புலவர் போற்றிய புண்ணியன்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 44 
 
 

  தொண்டைவள நாட்டைச் சேர்ந்த காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருமாகறல் இயற்கையழகு மிகுந்த ஊர். திருமாகறலையும் அதைச் சுற்றியிருந்த வேறு சில சிற்றூர்களையும் இராஜமானியமாகப் பெற்று ஆண்டு வந்தார் புண்ணிகோட்டி முதலியார் என்பவர். இளமையில் மிகவும் ஏழையாக இருந்த அவர், தாம் செய்த அரிய பெரிய செயல் ஒன்றிற்காகச் சிற்றரசன் ஒருவனிடமிருந்து இந்த மானியத்தைப் பெற்றிருந்தார். தம் வாழ்க்கையில் அவ்வளவு பெரிய செல்வப் பேறும் பதவியும் தமக்கு வரமுடியும்’ என்ற எண்ணம் கல்லும் நெல்லும் தூக்கிச் சுமந்து வாழ்ந்த அந்த இளமைக் காலத்தில் கனவிலே கூட அவருக்குத் தோன்றியதில்லை.

  இளமையில் ஏழ்மையின் தொல்லைகளைத் தாமே நன்கு அனுபவித்து அறிந்திருந்தவர் ஆகையால், அப்போது எந்தப் பொருளின்றி நாம் ஏங்கினோமோ, அது இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றது! நம்மைப்போல் இன்றும் ஏங்கிக் கிடக்கும் . ஏழையர்க்கும் இரவர்க்கும் அவர்களுக்கும் மேலாகக் கலைஞர் களுக்கும் கவிஞர்களுக்கும் வாரி வாரி வழங்குவோம். அதுதான் அன்று நம்மை வருத்திய செல்வத்தை இன்று நன்றாகப் பழிவாங்குவதற்கு ஏற்ற வழி என்று எண்ணினார் அவர். அப்படியே செயலாற்றியும் வந்தார். ‘செல்வம்’ ‘செல்வம்’ என்று சொல்லும் பொருளைச் செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற மொழிக்கேற்பச் செல்லவிட்டுப் புகழடைந்து கொண்டே அவர் வாழ்க்கையைக் கழித்துவிடவேண்டும் என்று கருதினார்.

  பிறருக்குக் கொடுத்து மகிழும் விருப்பத்தையே ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருந்த இவரிடம் நாள் தவறினாலும் கலைஞரும் கவிஞரும் வந்து பரிசில் பெற்றுப் பழகிப்போவது தவறாது. வருகின்றவர்களின் மனப் பண்பை அறிந்து அதற்கு ஏற்றது போல உதவுகிற பண்பும் புண்ணிய கோட்டி முதலியாரிடம் சிறப்பாக அமைந்திருந்தது.

  அன்று நடுப்பகலில் ஒரு புலவர் அவரைத் தேடிவந்தார். அப்போது வேனிற்காலம் தொடங்கும் பருவமாக இருந்ததனால், புண்ணியகோட்டி முதலியார் தம்முடைய மாளிகைக்கு முன் கோடை நாட்களுக்காக ஒரு பெரிய பந்தல் போட்டிருந்தார். பந்தலின் கீழே குளிர்ச்சிக்காக ஆற்றுமணலை வண்டிகளில் கொண்டுவந்து பரப்பிக் கொண்டிருந்தார்கள், முதலியார் அவற்றை மேற்பார்த்துக் கொண்டிருக்கிற தருணத்திலேதான் அந்தப் புலவரும் வந்து சேர்ந்தார். மாளிகை முன் குறட்டில் அமர்ந்துகொண்டிருந்த முதலியார், தாமே வலுவில் அங்கிருந்து எழுந்து வெள்ளை வெளேரென்ற புதிதாகப் பரப்பியிருந்த ஈரமணலைத் தாண்டிப் புலவரை எதிர்கொண்டு அழைத்து வந்தார். முன்பின் அறிமுகம் உள்ளவர்களானாலும் சரி, அறிமுகம் இல்லாதவர்களானாலும் சரி, அன்போடு வரவேற்று உபசரித்து ஆதரவு கொடுப்பதுதான் அவருக்கு வழக்கமாயிற்றே

  அந்தப் பெரிய பந்தலைப் போட்டு வெம்மை தணிய ஈர வெண்மணலைப் பரப்புவதைக் கண்ணும் கருத்துமாக அவரே மேற்பார்த்துச் செய்வதற்குக்கூட அவரது கொடையுள்ளமே காரணம். வெயிலில் கால்வாட நடப்போர், உடலும் மனமும் குளிரத் தங்கிச் செல்வதற்காகவும் நீர் வேட்கையோடு வருபவர்கள் தண்ணீரும் நீர் மோரும் பருகி இளைப்பாறிச் செல்வதற்காகவுமே அவர் அந்தப் பந்தலை அவ்வளவு அக்கறையோடு கவனத்துடனே மேற்பார்த்து வேலை வாங்கினார். புதிதாக வந்த புலவர் இந்த அழகான ஏற்பாடுகளை எல்லாம் பார்த்துக்கொண்டே முதலியாருடன் திண்ணை முன் குறட்டிலே சென்று அமர்ந்தார். தரையில் பரப்பியிருந்த புது மணலில் நடந்து சென்றபோது, சித்திரம் வரைந்தாலும் தெளிவாகத் தெரியும் போல இருந்த அந்தத் தூய வெண்மணல் புலவர் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

  புலவரும் முதலியாரும் பந்தல் வேலைக்காரர்கள் மணலைப் பரப்பித் தங்கள் வேலைகளையெல்லாம் முடித்துச் சென்ற பின்னரும் மிகுந்த நேரமாக வாசல் குறட்டிலேயே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். பின், முதலியார் புலவரை அன்போடு உணவுக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரப் பழக்கத்திலேயே புலவர் முதலியாரைத் தம்மிடம் ஈடுபாடு கொள்ளச் செய்துவிட்டார்.

  தம்முடைய விருந்தினராகிய புலவரை உண்பித்த பின், குளிர்ச்சியாக இருக்கும் என்றெண்ணி வாயிலிற் புதிதாகப் போட்டிருந்த பந்தலின் கீழ் மணற் பரப்பில் ஒரு பட்டுக் கம்பளத்தை விரிக்கச் செய்து தாம்பூல சகிதம் புலவரோடு அமர்ந்தார் முதலியார். கீழே குளிர்ந்த மணலின் இதமும் சூழ மாளிகைக்கு முன்புறம் இருந்த தோட்டமும் கீற்றுப் பந்தலும், கோடையை மறக்கச் செய்துவிட்டன. தாம்பூலம் தரிக்குமாறு புலவரை வேண்டிக்கொண்டேதாமும் தரிக்கலானார் முதலியார். அதன் பின்பு அங்கேயே பந்தலில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். நேரம் ஆக ஆகப் புலவர் பேசும் போதே தம் கவனத்தை எங்கேயோ இலயிக்கவிட்டு விட்டுத் துயரப் பெருமூச்சு விடுவதை முதலியார் கண்டுகொண்டார். இவர் என்ன அவசர உதவியை வேண்டி வந்தாரோ? நாம் பேசிக்கொண்டே இருக்கிறோமே’ என்று ஒருவாறு புலவருடைய மனக்குறிப்பை முதலியாரால் யூகிக்க முடிந்தது.

  இதைக் கண்ட உடனே முதலியார் விநய பாவத்துடனே புலவருக்கு எந்த உதவி வேண்டுமோ அதைக் தாம் உடனே செய்யக் காத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துக் கொண்டார். அவர் அப்படிக் கூறிய பின்னரும் புலவர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நாணமுற்றுத் தலைகுனிந்தவாறு இருந்தாரே ஒழிய வாய்விட்டுத் தாம் வந்த காரியத்தையோ, தமக்கு வேண்டிய அவசர உதவியையோ கேட்கிறபடியாகக் காணோம். ஆனால் அவருடைய வலது கைக் கட்டைவிரல் மட்டும் விரித்திருந்த பட்டுக் கம்பளத்தையும் கடந்து புதுமணலில் ஏதேதோ கீறிக்கொண்டிருந்தது, வாய்விட்டுச் சொல்ல அவர் வெட்கப்படுவது முதலியாருக்கும் புலப்பட்டது.)

  இவருடைய முகச் சாயையில் தெரியும் துயர ரேகையைப் பார்த்தால் ஏதோ உடனடியான உதவி வேண்டி வந்தவராகத் தெரிகிறது! அதைச் சொல்லவும் நாணப்பட்டால் நாமென்ன செய்ய முடியும்? இப்படி எண்ணிக் கொண்டிருந்த முதலியாரின் பார்வை தற்செயலாகப் புலவரின் வலது கைப் பக்கத்திலிருந்து கவரப்பட்டது. அங்கே எதோ எழுத்துக்கள் கீறப்பட்டிருப்பது அந்தத் தும்பைப் பூப்போன்ற வெண்மணலின் மேல் முதலியாருக்கு நன்றாகத் தெரிந்தது. கண்களில் வியப்பின் ஒளி நிழலிட முதலியார் மணலிற் கீறப்பட்டிருந்த எழுத்துக்களைக் கூட்டி வாசிக்கத் தொடங்கினார். ஆம்! புலவர் தமக்கு வேண்டிய உதவியை வாய் திறந்து கேட்கமாட்டாமல் சுருக்கமாக மணலில் எழுதியிருந்தார். மணலில் தாம் கூறியிருந்தவற்றை முதலியார் கவனிக்கிறார் என்பதைப் பார்த்தவுடன் புலவர் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது. அதே சமயத்தில் மணலில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டுத் தலைநிமிர்ந்த முதலியார் சிரித்த முகத்தோடு புலவரை நோக்கினார். புலவரின் கண்களிற் புதிய ஒளியும் முகத்தில் மலர்ச்சியும் இதழ்க்கடையிற் குறுநகையும் கண்டார் முதலியார். புண்ணியகோட்டி முதலியாரின் அந்தப் பார்வை மணலில் தாம் எழுதியிருந்த பொருளைத் தமக்குக் கிடைக்கும்படி செய்யும் என்ற நம்பிக்கையைப் புலவருக்கு ஊட்டியது. அந்த நம்பிக்கை தூண்ட முதலியாரின் பார்வையிலிருந்த வியப்புக்கு விடை போல ஒரு பாடலைப் பாடினார் புலவர்.

  “நள்நிலத்(து) உறும் ஏழை மாந்தர்காள்! நீவிர்
  வேண்டுவன இன்புறீஇ
  நேரிற் கேள்பின் அவை
  தருவன் யான் அலதும்
  நாணில்எத் தினமும் நல்லமனையின் முன்வாயிலல்லி
  நன்மணல் மிகுதிகொட்டியே
  நாம் பரப்பியும் இங்கிருக்கின்றோம் நனிநாடி
  வந்தே அதனை எழுதுமின்
  காணில் அங்கு உடனருள்வம் என்ன அவன்
  கட்டளைப் படியும் திட்டமாகவே
  கையினால் எழுத உவகையோடு பொருள்
  கண்டளித்த பிரபு யார் எனில்
  பூணிலங்கும் ஒளிர் வாந்தி குலத்தில் வரும்
  புண்யனான திகண்யனும்
  புலவர் போற்று மாகறலின் மேவுமெழில்
  புண்ணிய கோட்டியாம் நல்பூபனே!”

  இன்புறீஇ = இன்புறுவித்து கேள்மின் = கேட்பீர்களாக, தருவன் = கொடுப்பேன், அலதும் = அன்றியும், நாணில் = நாணமுற்றால். அருள்வம் = ஆளிப்போம், உவகை = மகிழ்ச்சி, பூண் = அணிகலன்கள், இலங்கு = விளங்கும். மாகறல் = ஊர்.

  வேனிலுக்காக முதலியார் பந்தலின் கீழ்ப் பரப்பியிருந்த புதுமணல் தமக்கும் தம்மைப் போலக் கேட்க நாணுபவர்களுக்கும் எழுதுவதற்கு என்றே பரப்பப்பட்டதாகப் புலவர் பாடிய தற்குறிப்பேற்றத் திறமை நுணுக்கமானது. தம்மை அப்படி நுணுக்கமாகப் புலவர் போற்றிய உட்பொருளை முதலியாரும் புரிந்துகொண்டு வியந்தார். அவர் மணலில் எழுதிக் கேட்ட உதவியை உடனே அளித்தும் உவந்தார்.

  “அது என்ன உதவி?” என்பதைப் புலவரே வாய்திறந்து சொல்ல நாணமுற்று மணலில் எழுதியபோது நாம் அறிந்து கொள்வது அத்தனை அவசியமா என்ன?

  – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

  Print Friendly, PDF & Email

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *