தருமபுத்திரர் சொன்ன பொய்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 10,467 
 
 

அதிர்ந்து நின்றார் யுதிஷ்டிரர். மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்த கூபம், கிருமி போஜனம் முதலான நரகக் காட்சிகளைக் கண்டு உறைந்து போனார் அவர்.

‘அவலக் குரல்கள், அதிபயங்கர தண்டனைகள்- சித்ரவதைகள்… என்று நரகத்தின் கொடுமையைக் காணும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்தது எப்படி? அதுவும் சொர்க்கம் செல்லும் வழியிலா இந்த அனுபவம் நேர வேண்டும்?’_ மனம் வேதனையில் வாட, நரகின் கொடுமையைக் காண முடியாமல் கண்களை மூடிக் கொண்டார் யுதிஷ்டிரர்.

அப்போது – ‘தருமபுத்திரா!’ என்று எவரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டுக் கண் விழித்தார். எதிரில் எமதருமன்!

”தருமா… நீ செய்த பாவத்தின் காரணமாகவே நரகக் காட்சிகளைக் காண நேரிட்டது!”

எமதருமன் கூறியது கேட்டு ஆடிப்போனார் யுதிஷ்டிரர். ”கிருஷ்ணரின் வழியில்… தர்மத்தை சிரமேற்கொண்டு வாழ்ந்த நானா பாவம் செய்தேன்?” என்று கேட்டார்.

”ஆமாம்! உனது ஒரு வார்த்தையால் விளைந்த பாவம்!” என்ற எமதருமர் தொடர்ந்தார்: ”குரு«க்ஷத்திரக் களத்தில், ஆசார்யர் துரோணரை வீழ்த்த நீ கூறிய பொய்யால் விளைந்த பாவம்!”

துரோணாச்சாரியரின் பெயரைக் கேட்டதும் தரு மரின் கண்களில் தாரை தாரையாக நீர். அவரின் மனதில் அன்று நடந்த போர்க்களக் காட்சிகள்!

குருசேத்திரம்!

பிதாமகர் பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவ சேனையின் தலைமை ஏற்றிருந்தார் ஆசார்ய புருஷர் துரோணர். இவரது போர் வியூகங்களால் பாண்டவப் படைகள் சின்னாபின்னமடைந்தன.

மாவீரன் பீமனின் போர்த் திறனும், நகுல-சகா தேவர்களின் வாள்வீச்சும் எடுபடவில்லை. அவ்வளவு ஏன்… வில்லாளி அர்ஜுனனே தன் ஆசார்யரை எதிர் கொள்ள முடியாமல் திண்டாடினான். ‘என்ன செய்யலாம்?’ என கலந்து ஆலோசித்த பாண்டவர்கள், பரந்தாமனைச் சரணடைந்தனர்.

திருவாய் மலர்ந்தார் கண்ணன்: ”உண்மைதான்… துரோணரை வீழ்த்துவது சாதாரணம் அல்ல!”

அவரிடம் இருந்து இந்த பதிலை பாண்டவர்கள் எதிர்பார்க்கவில்லை! ‘பீஷ்மரையே வீழ்த்த வழிவகுத்தவர், துரோணர் விஷயத்தில் யோசிக்கிறாரே’_ யுதிஷ்டிரரின் கலக்கம் அதிகமானது. அவரின் முகவாட்டத்தை உணர்ந்த கண்ணன், அருகில் வந்து ஆறுதலாக அவரின் தோளைப் பற்றினார்.

”நீங்கள் நினைத்தால்… துரோணரை எளிதில் வீழ்த்த முடியும்!” என்றார்.

”என்ன சொல்கிறாய் கிருஷ்ணா? என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்?”_ யுதிஷ்டிரர்.

”சிறு பொய் ஒன்று உரைத்தால் போதும்! அசுவத்தாமா களத்தில் இறந்து விட்டான் என்று துரோணரின் செவிகளில் விழும்படி கூற வேண்டும்!”

”முகுந்தா… இதற்கு பதில் என் உயிரை விடச் சொல்லி இருக்கலாம்!”

– ஆவேசப்பட்ட யுதிஷ்டிரரைக் கூர்ந்து நோக்கினார் கண்ணன். ”யுதிஷ்டிரரே… சில தருணங்களில், முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். ஆசாரியர் உத்தமர்தான். ஆனால், அவரது ஆதரவு அதர்மத்தின் பக்கம் அல்லவா?! சூழ்ச்சியின் பிறப்பிடமான கௌரவர்களை சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும்!”

”கண்ணா… நீ என்ன கூறினாலும் சரி! பொய்யுரைப்பதை என் மனம் ஏற்காது!”- திட்டவட்டமாகக் கூறிய யுதிஷ்டிரரை ஏறிட்ட கண்ணன், ”சரி மைத்துனரே! தாங்கள் பொய்யுரைக்க வேண்டாம். ஓர் உண்மையைச் சொன் னால் போதும்!” என்று புன்ன கைத்தார்.

யுதிஷ்டிரருக்கு குழப்பம்! பீமனை அருகில் அழைத்த பகவான், ”மாளவ தேசத்து அரசனின் யானையை நீ வீழ்த்த வேண்டும்!” என்றார்.
அதன்படியே நிகழ்ந்தது. போரில், யானையைக் கொன்றான் பீமன். உடன் யுதிஷ்டிரரை அழைத்த கண்ணன், ”அதோ பாருங்கள்… யானை அசுவத்தாமா இறந்து கிடப்பது உண்மைதானே? இந்தத் தகவலை உரக்கச் சொல்வதில் தயக்கம் இல்லையே?!” என்றார்.

”உண்மையைச் சொல்ல தயக்கம் என்ன?” என்ற யுதிஷ்டிரர், ‘அசுவத்தாமா ஹத: குஞ்சர:’ (அசுவத்தாமா என்ற யானை இறந்து விட்டது) என்று துரோணரின் காதில் விழும்படி உரக்கக் கூவினார். மிகச் சரியாக… அவர், ‘குஞ்சர:’ (யானை) என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது சங்கநாதம் எழுப்பினார் கண்ணன். முரசுகள் ஒலித்தன! இந்த சத்தத்தில், ‘குஞ்சர’ எனும் வார்த்தை மட்டும் துரோணரின் காதில் விழவில்லை. எனவே, தன் மகன் அசுவத்தாமா இறந்து விட்டதாக தவறாகப் புரிந்து கொண்டார்.

”அன்பு மகனே… இறந்து விட்டாயா!” என்று துடித்தார். புத்திர சோகம் தலைதூக்க… விரக்தியுடன் ஆயுதங்களை தூர எறிந்தார். அப்படியே அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார். இதை பயன்படுத்தி, பாண்டவப் படையின் சேனாதிபதியான திட்டத்துய்மன் அவரைக் கொன்றான்.

இதையறிந்த கௌரவப் படை சிதறி ஓடியது. பிறகென்ன… யுத்தத்தின் போக்கே திசைமாறியது!

”யுதிஷ்டிரா…”

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த தருமரை உசுப்பியது எமதர்மனின் குரல்! ”என்ன… பாவச் சுவடுகளை ஆராய்கிறதா உன் மனம்?” எனக் கேட்டார் எமதர்மர்.

”ஆம் ஸ்வாமி… நீங்கள் சொல்வது சரிதான். துரோணரது மரணத்துக்குக் காரணமான நான், மகா பாவி!” என்று கதறினார் யுதிஷ்டிரர்.

அவரின் தோள் பற்றி எழுப்பி, ஆறுதல்படுத் தினார் எமதர்மன்: ”வருந்தாதே தருமபுத்திரா… இனி, நீ அப்பழுக்கற்றவன். உன் மீது படிந்திருந்த சிறு பாவக் கறையும் அகன்று விட்டது. போர்க்களத்தில் நீ கூறிய வார்த்தைகளால் துரோணர் இறந்தார். அதன் மூலம் உன்னைப் பற்றிக் கொண்ட பாவத்தின் விளைவால், கொடுமையான நரகக் காட்சிகளை நீ காண நேரிட்டது!” என்றார்.

இந்த விளக்கத்தால் மனம் தெளிந்த யுதிஷ்டிரர், எமதர்மரை வணங்கி ஆசிபெற்று, சொர்க்கத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார்!

-தேதியூர் பாலு, சென்னை-11 (ஜூன் 2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *