கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 37 
 
 

அம்பிகாபதியின் கதையைப் பற்றி நம்மிற் பலர் பொய்யென்றும் புனைசுருட்டென்றும் சற்று அசட்டையாகவே கருதி வருகின்றோம். கருத்தைப்பற்றிக் கூடத் தவறில்லை . அம்பிகாபதியின் காதலைப் பற்றி வழங்கும் கதையை ஒதுக்குவது இரசனைக்கு அழகு ஆகாது.

வடமொழியிலுள்ள ‘பில்ஹணீயத்தை’ ஒத்தது அம்பிகா பதியைப் பற்றி நாம் கேட்டு வரும் கர்ண பரம்பரையைான காதல் கதை. காதலைப் பற்றிய தெய்வீக எண்ணம் அது கைகூடும்போது எழுவதைக் காட்டிலும் ஏற்றத் தாழ்வுகளால் அது கைகூடாமற் போகும்போதுதான் மிகுதியாக ஏற்படுகிறது.

காதலின் ஏமாற்றத்தை அழகாகச் சித்திரிக்கும் காவியங்கள் உலகெங்கும் உண்டு. லைலா மஜ்னூவையும் பில்ஹணீயத்தையும் அனுபவித்து முடிந்தவுடன் காதலைப் பற்றி எந்தவிதமான தெய்வீக நினைவுகள், அபிப்ராயங்களாக மலர்கின்றனவோ, அதே நினைவு ‘அம்பிகாபதி அமரவாதி’ காதல் கதையின் இரசனையிலும் எழுகிறது.

“அம்பிகாபதி கவிஞர் மகன். அமராவதி சோழ வேந்தனுக்கு மகள். இந்த ஏற்றத்தாழ்வுதான் அவர்கள் காதலுக்கு நடுவில் இருந்தது. இங்கே அம்பிகாபதியின் தந்தையாகிய கம்பரோ, அங்கே அமராவதியின் தந்தையாகிய சோழ மன்னனோ இந்தக் காதல், தோன்றி வளர்ந்ததை முதலில் அறிந்தார்களில்லை. ஆனால் தானே ஒருநாள் வெளிப்பட்டது இவர்கள் காதல். கம்பர் அம்பிகாபதியைக் கடிந்து கொண்டார். என்ன நிகழுமோ என்று அஞ்சினார். சோழ வேந்தன் கடுஞ்சினங் கொண்டிருந்தான்.

‘அரச குலத்தைச் சேர்ந்த தன் மகள் ஆஸ்தான கவியின் மகனைக் காதலிப்பதா? திறமையிருந்தாலும் ஏற்றத் தாழ்வு ஏற்றத் தாழ்வுதானே?’ என்று சீறியது அரசன் மனம், முடிவில் சோழ வேந்தன் தன்னுடைய பேரவையில் “பரம்பொருளுணர்ச்சி தோன்ற நூறு கவிதைகளைப் பாடினால் அம்பிகாபதியைத் தண்டிக்காமல் விடுதலை செய்துவிடுகிறேன்” என்று சொன்னான். இந் நிபந்தனையை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். நிபந்தனையில் வழுவினால் அம்பிகாபதி உயிரிழக்க நேரிடும்.

நிபந்தனை நடக்க வேண்டிய நாளில் அவையில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. அம்பிகாபதியின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாக அவன் அமர்ந்திருந்த மேடைக்கு நேரே எதிர்ப் புறத்தில் மேல் மாடத்தின் உப்பரிகையில் அமராவதி வீற்றிருந்தாள். அவன் ஒரு பாட்டுப் பாடி முடிக்கவும் அவள் ஒரு மலரை எடுத்துக் கீழே தன் பக்கத்தில் எண்ணிக்கைக்கு அறிகுறியாக வைத்துக் கொண்டாள். இந்த அடையாளத்தைக் கொண்டே அம்பிகாபதியும் பாடல்களை எண்ணிக் கணக்கிட்டு மேலே பாடி வந்தான். எப்போதுமே முதலாவதாகப் பாடும் காப்புச் செய்யுளை எண்ணிக்கையோடு சேர்த்துக்கொள்ளும் வழக்கமில்லை. இதை அமராவதி அறியாள். எனவே அம்பிகாபதி தெண்ணூற்றொன்பதாவது பாடல் முடிந்ததும் காப்புச் செய்யுளையும் சேர்த்து எண்ணிக் கொண்டு நூறாவது மலரைக் காட்டி முடிந்து விட்டது என்பதற்குரிய சைகையை அவள் அவனுக்குத் தெரிவித்துவிட்டாள். அம்பிகாபதி அவளுடைய அழகுத் தோற்றத்தில் ஈடுபட்டிருந்ததனாலும் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் அவளையே நம்பி இருந்ததாலும் முடிந்து விட்டது என்று எண்ணிப் பாடுவதை நிறுத்திவிட்டான். மகிழ்ச்சிக் களிப்பினால் அமராவதியின் கண்களும் அவன் கண்களும் உறவாடின. “

அவையில் அமைச்சர்களும் பிற புலவர்களும் பாடலைக் கணக்கிட்டு வந்தனர். இறுதியில் அம்பிகாபதி நிபந்தனை யிலிருந்து விலகிய தவறு வெளிப்பட்டது. ‘நிபந்தனையின் வெற்றி காதலுக்கே வெற்றி’ என்று கனவு கண்டு கொண்டிருந்த காதலர்கள் திகைத்தனர். அம்பிகாபதி உயிரிழப்பது உறுதி என்று தெரிந்து அமராவதி உயிர்விட்டாள். கம்பர் எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் சோழன் அம்பிகாபதியைக் கொலை செய்யச் சொல்லி ஆணையிட்டு விட்டான். இரண்டு காதலர்களின் உயிரும் இந்த உலகிலிருந்து ஒன்றாய்ப் பிரிந்து வானுலகு சென்றன.” இதுதான் அம்பிகாபதியின் அமரகாவியம்.

இதை விளக்கும் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் மிகுதியாக உள்ளன. அவைகளிலிருந்து இந்த வரலாற்றின் சுருக்கம் – கிடைக்கிறது. அதிலும் தன் மகன் இறந்தபோது பெற்ற பாசம் உந்தக் கம்பர் பாடியதாகக் காணப்படும் செய்யுள் உருக்கந்தோய்ந்த சொற்கோவையாக அமைந்திருக்கிறது.

கம்பர் தாமே பாடிய இராமாவதாரக் கதை நிகழ்ச்சியோடு தம் மன நிகழ்ச்சியையும் ஒப்பிட்ட நிலையுடன் சோகமயமான அந்தச் செய்யுளைப் பாடுகிறார்.
“இராமன் காடு செல்வான் என்ற உணர்வு தோன்றிய மாத்திரத்தில் தசரதன் தன்னுயிரையே இழந்துவிட்டான். பெற்ற பாசத்தின் வேகம் அவனை அவ்வளவு உணர்ச்சித் தாக்குதலுக்கு ஆளாக்கிவிட்டது. ஆனால் நானோ என் மகன் அம்பிகாபதி இறந்த பின்னும் உயிர் விட மாட்டாமல் நெஞ்சு வேதனையும் தீராமல் திண்டாடுகின்றேன். என் நெஞ்சுக்குத்தான் எவ்வளவு உரம்? என்ன கல் நெஞ்சம் இது? இதற்கு உவமை காவியங்களில் கூடக் கிடைக்காதே!?” என்ற கருத்தோடு அப்பாடல் எழுந்துள்ளது.

“பாப்போத ஞாலம் ஒரு தம்பி ஆளப் பனிமதியம்
தூரப்போன் ஒரு தம்பி பின்வரத் தானும் துணைவியுடன்
வரப்போன மைந்தர்க்குத் தாதை பொறாதுயிர் மாய்ந்தனன் நெஞ்
சுரப்போ யனக்கு இங்கு இனியார் உவமை உரைப்பதற்கே”

பரப்போ = கடல் சூழ்ந்த ஞாலம் = உலகம். மைந்தன் = ராமன், தாதை = தசரதன், உரப்பு = அழுத்தம்.

என்பதே அந்தப் பாடல். இவை உண்மையா? இடைக் காலத்துச் செருகலா?’ என்று ஆராயும் வழி நமக்கு வேண்டியதில்லை. காவியமாக எழத் தகுதி வாய்ந்த ஒரு காதல் கதைக்குப் பின்னணிச் சான்றாக அமையும் சுவை இதில் இருக்கிறது. அது போதும்.

உருக்கமும் நயமும் நிறைந்த உணர்ச்சிச் சித்திரமாக விளங்குகிறது இந்த தனிப்பாடல். இதை அனுபவிப்பது ரசிகனின் உரிமை .

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *