அண்ணாதுரை சி.என்.

 

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 – 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்[3]. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர்.

பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடாகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர். அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்..

திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன.

வேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தியுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது.

இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள், டி.வி. நாராயணசாமி, கே. ஆர். ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்.

அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் ஆரிய மாயை (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதமும் (தண்டம்), சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது.

http://www.arignaranna.info/


அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்

தோற்றம் : 15 – 9 – 1909
தந்தை: நடராசன்
தாய் : பங்காரு அம்மாள்
பிறந்த ஊர் சின்ன காஞ்சிபுரம்
வாழ்க்கைத்துணை இராணி அம்மையார்
புனை பெயர் செளமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன்

1929-34 – சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு
11-2-34 – முதல் சிறுகதை ‘கொக்கரகோ’ ஆனந்த விகடனில் வெளிவந்தது.
1-2-36 – சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் காங்கிரசும் பற்றிச் சொற்பொழிவு.
1936 – சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சி உறுப்பினராக நிற்றல்.
11-4-37 – நீதிக்கட்சிச் செயற்குழு உறுப்பினராதல்
1937 – விடுதலை, குடி அரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி
9-12-37 – முதற் கவிதை, காங்கிரஸ் ஊழல் விடுதலையில்
26-9-38 – இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்ட குற்றம் சாட்டி நான்கு மாத வெறுங்காவல்
13-1-39 – தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை
18-1-39 – தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல்.
10 -2-39 – சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்
6-1-40 – பம்பாயில் பெரியார் – அம்பேத்கார் உரையாடல் : மொழிபெயர்ப்பு
2-6-40 – காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு
7 3-42 – திராவிடநாடு கிழமை இதழ் தொடக்கம்.
14-3-43 – சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்.
5-6-43 – ‘சந்திரோதயம்’ நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல்.
19-8-44 – சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு – அண்ணாதுரை தீர்மானம் – நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல்.
15-12-45 – சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடக அரங்கேற்றம் – அண்ணா நடித்தல்
மே 1946 – கருஞ்சட்டைப்படை மாநாடு – தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு
29-7-46 – நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல்
25-4-47 – ‘வேலைக்காரி’ நாடகம்.
1-6-47 – ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகம்.
15-8-47 – ஆகஸ்டு பதினைந்து விழா நாளே’ என விளக்கம் தருதல்
28-9-47 – தந்தை பெரியார் 69வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை – இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்’.
14-1-48 – ‘நல்ல தம்பி’ திரையிடல்.
18-6-49 – தந்தை பெரியார் – மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல்.
10-8-49 – மாலைமணி’ – நாளிதழ் ஆசிரியர்.
17-9-49 – தி.மு.க. தோற்றம்
18-9-49 – ‘திராவிட நாடு’ இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு. நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல். எதிர்ப்பு கண்டு பத்தாம் நாள் விடுதலை.
12-1-50 – நாடெங்கும் பொங்கல் விழா – உழவர் விழா எடுக்க அறிக்கை விடல்.
1950 – திருச்சிச் சிறையில் இலட்சிய வரலாறு’ எழுதுதல்.
1951 – ‘ஆரியமாயை’ நூலுக்குத் தடை
17-9-51 – திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல்.
16-12-1951 – தி.மு.க. முதல் மாநில மாநாடு.
1-8-52 – சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர்
15-6-53 – ‘நம்நாடு’ நாளிதழ் தொடக்கம்
13-7-53 – மும்முனைப் போராட்டம் – மூன்று
2- 2 – 56 – இணைப்புக்காகப் பொது வேலை நிறுத்தம்
29-4-57 – தமிழ்நாடு சட்டமன்றத் தி. மு. கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல்.
9 -6–57 – ஓம் லேண்டு ‘ (Homeland) ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல்
2-3-58 – தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.
24-4–59 அண்ணாவின் தம்பியர் சென்னை மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்தல்.
1-8-60 – இந்தி எதிர்ப்பு மாநாடு – செங்கையில் அண்ணா தலைமை உரை
1962 சம்பத் விலகல் குறித்து அண்ணா அறிக்கை
26-2-62 – சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா , நாடாளுமன்ற மேலவை உறுப்பினராதல்
2-8–62 – விலைவாசி உயர்வுக் போர் – வேலூர் சிறையில் பத்து வாரம்.
17-11-63 – கட்டாய இந்தி – 17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல், 16 -11 – 63 அன்றே கைதாகி, ஆறுமாதம் – சிறைத்தண்டனை ஏற்றல்.
1-3-67 – தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல்.
14-4-67 – ‘தமிழ்நாடு’ பெயரிட்டுப் பெருமை பெறல்
10-1–68 – இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல்
8-9-68 – அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குதல்
4-1-69 – கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கடைசிச் சொற்பொழிவு.
2-2-69 – புகழ் உடம்பெய்தல்

அண்ணா ஒரு சகாப்தம் – தமிழவேள் ச.மெய்யப்பன்

அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதன்மைப் பேச்சாளராகத் திகழ்ந்தார். பேச்சிலும், எழுத்திலும் புதுமை பல செய்து மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். அவர் எழுத்தும் பேச்சும் விழி . ணர்ச்சி ஏற்படுத்தின. கலைகளில் சிறந்த காஞ்சியில் தோன்றி, தமிழ்ப் பாசறையாம் பச்சையப்பனில், பட்டம் பெற்றுப் பெரியார் பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற மாமனிதர். பேச்சாற்றலாலும் எழுத்தாற்றலாலும் புதிய தமிழகம் உருவாகக் கனவு கண்டவர். ஆற்றல் வாய்ந்த அவரது எழுத்தும் பேச்சும் தமிழ் உரைநடையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. அண்ணாவின் பாணி (மரபு) பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. மொழி முறுக்கேறியது, புதியதோர் விசையைப் பெற்றது. அண்ணா வழியினரின் எழுத்தும் பேச்சும் தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தன.

பண்டிதர் மொழி மக்கள் மொழியாயிற்று. நாவாலும் பேனாவாலும் அண்ணா ஆற்றிய பணி அளவிடற்கரியது. பல ஆய்வேடுகள் வந்திருந்தாலும் அண்ணாவின் பங்களிப்பு முழுவதையும் மதிப்பீடு செய்யவில்லை. சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆகிய அனைத்து இலக்கிய வடிவங்களிலும் ஈடுபட்டு உழைத்துப் புதிய பாணியை அவர் உருவாக்கியுள்ளார். அடுக்குத் தொடர்களும் எதுகை மோனைகளும் காவிரியைப் போல் கங்கையைப் போல் அவரது பேச்சில் ஊற்றெடுத்தன். அவரது பேச்சில் தமிழகமே கட்டுண்டு கிடந்தது. கருத்தாலும் நடையாலும் சொல்லும் வகையாலும் அண்ணாவுக்கெனத் தனிவழி அமைந்திருந்தது. அவர் நடத்திய இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளும், கடிதங்களும், இலக்கியத் தரத்துடன் அமைந்து வளர் தமிழுக்குச் செழுமை சேர்த்தன. நாவன்மை மிக்க நாடு போற்றும் நாவலராகத் திகழ்ந்த அண்ணா வளமான நடையினால் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் விளங்கினார். சொற்பொழிவுகளில் புதிய பாணியை உருவாக்கி மேடைத்தமிழுக்கு வளம் சேர்த்தார். மேடைத்தமிழை உருவாக்கியவர்களில் அவர் முதல் வரிசையர். அவர் சொற்பொழிவுத் தலைப்புகளும் படைப்புகளுக்குச் சூட்டிய பெயர்களுமே புதுமையாய் அமைந்து விட்டன. கவிதைப் பண்பு அமைந்த உரைநடை, அவருக்கு உரைநடை வரலாற்றில் நிலைபேறு அளித்து விட்டது. அண்ணா அழகாகவும் சுவையாகவும் எழுதினார். அவர் படைப்பு எந்த இலக்கிய வடிவமாகயிருந்தாலும் சீர்திருத்த ஒளிவீசும். இதழாளராக அமைந்ததால் நிரம்ப எழுத வாய்ப்பும் கிடைத்தது. அவர் கருத்துப் பரப்பாளராகவும் விளங்கினார். அண்ணாவின் பன்முகச் சாதனைகளை அங்கீகரித்து, பெருமை சேர்க்கும் வகையில் புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம், டாக்டர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது.

அண்ணா ஒரு அறிவாலயமாகவே திகழ்ந்தவர். சொற்பொழிவாளர்- எழுத்தாளர் – நூலாசிரியர் – நாடகாசிரியர்- இதழாளர் – சிந்தனையாளர் – தலைவர் எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் திகழ்ந்தார். தமிழகத்தில் அண்ணாவுக்கு அமைந்த நினைவுச் சின்னம் போல் யாருக்கும் அமையவில்லை. அறிஞர் அண்ணா மிகவும் புகழ்பெற்ற , ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார். அண்ணாவின் படைப்புகளை அரசுடைமையாக்கிய தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி. அரசுடைமையாக்கிய பாவேந்தரின் நூல்களை முதன் முதலில் வெளியிட்டது மணிவாசகர் பதிப்பகம். தற்பொழுது அண்ணாவின் நூல்களையும் வெளியிட்டு மகிழ்ச்சியடைகிறது.

– குமாஸ்தாவின் பெண் (குறுநாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1998, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.