பாபுவை குணமாக்கிய பாபா!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,308 
 
 

மும்பையில், பிரபலமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பிரதான்; கடவுள் பக்தி மிகுந்தவர். எதிர்பாராத விதமாக இவரின் இரண்டு மகன்களில் ஒருவன் இறந்து விட, நிலைகுலைந்து போனார் பிரதான். தான் வணங்கிய தெய்வங்கள் தன்னை வஞ்சித்த தாகக் கருதிய பிரதான், வாழ்வில் வெறுப்பும் விரக்தியும் அடைந்தார்.

ஒரு நாள் இரவு, பிரதான் கனவு ஒன்று கண்டார். அதில், சாதுக்கள் ஐந்து பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்ற பிரதான், ”இங்கு, சாயிபாபா யார்?” என்று கேட்டார்.

சாதுக்களில் ஒருவர், சாயிபாபாவை சுட்டிக் காட்ட… கனவு கலைந்தது.

காலையில், நண்பர் ஒருவரிடம் கனவு குறித்து விவரித்த பிரதான், ‘சாயிபாபா என்பவர் யார்?’ என்று அவரிடம் விசாரித்தார். உடனே அந்த நண்பர், ”ஷீர்டியில், பாழடைந்த மசூதி ஒன்றில் பக்கிரி ஒருவர் இருக்கிறார். எல்லோரும் அவரை சாயிபாபா என்றே அழைக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடும் நபர் அவராகத்தான் இருக்கும்!” என்றார்.

உடனே குடும்பத்துடன் ஷீர்டிக்குப் பயணமான பிரதான், நேராக துவாரகாமாயீயை அடைந்தார். அங்கு, தன் பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் சாயிபாபா. தான் கனவில் பார்த்தது போலவே சாயிபாபா இருந்தது கண்டு வியந்தார் பிரதான்.

மெள்ள பாபாவின் முன் வந்து நின்றார். ”இங்கு வருவதற்கு இத்தனை நாள் ஆயிற்றா?” என்று சாயிபாபா கேட்டதும், பிரதானின் வியப்பு அதிகரித்தது.

‘இதுவரை பாபாவை தரிசித்ததோ, அவரிடம் பேசியதோ கிடையாது. ஆனால், ஏற்கெனவே அறிமுகம் ஆனவர் போல் பேசுகிறாரே!’ என்ற ஆச்சரியம் பிரதானுக்கு. செய்வதறியாமல் நின்றார். மெள்ள புன்னகைத்த சாயிபாபா – பிரதானின் வீடு, தோட்டம்- மரங்கள் குறித்தும் விசாரிக்க… மெய்சிலிர்த்தார் பிரதான்.

தொடர்ந்து பாபா, ”இந்த முட்டாள், மகனின் மரணத்தையே நினைத்துக் கவலைப்படுகிறான். மண், மண்ணுடன் சேர்ந்து விட்டது. இதில் வருந்துவதற்கு என்ன உள்ளது?” என்றார்.

இதைக் கேட்டதும் தெய்வமே நேரில் வந்து ஆறுதல் கூறுவதாக உணர்ந்தனர் பிரதான் தம்பதி. மனம் லேசானது. கவலை நீங்கியவர்கள், சாயிபாபாவிடம் ஆசி பெற்ற பின் ஊர் திரும்பினர்.

பிரதானின் நண்பர் மாதவபட். தத்தாத்ரேயரின் பக்தரான இவர், பிரதானின் குடும்ப நலன் வேண்டி பூஜை- யாகங்கள் செய்வது வழக்கம்.

பிரதான், குடும்பத்துடன் சென்று சாயி பாபாவை தரிசித்து வந்தது மாதவபட்டுக்குப் பிடிக்கவில்லை. ‘இந்து மதத்தினர் அல்லாத பக்கிரி ஒருவரை தரிசித்து வந்தது தவறு!’ என்று பிரதானைக் கடிந்து கொண்டார் அவர்.

நாட்கள் நகர்ந்தன. பிரதானின் மற்றொரு மகனான பாபு என்பவனும் ஜுரம் தாக்கி படுக்கையில் வீழ்ந்தான். ஓடோடி வந்தார் மாதவபட். ”ஆசார- அனுஷ்டானங் களில் திளைத்த நீங்கள், பாபாவை தரிசித்து வந்தது தவறு என்றேனே… அதன் பலனை இப்போது பார்த் தீர்களா?” என்றார் கோபமாக. மாடியின் அறை ஒன்றில் வைத்து பாபுவுக்கு சிகிச்சை தொடர்ந்தது.

அன்று இரவு, மாதவபட் ஒரு கனவு கண்டார். அதில், கையில் சிறு தடியுடன் மாடிப்படியில் நின்றபடி காட்சி தந்தார் சாயிபாபா. அவர், ”உனக்குத் தெரியுமா? நானே இந்த வீட்டுக்குத் தலைவன்” என்றார் மாதவபட்டிடம். அவ்வளவுதான், கனவு கலைந்தது!

மறுநாள், பாபுவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்களும் கைவிரித்து விட்டனர்.

மாதவபட்டுக்கு ஒன்றும் ஓட வில்லை. நேராக பூஜை அறைக்குள் ஓடியவர் சாயிபாபாவின் படத்துக்கு முன் நின்று கதறினார்:

”இன்று மாலைக்குள் பாபுவின் உடல் நலம் தேற வேண்டும். அவன், முன்பு போல் ஓடியாடி விளையாட வேண்டும். இதைச் செய்து விட்டால் உம்மையே எனது தெய்வமாக- நான் வணங்கும் தத்தாத்ரேய ராக ஏற்கிறேன்!” என்று வேண்டினார்.

மாலை 4:00 மணி. பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவன் எழுந்து உட்கார்ந்தான். பிரதான் தம்பதியின் முகத்தில் நிம்மதி படர்ந்தது.

”மாடியில் இருந்து என்னை கீழே அழைத்துச் செல்லுங்கள்” என்றான் பாபு.

தனது பிரார்த்தனை பலித்ததை நினைத்து பூரித்தார் மாதவபட். பாபுவை தானே மாடியில் இருந்து தூக்கி வந்து ஹாலில் அமர வைத்தவர், நேராக பூஜை அறைக்கு ஓடினார். அவரது செய்கை பிரதானுக்கும் அவர் மனைவிக்கும் பெரிதும் வியப்பை தந்தது.

பூஜையறையில், பாபாவின் திருவுருவப் படத்தின் முன் வந்து கைகூப்பி நின்றார் மாதவபட். படத்தில் தத்தாத்ரேயர் காட்சி அளித்தார்.

”பாபா… நீங்களே என் தெய்வம். நீங்களே தத்தாத்ரேயர்!” என்று கண்களில் நீர் வழிய நமஸ்கரித்தார் மாதவபட்.

– நந்தி அடிகள், சென்னை-4 (மார்ச் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *