‘புத்தொளி’ – பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.
எவரும் எளிதிற் பழகுவதற் கேற்ற இனிய பண்புகள் நிறைந்த திரு. பொ.சண்முகநாதன் சங்குவேலியைச் சேர்ந்தவர். இன உணர்ச்சியும் தமிழுணர்ச்சியும் மிக்கவர். நாடறிந்த நல்ல நகைச்சுவை எழுத்தாளர்.
‘கொழும்புப் பெண்’ என்ற இவரது முதலாவது நகைச்சுவைக் கட்டுரைத் தொகுதி பேரறிஞர் டாக்டர் மு.வரதராசனார், நாடோடி, ரீ.பாக்கிய நாயகம் போன்ற பிரபல எழுத்தாளர்களது சிறப்பான பாராட்டுதல் களைப் பெற்றுள்ளது.
‘சண்முகநாதன் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும் ஆவர்’ என்பதற்கோர் எடுத்துக்காட்டாக அவரது ‘வெள்ளரி வண்டி’ நூல் விளங்குகிறது.
‘பெண்ணே ! நீ பெரியவள் தான்!’ என்ற இந்நூல் ‘போனாச்சானா’ வின் மூன்றாவது நூல்- இரண்டாவது நகைச்சுவைக் கட்டுரைத் தொகுதி!
அஞ்சலி: எழுத்தாளர் பொ.சண்முகநாதன் மறைவு! – வ.ந.கி – 16 டிசம்பர் 2021
தனது எழுத்துகளால் நம்மையெல்லாம் குலுங்கிச் சிரிக்க வைத்த எழுத்தாளர் போனாச்சானா (பொ.சண்முகநாதன்) மறைந்து விட்டார். இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை எழுத்துக்கும் முக்கியத்துவமுண்டு. நகைச்சுவையென்றால் முதலில் நினைவுக்கு வருபவர்களிலிலொருவர் எழுத்தாளர் பொ.சண்முகநாதன். இவரது ‘கொழும்புப்பெண்’, ‘பெண்ணே நீ பெரியவள்தான்’ மற்றும் ‘வெள்ளரி வண்டி’ ஆகியவை முக்கியமான வெளியீடுகள்.
தமயந்தி பதிப்பகம் (அச்சுவேலி) வெளியிட்ட ‘பெண்ணே நீ பெரியவள்தான்’ இவரது நகைச்சுவைக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. வாசித்துப்பாருங்கள். சிரித்து மகிழுங்கள். நூலகம் தளத்தில் இந்நூலினை வாசிக்கலாம். அழகான அட்டைப்பட ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் வி.கனகலிங்கம் (வி.கே). நூலின் தலைப்புக்கேற்ற ஓவியம். பெரிய பெண்ணை அண்ணாந்து பார்க்கும் ஆணின் ஓவியம். அட்டைப்படமே நூலினை வாசிக்க வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.
தரமான நகைச்சுவை இலக்கியம் எவ்விதம் படைக்கப்பட வேண்டுமென்பதற்கு நல்லதோர் உதாரணப்பிரதியாக இத்தொகுதியை என்னால் கருத முடிகின்றது.
இவரை நான் ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. இவரது எழுத்துகள் மூலமே இவர் எனக்கு அறிமுகமானவர். முகநூலில் முன்பொருமுறை இவரைப்பற்றிய குறிப்பொன்றினையிட்டபோது அதனைத் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதுடன் எனக்கும் முகநூல் நட்புக்கான அழைப்பினை அனுப்பி நண்பராக ஏற்றுக்கொண்டிருந்தார்.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளிலொருவரான இவரது மறைவால் வாடும் அனைவர்தம் துயரில் நானும் பங்குகொள்கின்றேன்.
மதிப்புரை – பெண்ணே! நீ பெரியவள்தான்! – செங்கை ஆழியான் – 15-6-71
‘சிரிப்பதற்கு மட்டுமே நகைச்சுவை’ என்ற கருத்து ஏற்றதாகாது; நகைச்சுவை சிந்திப்பதற்கு முரியதாக அமைய வேண்டும். வாசகனின் மனதில் அவலச்சுவையை ஏற்படுத்தி, தான் சொல்ல விரும்பும் கருத்தைப் பதியவைப்பதிலும், வாசகனின் மனதில் உவகைச்சுவையை ஏற்படுத்தி தான் விரும்பும் கருத்தைப் பதிய வைப்பது சிறப்பானது; முன் னது கப்பல் உடைந்து மரணப் போராட்டத்தில் தவிப்ப வனுக்கு உயிர்தப்பக் கைக்கெட்டும் மரக்குற்றி போன்றது; பின்னது பாலைவனத்திடையே இளைப்பாற உதவும் பசுஞ் சோலையைப் போன்றது. இரண்டும் அவசியமே.
இந்த அளவுகோலைக் கொண்டு அன்பர் பொ. சண் முகநாதனின் இந் நகைச்சுவை நூலைப் படித்தேன்.
- சண்முகநாதனின் இந்நூல் படிப்போருக்கு உவகையை ஏற்படுத்தக்கூடியது.
- படித்து முடித்ததும் மன நிறைவைத் தரக்கூடியது.
- படிக்கும்போது ஒருவிதமான ‘சொகுசு’ம் களிப்பும் ஏற்படுகிறது.
- சிரிப்பதற்கு மட்டுமன்றி சிந்திப்பதற்குமுரிய அரிய கருத்துக்கள் இந்நூலிலுள்ளன.
- சண்முகநாதனின் நகைச்சுவைகளில், சிறிது ஏளனமும் கலந்திருக்கிறது.
எழுத்தாளன் சமூகத்தைப் பொறுப்போடு நோக்கி எழுதவேண்டும்; சமூகத்தின் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டும் போதோ, சமூகத்தை தக்க வழியில் முன் நடத்தும்போதோ அவனது எழுத்தில் பொறுப்புணர்வு இருக்கவேண்டும். பொ.சண்முகநாதனின் இந்நகைச்சுவை நூல், சமூகத்தைப் பொறுப்புணர்வோடு நோக்கியே எழுதப்பட்டிருக்கின்றது. இந்நூலில் சமூகச்சீர்கேடுகள், தனிமனிதரின் குணவியல் புகள் (தனிமனிதரின் அறியாமையல்ல) ஆகிய இரண்டுமே கருப்பொருளாக அமைந்துள்ளன. குடும்பாளுமன்றம். பிழைப்புக்குச் சில வழிகள், இதோ ஒரு பத்திரிகை, நாற்பது நிமிட நாடகம் என்பவற்றில் சமூகத்தின் சீர்கேட்டினையும், புலவர் பொன்னம்பலம் பேசுகிறார், கதைவாணன் கதை எழுதுகிறான், பக்கத்து வீட்டு ரேடியோ என்பனவற்றில் மனிதரின் குணவியல்புகளையும் நகைச்சுவையோடு வாசகனின் மனதில் ஆசிரியர் பதியவைக்கின்றார். இந்நூலிலுள்ள பாத்திரங்கள் வெறும் சிரிப்பிற்குரியனவாக மட்டுமில்லை; கனமான விடயங்களை வெகு இலகுவாக எழுத்தில் பொதித்துள்ளரர்.
- தாலியையும் அடைவுவைத்து ஈழத்தில், நூலொன்றை வெளியிடும் ஏழை எழுத்தாளனை. ஏமாற்றும் ‘இலக்கியத் தொண்டர்கள்’
- மதிப்பிற்குரியவர்களின் பெயரால் நிதி திரட்டி வாழும் ‘தமிழ்த் தொண்டர்கள்’
- பேசவேண்டிய விடயத்தைக் கை நழுவவிட்டு சுய புராணம் பாடும் பேச்சாளர் பொன்னம்பலம்
- பிரயாணியிடம் ஐந்து சதம் ஏமாற்றும் கொண்டக்டர்
- வகுப்பில் கல்வி கற்பிக்காது நேரம் போக்காட்டும் ஆசிரியர்
இப்படிச் சமூகத்தின் புரையோடிப் போன ‘பாகங்’களைச் சிரிப்பினூடே நமக்குக் காட்டும் போது, ஆசிரியரின் இதயம் அழுவதையும் புரிந்து கொள்ளலாம். படிக்கும்போது சிரிக்கின்ற நாம், சிந்திக்கு போதும் அழுகின்றோம்.
ஆபாசம், அங்கவீனம் ஆகிய இரண்டும் நகைச்சுவைக்குரிய கருப்பொருட்களாக இருக்கக் கூடாது என்ற எண்ணமுடையவன் நான்; சண்முகநாதனும் இக்கருத்துடையவர் போலும். அதனால் தான் இந்நூலில் இவை இரண்டுமில்லாதுள்ளன. ஆபாசத்தை நகைச்சுவையோடு கூறும்போது விரசமும், அங்கவீனத்தை நகைச்சுவையோடு கூறும்போது ஏளனமும் துயரமும் ஏற்படுகின்றன. அதீத கற்பனைகள் நகைச்சுவைக்குரியனவே,
நகைச்சுவை எழுத்தாளன் ஒன்றை மனதில் பதிய வைத் துக்கொள்ளவேண்டும். சமூகத்தின் ஒரு கூட்டத்தைப் பொதுப்பட ஏளனம் செய்யக்கூடாது; ஆனால் அக்கூட்டத்தின் ஒரு பாத்திரத்தை ஏளனம் செய்யலாம். பெண்களைப் பொதுப்பட ஏளனம் செய்யக்கூடாது. ஆனால், ஒரு கமலாவையோ விமலாவையோ நகைச்சுவைப் பாத்திரமாக்கலாம்!
ஆசிரிய கூட்டத்தைப் பொதுப்பட ஏளனம் செய்யக்கூடாது. ஆனால், யாராவது ஒரு ஆசிரியரை ஏளனத்துக்குரிய பாத்திரமாக்கலாம்.
சண்முக நாதனின் எழுத்து நடை வாசிப்போருக்குக் களைப்பை உண்டாக்காது, படிப்போரைச் சோர்வடையச் செய்யாது. ஆற்றொழுக்காக அமைந்துள்ளது.
நகைச்சுவை வளரவேண்டிய கலை; சண்முகநாதன் போன்றோரால் தான் வளரவும் முடியும். சண்முகநாதனின் முதல் நகைச்சுவை நூலான ‘கொழும்புப் பெண்’ணை அடுத்து இந்நூல் வெளிவருகின்றது. முதல் நூலிலும் பலமடங்கு வெற்றியைச் சண்முகநாதனுக்கு இந்நூல் தரும் என்றே நம்புகிறேன். வாழ்க. வளர்க!
என்னுரை – பெண்ணே! நீ பெரியவள்தான்!
சில மாதங்களுக்குமுன் ஒரு பெண்மணி என்னைக் கேட்டாள் –
“உங்களுடைய அடுத்த நூல் என்ன?”
“பெண்ணே! நீ பெரியவள்தான்!”
“அதைக் கேட்கவில்லை! நீங்கள் வெளியிடப்போகும் அடுத்த நூல்…?”
“அதைத்தான் சொன்னேன்! அப்படி ஒரு நகைச்சுவைக் கட்டுரைத் தொகுதிதான் என்னுடைய அடுத்த வெளியீடு.”
“அதாவது அப்படி நூலுக்குத் தலைப்பிட்டுவிட்டு உள்ளே எங்களையெல்லாம் ‘வாங்கு வாங்கு’ என்று வாங்கியிருப்பீர்கள். அப்படித்தானே?”
“என்னவோ அதைத்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்களே! அப்பொழுது எல்லாம் புரிந்துவிடுமே!”
“நான்தான் அதை வாங்கப்போவதில்லையே!”
“இரவல் வாங்கிக்கூடவா படிக்க மாட்டீர்கள்?”
“இல்லை! இல்லை! இல்லை! நீங்களும் உங்கள் நூலும்! உமக்குப் பெண்களை விட்டால் எழுதுவதற்கு வேறு பொருளே கிடையாதா? பெண்களைக் கேலிசெய்து எழுதுவதுதான் நகைச்சுவை என்ற நினைப்போ…?”
“பிரேக்’ – அதாவது கொஞ்சம் நிறுத்துங்கள். யார் அப்படிச் சொன்னது? அந்தநூலில் பெண்கள் பற்றிய- பெண்கள் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் ஆக இரண்டே இரண்டுதான் இடம்பெறப்போகிறது. ஏனைய பத்துக் கட்டுரைகளும் அநேகமாக ஆண்களையே கேலிசெய்து எழுதப் பட்டவைகள். என்னை நானே கேலி செய்து எழுதிய கட்டுரைகளும்கூட உண்டு.”
“இதெல்லாம் உண்மையா அல்லது யாவும் கற்பனையா?”
“யாவும் முழுக்க முழுக்க உண்மை! அதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம்.”
“அப்படியானால் நானும் நிச்சயமாக உங்களின் அந்த நூலை வாங்கிப் படிப்பேன்.”
‘பெண்ணே! நீ பெரியவள்தான்!’ என்ற இந்நூலுக்கு பெண்களிடையே ஆதரவு கிடைக்கமாட்டாது: தன்மானமுள்ள எந்த ஒரு பெண்ணும் இதனைத் தொடவும் மாட் டாள்’ என யாராவது சொன்னால் அது எவ்வளவு தவறான கருத்து என்பதை விளக்கவே மேற்படி பழைய சம்பவம் ஒன்றை இங்கு சொல்லிக் காட்டினேன்.
இந்நூலுக்கு ‘மதிப்புரை’ வழங்கியுள்ள பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியானையும்; நூலினை அச்சிட்டு வெளியிடும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நண்பர் புத்தொளி யையும், அட்டைப்படம் வரைந்து தந்துள்ள ஓவியர் திரு.வி.கனகலிங்கத்தையும் (வி.கே.) இந்த இடத்தில் நான் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். கலைச்செல்வி ‘சிற்பி’ ஐயா, எனது சகோதரன் திரு. ஆ.வினாயகமூர்த்தி, நண்பர் மா.கந்தசாமி ஆகியோர்களும் இந்த நூல் விவகாரத்தில் எனக்குப் பல வகைகளில் ஆலோசனைகளும் உதவிகளும் நல்கியுள்ளார்கள். இவர்களும் என் நெஞ்சில் என்றும் நீங்கா இடம்பெற்றவர்கள்.
இனி நீங்கள் உள்ளே போங்கள்! நான் விடைபெறு கிறேன்! வணக்கம்.
சங்குவேலி தெற்கு, மானிப்பாய் (இலங்கை)
அன்புள்ள,
பொ. சண்முகநாதன்
20-6-71.
– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.