‘என்னய்யா… நீயெல்லாம் ஆம்பளையா?! காலுங்கையும் நடுங்கறப்போ உனக்கெதுக்கு மீசை?!’ அவனைக் கடிந்து கொண்டாள் அபர்ணா.
அவளுக்கென்ன தெரியும்?! உலகத்துல எதிர்த்து பேசாம இருக்கவனெல்லாம் ஏமாளியல்ல.. ! ஏதோ காரணத்துலனாலதான் ‘கம்முனு’ இருக்கான்னு தெரியதில்லை!. பேசாம இருக்கவனை எல்லாம் கேணையன்னு நினைக்கிறது தப்புன்னு பெரும்பாலானவனகளுக்குப் பாவம் தெரியதில்லை!.
அபர்ணாவுக்குப் பதிலேதும் சொல்லாமலிருக்க, அவளோ அவனை எகிறினாள்.. ‘பக்கத்து வீட்டுக்காரன் அத்தனை வம்புச் சண்டைக்கு வர்றான். அமைதியா இடிச்ச புளியா இருக்கிறயே?!’ என்றாள் உக்கிரமாக.
இடிச்ச புளியைப் பற்றியெல்லாம் இப்போதிருக்கும் ஜெனரேசனுக்குத் தெரியவாய்ப்பில்லை. பாலிதின் பாக்கெட் புளியைப் பார்க்கிற ஜனத்துக்கு உலுக்கின புளியை சூட்டோடு சூடா வாங்கி மொக பழத்தை(முக்கால் வாசி பழுத்த பழம்தான் மொகப்பழம்) நுனிநாக்கில் சுவைத்துத் தின்னும் அருமை தெரியுமா?! பாவம் இதுக!
‘எதிர்க்கிற, வாய்க்கு வந்தபடி பேசற, பக்கத்துவீட்டுக் காரனை பதிலுக்கு அதே பாணியில் கேட்கவோ, சண்டை போடவோ அதிக நேரம் தேவையில்லை….! அவன் நாக்கில் சனி. சண்டைக்கு இழுக்கிறான். ஆனால் அவன் நாக்கில் இருப்பது சரஸ்வதியாச்சே?!
அவனவன் காத்திருப்பது அவனவன் வாழ்க்கை பயத்தால் அல்ல..! அடுத்தவன் வாழ்க்கை பாழாய்விடக் கூடாதேங்கற அன்பால்.!. ‘ஒரு சொல் கொல்லும் ., ஒரு சொல் வெல்லுமாச்சே?!’ எங்காவது கோபத்தில் எதையாவது சொல்லி, அது, பலித்துவிட்டால் யாருக்கு நஷ்டம்?!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்குக் கூட மீசை இருக்கு. அண்ட சராச்சரங்களையே அளந்தவன் அமைதியாய் இல்லை??!!. மீசை வீரத்தின் வெளிப்பாடல்ல..! விவேகத்தின் புறப்பாடு! ‘ என்று அபர்ணாவிடம் சொல்லணும்னு தோணியும் சொல்லாமல் இருந்தான். காரணம் விவேகம்தான்.