பதமநாப ஸ்வாமி வந்த கதை!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,110 
 
 

வில்வமங்கல சந்நியாசி ஒருவர், ஸ்ரீமந் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை புரியும் நேரங்களில், பகவான் ஒரு சிறுவனாக வந்து அந்த சந்நியாசிக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கட்டிப் பிடித்து விளையாடுவதும், பூஜை சாமான்களைக் கலைத்தபடியும் கஷ்டங்களைக் கொடுத்தார்.

ஒரு நாள்… கண்ணனின் தொந்தரவுகளைத் தாங்க முடியாத சந்நியாசி கோபத்தில், ”உண்ணீ (சின்னக் கண்ணா)… தொந்தரவு செய்யாதே” என்று கூறி அவனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டார். கோபமுற்ற கண்ணன் சுயரூபத்தில் அவர் முன் தோன்றி, ”பக்திக்கும் துறவுக்கும் பொறுமை தேவை. உன்னிடம் அது இருக்கிறதா என்று சோதிக்கவே இவ்வாறெல்லாம் நடந்து கொண்டேன். இனி, நீ என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டுக்குத்தான் வர வேண்டும்” என்று கூறி விட்டு மறைந்தார்.

தனது தவறை உணர்ந்த சந்நி யாசி, அனந்தன் காடு எங்கே இருக்கிறது என்பது தெரியாமல், கவலையுடன் புறப்பட்டார்.

பல நாட்கள் அலைந்து திரிந்தும் அவரால் அந்தக் காட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள், வெயிலில் நடந்து வந்த தளர்ச்சியுடன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். அருகில் இருந்த குடிசை வீட்டில் தம்பதியிடையே ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அதன் முடிவில் கணவன், ”நீ இப்படி அடிக்கடி என்னிடம் சண்டை போட்டால் உன்னை அனந்தன் காட்டில் விட்டு விடுவேன்” என்றான் மனைவியிடம்.

இதைக் கேட்ட சந்நியாசி ஆவலுடன் அந்த வீட்டுக்குச் சென்று அவர்களை சமாதானம் செய்ததுடன், அனந்தன் காட்டைப் பற்றி விசாரித்தார். அந்தக் கணவனும் காட்டைக் காட்டினான்.

பதமநாப ஸ்வாமி வந்த கதை!கற்களும் முட்புதர்களும் அதிகம் இருந்தன. எனினும், பகவானைக் காணும் ஆவலில் இடர்களைக் கடந்து முன்னேறினார் சந்நியாசி. கடைசியில் பகவானைக் கண்டார். தனக்கு ஏற்கெனவே காட்சி தந்த உண்ணிக் கண்ணனாக பகவான் இப்போது காட்சி தரவில்லை!

ஓர் இலுப்ப மரத்தின் அடியில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அனந்தன் என்ற பாம்பின் மீது பரந்தாமன் பள்ளி கொண் டிருப்பதைக் கண்ட சந்நியாசி, மகிழ்வுடன் அவரை வணங்கினார்.

தனக்குப் பசியெடுப்பதாகக் கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் சிறிது உப்பு சேர்த்து சமர்ப்பித்தார் சந்நியாசி. பிறகு, திருவிதாங்கூர் மன்னருக்குத் தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள அந்தணர் களை அழைத்துக் கொண்டு அனந்தன் காட்டுக்குப் புறப்பட்டார். ஆனால், அங்கே ஸ்வாமி இல்லை.

எனினும், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்தார் திருவிதாங்கூர் மன்னர்.

கோயிலுக்குள், அனந்தன் பாம்பு மீது பள்ளிகொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ‘பத்மநாப ஸ்வாமி’ எனும் திருநாமம் சூட்டப்பட்டது.

ஆரம்பத்தில் இலுப்ப மரத்தில் செய்யப்பட்ட மூல விக்கிரகம் கி.பி. 1686-ல் தீப்பிடித்தது. அதன் பின்னர், கடு சர்க்கரை யோகம் என்னும் கலவை யால் பன்னிரண்டாயிரம் சாளக்கிராமக் கற்களை இணைத்து புதிய சிலை உருவாக்கப்பட்டது.

இது ஓர் அபூர்வ சிலையாகும். 18 அடி நீளமுடையவராகக் காட்சி தரும் ஸ்ரீஅனந்த பத்ம நாப ஸ்வாமியின் திருமேனி முழுவதும் தங்கத் தகடு வேயப் பட்டிருக்கிறது.

இந்தச் சிலையை திருவனந்த புரத்தில் இப்போதும் தரிசிக்கலாம்!

– ஆர். கண்ணன், சென்னை-61 (மே 2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *