கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 207 
 
 

திருநெல்வேலிச் சீமையில், தச்சநல்லூர் என்று ஓர் ஊர் இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் அந்த ஊரில் அழகிய சொக்கநாதப் புலவர் என்று ஒரு கவிஞர் இருந்தார். இருபொருள் படும்படியான சிலேடைப் பாட்டுக்களைப் பாடுவதில் திறமை . மிக்கவர் அவர். நகைச்சுவை உணர்வும் வேடிக்கையாகப் பேசும் பண்பும் உள்ளவர் அவர். நிறையப் படித்து அறிவு முதிர்ந் தவர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி குறைவு என்பார்கள். ஆனால் படித்தவர்களின் நகைச்சுவையில் உயர்தரமான அம்சம் இருக்கும்.

அந்த நாளில் அழகிய சொக்கநாதப் புலவருக்கு உதவிகள் செய்து பேணி ஆதரித்து வந்தவர் முத்துசாமிப்பிள்ளை என்னும் வள்ளல் ஆவார். ஒரு முறை அழகிய சொக்கநாதப் புலவர் முத்துசாமிப் பிள்ளையைச் சந்திக்கப் போயிருந்தபோது, ஒரு சுவையான அனுபவம் அவருக்கு ஏற்பட்டது.

புலவர் முத்துசாமிப் பிள்ளையைச் சந்திக்கச் சென்ற அதே சமயத்தில் அரைகுறையாக மிருதங்கம் பழகிய ஒரு மிருதங்க வித்துவானும் பிள்ளையவர்களைச் சந்திக்க வந்திருந்தார். பிள்ளைக்கோ எதையும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேயும் கலைஞர்களைக் கண்டால் பிடிக்காது. “ஐயா! மிருதங்க வித்துவானே! உங்களுடைய வாசிப்பைக் கேட்பதற்கு இப்போழுது எனக்கு நேரமில்லை. போய்விட்டு இன்னொரு சமயம் வாருங்கள், பார்க்கலாம்’ என்று தட்டிக்கழிக்க முயன்றார் பிள்ளை .

“உங்களைப் போன்ற வள்ளல் இப்படிப் புறக்கணித்தால் என் போன்ற ஏழைக் கலைஞன் என்ன செய்ய முடியும்? தயவு செய்து நீங்களும் புலவரும் என் வாசிப்பைக் கேட்கத்தான் வேண்டும்” என்று சொல்லிக் கொண்டேவிடாப்பிடியாகக் கீழே உட்கார்ந்து மிருதங்கத்தின் உறையைக் கழற்றத் தொடங்கினார் வந்தவர்.

முத்துசாமிப் பிள்ளையின் முகத்தில் வெறுப்பின் நிழல் படிந்தது; புலவரோ குறும்புத் தனமாகச் சிரித்தார்.

“உமக்கென்ன? நீர் சிரிக்கிறீர்? விறகுக் கட்டையால் பாறையில் அடிப்பது போல் இன்னும் சிறிது நேரத்தில் மிருதங்கத்தின் முதுகைப் பிளக்கப் போகிறான், இந்தக் குற்றுக்குட்டி.! அதைக் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருப்பதைவிடச் ‘சங்கீதத்தையே கழுவேற்றிவிட்டால் என்ன?’ என்று தோன்றும் ” என்று அழகிய சொக்கநாதரின் காதருகே மெல்லச் சொன்னார் முத்துசாமிப் பிள்ளை.
அழகிய சொக்கநாதர் பதில் சொல்லாமல் மீண்டும் குறும்பு மிளிரச் சிரித்தார்.

“என்ன? நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் பதில் பேசாமல் சிரிக்கிறீர்களே?” சற்றுக் கோபத்தோடு புலவரை நோக்கி இப்படிக் கேட்டார் பிள்ளை.

“பேசாமல் கடைசிவரை பார்த்துக்கொண்டிருங்கள். இந்தப் பயல் சங்கீதத்தின் மானத்தை வாங்கி முடித்தவுடன் நான் இவன் மானத்தை வாங்கி விடுகிறேன்” என்று புலவர் மெதுவான குரலில் பிள்ளையிடம் கூறினார். கற்றுக் குட்டி வித்துவான் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தார்.

வாசிப்பா அது? தனக்கு வேண்டாத பகைவனின் முதுகில் யாரோ ஒரு முரட்டு மனிதன் ஓங்கி ஓங்கி அறைவது போல் மிருதங்கத்தின் இரு புறத்திலும் தன் இரு கைகளாலும் வெளுத்து . வாங்கியது அந்தக் கற்றுக் குட்டி, மிருதங்கம் என்னும் அந்த வாத்தியத்துக்குக் கையும் காலும் முளைத்து, உயிரும், வந்து அது எழுந்திருந்து தன்னைச் சித்திரவதை செய்கிற ஆளை உதைத்துவிடுமோ என்று அஞ்சத் தக்க அளவு கொடுமையாக இருந்தது வாசிப்பு.

விதிக்கடங்கிய சுவரம், வளிதம், குழைவு, நளினம் ஒன்றுமே அந்த வாசிப்பில் இல்லை.

அப்போது நெல் அளந்து கொண்டு போவதற்கான கூடைகளை எடுத்துக்கொண்டு சில வேலைக்காரப் பெண்கள் அங்கே வந்தார்கள். முத்துசாமிப் பிள்ளையின் நிலங்களில் ஏதோ நடவு, களையெடுப்பு, இம்மாதிரி வேலைகளைச் செய்ததற்காகக் கூலி நெல் பெற்றுக் கொண்டு போக வந்தவர்கள் அந்தப் பெண்கள், பெண்கள்.

“இவர்களுக்கு நெல் அளந்து போட்டு அனுப்பி விடுங்கள். அப்புறம் நான் மீண்டும் வாசிக்கிறேன்” என்றார் கற்றுக்குட்டி வித்துவான். பிள்ளைக்கு அதைக் கேட்டு உள்ளம் கொதித்தது. இதுவரையில் மிருதங்கத்தைக் கொன்றது போதாதென்று இன்னும் வேறு கொல்லப் போகிறாயா?’ என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டார்.

அப்போது புலவர் சிரித்துக் கொண்டே வித்துவானை நோக்கிக் கூறினார்: “ஐயா, வித்துவானே! இந்தப் பெண்கள் நெல்லளந்து கொண்டு போக வரவில்லையாம். இதுவரை இங்கே யாரோ சாணி தட்டிக்கொண்டிருக்கிறாற் போல் ஓசை கேட்டதே என்று எரு அள்ளிக்கொண்டு போகக் கூடைகளோடு வந்திருக்கிறார்கள்.”

கற்றுக்குட்டி வித்துவானுடைய முகத்தில் அசடு வழிந்தது. புலவருடைய கேலியைக் கேட்டு முத்துசாமிப்பிள்ளை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டார். வேலைக்காரப் பெண்களும் சிரித்துவிட்டார்கள். அந்தக் கேலிப் பேச்சை ஒரு பாட்டாகவே பாடிக் கற்றுக் குட்டியின் மானத்தை வாங்கி விட்டார் புலவர்.

“எங்கள் முத்து சாமிமன்னா இங்கே யொருவன் மிரு
தங்கமதை ஓயாமல் தட்டினான் – அங்கங்கே கூடி நின்ற பெண்களெருக் கொள்வதற்குக் கூடையெடுத்
தோடிவந்தார் போர்த்தா யோ!”
– தனிப்பாடல்

மிருதங்கத்தின் முதுகில் தான் அடித்ததைவிடத் தன் முதுகில் – யாராவது பலமாக ஓங்கி அடித்திருந்தால் கூட இவ்வளவு அவமானம் ஏற்பட்டிராது ‘கற்றுக் குட்டிக்கு!’ புலவர் தம் வார்த்தைகளாலேயே மிருதங்கக்காரனின் மானத்தை வாங்கிவிட்டாரே .

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email
'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *