பொறுமையும் வேண்டும்… கோபமும் வேண்டும்!’
சந்தேகங்கள் பலவிதம். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான சந்தேகங்கள் எழும். உத்தம பக்தனான பிரகலாதனின் பேரன் மகாபலிக்கும் சந்தேகம் ஒன்று எழுந்தது. அது குறித்து தன் தாத்தாவிடம் கேட்டான்: ”தர்மம் தெரிந்தவரே… மேலானது எது? பொறுமையா அல்லது கோபமா? இதில், தங்களது அறிவுரைப்படி நடப்பது என்று முடிவு செய்துள்ளேன்!”
சகல தர்மங்களையும் அறிந்த பிரகலாதன், தன் பேரனுக்கு விளக்கம் அளித்தார்: ”மகாபலி, கோபம் எப்போதும் உயர்ந்தது அல்ல. அதே நேரம், எல்லா தருணங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதும் கூடாது.
எவன் ஒருவன், ரௌத்திரம் (கோபம்) கொள்ள வேண்டிய தருணங்களிலும் பொறுமையாக இருக்கிறானோ, அவனுக்கு அனைத்து கெடுதல்களும் வந்து சேரும். பகைவர்கள் மட்டுமின்றி, அவனுடைய வேலைக்காரர்களும் அவனை அவமதிப்பர். இதனாலேயே அறிவாளிகள் எப்போதும் பொறுமையை விலக்கி வைத்தனர்.
அற்ப புத்தி உள்ளவர்கள், பொறுமையாளனை அவமானப்படுத்துவர். அவனது பொருட்களை அபகரிக்க விரும்புவர். எப்போதும் பொறுமைசாலியாகத் திகழும் எஜமானன் ஏமாற்றப்படுவான். வேலைக்காரர்கள், எஜமானனின் வாகனம், ஆடைகள், அலங்காரப் பொருட்கள், படுக்கை, ஆசனம் மற்றும் உணவு உள்ளிட்ட எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வார்கள். எஜமானனுக்குக் கீழ்ப்படியாமல் அவமதிப்பார்கள்.
அவனின் பிள்ளைகளும் வீட்டுப் பெண்களும்… ஏன், அவன் மனைவியேகூட அவனை அவமானப் படுத்துவாள். இவர்கள் தங்களது இஷ்டப்படி நடப்பார்களே தவிர, பொறுமைசாலியான வீட்டுத் தலைவனை ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள்.
ஆக… எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் கோபம் கொள்ள வேண்டிய தருணத்தில், கோபப்படாமல் இருந்தால் அவமானம்தான். ஆகையால், எல்லா தருணங்களிலும் பொறுமையாக இருப்பதால் பல தீமைகளையும் அனுபவிக்க வேண்டி வரும்!”
– இப்படி உபதேசித்த பிரகலாதன், அடுத்து பொறுமை இல்லாதவர்களுக்கு உண்டாகும் தீமைகளையும் எடுத்துச் சொன்னார்:
”பொறுமை இல்லாதவன் எப்போதும் கோபத்தால் சூழப்பட்டு, பல தீமைகளைச் செய்கிறான். இப்படிப் பட்டவர்கள் நண்பர்கள், உறவினர்கள் உட்பட எல்லோரிடமும் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்வார்கள். கோபவசப்பட்டு செய்யும் தீமைகளால் பொருள் நாசம், நிந்தனை, ஆதரவு இல்லாமை, மனக் கொதிப்பு, அவமானம், பகை, மயக்கம் முதலானவற்றை அடைகிறான். அத்துடன் ஐஸ்வர்யம், பொறி-புலன்கள் மற்றும் உறவினர்களையும் இழக்கிறான்.
தன் வளர்ச்சிக்கு உதவுகிறவர்களிடம், எவன் கோபம் கொள்கிறானோ… அவனைப் பார்த்து, பாம்பைக் கண்டது போல் எல்லோரும் நடுங்குவர்.
இத்தகைய கோபக்காரனுக்கு செல்வம் எப்படி சேரும்? அவன் மேல் மிகுந்த பகையுடன் இருக்கும் உலகம், தக்க தருணம் வாய்த்தால் பெரும் சேதத்தை உண்டாக்கி விடும். ஆகவே, எல்லா தருணங்களிலும் கோபத்தைக் கையாள்வதும் தவறு!
அந்தந்த தருணத்தில் பொறுமை- கோபம் இரண்டையுமே வெளிக்காட்ட வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டிய தருணத்தில் பொறுமையாகவும், கோபப்பட வேண்டிய சூழலில் கோபமாகவும் இருப்பவன், இம்மையிலும், மறுமையிலும் சுகத்தை அடைகிறான்!” என்று கூறி முடித்தார் பிரகலாதன்.
உடனே மகாபலி, ”தாத்தா… யார் யாரிடம் பொறுமையைக் கையாள வேண்டும்? எந்தெந்த தருணங்களில் கோபம் கொள்ள வேண்டும்? இதையும் விளக்குங்களேன்!” என வேண்டினான்.
அவனை பரிவுடன் அணைத்துக் கொண்ட பிரகலா தன், தனது விளக்கத்தைத் தொடர்ந்தார்:
”நமக்கு உபகாரியாக இருந்தவன், அவன் பெரிய குற்றத்தைச் செய்தவனாகவே இருந்தாலும் அந்தக் குற்றத்தை (அவன் முன்பு செய்த உதவியை எண்ணி) பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல, அறியாமை மிகுந்தவர்களது குற்றத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரம்… புத்தி பூர்வமாக சிந்தித்து, தீர்மானித்து குற்றம் செய்து விட்டு, பின்னர் தெரியாமல் செய்து விட்டதாகச் சொல்லும் கபடமானவர்களைக் கொல்ல வேண்டும். தவறை முதல் முறை பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அடுத்த முறையும் செய்தால்… அது சிறிய தவறாக இருந்தாலும் அவன் கண்டிக்கப்பட வேண்டியவனே!
மொத்தத்தில்… தனது பலம், விரோதியின் பலம் ஆகியவற்றை நன்கு அறிந்த பிறகே கோபம் அல்லது பொறுமையைக் கையாள வேண்டும். இடமும், காலமும் மிகவும் முக்கியம். உலகை அனுசரித்தும், குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். இதற்கு வேறான ஒரு சூழலில் கோபப்படலாம்!” என்று கூறி முடித்த பிரகலாதனை நன்றிப் பெருக்குடன் நமஸ்கரித்தான் மகாபலி!
– மார்ச் 2008