(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. பனங்காட்டுப்புரம் என்கிற ஒரு குக்கிராமம். மதிய ஆராதனைக்கு 12 மணிக்கு, முதல் மணி அடித்தது. தெருத்திண்ணையிலிருந்த ஒரு பாட்டி, “அன்னா, கோயிலுக்கு மணி அடிச்சிட்டாகளே, சீக்கிரம் குளிச்சிச் சாப்பிட்டுப் புறப்படுங்க” என்று விரட்டும் சத்தம் வீதியில் கேட்டது. பன்னிரண்டரை மணிக்கு இரண்டாம் மணி அடித்தது. உடனே ஆலய ஒலிப்பெருக்கியின் சத்தம் ஊர் முழுவதும் கேட்டது.
“சபை மக்களுக்கு ஓர் அன்பான அறிவிப்பு. இன்று நமது ஆலயத்திற்கு வெளிநாட்டுப் பிரசங்கியார் ஒருவர் வந்திருக்கிறார். ஓடி வாருங்கள், ஓடிவாருங்கள்” என்ற சத்தம் அலை அலையாகக் கேட்டது. சரியாக ஒரு மணிக்கு மூன்றாம் மணி அடித்தது.
மூன்றாம் மணி அடித்தும், மூன்று சிறு பிள்ளைகள் மட்டும் முன் வரிசையில் உட்கார்ந்து மூக்கு வடித்துக் கொண்டிருந்தனர். உபதேசியார் எழுந்து “ஓய்வு நாள் இது மனமே” என்ற பாடலை இழுத்துப் பாடவும், கிராமத்து மக்களும் கூட சேர்ந்து ஜவ்வு மாதிரி இழுத்துப்பாடினார்கள்.
பொதுவாகப் பாதி பிரசங்கத்தில் பாதிப் பேர் எழும்பிப் போய் விடுவதால், பிரசங்கத்துக்கு முன்பே காணிக்கை எடுப்பது இந்தக் கிராமத்து வழக்கம். எப்போ காணிக்கைப் பாடல் பாட எழும்புவார்கள் என்று வெளியே பின்னால் ஒளிந்து கொண்டிருந்த பிந்தி வந்த மக்கள் கூட்டம் சிறு, சிறு என உள்ளே நுழையவும் கூட்டம் ஆலய மணிமண்டபம் வரை நிரம்பி வழிந்தது.
பிரசங்கியார் எழுந்து நின்று, நன்றிக் கவிப்பாடி, ஜெபித்து, வாழ்த்துதல் சொல்லி, பிரசங்க வாக்கியம்”, ஒன்று பேதுரு 5ம் அதிகாரம் 5ம் வசனம்” என்று சொல்லிமுடிக்கு முன் 5 பெண் பிள்ளைகளும் ஒரு பையனும் மின்னல் வேகத்தில் பைபிளை எடுத்து கணீர் குரலில் வாசித்தனர்.
“ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து , மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (1பேதுரு 5:5)
முதலாவது 1+1=2;நீதிமொழிகள் 11:2;
“தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு .”
இரண்டாவது 2+2=4;நீதி22:4
“தாழ்மைக்கும்கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாம்.”
“மூன்றாவது 3 +3 = 6; ஆதி 33 : 6; அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்து வந்து வணங்கினார்கள்”. ஆம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மாமனார் மாமியாரை அங்கிள், ஆன்ட் என்று கூப்பிடக்கூடாது. மாமா அத்தை என்று சொன்னால் அது மரியாதையாக இருக்கும்.”
மனப்பெருமை, பணப்பெருமை, பணிப்பெருமை, வனப்பெருமை, ஜனப்பெருமை, இனப்பெருமை, தற்பெருமை மற்றும் வீண் பெருமை நமக்கு இருக்கவே கூடாது.
பெருமை என்பது EGO; அதாவது EDGING GOD OUT என்று அர்த்தம். அது கடவுளை ஓரந்தள்ளிவிடும்.
அதன் விளைவு EGO; அதாவது EVERYTHING GONE OUT, எல்லாம் இழந்து விடுவோம். தரித்திரம் தலை தூக்கும்.
அதன் முடிவு EGO; அதாவது Eternal Gnash Outcry. நித்திய நரக வேதனை. ஒரு குட்டி கதை சொல்லுகிறேன். கேளுங்கள்.
“ஒருநாள் கையிலுள்ள ஐந்து விரல்களும் நான் பெரியவன் நீ பெரியவன் என்று சண்டை போட்டதாம். நடுவிரல் நீளமாக இருப்பதால் நான் தான் பெரியவன் என்று பெருமைப் பாராட்டியதாம். மோதிரவிரல் நான் தான் பணக்காரன் என்றதாம். ஆள்காட்டி விரல் நான் தான் பெரியவன் என்றதாம். அட சும்மா கிடங்கடா. என் பெயரே பெருவிரல். சந்தேகமின்றி நான்தான் பெரியவன் என்றதாம் பெருவிரல். பாவம் சுண்டுவிரல். அண்ணன்மாரே அடியேன் மிகவும் சிறியவன். ஆகிலும் ஆண்டவரை இருகைகூப்பி வணங்கும்போது, இறைவனுக்கு அருகில் முதல் வரிசையில் நிற்கும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது. அடியேன் இறைவனுக்கு அருகில் இருப்பதால் நான் என்ற ஆணவ வார்த்தை என் வாயில் வராமல் ஆண்டவர் பாதுகாத்துக்கொள்ளுகிறார் என்றதும் மற்ற விரல்கள் வெட்கப்பட்டதாம். தாழ்மையைப் பற்றிய ஒரு பாடல் கவிப் பாடி ஜெபித்து முடித்தார் பிரசங்கியார்.
ஆராதனை முடிந்ததும் கடைசியில் பின் பெஞ்சிலிருந்து ஒருவர் எழுந்து, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு முன்னால் வந்தார்.
பிரசங்கியாரைப் பார்த்து, கும்புடறங்க ஐயா. ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல பிரசங்கம் கேட்டோம். என் நெஞ்சைத் தொட்டது என்றார். உங்களைப் பார்த்தால், பார்த்த முகம் பழகியக் குரலாக இருக்கிறதே. உங்க பெயர் என்ன என்றுபெரியவர் கேட்டார்.
என் பெயர் உல்லாசராஜ் என்றார் பிரசங்கியார். அப்படியானால், ஐயா, ஊரணிக்குளம் உல்லாச ராஜாவா, என்று கேட்டார் பெரியவர்.
ஆம் என்று புன்முறுவலுடன் சொன்னார் பிரசங்கியார். உடனே அந்தப் பெரியவர் பிரசங்கியாரின் இரண்டு கைகளையும் அள்ளி முத்தமிட்டு மாக்கு மாக்கு என்று அழுதார்.
ஐயா, உங்க ஊர்ப்பள்ளியில் உங்களோடு எட்டாம் வகுப்பு வரைப் படித்த அந்தப் பெரிய பாபு நான்தான் ஐயா. தினமும் நான்கு நல்லவர்களை நினைப்பேன். அந்த நாலுபேரில் நீங்களும் ஒருவர்.
உங்கள் சிறுவயதில், செருப்பு வாங்கக்கூட காசு இல்லாத ஏழ்மை நிலையில், மதிய வெயில் பொடி சூட்டைத் தாங்க, ஓலையில் செருப்பு பின்னிப் போட்டு திருப்தியாய் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள். ஆனால் நான் உங்களை “ஓலை செருப்பு உல்லாசராஜ்” என்று கிண்டல் பண்ணுவேன்.
ஐயா, நீங்க சிறுவயதிலேயே தெய்வப்பயத்தோடு நடந்து, முதல் கோழிமுட்டையைக் கோயிலில் கொண்டு போய் காணிக்கை வைப்பீர்கள். உங்கள் அம்மா அப்பாவுக்குக் கீழ்ப்படிந்து, ஆட்டுக்குப் புல் அறுத்துப் போடுவீர்கள். ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்து நன்றாகப் படித்து தாழ்மையாய் இருந்ததால் இன்று இஞ்சினியராகி வெளிநாட்டில் வேலை செய்கிறீர்கள். உங்களைப் பார்த்துப் பூரிக்கிறேன்.
ஆனால் நானோ, எங்க அப்பா மலேசியாப் பணத்தில் டிப்டாப்பாக சட்டையணிந்து, பெண் பிள்ளைகளைக் கேலிசெய்து, கொஞ்சம் இங்கிலிஷ் தெரிந்ததால் பெருமையாக நடப்பேன். டீச்சரிடம் எதிர்த்துப் பேசுவேன். ஒழுங்காகப் படிக்காமல் பெயில் ஆனதால் கடைசியிலுள்ள மாப்பிள்ளைப் பெஞ்சில் உட்கார வைத்துவிட்டார்கள். என்னைக் கண்டித்து கடிந்து கொண்டு புத்திமதி சொன்ன ஆசிரியரை ஒரு நாள் அடித்துவிட்டேன். அடுத்த நாளே டிஸ்மிஸ் ஆனேன்.
பாளையங்கோட்டையில் மீண்டும் எட்டாம் வகுப்பு படித்தேன். குறும்பு பண்ணியதால் அங்கேயும் மாப்பிள்ளை பெஞ்சுக்குத் தள்ளிவிட்டார்கள். போர்டிங் சாப்பாடு பிடிக்காததால் சூடானக் குழம்பில் கிடந்தக் கத்திரிக்காயைத் தூக்கி சுடச்சுட சமையல்காரர் காலில் போட்டுவிட்டேன். புத்திமதி சொல்லி உபதேசம் பண்ணின போர்டிங் மாஸ்டரை, நாங்கள் நாலுபேர் சேர்ந்து, நள்ளிரவில் கட்டிலோடு மெதுவாகத் தூக்கிக் கொண்டு போய், முட்டளவு தண்ணீர் கிடந்த குளத்தில் கொண்டு போய் போட்டு விட்டோம். எனவே மீண்டும் டிஸ்மிஸ். படிப்பு அம்போ .
அன்று நீங்கள் கவனமாகப் படித்து முதல் வரிசை பெஞ்சில் இருந்ததால், இன்று கோட்டு சூட்டு போட்டு டைகட்டிகெம்பீரமாக நிற்கிறீங்க. மாப்பிள்ளை பெஞ்சில் இருந்ததால் இன்று நான் துண்டு போட்டு கைகட்டி நிற்கிறேன். என் பெருமையினால் தேவன் எனக்கு எதிர்த்து நின்றதால்தான் இந்த தரித்திரம் என்று இன்று உணர்ந்தேன்.
ஒருநாள் தெய்வபயமில்லாமல் ராப்போஜனத்தின் போது, போதகர் கையிலிருந்து திராட்சரசக் கிண்ணத்தை வாங்கி பாதிக்குமேல் குடித்துவிட்டேன். அன்று வந்த வயிற்று வலி இன்றுதான் எனக்குக் குணமானது. உங்களுக்கு நன்றி. “நான் மனந்திரும்பி விட்டேன்” என்றார் பெரியவர். உடனே பிரசங்கியார் கோட்டு பாக்கெட்டில் கைவிட்டு ஆயிர ரூபாய் நோட்டு எடுத்து யாருக்கும் தெரியாமல் பெரியவர் கையில் வைத்து திணித்துவிட்டு காரில் சென்றதும், “மாப்பிள்ளை பெஞ்ச் என்னை மண்ணைக்கவ்வ வைத்து விட்டதே” என்று அந்த பெரியவர் கண்கலங்கவும், அருகிலுள்ள ஆலயக் கோபுரக் கடிகாரம் இரண்டு மணி அடித்து அழகான வசனம் சொல்லிற்று.
“ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்து கொள்ளுதலை என் மனம் அலட்சியம் பண்ணினதே” (நீதி5:12)
உடனே பெரியவர் கையிலுள்ள போன் பாடிற்று.
“தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னை அவர் கையில் தந்து
ஜீவப்பாதை என்றும் ஓடுவேன்” – இயேசு என்னும்
(பெயர்கள் அனைத்தும் கற்பனையே)
– சாம் குருபாதம் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2012, சாம் குருபாதம் பதிப்பகம், திருநெல்வேலி.