ஸ்ரீகிருஷ்ணரின் அருள்

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,016 
 

ஸ்ரீகிருஷ்ணரின் அருள்திருடர்களிடம் அர்ஜூனன் தோற்றது ஏன்?

ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவ தாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றபின் துவாரகை நகரைக் கடல் கொண்டது. ஆனால், ஸ்ரீகிருஷ்ணரின் திருமாளிகை மட்டும் தப்பித்தது.

கிருஷ்ணரின் தேவியரில் ருக்மணி உட்பட எட்டுப் பேர், கிருஷ்ணரின் திருமேனியுடன் அக்கினி பிரவேசம் செய்தனர். மற்றவர்களை அங்கிருந்து ‘பஞ்சவதம்’ என்ற தேசத்தை நோக்கி அழைத்துச் சென்றான் அர்ஜுனன். வழியில்& கானகப் பாதையில் திருடர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அந்தச் சூழ்நிலையில் அர்ஜுனன் எவ்வளவோ முயன்றும் திருடர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. கடைசியில் திருடர் கள், அர்ஜுனன் கொண்டு வந்த பொருட்களையும் அவனுடன் வந்த பெண்களையும் கவர்ந்து சென்ற னர்.

‘இனிமேல் தன்னால் எதுவும் செய்ய முடியாது!’ என்று சோர் வடைந்து அஸ்தினாபுரத்தை நோக்கிக் கிளம்பினான் அர்ஜுனன். வரும் வழியில் ஒரு வனத்தில் வியாச முனிவரைக் கண்டான். உடனே அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.

வியாசர், ‘‘அர்ஜுனா… உன் முகம் ஏன் வாடியுள்ளது?’’ என்று கேட்டார்.

அதற்கு அர்ஜுனன், ‘‘முனிவரே… கிருஷ்ண பகவான் இருந்தவரையில் நான் சகல ஆற்றலும் பெற்றுத் திகழ்ந்தேன். இப்போது அவற்றையெல்லாம் இழந்து விட்டதாக உணர்கிறேன். நான் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற கிருஷ்ணரின் மனைவியர்களைத் திருடர்கள் கவர்ந்து சென்று விட்டனர்!’’ என்று வேதனையோடு கூறினான்.

உடனே வியாசர், ‘‘இதற்காக வருந்தாதே. பாரதப் போரில் கௌரவர்களை நீங்கள் வென்றதற்கும், இப்போது நீ திருடர்களிடம் தோல்வி அடைந்ததற்கும் பகவானது அருளே காரணம்! திருடர்கள் அபகரித்துச் சென்றதாக நீ கூறியவர்கள் அனைவரும் தேவமங்கையர்கள். அவர்களைப் பற்றிக் கூறுகிறேன், கேள்…’’ என்ற வியாசர், அர்ஜுனனுக்கு அதை விளக்கத் தொடங்கினார்:

‘‘முன்னொரு காலத்தில் அஷ்டவக்கிரர் என்ற முனிவர் கழுத்தளவு நீரில் அமர்ந்து நெடுங்காலம் தவம் செய்தார். அப்போது, தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே கடும் போர் நடைபெற்றது. அதில் அசுரர்கள் ஏராளமானவர்கள் மடிந்தனர். தேவர்கள், இந்த வெற்றியை மேருமலைச் சாரலில் கொண்டாடினர். அந்த விழாவுக்கு ஊர்வசி, ரம்பை, திலோத்தமை உட்பட நிறைய தேவகன்னியர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் தவம் புரியும் அஷ்டவக்கிரரைக் கண்டு வணங் கினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த முனிவர் அவர்களுக்கு வரமளிக்க விரும்பினார். எனவே, ‘உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுங்கள்!’ என்றார்.

அவர்கள், ‘கருணையுள்ள முனிவரே! ஸ்ரீகிருஷ்ண பகவானே எங்களுக்குக் கணவராக வர வேண்டும்!’ என்று வேண்டினர். அவரும், ‘அவ்வாறே ஆகும்!’ என்று ஆசீர்வதித்தார். அதன் பின், நீரிலிருந்து கரையேறினார் அவர். வெளியே வந்த அஷ்டவக்கிரரின் உடல் எட்டுக் கோணல்களுடன் விகாரமாக இருந்ததைக் கண்ட தேவ மங்கையர் கிண்டல் பொங்கும் தொனியில் சட்டென்று நகைத்தனர்.

அதனால் கோபமடைந்த முனிவர், ‘பெண்களே! என் விகார உடம்பைப் பார்த்து ஏளனம் செய்து விட்டீர்கள்! எனவே, நீங்கள் ஸ்ரீகிருஷ்ண பகவானையே மணந்து வாழ்ந்தாலும் இறுதியில் திருடர்கள் வசமாவீர்கள்!’ என்று சாபமும் கொடுத்தார்.

இதைக் கேட்டதும் தேவமங்கையர் பதறினர். தாங்கள் செய்துவிட்ட தவறை உணர்ந்தனர். உடனே முனிவரின் பாதங்களில் வீழ்ந்து, ‘முனிவரே… நாங்கள் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருளி, எங்களுக்கு சாப விமோசனம் அளியுங்கள்!’ என்று மன்றாடினர்.

இதனால், முனிவரின் கோபம் தணிந்தது. உடனே அவர், ‘திருடர்களின் கை உங்கள் மீது பட்டவுடன் நீங்கள் சொர்க்கலோகத்தை அடைவீர்கள்!’ என்று அருளினார். அர்ச்சுனா! முனிவரின் சாபப்படி பரந்தாமனை மணந்த அவர்கள், திருடர்களிடம் அகப்பட்டு இப்போது சொர்க்கம் சேர்ந்து விட்டனர். நீ கவலையை விடு! அத்துடன் உங்களுக்கும் முடிவு காலம் வந்து விட்டது. உங்களுடைய கவர்ச்சி, பலம், வீரியம், மகிமை யாவும் இழுக்கப்பட்டு விட்டன. பிறந்தவனுக்கு மரணமும், உயர்ந்தவனுக்குத் தாழ்வும் வருவது இயற்கை. ஆகையால் நீ உன் சகோதரன் தர்மரிடம் சொல்லி நாளையே வனத்துக்குச் செல்லும் முயற்சியை மேற்கொள்!’’ என்று கூறினார்.

வியாச முனிவரிடம் விடை பெற்று அஸ்தினாபுரம் சென்றான் அர்ஜுனன். தன் சகோதரர்களிடம் நடந்ததைக் கூறினான். அதன் பிறகு பாண்டவர்கள் பரீக்ஷித்துக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்து, தங்களது இறுதி நாட்களைக் கழிக்க வனவாசம் புகுந்தனர்.
– வி.பாலு, கும்பகோணம்-1 – ஜூலை 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *