ஜே.வி.நாதன்,
பொறுப்பாசிரியர்,
‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழ்,
சென்னை.
ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வேலூரில் வாசம். ‘ஆனந்த விகடன்’ நிறுவனத்தில் ஆசிரியர் இலாகா செயல் அலுவலராகவும், அப்போதைய விகடன் எம்.டி.யான திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர். விகடனுக்குப் பிறகு, ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தார்.
சக்தி விகடன் மாதமிருமுறை இதழில் பிற மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற ஆலயங்களை நேரில் தரிசித்து, அவை குறித்துத் தொடர்ந்து எழுதினார். ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் தொடரை 48 அத்தியாயங்கள் சக்தி விகடனில் எழுதி, அதை ஆனந்தவிகடன் நூலாக வெளியிட்டது. இதுவரை அந்நூல் இரண்டு பதிப்புகள் வந்து வாசகர்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்றுள்ளது.
கேரள திவ்ய தேசங்கள் என்று கேரளாவில் உள்ள மகாவிஷ்ணுவின் திருத்தலங்களைப் பற்றிய தொடர் ஒன்றை சக்தி விகடன் இதழில் தொடர்ந்து எழுதிப் புகழ் பெற்றவர் இவர்.
இவர் எழுதிய சுமார் 400 க்கு மேற்பட்ட சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் பரிசை மூன்று முறை பெற்றுள்ளார். இவருடைய 70 சிறுகதைகள் கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ஜூனியர் விகடன் இதழில் பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘முகமூடி இல்லாத கொள்ளைக்காரர்கள்!’ என்ற இவரது ஜூ.வி. கட்டுரை, தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த புலனாய்வுக் கட்டுரை என்று சென்னை ‘விஜில்’ அமைப்பினால் தேர்வு செய்யப்பட்டு தங்கப் பதக்கம் உள்ளிட்ட ‘பாஞ்ச ஜன்யம்’ என்ற விருதைப் பெற்றுள்ளது.
எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரையோடு, ‘வேட்டை’ சிறுகதைத் தொகுப்பு, விகடன் நிறுவன வெளியீடுகளாக ‘அதிதி’ சிறுகதைத் தொகுப்பு, ‘ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்’ என்ற ஆன்மிக ஆய்வு நூல், கவிக்கோ அப்துல் ரகுமான் அணிந்துரையோடு ‘மெளனியின் மறுபக்கம்’, ஆகிய நூல்கள், திரு இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் முன்னுரையோடு ‘ஜே.வி.நாதன் சிறுகதைகள்’ (50 சிறுகதைகள்) இவற்றைத் தொடர்ந்து 1500 த்ரில்லர்களுக்கு மேல் எழுதிய, இன்னும் எழுதி அசத்திக் கொண்டிருக்கிற திகில் நாவல் சக்கரவர்த்தி திரு ராஜேஷ்குமார் முன்னுரையோடு சிறப்புச் சிறுகதை, முத்திரைக் கதைகள் என்ற பதாகை தாங்கிய பல கதைகள் உள்ளிட்ட ‘ஜே.வி.நாதன் சிறுகதைகள் – தொகுப்பு-2’, (40 சிறுகதைகள்) அண்மையில் வெளிவந்து பலரின் பாராட்டை அள்ளீக் குவித்துக் கொண்டிருக்கிறது.
சிறுகதைகள்:
https://www.sirukathaigal.com/tag/ஜே-வி-நாதன்/
இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்:
1. வேட்டை (சிறுகதைத் தொகுப்பு) – தமிழ் புத்த்தகாலயம், சென்னை (திரு ஜெயகாந்தன் அவர்கள் முன்னுரையுடன்),
2. அதிதி (ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு) – விகடன் வெளியீடு,
3. ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் ( தல விருட்சங்கள், அவை உள்ள 48 ஆலயங்கள் குறித்த ஆய்வு நூல் – விக்டன் வெளியீடு – திரு இறையன்பு மற்றும் திரு கே.ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ், டி.ஜி.பி.
4. மெளனியின் மறுபக்கம் (மெளனி அவர்களுடன் 16 வருடங்கள் நான் ஒரே தெருவில் வசித்து, இருவரும் நெருங்கிப் பழகிய அனுபவங்கள். அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் பலவற்றை அவருடைய கையெழுத்திலேயே நூலில் வெளியிட்டுள்ளேன். திரு கவிக்கோ அவர்களின் மதிப்புரையுடன் – இது விகடன் வெளியீடு
5. ஜே.வி.நாதன் சிறுகதைகள்’ நான் எழுதிய 50 சிறுகதைகள் இந்நூலில் உள்ளன. பட்டாம்பூச்சி வெளியீடு. – இதற்கு திரு வெ.இறையன்பு ஐஏஎஸ், மற்றும் திரு கரு.முத்து, தி ஹிந்து தமிழ் பத்திரிகையாளர் இருவரும் அணிந்துரை. கூடவே முன்பு ஜெயகாந்தன் வேட்டை தொகுதிக்கு அளித்த முன்னுரையும் சேர்ந்து வெளிவந்துள்ளது.