தீராக் காதலன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 76,864 
 

படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது..

கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று எவ்வித சலனமுமின்றி அவள் கிடந்தாள். அந்தப் படகோட்டிகூட நீர்த்திவலைகள் தெறிக்காவண்ணம் மிகப்பக்குவமாக துடுப்பு வலித்துக்கொண்டிருந்தான். ஒப்பாரி முடிந்து தூங்குகின்ற பாலைத் தலைவியின் இரவு போன்று சுற்றுவட்டாரம் முழுதும் ஒருவித நிசப்தம் நிரவியிருந்தது. தினமும் ஆற்றிலே பாய்மரமேற்றி மீன் பிடிக்கும் வலைஞர்களின் பாடல்கள் எங்கேயும் ஒலிக்கவில்லை. காலையில் மேலாற்று வழியாக தாவிக்குதித்து சூரிய நமஸ்காரம் செய்யும் வாலை மீன்கள் ஆற்றின் படுக்கையடியில் இருந்த கற்களுக்குள் ஒளிந்திருந்தன. கர்ணனின் கவச குண்டலங்களை கவர்ந்து சென்ற நாளது போன்று இன்றைக்கும் சூரியன் தயங்கித்தயங்கி வெளிவரலானான். அவனோடு இழவுவீட்டில் ஊடல் கொண்டன தாமரைச்செடிகள். என்றுமே இணை பிரியாத மகன்றில் பறவைகள் தன் துணைகளைக்காணாமல் தென்திசை தேடி பறந்துகொண்டிருந்தன.

இராமன் காடேகிவிட்டான்.

படகு வடகரை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது. வடகரை நாவாய்த்துறையில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. எனினும் ஓசை ஏதும் எழவில்லை. அங்கே வழமையாக கூடுகின்ற வணிகர்களின் ஏலக்கூச்சல் இன்றில்லை. திறை அறவிடுவோரின் நடமாட்டம் இல்லை. துறைக்கு மலைத்தேனை எடுத்துவரும் வேடுவர்கள், ஆற்றுப்படுக்கையில் போட்டிருந்த களங்கண்டியில் மீன் பிடித்துவந்து விற்பவர் என்று எவருமேயில்லை. கூடியிருந்த மக்கள் எல்லோரும் கிணற்று வாளிக்குள் அகப்பட்ட ஆமைபோல உள்ளூற விசும்பியபடி தலை குனிந்து நின்றனர். கடைசிப்படகும் கரையை சேரும் கணத்துக்காக காத்திருந்தார்கள். இன்னொருமுறை ஒப்பாரி செய்வதற்காக.

படகில் நின்றிருந்த குகனும் பரதனும் இவை எவற்றையும் கவனித்தார்களில்லை.

இருவரும் தென்திசை நோக்கி கைகூப்பி தொழுதபடி அமர்ந்திருந்தார்கள். பரதன் தமையனது திருவடிகளை தலையில் தாங்கியபடி சித்திரகூட பருவதத்தின் உச்சியையையே வணங்கிக்கொண்டிருந்தான். கண்ணீர் வற்றி கன்னங்களில் உப்பளம் பூத்திருந்தது. அழுதேறியாத வேடுவத்தலைவனோ கங்கையை கடலாக்கிக்கொண்டிருந்தான். படகு வடகரையை நெருங்க நெருங்க, அதைவிட வேகமாக அவர்களுடை மனம் தென்திசை நோக்கி வேகம் பிடித்தது. படகோட்டி துடுப்பு வலிக்கையில் தடுமாறினான். குகனோ ஓட்டியிடம் படகை மெதுவாக செலுத்துமாறு குறிப்பாலே உணர்த்தினான். படகு ஏறத்தாழ நின்றே விட்டது.

குகன் தனக்குத்தானே முணுமுணுத்தான்.

என்னைப்போன்ற ஒரு அபாக்கியவாதி எவரும் இருப்பார்களா? ஒரு மாலைப்பொழுதில் இப்பிறவிக்கடலின் அத்தனை சௌபாக்கியங்களையும் கொடுத்துவிட்டு, விடியும்பொழுதில் அது உனதில்லை என்றாகில் என் செய்வேன்? இரு கண்ணும் தெரியாதவனுக்கு சந்தியாவந்தனப்பொழுதில் மாத்திரம் பார்வை கொடுத்துவிட்டு அதிகாலையில் பறித்துக்கொண்டால் அது பாவமன்றோ? அவன் ஆரத்தழுவியபோது பட்ட ஈரம் காய்வதற்குள் மறைந்துவிட்டானே. அண்ணன் என்றானே. நான் கொடுத்த தேனையும் மீனையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டானே. ஆனால் பிரிவேன் என்றுரைத்து ஈற்றில் என்னை விழிகரைய வைத்தானே. என்னையும் ஒரு கணத்தில் ஆண்டாள் ஆக்கிவிட்டு அவன் பாவி போய்விட்டான். சீதைத்தாய் கொடுத்து வைத்தவள். இளையவன் கொடுத்து வைத்தவன். என்னை தாயினும் நல்லான் என்றானே. பெற்றதாயை யாராவது இப்படி தவிக்க விடுவார்களா?

குகன் ஏதேதோ எல்லாம் பிதற்றினான். பரதனிடம் ஒரு வெற்றுப்புன்னகை வெளிப்பட்டது. அவனும் அரற்றத்தொடங்கினான்.

என் பாவம் என்னவோ அறியேன். எவருக்கும் மனதாலும் தீங்கறியாதவன் நான். இப்படிப்பட்ட ஒரு கொடியதாய்க்கு பிறந்தது என் குற்றமா? தந்தைக்கான ஈமைக்கடனைக்கூட செய்யமுடியாத பாவியானேனே. கோசலைத்தாய் கூட என்னை சந்தேகித்தாளே. எம்பி இலக்குவன்கூட என்னைப்பகைத்தானே. அண்ணனோடு கூடச்செல்லும் பாக்கியம்கூட கிடைக்காத அளவுக்கு நான் செய்த பாவந்தான் என்ன? காலம் உள்ளவரை அண்ணனை காட்டுக்கனுப்பிய பாவி என்று என்னை மக்கள் சபிப்பரே. பதின்ம வயதினில் அண்ணனை பிரியுமளவுக்கு நான் பிழைத்த அறம்தான் என்ன? நான் இழைத்த பாவம்தான் என்ன? எனக்கேன் இப்படி நடக்கிறது?

பரதன் செய்த பாவந்தான் என்ன? எந்தப்பாவமும் அறியாதவன். அவன் நேற்றிலிருந்து படும் துன்பத்தைப்பார். இன்னும் ஈரேழு ஆண்டுகளுக்கு அவன் தன்னையே வருத்திக்கொள்ளப்போகிறானே. இராமன் பயணம் செய்பவன். இவன் வழியனுப்பியவன். பயணம் செய்பவனின் உலகம் எப்போதுமே புதிதாக இருக்கும். இராமனுக்கு காடு அவனை புதுப்பித்துக்கொண்டேயிருக்கும். தேடல்களையும் தேவைகளையும் கொடுக்கும். அவன் இவர்களை எண்ணி வருந்தும் நாட்கள் சிலவாகவே இருக்கும். ஆனால் பயணம் அனுப்பி வைப்பவனின் வலியே பெரும் வலி. மீண்டும் அதே இடம். பயணம் போனவர்களோடு கழித்த கணங்களை ஒவ்வொரு புள்ளியும் நினைவு படுத்திக்கொண்டிருக்கும். அவர்கள் இல்லாத வெறுமை எங்கேயும் சூழ்ந்திருக்கும். பயணத்தின்போது பெரிதும் இழப்பவன் பயணியை கைகாட்டி வழி அனுப்பி வைப்பவனே. பரதனின் நிலையும் அப்படியே. அயோத்தியின் ஒவ்வொரு மணல் துகளும் இராமனின் கதைகள் சொல்லும். தந்தையின் மரணம் சொல்லும். தாயின் கொடுமை சொல்லும். கோசலையைக்காணும்போது இவன் இனி நாணிக்கோணுவான். ஊர் மக்கள் இவனை பழிப்பர். பரதன் அழுந்தி அழுந்தி, தன்னையே வைந்து தனிமைச்சிறையில் வாடப்போகிறானே. கைகேயி வரத்தை இராமனுக்கு கொடுத்து இவனுக்கு சாபத்தையன்றோ பெறறுக்கொடுத்திருக்கிறாள். இவன் இத்துன்பத்தை அடையும் நிலைக்கு காரணம் என்ன? யோசித்துப்பார்த்தேன்.

‘ஊழ்வினை வருத்திற்று’ என்றேன்.

இருவருமே திரும்பினார்கள்.

என்ன சொல்கிறாய்?

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

புரியவில்லை.

சமயத்தில் நல்லதே நினைத்தாலும் தீயன நடக்கும். தீயதே சிந்தித்தாலும் நல்லது நடக்கும். ஊழ்வினையின் அறத்தை அறிந்துகொள்வது இப்பிறவியின் சட்டத்தில் மாத்திரமே சிந்திப்போருக்கு இயலாத காரியமாகிறது. நன்மை செய்தால் நன்மை விளையும். தீமை செய்தால் தீமை பயக்கும் என்கின்ற எளிமையான கணக்கு வழக்குகளுக்குள் ஊழ்வினை சிக்காது. அதனாலேயே ஊழியலை அறத்துப்பாலில் வள்ளுவன் தனியாக ஒதுக்கிவைத்தான். “நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை. விதி செய்த குற்றமன்றி வேறு யாரம்மா” என்று கண்ணதாசன் சொல்லுவதும் இதுவே.

‘என்ன கணக்கு இது? ஊழை வெல்ல முடியாதா?’, பரதன் கேட்டான்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

என்னது?

முயற்சி செய்வது உன் பொறுப்பு. அறம் உன்னுடையது. பயனை எதிர்பாராதே. நான் அறம் செய்தேன், பலனில்லையே என்று எண்ணுவது அறமல்லவே. தவிரவும் அறமானது செய்யும் அப்பொழுதே ஒருவனுக்கு பேறு கொடுக்கிறது. அது குழந்தை சிரிப்பு போன்றது. குழந்தையின் அழுகை பலனை எதிர்பார்ப்பது. சிரிப்பு பலனை எதிர்பார்க்காதது. ஆனால் சிரிக்கும் கணத்தில் தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி கொடுப்பது. சிரிக்கும்போது அது உணரும் மகிழ்ச்சியே சாஸ்வதம். அறமும் அப்படியே. அதை செய்யும்போதே ஒருவன் அதன் முழுப்பலனையும் அடைந்துவிடுகிறான். பின்னரான வினைப்பயன் என்ன என்பது இரண்டாவது பட்சமாகிறது. ஒருவனுக்கு நீ உதவுவது என்பது, உதவும் அக்கணத்தில் உன் மனதில் எழும் பேருவகையோடு தொடர்புபட்டது. அதன் பயன் பின்னர் உனக்கு கிட்டுமா என்ற கணக்கு முதலீட்டு கணக்கு. அறம் வியாபாரமல்ல. அறத்தை பலனோடு தொடர்புபடுத்தாதே. இராமனோடு நீ கழித்த பொழுதுகளை நினைந்து மகிழ். ஈரேழு ஆண்டுகளுக்கு பின்னர் அவனோடு கூடவே வாழப்போகும் நாட்களை எண்ணி மகிழ்ச்சி கொள். இந்த இடைவெளியை அவன் மீதான அன்பை உணரவும் மீட்டிப்பார்க்கவும் பயன்படுத்து.

பரதன் மீண்டும் சித்திரக்கூடத்தையே பார்த்து பரிதவிக்கலானான். குகன் அழுகை விசும்பலாயிற்று.

இந்த ஊழ்தானா என்னை இராமனிடம் இட்டுச்சென்றது? அன்பு பொழியச்செய்தது? அடுத்தநாளே என்னை அவனிடமிருந்து பிரித்தது? இது நன்மை என்று நினைத்தேனே. இவன் பிரிவு இத்தனை துன்பத்தை கொடுக்குமென்று தெரியாதே.

அழும் குகனை இப்போதுதான் நிதானமாக பார்த்தேன். பித்தனாட்டம் தோற்றமளித்தான். பார்வையே கொடூரமாக இருந்தது. ஒரு வேடுவன். நெருங்கினால் மீன் வாடை அடிக்கிறது. புலியின் வாலை இடையில் கட்டியிருக்கிறான். இவன் யார்? எங்கோ காட்டிலும் கங்கைக்கரையிலும் காப்பியத்துக்கு எந்த சம்பந்தமுமேயில்லாமல் திரிந்தவன். இராமயணத்தில் இவனுக்கென்ன வேலை? இவனை ஏன் இராமன் சோதரன் என்றான்? இவனில்லாமல்கூட காவியம் நிறைவேறியிருக்குமே. கம்பனின் நோக்கம்தான் என்ன? தேவன் பூமியில் தோன்றி அசுரனை வதைத்த கதை சொல்வதா நோக்கம்? அப்படியானால் இராமன் இலங்கையிலேயே பிறந்திருக்கலாமே. கிருஷ்ணன் ஹம்சனுக்கே மருமகனாக பிறக்கவில்லையா? பின்னே ஏன் இராமன் மாத்திரம் அயோத்தியில் நான்கு சகோதரருடன் பிறந்து, காடு சென்று, ஒரு வேடுவனோடு ஐவராகி, ஒரு குரங்கோடு அறுவராகி, பின் அரக்கனோடு எழுவராகி, ஏன் கதையை கம்பன் இப்படி நகர்த்தினான்? எது குகனை இராமனிடம் கொண்டு சேர்த்தது.

‘இறை அன்பு… இறையின் அன்பு’ என்றேன்.

‘புரியவில்லை’ என்றான் குகன்.

பாரதி, கடவுள் எங்கே இருக்கிறார் என்று சீடன் கேட்ட கேள்விக்கு சொல்கிறான் ஒரு பதில்.

கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திரு கரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர வென்று பணிதல் வேண்டும்.
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்
விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே
சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;

கடவுளின் படைப்பனைத்திலும் கடவுள் தெரிகிறார். அதில் மேலோர் கீழோர் இல்லை. கடவுளுக்கு சத்திரியனும் சோதரனே. வேடுவனும் சோதரனே. வானரமும் அவனுக்கு சோதரனே. அரக்கனும் சோதரனே. கம்பன் இராமனை அன்பிற்குருவானவனாய் படைத்தான். கைகேயி கொடுசொல் சொன்னபோதும் பெருந்தன்மை கோர்த்தான். வாலியை வதம் செய்தது தவறென்று அறிந்து முகம் தாழ்ந்து நின்றான். மனைவியைக் கவர்ந்து சென்ற அரக்கனிடம் அன்பு பாராட்டி அடுத்தநாள் போருக்கு வரச்சொன்னான். ஆழமாக யோசிக்கையில் அன்பே இறை என்ற ஒற்றைத்தத்துவத்தையே கம்பன் காப்பிய நோக்கம் ஆக்கியிருக்கிறான். ஆங்காங்கே இறைவனை பலவீனமுள்ள மனிதராக்கி, தவறு செய்பவன் திருந்துவதற்கும் வழி சமைத்தான். கம்பன் உணர்ச்சி வசப்படாத எமகாதகன்.

‘சொல்லியது புரியவில்லை’ என்று மீண்டும் கேட்டான் குகன்.

‘உன்மீது இராமன் கொண்ட அன்பையும் நீ அவன் மீது கொண்ட அன்பையும் உலகறியச்செய்யவே இராமனை நீ சந்திக்க நேர்ந்தது குகனே’ என்றேன்.

பரதன் இப்போது திரும்பினான்.

அது எப்படி? இராமனிடம் எல்லோருமே அன்பு காட்டுகிறார்கள். அவன் பெயரைக்கேட்ட மாத்திரத்திலேயே காதல் வயப்படுகிறார்கள். ஆனால் குகனை மாத்திரம் எப்படி அண்ணன் தீராக்காதலன் என்றான்?

அதுதானே. குகன் மாத்திரம் எப்படி தீராக்காதலன் ஆனான்? அதுவும் பார்த்து ஒரு நாழிகைகூட கடக்குமுன்னர் தீராக்காதலன் பட்டம் எங்கனம் பெற்றான்? குகன் இராமனோடு கூடப்பிறந்தவன் அல்லன். அவன் அயோத்தியே அறியாதவன். இராமனின் பெருமையை மாத்திரமே கேள்விப்பட்டு அவனைத்தேடிவந்தான். இலக்குவனை முதலில் கண்டு அவனையே இராமன் என்றெண்ணித் தொழுதான். அப்புறம் இராமனைப் பார்த்தமாத்திரத்திலேயே அத்தனை காதலையும் கொட்டிவிட்டான். இராமனைக் கண்டதும் அவனுக்கு ஏற்பட்ட அன்பை எல்லை நீத்த அருத்தியன் என்கிறான் கம்பன். அந்த அன்பு பயன் எதிர்பார்க்காத அன்பு. அப்படியே தன்னை அர்ப்பணிக்கும் அன்பு. காரணங்கள் அற்ற அன்பு.

குகன் எப்போதுமே அன்பினால் நிறைந்திருந்தவன். தான் கொண்ட எல்லையில்லாக்காதலை காதலியைக் காணும்வரையும் அடை காத்திருக்கும் காதலன்போல, குகனும் தன் அன்பை அவனுக்குள்ளேயே இதுநாளும் புதைத்து வைத்திருந்தான். இராமனைக் கண்டதும், கண்ட கணப் பொழுதில் அவன் அன்பு மடை பாய்ந்துவிட்டது. அவன் அன்புக்கு கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கப்போய் என்ற காரணங்கள் தேவையில்லை. குகன் இராமன் அன்பு என்பது “யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே” என்கின்ற முத்துக்குமாரின் வரிகள் விதிக்கின்ற அன்பாகும். அதனாலேயே குகன் தீராக்காதலன் ஆகிறான்.

பரதன் குகனை வாஞ்சையோடு திரும்பிப்பார்த்தான். குகனுக்கு இவன் இராமனின் தம்பி என்கின்ற காரணமே போதுமானதாகிவிட்டது.

‘தம்பி, நானும் உன்னோடு வந்துவிடவா? தனியே கங்கைக்கரையில் இராமன் நினைவுகளோடு எப்படி நான் வாழ்வேன் சொல்லு? உன்னோடு நந்திக்கிராமத்தில் தங்கிவிடுகிறேன். இராமனுக்கு செய்யக்கூடிய பணிவிடைகளை உனக்கு செய்கிறேன். அவன் திருவடிகளை தொழுதபடியே காலத்தை கழித்துவிடுவேன்.’

குகன் சொல்லச்சொல்ல, பரதனுக்கு அந்தக்கணமே கைகேயி மீது கொண்டிருந்த கோபம் தணிந்துபோயிற்று. குகன் போன்றதொரு அண்ணனை யான் பெறுவதற்கு அன்னையின் செயலன்றோ காரணம் என்று சித்தம் தெளிந்தான். காடேகிய இராமன் மேலும் நமக்கு அன்புள்ளங்களைக் கொண்டுவருவான். அத்தனையும் நன்மைக்கே, காத்திருப்போம் என்று இராமனது திருவடிகளை மீண்டுமொருமுறை பரதன் தொழுதான். பின் ஏதோ நினைத்தவனாய் திடீரென்று திரும்பினான். எனைப்பார்த்துக் கேட்டான்.

நீ யார் என்று சொல்லவேயில்லையே?

‘நானும் சோதரனை காட்டுக்கனுப்பிய பாவியரில் ஒருவன்தான்‘

குகன் அவசரமாகக் கேட்டான்.

‘நின்னோடும் அறுவன் ஆனானோ?’

சிரித்தேன். தூரத்தே வாலை மீனொன்று தாவிக்குதிப்பது தெரிந்தது.

வந்துவிடுவான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *