(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிவபெருமானுடைய அடியைப் பாடுவதில் அடியவர்களுக்கு ஆனந்தம் அதிகம். அவனுடைய திருவடியே பற்றுக் கோடென்று கிடப்பவர்களாதலின் அதன் அழகையும் ஆற்றலையும் பெருமையையும் நினைந்து நினைந்து இன்ப ஊற்றெழக் களித்திருப்பார்கள். திருநாவுக்கரசர் ஒரு திருத்தாண்டகப் பதிகம் முழுவதிலும் திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுடைய திருவடியைப் பாராட்டியிருக்கிறார். அப்பதிகத்துக்குத் திருவடித் திருத்தாண்டகம் என்று பெயர் வைத்து வழங்குவர்.
சிவபெருமானுடைய திருவடியை நினைக்கும் போதே இன்பம் மல்குகிறது. அதன் மணம் உள்ளத்தே மணக்கிறது.
நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி
என்று ஆர்வத்தோடு சொல்கிறார் அப்பர். ‘நறுமலர்’ என்றாலே மணமும் மலரும் இருக்கின்றன. அவருடைய அன்பு பெருகுகிறது. அப்படிச் சொல்வதோடு நில்லாமல் ‘நாறும் மலர்ச் சேவடி’ என்று பின்னும் வற்புறுத்திச் சொல் கிறார். தலையால் வணங்குவார் முடிமிசையே திகழும் மலர் அது; சிந்தையால் நினைப்பார் உள்ளே மணக்கும் நறுமலர் அது.
நறுமலர் போல மணமல்கும் அந்தத் திருவடி அன்பர் கள் உள்ளக் கமலத்தில் மெத்தென்று எழுந்தருளி யிருந்தா லும் அதன் வல்லபத்தை என்ன வென்று சொல்வது! உல கத்தை யெல்லாம் இயங்கும்படி செய்கிறது அந்த அடி; தான் நடந்து உலகத்தை நடத்துகிறது. எந்த எந்தக் காலந்தில் எவ்வெப் பொருள்கள் எவ்வெவ்வாறு தோன்றி இயங்க வேண்டுமோ அவ்வவ்வாறு நடைபெறும்படி செய்யும் ஆற்றலை உடைய அடி அது. உலகத்தை நடாத்தும் அரசன் நடுநிலையில் நின்று, நலம் செய்தாரை நாட்டியும் தீமை செய்தாரை வீட்டியும் ஆட்சி புரிவது போல, இறைவன் திருவடியும் நடுநிலையில் நின்று எல்லாவற்றையும் நடத்துகிறது.
நடுவாய் உலகம் நடாய அடி.
உலகத்தை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டதா தலால் உலகம் விளங்குவதற்கு வேண்டிய பொருள்களை அமைக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. உலகத்தைத் தம் ஒளியால் விளக்கும் கதிரவனும் திங்களுமாக நிற்பது இறைவன் திருவடிதான்.
‘நடுவாய் உலகம் நாடாய அடி’ என்பது ஒரு பாடம்; ‘எல்லாவற்றிற்கும் நடுநிலையில் இருந்து உலகமாகவும் அதில் உள்ள நாடுகளாகவும் ஆன அடி’ என்று பொருள் கொள்ளவேண்டும்.
செறி கதிரும் திங்களுமாய் நின்ற அடி.
சுடர்கள் மூன்று, அவை சூரியன் சந்திரன் அக்கினி என்பவை. சூரியனும் சந்திரனும் பூமிக்குப் புறம்பே நின்று ஒளி தருகின்றன. அக்கினியோ நிலத்தின் எல்லைக்குள்ளே நெருப்பாகவும், விளக்காகவும் இருந்து பயன் தருகிறது. கதிரும் திங்களும் நிலத்துக்கு வெளியே திகழும் ஒளிகள். தீத்திரளோ உள்ளே திகழ்வது. அப்படித் திகழும் தீயும் இறைவனுடைய திருவடிதான்.
தீத்திரளாய் உள்ளே திகழ்ந்த அடி,
சூரியசந்திராக்கினிகளாக நிற்கும் திருவடி அக்கதிர் களின் மாசினைப் போக்கும் தன்மை உடையது. வீட்டில் விளக்கை ஏற்றுபவன் அதைத் துடைத்துச் சுத்த மாக்குவதுபோல மூன்று கதிரில் களங்கத்தை யுடையதாகிய சந்திரனை இறைவன் தன் திருவடியால் மாசு நீக்கினான். தக்க யாக சங்கார காலத்தில் மதியைத் தன் திருவடியால் தேய்த்தான். திருவடியின் தொடர்பு எந்த வகையில் கிடைத் தாலும் மாசு தீர்வது உறுதியாதலால் சந்திரனுக்கு இருந்த குறை போயிற்று. அது இறைவனுடைய திருமுடிக்கண் அணியாக விளங்குகின்றது.
மறுமதியை மாசு கழுவும் அடி.
புறத்தே தோன்றும் இருளைப் போக்க மூன்று சுடர் களாகத் திருவடி இருக்கிறது என்றார். இந்தச் சுடர்களால் போகாத இருள் வேறு ஒன்று உண்டு. அது அகவிருளாகிய அறியாமை; அஞ்ஞானம். அதனைப் போக்க வேதமும் ஆக மும் உதவுகின்றன. வேதத்தை மந்திரமென்றும் ஆக மத்தைத் தந்திர மென்றும் கூறுவது வழக்கம். புற இருளை நீக்கும் முச்சுடராக நிற்பது போலவே அகவிருளைப் போக் கும் வேதாகமங்களாக நின்று நிலவுகிறது இறைவன் திருவடி.
மந்திரமும் தந்திரமும் ஆய அடி.
இப்படியெல்லாம் விளங்கும் திருவடியை உடையவன் சிவபெருமான். அவன் கெடில நதியின் கரையிலே திரு வதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கிறான். வளஞ் செறிந்த கெடில நதி பாயும் நாட்டுக்குத் தலைவனும், திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனுமாகிய சிவ பெருமானுடைய திருவடி அழகும் ஆட்சியும் ஒளி தரும் ஆற்றலும் உடையது என்று பாடுகிறார் திருநாவுக்கரசர்.
நறுமலராய் நாறும் மலர்ச்சே வடி
நடுவாய் உலகம் நடாய அடி
செறிகதிரும் திங்களுமாய் நின்ற அடி
தீத்திரளாய் உள்ளே திகழ்ந்த அடி
மறுமதியை மாசு கழுவும் அடி
மந்திரமும் தந்திரமும் ஆய அடி
செறிகெடில நாடர் பெருமான் அடி
திருவீரட்டானத்தெம் செல்வன் அடி.
[நறிய மலராகிய மணம் வீசும் மலரைப் போன்ற சிவந்த திருவடி, நடுநிலையில் நிற்பதாய் உலகத்தை நடத்திய திருவடி, கிரணங்கள் செறிந்த கதிரவனும் திங்களுமாகி நின்ற திருவடி, தீப்பிழம்பாய் நிலப்பரப்பினுக்குள்ளே விளங்கிய திருவடி, களங்கத்தையுடைய சந்திரனைமாசு நீக்கும் திருவடி, வேதமும் ஆகமுமாகிய திருவடி, வளம் செறிந்த கெடில நாட்டுத் தலைவன் திருவடி, திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளிருக்கும் எம்முடைய செல்வனது அடி.
பெருமானடி, செல்வன் அடி இத்தகையது என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும்.
மலர்ச் சேவடி-பொலிவையுடைய சிவந்த அடி என்றும் பொருள் கூறலாம். நடாய -நடத்திய; “நடப்பன நடாஅய்” எனபது திருவாசகம். கதிர்-சூரியன் தீத்திரள் தீப்பிழம்பு – மறு – களங்கம். கழுவும் – போக்கும். மந்திரம்-வேதம். தந்திரம்-ஆகமம். செல்வன்- அருட் செல்வத்தை உடையவன்; எல்லாச் செல்வத்தையும் உடையவன் என்றும் சொல்லலாம்.]
மலராய் அடியார் உள்ளத்தே மலர்ந்து மணந்து, நடு நின்ற ஆணைப் பொருளாய் உலகை நடத்தி, சுடர்களாய் ஒளி தந்து புறவிருளை நீக்கி, வேதாகமங்களாய் றின்று அக விருளைப் போக்குவது இறைவன் திருவடி என்பது இதன் திரண்ட பொருள்.
இது ஆறாம் திருமுறையில் ஆறாம் திருப்பதிகத்தில் எட்டாவது பாட்டு.
– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.