கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 45 
 
 

  பங்கனி மாதத்துப் படைபதைக்கும் வெய்யில் ஜீவராசிகளை எரித்து நீறாக்கிவிட முனைந்துவிட்டது போல் உக்கிரமாகக் காய்ந்து கொண்டிருந்தது. தெருவில் ஈ காக்கை இல்லை. சூனிய வெளியாக விளங்கியது. காலைப் பொரிக்கும் அந்த வெய்யிலில் வெளியே கிளம்ப யாருக்குத்தான் துணிவு வரும்?

  ஆனால் தேசாந்திரியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் காளமேகத்துக்கு அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவா முடிகிறது? வெய்யிலும் மழையும் பார்த்து ஒடுங்குவதற்கு வீடு வாசலோடு கூடிய மனிதரில்லையே அவர்! மேலும் அவருடைய மன நிலையையும் வாழ்க்கையையும் பொறுத்தவரை காலுக்குச் செருப்பும், கைக்குக் குடையும் யாராவது வற்புறுத்தி அவரிடம் அளித்தால்கூட அவருக்கு அவை அநாவசியமே. ‘ சுமந்து திரிகின்ற உடலின் சுமை போதாதென்று தோற்செருப்பையும் துணிக் குடையையும் சுமந்து கொண்டு வேறு திரிய வேண்டுமா?’ என்று எண்ணுகிற அளவிற்கு விநோதமானது அவருடைய மனோபாவம். அவர் விந்தை மனிதர். ‘இப்படிப்பட்டவர்’ என்று வரையறை செய்து கணங்களைச் சித்திரித்துவிடமுடியாதவர். வெளிப் பார்வைக்குப் பைத்தியக்காரர், பைத்தியக்காரத்தனம் என்று உலகம் அவரையும் அவர் குணங்களையும் பற்றி முடிவு செய்து கொண்டால் அது அவருடைய குற்றமில்லை. சீறி வசைபாடுவார். சில சமயங்களில் பெட்டிப் பாம்பாக ஒடுங்கி விடுவார் வேறுசில சந்தர்ப்பங்களில், இந்த இரண்டு மாறுபட்ட நிலைகள் மட்டுமல்ல. இன்னும் நமது அறிவிற்கு அப்பாற்பட்ட, விளங்கிக்கொள்ள முடியாத எவ்வளவோ இயல்புகளை விசித்திர ரீதியாகவும் சரி, வேதாந்த ரீதியாகவும் சரி, அவரிடம் காணலாம். அதெல்லாம் அவருக்குச் சாதாரண வாழ்க்கை.

  சோறும் நீரும் துணியும் காணாத துயரம் அதிலே இருப்பது போல, இருந்தது போல நாம் மயங்கி எண்ணிக்கொள்கிறோம். ஆனால் அந்த வேடிக்கை மனிதருடைய வாழ்க்கையை ஊன்றி ஆராய்ந்த பின் உணர்ந்து பார்த்தால், அப்படி எவற்றையுமே அவராக உணர்ந்து துன்பப்பட்டதாகத் தெரியக் காணோம். அந்த உணர்வுகூட அங்கே நிழலிடவில்லை.

  தாகம் நாவை வறளச் செய்தது. காளமேகம் அந்தத் தளர்ச்சியோடு தளர்ச்சியாக நடந்து கொண்டிருந்தார். ஆனால் சகிக்க முடியாத வெய்யில் வேதனையில் எவ்வளவு நேரந்தான் தாகத்தைத் தாங்கிக் கொண்டு நடக்க முடியும்? கால்களும் தலையும் வெய்யிலில் வாடி வருந்தும்போது தாகம் வேறு பற்றிக் கொண்டால் கேட்கவா வேண்டும்?

  இந்த நிலையில் அவரைப் போலவே அந்த வெய்யிலில் வந்து கொண்டிருந்த வேறோர் ‘மானிட ஜீவன்’ அவர் திருஷ்டியில் பட்டது. ஆனால் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. எதிரே வந்து கொண்டிருந்த அந்த மோர்க் காரியின் தலையில் வெய்யிலைத் தாங்கமோர்ப்பானையொன்று பெரிதாக இருந்தது. காலில் செருப்பணித்திருந்தாள். ‘மோரோ மோர்’ என்று கூவிக்கொண்டு வந்த அவளுக்கும் காளமேகத்திற்கும் வித்தியாசம் இவ்வளவு தான்.

  அவளை நிறுத்தி, மேலாடை முடிச்சில் இருந்த காற்பணம் காசை நீட்டி ஒரு குவளை மோர் கொடுக்குமாறு கேட்டார் காளமேகம். அவளும் அதை வாங்கிக்கொண்டு பக்கத்திலிருந்து ஒரு திண்ணையில் பானையை இறக்கி, அவருக்குக்குவளை நிறைய மோர் கொடுத்தாள். குவளையைக் கையில் வாங்கி அதிலிருந்து இரண்டு வாய் மோர்தான் குடித்திருப்பார் காளமேகம்! ‘இது மோர்தானா?’ என்ற சந்தேகமாகப் போய்விட்டது அவருக்கு. ஒருவேளை தவறிப்போய்த் தண்ணீரைக் கொடுத்துவிட்டாளோ என்று கூடத் தோன்றியது. கூசாமல் தண்ணீரை விளாவி இருந்தாள் அந்த மோர்க்காரி. கடைவாயிலே வழிந்த மோரும் கையிற் குவளையும் தோன்ற அபிநயத்துடன் மண்டையை ஆட்டிக் கொண்டே பாட ஆரம்பித்துவிட்டார் காளமேகம்;

  “காரென்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது
  நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின்
  வாரொன்று மென்னகிலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
  மோரென்று பேர்படைத்தாய் முப்பெரும் பெற்றாயே!”

  “வானத்திலிருக்கும்போது உனக்கு மேகமென்று பெயர். தரையில் மழையாகப் பெய்தபின் தண்ணீரென்று பெயர். இந்த பாழாய்ப்போன மோர்க்காரிகள் கைக்கு வந்து பானையில் புகுந்த பிறகு உனக்கே மோர் என்றும் பெயர் – ஆகா! உன் பெயர் எவ்வளவு விரிந்துவிட்டது மூன்று பேரிலல்லவா பரவுகிறது உன் புகழ்!” இக்கருத்தமையப் பாடி முடித்துவிட்டு, எஞ்சிய மோருடன் குவளையை அந்த மோர்க்காரியிடம் கொடுத்துவிட்டுச் சென்றார் காளமேகம். அந்த நிலையில், அப்போது அவள் கூட அவரைப் பித்தர் என்றுதான் எண்ணியிருக்க வேண்டும்.

  – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

  Print Friendly, PDF & Email

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *