பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை
http://www.sirukathaigal.com/tag/ஜமீலா/
சமர்ப்பணம்
‘கலைமகளின் வளர்ப்புப் பிள்ளைகளில் ஒருவராகச் சிறுகதை உலகில் பிரவேசித்த நன்னாளன்று அன்பும் ஆசிகளும் சொரிந்து அடியேனை வாழ்த்திய, தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வரும் கவிஞரும் எழுத்தாளரும் பேராசிரியருமான ஸ்ரீ கி.வா.ஜகந்நாதையர் அவர்களுக்கு, இந்தச் சிறுகதைத் தொகுதியைத் தாழ்ந்த வணக்கத்துடன் நான் சமர்ப்பிக்கின்றேன்.
ஜமீலா
***
முகவுரை
யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற அருமை யான பண்பாட்டைக் கொண்ட நம் பைந்தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வாழும் இஸ்லாமிய சமயத் தைச் சார்ந்த மாந்தரின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சி களைச் சித்திரிக்கும் சிறுகதைகளின் தொகுதிதான் இந்த நூலாகும்.
‘பயணச் சீட்டு. மனப்புயல்’, ‘அழாத கண்கள்’ (ஒருமித்த மனம்’ என்ற தலைப்புடன் இதழில் வந்தது) என்ற கதைகள் ‘கலைமகளில்’ காட்சியளித்தவை யாகும்.
‘பெருநாள் பரிசு’, ‘பல்கீஸின் பதற்றம்’, ‘பாச்சாவின் வஞ்சம்’, ‘ஜைனப்பீ அளித்த தீர்ப்பு’ ஆகிய இவைகள் ஆனந்த விகடனில்’ தோற்றமளித்தன.
‘இரங்கிய உள்ளம்’ – ‘கல்கி’யில் ‘பிறைக் கொடி’ நாட்டிற்று.
‘காதலும் போட்டியும்’, ‘நஷ்டத்தின் ரகஸியம்’ – சுதேசமித்திரனில் நடமாடின.
‘அடிமை’ – இஸ்லாமிய மாத சஞ்சிகையான ‘மணி விளக்கு’ இதழில் சுடர் விட்டது.
நஜ்மா நாடிய பாதை – 1956-ஆம் ஆண்டு ‘கலைமகள்’ தீபாவளி மலரில் மணம் பெற்றது.
‘தமையன் அளித்த காணிக்கை’ – கல்கியில் மாதச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு ஒன்றைக் காணிக்கையாகப் பெற்றது. ‘வெள்ளிக்கிழமை’ ‘கலைமகள்’ கிழமைப் போட்டியில் முதல் பரிசு ஒன்றைப் பெற்று ‘நகாரா’ முழக்கியது.
இந்தச் சிறுகதைத் தொகுதிக்குச் சிறப்பான கருத் துரையை மனமுவந்து வழங்கிய அறிஞர் டாக்டர் மு. வரதராசனார், M.A., M.O.L., Ph.D. அவர்களுக்கு என் தாழ்ந்த நன்றி.
தமக்கே உரித்தான எழில் தவழும் வகையில் பிரசுரித்து இந்த நூலை வெளியிட்ட தமிழ் நாட்டுத் தலை சிறந்த பிரசுரகர்த்தர்களான கலைமகள் காரியாலயத் தாருக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகும்.
24, நாலாவது மெயின் ரோட்,
ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை – 28.
29-11-1957
ஜமீலா
***
கருத்துரை
மகன், மனைவியின் காதலால் கட்டுண்டு தாயையும் தங்கையையும் வெறுத்த போதிலும், தாயின் பாசம் குறையுமா? அத்தகைய தாயின் தூய்மையான அன்பை விளக்கும் நல்ல சொல்லோவியம் பெருநாள் பரிசு’ என்னும் சிறு கதை.
‘பல்கீஸின் பதற்றம்’ இஸ்லாமியருள்ளும் பிறப்பால் அமைந்த சில பிரிவினைகள் காதலைத் தடுத்திடும் கொடுமைகளைக் காட்டுகிறது. ஆனால் இந்தக் கதையில் ‘பதற்றம்’ தோன்றிய போதிலும், கொடுமை இல்லாமற் போகிறது.
‘பயணச் சீட்டு’ அருமையான கதை. “இனிமேல் இந்தப் போக்கிரி உனக்குத் துரோகியாக மாறமாட்டான்” என்று ஒருவன் சொல்லும் சொல், போக்கிரியின் சொல் லாக இல்லை. கொலைவாள் ஏந்திய போக்கிரி, வாழ்வி லிருந்து திடீரென்று பண்பாட்டின் எல்லைக்கு உயர்ந்த ஒரு தியாகியின் உள்ளத்தை அடைந்ததை அந்தச் சொல்லில் காண்கிறோம். அவனையும் அவனை நம்பிய பர்மியப் பெண்ணையும் நெஞ்சம் வாழ்த்துகிறது.
‘காதலும் போட்டியும்’ என்னும் சிறுகதை, அதன் ஆசிரியர் ‘ஜமீலா’ வின் பரந்த உலக அனுபவத்திற்கு ஒரு நற்சான்று. குத்துச்சண்டையைக் கலைக்கச் சூழ்ச்சி செய்த தந்திரத்தை வாழ்த்துகிறோம். ஏன் எனில், அந்தச் சூழ்ச்சி ஒரு பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் காப்பாற்றிய உதவியாக முடிகிறது.
‘இரங்கிய உள்ளம்’, ஏழையின் நெடுங்காலக் கனவைப் பாழாக்கும் எல்லைக்குச் செல்கிறது. அவ னுடைய கிச்சிலி வண்ண ஷேர்வானி சேறுபடிந்த போதி லும், அவனுடைய நெஞ்சம் மணம் மிக்க சந்தனக் குழம்பில் திளைக்கும் பேறு பெறுகின்றது எனலாம்.
வஞ்சத்தில் ஊறிய மனமும் கொலைவாள் ஏந்திய கையும் சமய உணர்வாலும் தொழுகையாலும் எப்படி மாறிவிட்டன! ‘பாச்சாவின் வஞ்சம்’ என்ன ஆனது? அந்தக் ‘கொடிய பாச்சா’ ஊரைவிட்டு ஓடிப் போய் இருபது ஆண்டுகள் ஆன பிறகும் நம்முடைய நெஞ்சம் அவனை நினைந்து உருகுகின்றதே!
‘மனப்புயல்’ எதிர்பார்ப்பதற்கு மாறாக முடிவுறுகிறது. விரும்பாத நோயாளிக் கணவனோடு வாழவேண்டியவள் ஆனாள் காத்தூன். விரும்பிய காதலனோ கள்ளனாய்த் திரிகிறான். ஒருநாள் திருப்பத்திற்கு வாய்ப்புக் கிடைக் கிறது. அவள் கள்ளனோடு ஓடிப் போவதைக் கண்டு இயற்கை நாணுகிறது, எள்ளுகிறது, வெறுக்கிறது; இறு தியில் கள்ளனை அழித்து அவளைக் காப்பாற்றிவிடுகிறது.
வரதட்சிணைக் கொடுமையை எதிர்த்து எழுந்த சொல்லோவியம் ‘அடிமை’. கொடுக்கும் பணத்துக்காக மருமகனாக வருபவனை அடிமை’ என்று எள்ளுகின்றது உண்மை உணர்ந்த மாமனாரின் மனம்!
‘நஷ்டத்தின் ரகசியம்’ என்ற கதையைப் படிக்கும் போது, ‘அத்தகைய பெரிய மனிதர்கள் பலர் தோன்ற உலகத்தில் இடம் இருக்கிறது; ஆனால் அவர்கள் அவ்வாறு உயர்வு அடையாமல், சாதாரண மனிதர் களாகவே செத்து மறைகிறார்களே!’ என்று உள்ளம் வருந்துகிறது. ராவுத்தரின் உள்ளத்தில் கள்ளத்தனம் இருந்தது போலவே, பெருந்தன்மையும் இருந்ததால் தான் அவர் வீண் பெருமையை உதறிவிட்டு மன அமைதியை நாட முனைந்தார்.
நன்றியுணர்ச்சியின் காரணமாகத் தன் காதலைத் துறக்கும் மனம் ஒரு பெண்ணுக்கு வருமா? வேறொரு பெண்ணை மணந்து கொள்ளுமாறு காதலனுக்கு அறிவு புகட்டி இடித்துரைத்து அனுப்ப மனம் வருமா? ‘ஜைனப்பீ’க்கு அந்த மனம் வந்தது வியப்புத்தான்! காதல் தோற்க, நன்றியுணர்ச்சி வென்றது!
‘அழாத கண்க ளில் காணும் கிழவன் கல்மனம் உடையவன். அந்தக் கல்மனமும் நைந்திடச் செய்தது ஒரு பெண்ணுள்ளம். “நூற்றுக்கணக்கான சவங்களைப் புதைத்த அவனுக்கு அப்பொழுதுதான் மரணத்தின் கொடூரம் புலனாயிற்று.” அந்த அப்பொழுது எது என நினைத்தால் நெஞ்சம் உருகுகிறது. அவன் இறுதிக் கடமையைச் செய்யத் துணிந்த துணிவுக்கு ஒரு தனிச் சான்றாய் இருந்த இடுகாட்டின் வருணனையும் ஆசிரியர் ஆங்காங்கே கையாளும் உவமைகளும் பல உண்மை களை எடுத்தோதுகின்றன.
“கணவனை இழந்த உன் போன்ற இளம்பெண் மறு விவாகம் செய்துகொள்வது ஓர் உத்தமமான காரிய
மாகும். நீ இஸ்லாத்தில் பிறந்தவள் என்பதை ஞாபகம் வை” என்று பழைய காதலன் அந்த விதவைப் பெண்ணுக்கு எடுத்துச் சொல்லி மனத்தை மாற்ற முயல் கிறான். ஆனால் உள்ளத்தின் ஆழ்ந்த கற்புணர்ச்சி மறு மணத்தை விரும்பாத துணிவைத் தந்து விட்டது ‘நஜ்மாவுக்கு .
‘தமையன் அளித்த காணிக்கை’ அருமையான கதை. பரிசுப்பொருள் தன் விலை மதிப்பை அறிவுறுத்தவில்லை; அன்பின் மதிப்பையே காட்டுகிறது தங்கைக்கு ! இறுதி வரையில் ஆவலைத் தூண்டிச் செல்லும் திறன் இந்தக் கதையில் நன்கு அமைந்துள்ளது.
‘வெள்ளிக்கிழமையில் காணும் துறவி ஊரெல்லாம் போற்றும் பெருமை பெற்றவர். ஆனால் இளமைத் துடுக் கால் அவர் செய்த குற்றங்கள் யாருக்குத் தெரியும்? அவரும் மறந்திருந்தார் ! ஆனால் அலமந்து உருகும்படி யான நெருக்கடி ஒன்று ஏற்பட்டுவிட்டது!
நல்ல சில உணர்வுகள் ; அவை வாழ்வில் இயைந் துள்ள இயைபுகள்; அவற்றிற்கு அமைந்த தெளிவான கலை வடிவங்கள்; இவ்வாறு இயன்ற சிறுகதைகளின் தொகுப்புத்தான் இந்த நூல்.
ஒவ்வொரு கதையும் மனித உள்ளத்துச் சிறந்த உணர்வு ஒவ்வொன்றை அடிப்படையாகக் கொண்டது. அந்த அந்த உள்ளமே போற்றி உணரத் தக்கது. மனித ரின் வாழ்வும் தொழிலும் வேறுபடலாம்; சமயமும் சாத் திரமும் வேறுபடலாம்; பழக்கவழக்கங்கள் வேறுபடலாம்; மொழியும் நடையும் வேறுபடலாம்; ஆயினும், உள்ளமும்
அது உணரும் உணர்வும் வேறுபடுவதில்லை என்பதை இந்தக் கதைத் தொகுதி தெளிவாக்குகிறது. இக்கதை களில் வரும் முதன்மையான மாந்தர் எல்லாரும் இஸ் லாமிய மதத்தைச் சார்ந்த தமிழர் . ஆதலின், அவர்களின் பழக்க வழக்கம் முதலியன வேறுபடுதல் இயற்கை . சமயம், சடங்கு முதலிய துறைகளில் கையாளும் சொற்களும் வேறுபடுகின்றன. நிக்காஹ், துனியா, மவுத், லடாய், ஜுலும் முதலிய சொற்கள் கதைமாந்தரின் வாயில் பயின்று வழங்குகின்றன. ஆயினும் மதமும் சடங்கும் சொல்லும் கடந்து மனித உள்ளம் தெளிவாகப் புலனாகின்றது.
இவற்றின் ஆசிரியர் ‘ஜமீலா’, பல்வேறு உணர்வு களை நன்கு புலப்படுத்தியுள்ளார். இவ்வகையில் இவர் பெற்ற வெற்றி பாராட்டுக்கு உரியதாகும். வஞ்சகர்களை யும் கொலையாளிகளையும் முரடர்களையும் காட்டி அவர் களின் உள்ளங்களிலும் அன்பும் தியாகமும் நேர்மையும் ஒளி வீசச் செய்துள்ளார். மனச்சான்று பிறைக்கொடி’ நாட்டி விளங்கும் கதைகள் இவருடைய படைப்புக்கள். இவற்றில் பல முன்னமே பத்திரிகையுலகத்தில் பரிசுகள் பெற்று உலவின என்பது மகிழ்தற்குரியதாகும். வெல்க ‘ஜமீலா’ வின் கலைத்தொண்டு.
அமைந்த கரை
சென்னை 30,
22-10-’57.
மு. வரதராசன்.
.