தி.ஞானசேகரன்

 

தி.ஞானசேகரன்தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இச்சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[2] ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுபுதினம்களாகவும், புதினங்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.

இலக்கியப் படைப்புகள்

1960களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும் ஞானசேகரனது படைப்புகளில் 1977 இல் வெளிவந்த அவரது புதிய சுவடுகள் என்னும் புதினம் விதந்தோதத்தக்கது. அவரது குருதிமலை என்னும் நாவலும் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டவர், அவரது சிறுகதைகளும், குறு புதினங்களும், புதினங்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

இவரது நூல்கள்

  • கா. சிவத்தம்பி – இலக்கியமும் வாழ்க்கையும் (நேர்காணல்) – 2005
  • ஞானசேகரன் சிறுகதைகள் (சிறுகதைகள்) – 2005
  • அவுஸ்த்திரேலியப் பயணக்கதை (பயண இலக்கியம்)- 1999
  • புரிதலும் பகிர்தலும் (நேர்காணல்) – 1999
  • அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்)- 1998
  • கவ்வாத்து (குறும் புதினம்) – 1996
  • லயத்துச் சிறைகள் (புதினம்) – 1994
  • குருதிமலை (புதினம்) – 1979
  • புதிய சுவடுகள் (புதினம்) – 1977
  • காலதரிசனம் (சிறுகதைகள்) – 1973

தி. ஞானசேகரன் சிறுகதைகள் பற்றி…

காலதரிசனம் தொகுதியில் பல சிறந்த சிறுகதைகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்நூலாசிரியருக்கு ஈழத்து இலக்கிய உலகில் நல்லதோர் எதிர்காலமுண்டு என்பதை நிச்சயமாகக் கூறலாம். ‘கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும்’ என்ற சிறுகதை கலாபூர்வமான ஒரு சிறந்த சிறுகதை

இரசிகமணி கனக. செந்திநாதன்

(வீரகேசரி 19.04.1973)

* * * * *

இலக்கியத்தின் மூலம் சமூகப்பணி செய்யவேண்டும் என்ற உணர்வுடன் திரு. ஞானசேகரன் சிறுகதைகளைப் படைத்து வருகிறார். அவரது எளிய நடை வாசகனைக் கதையுடன் ஒன்றிவிடச் செய்கிறது. பாத்திரங்களைச் சித்தரிப்பதில் அவர் மிகவும் திறமையுடையவராக விளங்குகிறார். நயமும் நளினமும் கலந்த அவரது எழுத்து நடை கதைகளுக்குச் சிறப்பைக் கொடுக்கிறது.

சொக்கன்

‘காலதரிசனம்’ ஆய்வுரையில் (15.04.73)

* * * * *

“கலசம்” இதழில் தாங்கள் எழுதியுள்ள “சங்கு சுட்டாலும்” எனும் சிறுகதையைப் படித்த உடன் எழுந்த உணர்வில் இதை எழுதுகிறேன். மிக உயர்ந்த கருத்து. வெகு நுணுக்கத்தோடு கையாளப்பட்டுள்ளது. ஏதேதோ அபத்தம் எல்லாம் “கதைகள்” என்ற போர்வையில் நடமாடும் இக்காலத்தில், இவ்விதம் சமூகத்திற்கு பயன்படக்கூடிய ஆக்கபூர்வமான உணர்வோடு படைக்கப்படும் இலக்கியங்கள் எழுதல், பாராட்டப்படவேண்டிய பணியாகும். தங்கள் தெளிவான, நேரிய நடை எனக்கு வெகுவாகப் பிடித்துள்ளது. மேலும் மேலும் எழுதி, நற்புகழ் பெற வாழ்த்துகிறேன்.

திருமதி யோகா பாலச்சந்திரன்

21.04.1972

* * * * *

காலதரிசனம் எளிமையும் சுவையும் நிறைந்த படைப்பு; காணும் பிரச்சனையைச் சுவையாகக்கூறி சிந்தனையை வளர்ப்பதுடன் சமுதாயத்தின் உயர்வையும் இலட்சியமாகக் கொண்டுள்ளது. அலங்காரமின்மையே அலங்காரமாகக் கொண்ட ஆக்கம் காலதரிசனம்.

வித்தியாதிபதி கி. லக்ஷ்மண ஐயர்

வீரகேசரி 15.05.1973

* * * * *

சமுதாயத்தில் புரையோடி இருக்கும் அழுக்குகளை கலையம்சத்துடன் விளக்கி கதையாக வடித்துத் தனது பணியை முழுமையாக நிறைவேற்றியுள்ளார் ஞானசேகரன். மலைநாட்டை மையமாக வைத்து ஆக்கிய இருகதைகள் பிறந்த மண்ணையே நேசிக்கும் உணர்வை ஊட்டியுள்ளன. காலதரிசனம் கதை சொல்லும் உத்தி, உரு அமைப்பு முறையில் அதி சிறப்புடன் காணப்படுகிறது. கதாசிரியரின் சிந்தனைத் தெளிவு காலதரிசனம் மூலம் வெளிக்காட்டப்பட்டிருக்கிறது.

இர. சிவலிங்கம்

காலதரிசனம் அறிமுகவிழாவில் (13.05.1973)

* * * * *

தங்களது ‘வாசனை’ என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு காலத்தில் பாட்டிமார்களும் தாத்தாமார்களும் தமது பேரப் பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்லி அவர்களை நெறிப்படுத்தும் மரபு இருந்தது. அது இப்போது அருகிவருகிறது. பேய் பிசாசுக் கதைகளை அவர்கள் சொல்வது கூட இரவில் அவர்கள் தனியாக எங்கும் செல்லக்கூடாது, நேரத்தோடு வீடுவந்து சேரவேண்டும் என்ற நோக்கத்தோடுதான். இக்கதையைக் கலைத்துவமாக எழுதியுள்ளீர்கள். வித்தியாசமான கதை. இக்கதையை வாசித்தபோது எனது இளமைக்காலத்தில் நான் பெற்ற அனுபவங்கள் மனத் திரையில் ஓடின. அதுதான் இக்கதையின் வெற்றி.

புலோலியூர் க. சதாசிவம்

24.12.1972

* * * * *

I have gone through your Short-Story ‘Karuvarai eluthiya theerpu’ in the weekend paper (27/12/97) Thinakkural and I appreciated very much.I consider it as one of the few best short-stories appeared in the year 1997. Of course your story is of a new variety, the plot is entirely of a new trend and the treatment and the end is excellent. My view is not at all an exaggeration. I drop this letter as an appreciation of good creative art.

Kalaipperarasu A.T. Ponnuthurai

(28/12/97)

* * * * *

தோட்டத்து உழைக்கும் மக்களின் ஆத்மக்குரலைச் சரிவரப் புரிந்து கொண்டுள்ள காரணத்தினால்தான் இவரால் ‘குருதிமலை’ போன்ற நாவலை எழுத முடிந்தது. தோட்டத்து மக்களின் தினசரி வாழ்வில் ஊறிநின்று சுதாரித்துக் கொண்டதன் காரணத்தினால்தான் ‘லயத்துச்சிறைகள்’, ‘கவ்வாத்து’ போன்ற நாவல்களைச் சிருஷ்டிக்க முடிந்தது. இவர் அந்த உழைக்கப் பிறந்த மக்களின் பிணிதீர்க்கும் மருத்துவராக மாத்திரம் கடமை புரியவில்லை அவர்களது ஆத்ம உணர்வுக்கும் மன அவசங்களுக்கும் இதய அபிலாஷைகளுக்கும் எழுத்துருக் கொடுத்து அம்மக்களின் அடிப்படைத் துயர் துடைப்பதில் தன் பேனாவைச் செம்மையாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

டொமினிக் ஜீவா

(அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் – சிறுகதைத் தொகுதியின் பதிப்புரையில்)

* * * * *

ஆரம்ப முதல் வாசகனை ஈர்த்து இறுதிவரை கவனம் கலையாது ஒன்றித்திருக்க வைக்கும் கலைத்துவமான சிறந்த படைப்பு ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ இயல்பான பாத்திர வார்ப்புடன், ஊடாட்டம், உரையாடல் என்பன இயல்பாக நகர்ந்து நிகழ்வுடன் கலந்து நல்ல அனுபவமாக விரிகிறது. பாத்திரங்கள் இன முரண்பாடு பற்றிய தங்கள் பக்க மன ஆதங்கங்களை மெல்லப் பேச, இன ஒடுக்கு முறைக்கு எதிரான நியாயமான போராட்டம் பற்றி குறியீடு உரக்கப் பேசுகின்றது. மாறுபட்ட கலாசாரங்களை வெகு நுட்பமாகப் பதிவு செய்து இருவேறு பட்ட இனங்கள் என்பதனைச் சுட்டும் அதேசமயம், மேல் வர்க்கம் இனப்பாகுபாடு கடந்து தம்முள்ளே உறவு பூண்டு நிற்கும் என்னும் உண்மையானது பேசாப் பொருளாகத் துல்லியமாக உணர்த்தப்படுகின்றது. இவை யாவற்றுக்கும் அடி ஆதாரமாக விளங்குகிறது, ஆசிரியரின் சரளமான தெளிந்த மொழிநடை என்பதனை மறந்துவிட முடியாது.

தெணியான்

* * * * *

ஆணும் பெண்ணும் இணைந்ததான இச்சமுதாய வாழ்வில் பெண்கள் எத்தனை அசமத்துவமான நிலைகளுக்கு முகம் கொடுத்துப் போராடவேண்டியுள்ளது என்பதை மிகச் சாதாரணமான வாழ்க்கைப் போக்குடன் பிணைந்திருக்கும் மெல்லிய உணர்வுகளைத் துல்லியமாகத் தனது சுவையான எழுத்துக்கள் மூலம் சுட்டிக்காட்டும் திரு. ஞானசேகரனின் சித்தரிப்பு, பஸ் தரிப்பு நிலையத்தில் ஆண்கள் அருகேயுள்ள திண்ணைகளில் வசதியாக அமர்ந்திருப்பதும் பெண்கள் ஒதுக்குப் புறத்தில் நின்று கொண்டிருப்பதுமான காட்சிகளை முன்வைப்பதுமான விஷயங்கள் கைவந்தகலையென்றே குறிப்பிடலாம்.

பெண் தன் விருப்பப்படி தான் காதலிப்பவனோடு ஓடிப்போனதை – அவள் எல்லோரோடும் ‘இப்படியாக்கும்’ எனத்தவறாக கோணலாக எடைபோடும் கனகரத்தினம் அவளது கணவனின் கடுமையான சுகயீனத்தால் பணமின்றி அவள் தவிக்கும் சந்தர்ப்பத்தை உபயோகித்து அவளுக்கு உதவி செய்து அவளை அனுபவிக்க முயற்சிக்கும் கோணல் புத்தியை மிக எளிமையாக விபரித்துள்ளார். கோணல் புத்திக்காரன் அவளுடைய செயல்களைக் கோணலாகக் கொண்டு இரவுநேரம் அவள் தனியேயிருக்கும் போது கதவைத் தட்டுவதும் அவள் கதவைத் திறப்பதும் கோணல் எங்கே என்பதை வாசகர்களைச் சிந்திக்க வைக்கிறது.

பத்மா சோமகாந்தன்

30.06.2005

(ஆசிரியர் ‘பெண்ணின் குரல்’)

* * * * *

தி. ஞானசேகரன் தன்னுடைய மலையகப் படைப்புகள் மூலம் மலையக இலக்கியத்தில் ஓர் அழியா இடம் பெறுகிறார். இவருடைய குருதிமலை (1979), லயத்துச் சிறைகள் (1994), கவ்வாத்து ஆகிய நாவல்கள் இவருடைய சிந்தனா போக்கினையும் இந்த மக்களின் விடிவுக்காகத் தனது எழுத்தைப் பயன்படுத்தும் இவரது நோக்கத்தையும் மிகத் துல்லியமாகவே காட்டுகின்றன.

துரைவியின் ‘உழைக்கப் பிறந்தவர்களில்’ இடம் பெற்றிருக்கும் ‘சீட்டரிசி’ மலையகக் கல்வி நிலைபற்றி மிக அழகாகப் பேசுகிறது. மலையகச் சிறார்களின் கல்விக்கிருக்கும் எதிர்ப்புகளையும் தாண்டி ஒரு சவாலாக எழுந்து குடும்பக் கலாசாரமாக கல்வி உருவாக வேண்டும் என்பதைக் காட்டும் உயர்ந்த படைப்பு இது.

தெளிவத்தை ஜோசப்

தினகரன் வாரமஞ்சரி 31.10.1999

* * * * *

தி. ஞானசேகரன் தமிழ்த் தேசியவுணர்வுக் காலகட்டத்தில் எழுதிய சிறுகதைகளில் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், ராக்கிங், சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள், கருவறை எழுதிய தீர்ப்பு, சோதனை ஆகிய சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள் ஆகிய இரு சிறுகதைகளும் ஞானசேகரன் வாழ்கின்ற மலையகப் பெண்களின் உணர்வுகளின் சோகச் சித்திரங்களாம். சோதனை, அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், கருவறை எழுதிய தீர்ப்பு ஆகிய சிறுகதைகள் யுத்தச் சூழலினையும் இனவொடுக்கல் பிரச்சனைகளையும் சித்திரிக்கின்ற சிறுகதைகளாகவுள்ளன. ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ குறியீட்டுச் சிறுகதையாகும். கலாநுட்பமாகவும் கவித்துவமாகவும் படைக்கப்பட்டுள்ளது. வடபகுதி எழுத்தாளர்கள் எழுதுகின்ற யுத்தகாலச் சிறுகதைகளுக்கும் ஏனைய பிரதேச எழுத்தாளர்களின் யுத்தகாலச் சிறுகதைகளுக்குமிடையிலான பெரும்வேறுபாடு மானிடநேய நோக்கிலேயே உள்ளது. முன்னவர்கள் எதிரிகளாகச் சித்தரிக்கும் பாத்திரங்களைப் பின்னவர்கள் மானிடநேயத்துடன் சித்தரிப்பதன் மூலம் சமூகயதார்த்தம் அங்கு பேணப்படுகிறது. முன்னைய சிறுகதைகளிலும் பார்க்க இக்காலகட்டச் சிறுகதைகள் தி. ஞானசேகரனைத் தரமான ஈழத்துச் சிறுகதையாளர் வரிசையில் சேர்க்கின்றன.

செங்கை ஆழியான்

(ஈழத்துச் சிறுகதை வரலாறு)

* * * * *

சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பலதுறைகளில் தடம் பதித்த இலக்கியவாதியான தி. ஞானசேகரனுள் உறைந்து நிற்கும் மருத்துவனை வெளிப்படுத்தும் ஒரு சிறுகதைதான் ‘கருவறை எழுதிய தீர்ப்பு!’ செயற்கை முறை கருத்தரித்தல் பற்றிய பல அரிய மருத்துவத் தரவுகளை இலாவகமாகவும், கதையோட்டத்திற்கு ஊறு செய்யாமலும், வாசகனை ஆர்வத்தோடு வாசிக்கும் வண்ணம் இக்கதையில் ஞானசேகரன் புகுத்தியுள்ளமை வியந்து பாராட்டத்தக்கது.

இலங்கை இனப்பிரச்சனை பற்றிய சிறந்த சிறுகதைகளில் முக்கியமானதாகக் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் இவரது ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ இலங்கை இனப்பிரச்சனையின் ஆணிவேர்வரை ஊடுருவிப் பாயும் கனதியும் வீச்சும் கொண்டது. ஆசிரியர் தென்பகுதியில் வாழ்வதால் பெரும்பான்மை இன மக்களின் உணர்வுகளையும் மனோநிலையையும் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார். அதேநேரம் அடிவாங்கிய போதெல்லாம் தாயக மண்ணில் தஞ்சம் புகுந்த மக்கள் இறுதியில் தம் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக ஆக்ரோசமாகக் கிளர்ந்தெழுவதை, தெளிவான, சுருக்கமான, ஆனால் உள்ளர்த்தங்கள் செறிந்த எழுத்தில் வார்த்தெடுத்திருக்கிறார். வெறுமனே ‘நாய்’ என்று சொல்லாது அல்சேஷன் எனக் குறிப்பிட்டிருப்பது எமது சிந்தனைக்கு விருந்தாகும்.

டாக்டர் எம். கே. முருகானந்தன்

* * * * *

‘கருவறை எழுதிய தீர்ப்பு’ என்ற தலைப்பில் கதாசிரியர் தி. ஞானசேகரன் முற்றிலும் புதுமையானதொரு கதையை அண்மையில் எழுதியிருந்தார். கருத்தரித்தல் பற்றிய சில தகவல்கள் கதையோட்டத்துடன் தரப்படுகின்றன. சிறுகதைக்கேயுரிய பண்புகளைக் கொண்டதாகவும் செட்டாகவும் கதாசிரியர் வடிவமைத்திருக்கிறார். கதைமுடிவும் எதிர்பாராததொன்று. அதே வேளையில் இனவேறுபாடுகளிடையே கூட முரண்படுநிலை இருப்பதையும் காட்டி யுள்ளார். இது ஓர் அருமையான கதை என்பது எனது மதிப்பீடு.

கே. எஸ். சிவகுமாரன்

(தினக்குரல் 23-05-1999)

* * * * *

இலங்கையின் பிறபாகங்களிற் பொதுவாகவும் கொழும்பிற் குறிப்பாகவும் இடம்பெறும் தமிழ் மக்களுக்கு எதிரான சோதனைக் கெடுபிடிகளைச் ‘சோதனை’என்ற கதை புலப்படுத்துகிறது. இச்சிறுகதையில் குமரேசன் என்ற பாத்திரத்தைக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கது. வெளிப்படையாகவன்றிக் குறிப்பாக அப்பாத்திரத்தைச் சுட்டி வாசகரே அதன் இயல்பைப் புரிந்துகொள்ளுமாறு செய்தமை அக்கதைக்குக் கலைச் செழுமையைச் சேர்க்கிறது

கலாநிதி துரை. மனோகரன்

(வீரகேசரி வாரமஞ்சரி)

* * * * *

தேசியத் தன்மையை பொருண்மரபிலும், உருவ அமைதியிலும் கொண்டியங்கும் ‘சீட்டரிசி’ நல்லதொரு தமிழ்ச் (ஈழ) சிறுகதைக்கு எடுகோளாக திகழ்கிறது. பார்வதி, சிகப்பாயி, கந்தையா ஆகிய மூன்று பாத்திரங்களும் நடைச்சித்திரங்களாக மாறும் விபத்திலிருந்து நூலிழையில் தப்புவதும் சிறந்த குணாபாத்திரங்களாக மாறுவதும் இலக்கிய அநுபவத்தை ஏற்படுத்துகின்றன. சிறுகதையின் உருவ அமைதி காத்த இறுதி உச்சக்கட்டம் பல எதிர்மறைவான உச்சநிலைக்கும் மாறி மாறிப் பயணப்பட்டு ‘இல்லறத்தின் பண்பாட்டு வேரினை உயர்நிலைப் படுத்தும் வகை ’ கைதேர்ந்த கலைஞனின் கலை வேலை நுணுக்கத்தைக் காட்டி நிற்கிறது.

செம்பியன் செல்வன்

19.04.2005

* * * * *

உங்களின் ‘திருப்புமுனைத் தரிப்புக்கள்’ கதையை வாசித்தேன். “தங்கராசு இப்போது வளர்ந்து விட்டான். பிரட்டுக்களத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நிற்கின்றனர். தங்கராசு ஒரு தொழிலாளியாக கடைசி வரிசையில் நிற்கிறான்…… என்ற பந்தியை வாசிக்கும் போது….. கதையை இவ்வளவு அழகாக ஆழமாக நகர்த்தி வந்து கடைசியில் “சாப்பிட்டு” விட்டாரே என்று மனம் வருந்தினேன். அந்தப் பந்திக்குப் பிறகு வெறுப்போடு மேலும் தொடர்ந்த போது ….. அது பெருமாளின் கனவாக கண்டபோது மனம் சிரித்தது!

தங்கராசின் வைராக்கியம் அருமையான முடிவு. உங்கள் கதாபாத்திரங்களில் பெருமாளும், தங்கராசும் காவிய நாயகர்கள் ! அவர்களைப் போன்றவர்களை உருவாக்கத் துடிக்கும் உங்கள் வளமான சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள். மலையகத்தில் படிக்கத் துடிக்கும் ஒரு லயத்து மாணவனின் சூழலைச் சித்தரித்திருக்கும் பாணி….. ஒரு ஆய்வு எனலாம்.

அருமையான கதை !

மு. சிவலிங்கம்

03.03.1998

* * * * *

போர்ச் சூழல் காரணமாக அந்நிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமது மொழியையும் பண்பாட்டையும் பேணிக் கொள்வதில் அக்கறை யெடுக்கின்றனர். ஆனால் அவர்களின் புதிய தலைமுறை அந்நியச் சூழலுக்கு எளிதாக ஆட்பட்டு, தலையை மழித்து, காதொன்றைத் துளைத்து வளையத்தை மாட்டிக் கொண்டு ……..? மகன், மருமகள், பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக 15 வருடங்களுக்குப் பின் இங்கிருந்து சென்ற சிவராசா, பேரன் முருகநேசனின் கோலத்தைக் கண்டு மனக்குமுறல் எய்துவதை வெகு நேர்த்தியாகச் சித்தரிக்கிறது ‘மண்புழு’. “ இதெல்லாம் இந்த மண் செய்யிற வேலை…. மண்ணுக்கும் கலாசாரம் பண்பாடுகளுக்கும் தொடர்பிருக்கு. வேற்று மண்ணில் எங்கட கலாசாரம் வேர் விடுகிறது கஸ்டம். சூழல் விடாது” என்னும் சிவராசாவின் கூற்றில் எத்தனை பெரிய உண்மையிருக்கிறது. யதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறந்த கலைப்படைப்பு.

நா. சோமகாந்தன்

* * * * *

தி. ஞானசேகரனது கதைகள் மலையக மக்களது ஒரு காலகட்டத்துக்குரிய வரலாற்றினை ஆவணப்படுத்தி நின்றதோடு, அறிவியல் சார்ந்த அம்சங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ‘கருவறை எழுதிய தீர்ப்பு’ எனும் தி. ஞானசேகரனின் கதையே அறிவியலை ஈழத்துச் சிறுகதையில் அறிமுகப்படுத்திய கதையாகும்.

புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்

(புதிய சகத்திரப் புலர்வின்முன் ஈழச்சிறுகதைகள் நூலில்)

* * * * *

Dear Dr. Gnanasekaran,

I had the privilege of reading your short story book titled ‘Alseshanum oru poonaikkuddium.’

I was highly impressed and delighted to read your all eleven short stories. The first and the main story is beyond comments. You had explained the existing ethnic disturbances in an undisputable way. The last story ‘Kadamai’ had touched me deeply. I too had not performed abortions and I totally agree the way you had dealt meena.

You are affluent and the flow is very readable.

You had exposed the current problems in a formidable and simple way.

My sincere wish and prayer that you should continue to write. The Tamil world will always remember you for your enormous contributions.

Dr. M. L. Najimudeen

MBBS(Cey) MS(Cey) MRCOG (Gt. Brit)

Consultant Obstetrician and Gynaecologist

July 27, 1998.

* * * * *

‘கண்ணில் தெரியுது வானம்’ தொகுப்பில் உங்களது காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளூம் ..! என்ற சிறுகதையைப் படித்தேன். தடைமுகாம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருத்தி இராணுவத்தினரின் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதையும் அதன் காரணமாக அவள் புத்திபேதலித்த நிலைமையை அடைவதையும் கலாரூபமாகக் கதையில் வடித்துள்ளீர்கள். நமது நாட்டில் மட்டுமல்ல இனவிடுதலைப் போராட்டம் நடக்கும் பல்வேறு நாடுகளிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இக்கதையின் கரு உலகப் பொதுவானது. பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவேண்டிய கதை இது.

பேராசிரியர் ‘நந்தி’

15.04.2002

* * * * *

“ஈழத்தின் சமகால இலக்கியச் செல்நெறிகளை அவதானிக்கும் போது, எழுத்தாளரது படைப்புகளில், பேரினவாத ஒடுக்குமுறைக் கொடுமைகள், போர்க்கால அவலங்கள் என்பன வெறும் பதிவுகளாகவே அமைந்திருப்பது கண்கூடு, எனினும், இதற்கு விதிவிலக்காகவுள்ள மிகச்சில படைப்புகளுள் தி. ஞானசேகரனின் ‘காட்டுப் பூனைகளும் பச்சைக்கிளிகளும்’ விதந் துரைக்கப்பட வேண்டியதொன்று ; மாணவியொருத்திக்கு நிகழ்ந்துவிட்ட கொடூரம் தரும் அதிர்ச்சி, கதை சொல்லப்படும் முறையிலுள்ள பல்வேறு சிறப்புகளால் வாசகரது மனத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் …

இக்கதை தமிழ்ச்சிறுகதை வரலாற்றிலே இடம் பெறவேண்டிய சிறுகதை.

கலாநிதி. செ. யோகராசா

* * * * *

கதை எழுதுவது என்பது இலகுவான செயலல்ல. மக்களுக்கு நலன் செய்யக்கூடிய ஒரு நல்ல கருத்து அதில் இருக்கவேண்டும். அந்தக் கருத்தை விளக்குவதற்கு வேண்டிய நிகழ்வுகளும் கதா பாத்திரங்களும் சிறப்பாக அமையவேண்டும். இவற்றுக்கு மேலாக வசனநடை வாசகரை ஈர்க்கவேண்டும். திரு. ஞானசேகரனின் கதைகளில் இந்த அம்சங்கள் எல்லாம் சிறப்பாக – மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. நல்ல கதைகளை எழுதவிரும்பும் எழுத்தாளர்கள் ஞானசேகரனின் கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும்.

வரதர்

**********

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *