கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 8,233 
 
 

ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால், அப்போது ஸ்ரீராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. தேசத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் திருமண் வேண்டும், அதுவும் தினமும் வேண்டும். என்ன செய்யலாம்?

ஸ்ரீராமானுஜர் உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார்…

அன்றிரவு அவருக்கு ஓர் கனவு வந்தது. கனவில் சாட்ஷாத் பெருமாள் தோன்றினார். அந்தக் கனவில், “ராமானுஜரே, உடனே கிளம்பி யதுகிரிக்குச் செல்லுங்கள். அங்கே வேத புஷ்கரணி என்றொரு குளம் இருக்கிறது. அதன் வட மேற்கு மூலையில் நீங்கள் தேடுவது கிடைக்கும்.” என்று சொல்லிவிட்டு பெருமாள் கனவிலிருந்து மறைந்து விட்டார்.

தேடியது மட்டுமல்ல… தேடாத ஓர் மகத்துவம் ஒன்றும் சேர்ந்து கிடைக்கப் போகிறது என்பது அப்போது ஸ்ரீராமானுஜருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

யாதவாசலம் என்று அந்தக் குன்றுக்குப் பெயர். யதுகிரி என்றும் அழைப்பர். சட்டென்று அங்கே கிளம்பிப் போக வேண்டும் என்று ராமானுஜர் சொன்னபோது, மன்னன் விஷ்ணுவர்த்தன் திகைத்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“அது மிகப்பெரும் காடாயிற்றே, அங்கு செல்வது மிகுந்த கடினமாய் இருக்குமே ஸ்வாமி…”

“அதனால் பரவாயில்லை மன்னா. வைணவர்கள் திருமண் காப்பின்றி இருக்கக் கூடாது. பரமாத்மாவான ஸ்ரீ மன்நாராயணின் ஸ்ரீ பாதங்களைக் குறிப்பது அது… மண்ணிலேயே பரிசுத்தமானது. நாம் நெற்றியில் தரிக்கும் திருமண்காப்பு நம்மை பரமனின் அடியார்கள் என்று ஸ்ரீ பூமாதேவிக்கு எடுத்துச் சொல்லும்… அவன் பாதம் பற்றிய நம்மை பரமபத வாயிலுக்கு இட்டுச் செல்லும்…”

“சரி ஸ்வாமி, அப்படியானால் நானும் தங்களுடன் வருகிறேன்.”

மன்னனே வருகிறான் என்பதால் வீரர்கள் முன்னால் சென்று சரியான பாதை அமைத்துக் கொண்டே சென்றார்கள். நீண்ட பயணத்தின் இறுதியில் யதுகிரியை அடைந்தார்கள்.

பகுதான்ய வருடத்தின் தை மாதப் பிறப்பு… வேத புஷ்கரணியின் கரைக்கு வந்து நின்ற ஸ்ரீராமானுஜர், இரு கைகளையும் கூப்பி பவ்யமாக வணங்கினார். தன் கனவில் பெருமாள் குறிப்பிட்ட இடத்தை உற்று நோக்கினார்.

அந்தத் தருணம், “ஆ அதோ பாருங்கள், மேலே கருடன் பறக்கிறது” என்றான் ஒரு வீரன். ராமானுஜர் நிமிர்ந்து பார்த்தார். அவருக்கு அனைத்தும் புரிந்தது.

அது புள்ளரையன் கோவில். எம்பெருமான் உத்தரவின் பேரில் ஸ்வேதத்வீபத்தில் இருந்து கருடன் எடுத்து வந்து சேர்த்த பரிசுத்தமான மண்…. “ஆ இது ஸ்வேதத்வீபம்…” என்று ராமானுஜர் சந்தோஷத்தில் வாய்விட்டுச் சொன்னார்.

“புரியவில்லை ஸ்வாமி ஸ்வேதத்வீபம் என்றால்…”

“எம்பெருமான் பிரம்ம வித்யை அறியத் தவம் இருந்த தீவு அது… பாற்கடலுக்கு வடக்கே வெகு தொலைவில் உள்ள இடம்.”

“யாருமற்ற தீவா ஸ்வாமி ?”

“கண்டவர் யாருமில்லை. ஆனால் வேதங்களில் அந்தத் தீவைப் பற்றி குறிப்பிட்டுருக்கிறது. தெய்வ நிலை அடைந்த பல மெய் ஞானிகள் அங்கு உள்ளனர். அவர்களுக்கு உணர்ச்சி கிடையாது, பசி, தாகம் கிடையாது. உறக்கமோ, விழிப்போ கிடையாது… பாவமற்ற பரிசுத்தமான ஆத்மாக்களான அவர்களின் தேகங்களிலிருந்து தெய்வீக மணம் வீசும்… நான்கு கரங்களும், அறுபது பற்களும் கொண்டவர்கள் அவர்கள்.”

“கேட்கும்போதே சிலிர்க்கிறதே ஸ்வாமி. அந்தத் தீவிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணா இது?”

“ஆம்… கருடாழ்வார் எடுத்து வந்து சேமித்து வைத்திருக்கிறார்.”

சட்டென்று ராமானுஜர் மனதில் ஏதோ உத்வேகம் தோன்ற, தனது திரிதண்டத்தால் அந்த இடத்தைத் தொட்டு மெலிதாகக் குத்தினார். வறண்டு இறுக்கிக்கொண்டு கிடந்த அந்த இடத்தின் மேற்புறம், அடுத்த கணம் நெகிழ்ந்து கொடுத்தது.

வீரர்கள் உடனே அங்கு குவிந்து தங்கள் கரங்களால் தோண்ட ஆரம்பித்தார்கள்…

தோண்டத்தோண்ட மண்ணின் தோற்றம் மாறிக்கொண்டே வந்தது. அதன் பழுப்பு நிறம் மெல்ல மெல்ல உதிர்ந்து வெண்மை நிறம் காட்டத் தொடங்கியதும் வீரர்கள் மேலும் உற்சாகமாகி வேகமாகத் தோண்டினார்கள். திடீரென ஒரு கட்டத்தில் மண்ணின் நிறம் முழு வெண்மையாக இருப்பதைக் கண்டார்கள்.

“இதோ திருமண்… இதுதான் திருமண். இந்த உலகில் இதனைக் காட்டிலும் தெய்வீகமான மண் வேறில்லை. இந்த இடத்தில் இது யுகம் யுகமாக இருந்து வருகிறது. இனி எத்தனை ஆயிரம் வைணவர்கள் வந்தாலும் அவர்களின் நெற்றியை அலங்கரிக்க இம்மண் சற்றும் வற்றாது தோன்றியபடியே இருக்கும்…” என்று உணர்ச்சியின் மேலீட்டில் உரைத்தார் ஸ்ரீராமானுஜர்.

விஷ்ணுவர்த்தனின் வீரர்கள் அங்கே சேகரித்த திருமண்ணை பக்தியுடன் கவனமாகக் கூடைகளில் அள்ளிக் கொண்டார்கள்.

அடுத்த நாள்…. அதற்கடுத்த நாள்… என்று பக்தியுடன் திருமண் சேகரிக்கும் பணி விடாது தொடர்ந்துகொண்டே இருந்தது…

ஒருநாள் காலை திருவாராதனை முடித்து திருமண் சேகரிக்க அந்த இடத்துக்கு வந்த போது ஓரிடத்தில் புற்று ஒன்று இருப்பதை ஸ்ரீராமானுஜர் காண நேரிட்டது. அதனைச் சுற்றி திருத்துழாய் வளர்ந்திருந்தது. ஒரு கணம்தான்… அவர் மனதில் ஏதோ பட்டது.

புற்றும் திருத்துழாயும் கையெட்டும் தூரத்தில்… திருமண் வேறு தோண்டத் தொண்டைக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது… அப்படியானால்?

“மன்னா நில்…” என்று உணர்ச்சி வசப்பட்டு தமது திரிதண்டத்தால் அந்தப் புற்றை தொட்டுக் காட்டினார்.

“ஸ்வாமி இது வெறும் புற்று…”

“ஆனால் அடியேனுக்கு என்னவோ உள்ளே இருப்பது ஆதிசேஷனாகத் தோன்றவில்லை மன்னா, அவன் மீது சயனிப்பவனே இங்கு இருக்கிறான் என்கிறேன்… பார்த்து விடலாமா?”

யாருக்கும் எதுவும் புரியவில்லை. அடுத்தடுத்து நிகழும் அதிசயங்கள் அளித்த பரவசத்தில் இருந்தார்கள்.

“தாங்கள் சொன்னால் செய்துவிட வேண்டியதுதான்… உத்தரவிடுங்கள் ஸ்வாமி…”

அந்தப் புற்றை அகழ்ந்த போது அந்த அதிசயம் நிகழ்ந்தது…

ஆம்… அந்த இடத்தில் யதுகிரி நாயகன் மண்ணுக்கடியில் மோனத் தவம் இருந்து கொண்டிருந்தான்.

“ஆஹா…. ஆஹா” என்று தலைக்கு மேல் கரம் கூப்பி கூத்தாடினார் மன்னன் விஷ்ணுவர்த்தன். வீரர்கள் திகைத்துப்போய் கைகட்டி வாய்பொத்தி நின்றார்கள்.

“விஷ்ணுவர்த்தா, நீர் மிகப்பெரிய பேறு செய்தவர். எத்தனையோ மன்னர்கள் இங்கு ஆண்டிருக்கிறார்கள். ஆனால் உமது காலத்தில்தான் எம்பெருமான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். இனி என்ன செய்யப் போகிறாய்?”

கிறு கிறுத்துப் போயிருந்த மன்னன் உடனே தன் வீரர்களை அழைத்தான். தலை நகருக்குச் செய்தி அனுப்பி மேலும் ஆயிரமாயிரம் வீரர்களையும், தொழிலாளர்களையும் அங்கு வரச்சொல்லி உத்தரவிட்டான்.

“ஸ்வாமி இந்நாள் என் வாழ்வின் பொன்னாள்… இந்த இடத்தில் நான் இப்பெருமானுக்குக் கோயில் எடுப்பேன்… என்றென்றும் உற்சவங்கள் தங்கு தடையின்றி நடைபெற வழி செய்வேன்… எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தேவரீர் அருகில் இருந்து எனக்கு வழி காட்டுங்கள்…”

அதன்பிறகு ஸ்ரீராமானுஜர் பெருமானைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டார். பக்தியுடன் தினமும் பாலால் திருமஞ்சனம் செய்து தியானித்தார்.

அதே நேரம் மன்னனால் காட்டைத் திருத்தும் பணிகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு கண்ணெதிரே ஒரு குன்றம் சார்ந்த நகரம் உருவானது… மக்கள் அந்த இடத்திற்கு தேடித்தேடி குவிந்தார்கள். திருக்கோயில் எழுந்தது.

ஸ்ரீராமானுஜர் தாம் கண்டெடுத்த பெருமாளை அங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார். ஆலய சம்ரோஷனமும், ஆகம கைங்கர்யங்களும் இனிதே நடந்தேறின.

“ஸ்வாமி இந்நகருக்கு ஒரு பெயர் சூட்டுங்கள்…” என்றார் விஷ்ணுவர்த்தன்.

“நாராயணன் வந்துதித்த தலமல்லவா? திருநாராயணபுரம் என்பதே இந்நகரின் பெயராக இருக்கட்டும்…”

திருநாராயணபுரம் இன்று கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் ‘மேல்கோட்டை’ என்கிற பெயரில் மிகப் புகழுடன் திகழ்கிறது. இங்குள்ள மலைக் குன்றின் மீது யோக நரசிம்மர் உறைந்துள்ளார். மூலவர் பெயர் திருநாராயணர. உற்சவர் பெயர் செல்வ நாராயணர். தாயார் பெயர் திருநாராயணி. தல தீர்த்தம் கல்யாணி. தல மரம் இலந்தை.

ஸ்ரீமதே ராமாநுஜாய நம…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *