கி.வா.ஜகந்நாதன்

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 – நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
தமிழ்த் தந்தை கி.வா. ஜகந்நாதன் அவர்கள் 1906ம் ஆண்டு ஏப்ரல் திங்களன்று திரு. வாசுதேவ ஐயர் அவர்களுக்கும் பார்வதியம்மாளுக்கும் பிறந்தார். விளையும் பயிர் முளையிலேயே தெரிவதற்கிணங்க அவர் கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருவாசகம் ஆகிய பக்தி இலக்கியங்களை ஆர்வத்துடன் படிக்கத் துவங்கினார். ஒன்பதாவது படிக்கும் போதே செய்யுட்கள் எழுதத் துவங்கினார். நடராஜரைப் பற்றி எழுதிய ”போற்றிப் பத்து” என்ற பதிகமே அவருடைய கன்னி முயற்சி.
காந்திஜியின் விடுதலை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு, சர்க்காவில் நூல் நூற்று, கதர் ஆடைகளையே அணியத் துவங்கினார். இறுதி நாள் வரை தூய கதர் ஆடையையே அணிந்து வந்தார்.
தமிழ்த்தாயின் கருணை நோக்கினால் உ.வே. சாமிநாத அய்யர் அவர்களுடன் அவருடைய சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பு தமிழ் வரலாற்றில் ஒரு பொற்காலத்தைத் துவக்கி வைத்தது என்றே சொல்லலாம். கல்லூரியில் படிப்பதை விட உ.வே.சா. அவர்களிடம் தமிழ் மாணவனாக இருப்பதையே கி.வா.ஜ விரும்பினார். சங்க நூல்கள், காவியங்கள், பிரபந்தங்கள் உள்ளிட்ட பல பாடங்களை உ.வே.சா அவர்களிடம் ஒரு நாளைக்குப் பதினோரு மணி நேரம் கற்றுக் கொண்டதோடு, குருவின் ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாகவும் இருந்தார். ”உ.வே.சா அவர்களுக்குக் கி.வா.ஜ. ஒரு செந்தமிழ் வாரிசு” என்று அவருடைய நினைவு அஞ்சலி மலரில் குறிப்பிடுகிறார்கள்.
1932ம் ஆண்டு ”கலைமகள்” பத்திரிக்கை துவங்கியபோது கி.வா.ஜ. அவர்களைப் பதிப்பாசிரியராக உ.வே.சா. அவர்கள் சிபாரிசு செய்தார்கள். துவங்கிய அன்று முதல் இறுதி வரை அவருடைய வாழ்க்கையுடன் கலைமகள் ஒன்றியிருந்தாள். ஒரு இலட்சியப் பத்திரிக்கையாக அதை நடத்தி வந்தார். பத்திரிகைப் பணி, உ.வே.சா. அவர்களுடன் இடையறாத தமிழ்ப் பணி என ஓய்வின்றி உழைத்தார்.
1942-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி தன் தந்தையை இழந்த நான்கே நாட்களுக்குள் அவரின் குருவான சாமிநாத அய்யரை இழந்தது தான் அவருக்குப் பேரிழப்பாக இருந்தது. அவரின் வரலாற்றை என் ஆசிரியர் பிரான் என்ற தலைப்பில் நூலாக எழுதி நிறைவு செய்தார்.
கி.வா.ஜ. ஒரு பன்முகம் கொண்ட தமிழ் வித்தகர். தனது எளிமையான பேச்சாற்றலால் உலகத்தைக் கவர்ந்தவர். அவர் பங்கு பெறாத பட்டி மன்றங்கள் கிடையாது. அவருடைய பேச்சில் நகைச்சுவையும், நடைமுறை உதாரணங்களும் கலந்து மிகக் கடினமான பொருட்களைக் கூட எளிதாகக் காட்டும். அவருடைய சிலேடைகள் மிகவும் பிரபலமானவை. அவருடைய சிலேடைப் பேச்சுக்களே தனி நூலாக வெளிவந்துள்ளது. அவர் நாட்டுப்புற இலக்கியத்தில் மிக்க ஈடுபாடு கொண்டு பல கிராமங்களுக்குச் சென்று, பாடல்களையும், பழமொழிகளையும் சேகரித்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஏற்றப் பாடல்கள், திருமணப் பாடல்கள், தெய்வப்பாடல்கள், சுவையான தமிழ்ப் பழமொழிகள் என நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.
சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் விளங்கியவர். கி.வா.ஜ. அவருடைய கதைகளில் நகைச்சுவை இழையும். பிற மொழிக் கதைகளையும், புராண வரலாறுகளையும் அடிப்படையாகக் கொண்ட கதைகளையும் அவர் தந்திருக்கிறார்.
ஜோதி என்ற பெயரில் அவர் கவிதைகள் பல பொழிந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருக்கு ”வாகீச கலாநிதி”, ”திருமுருகாற்றுப்படை அரசு” என்ற பட்டங்களை வழங்கியுள்ளார். செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி போன்ற பல பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.
டாக்டர் உ.வே.சா. அவர்கள் தமிழ்த் தாத்தா என்றால், இவர் இன்றைய இலக்கிய மாணவர்களுக்குத் தமிழ்த் தந்தையாவார். அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தமிழ்ச் சொத்துக்களோ 150க்கும் மேல் 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் நாள் ”மூச்செல்லாம் தமிழ்” என்று இருந்த கி.வா.ஜ. அவர்களின் வாழ்வு நிறைவடைந்தது.
அவரைப் பற்றி எழுத்தாளர் அகிலன் கூறியுள்ள ஒரு மேற்கோள்:-
திரு. கி.வா.ஜ. அவர்கள் ஒருவர் தான். ஆனால் அவரைத் தமிழ்த் தாத்தாவின் சீடராகக் காண்பவர்கள் பலர். கலைமகள் ஆசிரியராகக் காண்பவர்கள் பலர். எழுத்தாளராகக் காண்பவர்கள் பலர். கவிஞரான ஜோதியைக் காண்பவர்கள் பலர். தலை சிறந்த பேச்சாளராய், சமயத்துறை அறிஞராய்க் காண்பவர்கள் பலர். எல்லோருமே அவரை எந்த உருவில் கண்டாலும், அங்கே அவர் அன்பு நிறைந்தவராக, பண்பின் உருவமாக, உழைப்பிலும், உள்ளத்திலும் உயர்ந்தவராகவே தோற்றமளிக்கிறார்.
இவரது நூல்கள் சில
- இலங்கைக் காட்சிகள்
- ஆலைக்கரும்பு
- கவி பாடலாம்
- அதிகமான் நெடுமான் அஞ்சி
- கி. வா. ஜ பதில்கள் 3 பாகங்கள்
- அபிராமி அந்தாதி மூலமும் தெளிவுரையும்
- அபிராமி அந்தாதி விளக்கவுரை 4 பாகங்கள்
- வழிகாட்டி
- திருமுறை மலர்கள் 3 பாகங்கள்
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் 6 பாகங்கள்
- பெரிய புராண விளக்கம் 10 பாகங்கள்
- எல்லாம் தமிழ்
- நாயன்மார் கதைகள் 4 பாகங்கள்
- முந்நீர் விழா
- தமிழ் நூல் அறிமுகம்
- நல்ல சேனாதிபதி
- கரிகால் வளவன்
- கற்பக மலர்
- காவியமும் ஓவியமும்
- குமரியின் மூக்குத்தி
- பயப்படாதீர்கள்
- அன்பு மாலை
- திரு அம்மானை
- பவள மல்லிகை
- சுதந்திரமா?
- சிலம்பு பிறந்த கதை
- சகல கலா வல்லி
- புகழ் மாலை
- பேசாத பேச்சு
- திருவெம்பாவை
- விளையும் பயிர்
- அழியா அழகு
- நாடோடி இலக்கியம்
- அப்பர் தேவார அமுது
- பல்வகைப் பாடல்கள்
- கதை சொல்கிறார் கி. வா. ஜ
- ஏற்றப்பாடல்களும் தொழிற்பாடல்களும்
- புது மெருகு
- வாழும் தமிழ்
- கலைஞன் தியாகம்
- கண்டறியாதன கண்டேன்
- ஞான மாலை
- வாழ்க்கைச் சுழல்
- கி. வா. ஜ பேசுகிறார்
- மனிதப் பறவை
- சித்திர மேகலை
- கலைச்செல்வி
- தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்
- அறுந்த தந்தி
- வாருங்கள் பார்க்கலாம்
- கிராமியப் பாடல்கள்
- கோவூர்கிழார்
- அனுபூதி விளக்கம்
- கந்தவேள் கதையமுதம்
- மச்சு வீடு
- சங்க நூற் காட்சிகள்
- அற்புதத் திருவந்தாதி
- வளைச் செட்டி
- வீரர் உலகம்
- புது டயரி
- நவக்கிரகங்கள்
- தமிழ்ப் பழமொழிகள் பாகம் 1
- தமிழ்ப் பழமொழிகள் பாகம் 2
- தமிழ்ப் பழமொழிகள் பாகம் 3
- தமிழ்ப் பழமொழிகள் பாகம் 4
- கிழவியின் தந்திரம்