (ஆண்டு நிறைவு, பக். 55, 56) என்பதால் இதனை அறியலாம்.

இந்த நூல்களில் நாட்டுப்பற்று. அடிமை நிலையின் இழிநிலை. மொழிப்பற்று, விடுதலை என்பதன் முழுமையான பொருள் என்பவற்றை அடிநாதமாக விளக்கியுள்ளார். தேசீய உணர்வு, பெண் விடுதலை, தமிழ் மொழி ஈடுபாடு என்ற அடிப்படைக்கருத்தாக்கங்கள் இந்த நூல்களில் நிறைந்துள்ளன. வ.ரா.வின் எளிய நடையும் வாசகனை முன் நிறுத்தி எடுத்துரைக்கும் திறனும் அனைத்து நூல்களிலும் காணப்படுகின்றன. தம்முடைய எழுத்தின் நோக்கத்தை, மனித குல மேம்பாட்டை அவர் எடுத்துரைப்பது வ.ரா.என்ற மனிதநேயமிக்க சிந்தனைவாதியை நமக்குக் காட்டுகிறது. அரசியல், கொள்கை விளக்க நூல்களாயினும், வ.ரா.வினுடைய சிந்தனை ஓட்டம் எக்காலத்திற்கும் மனிதகுலம் முழுவதற்கும் பொருந்துமாறு அமைந்துள்ளது.

வ.ரா. என்ற மனிதர்

1889-ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குக்கிராமத்தில், பழமைமிக்க வைணவ அந்தணக் குடும்பத்தில். தோன்றின வ.ரா..சமூகச் சீர் திருத்தவாதியாகவும். நாடு, மொழி. தமிழினப்பற்று மிக்கவராகவும் தம்மை வெளிப்படுத்தி கொண்டார். சமூகச் சீர்திருத்தம், நாட்டு விடுதலை. பெண் விடுதலை, பெண் விடுதலை,மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகிய கருத்தாக்கங்களின் மறுவடிவமாக வ.ரா. விளங்கினார். அவருடைய படைப்புக்கள் மட்டுமின்றி, அவருடைய வாழ்க்கையே இதற்குச் சான்று.

மிக இளம் வயதில் கிராமத்தில் பழமைப் பிடிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து அந்த நாளைய அடிமை இந்தியாவின் நிலையைக் கண்ணாரக் கண்டு அரசியல் விடுதலை மட்டுமின்றி. சமூகத்தளைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறவேண்டும் என்று கனவு கண்டார். இதனையே தம்முடைய எல்லாப் படைப்புக்களிலும் அடிச் சரடாக எடுத்துரைத்தார். தம்முடைய கிராமத்தில், அரிஜன இனத்தைச் சார்ந்த மனிதரின் இறுதி ஊர்வலம் அந்தணர்கள் வாழும் தெரு வழியே செல்வதைத் தடுத்த பழமைவாதிகளை அவர் எதிர்த்து நிற்கவே, தம் இனத்தாரால் சாதிநீக்கம் செய்யப்பட்டார். வணவ அந்தணருக்குரிய ஆசார அனுஷ்டானங்களையும், நெற்றியில் திருமண் இட்டுக் கொள்வதையும் அவர் இளமையிலே விட்டொழித்தார். பாரதியாரைப் பின்பற்றிப் பூணூலையும் நீக்கிவிட்டார். தம்முடைய சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளுக்கு இந்தப் புறச்சின்னங்கள் தடை என்று அவர் நினைத்தார். இராமானுசரிடம் மெய்யான ஈடுபாடு ஈடுபாடு கொண்டு அன்பு, அஹிம்சை. பிறரின் துன்பம் கண்டு துடிக்கும் உள்ளம். கடையனுக்கும் கதிமோட்சம், உலகம் உய்ய வேண்டுமென்ற பெரு நோக்கின் காரணமாகத் தமக்குவரும் கெடுதலையும் எண்ணிப்பாராத ஆத்ம தியாகம் என்பவற்றை வ.ரா. வைணவ சமயத்தின் மெய்யான கொள்கைகளாக உணர்ந்து தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அவற்றையே தம் எழுத்துக்களில் எழுதிவந்தார். இந்த அடிப்படைப் பண்புகளே காந்தியக் கோட்பாடுகளுக்கும் இயைந்து வருவதை அவர் உணர்ந்தார்.

சீர்திருத்தவாதிகள், பிறருக்கு எடுத்துரைத்துவிட்டு. முரண்பாடாகத் தாம் இருப்பர். இது பெரும்பான்மையான வழக்கம், இதற்கு மாறாகச் சொல்லும் செயலும், எழுத்தும் நடப்பும் ஒன்றுபோல வாழ்ந்தவர் வரா. இந்தப் போக்கிலும் ராமானுசரே அவருக்கு வழிகாட்டி அவர் தம் வாழ்நாளில் ஏற்றத்தாழ்வு காட்டாமல் அனைவரிடமும் சமமாகப் பழகினார். எளியவர்களிடமும். தாழ்ந்தவர்களிடமும் அவர் க்ஷேம லாபங்கள் விசாரிக்கும் தோரணை ஒரு அருங்கலை. ஒரு வரியில் சொல்லப்போனால் வ.ரா. மனிதாபிமானம் நிறைந்த பூர்ண கலசம் (வரா. வாசகம், ப.XXVI) என்று அவருடன் நெருங்கிப் பழகிய மணிக்கொடி மணிக்கொடி ஸ்ரீனிவாசன் கூறுவது இதனை வலியுறுத்தும்.

சாதி வேறுபாடுகள் நீங்க இளைஞர்கள் கலப்புமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை வ.ரா. தம்முடைய நாவல்களில் வலியுறுத்தினார் என்று முன்னர்க் கண்டோம். வ.ரா. எழுதியது மட்டுமல்லாமல், தாமே கலப்புத் திருமணம் புரிந்துகொண்டார். அவர் கலப்பு மணம் செய்து கொண்டிருக் கிறார் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அவருடைய கொள்கையில் அவருக்குள்ள உறுதிக்கு அது ஒரு நிரந்தரச் சின்னமாய் இருக்கிறது. தாம் சொல்லுகிறபடி வரா. செய்து காட்டுகிறபடியால் சமூகச் சீர்திருத்த விஷயமாக அவர் எழுதும் எழுத்துக்களுக்குத் தனி வேகமும் மதிப்பும் இருக்கின்றன (வரா, டிஎஸ். சொக்கலிங்கம், குமரிமலர், ப. 22) என்று அவருடைய நெருங்கிய சகாவான பத்திரிகையாளர் திரு டி.எஸ். சொக்கலிங்கம் கூறுவது இங்கு உணரத்தக்கது. சொல்லும் செயலும் ஒன்றென இருந்ததால் தான் அவரை. அறிஞர் அண்ணா அக்கிரகாரத்தில் உதித்த அதிசயப்பிறவி (திராவிட நாடு 2.3.1951) என்று கொண்டாடினார்.

அடிமை இந்தியாவில் பழமையில் மூழ்கி, அச்சத்துடன். மூடநம்பிக்கையும் கொண்டு கோழையாக வாழ்ந்து வந்த மக்களின் போக்கை அவர் தொடர்ந்து சாடினார். தம்முடைய எழுத்துக்களில், பழமொழிகளையும், தொடர்களையும், பேச்சு வழக்கிலுள்ள சொலவடைகளையும் இந்த நோக்கில் விமர்சனம் செய்தார். அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் என்ற வரிக்கு அவர் கூறும் விளக்கம் (கலையும் கலை வளர்ச்சியும், ப100) இதை வலியுறுத்தும். நேரடி உரையாடலில் இதேபோல் அவர் புதிய விளக்கம் சொல்லுவார். ‘வாசல்படி இடித்து விட்டது. முள் தைத்துவிட்டது என்று யாராவது சொல்லு வதைக் கேட்டால் பொல்லாத கோபம் வந்துவிடும். ஆம். ஆம். இவர் ஜாக்கிரதையாகத்தான் போனார்; வாசற்படி குனிந்து இவரை இடித்துவிட்டது. இவர் ஜாக்கிரதையாக நேர் வழியாகத்தான் போனார்; முள் ஓடோடியும் வந்து இவர் காலின் கீழே போய் தைத்துவிட்டது என்று நையாண்டி செய்வார்”.(வ.ரா. வாசகம். XVIII) என்று ஸ்ரீனிவாசன் கூறுவது இதனை வலியுறுத்தும் மழையும் புயலும், கலையும் கலை வளர்ச்சியும். புண்ணியமும் பலவீனமும் போன்ற கட்டுரை நூல்களில் இத்தகைய புது விளக்கங்கள் நிறைய உள்ளன. இவை வரா.வினுடைய வெளிப்படையாகப் பேசும் பண்பை நமக்குக் காட்டுகின்றன.

நாடு அடிமைப்பட்டுக் கிடந்த நேரத்தில் நகைச்சுவை கலந்த பத்திரிகை எழுத்தை அவர் கடுமையாகச் சாடினார். இந்த வாழ்க்கை நோக்குத்தான். வ.ரா. மணிக்கொடிக்குப் பொறுப்பேற்றபொழுது, இலக்கியத்தின் நோக்கம், சமூகச் சீர்திருத்தமும், அடிமையாகிப் போன மனிதனின் மனத்தில் அச்சத்தைப் போக்கி சிந்தனையைப் பெருக்குவதும் ஆகும் என்று எழுத உதவியது நாடு அடிமைப்பட்டுக்கிடக்கிறது. சமூகம் கட்டழிந்து அழுகி மடிகிறது. விகடமென்ன ஐயா. வேண்டிக் கிடக்கிறது விகடம் என்று வ.ரா. கடிந்து கொள்ளுவார் (வ.ரா. வாசகம், ப. XIV). இந்த நோக்கத்தில் தான் பரதநாட்டியத்தில் காணப்பட்ட இன்பச் சுவைமிக்க சிருங்கார ரஸம்) பாடல்கள், அபிநயம் இவற்றைக் கடுமை யாகச் சாடினார் (மழையும் புயலும், ப. 134). திருவையாற்றுக்கு மிக அருகில் வாழ்ந்தும், தியாகராஜ இசை உற்சவத்திற்கு அவர் செல்லாததற்கும் இதுவே காரணம். இசையை வெறுத்தார் என்பதல்ல பொருள்; அடிமை நாட்டில், வீரத்திற்கும் நாட்டுப் பற்றிற்கும் தூண்டுதலாக இல்லாத. பொருள் புரியாத பாட்டால் பயனில்லை என்பது அவர் கொள்கை. ஆனால் பாரதி பாட்டைப் பிறரைப் பாடச் சொல்லிக்கேட்டு மகிழ்வார். (சங்கு சுப்பிரமணியன். மணிக்கொடி அலுவலகத்தில் பாரதியின் ஊழிக் கூத்தைப் பாடியபோது வரா. பாராட்டியது இதற்குச் சான்று). (பி.எஸ்.ராமையா, மணிக்கொடிக்காலம், ப.56)

தம்முடைய போலித்தனமில்லாத வெளிப்படையான பண்பிற்கு ஏற்ப, தம் எழுத்து நடையையும் அவர் அமைத்துக் கொண்டார். எளிய நடை, அதுவும் ஓரளவு தமிழில் எழுதப்படிக்கத்தெரிந்த, ரிக்ஷாக்காரனுக்கும் புரியும் தமிழில் எழுதவேண்டுமென்பது அவர் கொள்கை. இதனால் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பண்டிதத் தமிழ் நடையை அவர் கடுமையாகச் சாடினார். ஆனால் அதே நேரத்தில் ஆங்கில மோகத்தை கடுமையாகச் சாடினார். பிறமொழிகளிலுள்ள புதியனவற்றைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதும் அவருடைய கொள்கையாகும். அவரே வங்காளம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து நிறைய மொழிபெயர்த்தார். அத்துடன், நடைச்சித்திரம் என்ற புதிய இலக்கிய வகையையும், ‘உயர் கற்பனை’ (Utopian ) என்ற நாவல் வகையையும் தமிழுக்கு முதன் முதலில் அவர்தான் அறிமுகஞ் செய்தார். அதுபோல, சென்னை வானொலி நிலையத்தில், மாறுபட்ட இரண்டு இலக்கிய, புராணக் கதைமாந்தர்களைச் சந்திக்க வைத்து அவர்களின், உரையாடலைச் ‘சுவர்க்கத்தில் சம்பாஷணை என்ற புதிய இலக்கிய வடிவமாகவும் அறிமுகஞ் செய்தார்.

மனிதர்களில் உழைப்பை மட்டுமே அவர் போற்றினார். உழைக்காமல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சோதிடம், சகுனம், ஜாதகம், அதிர்ஷ்டம், வினைப்பயன் என்று பேசும் பழம்போக்கை மிகக் கடுமையாகச் சாடினார். மழையும் புயலும் தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் இதனைக் காட்டும். நாடு அடிமைப்பட்டுப் போனதற்கு இத்தகைய பழமைப்போக்கே காரணம் என்பது அவருடைய அழுத்தமான நம்பிக்கை. இந்த நோக்கத்தில், உழைத்து முன்னேறிய பலதுறை சார்ந்த பெரிய மனிதர்களைத் ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்ற பெயரில் அவர் அறிமுகப்படுத்தி எழுதிய நூல் அமைந்திருப்பது அறியத்தக்கது. எந்தத் தரப்பில் இருந்தாலும் அவர்களை இந்த நோக்கத்திற்காக வ.ரா. பாராட்டியமையும். அப்பெரியார்கள் வேறு சமயங்களில் தவறான நிலைப்பாட்டை மேற்கொண்ட போதில் வ.ரா. கடுமையாகச் சாடியதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். ராஜாஜியைத் ‘தமிழ்ப் பெரியோர்கள்’ நூலில் பாராட்டிய வ.ரா. பாரதியாரை வேதாந்தக் கவி என்று ராஜாஜி கூற முற்பட்ட போது அதை எதிர்த்த போக்கையும் இதற்குச் சான்றாகக் கூறலாம்.

வ.ரா. தம்முடைய வாழ்நாள் முழுவதிலும் இளம் எழுத்தாளர்களைத் தூண்டி உற்சாகப்படுத்திப் பாராட்டினார். மணிக்கொடியில் பணியாற்றிபோது, அவர் மணிக்கொடிப் பரம்பரை என்ற இளைஞர் கூட்டத்தையே உருவாக்கினார். பி.எஸ். ராமையா, புதுமைப்பித்தன், குப. ராஜகோபாலன். ந பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா. சிட்டி, ந.சிதம்பர சுப்பிரமணியன், தி.ஜ.ரங்கநாதன் போன்ற பலருக்கும் வ.ரா.வே வழிகாட்டி. வ.ரா. கலிஸ்தீனஸ் (முப்பதுகளில் ‘மான்செஸ்டர் கார்டியன் என்ற ஆங்கில வாரப் பத்திரிகையில், தம்முடைய கம்பெனி விளம்பரத்திற்காக எழுதிய ஒருவர். தம்முடன் உள்ள ஒவ்வொருவரையும் மிகுதியாக உற்சாகப்படுத்தி எழுதினார். அவருடைய புனைபெயர் கலிஸ்தீனஸ்) வேலையை மேற்கொண்டார். அவரிடம் போகும் இளம் எழுத்தாளர்கள். சில நிமிஷங்கள் அவரிடம் பேசினால் போதும். தாங்கள் ஆகாயத்தில் மேகங்களுக்கிடையே சஞ்சாரஞ் செய்யும் ஆனந்தத்தை அனுபவிப்பதுபோல நினைப்பார்கள். அவ்வளவு தூரம் அவர்களை உற்சாகமூட்டுவார். அவர்களுடைய எழுத்துக்களிலுள்ள சிறந்த அம்சங்களை எடுத்துக்காட்டி, அவர்களுக்குப் புதிய ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுப்பார். இன்று தமிழ் நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் மிகப் பெரும்பான்மையோர். அவருடைய கலிஸ்தீனஸ் கொள்கையால் முன்னுக்கு வந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும்” (வ.ரா., டி.எஸ் சொக்கலிங்கம், குமரிமலர் பக். 19,20) என்பது இங்கு அறியத்தக்கது. இவர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் எழுத்துத் துறையிலிருந்த பலருக்கும் வ.ரா. வழி காட்டினார். கல்கியின் முதல் நாவல் ‘விமலா வைத் தம்முடைய சுதந்திரன் இதழில் 1920 இல் வ.ரா. வாங்கி வெளியிட்டார். இதே போல. பல இளம் எழுத்தாளர்களின் நூல்களுக்கு வ.ரா. முன்னுரை கொடுத்ததும் இங்கு அறியத்தக்கது. கொத்தமங்கலம் சுப்பு, தி.ஜ.ர. சுதேசமித்திரன் சி.ஆர்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் நூல்களுக்கு அவர் முன்னுரை தந்து ஊக்கப்படுத்தினார்.

எழுத்து. சொல், செயல் ஆகிய அனைத்தும் ஒன்றுபோல வாழ்ந்த வ.ரா. பாரதியாரால் ‘உரைநடைக்கு வ.ரா’ என்று தமிழர்களுக்குச் சரியாக அடையாளம் காட்டப்பட்டு, தம் எழுத்துப் பணியைத் தொடங்கி, பாரதியின் கூற்றைத் தம் வாழ்நாளிலே மெய்ப்பித்தார். தேசப்பற்று, மக்கட் சமூக

விடுதலை, பெண்ணுரிமை, தமிழ் மொழி மேன்மை என்ற அடிப்படைக் கோட்பாடுகளைத் கோட்பாடுகளைத் தம் படைப்புக்களில் தொடர்ந்து வெளிப்படுத்தினார். பாரதி புகழ் பாடிய வ.ரா., பாரதியாரின் பெயர் உள்ளளவும் தமிழர்களின் நெஞ்சில் நிலைத்து வாழ்வார்.

பிற்சேர்க்கை

வ.ரா.வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்

1889 – செப்டம்பர் 17-இல் தஞ்சை மாவட்டம் திங்களூர் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர்: வரதராச ஐயங்கார், பொன்னம்மாள். வ.ராமசாமி என்பது இயற்பெயர். மூத்த பிள்ளை இவரே. உடன்பிறந்தவர் எழுவர். இளமைக் கல்வியை அருகிலுள்ள உத்தம் தானபுரத்தில் பயின்றார். திருவையாறு உயர்நிலைப் பள்ளியில் பயின்று மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். (1905). தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் எப்.ஏ. பயின்று தேர்வில் தோல்வியுற்றார். கல்கத்தாவில் சுரேந்திர நாத் பானர்ஜி நடத்திய கல்லூரியில் சேர்ந்து பயிலச் சென்றார். தக்கார் பரிந்துரையின்மையால். சேரவியலாமல் ஊர்திரும்பினார்.

1910 – காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு நாட்டு விடுதலைக்காக இளமை முதல் உழைத்தார். கல்லூரி நாட்களிலே ‘வந்தே மாதரம்’ முழக்கமிட்டு, கல்லூரி முதல்வரால் தண்டனை பெற்றவர் வ.ரா. அலகாபாத் நகரில் காங்கிரசு மாநாட்டில் வ.ரா. கலந்துகொண்டார்.

1911 -ஜூன் மாதம் புதுவை சென்றார். ஸ்ரீரங்கம் கொடியாலம் ரங்கசுவாமி ஐயங்கார் என்னும் தேசபக்தரின் வேண்டுகோளின்பேரில் அரவிந்தரைக் காணப் புதுவை சென்றார். சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக இருந்த வி.கிருஷ்ணசாமி ஐயர் அந்த நாட்களில் பாரதியாரின் (சுதேசகீதங்களை) தேசியப்பாடல்களை இரு பகுதிகளாக அச்சிட்டு இருந்தார். அவற்றைப் படித்து முன்னமே ஈடுபட்டிருந்த வ.ரா.விற்குப் புதுவை செல்வதால் பாரதியாரைத் தரிசனம் செய்யலாம் என்று விரும்பினார்.

பாரதியாரைச் சந்தித்தார். தம் குருவாக வரித்தார். தேசியம், சமூகச் சீர்திருத்தம், பெண் விடுதலை, தமிழ் மொழிப்பற்று என்ற கருத்தாக்கங்களுக்கு வ.ரா.விற்குப் பாரதியாரே வழிகாட்டி. அங்கு அரவிந்தரைச் சந்தித்தார்.1911 முதல் 1914 ஜனவரி முடிய புதுவையில் பாரதியாருடனும் அரவிந்தருடனும் இருந்தார்.

1914 – ஜனவரியில் புதுவையிலிருந்து சொந்த ஊர் திரும்பினார் வ.ரா. (21.01.1914)

1914 – பிப்ரவரியில் வரா.வின் முதல் இலக்கியப் படைப்பான ஜோடிமோதிரம் என்ற மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்தது. பங்கிம் சந்திரரின் ‘யுகல் ஆங்கவையா என்ற வங்காளி நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. புதுவையில் இருந்த காலத்திலேயே வ.ரா.வால் மொழியெயர்க்கப்பட்டு, அரவிந்தர், பாரதி இருவராலும் பாராட்டப்பெற்றது. ஆயின் 1914-இல் தான் வெளிவந்தது.

1914 – அக்டோபரில் திருச்சியில் டாக்டர் ராஜனிடம் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்றார். மருத்துவரின் பரிந்துரையின்படி சென்னையில் சில காலம் வசித்தார்.

1915 – ஆகஸ்ட் முதல் 1916 மார்ச் வரை சுந்தரி என்னும் வ.ராவின் முதல் நாவல் உருப்பெற்று எழுதி முடிக்கப் பெற்றது.

1917 – டாக்டர் ராஜனின் பொருள் உதவியுடன் சுந்தரி நாவல் அச்சாகி வெளிவந்தது. சுந்தரி அல்லது அந்தரப் பிழைப்பு என்பது பெயர். ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பெற்று மூன்றே மாதங்களில் யாவும் விற்பனையாகும் அளவிற்கு வரவேற்பைப் பெற்ற நாவல்.

1919 – காந்தியடிகள் – மகாகவி பாரதி சந்திப்பின்போது வ.ரா. உடனிருத்தல். பின்னர் இந்த நிகழ்ச்சியை வரா.தான் முதன் முதலாக எடுத்துரைத்தார்.

1919 – மார்ச் -அமிர் தசரசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லல்.

1920 – ‘சுதந்திரன்’ என்ற சொந்த இதழை நடத்தினார். கல்கியின் முதல் நாவலான ‘விமலா’வை வ.ரா. இந்த இதழில் வெளியிட்டார்.

1920 – புனாவில் இராணுவக் கணக்கு அலுவலகத்தில் சிலமாத காலம் பணிபுரிந்து பின் தம் ஊர் வரல்.

1920 – டாக்டர் வரதராஜூலு நாயுடு நடத்திய தமிழ் நாடு நாளிதழில் பணிபுரிதல்.

1924 – காரைக்குடியிலிருந்து வந்த சமரசபோதினி இதழில் பணியாற்றுதல். சொ.முருகப்பாவின் குமரன்’ இதழில் எழுதினார்.

1925 – சென்னையிலிருந்து வெளியான தமிழ் சுயராஜ்யா’ இதழில் பணிபுரிதல்.

1927 – 1928 -காரைக்குடியில் இருந்து வெளியான ஊழியன் இதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிதல். ஊழியன் இதழில் நிறையக் கட்டுரைகளை எழுதினார். மாயாமேயா என்ற மறுப்புநூல் எஸ்.எஸ்.வாசனால் வாசன் புத்தக சாலை வெளியீடாகக் கொண்டு வரப்பட்டது.

1929 – மானாமதுரையில் தொடர் வண்டிப்பாதை அமைக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்தார்.

1930 – உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்று அலிப்பூர் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து போது What is poetry என்ற நீண்ட ஆங்கிலக் கட்டுரையை எழுதினார். சிறையிலிருந்த போது வேறு சில கட்டுரைகள், கதை கள். ஜெயில் டைரி இவற்றையும் எழுதினார்.

1933 – செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி கு.ஸ்ரீனிவாசன். டி.எஸ்.சொக்கலிங்கம். வ.ரா. மூவரும் இணைந்து மணிக்கொடி இதழைத் தொடங்கினர். மணிக்கொடி இயக்கம் என்ற தீவிர இலக்கிய இயக்கத்திற்கு வ.ரா.தலைமை ஏற்று வழிகாட்டினார்.

1934 – அக்டோபர் – மணிக்கொடியிலிருந்து விலகல்.

1935 – இலங்கை சென்று வீரகேசரி இதழுக்கு உதவி ஆசிரியராகப் பணியாற்றல். நேரு வாழ்க்கை வரலாறு, பர்டோலிக் கதை போன்ற படைப்புகள் வெளிவரல்.

1936 – மே மாதம் – இலங்கையில் புவனேசுவரி அம்மையாரை மணம் செய்து கொள்ளுதல். மகாகவி பாரதியார்’ இலக்கிய விவாதத்தில் ஈடுபட்டு. தொடர்ந்து எழுதுதல்.

1937 – சென்னை திரும்புதல், சென்னையில் அகில இந்திய வானொலி நிலையத் தொடக்கம் – தொடர்ந்து வானொலியில் உரையாற்றல்.

1938 – ‘தமிழ்நாடு’ நாளிதழில் பணியாற்றுதல். ஜூலை மாதத்தில் ‘பாரததேவி’ என்னும் இதழுக்கு ஆசிரியராதல்.

1940 – வாழ்க்கைச் சித்திரம் நூல் வெளி வருதல்.

1941 – அக்டோபர் 2 ‘நவயுகம்’ இதழுக்கு ஆசிரியராதல்

1942 – சின்னச்சாம்பு நாவல் வெளிவரல்.

1943 – தமிழ்ப் பெரியார்கள், மழையும்புயலும், ஜப்பான் வருவானா? ஆகிய நூல்கள் வெளிவரல்.

1944 – கோவையில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுதல். திருப்பழனத்தில் தந்தையாரின் மறைவு. விஜயம், மகாகவி பாரதியார். கற்றது குற்றமா ஆகிய நூல்கள் வெளிவரல்.

1945 – கோதைத்தீவு நாவல் வெளிவரல்.

1946 – சென்னையில், சிறை சென்று மீண்டோர் சங்கத்தில் சேருதல்.

1947 – வாழ்க்கை விநோதங்கள், கலையும் கலைவளர்ச்சியும். நூல்கள் வெளிவரல்.

1948 – மார்ச்சு, 11 – பாரதி விடுதலைக் கழகம்’ உருவாதல், வ.ரா.இதற்குத் தலைவரானார். பாரதி பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டியதன் தேவையை முதல் நோக்கமாகக் கொண்ட அமைப்பு.

1948 – செப்டம்பர் 11 ஆம் நாள் எட்டயபுரத்தில் நடைபெற்ற முதலாவது பாரதியார் விழாவில் கலந்து கொள்ளல். (புண்ணியமும் பலவீனமும் நூல் வெளிவரல்). அக்டோபர் மாதம் சென்னையில் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராசர் தலைமையில் வ.ரா.வுக்கு மணிவிழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் வழங்கப்பட்ட பணமுடிப்பைக் கொண்டு சென்னையில் சொந்த வீடு வாங்கி அதில் குடியேறினார்.

1949 – அக்டோபர் 10ஆம் நாள் சாலை விபத்தில் சிக்கி இடுப்பு எலும்பு முறிந்தது. முன்னமே ஆஸ்துமா நோயினால் போராடி வந்தவருக்கு இந்த விபத்து இன்னும் சுமை ஆயிற்று; எழுத்துப் பணி தொடரல்.

1951 – ஆகஸ்ட் 29ஆம் நாளன்று பகல் உணவிற்குப் பிறகு வழக்கம்போலக் கண்ணயர்ந்த வ.ரா. மீண்டும் கண் விழிக்காமலேயே தம்முடைய 62ஆம் வயதில் மறைந்தார்.

வ.ரா.வின் நூல்கள்

நாவல்கள்

1. சுந்தரி – ராயவரம், பவானி பிரசுரம், 1946 (இரண்டாம் பதிப்பு). சென்னை, அல்லயன்ஸ் 1990 (மறு பதிப்பு)

2. சின்னச்சாம்பு – சென்னை,ஜோதி நிலையம், 1942 (முதற்பதிப்பு). சென்னை, அல்லயன்ஸ் 1990 (மறு பதிப்பு)

3. விஜயம் – சென்னை, பாரதி பதிப்பகம். 1956 (இரண்டாம் பதிப்பு). சென்னை, அல்லயன்ஸ், 1990 (மறு பதிப்பு)

4. கோதைத்தீவு – திருச்சி, புத்தக நிலையம் 1945, (முதற்பதிப்பு).

சிறுகதை

5. கற்றது குற்றமா? – திருத்துறைப்பூண்டி, கஸ்தூரி பதிப்பகம், 1944 (முதற்பதிப்பு). சென்னை, அல்லயன்ஸ், 1970, (மறு பதிப்பு)

வாழ்க்கை வரலாறு

6. மகாகவி பாரதியார் – சென்னை, பழனியப்பா பிரதர்ஸ், 1968 (ஏழாம் பதிப்பு)

வாழ்க்கைச் சித்திரம்

7. நடைச்சித்திரம் சென்னை, நவயுகப்பிரசுராலயம். 1940. (முதற்பதிப்பு). சென்னை அல்லயன்ஸ், 1990 (மறு பதிப்பு)

8. வாழ்க்கை வினோதங்கள் – திருத்துறைப்பூண்டி. கஸ்தூரி பதிப்பகம், 1947, (முதற்பதிப்பு), வாழ்க்கை விநோதங்கள், சென்னை, அல்லயன்ஸ், 1990 (மறுபதிப்பு)

9. தமிழ்ப்பெரியார்கள் சென்னை, தமிழ்ப்பண்ணை 1943 (முதற்பதிப்பு). சென்னை, அல்லயன்ஸ், 1990 (மறு பதிப்பு)

கட்டுரை நூல்கள்

10. மழையும் புயலும் சென்னை,நவயுகப் பிரசுராலயம், 1943. (முதற் பதிப்பு). சென்னை, அல்லயன்ஸ், 1990 (மறு பதிப்பு. (இந்த நூலில் புண்ணியமும் பலவீனமும் என்ற நூலும் இணைக்கப்பட்டு இப்பதிப்பு வெளிவந்துள்ளது).

11. புண்யமும் பலவீனமும் திருத்துறைப்பூண்டி, கஸ்தூரி பதிப்பகம், 1948 (முதற்பதிப்பு) (1990-ஆம் ஆண்டில், அல்லயன்ஸ் பதிப்பில் புண்ணியமும் பலவீனமும் என்றுள்ளது.)

12. கலையும் கலைவளர்ச்சியும் ராமச்சந்திரபுரம். கார்த்திகேயினி பிரசுரம், 1947 (முதற்பதிப்பு). சென்னை, அல்லயன்ஸ், 1990, (மறு பதிப்பு)

13. வசந்தகாலம் – சென்னை, எழுத்து பிரசுரம், 1964, (முதற்பதிப்பு). சென்னை, அல்லயன்ஸ் 1990, (மறு பதிப்பு)

14. சுவர்க்கத்தில் சம்பாஷணை – சென்னை, எழுத்து பிரசுரம், 1964, (முதற்பதிப்பு). (இப்பதிப்பில் சொர்க்கத்தில்’ என்றே தலைப்புள்ளது. அல்லயன்ஸ் பதிப்பில் ‘சுவர்க்கத்தில்’ என்றுள்ளது). சுவர்க்கத்தில் சம்பாஷணை சென்னை அல்லயன்ஸ் 1990, (மறு பதிப்பு)

15. வ.ரா.வாசகம் சென்னை, வாசகர் வட்டம், 1968, (முதற் பதிப்பு). சென்னை, அல்லயன்ஸ் 1990 (மறு பதிப்பு)

பிற நூல்கள்

அரசியல்

16. காங்கிரஸ் ஆட்சி -சென்னை, காங்கிரஸ் சட்டசபைக் கட்சி, 1938 (முதற்பதிப்பு)

17. ஆண்டு நிறைவு (ஒரு வருஷ காங்கிரஸ் ஆட்சி). சென்னை. காங்கிரஸ் சட்டசபைக்கட்சி 1938, (முதற்பதிப்பு)

மொழிபெயர்ப்பு

18. ஜோடி மோதிரம் – லோகோபகாரி’ (பரலி சு.நெல்லையப்பர்), சென்னை. 1938.

19. ஜவஹர்லால் சுயசரிதம் இரண்டு தொகுதிகள். சென்னை. சுதந்திரச் சங்கு காரியாலயம், 1935.

20. பர்டோலிக் கதை – (மகாதேவதேசாய் எழுதியது). சென்னை, சுதந்திரச் சங்கு காரியாலயம், 1935.

21. நமது இந்தியா (மினுமசானி எழுதியது), சென்னை, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ், 1943 (இரண்டாம் பதிப்பு)

கொள்கை விளக்க நூல்

22 ஜப்பான் வருவானா? – சென்னை, தமிழ்ப் பண்ணை பதிப்பகம், 1943.

மறுப்பு நூல்

23. மாயாமேயோ அல்லது மேயோவுக்குச் சவுக்கடி. சென்னை, வாசன் புஸ்தகசாலை, 1928.

நூலாக வெளிவராமல் இதழ்களில் மட்டும் இடம்பெற்ற வராவின் படைப்புக்கள்

கட்டுரைகள்

1. ‘பாரதியும் இலக்கிய மதிப்புரையும்’, சுதேசமித்திரன், 30.11.35, சென்னை

2. ‘பாரதியும் இலக்கிய மதிப்புரையும்’, சுதேசமித்திரன், 15.12.1935.

3. வேதாந்தச் சிமிழிலே அடைக்க வேண்டாம்” – காந்தி. 1934.

4. உலக மகாகவி பாரதியார், தினமணி, 10.09.1940.

5. பாரதியார், -ஊழியன், 31.08.26

6. ஒளவை-ஆண்டாள்; – ஊழியன், 26.10.26.

7. ‘ஐம்பது வருஷங்களுக்கு முன்”, ஆனந்த விகடன் (6 பகுதிகள்), 1943, சென்னை.

8. ‘பெண்கள் விடுதலை சபை’, தினமணி, 1.10.1941, சென்னை.

9. ‘உண்மையான பெரியோர்கள்’, தினமணி, 25.4.1943. சென்னை.

10. “What is poetry” The Indian Review” PP. 37-44, August 1982, PP. 33-47, September, 1982.

சிறுகதைகள்

1. கோகிலத்தின் குதர்க்கம், இலக்கியச் சிந்தனை. சென்னை, 1984.

2. ‘கோட்டை வீடு, கதைக்கோவை, தொகுதி சென்னை, அல்லயன்ஸ் கம்பெனி, 1942.

3. கட்டைவண்டி அல்லது பரதர அரசர்” மணிக்கொடி 1933 சென்னை.

4. விதவை யமுனாபாய், மணிக்கொடி, 13.5.1934.

5. ‘காளிதாசன்,ஊழியன், 29.6.26, 6.7.26, 20.7.26, 23.11.26.

– சு.வேங்கடராமன், இந்திய இலக்கியச் சிற்பிகள் வ.ரா (வ.ராமசாமி), சாகித்திய அக்காதெமி, முதல் வெளியிடு: 1993.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *