மன்னிக்கும் மனப்பாங்கு

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,457 
 
 

மன்னிக்கும் மனப்பாங்குதிருடர்களுக்கு இரங்கிய ஜெயதேவர்!

‘கீதகோவிந்தம்’ என்றதும் நமக்கு, சிறந்த பக்தரான ஸ்ரீஜெயதேவரின் நினைவு வரும். அவர் ஒரு முறை தீர்த்த யாத்திரை புறப்பட்டார். வழியில் அரசர் ஒருவர், ஜெயதேவரை அரண்மனைக்கு வரவழைத்து மரியாதை கள் செய்து நிறையப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். திருடர்கள் சிலர், ஜெயதேவரிடம் உள்ள பணத்தைக் கைப்பற்ற எண்ணினர். எனவே, அவர்களும் அந்த தீர்த்த யாத்திரைக் குழுவுடன் சேர்ந்து கொண்டனர்.

பரம ஞானியான ஜெயதேவர், பகவானின் துதிப் பாடல்களைப் பாடியபடி சென்றார். மனித நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் திருடர்கள், ஜெயதேவரிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு அவரின் கை&காலை வெட்டிவிட்டு ஒரு பாழுங்கிணற்றுக்குள் தள்ளி விட்டனர்.

கிணற்றில் தண்ணீர் இல்லாததால், சற்று நேரத்தில் நினைவு திரும்பிய ஜெயதேவர் மீண்டும் துதிப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். அந்த வழியாகத் தன் படையுடன் வந்த சௌடேஸ்வர அரசர் லக்ஷ்மன்சேன், கிணற்றுக்குள்ளிருந்து வந்த ஜெயதேவரின் அற்புதமான குரலைக் கேட்டார். உடனே தன் வீரர்களின் உதவியுடன் அவரைக் கிணற்றிலிருந்து மீட்டார். பின், லேசான முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்தார்.

உடல் நலம் தேறிய ஜெயதேவரது அறிவையும் பக்தியையும் உணர்ந்த அரசர், அவரை தன் ஆஸ்தான கவிஞராகவும் குருவாகவும் நியமித்தார். அரசர் எப்படியெல்லாமோ கேட்டும் தன் கை, கால்களை வெட்டியது யார் என்பதை மட்டும் ஜெயதேவர் வெளிப்படுத்தவே இல்லை.

ஒரு முறை அரண்மனையில் பிரமாண்டமான விழா ஒன்று நடந்தது. அப்போது அன்னதானம் வழங்கப்பட்டது. அதற்குச் சாப்பிட வந்திருந்த சாதுக்கள், அந்தணர்கள், பிச்சைக்காரர்கள் ஆகியோருடன் ஜெயதேவரைத் தாக்கிக் கொள்ளையடித்த திருடர்களும் இருந்தனர். ஜெயதேவருக்கு அவர்களை அடையாளம் தெரிந்தது. அவர் அரசரிடம் சென்று, ‘‘மன்னா… என் பழைய நண்பர்கள் சிலர் வந்திருக்கிறார்கள். நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு ஏதாவது பணம் கொடுத்தனுப்பலாம்!’’ என்றார்.

மன்னிக்கும் மனப்பாங்கு2ஜெயதேவரின் வார்த்தைகளைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அரசர், விருந்தாளிகளாக வந்த திருடர்களைத் தன் அருகில் வருமாறு அழைத்தார். ‘இன்றுடன் நாம் தொலைந்தோம்!’ என்று எண்ணிக் கொண்டு திருடர்கள், அரசரை நெருங்கினர். அரசர் அவர்களை நன்கு உபசரித்து, மரியாதை செய்ததுடன் தங்க நாணயங்களையும் பரிசளித்தார். மட்டுமின்றி, அவர்கள் பத்திரமாக வீடு போய்ச் சேரும் வகையில், சில வீரர்களையும் துணைக்கு அனுப்பி வைத்தார்.

செல்லும் வழியில் _ வீரன் ஒருவன், திருடர்களிடம் ‘‘ஜெயதேவருடன் உங்க ளுக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது?’’ என்று கேட்டான்.

ஒரு திருடன் கூறினான்: ‘‘நாங்கள் அனைவரும் அரசாங்க ஊழியர்களாக இருந்தோம். உங்கள் நாட்டில் இப்போது நீங்கள் போற்றும் ஜெயதேவன் ஒரு முறை, மிகக் கேவலமான ஒரு காரி யத்தைச் செய்தான். அதனால் எங்கள் அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார். அதை நிறைவேற்ற வேண்டிய நாங்கள், ஜெயதேவனைக் கொல்ல மனமின்றி, கை& கால்களைத் துண்டித்து, பாழுங்கிணறு ஒன்றில் தள்ளி விட்டோம். இப்போது, ‘தனது தவறு வெளியே தெரிந்து விடுமோ?’ என்ற பயத்தில் ஜெயதேவன் எங்களுக்கு இவ்வளவு மரியாதை செய்துள்ளான்!’’ என்றான்.

திருடனின் அந்த அபாண்டமான பேச்சு பரந்தாமனுக்கே பொறுக்கவில்லை போலும். உடனே பூமி பிளந்து கொண்டது. திருடர்கள் பிளவில் விழுந்தனர். ஆனால், அவர்களுடன் வந்த வீரர்களுக்கு எதுவும் நேரவில்லை. பிரமிப்படைந்த அந்த வீரர்கள், அரண்மனைக்குத் திரும்பி மன்னனிடம் நடந்ததைக் கூறினர்.

இந்த விஷயம் காதுக்கு எட்டியதும் அரசரிடம் வந்த ஜெயதேவர், முன்பு தனக்கு நேர்ந்ததை விவரித்தார். பிறகு, ‘‘மன்னா… வறுமையால் அவர்கள் அந்த பாதகத்தைச் செய்தனர். செல்வம் கிடைத்தால் ஒருவேளை அவர்கள் மனம் திருந்துவார்கள் என்று எண்ணியே அவர்களுக்கு உதவுமாறு தங்களிடம் கூறினேன். அப்படியும் என்னால் அவர்கள் இறக்க நேரிட்டதே. கடவுளே, அவர்களுக்கு நற்கதி கொடு!’’ என்று வேண்டினார்.

ஜெயதேவரின் பக்தியையும், மன்னிக்கும் மனப்பான்மையையும் கண்டு வியப்பு அடைந்த அனைவரும் அவரை வணங்கினர். ஜெயதேவர், திருடர்களை மன்னிக்குமாறு பகவானிடம் பிரார்த்தித்த வேளையில் அவரது கை, கால்கள் முன்பைவிட அதிக வலிமையுடன் விளங்கின என்று அவரது வரலாறு கூறுகிறது.
– வி. சுரேஷ், கும்பகோணம்-1 – ஜூலை 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *