கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 182 
 
 

    புதுக்கோட்டைச் சீமையில் விராலிமலை என்று ஒரு சிற்றூர் இருக்கிறது. அவ்வூரில் எழில் வாய்ந்ததொரு குன்றின் மேல் தமிழ் முருகன் கோவில் கொண்டிருக்கிறான். குன்றின் மேல் கண் பார்வை செல்லுமிடமெல்லாம் மயில்கள் தோகை விரித்து ஆடும் காட்சியை விராலிமலையில் காணலாம். விராலிமலை முருகனைப் பற்றி ஏழைத் தமிழ்ப் புலவர் ஒருவர் அக்காலத்தில் பாடியிருக்கும் பாடலில் சிறியதோர் அநுபவக்கதை அடங்கியிருக்கிறது. உணர்ச்சித் துடிப்பும் உயிரோட்டமும் உள்ள நிலையை அந்தக் கவிதையில் காண்கிறோம்.

    உலகத்தில் இரண்டு வகை வாழ்க்கையைப் பார்க்கிறோம். மனத்தை மட்டும் நிறைத்துக் கொண்டு வயிற்றை நிறைத்துக் கொள்ள வழி தெரியாதவர்கள் ஒரு பக்கம். வயிற்றை நிறைத்துக் கொள்ள வேண்டிய வசதி இருந்தும் மனத்தை நிறைத்துக் கொள்ள வழி தெரியாதவர்கள் ஒரு பக்கம். ஒரு மனிதன் ஏழையாக மட்டும் இருக்கலாம், அல்லது அறிவாளியாக மட்டும் இருக்கலாம். ஆனால் அறிவாளியாகவும் ஏழையாகவும் சேர்த்து இருப்பதைப் போல் வேதனை வேறு இல்லை. ‘வயிற்றுக்காக நாலுபேரிடம் ஏதாவது கேட்டு வசதிகளைப் பெறு’ என்று ஏழ்மை தூண்டும். ‘கேட்பதும் கை நீட்டிப் பெறுவதும் கேவலம்’ என்று அறிவும் நாணமும் தடுக்கும். ‘யாரிடமாவது எதையாவது உதவி பெற்று வருவதற்குப் போ’ என்று தூண்டும் தரித்திரமும் ‘போகாதே’ என்று பின்னுக்குப் பிடித்திழுக்கும் நாணமுமாக ஊசலாடுகிற வாழ்க்கையில் நிம்மதி எப்படி இருக்க முடியும்? அறிவினால் பெருமிதம் பிறக்கிறது. ஏழ்மையால் இழிவும் தாழ்வு மனப்பான்மையும் பிறக்கின்றன. அறிவினால் சேர்த்துச் செழிக்க வைத்த பெருமிதம் பசியினாலும், இல்லாமையாலும் போய் விடக்கூடாதே என்று கவலைப்படும் நினைவினால் நாணம் பிறக்கிறது.

    அந்தக் காலத்தில் விராலிமலையிலிருந்த ஏழைத் தமிழ்ப் புலவரொருவருக்கு இப்படியோர் அநுபவம் ஏற்பட்டது. மனத்தில் புலமை, வீட்டில் ஏழ்மை. அக்கம்பக்கத்து ஊர்களில் வள்ளல்கள் பலர் இருந்தார்கள். வெட்கப்படாமல் அவர்களிடம் போய்க் கேட்டால் ஏதாவது உதவி செய்வார்கள். சும்மா போய்க் கேட்க முடியுமா? கற்பகத்தருவே சிந்தாமணியே!’ என்றெல்லாம் அந்த வள்ளல்களை வாயாரப் புகழ்ந்து சொல்லி அப்புகழ்ச்சியில் அவர்கள் மயங்கி நெகிழ்ந்து போயிருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, “வீட்டில் மிகவும் வறுமையான நிலை. ஏதாவது கொடுத்து உதவுங்கள்” என்று குழைந்து பல்லெல்லாம் தெரியக் காட்டிக் கேட்க வேண்டும். எப்படித் துணிந்து கேட்பது? ‘எப்படியாவது கேட்கத்தான் வேண்டும்’ என்று தரித்திரம் அவரை முன்னால் தள்ளியது.

    ‘வெட்கத்தை விட்டு இப்படிக் கேட்கலாமா?” என்று அறிவும் அறிவுக்குரிய நாணமும் அவரைப் பின்னுக்கு இழுத்தன.

    இப்படித் தரித்திரம் முன்னுக்கு இழுக்க, நாணம் பின்னுக்கு இழுக்க, என்ன செய்வதென்று தெரியாமல் தெருவிலும் இறங்காமல் வீட்டுக்குள்ளும் திரும்பாமல் வாயிற்படியிலேயே தயங்கி நின்றார் புலவர்.

    அவருக்கு எதிரே விராலிமலை மீது குன்றுதோறாடும் குமரனின் கோவில் தெரிந்தது.

    “முருகா! நீ என்னை ஏழையாக மட்டும் படைத்திருக்கலாம். அல்லது அறிவாளியாக மட்டும் படைத்திருக்கலாம். அறிவாளியாகவும் ஏழையாகவும் சேர்த்துப் படைத்து இப்படி ஏன் வதைக்கிறாய்?” என்று முருகனுடைய குன்றத்தை நோக்கி முணுமுணுத்தார் புலவர்.

    நெடுநேரம் வாயில்படியில் தயங்கி நின்ற பின் புலவர் வீட்டுக்குள் திரும்பவும் இல்லை. வள்ளல் வீட்டுக்குப் பொருளுதவி கேட்கச் செல்லவும் இல்லை. இரண்டையுமே . செய்யாமல் நடுவாக மலைக்குப் போகும் வழியில் நடந்தார். வேகமாக மலையேறி முருகன் சந்நிதிக்கு முன்னால் வந்தார். தரித்திரம் பிடித்துத் தள்ளவும், நாணம் போகவிடாமல் தடுக்கவும், ஊசலாடும் தமது மனம் பட்ட வேதனையை முருகனிடமே கூறினார். முருகனிடமே உருகினார். குழந்தைக்குத் துயரமானால் தாயிடம் உருகும். தாய்க்குத் துயரமானால் தெய்வத்தைத் தவிர வேறு யாரிடம் போய் உருகுவது? அறிவையும் இல்லாமையையும் சேர்த்துக் கொடுத்து அந்த முரண்பாடுகளிடையே தன்னை வாட்டிய தெய்வத்தையே இப்படிக் கேட்டார் அவர்:

    ‘கர் என்றும் சித்தாமணி என்றும் சொல்லி என் கையில் அள்ளித்
    தா என்று கேட்கத் தரித்திரம் பின் நின்று தள்ளி எனைப்
    போ என்று உரைக்கவும் நாணம் அங்கே என்ன போவதிங்கு
    வா என்று இழுக்கவும் வந்தேன் விராலி மலைக் கந்தனே!”

    இரண்டில் எதைச் செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. உன்னிடம் வந்துவிட்டேன். எனக்கு ஒரு வழி சொல்!’ என்று பாட்டிலிருந்து ஒரு தொனி கேட்கவில்லையா உங்களுக்கு? ஊசலாடுகிற மனப் போராட்டத்தை வெளியிடும் தமிழ்க் கவிதைகளில் மிக அழகான கவிதை இது.

    – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

    Print Friendly, PDF & Email
    'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *